Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 14


அவர்கள் சென்னை வந்ததும் கதிர் திருமணத்திற்கு முன்னான தன் பழைய வாழ்க்கையான எப்பொழுதும் வேலை என்ற நிலைக்கே திரும்பினான். அதைப் பார்த்த அவர்களுக்கு கதிரை பற்றிய கவலை மேலும் ஏறியது.


கதிர் மதியை இங்குள்ள ஒரு தனியார் காலேஜில் நான்காவது வருடம் படிக்க ஏற்பாடு செய்தான்.
இந்த ஒரு மாதத்தில் வான்மதி இந்த வீட்டிலும் மற்றும் அனைவரோடும் நன்றாக பொருந்திவிட்டாள்.
வான்மதியின் வீட்டினரும் இவளை இருமுறை வந்து பார்த்துச் சென்றனர்.


இன்று கல்லூரியில் இந்த வருடத்தின் முதல் நாள் என்பதால் காலையில் கதிர் தான் வான்மதியை அழைத்துக் கொண்டு சென்றான்.


அவளுக்கு தான் படித்த கல்லூரியின் நினைவுகள் வந்து அலைக்களித்தது. இந்தக் காலேஜின் பிரம்மாண்ட வெளிப்புற தோற்றமே இங்கு எப்படி இருக்குமோ? என்று பயத்தைக் கிளப்பியது.


இவள் முதலில் இறங்க கதிர் தான் சென்று காரை பார்க் செய்து விட்டு வரும்வரை அவளை அங்கேயே இருக்க சொல்லிச் சென்றான்.


அந்த பக்கம் வந்த ஒரு கேங்க் இவள் மருண்டு விழித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து அவளை முதலாமாண்டு மாணவி என்று நினைத்து அவளை சீண்ட அருகேச் சென்றனர்.


அதில் ஒரு மாணவன் “சீனியருக்கு வணக்கம் சொல்லி மரியாதை எல்லாம் செய்யமாட்டியா?” எனக் கேட்க


மற்றொருவனோ “உன்னோட பேர் என்ன?”


“எந்த டிபார்ட்மெண்ட்?”


அருகிலிருந்த மாணவியோ “ட்வெல்த்ல எவ்வளவு மார்க் வாங்குன?” என


அங்கிருந்தவர்கள் இவ ஒருத்தி எப்பப் பார்த்தாலும் மார்க், படிப்புனு சரியான படிப்புஸ் என்று சொல்லிக் கிண்டலடித்து வான்மதியிடம் மேலும் சில கேள்விகளை அவள் பதிலுக்கு காத்திராமல் கேட்டனர்.


அப்போது அங்கே வந்த கதிரைப் பார்த்த அவர்கள் கோரசாக “குட்மார்னிங் சார்” போட


அவனும் அவர்கள் காலை வணக்கத்தை ஒற்றைத் தலையசைப்பில் ஏற்றுக்கொண்டு வான்மதியிடம் திரும்பி “மதி போகலாமா?”என வினவ


அங்கிருந்த வாயாடி மாணவி ஒருத்தி தைரியமாக கதிரிடம் “இவங்க யாரு சார்? உங்களுக்கு சொந்தமா?” என்றுக் கேட்க


அவன் “இவங்க என்னோட மனைவி வான்மதி. இந்தக் காலேஜில் தான் இ.சி.இ டிபார்மென்ட் பைனல் இயர் படிக்கச் ஜாயின் பண்ணியிருக்காங்க” எனவும்


‘ஐய்யேய்யோhhh நம்மள பத்தி எதாச்சும் போட்டு கொடுத்துருவாங்களோ இவங்க’ என வான்மதியை பார்த்து அவர்கள் அனைவரும் மனதுக்குள் அலற வெளியிலோ


“சாரி சார். நாங்க ப்ரஸ்ட் இயர் ஸ்டூடேன்ட்னு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தோம். நாங்களும் மேடம் டிபார்ட்மென்ட் தான் சார்” என்று விட்டு


வான்மதியிடம் “கிளாஸ்ல மீட் பண்ணலாம் சிஸ்டர்” என்று சொல்லி தப்பிச்சோம்டா சாமி என்று ஒரு ஓட்டமாக ஓடி விட்டனர்.


அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை
‘இவங்க இந்தக் காலேஜ்க்கு முன்னாடியே வந்துருப்பாங்களா அதனால தெரியுமோ’ என யோசித்துக் கொண்டு அவன் பின்னே நடந்தாள்.


கதிர் வான்மதியோடு சேர்மன் அறைக்குச் செல்ல அங்கு சுந்தரேசன் மட்டுமே அமர்ந்திருந்தார்.


அவரைப் பார்த்து வான்மதி ஆச்சரியமடைய, அவரோ “என்னம்மா ஏன் இப்படி நிற்கிற வந்து உட்காரும்;மா” என


“இல்ல மாமா நீங்க இங்க..” என இழுக்க


அவர் சின்ன சிரிப்போடு “இது நம்ம காலேஜ் தான்மா” எனவும் அதிர்ச்சியில் வாய்பிளந்து விட்டாள்.


பின் அவர் பிரின்ஸிபாலை அழைத்து அவளை காலேஜில் சேர வேண்டிய கோப்பில் அவர் கையெழுத்திட்டு வான்மதியிடமும் கையொழுத்து வாங்கிக் கொண்டு அவளை கிளாஸிற்கு போகச் சொன்னார்.


அவள் வெளியேறவும் கதிரும் தன் தந்தையிடம் சொல்லிக் கொண்டு வேகமாக வான்மதியருகில் சென்று “சாயங்காலம் நானே வந்து கூப்பிட்டு போறேன்” என்று சொல்லி சென்றான்.


அவள் தன்னுடைய கிளாஸ{க்கு செல்ல அங்கு அவள் வரும் போது பார்த்த கேங்க் மூன்றாவது மற்றும் நான்காம் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
அவள் தயக்கத்தோடு உள்ளே நுழைய அந்த மாணவர்கள் “வாங்க சிஸ்டர்” என கூப்பிட அவர்கள் அருகே போகவும்


தன்யா “நீங்க இங்க உட்காருங்க” என தன்னருகில் இடம் விட்டு அமர்ந்தாள்.


“ஹலோ நான் தான்யா. இது வினிதா, கிஷோர், ரமேஷ், வினித்” என அவள் தங்களை அறிமுகப்படுத்தினாள்.


அவர்களுடன் படிக்கும் மற்றவர்களோ என்னடா இது இதுக அந்தப் பெண்ணுகிட்ட தானா கூப்பிட்டு போய் பேசுதுக என்று பார்த்து ஙே என்று விழித்தனர்.


அந்த ஐவரும் ஒன்றிணைந்து அவர்கள் இங்கு சேர்ந்த நாளிலிருந்து மொத்த காலேஜை அலறவிடுபவர்கள் இன்று புதிதாக வந்த மாணவி ஒருத்தியிடம் அமைதியாக அவர்களை பற்றி சொல்வதைப் பார்த்து அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.


அப்போது வகுப்பு தொடக்கத்திற்கான மணியடிக்கவும் ஒரு லெக்சரர் வர அனைவரும் எழ அவர் “குட் மார்னிங் ஸ்டூடென்ட்” என்று அவர்களை அமரச் சொல்லி விட்டு


அவர்களிடம் “இன்னைக்கு புதுசா நம்ம கிளாஸ்ல ஒருத்தவங்க ஜாயின் பண்ணியிருக்காங்க” என


வான்மதி எழுந்து நிற்கவும் “இவங்க நம்ம காலேஜ் சேர்மன் சார் மகன் கதிரவன் சாரோட ஒய்ஃப் மிஸஸ்.வான்மதி கதிரவன்” என்று விட்டு


அவளைப் பார்த்து “உங்கள பத்தி இன்ட்ரோ கொடுங்க” என்றார்.


அவள் கதிரவன் மனைவி என்று அறிமுகப்படுத்தவும் பெண்கள் பொறாமை பார்வை பார்த்தார்கள் என்றால்,

இவ்வளவு நேரம் அவளை சைட் அடித்துக்கொண்டிருந்த பையன்களோ என்ன கதிர் சாரோட ஒய்.ப்பா? என்ற மரியாதை கலந்த பயத்தில் அவளை மானசீகமாக தங்களுடைய சகோதரியாக ஏற்றுக்கொண்டனர்.


