Advertisement

மலர் 4:

சென்னையின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறையாமல் இருந்தது  அந்த வங்கி.பணம் போட வருபவர்களும்…எடுக்க வருபவர்களும்…தத்தமது வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க….கல்விக் கடன் பெறுவதற்காக சில மாணவர்கள் வங்கி மேலாளரை சந்திப்பதற்காக காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் வங்கியின் உள்ளே நுழைந்தாள் பனி மலர். கட்டியிருந்த இளம் மஞ்சள் வண்ண சேலை…அவளை மஞ்சள் நிலவாய் ஜொலிக்க வைக்க…இடது கையில் ஒரு வாட்ச்சும்… வலது கையில் ஒரு சிறிய வளையலும்….பாந்தமாய் பொருந்தியிருக்க…அன்றலர்ந்த மலராய் உள்ளே நுழைந்தாள்.

கிளை மேலாளர்…என்ற அறைக்கதவை தள்ளிக் கொண்டு அவள் சென்ற நிமிர்விலேயே தெரிந்தது…அவள் தான் அங்கு மேலாளர் என்று.

பார்ப்பவர்கள் அவளை மறுமுறை திரும்பி பார்க்காமல் சென்றது இல்லை.ஆனால் அதை அறிந்திருந்தாலும்…எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாது…தன் வேலையிலேயே குறியாக இருப்பாள்.

அந்த பேங்கில் அவளை அனைவரும் சிடு மூஞ்சி என்றே தங்களுக்குள் அழைத்துக் கொள்வர்.ஆனால் யாரையும் அவள் கடிந்து பேசியது கிடையாது.யாருடைய விஷயத்திலும் அவர்கள் அனுமதி இன்றி மூக்கை நுழைத்தது கிடையாது.இருந்தாலும் அவள் முகத்தில் இருந்த ஏதோ ஒரு பாவனை…அனைவரையும் விலக்கியே வைத்திருந்தது.

சொந்த தாய்மாமனின் வளர்ப்பில்..வளர்ந்தவள்.. வளருபவள். தன்னம்பிக்கை அதிகம்…அதே சமயம் தான் என்ற அகம்பாவம் அற்றவள்.

பழகியவர்களுக்கு அவள் மலர்…விலகி இருப்பவர்களுக்கு அவள் முள்.நெருங்கிய உறவுகளுக்கு அவள் பனி மலர்.

அவள் இந்த துறைக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது.அவள் விருப்பப் பட்டு சென்ற உத்தியோகம் என்பதால் அதனை தீவிரமாக காதலித்தாள்.

அவள் அறைக்குள் சென்ற உடன்…அங்கிருந்து பெல் சத்தம் கேட்க…

கல்விக் கடனுக்காக காத்திருந்த மாணவர்கள் ஒவ்வொருவராய் அனுப்பப்பட்டனர்.

மற்ற வங்கியைப் போல் அல்லாமல்…மற்ற கிளைகளைப் போல் அல்லாமல்…மற்ற மேலாளர்களைப் போல் அல்லாமல்…அவள் அணுகிய விதம் அந்த மாணவர்களைக் கவர்ந்தது.

எப்படியும் பார்மாலிட்டிஸ் அது இதுவென்று நிறைய கேட்பார்கள் என்று நினைத்திருந்த மாணவர்களுக்கும்…அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மலர் நடந்து கொண்ட விதம் ஆச்சர்யம் அளித்தது.

முதலில் மேலாளர் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல்…. அவர்களுக்கு செய்ய வேண்டிய நடைமுறைகளை எளிதில் விளக்கினாள்.அதற்கான படிவங்களையும்….கல்லூரி அனுமதிக் கடிதங்களையும் சரி பார்த்தவள்….அவர்களை வைத்துக் கொண்டே அனைத்து வேலைகளையும் துரிதமாக முடித்தாள்.

“உங்களுக்கான பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிந்தது.இந்த படிவத்தில் கையெழுத்து போட்டு…வெளிய கேஷ் கவுண்ட்டர் பக்கத்தில் இருக்கிற சார்கிட்ட குடுத்துடுங்க.

