Advertisement

மலர் 5:

“என்னாச்சு துர்கா..?ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றார் ரத்தினம்.

“அது ஒன்னுமில்லைங்க…! மதுரைக்கு போயிட்டு வந்ததில் இருந்து எனக்கு அந்த பொண்ணு நியாபகமாவே இருக்கு..!” என்றார் துர்கா.

“நீ மனதில் என்ன நினைக்கிறேன்னு தெரியுது துர்கா.ஆனா நாம ஆசைப்பட்டா போதுமா…? இதில் வெற்றிக்கு பிடித்தமில்லையே…! என்னைக்கு அவன் பிடி கொடுத்து..என்னைக்கு கல்யாணம் பண்ணி…” என்று அவர் அலுப்புற்று பேச..

“அதுக்காக நாம அப்படியே விட்டுட முடியுமாங்க…!எனக்கென்னமோ அவனுக்கும் மனதில் விருப்பம் இருக்கோன்னு தோணுது…இப்படி அவன் வழிக்கே நாம போயிட்டு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது…நாம அவனுக்கு தெரியாம ….அந்த பொண்ணு வீட்ல போய் பேசிப் பார்க்கலாமா..?” என்றார் துர்கா.

“இல்லை துர்கா…எடுத்தோம்..கவுத்தோம்ன்னு செய்ய முடியாது…. வெங்கட்,கண்ணன் கிட்ட ஒரு வார்த்தை கலந்து பேசணும்…அது வரைக்கும் நீ பேசாம இரு..!” என்று ரத்தினம் சொன்னதும் சரியாகப் பட்டது துர்காவிற்கு.

அதே நேரம் வெற்றி வீட்டிற்குள் நுழையவும் அவர்களின் பேச்சு தடைபட்டது.

உழைத்துக் கலைத்து வந்தவனைப் பார்க்க…துர்காவிற்கு மனம் ஆறவில்லை.

‘எதற்காக இப்படி ஓடி ஓடி உழைக்கிறான்..!வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் வேண்டாம் என்று எதற்கு விலகிப் போகிறான்.மற்ற இரு மகன்களைப் பெற்ற அதே வயிற்றில் தானே இவனையும் பெத்தேன்… ஆனா இவன் மட்டும் தனிக் காட்டு ராஜாவாக இருக்க நினைக்கிறான்…!” என்று யோசிக்க..

“அம்மா..! என்ன யோசனை எல்லாம் பலமா இருக்கு….!” என்றான் வெற்றி.

“ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்லை வெற்றி..!” என்று சொல்ல..

சாப்பிடுவதற்காக அமர்ந்தான் வெற்றி.யோசனையுடன் அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார் துர்கா.

சிறிது நேரம் கண்டும் காணாமல் சாப்பிட்டவன்…”ரசம் ஊத்துங்க..!” என்றான்.

துர்கா எதோ ஒரு நியாபகத்தில் தயிரை எடுத்து ஊற்ற போக.. ”அம்மா…நான் ரசம் கேட்டேன்..!” என்றான் அழுத்தமாய்.

“ஹோ…ஏதோ ஒரு நியாபகம் வெற்றி…!” என்றபடி ரசத்தை ஊற்ற..ஒரு நிமிடம் தாயின் முகத்தை ஊன்றிப் பார்த்தான் வெற்றி.

“அப்படி என்ன யோசனை உங்களுக்குள்..!”என்றான்.

“ஏன் வெற்றி…அந்த பெண்ணைப் பற்றி என்ன நினைக்கிற…?” என்றார்.

“எந்த பெண்ணைப் பற்றி..?” என்றான்.

“அதான் அன்னைக்கு சாரதிக்கு பார்க்க போனோமே…! அந்த பெண்ணைப் பற்றி தான்..!” என்றார்.

“அந்த பெண்ணைப் பற்றி நான் எதுவும் நினைக்கலை என்று அன்னைக்கே சொல்லிட்டேன்.மறுபடியும் அதே பேச்சா…ஒரு மனுஷன் நிம்மதியா வீட்ல சாப்பிட முடியுதா…?” என்றபடி..அப்படியே கைகழுவி விட்டான்.

