Advertisement

மலர் 7:

வெற்றியின் மனம் நிம்மதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. ’தேவையில்லாமல் திட்டிவிட்டோமோ..?’ என்று பலமுறை நினைத்து விட்டான்.

‘திட்டுறதை எல்லாம் திட்டிவிட்டு இப்ப வந்து புலம்பு..’ என்று மனம் எள்ளி நகையாட….

‘வர வர நான் என்ன செய்யிறேன்..ஏன் இப்படி இருக்கிறேன்..ஏன் இப்படி யோசிக்கிறேன் என்று எதுவும் புரியவில்லை.எல்லார் மீதும் கோபம் காட்டி…யாரிடமும் முகம் கொடுக்காமல்…இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி எல்லாரையும் வதைப்பது…?’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான்.

“சித்தப்பா…!” என்றபடி வந்தாள் சுவாதிகா.

அந்த மழலையின் குரலில் தன்னை மறந்தவன்….”அம்முக் குட்டி…எப்ப வந்திங்க..!” என்று அவளை தூக்கி அணைத்துக் கொண்டான்.

“உங்க கூட நான் பேச மாட்டேன்…” என்றபடி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் சுவாதி.

“ஏண்டா செல்லம்..சித்தப்பா என்ன பண்ணேன்..?” என்றான் அறியாதவனாய்.

“நீங்க,பாட்டி,தாத்தா மட்டும் கல்யாணத்துக்கு போனிங்க…என்னை கூட்டிட்டு போகல..அதான்..” என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.

“அடடா..இது தான் என் செல்லத்துக்கு கோபமா….சரி…இனி எங்க போனாலும் சித்தப்பா உங்களைக் கூட்டிட்டு போறேன் சரியா…இப்ப என் கூட பேசுங்க..!” என்றான்.

“ஐயோ சித்தப்பா…இப்ப உங்க கூட பேசிட்டு தான இருக்கேன்..!” என்று சொல்லி கிளுக்கி சிரிக்க…

“அட ஆமாம்ல….பாரு இந்த சித்தப்பா எவ்வளவு மக்கா இருக்கேன்னு…?” என்றான் போலியாய்.

“என் சித்தப்பா…மக்கு சித்தப்பா இல்ல….சூப்பர்..சூப்பர் சித்தப்பா..” என்றாள் வார்த்தைக்கு வார்த்தை சித்தப்பா போட்டு.

“அப்ப இந்த சூப்பர் சித்தப்பா இப்ப என்ன பண்ணனும்…?” என்றான்.

சுற்றும் முற்றும் பார்த்தவள்…ரகசியமாய்..”எனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தரனும்…” என்றாள் மெதுவாய்.

அவளைப் போல….தானும் சுற்றும் முற்றும் பார்த்தவன்… ”ஓகே..டன்..” என்று அமைதியாய் சொல்ல…

“சோ கியூட் சித்தப்பா…ஐ லவ் யு வெற்றி சித்தப்பா….” என்று அவனைக் கட்டிக் கொண்டு…முத்த மழை பொழிய…

அந்த கள்ளமில்லா மழலையின் முத்தத்தில்..மனதில் இருந்த பாரங்கள்.. அடியோடு கரைவதைக் கண்டான் வெற்றி.

கீழே இருந்து துர்கா அழைக்கும் குரல் கேட்க….என்னவென்று எட்டிப் பார்த்தான் வெற்றி.

ஹாலில் நிறைய பேர் கூடியிருக்க…’என்னவாயிருக்கும்..’ என்றபடி கீழே சென்றான் வெற்றி.

“என்னாச்சு ஏன் எல்லாரும் ஒண்ணா வந்திருக்கிங்க..?” என்றான்.

“அது ஒன்னுமில்லைங்க தம்பி….இன்னைக்கு…கலெக்டர் ஆபீஸ்ல மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்குது…நாமளும் போய்..நம்ம குறைகளை ஒரு மனுவா குடுத்துட்டு வரலாம்ன்னு பேசிருக்கோம்… அதுக்காகத் தான் உங்களையும் அழைச்சுட்டு போகலாம்ன்னு வந்தோம்..” என்றார் ஒரு பெரியவர்.

