Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 10

கதிர் கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு குளித்து தயாராகி வர காவ்யா வந்து தன் அண்ணனுக்கு உணவு பரிமாறினாள்.

மதியம் பிளைட்டில் கதிரின் பெற்றோர் வருவதாகக் கூறி கிரி தான் போய் அழைத்து வந்துவிடுவதாகச் சொல்ல கதிர் தனக்கும் மதுரையில் சில செய்ய வேண்டிய வேலை இருப்பதால் தானும் வருவதாகவும் அதனை முடித்துவிட்டு பின் இருவரும் அவர்களை அழைத்து வரலாம் என்று சொல்ல கதிரவனும் கிரியும் சாப்பிட்டுவிட்டு சென்றனர்.

அவர்கள் சென்ற சிறிதுநேரத்தில் வர்ஷா பாப்பா முழித்துக் கொள்ளவும் காவ்யா வான்மதியின் தூக்கம் கெடாதவாறு வெளியே தூக்கிக் கொண்டு வந்தாள்.
பின் அவளுக்கு பாப்பாவை குளிக்கவைத்து தயார் செய்து உணவூட்டி விளையாட்டு காண்பிப்பதில்லயே நேரம் சென்றது.

கதிர் கிரியை அழைத்துக் கொண்டு நேராக பெரிய மாலுக்குச் சென்றான். அங்கு வான்மதிக்கு துணிகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்க கிரிக்கு தான் ஆச்சரியமாக இருந்தது.

பின்னே தங்களுக்கு இது தோன்றவில்லையே என்று தான்.

கதிர் பொருட்களை வாங்கிக் கொண்டு கிரியுடன் விமான நிலையத்திற்குச் சென்று தன் பெற்றோர்களை கூட்டி வந்தான்.

மீனாட்சிக்கு தன் மருமகளை பற்றிக் கேட்டுத் தெரிந்துக்கொள்ள ஆசையாக இருந்தது. ஆனால் தான் ஏதாவது கேட்டு மகன் கோபப்பட்டுவிடுவானோ என்று அமைதியாகவே வந்தார்.

வீட்டிற்கு வந்ததும் எதிர்ப்பட்ட தன் மகள் காவ்யாவிடம் கூட பேசாமல் நேராக அவர் கதிரின் அறைக்குச் சென்றார். அங்கு தன் மருமகளை காணாது தேடி வெளியே வர காவ்யா அவரை நன்றாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவரோ அவளின் முறைப்பைக் கண்டுகொள்ளாமல் “என்னோட மருமக எங்க” என்றுக் கேட்க

“அம்மாhhhh………”
…………..
“அதுக்குத் தான் உங்கள கூப்பிட்டுட்டே வரேன். நீங்க என்னன்னா என்னை பார்க்க கூட மாட்டேறிங்க” என்று குறைகூற

“இல்லடா ..” என்று எதோ சொல்லி சமாளிக்க வர

“சரி விடுங்கம்மா. உங்க ஆர்வம் புரியுது. அவங்க என்னோட ரூம்ல இருக்காங்க வாங்க” என்று கூட்டிச்சென்றாள்.

அங்கே தேவதை போல வெள்ளை நிற சுடிதாரில் அழகே உருவாக அமைதியாக குழந்தை போன்று கள்ளம் கபடமில்லாத முகத்துடன் உறங்கிக்கொண்டிருந்த தன் மருமகளை கண்டதும் அவர் அவள் அருகே அமர்ந்து தலையை பாசமாக வருடிவிட அவள் லேசாக அசைந்து அவர் கையை பிடித்துக்கொண்டே உறங்க ஆரம்பித்தாள்.

சிறு குழந்தை போல் இருக்கும் இவளுக்கு ஏன் இந்த சோதனை என்றே நினைத்தார். அதனால் அவரது தாயுள்ளம் விம்மியது.

இனி இவளை தாங்கள் எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.

மீனாட்சியும் காவ்யாவும் வான்மதியை பார்க்கச் செல்லும்போதே அவர்கள் பின்னாடியே ஆண்கள் அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

அங்கு நடந்ததைப்பார்த்து அவர்களும் ஒருவிதமான மனநிலைக்கு ஆளானார்கள்.

மதிய உணவிற்கு நேரம் ஆனதால் கிரி அவர்களை சாப்பிட அழைக்க அவர்களும் அவள் தூங்கட்டும் என்று எல்லோரும் வெளியே வந்தனர்.

சாப்பிட்டு விட்டு மீனாட்சி தன் மகளிடம் மருமகளைப் பற்றி வினவ

“அவங்க பேர் வான்மதி. வீட்டுக்கு ஒரே பொண்ணு. இன்ஜினியரிங் மூன்றாவது வருடம் படிக்கிறாங்க” என்று அவளைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் அவள் தன்னிடம் சொன்ன தகவல்களை காவ்யா சொன்னாள்.

