Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 18


காவ்யாவும் கிரியும் லண்டனுக்கு தேன்நிலவிற்காகச் செல்ல இங்கே கதிர் மற்றும் சஞ்சனா நிச்சயதார்த்தம் அவர்களது சொந்த ஊரிலே உறவினர்கள் சொந்தபந்தங்கள் முன்னிலையில் சுமூகமாக நடந்தது.


அன்று நகைகள் வாங்க போகலாம் என்று முடிவு செய்ய,
சஞ்சனாவின் அம்மா சுந்தரி தான் வரவில்லை எனவும் மீனாட்சி மற்றும் சில உறவினர்களோடு சஞ்சனா செல்ல முடிவு செய்யப்பட்டது.


சஞ்சனா அறையில் அவள் கிளம்பிக்கொண்டிருக்கும் போது, அவள் போன் அடித்தது.


சஞ்சனா எடுத்து தன் போனைப் பார்க்க அவள் தோழி வனிதா தான் அழைத்தது.


போனை ஆன் செய்து காதில் கொடுத்து,
“ஹம்ம் சொல்லுடி?” என


“நீ பெரிய கில்லாடி தான்டி. ஒருத்தனக் காதலிச்சு மடக்கினதும் இல்லாமா இப்ப நல்ல புளியங்கொம்பா தான் பிடிச்சுட்ட. உங்க மாமன் மகன் அந்த போலீசையே ஏமாத்திட்ட” என்று சிரிக்க


“அதுக்கெல்லாம் ஒரு ராசி வேண்டும்டி. என்ன பார்த்து பொறாமைபடாத. சரி நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு”


சில தவறான ஆண் நண்பர்கள் பழக்கங்களால் அவள் கர்ப்பமாகி விட என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தன் தோழி வனிதாவுக்கு கால் செய்து அவள் அக்கா டாக்டர் என்பதால் என்ன செய்யலாம்? விசாரிக்கச் சொன்னாள். அதற்குத் தான் இப்போது அவள் போன் செய்தது.


“அத சொல்லத் தான்டி கால் பண்ணுனேன். மூணு மாசத்துக்குள்ளத் தான் அபார்ஷன் பண்ணமுடியுமாம். அப்புறம் பண்ணக் கூடாதாம்டி”


“சரி விடு பார்த்துக்கலாம். கல்யாணத்துக்கு முன்னாடி முடிஞ்சா பண்ணலாம் இல்ல அந்த கதிரையே இந்தக் குழந்தைக்கு அப்பாவாக்கிறேன்” என சிரிக்க


“எப்படிடி முடியுமா?”


“என்ன பத்தி உனக்குத் தெரியாதா? நான் சொன்னத கண்டிப்பா செய்வேன்”


“நான் என்ன சொன்னேன் அந்த எம்பி மகன் அவன என் பின்னாடி சுத்த வைக்குறேன் என்று சொன்னேன் செஞ்சேன்ல. ம் அப்புறம் அவன் பேர் என்ன ஹான் சுரேஷ் அவனையும் என் பின்னாடி நல்லா சுத்தவிட்டேன்ல. என்ன இந்த தடவை ஒரு நாள் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன் போல. அதான் இப்ப இங்க வந்து நிக்குது” என்று தன் வாயாலே வாக்கு மூலம் போல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


“சரிசரி உன்னோட திருவிளையாடல் எல்லாம் நிறுத்திக்கோ கல்யாணத்துக்கு பிறகு மாட்டிக்கப் போற”


“அதெல்லாம் நான் பாத்துக்குவேன். அந்த கதிருக்கு ஒரு முத்தம் கொடுத்தா போதும்டி அதுக்கே என்கிட்ட ப்ளாட் ஆயிறுவான். அவன என் கைக்குள்ள வச்சிக்க எனக்கு தெரியும். என்னோட அத்தை கிளவி அதான்டி அந்த மீனாட்சியையும் அவ பெத்த பொண்ணு காவ்யாவையும் வீட்ட விட்டே விரட்டணும்டி. அப்புறம் அங்க நான் தான் ராணி. எனக்கு பிடிச்சதெல்லாம் யாருகிட்டேயும் கேட்காம வாங்கி சந்தோஷமா வாழ்வேன்” என்ற கண்களில் கனவு மிதக்க பேசிக் கொண்டிருந்தாள்.


அப்போது பார்த்து கதிர் சஞ்சனா அறைக்கு வரவும் வேகமாக போன் காலை கட் செய்தவள்


“வாங்க அத்தான்” எனக் கதிரை உள்ளே அழைத்தவள் அவ்வளவு நேரம் தான் பேசியதெல்லாம் போனில் பதிவாகியதை கவனிக்கவில்லை.
கவனித்திருந்தால் அவள் உயிரோடு இருந்திருப்பாளோ இல்லை கதிரே கொன்றிருப்பானோ என்னவோ.


சஞ்சனாவின் வாழ்வில் விதி தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.


உள்ளே வந்தவன் ஏடிஎம் கார்டை கொடுக்கவும் சந்தோஷமடைந்தவள் உடனே அதை வாங்கினால் அவன் சந்தேகப் படுவான் என்று சிறிது பிகு செய்தாள்.


அவன் முத்தம் கேட்கவும் இதை வெச்சே அவன கவுத்துரனும் என்று கன்னத்தில் முத்தமிட்டு அவன் கையிலிருந்த கார்டை வாங்கிக் கொண்டாள்.


நகை கடைக்குச் சென்றவர்கள் அவளுக்கு பார்த்து பார்த்து மீனாட்சி வைர மற்றும் தங்க நகைகளை வாங்கி முடிக்க, அங்கே இருந்த ஒரு வைர நகை செட்டை பார்த்து அவளுக்கு ஆசையில் கண்கள் மின்னியது.
ஆனால் அந்த நகையை கையில் எடுத்துப் பார்க்க,
மீனாட்சி “உனக்கு பிடிச்சிருக்கா சஞ்சு?”


அப்பொழுது தான் அதன் விலையை பார்ப்பவள் போல் “ஓ இவ்வளவு விலையா இதேல்லாம் வேண்டாம் அத்தை” என்று சொல்லவும்


கதிர் “நீ சும்மா இரு சஞ்சு. அம்மா நீங்க அதையும் வாங்குங்க” என்று சொல்லவும்


“வேண்டாம் அத்தான். ஏற்கனவே நிறைய அத்தை வாங்கியிருக்காங்க. இது எதுக்கு வீண் செலவு தான்”


“உனக்கு பிடிச்சுருக்கு தானே என்னோட கிப்ட்டா இத நீ வாங்கிக்கோ” என்று அதை வாங்கி அப்போதே அவள் கழுத்தில் மாட்டியும் விட்டான்.


நகைகள் எல்லாம் வாங்கி முடித்து காரில் அருகிலிருக்கும் துணிக் கடைக்குச் செல்ல தன் கழுத்தில் நகையை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டே இருந்தவள் தன் போனை காரிலே மறந்து விட்டு சென்றுவிட்டிருந்தாள்.


கதிருக்கு அவர்கள் துணி எடுக்க கடையையே புரட்டிப் போட்டதைப் பார்த்து இன்னைக்குள்ள இவங்க ஒரு சேலையாவது எடுத்துருவாங்களா என பயம் வந்தது.
எனவே தன் அம்மாவிடமும் சஞ்சுவிடமும் சொல்லிவிட்டு காருக்கு சென்றான்.


அப்போது சஞ்சனாவின் போன் சத்தம் போட அவன் பின்னிருக்கையில் பார்க்க அங்கே அவள் போன் ஒளிர்ந்துக்கொண்டிருந்தது.


அதை பார்த்தவன் அதை எடுத்து நோண்ட சஞ்சனாவின் தோழி தான் கால் செய்திருந்தாள். அத்தோழி வெகுநேரமாக முயற்சி செய்து லைன் கிடைக்காததால் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தாள்.


அதை ஓபன் செய்து பார்த்து விட்டு அன்றைய தேதியிட்ட அப்படியே மற்ற ரெக்கார்டிங்கை கேட்க அதில் சஞ்சனாவும் அவன் தோழி வனிதாவும் பேசியிருந்தது கைப்பட்டு தவறுதலாக பதிவாகியிருந்ததை வைத்தான்.
அதைக்கேட்டவன் அப்படியே அதிர்ச்சியாகிவிட்டான்.


அவனால் எதையுமே நம்பஇயலவில்லை. தான் ஏமாற்றப் பட்டதை, பட போவதை நினைத்து உள்ளம் கொதித்தது.
இப்படியெல்லமா ஒரு பெண்ணால் செய்ய முடியும்? ஆனால் தன் காதால் கேட்டு கண்ணால் அந்த சில ஆதாரங்களைப் பார்த்த பிறகு என்ன செய்ய முடியும் அனைத்தும் உண்மை தான்.


அவளை பார்த்தால் தன் கையாலே கழுத்தை நெரித்து கொலை செய்யும் அளவு கோபம் அதன் கரையை கடந்து வந்திருந்தது.


