Advertisement

மலர் 6:

திருமணத்திற்கு முதல் நாள் இரவே வந்து சேர்ந்து விட்டிருந்தனர் பனிமலர் குடும்பத்தினர்.

திருமண வீட்டில் பலரின் கண்கள் தன் மேல் விழுவதை தடுக்க முடியாமல் இருந்தாள் மலர்.

சாரதியும் முதல் நாள் இரவே வந்து விட்டிருந்தான்.ஏனோ அவனுக்கு இருந்த மனநிலையில்…மற்றவர்களுடன் ஒன்ற முடியாமல் தனித்து அமர்ந்திருந்தான்.

என்ன தான் மாப்பிள்ளை தோழனாக இருந்தாலும்…ஏனோ அந்த மகிழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல்…சில உணர்வுகள் அவனைத் தடுத்தது.

கிளம்பி வரும் வரை இருந்த மனநிலை…அப்பொழுது அவனுக்கு சுத்தமாக இல்லை.

“என்ன மச்சி…வந்ததில் இருந்து நானும் பார்த்திட்டே இருக்கேன்..! எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க…?” என்றான் மாப்பிள்ளை.  

“அதெல்லாம் ஒன்னுமில்லைடா…எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும் போல் இருக்கு….நீ எதுவும் நினைத்துக் கொள்ளாதே..” என்றான் சாரதி.

“இதில் நான் நினைக்க ஒண்ணுமில்லை…நீ ரெஸ்ட் எடு…ஆனா காலையில் என் கூடவே தான் இருக்கணும்..” என்றான் கண்டிப்பாய்.

“கண்டிப்பா மச்சி..” என்று சாரதி உறுதியளிக்க…சிறிது தூரம் சென்றவன்…

“மச்சி..நைட் பார்ட்டி இருக்கு…அதுக்கு வருவியா..?” என்றான்.

ஒரு நிமிடம் யோசித்தவன்…”வரேன் மச்சி..” என்றான்.

மொடாக் குடிகாரன் இல்லையென்றாலும்…பார்ட்டிகளில் கலந்து கொண்டு அவ்வப்போது குடிப்பது அவன் வழக்கம்.

எல்லா திருமணங்களிலும்…பேச்சுலர்ஸ் பார்ட்டி..என்பது வழக்கமாகிப் போன ஒன்று.அதனால் மறுக்காமல் ஒப்புக் கொண்டான் சாரதி.

‘என்னாச்சு சாரதி உனக்கு…கிளம்பி வரும் வரை நன்றாகத்தானே இருந்த..இப்ப என்ன திடீரென்று…’ என்று அவன் மனம் கேட்க..

‘இந்நேரம் கவிபாரதியும் சம்மதம் சொல்லியிருந்தால்…எங்கள் திருமணமும் முடிந்திருக்குமே..!’ என்றான் பதிலுக்கு.

‘அதுதான் அவள் சொல்லவில்லையே…பிறகு ஏன் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்…?’ என்றது மனம்.

‘அவள் என் உயிர்..அவளை எப்படி மறக்க முடியும்..’என்றான்.

‘அதெப்படி…பார்த்து ஒரு நாளில்…உன் வாழ்க்கை துணை அவள்தான் என்று தீர்மானம் செய்வாய்.பிடிக்காத பெண்ணை தொந்தரவு செய்வது தவறு என்று உனக்கு தெரியாதா..?’ என்றது மனம்.

‘தெரியும்..!நன்றாகத் தெரியும்…ஆனால் என்னால் முடியவில்லை.நியாய தர்மம் எல்லாம் அவள் விஷயத்தில் கண்டிப்பாக செல்லாது…அவள் எப்பொழுதும் என்னை புரிந்து கொள்ளவே மாட்டாள்….புரிய வைப்பதும் கஷ்டம்..’ என்றான்.

‘வேண்டாம் சாரதி…அப்படி ஒரு தவறை நீ செய்யாதே…அவள் மீதான உன் விருப்பம் உண்மை எனில்…அதுவே அவளை உன்னிடம் சேர்க்கும்… பெண்களை துன்பப்படுத்தி….அதில் இன்பம் கண்டோர் எல்லாம் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை..’ என்று மனம் சொல்ல…

சில நாட்களாய் அவன் மனதில் இருந்த திண்டாட்டம் முடிவிற்கு வந்தது.இனி என்னால் அவளுக்கு எந்த துன்பமும் வராது…நான் எந்த வகையிலும் அவளை தொந்தரவு செய்ய மாட்டேன்….என்ற உறுதியை மனதிற்கு அளித்தான்.

