Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 11

விடியற்காலையிலே வந்ததால் போக்குவரத்து நெரிசல், ஜன சந்தடி என எந்த சத்தமுமின்றி வான்மதியைப் போலவே சென்னையும் அமைதியாக காணப்பட்டது.
கதிர் காரிலிருந்து தன் போன் மூலமே ஆட்டோமெட்டிக் லாக் வாயிற்கதவை திறந்து வீட்டின் போர்டிகோவில் போய் காரை நிறுத்தினான்.

ம்கூம் அது வீடு அல்ல பங்களா. அவ்வளவு பெரிதாக இருந்தது.

முன்புறம் நீண்டத் தோட்டம் அதைக் நடந்து கடந்து செல்லவே குறைந்தது பத்து நிமிடங்களாகும்.
வீட்டில் எட்டு தூண்களோடு கூடிய போர்டிகோ அதிலிருந்து ஐந்து பெரிய படிகள் நேராக சென்றால் அழகிய வேலைப்பாடோடு கண்ணாடி பதித்த ஜன்னலோடு அமைந்த பெரிய தேக்கு கதவுகள்.

உள்ளே சென்றால் பெரிய ஹாலும் அதில் இருபது பேர் அமரக் கூடிய அளவு சோபாவும், மினி ஹோம் தியேட்டரும் இருந்தது. கீழே சமையலறை, சாப்பிடும் அறை, பூஜையறை, கதிரின் பெற்றோரின் அறை மற்றும் இரு விருந்தினர் அறையும் இருந்தது.

ஹால் நடுவில் மாடிப் படிகள் இரண்டாக பிரியும் இடத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ள கதிரின் ஐந்து வயது புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டு இருக்கும். மாடியில் வலப்பக்கம் கிரி-காவ்யா அறையும் இடது புறம் கதிரின் அறையும் இருந்தது. இவர்களது அறைக்கு இடையில் நான்கு விருந்தினர் அறையும் உள்ளது.

கதிரின் அறை சின்ன ஹால் அதன் வலது பக்கம் அலுவலக அறை, இடப்பக்கம் அட்டாச்சூடு பாத்ருமோடு கூடிய பெரிய படுக்கையறை மற்றும் கண்ணாடியால் சூழப்பட்ட அழகிய பால்கனி என்று இருக்கும்.

மூன்றாவது மாடியில் இரு படுக்கையறையோடு இதனை ஒட்டி பெரிய ஊஞ்சல் போட்ட பால்கனி மற்றும் மாடித் தோட்டம் சுற்றிலும் கண்ணாடியோடு ரசனையாக கட்டப்பட்டிருக்கும். அங்கிருக்கும் எல்லா பெட்ரூமும் ஒரு ஸ்டார் ஹோட்டல் சூட் போன்று காட்சியளிக்கும்.

இவர்கள் காரிலிருந்து இறங்கவும் கதிருக்கும் வான்மதிக்கும் மீனாட்சி அம்மா ஆலம் சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார்.

காவ்யாவிடம் கதிர் ரூம் பக்கத்திலுள்ள விருந்தினர் அறையை வான்மதிக்கு கொடுத்து உடன் காவ்யாவையும் தங்கச் சொன்னார். பின் வேலைக்காரர்களை அழைத்து வான்மதியுடைய பொருட்களை அங்கு வைக்கச் சொன்னார்.

அனைவரும் ஃபிரஷ்ஷாகிவிட்டு வந்து ஆண்கள் காபியுடன் தினசரியில் மூழ்கிவிட, பெண்கள் அமர்ந்து காபி குடித்துக்கொண்டே வான்மதிக்கு அந்த வீட்டுமுறைகளை விளக்கினார்கள்.

சுந்தரேசன் கதிரிடம் “ஒரு ரிசப்ஷன் சீக்கிரம் வைக்கனும் கதிர். கோயிலுக்கு போய்ட்டு அப்படியே நாள் பாத்துட்டு வரலாம்” என

கதிருக்கு வெறுப்பாக இருந்தாலும் என்றைக்கு இருந்தாலும் தன்னுடைய திருமணத்தை அறிவித்துத் தானே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சம்மதம் தெரிவித்தான்.