அவளும் முன்னே வந்து “ ஹலோ ப்ரெண்ட்ஸ் என்னோட பேர் வான்மதி. நான் இதுக்கு முன்னாடி திருச்சில ……. காலேஜ்ல படிச்சேன்” என்று தன்னை பற்றி சில தகவல்களை மெதுவாக ஆனால் தெளிவான ஆங்கிலத்தில் கூறி தன்னிடத்தில் சென்று அமர்ந்தாள்.


அவளை அந்த பஞ்சபாண்டவர் குழு தங்களில் ஒன்றிணைத்து ஆறு பேர் கொண்ட அறுசுவை குழுவாக மாறியது.


அன்றைய நாள் மிக இனிமையாக அவளுக்கு செல்ல மாலை கதிர் வந்து அழைத்துச் சென்றான்.
வீட்டிற்குள் வந்ததும் அவள் ஃப்ரஷாகி வந்து அன்று காலேஜில் நடந்தது எல்லாம் அவள் அத்தை மீனாட்சியிடம் சொல்லலானாள்.

அவருக்கு தன் பிள்ளைகள் கல்லூரி படிக்கும் போது இப்படி செய்வது நினைவு வந்தது. வான்மதியும் அதே மாதிரி செய்வது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது.


சுந்தரேசன் காலையில் லேட்டாக தான் காலேஜுக்கு போவதால் வான்மதியை தினமும் கதிர் காலையில் அழைத்து சென்று விடுவான். அவனால் முடியாத போது கிரி கூட்டிச் செல்வான். அவள் மாலை தன் மாமாவோடு வீட்டுக்கு வந்து விடுவாள்.


இங்கு மதி சுந்தரேசன் மீனாட்சியின் அன்பு மகளாக, காவ்யாவின் அழகு அண்ணியாக, கிரியின் பாசமாக தங்கையாக, வர்ஷாவின் செல்ல அத்தையாக வலம் வந்தாள்.

கதிர் இருக்கும் போதும் மட்டும் அமைதியின் திருவுருவாக இருப்பவள், அவன் இல்லாத போது தன் சேட்டையால்; எல்லோரையும் ஒரு வழி பண்ணிவிடுவாள்.

வான்மதியில்லாமல் அந்த வீட்டில் யாராலும் இருக்க இயலாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கதிர் அவள் செய்யும் சேட்டைகளை ரசிப்பவன் அதெல்லாம் தனக்கு தெரிந்தாற் போல் காட்டிக்கொள்ள மாட்டான்.

கதிருக்கு அவளை பற்றி தெரிந்தாலும் புரிந்தாலும், அவனுடைய மனதின் நிலைமை அவனுக்கு புரியவில்;லை. புரியவிடமால் மூளை சதி செய்தது.
தாமரை இலையில் பட்ட நீர் போல் வான்மதி கதிரவன் வாழ்க்கை ஆயிற்று.

அவன் தனக்கு தேவையான நேரத்தில் மட்டுமே வான்மதியை நாடினான். பிற சமயங்களில் அவளை தன்னிடமிருந்து விலக்கியே வைத்திருந்தான்.
ஆனால் வான்மதிக்கோ அவனின் சின்ன பரிவான செய்கைகூட அவன் மேல் உள்ள அன்பை மிகுதிபடுத்தியது.


சுமித்ரா படிப்பை தொடர வேண்டாம் அவள் அம்மா சந்திரா வான்மதிக்கு நடந்ததை கண்டு பயந்து சொல்ல அவள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.


பிறகு வெற்றி தான் வந்து “அத்தை என்னோட பொண்டாட்டி கண்டிப்பா படிச்சுத் தான் ஆகணும்” என்று சொல்லவும் தான் அவரும் சம்மதித்தார்.

ராஜவேலுவே அவளை கூட்டிச்சென்று மறுபடியும் அழைத்து வருவார்.