ஆனால் அந்த உறுதியை எந்த வகையிலும் அவனால் காக்க முடியாது என்று அவனுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

மனசாட்சிக்கு பயந்தவன்…தன் மனதை மறந்தான்.மனதில் உள்ளவளை துன்பப்படுத்த கூடாது என்று எண்ணியவன்…அதன் பின்னால்  இருந்த அவன் விருப்பத்தை மறந்தான்.

எல்லா நேரமும்..நமக்கு சாதகமாகவே அமைந்து விட்டால்…அங்கு விதிக்கு என்ன வேலை..?

“என்ன மலர்..என்னாச்சு..?” என்றார் சத்யா.

“எனக்கு என்னவோ மாதிரி இருக்கும்மா…நாம இந்த கல்யாணத்துக்கு வந்திருக்க கூடாதோ…?” என்றாள்.

“ஏண்டா அப்படியெல்லாம் யோசிக்கிற….இப்படியே நினைச்சா எப்படி மலர்…?” என்றார் சத்யா.

“என்னன்னே தெரியலம்மா…மனசு கிடந்தது அடிச்சுக்குது…!” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

“கண்டதையும் நினைச்சு மனசைப் போட்டு குழப்பிக்காம…பேசாம தூங்குடா…காலையில் கல்யாணம் முடிந்ததும் கிளம்பிடலாம்..!” என்றார்.

அவரின் சொல்படி கண்ணை மூடியவளுக்கு…ஏனோ தூக்கம் மட்டும் வர மறுத்தது.மூடிய விழிகளுக்குள் தெரிந்த அந்த இருள்…அவளை பயம் கொள்ள செய்தது.அந்த இமைகளின் இருளுக்கு பயந்தவளாய்….உறக்கமின்றி படுத்திருந்தாள் மலர்.

வாழ்வில் நடந்து முடிந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுக்க….கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

“ஏன் செல்வா…இப்படி நடந்தது.நாம் யாருக்கும் எந்த தீங்கும் நினைத்ததில்லையே..! பிறகு ஏன் நமக்கு இப்படி ஒரு நிலை.. என்னை விட்டு ஏன் சென்றாய் செல்வா…?என்னால் முடியவில்லை…என்னால் தனியாக இயங்க முடியவில்லை.. வெளியில் சிரிப்பது போல் நடிக்க முடியவில்லை….என்னை இயக்கும் சக்தியே நீ தான்…என்னுள் உந்து சக்தியே நீதான்…நான் இப்படி தவிக்க வேண்டும் என்று தான் சென்றாயா…?

இந்த கல்யாணம்,அலங்காரம்….இதையெல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை செல்வா…!” என்று மனதிற்குள் வார்த்தைகளால் வார்த்தையின்றி தவித்தவளுக்கு ஏனோ அழுகை கட்டுக்கடங்காமல் வந்தது.வாய்விட்டு அழ வேண்டும் போல் தோன்றியது.இருக்கும் சூழ்நிலை

அவளைக் கட்டுப்படுத்தியது.எப்பொழுது அவனின் நினைவுகள் வந்தாலும்…அவளின் நிலை இப்படியானதாகவே இருக்கும்.

“மலர்..” என்று அவளின் தோளை சத்யா திருப்ப…”அம்மா..” என்ற கதறலுடன் அவரை அணைத்துக் கொண்டாள் மலர்.

அந்த அணைப்பு…பல ஆறுதலை அவளுக்கு தந்தது என்றால் மிகையில்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த திவாகர்…அதைப் தொடர்ந்து பார்க்கும் பொறுமையற்றவராய் வெளியே சென்று விட்டார்.

இந்த திருமண நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே…அவள் மனம் ஒடுங்கி விடுகிறது.இப்பொழுது பரவாயில்லை..என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்க….கிளம்பும் போது..மகிழ்ச்சியாய் கிளம்பியவள்… இப்பொழுது மீண்டும் அவள் கூட்டுக்குள் செல்வது கண்டு… திவாகருக்குமே மனம் வேதனை அடையத்தான் செய்தது.