“என்ன வெற்றி பாதி சாப்பாட்டுலையே…” என்று துர்கா பதற..

“போதும்…” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டான்.

பெற்ற மனம் தான் கண்கலங்கி நின்றது.அப்படி கலங்கவில்லை என்றால் அது பெற்ற மனம் இல்லையே..??

அறைக்கு சென்றவனின் மனம் நிலையில்லாமல் தவித்தது.ஏனோ இப்பொழுது எல்லாம் தனக்கு காரணமே இல்லாமல் கோபம் வருவதைப் போல் உணர்ந்தான் வெற்றி.

அன்று கவி பாரதி பேசியது அவனுக்குமே சுத்தமாய் பிடிக்கவில்லை. அத்தனை பேர் முன்னிலையில்…எவ்வளவு தைரியம்…என்ன பெண்ணோ..! என்று நினைக்கத்தான் தோணியது அவனுக்கு.

வெற்றிக்கு கொஞ்சமும் குறையாத வன்மத்தில் இருந்தான் சாரதி.இன்று அவளை சந்திக்க வேண்டும்…அவளை மிரட்ட வேண்டும் என்று அவன் நினைத்து சென்றதெல்லாம் வீணாகிப் போனது போன்ற ஒரு உணர்வு அவனுள்.

அவனைக் கொஞ்சமும் பயமின்றி அவள் எதிர்கொண்ட விதம் கண்டு அவனே கொஞ்சம் மலைத்து தான் போனான்.ஏனோ அந்த நிலையிலும் அவளை ரசிக்க தான் தோன்றியது அவனுக்கு.

‘பிளீஸ் கவி..என்னைப் புரிந்து கொள்..!கண்ட நொடியிலிருந்து உன் மேல் காதல் கொண்டு பித்தனாய் சுற்றும் என்னை புரிந்து கொள்..!’ என்று தன் மனதிற்குள்ளேயே அரற்றினான்.

‘அவள் உன்னை வேண்டாம் என்று சொன்னதற்கும்…நீ வெற்றி மேல் கோபம் கொண்டதற்கும் என்ன காரணம்..?’ என்று மனம் கேட்க…

‘அவனை வேண்டும் என்று சொன்னாலே..!’ என்றான் விடாமல்.

‘ஆனால் வெற்றி அப்படி சொல்லவில்லையே..? பிறகு அவன் மேல் என்ன கோபம்…?’ என்று மனம் கேட்க…

ஒரு நிமிடம் நிதானமாய் சிந்திக்க தொடங்கினான் சாரதி.உண்மைதானே..! இதில் வெற்றியின் தப்பு எங்குமில்லை.ஆனால் ஏன் என் மனம் புரிந்து கொள்ள மறுக்கிறது.

அவன் என் நண்பன்..அவனால் எனக்கு துரோகம் செய்ய முடியுமா..? என்று பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க…

மூளை..வெற்றியை ஏற்றுக் கொண்டாலும்…மனம் ஏற்கவில்லை.அந்த அளவிற்கு கவி அவனைக் கவர்ந்திருந்தாள்.

“சாரி வெற்றி என்னை மன்னித்து விடு….என் நிலையில் இருந்து பார்த்தால் நான் செய்வது சரி…அது யாருக்கு வேண்டும் என்றாலும் தவறாக தோன்றாலாம்…ஆனால் அதற்காக என்னால் பொய்யாக நடிக்க முடியாது.உள்ளொன்று வைத்து வெளியில் உன்னுடன் நட்பு பாராட்டும் பொய்மையை நான் விரும்பவில்லை.அது நட்பிற்கு செய்யும் துரோகம். அதற்கு நாம் விலகியிருத்தல் எவ்வளவோ மேல்…” என்று மானசீகமாய் தன நண்பனிடம் பேசிக்கொண்டான் சாரதி.

சென்னையில்…

“மலர்..எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியாமா….?’ என்று குரல் கொடுத்த படி சமயலறையில் வேலையாய் இருந்தார் சத்யா.