“நாம போய் மனு குடுத்தா…உடனே நடவடிக்கை எடுத்துடுவாங்களா… அப்படி எடுத்திருந்தா எப்பவோ எடுத்திருப்பாங்க…விவசாயிகள் இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் அரசாங்கத்தை நம்பி இருக்க போறோம்..!?” என்றான் ஆத்திரமாய்.

“வேற வழியில்லை தம்பி….என்னைக்கு நாம விளைவிக்கிற பொருளுக்கு நாம விலை நிர்ணயம் பன்றோமோ…அன்னைக்கு தான் நமக்கு விடிவு காலம்…அடிச்ச காத்துல..போட்ருந்த வாழை எல்லாம் அடியோட சாஞ்சுடுச்சு….பெஞ்ச மழையில….முந்திரி எல்லாம் வீணா போய்விட்டது. வியாபாரி கிலோ பதினைந்து ரூபாய்க்கு கூட எடுக்க மாட்டேன்கிறான்… இப்படியே போனா…நாம தலையில் துண்டைப் போடுறது உறுதி…” என்றார் மற்றொரு பெரியவர்.

அவர்களின் கூற்று நியாயமாகப் பட்டது வெற்றிக்கு.பெரும்பாலும் அவர்கள் ஏரியா முந்திரியையும்,வாழையையும்,கரும்பையும் நம்பி இருந்தது.ஆனால் பெய்த மழையிலும்,அடித்த காற்றிலும் அனைத்தும் வீணாகிப் போயிருந்தது.

பெரிய விவசாயிகளே கொஞ்சம் கலங்கித் தான் போயிருந்தனர். வருகிற ஓவ்வொரு ஆட்சியரிடமும் சென்று முறையிட்டாகி விட்டது.ஆனால் ஒருவரும் நடவடிக்க எடுத்தபாடில்லை.

“இப்ப மட்டும் புதுசா என்ன நடக்க போகுது…?போயிட்டு வாங்க… நாங்க பார்த்துக்குறோம்ன்னு சொல்லி அனுப்பிட்டு..மனுவை அங்கிட்டு தூக்கிப் போட்டு அவங்க வேலையைப் பார்க்க போய்டுவாங்க..!” என்றான் வெற்றி.

“இல்லை தம்பி…புதுசா கலெக்டர் வந்திருக்காங்களாம்.அதுவும் பெண்ணாம்.நல்ல முறையில் செயல்படுறாங்கன்னு சொல்றாங்க… அதான்…!” என்றனர்.

“சரி..உங்களுக்காக வரேன்..!” என்றவன் உள்ளே சென்று சட்டையை மாட்டிக் கொண்டு வந்தான்.

அவன் பின்னோடு சென்ற துர்கா…”வெற்றி அது வேற யாருமில்லை….அந்த பொண்ணு பாரதி தான்…அன்னைக்கு அவங்க அம்மா சொன்னங்க..!” என்றார்.

தாயை தீர்க்கமாக முறைத்தான் வெற்றி.அவனுக்கு இது புது தகவல்.

“யாரா இருந்தா எனக்கென்ன….?” என்றான் பட்டென்று.

“என்னடா இப்படி சொல்ற..? நீதான கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன…நானும் அவங்க அம்மா-அப்பா கிட்ட வாக்கு குடுத்துட்டு வந்துட்டேன்..உங்க பொண்ணு தான் என் வீட்டு மருமகள் என்று..” என்றர துர்கா.

இப்படி ஒரு வார்த்தையை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அவன் தெறித்து விடும் விழிகளிலேயே தெரிந்தது.

“யாரைக் கேட்டு முடிவு பண்ணிங்க..?” என்றான்.

“நீதான வெற்றி சொன்ன…? உன் முடிவு தெரிந்து தான் பேசினோம்…!” என்றார்.

“கல்யாணத்துக்கு சம்மதம் என்று சொன்னேன்..ஆனா அந்த பெண்ணை சொன்னேனா..?”என்றான்.

“என்ன வெற்றி இப்படி சொல்ற…?” என்று திகைப்பது துர்காவின் முறை ஆகியது.

“போயிட்டு வந்து பேசிக்கிறேன்…!” என்று கோபத்துடன் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.அவன் முகம் அப்பட்டமாய் வெறுப்பை கக்க.. ஏனோ துர்கா உணரவில்லை.