‘கடவுளே..! இனியாவது என் பெண்ணை நிம்மதியாய் இருக்க விடு…இது வரை அவளுக்கு கொடுத்த துன்பங்கள் போதாதா…? அவள் வாழ்வில் விடிவு என்பதே கிடையாதா..?” என்று திவாகர் வேண்ட…

மாடியில் இருந்த அறையில் இருந்து மாப்பிள்ளை மற்றும் அவன் நண்பர்களின் குரல் கேட்டது.பேச்சுலர்ஸ் பார்ட்டியை என்ஜாய் செய்து கொண்டிருந்தனர்.

அவர்களின் குரலில் இருந்த மகிழ்ச்சி….திவாகரை ஏனோ ஆழ்ந்த அமைதிக்கு அழைத்துச் சென்றது.

இவை எல்லாம்…அந்த வயதில் ஒரு விதமான சந்தோசம்..ஆனால் அதுவே மீறும் போது..? என்று எண்ணியவரால்..அதற்கு மேல் அதை நினைக்க கூட முடியவில்லை.

என்ன செய்கிறோம்..!ஏன் செய்கிறோம்..! என்று தெரியாமல் செய்யும் சில விஷயங்கள்…பலரின் வாழ்க்கையை பதம் பார்த்து விடுகிறது.

அதை பாதிப் பேர் உணர்ந்தாலும்…சிலர் எப்பொழுதும் உணருவதில்லை. இதோ இன்று ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக் குறியாகி நிற்கிறது..?

மறுநாள் விடியல்..எவ்வித மாற்றமும் இன்றி விடிய… திருமணத்திற்கு சரியாக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து விட்டிருந்தாள் கவிபாரதி.

“என்னடி கல்யாணப் பொண்ணே..! எப்படி இருக்க…?” என்றபடி மணப்பெண் அறையில் நுழைய..

“வாங்க கலெக்டர் அம்மா….இப்பதான் உங்களுக்கு விடிந்ததா…?” என்று முறுக்கிக் கொண்டாள் அந்த மணப்பெண்.

“ஹேய் சாரிடி..நான் நேத்தே மதுரை வந்துட்டேன்..அப்படியே வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்..! எப்படியோ தாலி கட்டுவதற்கு முன்னாடியே வந்துட்டேன்ல..” என்றாள்.

“அதனால் நீ தப்பிச்ச….இல்லை தேடி வந்து உன்னை உதைத்திருப்பேன்..” என்றாள்….அன்றைய மணப் பெண்ணும்….கவியின் தோழியுமான சங்கரி.

நீதான…நீ செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை…..என்ற கவி..”சாரி சங்கரி…நான் கல்யாணம் முடிந்ததும் கிளம்பிடுவேன்…இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…பிளீஸ்டி..புருஞ்சுக்கோ..” என்றாள்.

“ஹேய்..! பரவாயில்லைடி…உன்னோட பிசியான வேலைக்கு நடுவில் நீ வந்ததே பெரிய விஷயம்…அதனால் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்… ஓகேவா..” என்றவள் கவியை மேலும் கீழும் பார்க்க..

“சும்மா சொல்லக் கூடாது கவி…செம்மையா இருக்க…” என்று கண்ணடிக்க..

“அடியேய் உன்னை….!” என்று அவள் அடிக்க போக…”பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ..!” என்ற குரலில்….சில பெண்கள் அவளை அழைத்துப் போக வர..

“நீயும் வாடி கவி..” என்றாள் சங்கரி.

“நானா…? நான் எப்படி…வேண்டாமடி…நான் அங்க அம்மா,அப்பா கூட போய் உட்காரேன்…” என்றாள்.

‘கவி..!’ என்று அவளை முறைத்த சங்கரி…”இப்ப என் கூட நீ வரணும்…இல்லை நான் போக மாட்டேன்…” என்று சட்டமாய் சொல்ல..

“இவ செஞ்சாலும் செய்வா..!” என்று எண்ணியவள் தயங்கியபடி சென்றாள்.

அங்கு மேடையில்…மாப்பிள்ளைத் தோழனாய்..அவன் அருகில் நின்றிருந்தான் சாரதி.