“எல்லாமே எடுத்து வச்சுட்டேன்ம்மா….!” என்று மலர் மீண்டும் குரல் கொடுக்க…வேலைகளை முடித்தவர்….கைகளைத் துடைத்துக் கொண்டே வெளியே வர…

“என்ன சத்யா…? நீ இன்னும் கிளம்பலையா…?” என்று திவாகர் கேட்க…

“இப்போதாங்க சமையல் வேலை முடிந்தது.இதோ கிளம்பிடுறேன்..!” என்றபடி சத்யாவும் செல்ல…

“நான் ரெடிப்பா…!” என்றபடி வந்து நின்றாள் பனிமலர்.

இளம் ரோஜா வண்ண டிசைனர் புடவையும்….காதில் சிவப்பு கற்கள் பதித்த ஜிமிக்கியும்….அதே கற்கல் பதித்த… கழுத்தை ஒட்டிய  நெக்லசும்… இடையைத் தாண்டி பின்னப்பட்ட கூந்தலில் சூடியிருந்த மல்லிகைப் பூவும்… அவளைப் பேரழகியாய் காட்ட…

“என் கண்ணே பட்டுடும் போல இருக்குடா..!” என்றார் திவாகர்.

“போங்கப்பா….இது நீங்க எப்பவும் சொல்ற ஒரே வசனம்…வெளியில் சொல்லிடாதிங்க…யாரவது அடிக்க வந்துடுவாங்க…!” என்று சொல்லி வாய் மூடி சிரிக்க…

தன்னைப் பற்றி..தன் அழகைப் பற்றி..சிறிதும் கர்வம் இல்லாமல் இருக்கும் அவளைக் கண்டு பலமுறை திவாகர் வியந்ததுண்டு.

“கடவுளே..! இனியாவது என் குழந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்..அவள் வாழ்வில் ஒரு நல்லது நடந்து விட்டால்…நாங்கள் நிம்மதியாக கண்ணை மூடுவோம்…” என்று மனதிற்குள் கடவுளைப் பிராத்திக்க…

“விடுங்கப்பா..! கடவுள் பாவம்…நீங்களும் விடாமா வேண்டிட்டே இருந்தா அவரும் என்னதான் செய்வார்….கொஞ்சம் கேப் விட்டு வேண்டுங்க… அவரும் யோசிக்கனுமில்ல…” என்று அவள் சிரிக்காமல் சொல்ல..

அவளின் வார்த்தைகளில் சிரித்தவர்…”எப்படியோ அவர் காதுக்கு கேட்ட அதுவே எனக்கு போதும் மலர்..” என்றார்.

உள்ளே சென்ற அரை மணி நேரத்தில் கிளம்பி தயாராக வந்தார் சத்யா.

“அதான் வெளிய கிளம்புறோம்..! அப்பறம் ஏன் சமையல் செஞ்ச..?” என்று திவாகர் கடிந்து கொள்ள…

“இப்போ சாப்பிட்டு தான கிளம்பனும்…அதுக்குத்தான்…” என்றவர்…மலரின் புறம் திரும்பி…

“ஏன் மலர்…இதை மட்டும் அணிந்திருக்க…நான் போட சொன்ன நகை எல்லாம் எங்கே..?” என்றார்.

“ஐயோ அம்மா…! அதை எல்லாம் போட்டா…நான் நகைக் கடை விளம்பரத்துக்கு போற மாதிரி இருக்கும் பராவாயில்லையா…?எனக்கு இது தான் பிடித்தமானதா இருக்கு…” என்றாள்.

“உனக்கு பிடிச்சிருந்தா…சரிதாண்டாமா…!” என்று பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள்….கிளம்ப ஆயத்தமானார்கள்.

மூவரும் மதுரையில் நடக்கும் ஒரு திருமணத்திற்காக கிளம்பிக் கொண்டிருந்தனர்.மறுநாள் திருமணம் என்ற நிலையில்….முதல் நாள் காலையிலேயே கிளம்பி விட்டிருந்தனர்.

