Advertisement

மலர் 9:

கல்யாணத்திற்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டாளே தவிர..மலருக்கும் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. அவளுக்கும் செல்வதில் விருப்பம் இல்லைதான்.ஆனால் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் அவளுக்கு.வாக்கு கொடுத்திருக்கிறாளே…! அதை காப்பாற்ற அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு.

“அவங்க வந்து பத்திரிக்கை வைக்கவில்லை என்றால்…உனக்கு எப்படி தெரிந்திருக்கும்…?” என்றது அவளின் மனம்.

‘தெரிந்திருக்காது தான்…ஆனால் தெரிந்து எப்படி செல்லாமல் இருக்க முடியும்….’ என்று பதில் சொன்னவள்…இறுதியாக யோசித்து செல்வது என்று முடிவு செய்தாள்.

சத்யாவிற்கு விருப்பம் இல்லையென்றாலும்….பனிமலருக்காக சரி என்று சொல்லிவிட்டார்.

திவாகர் எப்பொழுதும் கெட்டதில் கூட நல்லதைப் பார்ப்பவர். அதனால் நடந்த விஷயங்கள் எதையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் மறுப்பதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை.

எந்த ஊருக்கு செல்லவே கூடாது என்று எண்ணியிருந்தார்களோ… மீண்டும் அதே ஊருக்கு செல்வதில் கொஞ்சம் தயக்கமும்….மன வருத்தமும் இருக்கத்தான் செய்தது.

அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு….சஞ்சலங்களை மறந்து…தேனிக்கு செல்ல முடிவெடுத்து…சென்றனர்.

இந்த பயணம்…அவர்களின் வாழ்வை புரட்டிப் போடும்..ஒரு பயணமாக அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

முக்கியமாக பனிமலர்….எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை.அவள் மனதினுள் இருந்த காயங்கள் சிறிது மறைந்திருந்தாலும்….அந்த காயம் ஏற்படுத்தி சென்றிருந்த தழும்புகள் அப்படியே தான் இருந்தது.

காலத்திற்கு மிகப் பெரிய சக்தி உண்டு….அது தான் மறதி….காலம் மறந்திருக்குமா…?இல்லை மறுத்திருக்குமா..?

குடும்பமே மண்டபத்தில் இருக்க….அதிகாலை மூன்று மணி அளவில்…தன் வீட்டில்…தன் அறையில் இருந்து இருளை வெறித்துக் கொண்டிருந்தான் வெற்றி.

கண்கள் உயிரைத் தொலைத்திருக்க….மனம் ஜீவனற்று இருக்க….தான் எடுத்த முடிவு சரியா என்று ஒன்றுக்கு நூறு முறை யோசித்து விட்டான்.ஆனால் பதில் தான் கிடைத்தபாடில்லை.

சில வருடங்களாக இறுகிப் போயிருந்த அவன் மனம்…அன்று ஏனோ கலங்கிப் போயிருந்தது.ஆண்கள் அழுத்தமானவர்கள்..அதே சமயம் மனதளவில் கொஞ்சம் திடம் அற்றவர்கள் என்று யாரேனும் கூறினால்.. அவர்களை எரிப்பதைப் போல் பார்க்கும் வெற்றி…இன்று அந்த கூற்றை உண்மையாக்கிக் கொண்டிருந்தான்.

விடிந்தால் திருமணம்..இன்னும் ஆறுமணி நேரத்தில் தான் கவிபாரதியின் கணவானாக மாறியிருப்போம்….என்று எண்ணியவனுக்கு…ஏனோ அது உவப்பாய் இல்லை.

ஒரு பெண்ணை ஜெயிக்க விட்டு தான் தோற்பதா…? என்று எண்ணியவனுக்கு முதல் நாள் மாலை தன் அன்னையின் பேச்சு நியாபகத்திற்கு வந்தது.

“கிளம்பலையா வெற்றி..?” என்றார் துர்கா.

“நீங்க கிளம்பி முன்னால் போங்க..! நான் காலையில் வரேன்..!” என்றான் பட்டும் படாமல்.

அவனின் முகத்தில் இருந்து ஒன்றையும் யூகிக்க முடியாத துர்கா…

“இல்லை வெற்றி..நீயும் எங்க கூடவே கிளம்பு..!” என்றார்.