எது எப்படி இருந்தாலும் வெற்றியின் மனைவியாக கவிபாரதியை தீர்மானித்து விட்டார் துர்கா.அவரின் பேச்சுக்கு அந்த வீட்டில் மறு பேச்சு கிடையாது.அதற்காக அவர் அதிகாரம் செய்பவர் என்ற பொருள் எல்லாம் இல்லை.ஒரு சில விஷயங்களில் அவர் தணிந்து போக மாட்டார். வெற்றியின் விஷயத்தில் அவரின் கணிப்பு சரியாகுமா..?

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்ததது.அன்றைய குறை தீர்க்கும் முகாமிற்கு ஏராளமான மக்கள் தங்கள் குறைகள் அடங்கிய மனுவுடன் நின்றிருக்க…அனைத்தையும் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்த கவி பாரதிக்கு தலை எல்லாம் வலித்தது.

‘ஒரே நாளில் இத்தனையா…? இதற்கு முன் இங்கிருந்தவர் என்ன தான் செய்து கொண்டிருந்தாரோ..?’ என்று எண்ணியவள்…தன் முகத்தை வெளியில் இயல்பாய் வைத்துக் கொண்டாள்.

அபொழுது தான் கண்ணில் பட்டான் வெற்றி.அவனைப் பார்த்தவளின் முகம் ஆச்சர்யத்தில் விரிய…அவன் வரவுக்காய் எதிர்நோக்கியிருந்தாள்.

கூட வந்த அனைவரின் பிரதிநிதியாகவும்…அவன் செல்ல…தன் பார்வையை மாற்றிக் கொண்டாள் கவி.

வெற்றியோ அவளை நேர் கொண்டும் பாராது….எந்த விதமான தயக்கமும் இன்றி..ஏதோ புதிதாய் ஒருவரை பார்ப்பதைப் போல் பார்த்து வைத்தான்.

“உங்களுக்கு என்ன பிரச்சனை..?” என்றாள்.

“எங்களுடைய பிரச்சனைகளை..இதில் விரிவா எழுதியிருக்கோம் மேடம்…நீங்க பார்த்துட்டு இந்த முறையாவது நடவடிக்கை எடுத்தால் தேவலை….” என்றான்.

“ஏன் இதுக்கு முன்னாடி இருந்த கலெக்டர் யாரும் நடவடிக்க எடுக்கலையா..?” என்றாள்.

‘எங்க மேடம்…வர கலெகடர் எல்லாருக்கும்..அவங்க சொந்த வேலையைப் பார்க்கவும்,சம்பாத்தியம் செய்யவும் தான் நேரம் இருக்கு.விவசாயிகளைப் பற்றியோ…அவங்களுக்கான தேவைகள் பற்றியோ யாருக்கும் கவலையில்லை.

படித்து வேலைக்கு வரும் போதே சேவை மனப்பான்மையுடன் வருபவர்களைக் காட்டிலும்…சம்பாத்தியம் செய்ய வேண்டும் என்று வருபவர்கள் தான் அதிகம்.இதில் கட்சிக்காரங்க வேற…அவங்களுக்கும் நீங்க கும்பிடு போடணும்….உங்க வேலையும் லேசு பட்ட வேலையா என்ன…?” என்று ஆதங்கத்தில் ஆரம்பித்து குத்தலாய் முடித்தான்.

“எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை மிஸ்டர்…யாருகிட்ட பேசுறோம்ன்னு தெரிஞ்சு பேசுங்க..!” என்றாள் கோபமாய்.

“ஏன் தெரியாம..? நல்லா தெரியுமே….தெரிந்ததால் தான் பேசுறேன்…இதே நாற்காலியில் எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்..!” என்றான் இடக்காய்.

“பார்ப்பவர்கள் அனைவரும் ஒன்று கிடையாது…” என்றாள்.

“ஆனால் பார்த்த கண்கள் ஒன்றுதான்…!” என்றான்.

“உங்க மனுவில் இருக்கும் குறைகள்,தேவைகள் ஆராயப்படும்…. அவசியமான தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்…!” என்றாள்.

“இந்த ‘அவசியமான ‘ என்ற வார்த்தை விவசாயிகளின் சாபக் கேடு..!” என்றான்.

“நீங்க போகலாம்..” என்றாள்.

“அது எனக்குத் தெரியும் மேடம்.நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.உங்கள் வேகத்தையும்,கோபத்தையும் வேலையில் காட்டுங்கள்..!” என்றபடி எழுந்தான்.