காலையில் தன் தோழியிடம் போன் பேசியதிலிருந்து சஞ்சனா மனதில் ஏதோ ஒன்று நெருடலாகவே இருந்தது. ஆனால் நகை வாங்கபோகலாம் எனவும் அதை ஒதுக்கித் தள்ளி ஆசையாக வந்தாள்.


எல்லாம் வாங்கிவிட்டு வெளியே வர மீனாட்சியை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு தங்கள் காரை தேடிவந்தாள்.


அப்போது கடையில் இருந்து சஞ்சனா வெளியே இவனைத் தேடி வருவதை கதிர் பார்த்துவிட்டான்.
சஞ்சனாவைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறி கழுத்து நரம்பெல்லாம் புடைத்து கண்கள் சிவக்க வேட்டைக்கு காத்திருக்கும் வேங்கைப்போல காரிலிருந்து இறங்கினான்.


சாலை கடக்கும் போது நிமிர்ந்து கதிரை பார்த்தவள் அவனை அப்படி கோபமாக இருப்பதைக் கண்டு தன்னைப் பற்றிய உண்மைகள் அவனுக்கு தெரிய வந்தால் தன் நிலை என்னவாகும்? என்று யோசித்தவள் கழுத்தில் இருந்த வைர நகையை ஆசையாக தொட்டுப் பார்த்துக் கொண்டே இதுக்காக எதுவும் செய்யலாம் இவனை சமாளிக்க முடியாதா என்று நினைத்துக்கொண்டே அவனை பார்த்து ஒரு ஏளன புன்னகையை வீசி சாலையைக் கடக்க அந்தப் பக்கத்திலிருந்த வந்த லாரி அவளை அடித்து தூக்கி வீசியது. சம்பவ இடத்திலேயே அவள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தாள்.


அவளுடைய இறுதிகாரியம் எல்லாம் கதிரே முன்னின்று முடித்தாலும் அவனுக்குள் கோபம் எரிமலைப் போல் கனன்று கொண்டிருந்தது.


ஒருவேளை சஞ்சனாவை அவன் கையால் ஏதாவது செய்திருந்தால் கூட உள்ளம் அமைதியாகியிருக்குமோ என்னமோ இப்போது அப்படியிருக்க முடியவில்லை.


இத்தனை வருடங்கள் தன் குடும்பம் ஒரு பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்ததை எண்ணி வேதனையடைந்தான்.
யார் குழந்தைக்கு யாரை அப்பாவாக்க நினைக்கிறாள்?

தன்னை எந்த அளவுக்கு அவள் கீழ்த்தரமாக எண்ணி தன்னுடன் பழகியிருக்கிறாள். அதைக் கூட புரிந்த கொள்ள இயலாத அளவுக்கு நான் என்ன படித்து வேலையில் இருக்கிறேன்? இதில் போலீஸ் வேலையில் வேறு இருக்கிறேன்? என்று தன் மேலயே கோபத்தில் இருந்தான்.


இதில் தன் அம்மா வேறு அவள் இறந்ததுக்கு தன் ஜாதகம் தான் காரணம் என்று எண்ணி தன்னை சில காலம் வெறுத்தது அவன் கோபத்தை மேலும் தூண்டியது.


அந்தக் கோபமே ஒட்டு மொத்த பெண்களையும் பெண்ணினத்தையும் அவனை வெறுக்கச் செய்தது.
கதிர் வர்ஷா பாப்பா பிறக்கவும் தான் சிறிது சகஜ நிலைக்கு வந்தான்.


அதனாலே வான்மதியையும் முதலில் வெறுத்தான். அவள் மேல் அவனுக்கு விருப்பம் ஏற்பட்டபோது அதற்கும் சேர்த்து அவளை படுத்தி வைத்தான்.


அந்த விருப்பம் அவள் மேல் காதலாக மாறவும் அவளிடம் அதை வெளிப்படுத்தாமல் அவளை தன் வட்டத்திற்குள்ளே வைத்துக்கொண்டு அவளின் ஒவ்வொரு செய்கைகயையும் ரசித்தான்.

ஆனால் அதை வெளிக்காட்ட இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான்.


அதுவும் சஞ்சனா நினைவு நாள் அன்று அவனை அறியாமலேயே அவள் தனக்கு செய்த துரோகங்கள் நினைவில் வந்து உள்ளுக்குள்ளே இருந்த கோபத்தை கிளறிவிட்டது.