“அம்மா… சொன்னா கேளுங்க..!நான் காலையில் வந்திடுறேன்..நீங்க இப்ப கிளம்பி போங்க…!” என்றான் பொறுமையாய்.

“காலையில் எப்படி கிளம்பி வருவா…? நீ தான் மாப்பிள்ளை… அதாவது உனக்கு நியாபகம் இருக்கா…?” என்றார்.

“அதெல்லாம் நன்றாகவே நியாபகம் இருக்கு…! காலையில் ஒன்பது மணிக்கு தானே முகூர்த்தம்…அதனால் நான் சீக்கிரம் வந்துவிடுவேன்..”என்றான்.

“சரி..என்னமோ செய்..! ஆனா கடைசி நேரத்தில் ஏதாவது குழப்பம் செய்யலாம் என்று நினச்ச…அப்பறம் இந்த அம்மாவை நீ உயிரோடயே பார்க்க முடியாது..பெத்த புள்ளைக்கு கல்யாணம் பண்ணி பார்க்க துப்பில்லாத இந்த கட்டை..இனி உயிரோட இருந்தால் என்ன…? இல்லாவிட்டால் என்ன..?” என்றார்.

அவரை முறைத்த வெற்றி…”என்னம்மா எமோஷனல் பிளாக்மெயிலா… இப்படி கட்டாயப்படுத்தி எல்லாம் என்னை ஒன்றும் செய்ய வைக்க முடியாது என்று உங்களுக்கு நல்லாவே தெரியும்… தெரிந்தும் ஏன் இவ்வவும் டயலாக் பேசி நேரத்தை வேஸ்ட் செய்யறிங்க… கிளம்புங்க..!” என்றான் கடுமையாய்.

அது துர்காவிற்கு நன்றாகத் தெரியுமே..!இத்தனைக் ஆண்டுகளில் இந்த வார்த்தையை எத்தனை முறை கூறியிருப்பார்..ஆனால் ஒரு நாள் கூட அவன் அசைந்து கொடுத்ததில்லை.

“உங்கள் விதி உங்களால் முடியனும் என்று இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்…” என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டு சென்று விடுவான்.

அப்படிப்பட்டவன்…இன்று சம்மதம் சொல்லியிருக்கிறான் என்றால்…நிச்சயம் அதில் பொய் இருக்காது என்று முழுமையாக நம்பினார் துர்கா.

அதனால் தானோ என்னவோ..அதற்கு மேல் அவனை வற்புறுத்தாது… அனைவரும் கிளம்பினர்..அவனைத் தவிர்த்து.

அதை யோசித்துப் பார்த்தவனுக்கு…இதழ் கடையோரத்தில் ஒரு வெற்று புன்னகை தோன்றியது.

எது எப்படியோ…இன்னும் சற்று நேரத்தில்..தன் வாழ்க்கை பயணம் மாறப் போகிறது.தன்னுடன் இணைய ஒரு பெண் வருகிறாள்.இனி நடக்கும் எல்லாவற்றிலும் தன்னுடைய பங்கு முழுமையாக இருக்கும் என்று நம்பினான் வெற்றி.

அந்த நம்பிக்கையே….அவனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

வாழ்க்கையின் பாதையிலேயே..சில சமயம் நாம் செல்ல வேண்டியிருக்கிறது.அதைத்தான் இப்பொழுது வெற்றியும் செய்கிறான்.அது நல்லதுக்கா…?கெட்டதுக்கா..?

மண்டபம் முழுவதும் உறவினர் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெற்றியின் ஊர் கிராமம் என்பதால்……அனைவரும் வந்து…..,அந்த மண்டபத்தை நிறைத்திருந்தனர்..

“பரவாயில்லை தனம்….மாப்பிள்ளை வீடும்..ரொம்ப பெரிய இடம் போல…! வந்திருக்கவங்களைப் பார்த்தாலே தெரியுது..!” என்றார் விஜயன்.

“ஆமாங்க..! நானும் பார்த்திட்டு தான் இருக்கேன்…நம்மளும் அவங்களுக்கு குறைந்தவங்க இல்ல…என் பொண்ணு கலெக்டர் வேற..” என்றார் பெருமையாய்.

“இருந்தும் என்ன செய்ய…யாருக்குமே சொல்ல முடியாம போய்விட்டதே..!” என்றார் விஜயன்.