பார்டரில் சிவப்பு நிற சிறிய கரையுடன் கூடிய வெண்பட்டில்… அலங்காரம் அற்ற….அழகியாக அவள் வர…ஏதோ ஒரு யோசனையில் நிமிர்ந்த சாரதியின் கண்களில் விழுந்தாள் கவிபாரதி.

பார்த்தவனின் விழி அசையவில்லை.அவளை இங்கு காண்போம் என்று அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

எதிர்பாராமல் கிடைத்த அந்த சந்திப்பு…அவளின் அந்த தோற்றம்.. காலத்திற்கும் மாறாத நினைவாய் அவன் மனதில் பதிந்து போனது.

முன்னால் அமர்ந்திருந்த …கவிபாரதியின் பெற்றோர் கண்களிலும்…இதே எண்ணம் தான்…பார்வையாய் மாறி வெளிப் படுத்தியது.

ஆனால் கவியோ சுற்றி யாரையும் உணர்ந்தாள் இல்லை.அவளுள் இருந்த தவிப்பும்,அந்த படபடப்பும் அவளை ஒரே சிந்தனையில் இருக்க விடவில்லை.

அதுவே சாரதிக்கு வசதியாகப் போய்விட…அவளை ஆசைதீர பார்த்துக் கொண்டிருந்தான்.சாரதியின் பார்வையை விஜயனும்,தனமும் உணர்ந்தனர்.

இருந்தாலும் கவிக்கு அதில் விருப்பம் இல்லை என்று தெரிந்த பின்பு..அந்த ஆசையை அவர்கள் மறந்து விட்டிருந்தனர்.

தாலி கட்டும் ஐந்து நிமிடத்திற்கு முன் வந்து சேர்ந்தான் வெற்றி. எப்போதும் போல்..வேஷ்டி,சட்டையில் கம்பீரமாய் அவன் வர…அவனுடன் இணைந்து ரத்தினமும்,துர்காவும் வந்தனர்.

சாரதி நண்பனை அங்கு எதிர்பார்க்கவில்லை.ஆனால் ஒரு நிமிடம் அவனை மறந்து வெற்றியை ரசிக்கவே செய்தான்.”என் உயிர் நண்பன்..” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் முகத்தில் காட்டவில்லை.

வெற்றியும் அவனை வரும் போதே கண்டு விட்டிருந்தான்.ஆனால் அவனும் தன் உணர்வுகளை முகத்தில் காட்டவில்லை.

வெண்ணிற வேட்டியும்,நீல நிற  சட்டையும்…அவனுக்கு எடுப்பாய் இருக்க…எப்பொழுதும் அவன் முகத்தில் தெரியும் ஆளுமை அன்று சற்று கூடுதலாக காணப்பட்டது.

கவி அவனையே பார்த்துக் கொண்டிருக்க…..அவளைப் பார்க்க எண்ணி திரும்பிய சாரதியின் கண்களில் இந்த காட்சி விழ.. கொஞ்சம் இளகி இருந்தவன்….மீண்டும் மலையேறத் துவங்கினான்.

‘இவ்வளவு நேரம் ஒருத்தன் பார்த்துகிட்டே இருக்கேன்…அப்ப எல்லாம் அவளுக்கு கண்ணு தெரியலை…அவன் அங்க வரும் போதே..இவளுக்கு கண்ணு தெரியுது…’ என்று மனதிற்குள் பொருமியவன்…சற்று முன் உயிர் நண்பனாய் எண்ணியவனை மீண்டும் விரோதியாய் எண்ணத் துவங்கினான்.

காதல் என்று வந்துவிட்டால்…அதில் சரி தவறு,நண்பன் துரோகி, என்று எதுவும் பிரித்தறிய முடியாத ஒரு நிலையில் தள்ளப்படுகிறோம் என்ற வார்த்தை சாரதியின் விஷயத்தில் நிஜமாகிப் போனது.

இந்த நிகழ்வு எதிலும் கலந்து கொள்ளாமல்…தனித்து அமர்ந்திருந்தாள் மலர்.அவளுக்கு கவியைப் பார்த்த உடன் பேச வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

பிறகு யோசித்தவள்…அது தேவையற்றது என்று எண்ணி…அதை ஒதுக்கி வைத்துவிட்டு….பார்வையாளராய் மாறி அமர்ந்திருந்தாள்.