“இல்லப்பா நீங்க போய் பார்த்துட்டு சொல்லுங்க. நான் மேரேஜ் ஹால் இல்லைனா ஹோட்டல் புக் பண்ணிரேன். இரண்டு நாள் லீவ் போட்டதால இன்னைக்கு கண்டிப்பா நான் ஆபிஸ் போகனும்”

“சரி கதிர் அப்ப நானும் உங்கம்மாவும் மட்டும் போயிட்டு வர்றோம்” என்று கதிர் மற்றும் கிரியை அலுவலகம் அனுப்பிவிட்டு; காவ்யா, வர்ஷா பாப்பா மற்றும் வான்மதியை வீட்டில் இருக்கச் சொல்லி
சுந்தரேசனும் மீனாட்சியும கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து அப்படியே ஜோசியரிடம் சென்று நல்ல நாள் பார்த்தனர்.

ஜோசியர் வரும் புதன்கிழமை நாள் நன்றாக உள்ளது என குறித்துக் கொடுக்கவும் கதிரிடம் எதற்கும் கேட்டுக்கொள்ளலாம் என்று போன் செய்தார்.

கதிருக்கு போன் செய்து சுந்தரேசன் “வரும் புதன்கிழமை ரிசப்ஷன் வைக்கலாமா உனக்குச் சரிப்படுமா” எனக் கேட்க

“சரிப்பா வைக்கலாம். இன்விடேஷன் எல்லாம் கிரிய பார்த்துக்கச் சொல்லுங்க. ஹோட்டல் நான் புக் பண்ணிட்டு கிரிட்ட சொல்றேன். மத்தத இவ்னிங் வீட்டுல பேசிக்கலாம்” என பேசிமுடித்தான்.

மீனாட்சி தன் கணவரிடம் வான்மதி வீட்டினரிடம் கலந்தாலோசிக்கச் சொல்ல அவரும் உடனே கந்தவேலுக்கு போன் செய்தார்.

“ஹலோ சம்பந்தி நான் சுந்தரேசன் பேசறேன். நீங்க எப்படி இருக்கிங்க. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க” என நலம் விசாரிக்க

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் சம்பந்தி. அங்க நீங்க, வீட்டுல எல்லாரும் நல்லா இருக்கிங்களா”

“ரொம்ப நல்லா இருக்கோம் சம்பந்தி. இப்பத்தான் நல்ல நாள் பார்த்துட்டு வந்தோம். வர்ர புதன்கிழமை நாள் நல்லா இருக்காம். அன்னைக்கே ரிஷப்ஷன், மத்த எல்லாம் வச்சிரலாமா”

“சரிங்க சம்பந்தி”

“இன்விடேஷன் ரெடி பண்ணி நாங்க கொடுத்து அனுப்புறோம்”

“சரி சம்பந்தி அப்ப நாங்க இங்க வேலையை முடிச்சுட்டு செவ்வாய்கிழமை போல அங்க வரோம்”

“சரி சம்பந்தி அப்ப நான் வைச்சுறேன்” என பேசி முடித்தார்..

மீனாட்சிக்கு தன் மகனுடைய திருமணத்தை தான் பார்க்க முடியவில்லை. இனியாவது எல்லாம் சிறப்பாக நன்றாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதையே சொல்ல சுந்தரேசனும் கிரியும் தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறினர்.

உறவினர்களுக்கு காலையிலும் நண்பர்கள் தொழில் வட்டார பழக்கங்களுக்கு மாலையிலும் வரவேற்பு வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.

லட்சுமி பெரியம்மா, மீனாட்சி மற்றும் தெய்வானை ஆகியோர் ஆலோசித்து வரவேற்பு அன்று காலையில் கோவிலில் புதுதங்கத் தாலி கட்டி மற்ற சடங்குகளையும் அன்றே செய்யலாம் என்று முடிவு செய்தனர்

இன்றே வெள்ளிக்கிழமை இன்னும் ஐந்து நாட்களில் விசேஷம் என்பதால் வேலை அதிகமாக இருந்தது.
கதிர் ரிசப்ஷனுக்கு ஹோட்டல் தாஜ் புக் செய்து கிரிக்கு சொல்ல அவனும் சுந்தரேசன் மற்றும் வெற்றியிடம் போனில் கேட்டு இன்விடேஷன் தயார் செய்து அன்றே அடிக்கக் கொடுத்தான்.

இன்விடேஷன் தயாரானதும் கோவிலில் வைத்து பூஜை செய்து வான்மதி வீட்டினருக்கு விமானத்தில் அனுப்ப அவர்களும் அனைவருக்கும் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

கதிர் சனிக்கிழமை ஆபிஸ் சென்று தனது திருமண வரவேற்பு பத்திரிக்கையை மேலதிகாரியான கமிஷனரிடம் கொடுக்க அவருக்கு ஆச்சரியம். கமிஷனர் விஸ்வநாதன் சுந்தரேசன் இருவரும் நல்ல நண்பர்கள். கமிஷனர் விஸ்வநாதன் ‘பாருடா பையன் மாட்டிக்கிட்டான்’ என்று நினைத்து கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.