“அதனால் என்னங்க..! அதான் நம்ம சொந்த பந்தத்துக்கு எல்லாம் சொல்லியிருக்கோம்ல….அவங்க வந்து சபையை நிறைத்தா பத்தாதா..?” என்றார் தனம்.

“நீ சொல்வதும் உண்மைதான்..!”

“ஏங்க…சத்யா அண்ணி வீட்ல இருந்து வருவாங்கல்ல..?” என்று சந்தேகமாய் தனம் கேட்க..

“தெரியலை…ஆனா..அன்னைக்கு மலர் கண்டிப்பா வருவோம் என்று சொன்னதை வைத்துப் பார்த்தால்….வருவாங்க என்று தோணுது..!” என்றார் விஜயன்.

“கண்டிப்பா அவங்க வரணும்…! அவங்க வந்தாலே…நம்மை மன்னிச்சுட்டாங்க என்று அர்த்தம்..!” என்று தனம் சொல்ல…

“அது எப்படின்னு தெரியலை தனம்..அது அவங்க மனநிலையை பொறுத்தது.இதில் எல்லா தப்பும் நம்ம செய்யலையே..!”என்றார் விஜயன்.

“இருந்தாலும்…மறக்குறதுக்கும்,மன்னிக்கிறதுக்கும் ஒரு பெரிய மனசு வேண்டும்..! அது அவங்க கிட்ட இருக்கு..!” என்றார் தனம்.

தன் மனைவியின் நிலையை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டார் விஜயன்.அவருக்கு சுத்தமாக திவாகர் குடும்பத்தினர் வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

அதை சொல்லி மனைவியின் மனதைக் காயப்படுத்த வேண்டாம் என்று எண்ணி…அமைதி காத்தார்.

“அப்பா..” என்ற குரலில் திரும்பிய விஜயன்…உண்மையாகவுமே அதிசயித்தார்.அவருக்கு வார்த்தைகள் வரவில்லை.

“வாம்மா மலர்…” என்று திக்கித் திணறியவர்..அவளின் பின்னால் இருந்த சத்யா-திவாகரைப் பார்த்து…ஒரு நிமிடம் திகைத்து…”வாம்மா சத்யா….வாங்க திவாகர்..” என்றார் மகிழ்ச்சியுடன்.

சத்யா பேருக்கு..இம்ம்ம்…கொட்ட…திவாகரோ…முழு மனதுடனேயே விஜயனின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

“தனம்..தனம்…இங்க வா..? யார் வைத்திருக்காங்க என்று பார்..!” என்று சொல்ல…அங்கு வந்து அவர்களைப் பார்த்த தனத்திற்கு பேச வாய் எழவில்லை.

“வாங்கண்ணா…வாங்க அண்ணி..!” என்று அழைத்தவரால் அதற்கு மேல் பேசமுடியவில்லை. சூழ்நிலையை புரிந்த திவாகரும்…சத்யாவை அழைத்துக் கொண்டு சென்று அமர்ந்தார்.

மலரின் கண்களோ…கவி பாரதியை தேடிக் கொண்டிருந்தது.அவளின் தேடல் புரிந்த தனம்….”கவி..மேல ரூம்ல ரெடி ஆகிட்டு இருக்காம்மா..!” என்றார் அன்புடன்.

“சரிம்மா…நான் போய் பார்க்கிறேன்..!” என்றபடி மலர் நகரப் போக…அவளின் கையைப் பிடித்து தடுத்தார் சத்யா.

“எங்க போற..?”

“மேல…கவியை பார்க்க..” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..பேசாம உட்கார்…!” என்று சத்யா அதட்ட…

“அதெல்லாம் முடியாது சத்யாம்மா…எனக்கு இன்னும் ஒரே ஒரு கடமை பாக்கி இருக்கு…அதை இன்னைக்கு நான் நிறைவேற்றியே ஆகணும்..!பிளீஸ் கையை விடுங்க..!” என்றாள் கெஞ்சுதலாய்.

அவளின் முகம் அவருக்கு எதையோ சொல்லத் துடிப்பதைப் போல் தெரிந்தது சத்யாவிற்கு.பிறகு என்ன நினைத்தாரோ..”சரி..போ..!” என்றுவிட்டார்.

கவியைத் தேடி சென்ற பனி மலரின் கண்களில் விழுந்தான் வெற்றி.அவனைப் பார்த்தவளின் கண்கள் தெறித்து விடும் அளவிற்கு பெரிதாக….