“ஒரு நிமிஷம்..!” என்றவள்…”கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டிங்களா…?” என்றாள்.

அவளை இடுங்கிய பார்வை பார்த்தவன்….”அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருக்கா..?” என்றான்.

“கண்டிப்பா..!” என்றாள்.

“பார்ப்போம்..!” என்றான் சவாலாய்.

“என்னைத் தவிர ஒரு பெண்ணை உங்களால் நினைக்க கூட முடியாது..!” என்றாள்.

“நல்ல காமெடி….வரேன்..!” என்றபடி வெளியேறினான் வெற்றி.மனதில் ஆயிரம் சைத்தான்கள் ஒன்றாய் சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தது அவனுக்கு.

“போங்க வெற்றி போங்க..!என்னைக்கா இருந்தாலும் நீங்க என்கிட்டே வந்து தான் ஆகணும்…வருவிங்க..வர வைப்பேன்..!” என்று கவி மனதிற்கு சபதம் எடுக்க…

வெற்றியும் அவன் மனதிற்குள் ஒரு தீர்மான முடிவை எடுத்துக் கொண்டு தான் சென்றான்.போதும் இதுவரை இருந்த அமைதி என்று எண்ணிக் கொண்டான்.

சிலர் அமைதியாய் இருக்கிறார்கள் என்பதற்காக…அவர்களுக்கு கோபம் வராது என்றோ….அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்றோ அர்த்தம் கிடையாது.

அமைதியின் வலிமையை அதனை உணர்தவர்கள் மட்டுமே அறிவர். அமைதி மெல்லக் கொள்ளும் ஆய்தமும் கூட.அதைப் பயன் படுத்துபவர்களைப் பொறுத்தது.இதில் வெற்றி எந்த ரகம் என்று யார் அறிவார்..???.

சென்னையில் தனது அறையில்…செல்வாவின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு…அதையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் பனி மலர்.

துருதுரு கண்களுடன்…மயக்கும் புன்னகையுடன் நின்றிருந்தான் செல்வா.

ஏனோ அந்த போட்டோவைப் பார்க்க பார்க்க….துக்கம் அவளுக்குள் பிரவாகமாய் பொங்கிக் கொண்டிருந்தது.

“ஏண்டா..இப்படி எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போன..?” என்றாள் கண்களில் கண்ணீருடன் கோபமாய்.

போட்டோவில் அவன் அமைதியாய் சிரித்துக் கொண்டிருக்க…

“வந்துடு செல்வா…நீ திரும்பி வந்துடு…எங்களுக்கு நீ வேணும் செல்வா…!” என்று அவள் புலம்பிக் கொண்டிருக்க…

“மலர்..” என்றபடி உள்ளே வந்த சத்யா அதிர்ந்தார்.அவள் அலுத்து கொண்டிருக்க…அவள் கையிலிருந்த போட்டோவைப் பார்த்தவர் திகைத்தார்.

“மலர் அந்த போட்டோவைக் குடு..!” என்று அதட்டினார்.

“மாட்டேன்..!!” என்றபடி இறுகப் பற்றிக் கொண்டாள்.

“ப்ளீஸ் மலர் சொன்னாக் கேளு…கொடு..!” என்றார்.

“என்னால் முடியலைம்மா…செல்வாவை வர சொல்லுங்கம்மா…” என்று அவரின் இடுப்பைப் பிடித்துக் கொண்டு கதற…

அவளின் கதறலைப் பார்த்த…சத்யாவிற்கும் கண்கள் கலங்கியது.தான் அழுதால் மலர் ரொம்ப அழுவாள் என்று நினைத்து…அடக்கிக் கொண்டார்.

“சொல்றேன்ல மலர்…போட்டோவைக் கொடு…” என்று வெடுகென்று பிடுங்கியவர்….அதைக் கிழிக்க போக…

“வேண்டாம்மா…!” என்று தடுத்தாள்.

“அப்ப இனி ஒரு முறை இப்படி அழக் கூடாது.இனி இந்த போட்டோவை எல்லாம் எடுக்க கூடாது சரியா..?அவனையே நினைச்சு உன் வாழ்க்கையை நீ அழிக்க போறியா…? இதுக்கு தான் நாங்களும் உயிரோட இருக்கிறோமா..?” என்றார் கண்டிப்பாய்.