வெற்றியும் சுமியை புரிந்துக்கொண்டு அவளிடம் மன்னிப்புக் கேட்க, அவன் நிலைமை புரிந்தவளோ “உங்க மேல எந்த தப்பும் இல்ல. நான் தான் தப்பு பண்ணிட்டேன். இனிமே பாத்து நடந்துகிறேன்” என்று தன் மேல் பழி ஏற்றுக் கொள்ள


அங்கே யாருக்கும் சொல்லமாலே மனது பரிமாறி அவர்களிடையே அழகிய திருமணத்துக்கானப் பூ மலர்ந்தது.

தன் துணைக்காக விட்டுக் கொடுத்தலும் எந்நிலையிலும் அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையும் அன்பும் தானே கல்யாணத்திற்கு அஸ்திவாரமே. அவர்களுடைய திருமணம் சுமி படிப்பு முடிந்தவுடனே வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.


எல்;லாருடைய நாட்களும் அமைதி பூங்காவாக மாறி அதில் வீசும் தென்றல் காற்று போல் அழகாக சென்றுக் கொண்டிருந்தது.


நாட்கள் மாதங்களாக வேகமாக உருண்டோடியது.
கல்லூரி வாழ்க்கை மிக வேகமாக முடிந்து இனி பிராஜெக்ட் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற நிலை. அதுவும் இன்னும் மூன்று மாதத்தில் முடிந்து விடும். அவர்கள் கம்பெனியிலிலே தான் பிராஜெக்ட் செய்கிறாள்.


நாளை மதியையும் கதிரையும் மட்டும் விட்டு விட்டு மற்றவர்கள் இராமேஸ்வரம் செல்வதாகச் சொல்ல, வான்மதி “நானும் வரேன்” என்று தன் அத்தையிடம் சிணுங்க ஆரம்பித்தாள்.


அவர்கள் யார் என்ன சொல்லியும் அவள் கேட்காமல் இருக்கவே மீனாட்சி “நாங்க முக்கியமான விஷயமா போறோம் மதிக்குட்டி. நீங்க நாங்க வரவரைக்கும் வீட்டுள்ள இருந்து கதிர் பார்த்துகிட்டு இருப்பிங்களாம்” என்று கொஞ்ச


அவளோ “உங்க பையன் பெரிய பையன் ஆயிட்டார். அவரே தனியா இருந்துக்குவார். நான் இல்லாம நீங்க, வர்ஷி பாப்பா எப்படி இருப்பிங்க” என்று சரியான பாயிண்டை பிடிக்க


வர்ஷா குட்டி “அத்த நானு போகல” என்று அவளை சமாதானப்படுத்த


அதைப்பார்த்து அவர்களுக்கு இவர்கள் இருவரில் யார் குழந்தை என்று சந்தேகம் கிளம்பியது.


“இல்லடா என் செல்லம்ல நான் சொன்னத கேட்டு நடப்பிங்களாம் நாங்க இரண்டு நாளுல வந்துருவோம்” என்று கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தி


‘நான் வரமாட்டேன்’ என்று அழுத வர்ஷா பாப்பாவையும் தூக்கிக் கொண்டு சென்றனர்.


கதிர் அன்று இரவு முழுவதும் வரவில்லை. அவன் அடிக்;கடி இப்படி வரமாட்டேன் என்பதால் அவளுக்கும் ஒன்றும் தோணவில்லை. அவள் சென்று உறங்கிவிட்டாள்.


இரவு முழுதும் குடித்துவிட்டு காலை மூன்று மணி போல் தான் வந்தான்.


வந்தவன் நேராக வான்மதியிடம் சென்று அவளை உலுக்கி எழுப்ப அவன் சிவந்த கோபமேறிய கண்களை பார்த்து பயந்து சுவரோடு சுவராக ஒன்றினாள்.


இனி நடக்கப் போகும் சம்பங்கள் தெரிந்திருந்தால் அவர்கள் செல்லாமல் இருந்திருக்கலோமோ என்று நினைத்து மருகும் அளவுக்கு என்ன ஆகப் போகிறது என்று பார்ப்போம்?


-புயல் வீசட்டும்.

Advertisement