எங்க சைட் இருந்து செய்ய வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. நீங்க இரண்டு நாள் கழித்து வாங்க…! உங்களுக்கு லோன் சேங்சன் ஆகிடும்..” என்றாள்.

“ரொம்ப நன்றி மேடம்…வந்த வேலை இப்படி உடனே முடியும் என்று நாங்க எதிர்பார்க்கவில்லை…உங்களை மாதிரியே எல்லாரும் இருந்திட்டா… எங்களை மாதிரி இருக்கிற பெற்றோர்களுக்கு …பிள்ளைகளை எப்படிடா படிக்க வைக்க போகிறோம் என்ற மன கவலை நீங்கிடும் மேடம்..” என அங்கிருந்தவர்கள் மனதிலிருந்து சொல்ல…அதற்கு ஒரு புன்னைகையை பரிசாக அளித்தவள்…

“எளியவர்களுக்கும்,வறியவர்களுக்கும் உதவி செய்யத்தான்… நாங்க இந்த துறைக்கே வந்திருக்கோம்…உங்க பக்கம் எல்லா சான்றிதல்களும் சரியாக இருந்து…அதற்கான காரணமும் சரியாக இருக்கும் பட்சத்தில்… உங்களுக்கான கடன் வசதிகளை நாங்க உடனுக்குடன் செய்து கொடுத்துடுவோம்.

அதற்கான வழிகாட்டுதல்கள் இல்லாமதான் மக்கள் வங்கிப் பக்கம் வரவே பயப்படுறாங்க.குறித்த தவணை வட்டியில் இருந்து…கல்விக் கடன்,தொழில் கடன்,விவசாய கடன் வரைக்கும்… எல்லாமே எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.ஆட்களை வைத்து கடனை வசூலிக்கும் கூட்டம் நாங்கள் இல்லை.எங்கள் வங்கியும் அப்படிப் பட்டதில்லை.

அதனால் கடன் வாங்கிப் படிக்கிறோமே..என்ற கவலையின்றி.. படிப்பில் கவனம் செலுத்துங்கள்.உங்கள் படிப்பே நல்ல வேலையைப் பெற்று தரும்.நல்ல வேலை..உங்கள் கடனை தானே அடைத்து விடும்…” என்றாள் மாணவர்களைப் பார்த்து.

“நன்றி மேடம்..கண்டிப்பா நல்லா படிப்போம்..வரோம் மேடம்..” என்று அவர்கள் வெளியேற…

“வாங்க..!” என்று முடித்துக் கொண்டவள்….தனது அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

அதற்கு பிறகு அன்றைய நாள் எப்படி சென்றது என்று அவளிடம் கேட்டால் அதற்கு அவளிடம் பதில் இல்லை. வேலை நெட்டித் தள்ள….அதனுள் மூழ்கிப் போனாள்.

மாலை ஐந்து மணி ஆனது கூட தெரியாமல் அவள் அமர்ந்திருக்க… வங்கியின் பியூன் வந்து நியாபகப் படுத்தினார். நேரத்தைப் பார்த்தாள் மலர்.சோம்பல் முறித்தவள்….வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானாள்.

அப்பொழுது தான் அவளுக்கு நியாபகம் வந்தது…தனது மாமாவிற்கும், அத்தைக்கும் இன்று திருமண நாள் என்று.

‘எப்படி மறந்தோம்…?’ என்று தன்னைத் தானே குட்டிக் கொண்டவள்…. கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

செல்லும் வழியில்…ஏதாவது கிப்ட் வாங்க வேண்டும் என்று நினைத்தவள்… வழியில் அந்த கிப்ட் ஷாப்பை பார்த்து காரை நிறுத்தினாள்.உள்ளே சென்றவள்…அவர்களுக்கு அழகானதொரு கிப்ட்டை வாங்கிக் கொண்டு வெளியேற…சாரல் விழ ஆரம்பித்தது.

வேகமாய் சென்று காரினுள் ஏறியவள்…அந்த மழை சாரலை ரசித்துக் கொண்டே வண்டியை ஓட்டினாள்.

மழையும்,மழை சாரலும் அவளுக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒன்று.ஏனோ அந்த மண்வாசனையும்,அந்த குளுமையும் அவளை அப்படி ஈர்த்திருந்தது.