“அங்க எல்லாரும் வருவாங்க தானப்பா…!” என்றாள் மலர்.

“ஆமாடா…சொந்த பந்தம் எல்லாரும் வருவாங்க..! எல்லாரையும் பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது..!” என்றார் திவாகர் பெருமூச்சுடன்.

மலரின் முகம் கண்டதையும் நினைத்து யோசனைக்கு தாவ…

“உனக்கு எதவாது பிடிக்காத மாதிரி இருந்தா உடனே அங்க இருந்து கிளம்பிடுவோம்டா…” என்றார் திவாகர்.

“சரிப்பா..” என்று அவள் தலையாடினாலும்…முகம் கலவரத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தது.

அவளின் முகத்தைப் பார்த்து அவள் நிலையை உணர்ந்து கொண்ட சத்யா…அவளின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டார்.

மதுரையில்…

“என்னங்க கவி வருவாளா..?” என்றார் தனம்.

“அதெல்லாம் அவ வந்திடுவா..! அவளுக்கு வேலை அப்படி… அதையெல்லாம் நாம் சொல்ல முடியாது..” என்றார் விஜயன்.

“இல்லை ஏற்கனவே கோபமா போயிருக்கா…அதான்..” என்று தனம் இழுக்க…

“நடக்க போறது அவ பிரண்டு கல்யாணம்..! அவ வராம எப்படி… அதெல்லாம் வந்திடுவா…!” என்றார்.

“நாம வேணுமின்னா அந்த பையன் வீட்ல பேசிப் பார்க்கலாமா..?” என்றார் தனம்.

“நானும் அதைத்தான் யோசித்தேன்…! அவளுக்கு பிடிச்சிருக்குன்னா ஏன் தள்ளிப் போடணும்..! ஆனா அந்த பையன் தான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டானே….பிறகு எப்படி பேசுவது…அதான் யோசனையா இருக்கு..” என்றார்.

“நாம அந்த பையன்கிட்டயா பேசப் போறோம்..! அவங்க பெத்தவங்க கிட்ட தான பேசப்போறோம்..! அவங்களுக்கும் நோக்கம் இருக்கிற மாதிரி தான் தெரியுது…” என்றார்.

“பார்ப்போம் தனம்…யோசிச்சு தான் செய்யணும்….கண்டிப்பா அவங்க கிட்ட பேசிப் பார்க்குறேன்…விசாரித்ததில்..அவங்களும் அதே ஊர் என்று தான் கேள்விப்பட்டேன்.” என்றார்.

“அப்பறம் என்னங்க யோசனை..?”

“அதுக்கில்லை தனம்…அன்னைக்கு கவியை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை அவங்களுக்கு ஒரு வகையில் சொந்தமும் கூட…இப்ப நாம பேச போய்..அவங்களுக்குள்ள ஏதாவது மனஸ்தாபம் வந்துட்டா..அதான்..” என்றார்.

“அதுக்காக பேசாமயும் இருக்க முடியாதுல்ல…” என்றார் தனம்.

“புரியுது தனம்….கல்யாணத்துக்கு போயிட்டு வந்துட்டு நானே நேர்ல போயிட்டு வரேன்..!” என்றார்.

“எப்படியோ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தா சரிதான்…” என்றார் தனம்.

கம்பத்தில்….

அந்த திருமண அழைப்பிதழையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.

‘இந்த திருமணத்திற்கு போகலாமா..?வேண்டாமா..? என்று ஆயிரம் முறை யோசித்து விட்டான்…ஆனால் விடைதான் கிடைத்தபாடில்லை.கண்டிப்பா நீங்க குடும்பத்தோட வரணும்….! என்ற வார்த்தைகள்…அவனுக்கு மீண்டும் மீண்டும் ஒலிக்க….சட்டென்று தலையை தட்டிக் கொண்டான்.’