திவாகர்-சத்யா…மாப்பிள்ளை வழி சொந்தம் என்பதால்…அவர்களுக்கு உதவியாக வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில்…சில இருக்கைகள் காலியாக இருக்க…அங்கு வந்து அமர்ந்தான் வெற்றி.அவனை அடுத்து அவனின் பெற்றோர் அமர…மேடையில் இருந்து அவனைப் பார்த்து சிரித்தாள் சங்கரி.

பதிலுக்கு ஒரு சிறு புன்னகையை உதிர்த்தவன்…மீண்டும் தன் கூட்டிற்குள் செல்ல….அமைதியாய் அமர்ந்திருந்தான்.

தன் அருகில் அமர்ந்தவர்களை கவனிக்கும் நிலையில் மலர் இல்லை. அவள் சிந்தனைகள்,யோசனைகள்..எல்லாம் வேறு எங்கோ இருக்க…

“கெட்டி மேளம்..கெட்டி மேளம்..!” என்ற வார்த்தைகளில் சுயத்திற்கு வந்தவள்…தன் கைகளில் இருந்த அட்சதையை தூவ….பழைய நியாபங்கள் ஒன்றாய் நினைவில் வர…லேசாக கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

இதற்கு மேல் இங்கு இருந்தால் சரிப்பட்டு வராது என்று எண்ணியவள்… எழுந்து செல்ல முற்பட…கண்கள் இருட்டிக் கொண்டு வந்ததில் கால் இடறி அருகில் இருந்த வெற்றி மேல் விழுந்தாள்.

தன் மீது திடீரென்று ஒரு பெண் விழுவாள் என்று எதிர்பார்க்காத வெற்றி…அவளைப் பார்த்து கோபத்தை பூசிக் கொண்டான்.

“ஹேய் அறிவில்லை…பார்த்து போகக் கூடாது…இப்படிதான் விழுந்து வைப்பியா…?” என்று கண்களில் அனல் பறக்க அவன் கேட்க…. அவனின் முகத்தைப் பார்த்த மலர் ஒரு நிமிடம் அரண்டு விட்டாள்.

“சாரி சார்…சாரி…தெரியாம…” என்றபடி அவள் அவசரமாக எழுந்து செல்ல…”ச்சை..” என்று தன்னைத் தானே உதறிக் கொண்டான் வெற்றி.

“ஏன் வெற்றி அந்த புள்ளைய இப்படி திட்டின…பார் அது முகமே சரியில்லை…” என்றார் துர்கா.

“அதுக்காக…? யார் வேண்டும் என்றாலும் என்மேல் வந்து விழுந்துக்கோங்க..! என்று சொல்லவா..?” என்றான் எரிச்சலுடன்.

“அந்த பொண்ணு தெரியாம தான் விழுந்தது வெற்றி….எல்லாருமே தப்பானவங்க கிடையாது…தவறு உன் பார்வையில் இருக்கு..” என்றார் துர்கா.

“ஆமா…நான் அப்படித்தான்…இதோட இந்த பேச்சை விடுங்க..!” என்று முடித்துக் கொண்டான்.

இங்கு நடந்த அனைத்தும் கவியின் கண்களில் தப்பாமல் விழுந்தது. அவனின் கோப முகத்தைப் பார்த்தவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

அவளும் அப்போதுதான் மலரை கவனித்தாள்.போய் பேசு என்று மனது சொன்னாலும்..ஏதோ ஒரு தயக்கம்..அவளை பேச விடவில்லை.

சாரதியும் நடந்ததைக் கவனிக்க…”அதானே…கவியைத் தவிர…யாரைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்காதே..!” என்று எண்ணிக் கொண்டான்.

சில சிறிய தவறான புரிதல்கள்..பல பெரிய தவறுகளுக்கு வழி வகுக்கிறது. சாரதியின் வாழ்விலும் அப்படித்தான்.இனி நடக்க போகும் செயல்களுக்கு யார் பொறுப்பு.

கண்கள் கலங்க வந்த மலரைப் பார்த்த சத்யா..”என்னடா என்னாச்சு…ஏன் கண் கலங்கியிருக்கு..!” என்று விசாரிக்க…

“அங்க ஒருத்தர் மேல…தெரியாம இடுச்சு விழுந்துட்டேன்ம்மா…அது தெரியாம அவர் ஏதோ என்னை திட்ட ஆரம்பிச்சுட்டார்..அதான்..” என்றாள் கண்களைத் துடைத்தவாறு.