“அம்மா…” என்று அதிர்ந்தாள்.

“அம்மா தான்..நான் தான் சொல்றேன்.இனி ஒரு முறை நான் உன்னை இப்படி பார்க்க கூடாது.அவன் விதி முடிந்து விட்டது… அவன் போய்ட்டான். இன்னும் எத்தனை நாளைக்கு அதையே நினைத்து… வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வாய்….எங்களை நினைத்துப் பார்த்தாயா..?

நீ மாறி விட்டாய் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்க…நீ மீண்டும் பழையபடி ஆரம்பித்தால் எப்படி…? என்றார் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு.

தன் கண்ணீரை வேகமாய்த் துடைத்தவள்…”இனி இப்படி பண்ண மாட்டேன்மா…” என்றாள் நிமிர்வாய்.

அவர் ஆதரவாய் அவள் தலையைத் தடவ…

“நானும் மறக்கணும் என்று தான் நினைக்கிறேன்…ஆனால் முடியலை… எதாவது ஒரு வகையில் அவன் நியாபகம் வந்து விடுகிறது.மறப்பதற்கு முயற்சி செய்கிறேன் அம்மா..” என்றாள் தெளிவாய்.

“அவன் எங்காவது இருந்து உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பான்.நீ இப்படி இருந்தால் அவனுக்கு பிடிக்குமா..? சொல்லு..!” என்றார் சத்யா.

“பிடிக்காது..!” என்றாள் மலர்.

“அப்ப எப்பவும் போல்..நீ நீயா இரு.உனக்காக மட்டும் தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்…அதை எப்பொழுதும் மனசில் வை..!” என்றார்.

“சரிம்மா…அப்பறம்…சாரிம்மா…” என்றாள்.

“எதைப் பத்தியும் நினைக்காம நிம்மதியா தூங்கு.நாளைக்கு ஆபீஸ் போகணும்…அதனால் சீக்கிரம் தூங்கு..!” என்றபடி சத்யா செல்ல…

அவர் சென்ற பின்னும் ஏனோ அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை.எளிதில் சொல்லி விட்டாள்..மறந்து விடுகிறேன் என்று..!முடியுமா அவளால்.!

 

வீட்டின் அழைப்பு மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க….”இதோ வரேன்..”என்றபடி சென்று கதவைத் திறந்தார் தனம்.

வெளியில் நின்றிருந்தவர்களைப் பார்த்து ஆச்சர்யம் தாங்க முடியவில்லை அவருக்கு.துர்காவும்,ரத்தினமும் அவர்களுடன் வெங்கட்,கண்ணனும் நின்றிருந்தனர்.

“வாங்க..வாங்க..உள்ள வாங்க..!” என்றார் முகம் எங்கும் மகிழ்ச்சியாய்.

உள்ளே சென்று அமர்ந்தவர்கள்….”மன்னிக்கணும்..! சொல்லாமக் கொள்ளாம வந்துட்டோம்..” என்றார் ரத்னம்.

“அதனால் என்ன அண்ணா..?” என்று தனம் கூறிக் கொண்டிருக்க… ”வாங்க..” என்று அழைத்தபடி வந்தார் விஜயன்.

அவருக்கும் வணக்கம் தெரிவித்த ரத்தினம்…”இது என் மூத்த மகன் வெங்கட்…இவன் என் இரண்டாவது பையன் கண்ணன்…மூன்றாவது வெற்றி..!” என்று சொல்ல…அவர்களைப் பார்த்து புன்னகைத்தனர் தனமும்,விஜயனும்.

“என்னடா திடுதிப்புன்னு வந்திருக்கோம்ன்னு நினைக்க கூடாது…எல்லாம் நல்ல விஷயமாத்தான்..!” என்று துர்கா இழுக்க…

தனமும்,விஜயனும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டார்.

“அட இன்னும் புரியலையா….என் பிள்ளை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான்..! அதான் பேசிட்டு போகலாம்ன்னு வந்தோம்..!” என்றார்.

விஜயனுக்கும்,தனத்திற்கும் நம்பவே முடியவில்லை.”என்ன சொல்றிங்க..?” என்றனர் மகிழ்ச்சியுடன்.