‘என்ன யோசனை வெற்றி..! உன்னை மதித்து அழைத்தவர்களுக்கு நீ கொடுக்கும் மதிப்பு இது தானா…? இவ்வளவு தானா நீ..?’ என்று மனம் கேட்க…கல்லாய் இறுகிப் போனான் வெற்றி.

“போய்தான் ஆக வேண்டும்…” என்ற இறுதி முடிவை எடுத்தவன்… துர்காவை பார்க்க சென்றான்.

“நாளைக்கு நீங்களும் மதுரை வரீங்க தானேம்மா…?” என்றான்.

“நீ மட்டும் போயிட்டு வா வெற்றி..!” என்றார் துர்கா.

“ஏன்..?” என்றான் கேள்வியாய்.

மகனின் கோபத்தை அவனின் கேள்வியில் இருந்தே புரிந்து கொண்ட துர்கா….”சரிப்பா போகலாம்..!” என்பதோடு முடித்துக் கொண்டார்.

ஏதோ அவர் பட்டும் படாமல் பேசியதைப் போன்று தோன்றியது வெற்றிக்கு.

“உங்களுக்கு என்கிட்டே பேசக் கூட பிடிக்கவில்லை என்று இப்போது தான்…எனக்கு புரிகிறது..” என்றான் எங்கோ வெறித்துக் கொண்டு.

மகனின் பார்வையில் கலங்கியவர்….”அப்படியெல்லாம் இல்லை வெற்றி…ஊர்ல இருக்குற எல்லாருக்கும் கல்யாணம் நடக்குது… ஆனா உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணனும் என்று உங்க அப்பா தவியா தவிக்கிறாரு…நீயும் பிடி குடுக்க மாட்டேன்கிற…அப்படி நாங்க என்ன பெருசா ஆசைப் பட்டுட்டோம்…எங்க மகன்…பழைய மகனா…அந்த பழைய வெற்றியா எங்களுக்கு வேணும்…!” என்றார் கண்கலங்க.

‘தன்னால் இவர்களுக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்க முடியுமா…?’ என்று எண்ணியவனால்…கண்டிப்பாய் முடியாது என்றே தோன்றியது.

அதையே காரணம் கொண்டும் அவர்கள் வருந்துவதும் அவனுக்கு பிடிக்கவில்லை.

“இப்போ இல்லைன்னாலும்…நான் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்கிறேன்…! போதுமா…” என்ற தற்காலிக நிம்மதியை தன் தாயிக்கு வழங்கினான்.

அவனின் வார்த்தைகளில் மகிழ்ந்த துர்கா…”ரொம்ப சந்தோஷமா இருக்கு வெற்றி…ஏதோ பத்து வயசு குறைந்த மாதிரி இருக்கு…உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேண்டும் என்று சொல்லு….நான் பார்க்குறேன்…ஐயோ..கையும் ஓடலை..காலும் ஓடலை.உங்கப்பாகிட்ட…உங்க அண்ணன்களிடம் எல்லாம் சொல்லணும்…” என்று பரபரத்தார் துர்கா.

ஏனோ வெற்றி உடனே திருமணத்திற்கு சம்மதித்து விட்டான் என்பதைப் போல.

தன்னுடைய ஒற்றை வார்த்தையில்…அவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை அப்பொழுது தான் கண்கூடாக பார்த்தான் வெற்றி.

ஆனால் ஏண்டா அதை சொன்னோம்…என்று அவன் வருந்தும் காலமும் அவனுக்கு பின்னாடியே காத்துக் கொண்டிருந்தது.

என்ன முயன்றும் அவனால் நடந்த எதையும் மறக்க முடியும் என்றோ… தான் மாற முடியும் என்றோ தோணவில்லை.ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் தெரிந்தது வெற்றிக்கு.தன்னால் தன் குடும்பம் நிம்மதியிழந்து… குறிப்பாக பெற்றோர் நிம்மதியின்றி தவிக்கின்றனர் என்று புரிந்தது.ஆனால் தெரிந்தும்,புரிந்தும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.பாறையாய் இறுகிப் போனவனுக்குள்….மீண்டும் பசுந்தளிரா…? முடியுமா அவனால்…. ஏற்றுக் கொள்ளுமா அவன் மனம்.