“இந்த சார் எங்க இப்படி..?” என்று மனதிற்குள் யோசனை கொண்டாள்.

அவளைக் கண்ட வெற்றியோ கண்டும் காணாமல் தனது அறைக்குள் சென்று மறைய…

‘ஒரு நிமிடம் தான் பார்த்தது..பிரம்மையோ..’ என்று எண்ணினாள் பனிமலர்.

‘நீ என்ன..லூசா…அந்த சார்..இந்த ஊர் பக்கம் தான..அவர் இங்க இருப்பதில் ஆச்சர்யம் இல்லை…அவனே ஒரு சிடுமூஞ்சி….இப்ப எதுக்கு அவனைப் பற்றிய ஆராய்ச்சி உனக்கு..!’ என்று மனது அவளை அடக்க..

‘அதுவும் சரிதான்…வந்த வேலையை மட்டும் பார்ப்போம்..! பிறகு நமக்கு இங்க என்ன வேலை..?’ என்று நினைத்தவள் கவியின் அறைக்குள் நுழைந்தாள்.

அழகு நிலையைப்  பெண் அவளை அலங்கரித்துக் கொண்டிருக்க….மேலும் ஜொலித்துக் கொண்டிருந்தாள் கவிபாரதி.

மயில் கழுத்து  நிற பட்டுப் புடவையில்…மெல்லிய ஒப்பனையில்… தேவதையென தன் முன் வந்து நின்ற பனி மலரைக் கண்ட கவி திகைத்தாள்.

ஒரு நிமிடம் தான் காண்பது கனவோ என்று எண்ணியவள்..மீண்டும் கண்களை கசக்கிப் பார்க்க….நானே தான்…என்றாள் மலர்.

“நீ எப்படி மலர் இங்க..? உனக்கு எப்படி தெரியும்..?” என்றாள் வெற்றுப் பார்வையாய்.

அவளின் கேள்வியில் இருந்தே…தங்களுக்கு அழைப்பிதழ் வந்தது அவளுக்கு தெரியவில்லை..அதே சமயம் பிடிக்கவில்லை என்றும் புரிந்து போனது மலருக்கு.

“வீடு தேடி வந்து கூப்பிட்ட விஷேசத்திற்கு எப்படி வராமல் இருக்க முடியும்..?” என்றாள் மலர்.

“இதெல்லாம் தன் அம்மாவின் வேலை என்று தெளிவாக புரிந்து போனது கவிக்கு…இருந்தும் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை..”

“ஏன் கவி..நாங்க வந்ததில் உங்களுக்கு விருப்பம் இல்லை போல..?” என்றாள்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை….வாங்க..!” என்றாள்…சிரிப்புடன்.

“ஏன் கவி..வெற்றி சார் கூட இங்க தான் இருக்கார்..அவருக்கும் அழைப்பிதல் குடுத்திங்களா..?” என்றாள் எதார்த்தமாய்.

“அவர் தான் மாப்பிள்ளை..” என்றாள் உள்ளே போன குரலில்.

வெற்றியை பார்த்ததை விட…கவியின் பதிலில்…சுத்தமாய் அதிர்ந்து போனாள் மலர்.

“இது எப்படி சாத்தியம்…?” என்று தனக்குள் பல முறை கேட்டுக் கொண்டாள்.ஆனால் விடை தெரியவில்லை.

“அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய ஷாக்..!” என்றாள் கவி.

“ன்காம்…என்ன கேட்டிங்க..?” என்றாள் மலர்.

“இல்லை..அதுக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி என்று கேட்டேன்…ஆமா செல்வாவும் வந்து…..” என்று இழுத்தாள் கவி.

“இல்லை…” என்று தலையை ஆட்டினாள் மலர்.

‘அவள் கண்கள் கலங்கியதோ..!’ என்று ஒரு நிமிடம் யோசித்தது கவியின் மனம்.

‘அதுக்கு நான் என்ன செய்ய முடியும்…?’ என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.

“ரொம்ப அழகா இருக்கிங்க கவி..!” என்றாள் மலர்.

‘நீ மட்டும் என்ன கம்மியாவா இருக்க..?’ என்று மனதிற்குள் எண்ணியவள்….வெளியில் சிரித்து வைத்தாள்.

கவியின் செல்போன் சிணுங்க….”ஒரு நிமிஷம்..” என்றபடி அட்டென் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ..!”