“உங்கப்பா கூட சொல்லல பாரு இரு உன்ன வச்சிக்கிறேன்”

“இல்ல அங்கிள் ஊருக்கு போன இடத்துல நடந்ததால யாருக்கும் சொல்ல முடியலை”

“எப்ப கல்யாணம் நடந்தது?”

“மூணு நாள் ஆச்சு”

“அடப்பாவி என்னடா நேத்து கல்யாணம் ஆன இரண்டாவது நாளே ஆபிஸ{க்கு வந்திருக்க. இரு இரு என் மகட்ட சொல்லி உனக்கு ஆப்பு வைக்குறேன்” என்று திட்ட

“ஆமா உங்க பொண்ணு என்னை பார்க்கவே பயப்படுவா. இதுல்ல அவ என்கிட்ட பேசவா போறா. நான் சொல்றதுக்கு எல்லாம் நல்ல தலையை தான் ஆட்டுவா” என்று வான்மதியை கிண்டல் செய்ய

“பார்க்கலாம் இப்ப நம்ம பேச்சே கேட்கற மாதிரி தான் இருக்கும். ஆனா நாளைக்கு நீ தான் அவங்க சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் சாமி போடுவ” என்று கிண்டலடிக்க, அவன் தன் முகம் மாறாமல் காக்க மிகவும் சிரமப்பட்டு பின் அவரிடம் ஒரு வார விடுப்பு லெட்டரைக் கொடுத்து அனுமதி பெற்று விடைபெற்றான்.

அலுவலகத்தில் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்க அதே ஆச்சரியம் தான் அனைவருக்கும்.

சுந்தரேசனும் மீனாட்சியும் தனது உறவு முறைகளுக்கு கதிருக்கு பிடித்து இருந்ததால் ஜாதகப் பொருத்தம் பார்க்க உடனே திருமணம் செய்யாவிட்டால் இன்னும் சில வருடங்கள் தள்ளிப்போகும் என்று சொன்னதால் அவர்கள் வழக்கப்படி பெண் ஊரிலே உடனே திருமணம் வைத்ததாகக் கூறி அவர்களை அழைத்தனர்.

அடுத்து வந்த மூன்று நாட்களும் துணி எடுப்பது, நகை எடுப்பது, அனைவரையும் அழைப்பது, வீட்டிற்கு வருபவர்களைக் கவனிப்பது என வேலை நெட்டி முறித்தது.

செவ்வாய்கிழமை காலையில் வான்மதி வீட்டினர் வந்தனர். அவர்களோடு வான்மதியின் தாய்மாமா ராஜவேல் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

வான்மதி தன் வீட்டினரைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். அவர்களை விட்டு ஒரு நாள் கூட பிரிந்து இருந்ததில்லை என்பதால் அவளுக்கு இந்த ஐந்து நாட்களும் அவர்களின் நினைவு தான்.

விசாலம் ஆச்சியை அவர்களுக்கு போனில் பேசி நன்கு தெரியும் என்பதால் ரத்னவேல் அவர்களுக்கு ராஜவேலையும் அவர் மனைவி சந்திரா மற்றும் மகள் சுமித்ராவையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

சுந்தரேசன் “வாங்க சம்பந்தி” என்றும்

மீனாட்சி “வாங்க வாங்க”, “வாங்க அண்ணி எப்படி இருக்கிங்க” என

“வாங்க சித்தப்பா, நல்லா இருக்கிங்களா சித்தி” என்று கிரியும் மற்றும் “வாங்க மாமா, வாங்க அத்தை” என காவ்யா கூப்பிட

கதிர் “வாங்க” என்ற ஒற்றை சொல்லோடு அழைக்க, அனைவரையும் வரவேற்று அவர்களை அழைத்துச் சென்றனர்.

அன்று வான்மதி காணாமல் போனதிலிருந்து வெற்றி சுமியோடு பேசுவதை நிறுத்திக் கொண்டான். அவனுக்கு இவள் எது என்ன நடந்தாலும் முதலில் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று தோணவில்லையே என்ற கோபத்தில் அவளை பார்ப்பது கூட இல்லை.

எனவே அவள் மிக வருத்தத்தில் இருந்தாள். இதில் திடீரென்று வான்மதிக்கு திருமணம் நடந்தது வேறு அவளை கவலைக்குள்ளாக்கியது. தான் மட்டும் அன்று வான்மதியோடு சென்று இருந்தால் அவள் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டாள் என்று வருந்தினாள்.