“என்ன சத்யா நேரம் ஆகிவிட்டது…இன்னமும் மலரைக் காணோம்…!” என்றார் திவாகர் கவலை தேய்ந்த குரலில்.

“அதெல்லாம் வந்திடுவா….!நீங்க ஏன் வீணா கவலைப் படுறிங்க…அவ என்ன சின்ன குழந்தையா..?” என்று சத்யா சொல்ல..

“எனக்கு எப்பவுமே அவ சின்ன குழந்தைதான்..” என்றார் திவாகர்.

மலரின் தாய்மாமன் தான்….திவாகர்.சத்யா……அவரின் மனைவி. பெற்றோரின் முகமே காணாத மலருக்கு அவர்தான் தாய்,தந்தை எல்லாம்.சத்யாவும் அவருக்கு ஏற்ற மனைவியாய் மாறிவிட….பனி மலரும்…அந்த அன்பான இதயங்களின் வளர்ப்பில் வளர்ந்தாள். அவர்களின் ஒரே மகனும்….ஒரு விபத்தில் இறந்து போய்விட… அன்றிலிருந்து பனி மலரே அனைத்தும் என்றாகிப் போயினர்.

சாரலை ரசித்த படி ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மலர்.

“என்னடா மலர்..? இவ்வளவு நேரம்…!” என்று திவாகர் கடிந்து கொள்ள….

“சாரிப்பா…(அவள் அப்பா,அம்மா என்று தான் அழைப்பாள்) உங்களுக்கு கிப்ட் வாங்க போனேனா…அதான் லேட் ஆகிவிட்டது..” என்றாள்.

“எங்களுக்கு எதுக்குமா கிப்ட் எல்லாம்.நாங்கதான் இந்த நாளைக் கொண்டாடுவதே இல்லையே…!”என்றார் விரக்தியாய்.

அந்த நாளின் நினைவில் மலருக்கும் கண்ணைக் கரித்துக் கொண்டு வர…தன்னை சமன் செய்தவள்…”போனவனையே நினைச்சு ஏன் உங்களைக் கஷ்ட்டப்படுத்திக்கிறிங்க…நீங்க இப்படி இருந்தா அவனுக்கு பிடிக்குமா சொல்லுங்க..!” என்றாள் கண்டிப்புடன்.

“இல்லை..” என்பதைப் போல் அவர்கள் தலையாட…

“ம்ம்ம்..அது…இந்தாங்க பிடிங்க கிப்டை…ஆசீர்வாதம் பண்ணுங்க என்னை..!” என்று அவர்களின் காலில் விழ…

“நீ இப்ப மாதிரியே எப்பவுமே நல்லா இருக்கணும் மலர்..” என்று அவர்கள் வாழ்த்த…

“நீங்க இப்ப மாதிரியே எப்பவும் ஒற்றுமையா, அன்போட இருக்கனும்… இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்….” என்றாள் இருவரையும் அணைத்தபடி.

“எங்களுக்காகத்தானே மலர் நீ வெளியில் சிரித்த மாதிரி நடிக்கிறாய்… நடந்த சம்பவங்களை உன்னால் மறக்க முடியுமா..?” என்று சத்யா கண்ணீர் ததும்ப கேட்க…

அதுவரை வரவா,வேண்டாமா என்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்த கண்ணீர் அவளையும் மீறி..கன்னங்களில் வழிந்தோடியது.

“ஆமாம் என்றும் சொல்ல முடியாதும்மா…அதுக்காக இல்லையென்றும் சொல்ல முடியாது…” என்றாள் பழைய நினைவுகளில் மூழ்கியவளாய்.

அவளின் கலங்கிய முகத்தைக் கண்ட திவாகர்..”இப்ப எதுக்கு சத்யா… போனதைப் பேசி…மலரை அழ வைக்கிற…போ..போய் பிள்ளைக்கு ஏதாவது சாப்பிட செய்து குடு..” என்று நிலையை மாற்ற முயன்றார்.

அதற்கு அவசியமே இல்லை என்பதைப் போல்…அடுத்த நொடி தன்னை மாற்றிக் கொண்டாள் மலர்.அவர்கள் முன்னால் எப்பொழுதும் அவள் தன் வருத்தத்தைக் காட்டியது கிடையாது.

“நீங்க சாப்பிட்டிங்களா…?” என்றாள் இருவரையும் பார்த்து.

இருவரும் இல்லை என்பதைப் போல் தலையாட்ட…அவர்களை முறைத்தவள்….”வாங்க…எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்..!” என்று அவர்களை அழைத்து சென்றவள்…தானே அவர்களுக்கு பரிமாறினாள்.

இது தான் அவர்களின் அன்பான கூடு.அவர்களுக்கு பின்னால் ஆயிரம் சோகங்களும்,மறக்க முடியா நினைவுகளும் இருந்தாலும்…அதை தன்னுடைய அன்பால் ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொண்டிருந்தனர்.

இவர்களின் இந்த மகிழ்ச்சியாவது இவர்களுக்கு நிலைக்குமா…என்றால்

அதற்கு பதில் இல்லை.விதியின் தாளத்திற்கு ஏற்ப…மனிதர்கள் நாம் ஆடித்தானே ஆக வேண்டும்.இதில் என்ன மாறுதல் வரப் போகிறது..???.

 

தனது அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான் சாரதி.

‘எப்படி சொல்ல முடிந்தது அவளால்…? என்னைப் பிடிக்கவில்லையென்று…?அவள் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கா தான் இருக்கிறோம்…?’ என்று எண்ணியவனுக்கு தன் மீதே வெறுப்பு வரத் தொடங்கியது.

பார்த்த நொடி முதல் அவள் இவன் மனதிற்குள் புகுந்து இம்சை செய்ய…அதை அடக்கும் வழி தெரியாதவனாய் தவித்தான்.

“எனக்கு இவரைத்தான் பிடித்திருக்கிறது..!” என்று அவள் வெற்றியை கை காட்டிய நிமிடங்கள்…அவனுள்…மீண்டும் மீண்டும் நியாபகம் வர…கைக்கு கிடைத்த பொருளை எடுத்து எறிந்தான்.

கடைசியில் நண்பனிடமே தோற்று விட்டோமே..! என்று சாரதி எண்ணிக் கொண்டிருக்க…

“சாரதி..எதுக்காக கண்ணா இப்படி பண்ற…?அவ இல்லைன்னா இந்த உலகத்தில் வேற பெண்ணே இல்லையா…?சரியான திமிர் பிடித்த பெண்ணா இருக்கா…அவளை மறந்திடு…” என்று சந்திரா வந்து சொல்ல…

“வெளிய போங்க..!” என்றான் உறுமும் குரலில்.

“சாரதி…” என்று அவர் அதிர…

“வெளிய போங்கன்னு சொன்னேன்…!நான் சென்னை கிளம்புறேன்…. இந்த பொண்ணை பார்த்திருக்கேன்…அந்த பெண்ணை பார்த்திருக்கேன்னு…யாரும் என்னை தொல்லை செய்யக் கூடாது… என்னைக்கா இருந்தாலும் அவள் மட்டுமே என் மனைவி… அதில் எந்த மாற்றமும் இல்லை…இந்த சாரதி ஆசைப்பட்ட ஒன்று கிடைக்காமல் போவதா…நெவர்….எதை,எப்படி,எங்க நடத்த வேண்டும் என்று எனக்கு தெளிவாக தெரியும்…” என்றான்.

மகனின் பேச்சும்,போக்கும் அவருக்கு கவலையளிக்க…வெற்றியின் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று எண்ணினார்.

 

பெண் பார்க்க சென்று வந்ததில் இருந்து….நான்கு நாட்களாகியும்….தம் மாமியாரின் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்ட மருமகள்கள்…

“என்ன அத்தை…என்னாச்சு…? சாரதிக்கு பொண்ணு பார்க்க போயிட்டு வந்ததில் இருந்து உங்க முகமே சரியில்லையே..?” என்று மூத்த மருமகள் கலா கேட்க..

“என்னத்த சொல்ல கலா….அங்க நடந்ததைக் கேட்டா…நீயும் இப்படித்தான் இருப்பியோ என்னவோ..?” என்றார் துர்கா.

“அப்படி என்ன நடந்தது அத்தை..?” என்று இரண்டாவது மருமகள் தாரணி கேட்க…

“பொண்ணைப் பார்க்கும் வரை எல்லாமே நல்லாத்தான் போனது…ஆனா அதுக்கப்பறம் நடந்தது தான்…சொல்லும் படியா இல்லை..” என்றார் துர்கா.

“அப்படி என்ன அத்தை நடந்தது..? சாரதிக்கு பெண்ணைப் பிடிக்கலையா..?” என்று கலா கேட்க…

“அவன் அந்த பொண்ணு மேல உசிரா இருக்கான்.ஆனா அந்த பொண்ணுக்கு தான்…” என்று நிறுத்த…

“அந்த பொண்ணுக்கு என்ன அத்தை..?” என்று கலாவும்,தாரணியும் ஒரே சேர கேட்க..

“அந்த பொண்ணுக்கு நம்ம சாரதியைப் பிடிக்கலை..”

“அப்பறம்..”

“நம்ம வெற்றியைத்தான் பிடித்திருக்கு என்று எல்லார் முன்னாடியும் சொல்ல…சாரதி கோபமாய் பேசிவிட்டு எழுந்து வந்துவிட்டான்…” என்றார் துர்கா.

“என்னது வெற்றியை பிடிச்சிருக்குன்னு சொன்னாளா…?” என்று அதிர்ந்தனர் இருவரும்.

“ஆமாம்மா…” என்றார் துர்கா.

“நம்ம வெற்றி என்ன சொன்னார் அத்தை…!” என்றனர்.

“என்ன சொல்லுவான்…? உனக்கு என்னைப் பிடிக்கலை…அதுக்கு வேற ஆளைப்பாரு…அப்படி,இப்படின்னு…இவனும் பேசிட்டு வந்துட்டான்…” என்றார் துர்கா கவலையுடன்.

“ஐயோ அத்தை…பாவம் சாரதி…!என்ன மனநிலையில் இருக்காரோ என்னவோ…?” தாரணி சொல்ல…

“அவளுக்கு பிடிக்கலை…அதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டா…இதில் கவலைப் பட என்ன இருக்கு…?” என்று கலா கேட்க..

“ஐயோ அக்கா….சாரதியை பிடிக்கவில்லை என்று சொன்னதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.அவன் முன்னாடியே வெற்றியை கை காட்டியிருக்கா…இது எந்த ஆணுக்கும் ஈகோ பிரச்சனையாக மாறும்.அதிலும் சாரதியைப் பற்றி சொல்லவே வேண்டாம்…” என்று தாரணி சொல்ல…

அபொழுது தான் உண்மை உரைத்தது அவர்களுக்கு.சாரதியின் குணம் பற்றி தான் அவர்களுக்கு தெரியுமே.

அவர்கள் எப்பொழுதும் சாரதியையும்,வெற்றியையும் பிரித்துப் பார்த்ததில்லை.இருவருமே அவர்களுக்கு ஒன்று தான்.ஆனால் இந்த பிரச்சனையால் இருவரும் இரு வேறு துருவங்களாக பிரிந்து விடுவார்களோ என்ற பயம் அங்கிருந்த பெண்களின் மனதில் உண்டாக…ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…..

தேனியை விட்டு சற்று தள்ளி…மதுரை ரோட்டில் அமைந்திருந்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

பறந்து விரிந்த நிலப்பரப்பில்…சுற்றிலும் கரடுகளும்,குன்றுகளுமாய் காணப்பட்ட அந்த பகுதியில்…கம்பீரமாய் நின்றது அந்த கட்டிடம்.

புது ஆட்சியர் வரவிற்கான பணிகள் துரிதமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது.அது வரை சீர் செய்யப்படாத சாலைகள் சீராக மாற்றப்பட்டிருந்தது…தற்காலிகமாக.

அதுவரை செயல்படாத நீரூற்று…அன்று செயல்பட்டது.அன்று வரை பணிக்கு தாமதமாய் வந்த கலெக்டர் அலுவலக பணியாளர்கள்…அன்று சற்று முன்னதாகவே வந்திருந்தனர்.எல்லா பணிகளும் இயந்திர கதியில் நடந்து முடிந்திருக்க….

தேனி மண்ணில் காலை எடுத்து வைத்தாள் கவி பாரதி….மாவட்ட ஆட்சியராக.

ஏதோ அங்கு இறங்கியவுடன் அவளுள் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது. ஏதோ உரிய இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாய்…என்று உள் மனம் சொல்வதைப் போல் ஒரு தவிப்பு.

அனைவரும் வாழ்த்து தெரிவிக்க…அதை சிரித்த முகமாய் பெற்றுக் கொண்டவள்….தனது அறைக்கு சென்று….அந்த இருக்கையை வணங்கியவள்…ஒரு நிமிர்வுடன் அதில் அமர்ந்தாள்.

அடுத்து செய்ய வேண்டிய வேலைகள்….அவள் முன் விரிய….அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இறங்கினாள்.

அங்கிருந்த உதவியாளரை அழைத்தவள்…..சில அலுவல் சம்பந்தப்பட்ட உத்தரவுகளை இட….அவரும் தலையை ஆட்டிக் கொண்டு சென்றார்.

“மேடம் உங்களைப் பார்க்க எம்.எல்.ஏ…,கட்சிக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க..!” என்று அவளின் உதவியாளர் சொல்ல..

“உள்ள அனுப்புங்க..!” என்றாள்.

வாயெல்லாம் பல்லாக…முகத்தில்….நான் நல்ல அரசியல்வாதி இல்லை என்ற முத்திரையுடன் உள்ளே நுழைந்தனர்.

“வணக்கம் மேடம்..!”

“வணக்கம்..! உட்காருங்க..!” என்றாள்.

“மேடம் இந்த மாவட்டத்துக்கு புதுசா வந்திருக்கிங்க…!அதான் ஒரு வாழ்த்து சொல்லலாம் என்று…!” என்று பொக்கேயை நீட்ட..

“நன்றி…! அங்க வச்சிடுங்க..!” என்று டேபிளைக் காட்ட…அதில் முகம் சுருங்கியவர்களாய்….அவள் சொன்னபடி செய்தனர்.

“அப்ப நாங்க வரோம்…இனி நாம அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும்..!” என்று அவர்கள் சொல்ல..

“நல்லது…அவசியம் ஏற்பட்டால் சந்திப்போம்..!” என்று வாயிலைப் பார்க்க..

“கிளம்புங்கள்..!” என்று பார்வையால் சொல்வதைப் போல் இருந்தது.

அவர்கள் சென்றவுடன்..”முதல் நாளேவா..?” என்று ஆயாசமாக இருந்தது.

“மேடம்…இன்னொருத்தர் உங்களைப் பார்க்க வெயிட் பண்றார்…” என்று அவர் மீண்டும் வந்து சொல்ல…

“அனுப்புங்க..!” என்றாள்.

புயலாய் உள்ளே நுழைந்தான் சாரதி.அவனை அங்கு அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் பார்வையிலேயே தெரிந்தது.

“வெல்கம் மேடம்…” என்றான் சாவகாசமாய்.

அவள் அமைதியாய் அவனைப் பார்க்க…

“என்னை இங்க எதிர்பார்க்கவில்லை என்று உங்கள் பார்வை சொல்லுது…எதையும் எதிர்பார்க்காம செய்றவன் தான இந்த சாரதி…அதை சீக்கிரம் புரிஞ்சுக்குவிங்க…” என்றான் ஆழ்ந்து பார்த்தபடி.

“சரி..அப்ப பார்க்கலாம்…” என்றாள் சாவகாசமாய்.

அவளின் அந்த பதில்..அவனை மேலும் எரிமலையாய் கொழுந்து விட்டு எறிய வைக்க…அதை தன்னுள் மறைத்தவனாய்….

“பார்க்கத்தானே போறீங்க..!” என்ற மர்ம சிரிப்புடன் சென்றான் சாரதி.

 

தடுமாறி  போனேன்  அன்றே

உன்னை  பார்த்த  நேரம்

அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்

நெஞ்சின்  ஓரம்

ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே

உள்ளம்  கேள்வி  கேட்கும்

ஆனாலும்  நெஞ்சம்  வந்து

நேரத்தை  நேசிக்கும

 

 

 

 

Advertisement