“யாரு அவன்…?என் பொண்ணை திட்டியது..” என்று சத்யா சண்டைக்கு சாரியை வார்க்க…

”விடுங்கம்மா…நாம இங்க இருந்து கிளம்பலாம்…” என்றாள்.

“சரிடா…சாப்பிட்டு போய்டலாம்…இல்லைன்னா சொந்த பந்தத்துக்குள்ள…. நாளைக்கு ஒரு பேச்சு வந்துடும்..” என்ற சத்யாவின் வார்த்தைகளில்… அடங்கினாள் பனிமலர்.

ரத்தினம்-துர்கா தம்பதியினரின் அருகில் சென்ற விஜயன்-தனம் தம்பதியினர்…..

“வணக்கம்…எப்படியிருக்கிங்க..?” என்றனர்.

“அடடே…! நீங்களா..? நல்லாயிருக்கோம்…நீங்க எப்படி இருக்கீங்க… மேடையில் உங்க பெண்ணைப் பார்த்ததும் நினைச்சேன்..நீங்களும் வந்திருப்பிங்கன்னு..” என்றார் துர்கா.

“உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்…” என்று கவியின் பெற்றோர் தயங்க…

“சொல்லுங்க…இதில் என்ன தயக்கம்..?” என்றார் ரத்தினம்.

“உங்க பையனுக்கு வரன் பார்க்கிறதா இருந்தா…எங்க பெண்ணை…” என்று தனம் இழுக்க..

“நானே உங்களைப் பார்த்து பேசலாம் என்று இருந்தேன்.எங்களுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.என் பையன் சம்மதத்தை வாங்க வேண்டியது என் பொறுப்பு…! கல்யாணத்துக்கு சரி சொன்னவன்…உங்க பொண்ணையும் சரி என்று சொல்லுவான்… நாங்க வீட்டுக்கு போய் பேசிட்டு…ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரோம்…” என்றார் துர்கா.

தாங்கள் பேசப் போன விஷயம் இவ்வளவு எளிதில் முடியும் என்று விஜயனும்,தனமும் எதிர்பார்க்கவில்லை.எப்படி பேசுவதென்று புரியாமல் அவர்கள் தயங்க…வெற்றியின் அன்னையோ…அதற்கு அவசியமே இல்லாமல் செய்து விட்டார்.

அவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு செல்ல…

“நீ பேசாம சொல்லிட்ட…வெற்றி இதுக்கு எப்படி சம்மதம் சொல்லுவான்..?” என்றார் ரத்தினம்.

“கல்யாணமே வேண்டாம் என்று சொன்னவன் இப்போ சரின்னு சொல்லிட்டான்.நான் பார்க்கிற எந்த பெண்ணையும் அவன் மறுக்க மாட்டான்…!” என்றார் துர்கா.

“எப்படியோ நல்லது நடந்தா சரி..!” என்று ரத்தினம் பேச்சை முடிக்க…

இதையெல்லாம் சாரதி கவனிக்க தவறவில்லை.காதலால் சற்று பூத்திருந்த அவன் மனம் இவர்களின் பேச்சைக் கேட்ட பிறகு புயலாய் மாறியது.

இவர்கள் பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கவிக்கு மனதின் ஓரத்தில் சாரல் அடித்தது.

அப்பொழுது தான் கவனித்தாள் சாரதியை.கண்களில் தீ பறக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இவன் எப்படி இங்க..?” என்று கவி யோசிக்க..

“ஆத்தா…இவ்வளவு நேரம் அவன் உன் பக்கத்தில் தான் இருந்தான்..” என்று மனம் நக்கலடித்தது.

அவனின் பார்வையை கண்டு கொள்ள அவளுக்கு நேரம் இருக்கவில்லை.அனைவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.

“போடி போ..! எங்க போய்டுவா….?” என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டான் சாரதி.

 

எனக்கான வரம் போல் பிறந்தாயடி..!

தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி..!

இனிமேலும் இவன் வாழ முடியாதடி..!

இறந்தாலும் உன்னைத் தேடி அலைவேனடி..!

 

மலர் பூக்கும்..!

Advertisement