எனவே சுமித்ரா “என்னால தானே உனக்கு இப்படி நடந்துச்சு. நான் மட்டும் உன் கூட இருந்துருந்தா எந்தப் பிரச்சனையும் ஆகியிருக்காதுல்ல” என்று தனியாக இருக்கும் போது வான்மதியிடம் சொல்லி மன்னிப்பு வேண்ட

“இது எதுவுமே உன்னோட தப்பு இல்ல சுமி. நடக்குறது நடந்து தான் தீரும்” என்று இவள் தேற்றினாள்.

ரத்னவேல் மற்றும் கந்தவேல் “தங்கள் மகளுக்கு தாங்களும் எதுவும் செய்யவில்லை” என்று வருத்தப்பட்டு கேட்டு கொண்டதுக்கு இணங்க காலையில் நடக்கும் வரவேற்பு செலவை சுந்தரேசன் அவர்களிடம் வாங்கிக் கொண்டார்.

அன்றைய பொழுது அழகாக விடிந்தது. கதிர் பட்டு வேட்டி சட்டையிலும், வான்மதி மஞ்சள் வண்ணப் பட்டு உடுத்தி அருகிலுருந்த அம்மன் கோவிலுக்கு குடும்பத்தினர் மற்றும் சில முக்கிய உறவினர்களோடு சென்றனர்.

அங்கு அக்னிக் குண்டத்தின் முன் அமர்ந்து வேதமந்திரங்கள் ஓத தங்க செயினோடு கூடிய தாலியை கதிர் வான்மதி கழுத்தில் பூட்டினான்.

அவள் நெற்றியில் குங்குமம் வைத்து, அக்னியை வலம் வந்து சத்தியம் செய்து, காலில் மெட்டி அணிவித்து என அவளை முழுதாக தன் சரிபாதியாக கடவுள் மற்றும் தன் சொந்த பந்தங்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டான். பின் மஞ்சள் தாலியை கோயில் உண்டியலில் செலுத்தி சாமி தரிசனம் செய்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

வீட்டிலும் சில பால் பழம் கொடுப்பது போன்ற சில சடங்குகள் செய்து வரவேற்புக்கு சிறிது நேரமே இருப்பதால் ஹோட்டலுக்குச் சென்றனர்.

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் முழுதும் மிகவும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.
அங்கிருந்த மேடையில் கதிரவன் கருப்புநிற கோட்சூட்டிலும் வான்மதி பச்சை பட்டு புடவையில் அதற்கு மேட்சாக கல் வைத்த நகைகளுடன் இருக்க இருவரும் அவ்வளவு அழகாக இருந்தனர்.

அங்கு வந்திருந்த கதிரின் சொந்தம் வான்மதியின் அழகிலே “பொண்ணு இவ்வளவு அழகா இருந்தா யார் தான் விடுவாங்க அதனாலே தான் சீக்கிரம் கல்யாணம் முடிச்சுட்டாங்க” என்று பேசிக் கொண்டனர்.

இதனால் இவர்களுக்கு எப்படி திருமணம் நடந்தது என்று பேச்சே எழவில்லை. அதில் அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது.

காலையில் உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்ததாலும் கதிர் மற்றும் வான்மதி சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்கள் என அதுவே மதியம் மூன்று மணிவரை இழுத்தது.

பின் சிறிது நேரம் கதிரும் வான்மதியும் சாப்பிட்டு ஓய்வெடுத்து மாலையில் வேறு உடையில் தயாராகி வந்தனர்.

கதிர் கருநீலத்தில் தங்கநிறம் கலந்த ஷெர்வானியில் நின்றிக்க வான்மதி பிங்க் நிறத்தில் தங்கநிற கற்கள் பதித்த வேலைப்பாடோடு அமைந்த சோளியில் அணிந்திருக்க இருவரும் மேடையில் அசத்தினர்.
அதில் முக்கிய தொழிலதிபர்கள், தொழில் முறை நண்பர்கள், கதிரின் பள்ளி கல்லூரி நண்பாகள், உடன் வேலை செய்பவர்கள் மற்றும் அவர்கள் ஆபிஸில் வேலை செய்பவர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டனர்.

காலையோடு இரவில் வந்த கூட்டத்தைப் பார்த்து வான்மதி மிரண்டு போனாள்.

கதிர் மிகவும் முக்கியமானவர்களை வான்மதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

வான்மதியின் குடும்பத்தார் பரம்பரை பணக்காரர்கள் தான் என்றாலும் அவர்கள் ஊர் சுற்று வட்டாரத்தில் தான் அவர்கள் தொழில் செய்வது. அதனால் அங்கு மற்றும் அவர்கள் இனத்தில் தான் பிரபலம். ஆனால் கதிரின் குடும்பமோ வெளிநாடுகளிலும் தொழில் செய்வதால் அனைவருக்கும் தெரியும்.

வான்மதியின் குடும்பத்தாருக்கு வந்திருந்தவர்களை பார்த்ததும் கதிரின் உயரம் அவர்களுக்கு புரிந்தது.
இரவு வரவேற்பு முடிந்து 11 மணி அளவில் வீட்டிற்கு வந்தவர்களை மீனாட்சி திருஷ்டி சுத்தி உள்ளே கூட்டிச் சென்றார்.

கதிர் தனது அறைக்கு செல்ல அங்கு கட்டில் முழுவதும் மல்லிகை மற்றும் ரோஜா இதழால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து புரியாமல் இருக்க அவன் என்ன சின்னக் குழந்தையா? எனவே சில முடிவு எடுத்து ஃப்ரஷ்ஷாகி வர குளியலறைக்குச் சென்றான்.

வான்மதியை குளிக்கச் சொல்லி சிவப்பு நிற சாப்ட் சில்க் புடவையில் அதற்கு மேட்சாக ரூபி நகைகள் அணிவித்து சிம்பிள் மேக்கப் செய்து தலையை தளரப்பின்னி தலை நிறைய மல்லிகைப் பூ வைக்க,
அவளுக்கு தங்கள் குடும்ப பரம்பரை வைர நெக்லஸ{ம் தங்கக் கொலுசையும் போட்டு திருஷ்டி முறித்து “மாப்பிள்ளை மனசு போல் நடந்துக்க பாப்பா” என்று லட்சுமி பெரியம்மா சொல்ல
தெய்வானையும் சில அறிவுரை சொல்லி விசாலம் பாட்டி மற்றும் மீனாட்சி அண்ணியிடம் ஆசிர்வாதம் வாங்கச் சொல்ல,

அவள் பாட்டியிடம் வாங்கிவிட்டு அவளுடைய அத்தை மீனாட்சி காலில் விழவும் அவளுக்கு தன் அணைப்பாலே அவர் ஆசிர்வதித்து, வான்மதியிடம் வெள்ளி பால் சொம்பைக் கொடுத்து காவ்யாவிடம் அவளை கதிரின் அறையில் விட்டு வரச் சொன்னார்.
அவர்களது அறையில் நுழைந்த வான்மதிக்கு பெரியவர்கள் சொன்னபடி செய்ய வேண்டுமே என்று பயம் தொற்றிக் கொண்டது.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் கதிரின் காலில் விழுந்து வணங்கி பாலை அவன் கையில் கொடுக்கச் சொன்னார்கள்.

இந்த ஐந்து நாட்களில் கதிர் வான்மதியோடு ஒரு வார்த்தை ம்கூம் பார்வை கூட பார்த்ததில்லை. இப்படி இருக்க சும்மா அவன் எதற்க்கெடுத்தாலும் கோபப்படுவதை பார்த்து பயந்து இருப்பவள் அவனிடம் எப்படி தைரியமாக கொண்டு போய்ப் பாலைக் கொடுப்பாள்.

அவளுக்கு முதலிரவு என்றால் கணவன் காலில் விழுந்து பால் கொடுத்து உறங்குவதே தெரியும். உள்ளே என்ன நடக்கும் என்று கொஞ்சம் கூட அறியாத குழந்தை.

அது செய்ய வேண்டும் இது செய்ய வேண்டும் என்று கூறியவர்கள் கொஞ்சம் இது பற்றி மேலொட்டமாக சொல்லியிருந்தால் கூட அவள் உள்ளே வந்திருப்பளா என்ன.

ம்கூம் அப்படியே அவளுடைய ஊர் பூஞ்சோலைக்கே ஓடியிருப்பாள்.

வான்மதி உள்ளே வந்து கதிரிடம் பால் சொம்பைக் கொடுத்து அவன் காலில் விழ, அவனோ அவளை தூக்கி நிறுத்தி அப்படியே அணைத்து அவள் இதழில் தன் இதழை வன்மையாக பொருத்தினான்.

அவள் மூச்சுக்கு ஏங்கி விலக அவன் இடைவெளியில்லாமல் அவளை இறுக்கி மேலும் முத்தமிட்டான். அதில் அவள் பயந்து மறுக்க அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் கட்டிலில் கிடத்தி அவளை தன் வசமாக்கத் தொடங்கினான்.

Advertisement