அவர்களுக்கு அவள் அவ்வளவு சிறிய பொண்ணா என்றே தோன்றியது. ஏன்என்றால் கதிருக்கும் வான்மதிக்கும் ஒன்பது வருட வித்தியாசம்.

அவர்கள் கதிரின் கடந்தகாலத்தால் இவளுக்கு சின்ன மனவருத்தம் கூட ஏற்படக்கூடாது என்ற கடவுளை வேண்டிக்கொண்டனர்.

கதிர் சொல்லயவற்றிலிருந்து சுந்தரேசனுக்கு ஏனோ வான்மதியின் பெற்றோரை பற்றி தவறாக எண்ண இயலவில்லை. அவர்கள் செயலுக்குப் பின் நிச்சயம் ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று தோன்றியது.

எனவே, அவர் கதிரிடம்
“அடுத்து என்ன செய்யலாம்” என்று வினவ

கதிர் “அடுத்து என்னன்ன என்னப்பா எனக்கு புரியலை” என

“இல்ல கதிர் அவங்க வீட்டுல போய் நாங்க பேசவா இல்ல நீ வேற எதாச்சும் முடிவு எடுத்துருக்கியா” எனவும்

அவர் சொல்வதை சரியாக புரிந்துக்கொண்டவன் “நானும் போகமாட்டேன் என்னை மீறி நீங்களும் போகக்கூடாது” என்று கோபமாக கத்திவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

வான்மதிக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் அலைச்சல் காரணமாக வெகுநேரம் உறங்கியவள் அப்போது தான் எழுந்தாள்.

முதலில் அவளுக்கு இது தன்னுடைய அறை இல்லையே தான் எங்கு இருக்கிறோம் என்றே புரியவில்லை.

பின் தான் நேற்று நடந்த சம்பவங்களும் அதனை தொடர்ந்த கதிர் தன்னை திருமணம் செய்து அழைத்து வந்ததும் என அனைத்தும் நினைவில் வந்து கண்கள் கண்ணீரைச் சுரந்தது.

அவள் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு அருகிலிருந்த குளியறையில் முகத்தை கழுவிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வர, அப்போது தான் கதிர் கத்திவிட்டு செல்வதைப் பார்த்து பயத்தில் இவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.

அவள் அங்கு வந்ததை முதலில் பார்த்த மீனாட்சி வேகமாக எழுந்து அவளருகே சென்று அவள் கையை பிடித்துக் கொண்டு பாசமாக “நான் தான்மா கதிரோட அம்மா. நீயும் என்னோட பொண்ணு மாதிரி தான்மா. ஏதாச்சும் ஜுஸ் குடிக்கிறியமா?” என்று வினவ

அவளோ பயத்தில் இருந்ததால் தலையை மட்டும் சரி என்பது போல் ஆட்ட

அவளை கூட்டிச்சென்று சோபாவில் தன்னருகே அமர்த்தி ஜுஸ் கொண்டு வரச்சொல்;லி குடிக்க வைத்தார்.

தன் கணவனையும் அங்கு இருந்தவர்களையும் அறிமுகப்படுத்தி அவளோடு கொஞ்சநேரம் பேசிவிட்டு அவளை குளித்து தயாராகி வரச்சொல்லி காவ்யாவோடு அறைக்கு அனுப்பினார்.

காவ்யா அப்போது தான் ஞாபகம் வந்தவளாய் வேறு உடை இல்லையே என்று சொல்ல

கிரி தன் நண்பன் வாங்கிய பொருட்களை எடுத்துக் குவிக்க காவ்யாவும் மீனாட்சியும் மலைத்துவிட்டார்கள்.

கதிர் வான்மதிக்கு தேவையான சில நகைகள், உடைகளிலிருந்து சிறு பொட்டு வரை அனைத்தும் வாங்கி வந்திருந்தான்.

காவ்யா அதனை பார்த்து “யார் வாங்குனிங்க” என

சிரிப்புடன் “எல்லாமே கதிர் தான் வாங்குனான்” சொல்ல

காவ்யா “அதான பார்த்தேன் பிஸினஸ் தவிர உங்களுக்கு ஒன்னுமே தெரியாது. உங்களுக்கு கர்சீப் கூட வாங்கத் தெரியாது. இதுல எங்க நீங்க வாங்க போறிங்க. என்ன இருந்தாலும் எங்க அண்ணன் செலக்ஷன் சூப்பர். எங்க அண்ணே அண்ணன் தான். பேசாம நீங்க எங்க அண்ணாட்ட டியூஷன் போங்க” என்று வாரினாள்.

கதிரின் செய்கையிலே மீனாட்சிக்கு தன் மகன் அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளும் நாள் தொலைவில் இல்லை என்று புரிந்தது.

ஆனால் அவர் அறியாதது புரியாதது, இவ்வளவு ஏன் இன்றே வாங்க வேண்டும் அவளையும் கூட்டிச் சென்று அவளுக்கு பிடித்ததாக வாங்கித் தரலாமே என்று யோசிக்கவில்லை.

அதை யோசித்திருந்தால் பின்னாளில் நடக்க இருப்பதை ஊகித்து தடுத்திருக்கலாம்.

மீனாட்சி அதில் இருந்த சிகப்பு கலர் அனார்கலி சுடியை போடச்சொல்லி எடுத்துக் கொடுக்க வான்மதியும் அன்று மலர்ந்த சிகப்பு ரோஜாவாக ரெடியாகி வந்தாள்.

மீனாட்சி “ரொம்ப அழகா இருக்கடா” என்று திருஷ்டி கழித்து உணவையும் அவரே ஊட்டிவிட்டார்.

சுந்தரேசன் ‘கதிர் திருமணம் யாருக்கும் முறைப்படி தெரிவிக்காததால் கிராமத்தில் ஆளாளுக்கு எதாவது கூறுவார்கள்’ என்று சொல்லி அன்றே அவர்களை சென்னைக்கு கூட்டிச்செல்ல முடிவெடுக்க,

அனைவரும் புறப்படத் தயாரானார்கள்

அவர்கள் புறப்படும் சமயம் யாரோ கதிரை தேடி வந்திருப்பதாக தோட்டக்காரர் வந்து சொல்ல கதிரும் கிரியும் சென்று போய் பார்க்க, அவர்களைப் பார்த்து கதிர் கோபமாக திரும்பி உள்ளே சென்றுவிட்டான்.

கிரிக்கு அவர்களை பார்த்தவுடன் அவர்களின் சாயலிலே வான்மதி குடும்பத்தினர் எனத் தெரிந்தது. எனவே வாங்க என அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

வெற்றிவேல் அவர்களோடு வந்தவன் உள்ளே செல்ல திரணில்லாமல் வெளியவே அமர்ந்து விட்டான்.

அவர்கள் உள்ளே வரவும், வான்மதி மீனாட்சி மற்றும் காவ்யாவோடு அறையிலிருந்து வெளியே வருவதைப் பார்த்த அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

லட்சுமி பெரியம்மாவும் தெய்வானையும் அவளிடம் சென்று கையைப் பிடித்து மன்னிப்பை வேண்டி கண்ணீர் வடிக்க,

“எங்கள மன்னிச்சுடுடா ராஜாத்தி. நம்ம குடும்ப மானத்தக்காக உன்ன வாழ்ககைய பணயம் வைச்சுட்டோம்” என்று ரத்னவேலும் கந்தவேலும் தங்கள் மகள் காலிலே விழுந்துவிட்டனர்.

அதில் அனைவரும் பதற அவளுக்கு அங்கு நடப்பது எல்லாம் கனவுபோல் இருந்தது.

சுந்தரேசன் தான் “என்ன சம்பந்தி ஏன் இப்படி பண்றீங்க” என பதற
கந்தவேலும் சுருக்கமா

க தங்கள் ஊரின் நடைமுறை மற்றும் விதிமுறைகளை சொல்லி அதனால் தான் தாங்கள் அவ்வாறு நடந்துக் கொண்டோம் என்பதை விளக்கி கதிரிடமும் மன்னிப்புக் கேட்டனர்.

கதிருக்குமே அவர்கள் சொன்னதைக் கேட்டு பாவமாக இருந்தது. இவர்களால் மட்டும் என்ன செய்ய இயலும்? என்று புரிந்துக் கொண்டு அவர்களிடம் கோபம் நீங்கி பேசினான்.

தன் அன்னை மீது கோபம் இருந்தாலும் அவர்களை மன்னித்த வான்மதிக்கு தன் தந்தை தன் மீது வைத்திருந்த பாசம் காரணத்தில் தான் அவ்வாறு நடந்தனர் என்று புரிந்து மனம் நிம்மதியாக அவர் தோள் சாய்ந்தாள்.

“என்ன மன்னிச்சுட்டியா பாப்பா?”

“விடுங்கப்பா எனக்காகத் தானே நீங்க அப்படி நடந்துகிட்டிங்க” என்று இவள் அவரைத் தேற்றினாள்.

வான்மதிக்கு அப்போது தன் அண்ணன் வெற்றிவேல் அங்கு இல்லாதது கண்ணில்பட தன் பெரியம்மாவிடம் “பாட்டியும் அண்ணாவும் வரலையம்மா?” என்று ஏக்கமாக கேட்க

அவர் “இல்லைமா பாட்டி இவ்வளவு தூரம் வந்து அலைய முடியாதுல்ல பாப்பா அவங்க வரல ஆனா வெற்றி எங்க கூட வந்தான் காணாமே” என அப்போது தான் அவரும் பார்த்தார்.

சும்மாவே அண்ணன் மேல் பாசம் கொண்டவள், தன் அண்ணன் வெற்றி தனக்காக பஞ்சாயத்தில் பேசி தன்னை நம்பியதால் வெற்றியை பார்க்க மனம் ஏங்கியது.

அவனை தேடி வெளியே சென்று அங்கு இருந்தவனை உள்ளே கூட்டிவர வெற்றி கண்கள் வழியாக கண்ணீரோடு மன்னிப்பை வேண்ட அவள் சென்று அணைத்துக் கொள்ள அவன் கதறிவிட்டான்.

யார் சொன்னார்கள் ஆண்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள், அழமாட்டார்கள் என்று. தன் உடன் பிறந்தவளை தன் தாய்க்கு சமம் என்று கருதும் ஆண் தன்னுடைய தங்கைக்கு இன்னோரு தகப்பன் ஆவான். உடன்பிறந்தாள் தான் தங்கை என்று இல்லை மனதால் அவளை சகோதரியாக நினைத்தால் கூட அப்பெண்ணுக்கு அவன் தந்தைக்கு ஒப்பாகும்.

அப்படிப்பட்ட அண்ணன்-தங்கை உறவு மகத்தனாது, புனிதமானது.

அப்படி இருக்கும் போது தன் கண் முன்னால் தன் தங்கைக்கு நடக்க இருந்த கொடுமையை தடுக்க இயலாத தன் நிலையை எண்ணி தன்னைத்தானே அவன் வெறுத்தான். அதுவே கண்ணீரோடு கதறலாய் வெளிவந்தது.

இதனைக் கண்ட அனைவருக்குமே கண் கலங்கியது.

“சரி விடுங்க நடந்தது எல்லாம் நல்லதுக்கு தான் நினைச்சுக்கங்க” என்று வெற்றியை சமாதனப்படுத்தியது கிரி இல்லை கதிர் என்று சொன்னால் நம்பமுடிகிறதா! ஆனால் நம்பித் தான் ஆகவேண்டும்.

கதிருக்குமே பஞ்சாயத்தில் நடந்த நிகழ்ச்சியில் அருணை அடித்து வான்மதிக்கு ஆதரவாக பேசியதன் மூலம் வெற்றி மேல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

கதிரும் ஒரு அண்ணன் தானே அதனால் வெற்றியுடைய மனநிலை புரிந்து அவனை தேற்றினான்.

அந்த நேரத்திலேயே வெற்றியுடன் கதிர் மற்றும் கிரிக்கு நல்ல நட்பு ஆரம்பமானது.

கதிர் வெற்றியிடம் சில விஷயங்களை சொல்லியும் அவனிடம் சில விஷயங்களை கேட்டும் தெரிந்துக் கொண்டான்.

சுந்தரேசன் வான்மதியின் பெற்றோரிடம் தாங்கள் சென்னைக்கு இன்றே கிளம்புவதாகவும் வெகு விரைவில் கதிருக்கும் மதிக்கும் திருமணமானதை ஒரு வரவேற்பு வைத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று கூற
அவர்களும் அதை ஆமோதிக்க, ஜோசியரிடம் நல்ல நாள் பார்த்து விட்டு தாங்கள் அவர்களிடம் சொல்வதாகச் சொன்னார்.

தெய்வானையும் லட்சுமியும் “அவ பேசவே ரொம்ப பயப்படுவா அண்ணி ஆனா பழகிட்டா நல்லா பேசுவா. நேரத்துக்கு சரியா சாப்பிடக்கூட மாட்டா. நீங்க கொஞ்சம் பாத்துக்கங்க அண்ணி” என்று மீனாட்சியிடம் சொல்ல

அவர் “மதி என்னோட மருமக இல்;ல மக. அவள நல்லா பாத்துக்குவோம்” என்று உறுதியளித்தார்.

ரத்னவேல் தன் மருமகனிடம் “என் பொண்ணு குழந்தை மாதிரி மாப்பிள்ளை. பாப்பா ஏதாச்சும் தப்பு செஞ்சா நீங்க சொன்னா புரிஞ்சுக்கும். ஒரு சின்ன சொல் கூட தாங்காது” என

அவன் அவர் கையை பிடித்து ஆறுதல் தர,

வெற்றியும் கந்தவேலும் அதையே சொல்லி கிளம்ப
வான்மதியின் குடும்பத்தினர் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பவும் இரவு நேரத்தில் சென்றால் வெயிலின் உஷ்ணமும் பயணக்களைப்பும் தெரியாது என்று இவர்களும் காரில் சென்னையை நோக்கி பயணித்தனர்.

Advertisement