“ரொம்ப சந்தோஷமா ரெடி ஆகிட்டு இருக்க…எப்படி நடக்கும் இந்த கல்யாணம்…?” என்றான் சாரதி.

“உனக்கு எப்படி என் நம்பர்…” என்று கவி அதிர..

“இது என்ன பெரிய விரலி வித்தையா…? என்கிட்டே இருந்து எதுவும் தப்ப முடியாது…!” என்றான்.

“முடிந்ததைப் பார்..!” என்றாள் மொட்டையாக.

மலர் அருகில் இருப்பதால் அவளால் வெளிப்படையாக பேச முடியவில்லை.முடிந்த அளவு…புரியாத மாதிரியே பேசினாள்.அதுவே சாரதிக்கு தூண்டுகோலாய் அமைந்தது.

“என்னால் என்ன பண்ண முடியும் என்று தானே…இவ்வளவு திமிரா பேசுற..?” என்றான்.

“ஆமா..” என்றாள்.

“பார்த்துக்கிறேன்…” என்றான்.

“ம்ம்..சரி பார்த்துக்க…” என்றாள்.

“இந்த சாரதி யார்ன்னு..சீக்கிரம் உனக்கு புரியும்..” என்றான்.

“சரி…புரியட்டும்..” என்றாள்.

இது பத்தலையா…அவன் எரிமலையாகவே மாறிவிட்டான்.’எவ்வளவு திமிராக பேசுகிறாள்..’ என்று எண்ணியவன்…தன் வேலைகளில் இறங்கினான்.

“என்னம்மா கவி ரெடியா ஆகியாச்சா..?” என்றபடி வந்தனர் கலாவும்,தாரணியும்.

“நான் ரெடியாகிட்டேன்..!” என்றாள் கவி.

“ரொம்ப அழகா இருக்க கவி…” என்று சொன்னவர்கள்…அப்பொழுது தான் அருகில் இருந்த மலரைக் கவனித்தனர்.

அவளும் அவர்களைப் புரியாமல் பார்க்க…”கலா அக்கா…இந்த பொண்ணு சூப்பரா இருக்கு..பேசாம என் தம்பிக்கு இந்த பெண்ணைக் கேட்டா என்ன..?” என்றாள் தாரணி.

“ம்ம் பார்க்கலாம்…முதல்ல யார்ன்னு கேட்போம்..!” என்ற கலா…”ஆமா இவங்க யாரு..உங்க சொந்தமா..?” என்றாள் கவியிடம்.

அவர்கள் கேட்டவுடன் என்ன சொல்வதென்று புரியாமல் முழித்த கவி…இறுதியில்..”ஆமாம்..” என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக் கொண்டாள்.

“சரி போகலாமா…?வெற்றி மேடைக்கு வந்தாச்சு..!” என்றனர்.

“ம்ம் சரி..!” என்று கவி நடக்க…அவள் பின்னால் சென்றாள் மலர்.

சாரதியோ…முகத்தில் நெருப்பின் ஜுவாலையுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தான்.

அவளின் துறையில் இருந்தே அவளுக்கு நெருக்கடி கொடுத்து…அந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணியவன்…அதற்கான ஏற்பாடுகளை முடித்து விட்டு முன் வரிசையில் அமர்ந்திருக்க…

இதை எதையும் அறியாமல் அமைதியாய் வந்தாள் கவி பாரதி.வெற்றியோ இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்க….வெற்றியை மாப்பிள்ளையாக பார்த்த..சத்யாவும்,திவாகரும் அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தனர்.

“என்னங்க நடக்குது இங்க..?” என்றார் சத்யா.

“அது தான் எனக்கும் புரியலை சத்யா..?” என்றார் திவாகர் ஒரு இயலாமையுடன்.

கவியின் பின்னால் வந்து கொண்டிருந்த மலரைப் பார்த்தவர்களுக்கு கண்கள் கலங்கியது.

அவளுக்கு ஒரு திருமணத்தை எப்போது செய்து பார்க்க போகிறோம்..என்ற எண்ணம் அவர்களின் மனதில் அழுத்த…

“அதற்கு அவள் சம்மதிக்க வேண்டுமே..!” என்ற எண்ணமும் எழுந்தது.