 

சாரதியின் வீட்டில்…

“ஹலோ..”

“……..”

“சொல்லு மச்சி…” என்றான் சாரதி.

“………”

“கண்டிப்பாடா…நான் இல்லாமையா….இன்னும் கொஞ்ச நேரத்துலேயே கிளம்பிடுவேன்…இன்னைக்கு இருந்து நாளைக்கு வரை உன்கூடவே இருக்கிறேன் போதுமா..?” என்றான்.

“………”

“சரிடா….ம்ம்ம்…சரி..” என்றபடி போனை வைக்க…

“யாரு சாரதி போன்ல…எங்க கிளம்பிட்ட…?” என்றார் சந்திரா.

“என் பிரண்டுக்கு நாளைக்கு மேரேஜ்…அதான் போன் பண்ணான்… அன்னைக்கு வீட்டுக்கு கூட வந்தானே அவனுக்கு தான்…” என்றான்.

“ஆமாம்ல…மறந்துட்டேன்ப்பா…!” என்ற சந்திரா…

“நீ எப்போ சென்னை கிளம்புற சாரதி…!” என்றார்.

“அங்க எதுக்கு..?” என்றான் அசால்ட்டாய்.

அவனின் வார்த்தையில் அதிர்ந்தார் சந்திரா…!

”என்ன சொல்ற சாரதி…உனக்கு தொழில் அங்க தானே…அங்க போக வேண்டாமா..?” என்றார்.

“போகணும்..!” என்றான்.

“எப்போ..!” என்றார்.

“எப்போன்னா…என்ன சொல்றது.என் தொழில் மேல உங்களை விட எனக்கு நிறைய அக்கறை இருக்கு…என்னை என்ன வெட்டிப் பயல் என்று நினைத்தீர்களா…? எதை எப்போ..எப்படி செய்ய வேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்…இல்லையென்றால்…இந்த போட்டி உலகில் தொழில் செய்வது ரொம்ப கடினம்…” என்றான்.

அவன் சொல்வதும் உண்மைதானே…!என்னதான்..இங்கு தோட்டம்,துறவு இருந்தாலும்…பரம்பரை சொத்துக் கொட்டிக் கிடந்தாலும்..அதிலிருந்து ஒரு பைசா எடுக்க மாட்டென்று என்று சொல்லி…தன் சொந்த முயற்சியில் தொழில் தொடங்கி…அதில் கஷ்ட்டப்பட்டு முன்னுக்கு வந்தவன்…அவனுக்கு தெரியாத சூட்சுமமா…

பிடித்த பிடியில் நிற்கும் அவனின் பிடிவாத குணமே அவனின் வெற்றிக்கு ஒரு வகை காரணம் என்றும் சொல்லலாம்.

“நான் கிளம்புறேன்ம்மா….” என்றபடி….கிளம்பினான் சாரதி.

சென்னையில் இருந்து…சுற்றுப்புறத்தை ரசித்த படியே வந்தாள் பனிமலர்.

கம்பத்தில் இருந்து…இரு வேறு துருவங்களாக…மதுரையை நோக்கி பயணம் செய்தனர் சாரதியும்,வெற்றியும்.

தனது வேலைகளை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக கிளம்பினாள் கவிபாரதி.

நான்கு திசைகளும்…..ஒரே இடத்தில் சந்திக்க போகின்றன.

இனி அவர்களின் வாழ்வில் வீசப் போகும் காற்று…பனிக் காற்றா…? சூறாவளியா…?

உறவே மனம் தேம்புதே..!

உசுரே தர ஏங்குதே…!

நீ எங்கேயும் போகாத..!

நான் வாறன் வாடாத…!

காயும் இருள் நானடி..!

பாயும் ஒளி நீயடி..!

கதிரே வந்து

கண்ணோடு கலந்து விடு..!

கலந்தே இவன்

நெஞ்சோடு இருந்து விடு..!

மலரும்..!

 

 

 

Advertisement