“உங்களால் நம்ப முடியவில்லை இல்லையா…எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது.ஆனா திடீர்ன்னு அவனே வந்து சொன்னான். எனக்கு சம்மதம்..பேசி முடிங்கன்னு…அதான் சட்டு புட்டுன்னு வந்துட்டோம்..” என்று துர்கா சொல்லி முடிக்க…

“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு…” என்றார் தனம்.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ..அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சுடலாம்….என் மகன் எப்ப எப்படி மாறுவான்னு சொல்ல முடியாது..!” ரத்தினம் கவலையாய் சொல்ல..

“நீங்க சொல்ற படியே செஞ்சுக்கலாம் அண்ணா..” என்றார் தனம்.

“அப்பறம் ஒரு விஷயம்..!” என்று பீடிகையுடன் நிறுத்தினான் வெங்கட்.

“சொல்லுங்க தம்பி…”

“உங்க பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதுன்னு சொன்னதா அம்மா சொன்னாங்க..! அது என்னன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா..?” என்றான்.

விஜயனும்,தனமும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாய் இருக்க…

“உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம்….ஏன்னா இது என் தம்பி வாழ்க்கை சம்பந்தப் பட்டது…அதான்..!” என்றான் வெங்கட்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை தம்பி..கல்யாணம் என்று ஒன்று நடந்திருந்தால் தானே சொல்வதற்கு..!” என்றார் விஜயன்.அவர் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.

“என்ன சொல்றிங்க..? அப்பறம் அன்னைக்கு உங்க பொண்ணு சொன்னாலே…நீங்க கூட மறுக்கலையே..!” என்றார் துர்கா அதிர்ச்சியாய்.

“உண்மைதான்….அது பெண் பார்க்க வரும் எல்லாரிடமும் அவள் சொல்லும் பொய்…அதை எங்களால் மறுக்க முடியாமல் போனதற்கு காரணங்கள் உண்டு.அவளுக்கு அவள் அம்மா மீது பெரிய கோபம்..அதை வெளிக்காட்ட தெரியாமல் இப்படி வெளிக்காட்டுவாள்.

அந்த சமயத்தில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் சொல்ல முடியும்….அவள் சொன்ன விஷயத்திற்கு பின்னால் இருக்கும் காரணத்தை அவளே சொல்லுவாள்…அதை எங்களால் சொல்ல முடியாது..அந்த தகுதியை நாங்கள் இழந்து விட்டோம்…!” என்றார் ரத்தினம்.

“என்னமோ சொல்றிங்க..! ஆனா ஒண்ணுமே புரியலை..ஆனா ஒன்னு மட்டும் புரியுது..உங்க பொண்ணுக்கு கல்யாணமே நடக்கவில்லை என்று.

எது எப்படி இருந்தாலும்…அவளுக்காக அவளை நாங்கள் மருமகளாய் ஏற்றுக் கொள்கிறோம்…அந்த விவாகரத்து தான் கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது.இப்போது அதுவும் இல்லை என்று ஆனப் பிறகு..எங்களுக்கு முழு சம்மதம்…” என்றார் துர்கா.

கண்ணனுக்கு மட்டும் எங்கோ இடிப்பது போல் இருந்தது..?நடக்காத ஒன்றை நடந்ததாய் ஏன் சொல்ல வேண்டும்..? பொய் சொல்லக் கூடிய விஷயமா இது..! என்று எண்ணிக் கொண்டான்.ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

இத்தனை நாள் கழித்து வெற்றி இப்பொழுது தான் திருமணத்திற்கு சரி என்று சொல்லியிருக்கிறான்.இதில் நாம் ஒன்று சொல்ல போய்…அவன் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டால்…? என்று எண்ணி அமைதி காத்தான் கண்ணன்.

வெற்றி-கவிபாரதியின் திருமண ஏற்பாடுகள் குறித்து தீவிரமாய் பேசி முடிக்கப்பட்டது.

உள்ளத்துக்குள் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ…..
வைகை என பொய்கை என
மையலிலே எண்ணியது
கானல் நீர் தானோ……
என்னை நீயும் தூண்ட
எண்ண கோலம் போட்டேன்…..
மீண்டும் கோலம் போட
உன்னைத் தானே கேட்டேன்…..
எனக்கொரு அடைக்கலம்
வழங்குமோ உன் இதயமே…..

 

மலரும்..!

 

 

 

Advertisement