வான்மதிக் கேட்ட ‘நீங்க யாரையாவது விரும்புனிங்களா?’ என்ற கேள்வியில் கதிருக்கு போயும் போயும் அவளை காதலிப்பதாக தான் நினைத்து சஞ்சனாவிடம் தான் அவளை விரும்புவதாக சொன்னது நினைவில் வந்து தன்மேலே கோபம் கொண்டு வான்மதியை வேகமாக தள்ளிவிட்டுச் சென்றான்.


அவள் மடியில் படுத்துக்கொண்டே இதையெல்லாம் சிந்தித்துக்கொண்டு இருந்தவன் அப்படியே கண்ணயர்ந்தான்.


இதில் அவன் அறியாதது கிரிக்கு சஞ்சனா இறப்பு சான்றிதழ் கிடைத்ததில் அவள் வயிற்றில் குழந்தையோடு இறந்தாள் என்று தெரியும் என்பது தெரியாது.


கிரிக்கு முதலிலிருந்தே சஞ்சனாவின் மேல் சந்தேகம் இருந்தது. அவன் ஒருமுறை அவளை வேறு ஆணோடு நெருக்கமாக பார்த்ததில் சந்தேகம் ஏற்பட்டு அவன் நேராக கதிர் வீட்டிற்குச் சென்று பார்க்க அங்கே சஞ்சனா இருக்கவும், தான் வேறு யாரையோ பார்த்து அது சஞ்சனா என்று எண்ணியதாக நினைத்துக்கொண்டான்.


ஒரு வேளை அவன் அன்றே நன்றாக விசாரித்திருந்தால் இதேல்லாம் நடந்திருக்காதோ என்று தன்னைத்தானே இப்பொழுது தினமும் வருத்திக் கொள்கிறான்.


உன் நண்பன் யாரேன்று சொல்லு நான் உன்னை பற்றி சொல்லுவேன் என்ற வாக்குக்கு ஏற்ப கிரியை தவிர வேறு யாராலும் கதிரை புரிந்துக்கொள்ள முடியாது.


கிரி தன் மனைவியிடம் கூட கதிருக்காக, கதிரின் வாழ்க்கை சரியாகவேண்டும் என்று வர்ஷா உண்டானது தெரிய வருவதற்கு முன்பிருந்தே விலகித்தான் இருந்தான்.


என்று வான்மதி கதிரின் வாழ்க்கையில் நுழைந்தாளோ அப்போது அனைவரையும் விட கிரி தான் மகிழ்ந்தான்.
என்ன தான் கதிர் வெளியே தன் காதலை காட்டிக் கொள்ளவில்லையென்றாலும் அவனை புரிந்துக்கொள்ளாமலிருக்க கிரி என்ன முட்டாளா?


மதியை அவன் பார்க்கும் பார்வையிலே அனைத்தையும் புரிந்து கொண்டான்.


அதனாலே இப்போது வான்மதி மனதில் பயந்திருக்கிறாள் என்று புரிந்து காவ்யாவிடம் சொல்லி சஞ்சனா பற்றி சில தகவல்களை சொல்ல சொன்னான்.


இப்போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
ஏன் என்றால் அவன் மதியை பற்றி அறிந்த வரையில் சிறிய விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொண்டு பயப்படுபவள் பெரிய விஷயங்களை மிக எளிதாக சமாளிப்பதை தன் கண்கூடாக கண்டிருக்கிறான்.


தாங்கள் யாரும் சஞ்சனாவைப் பற்றி கதிரிடம் பேசி அவன் மனக்காயத்தைக் குறைக்க முடியாது. அது வான்மதியால் மட்டுமே முடியும் என்று நம்பினான்.


புரையோடிய புண்ணுக்கு ரணசிகிச்சை எவ்வளவு முக்கியமோ அதுபோலத் தான் சஞ்சனாவை பற்றி மதிக்கு நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லியிருக்க அவள் கண்டிப்பாக சஞ்சனாவை பற்றி பேசுவதில் கதிருக்கு கோபம் குறைந்து ஒரு தெளிவு கிடைக்கும் என்று நினைத்தான்.


அதுமட்டுமில்லாமல் இறந்தவளை பற்றி தவறாக கூற கிரிக்கு மனம் வரவில்லை. கண்டிப்பாக சஞ்சனாவை பற்றி முழு உண்மையும் வான்மதிக்கு தெரிய வேண்டும்.

ஆனால் அதை கதிர் தான் வான்மதியிடம் கூற வேண்டும். அப்போது தான் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நம்பினான்.
அவன் நம்பிக்கை ஜெயிக்குமா?

Advertisement