மலரைப் பார்த்த துர்கா கூட வியந்து போனார்…கவியின் பின்னால் வந்த மலரின் முகமும்..அவளுக்கு இணையாய் ஜொலிக்க…யார் பெண் என்றே அனைவரும் ஒரு நிமிடம் குழம்பி விடுவர்.துர்காவும் அந்த நிலையில் தான் இருந்தார்.

தாரணி..அனைவரிடமும்..தாலியை ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருக்க… ”இப்படியே இந்த தாலியை எடுத்து கவியின் கழுத்தில் கட்டி விடலாமா…?” என்று கூட யோசித்தான் சாரதி.

அவன் ஏற்பாடு செய்திருந்தவர்கள் வர தாமதம் ஆனதால் வந்த பயம் தான் அது.ஆனால் எப்படியும் இது நடக்காது..என்று எண்ணியவனாய் அமைதி காத்தான்.

அவன் அமைதியைப் பார்த்து கவியே ஒரு நிமிடம் யோசித்தாள்.ஆனால் அடுத்த நொடியே தன் யோசனையை தள்ளி வைத்து விட்டு வெற்றியைப் பார்க்க…அவனோ அக்னிக் குண்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவனின் எண்ணங்கள்..உணர்வுகளாய் வெளிப்படாமல் இருக்க…யாராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

“மலர் வா..!” என்று சத்யா அழைக்க…”கொஞ்ச நேரம்..” என்றாள்.

கவியின் காதருகில் குனிந்தவள்…”உங்களுக்கு மூன்றாவது முடிச்சை நான் தான் போடுவேன். அதில் உங்களுக்கு வருத்தம் இல்லையே..!” என்றாள்.

“இல்லை..அப்படியெல்லாம் இல்லை..” என்றாள் கவி.

“தேங்க்ஸ்..” என்றாள்.

மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்க….நாதஸ்வரம் நயனம் பாட…ஐயர் தாலியை எடுத்து வெற்றியின் கைகளில் குடுத்து…

“கெட்டி மேளம்..கெட்டி மேளம்..” என்று முழங்கினார்.

கவியின் கழுத்தில் முடிச்சைப் போடப் போனவன்… தயங்க… ”என்னாச்சு வெற்றி..?” என்று அவன் குடும்பத்தினர் கேட்க…

“இல்லை…பின்னால் இந்த மாலை…” என்று அவன் இழுக்க…

“என்னாச்சு…!” என்றபடி குனிந்து பார்த்தாள் மலர்.

“நல்லாத்தானே இருக்கு…!” என்றபடி நிமிர போக…கொஞ்சம் கைகளை எக்கியவன்…..மலரின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான்.

யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு.ஏன் பனி மலரே…கொஞ்சமும் கூட எதிர்பார்க்கவில்லை.

சத்யாவும்,திவாகரும் திகைத்தபடி எழுந்து விட்டிருந்தனர்.

தனத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

துர்காவும்,ரத்தினமும் அதிர்ச்சியுடன் நிற்க….மற்ற அனைவரின் முகமும் அப்படித்தான் இருந்தது.கண்ணன் ஒருவனைத் தவிர.

அவன் எதிர்பார்த்திருந்தான்…ஆனால் இப்படி ஒரு திருப்பத்தை அல்ல.

சாரதிக்கோ…என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவன் கண்களை மறைத்திருந்த கோபம் எல்லாம் வினாடிப் பொழுதில் மறைய..

“வெற்றி என்ன இது…?” என்று கத்தியே விட்டான்.

ஆனால் கவியோ….எதையும் பிரதிபலிக்கவில்லை.முகம் உணர்ச்சிகளைத் துடைத்திருந்தது.

பனி மலரோ…புது மஞ்சள் தாலியை கழுத்தில் வாங்கியவளாய்… கண்களில் வழிந்த கண்ணீருடன் வெற்றியைப் பார்க்க..அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரு விழிகளும் ஒரே பாதையில் பயணிக்க…..இனி வரும் பயணம் எப்படி இருக்கும்..?

உயிரே நீ எங்கே சென்றாய்…

தேடி தேடி நான் அலைந்தேன்..!

உன்னை நான் காணாமல்…

உள்ளத்திலே தீ எரிந்தேன்..!

அன்பைத் தேடி உன்னிடம் வந்தேன்…

காதல் ஊமை ஆனதே..!

சொந்தம் தேடி உன்னிடம் வந்தேன்..

பந்தம் ஊமை ஆனதே..!

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement