Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 17


கிரி மட்டும் தன் நண்பனிடம் சென்று வான்மதிக்கு மயக்கம் தெளிந்ததை சொல்ல அவன் புயல் போல் அந்த அறைக்குள் நுழைந்தான்.


அங்கே வாடிய மலராக படுத்திருந்த மதியை கண்டு அவன் காதல் கொண்ட நெஞ்சம் விம்மியது.
அவள் அருகே சென்று அமர்ந்து அவள் தலைக்காயத்தை நடுங்கும் கைகளால் வருட அவன் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.


விடியும் வரை அவன் தூங்காமல் கண் மூடாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
விடிந்ததும் தான் வான்மதியும் தூக்கம் களைந்து எழுந்தாள்.


அவள் முகத்தில் முழித்ததும் தலையில் ஏற்பட்ட காயத்தின் வலி தெரிய, அதனால் முகத்தைச் சுருக்க அதைப் பார்த்த கதிரின் மனமும் வலித்தது.


அவளிடம் பேசலாம் என்று அவளருகில் செல்ல முயற்சிக்க, கதிரைப் பார்த்ததும் அவள் பயந்த பார்வை பார்க்கவும் அவன் மனம் வெறுத்து வெளியில் வந்து அமர்ந்தான்.


அவன் வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட,
சுந்தரேசன் மதியிடம் “இப்ப எப்படி இருக்குமா?” என


“நல்லா இருக்கேன் மாமா”


மீனாட்சி “ரொம்ப வலிக்குதா?” என பரிவாக வினவ


“இப்ப லேசா தான் அத்தை வலிக்குது”


கிரி “என்னம்மா தங்கச்சி எங்கள ரொம்ப பயமுறுத்திட்ட?”


அவள் சிரிக்கவும், “சிரிக்காதிங்க அண்ணி” என்று காவ்யா செல்லமாக மிரட்ட


“சரிம்மா. கொஞ்சம் ஃப்ராஷ்ஷாகிவிட்டு வந்து பால் சாப்பிடும்மா” என்று மீனாட்சி சொல்ல


அவளும் தன் அத்தை மற்றும் காவ்யா உதவியுடன் முகம் கழுவி பல் துலக்கி வர


அவர்கள் அவளுக்கு பாலை புகட்டி சிறிது உணவு ஊட்டி மாத்திரையை விழுங்கச் செய்தனர்.


மதி “வர்ஷ{ பாப்பா எங்க அத்தை?” என தன் அத்தையிடம் கேட்க


“இல்லடா நேத்து சாயங்காலம் ரொம்ப நேரம் வரைக்கும் ஹாஸ்பிட்டல தான் வர்ஷ{ பாப்பாவும் இருந்தா. அதனால் தூங்கவே இல்ல. அதான் இன்னைக்கு சாரதா அம்மாட்ட கொடுத்து பாத்துக்க சொல்லிட்டு வந்தோம்” என்றார்.


டாக்டர் வந்து மதியை செக் செய்து அவளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுக்க
சுந்தரேசன் “எப்ப டாக்டர் டிசார்ஜ் செய்விங்க? நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?” என்று வினவும்


“நீங்க தாராளமா கூப்பிட்டு போகலாம். நெக்ஸ்ட் வீக் வந்து காயத்துக்கு கட்ட மட்டும் மாத்திட்டு போயிடுங்க” எனவும்


அவர்கள் எல்லா பார்மாலிடிசும் முடித்து அன்றே வான்மதியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
எப்படி இருந்தாலும் வான்மதி வீட்டிற்கும் சொல்ல வேண்டும் என்பதால் அவள் வீட்டிற்கு அழைத்து அவளுக்கு தலையில் அடிபட்டுவிட்டது என்று விவரத்தைக் கூறி இப்போது நன்றாக இருக்கிறாள் என சொல்லவும் அவர்களும் உடனே கிளம்பிச் சென்னைக்கு வந்தனர்.


வான்மதியின் வீட்டினரும் சில நாள் வந்து தங்கிச்செல்ல மதிக்கும் கதிருக்கும் இடையேயான இடைவெளி அதிகமானது.


மதியின் கட்டைப்பிரித்து விட்டு இப்போது சின்னதாக பிளாஸ்டர் மட்டும் ஒட்டி விட்டிருந்தனர்.


கதிரை மதி பார்க்கும்போது அன்றைய நாள் தன்னை தள்ளிவிட்ட நினைவில் இன்னும் பயத்தில் விலக ஆரம்பித்தாள்.


கதிர் அவள் அருகிலே இருந்தாலும் அவள் முன் செல்லாமல் அவளுக்கு தேவையானது எல்லாம் உடனிருந்து செய்துக் கொடுத்தான்.


ஆசிரியர் திட்டிவிட்டால் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒரு குழந்தை போன்று அவள் செய்கை இருந்தது.


அவர்களை பார்த்ததில் மதியின் பயத்தை புரிந்துக்கொண்ட கிரி காவ்யாவிடம் சொல்லி சஞ்சனாவைப் பற்றிய சில தகவல்களை சொல்ல சொன்னான்.


கதிர் அன்று வேலையாக வெளியே சென்றிருக்க, வீட்டு பெரியவர்கள் கோயிலுக்கு சென்றிருந்ததால் வான்மதி, காவ்யா மற்றும் வர்ஷா பாப்பா மட்டுமே இருந்தனர்.


வான்மதியின் அறைக்கு வந்த காவ்யா “என்ன அண்ணி பண்ணிக்கிட்டு இருக்கிங்க?” என


காவ்யா கையில் இருந்த வர்ஷ{ பாப்பாவை வாங்கி ‘அத்தைய பார்க்க இங்கயே வந்திட்டிங்களா செல்லம்’ என்று கொஞ்சிக் கொண்டே


“சும்மா தான் புக் படிச்சுட்டு இருக்கேன் அண்ணி” எனவும்


“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்?”


“சொல்லுங்க அண்ணி”


“இல்ல நீங்க இத இப்படி எடுத்துக்குவிங்களோன்னு பயமா இருக்கு” என


“ஐயோ நான் என்ன அண்ணி சொல்ல போறேன். நீங்க எதா இருந்தாலும் என்கிட்ட உரிமையா சொல்லலாம். என் நல்லதுக்கு தானே நீங்க சொல்விங்க” என


காவ்யாவும் பக்குவமாக சஞ்சனாவை பற்றி சொல்ல ஆரம்பித்தாள். சஞ்சனா எங்களோட அத்தை பெண் என்று ஆரம்பித்து சஞ்சனாவுக்கும் கதிருக்கும் நிச்சயம் நடந்து பிறகு அவள் இறந்தது வரை சொல்ல வான்மதிக்கு கதிரை நினைத்து பாவமாக இருந்தது.


சேச்சே அன்னைக்கு அவரே வருத்தமா இருந்துருப்பாரு. இதுல நாம வேற யாரையாவது விரும்புனிங்களானு கேட்டு பழச ஞாபகப்படுத்தியிருப்போம். அதான் கோபத்துல நம்மகிட்ட அப்படி நடந்துகிட்டாரு போல என்று தன்னைத் தானே அவள் கடிந்துக்கொள்ள


“அண்ணி அண்ணி” என பலமுறை காவ்யா அவளை உலுக்கியிருந்தாள்.


“ஹான் சொல்லுங்க அண்ணி”


“இல்ல நீங்க அண்ணாவ பத்தி…” என்று இழுக்கவும்


“ஐயோ இதுல நான் தப்பா நினைக்க எதுவுமே இல்ல. நான் தான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும். அவங்க வருத்தமா இருக்குறது தெரியமா இத்தன நாள கோபமா இருக்காங்கனு நினைச்சு நான் பயந்து அவங்ககிட்ட பேசவே இல்ல” என்ற அப்பாவியாய் உண்மையை உரைத்தாள்.


அப்பொழுது தான் கிரி எதற்காக சஞ்சனாவை பற்றி மதியிடம் உண்மையை சொல்ல சொன்னான் என்று புரிந்த காவ்யா கிரியை நினைத்து பெருமையாய் தன் மனதிற்குள்ளே கொஞ்சிக் கொண்டு வர்ஷா பாப்பாவையும் வாங்கிக்கொண்டு அவள் அறைக்கு சென்றாள்.


அன்று இரவு கதிர் படுக்கையில் அமர்ந்துக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்ய சோபாவில் அமர்ந்து டிவி பார்ப்பது போல் மதி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.


அவள் பார்ப்பதும் தெரிந்தாலும் எங்கே தான் பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்வாளோ என்று அவளை பார்க்காத மாதிரியே கதிர் அமர்ந்திருந்தான்.


அவளும் பசித்ததால் சாப்பிடலாம் என்று போனில் கீழே அழைத்து வேலைக்காரர்களிடம் உணவை அறைக்கு எடுத்து வருமாறு கூறினாள்.


உணவு அறைக்கே வரவும் கதிரை பார்க்க அவனோ படுக்கையில் அமர்ந்துக்கொண்டு லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டிருந்தான். இவள் அவனையே பார்க்க ஆனால் கதிரோ அவளை பார்க்கமால் தீவிரமாக வேலை செய்வது போல் காட்டிக்கொண்டு இருந்தான்.


கொஞ்சநேரம் பொறுத்துப் பார்த்தவள் அவன் அருகில் சென்று சாப்பிட அழைக்க அவன் எதுவும் பேசாமல் லேப்டாப்பை மூடிவிட்டு சென்று சோபாவில் அமர்ந்தான்.


மதி அவனுக்கு முதலில் பரிமாற அவனோ அவள் முகத்தை பார்த்து என்ன கண்டானோ தான் உண்ணாமல் மதிக்கு ஊட்ட அவளும் அவனுக்கு எடுத்து ஊட்டினாள். அவர்கள் அப்படியே மாறிமாறி ஊட்டிக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.


அவள் மெதுவாக “சாரிங்க”


“எதுக்கு?”


“இல்ல நீங்களே அன்னைக்கே வருத்ததுல இருந்துருப்பிங்க அதுல நான் வேற சஞ்சனா அக்காவ பத்தி உங்களுக்கு ஞாபகப்படுத்திடேன்” என


அவனுக்கு சஞ்சனாவை பற்றிய நினைவுகளில் கண்கள் கனலை கக்கியது.


அவளுக்கு பதிலேதும் கூறாமல்,


“நான் உன்னோட மடியில படுத்துக்கவா?” எனவும்
மதி தலையை சம்மதமாக ஆட்ட, அப்படியே அவள் மடியில் படுத்துக் கொண்டவன் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.


சஞ்சனாவுக்கு எப்பொழுதுமே பணத்தின் மேல் கொள்ளை ஆசை.


அவள் அம்மா சுந்தரி தங்கள் செல்வ நிலையை காட்டி மகளை வளர்த்தால் எங்கே பணத்தைப் பார்த்து கெட்டுப் போய் விடுவாளோ என்று பயந்து கட்டுப்பாடாக வளர்த்தார்.


ஆனால் அதுவே சஞ்சனாவிற்கு பணத்தின் மீது ஆசையை தோற்றுவித்தது.


தான் ஆசைப்பட்டதை வாங்கித் தராத தன் அம்மாவை சஞ்சனாவிற்கு பிடிக்காமல் போனது.


தன் வீட்டில் உள்ளவர்களிடம் அவ்வளவு மரியாதையாக அமைதியாக நடந்துக் கொள்பவள் வெளியே சென்று விட்டால் அவள் குணமே மாறிவிடும்.


சஞ்சுவுக்கு தன் மாமாவும் அத்தையும் கதிர் மற்றும் காவ்யா முகத்தை பார்த்தே அவர்களுக்கு வேண்டியதை செய்வதை பார்த்து பொறாமை கொழுந்து விட்டது.


அதனாலே தன் மாமாவும் அத்தையும் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று எதற்க்கேடுத்தாலும் அடம்பிடிப்பாள்.


சஞ்சனா அவர்களை விட சிறுபிள்ளை என்பதால் அங்கு அவளுக்கு தான் கவனிப்பும் செல்லமும் இருக்கும்.
படிப்பை முடித்ததும் தன் அம்மா கதிர் வீட்டில் விடவும் இனி தான் நினைத்ததை செய்யலாம் பிடித்த மாதிரி இருக்கலாம் என்று சந்தோஷ வானில் பறந்தாள்.


எனவே சென்னைக்கு வரவும் வீட்டில் நல்ல பிள்ளைகள் போல் நடந்துக் கொள்பவள் வெளியிலே பணத்திற்காகவும், தன்னைச் சுற்றி எப்போதும் இருக்கும் மற்றவர்கள் முன்னிலையில் தானே முதலிடத்தில் இருக்க வேண்டும் என்றும் சில தவறான விஷயங்களில் ஈடுபட்டாள்.


அதில் அவள் தன் உடன் படிக்கும் மாணவன் ஒருவனை தன்னை காதலிக்க வைப்பதாக அவள் தோழிகளிடம் பந்தயம் கட்டினாள், சொன்ன மாதிரியே செய்தும் காட்டினாள்.


அதே போல் வேறொருவனிடமும் செய்ய அவனோ இவளை தன் தேவைக்கு எடுத்துக் கொண்டு பணத்தை கொட்டினான்.


அவளுக்குமே தன் ப்ரண்ட்ஸ் முன்னிலையில் தன்னை பணக்காரியாக காட்ட அவர்களுக்கு செலவு செய்ய என பணம் தேவை பட்டதால் அவனுக்கு ஒத்துழைத்தாள்.


தன் மகளின் போக்கில் வித்தியாசத்தை உணர்ந்த சுந்தரி அவளுக்கு திருமணம் செய்தால் சரியாயிடும் என்று தன் அண்ணனிடம் தன் மகளுக்கு திருமணம் யோகம் வந்துவிட்டதால் கதிருடன் சீக்கரம் திருமணம் செய்யலாமா? எனக்கேட்டார்.


அவரும் ஏற்கனவே அவர்கள் சிறுவயதிலே அவர்களுக்குள் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையில் இருந்ததால் ஜாதகம் பார்க்க அங்கு சஞ்சனாவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறதால் இந்த கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை அப்படியும் மீறி அவளுக்கு கல்யாணம் நடந்தால் ஆயுள் கெட்டி என்று சொல்லவும், தன் தங்கை மகளுக்காக சுந்தரேசன் ஒரு முடிவு எடுத்தார்.


சஞ்சனாவைவிட கதிரின் உயிருக்கு பாதிப்பு என்றால் தான் இந்த விஷயம் சரியாகும், தன் தங்கையும் சம்மதிப்பாள் என்று எண்ணினார்.


அதன்படி தன் தங்கையிடமும் மனைவியிடமும் கதிர் ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று பொய்க்கூறி சீக்கிரம் திருமணம் செய்ய வழிவகுத்தார்.


ஆனால் அதுவே மீனாட்சி தான் பெற்ற மகனை வெறுக்க காரணமாக அமையும் என்று அன்று அவருக்கு தெரியாமல் போனது தான் காலத்தின் கோலமோ?

Advertisement