Advertisement

மலர் 3:

கவியின் வார்த்தைகளைக் கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க…..அவர்களின் முகத்தில் குழப்பத்தைக் கண்ட கவிபாரதி நிம்மதியாக உணர்ந்தாள்.

“இதென்ன புதுசா ஒரு குண்டைத் தூக்கிப் போடுறிங்க…? இதைப் பத்தியெல்லாம் எங்ககிட்ட முன்னாடியே சொல்லலையே…” என்றார் சாரதியின் அம்மா சந்திரா.

விஜயனுக்கும்,தனத்திற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. கவி இப்படி போட்டு உடைப்பாள் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை. எப்படியாவது தன்மையாக அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று தான் அவர்களும் நினைத்திருந்தனர்.

இப்பொழுது அவர்களின் முகத்தையே அவர்களால் பார்க்க முடியவில்லை. பதில் பேச முடியாமல் நிற்க…

“உங்களைத்தான் கேட்கிறோம்…! உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்ததை ஏன் எங்களிடம் இருந்து மறைச்சிங்க…?” என்று அவர் மீண்டும் அதே புள்ளியில் நிற்க…

“அதனாலென்ன…? எனக்கு பிரச்சனையில்லை.அவங்க முதல் வாழ்க்கையைப் பற்றி எனக்கு எந்த கவலையுமில்லை….உண்மையை மறைக்காமல்…இத்தனை பேர் முன்னிலையில் சொல்ல யாருக்கு தைரியம் வரும்…அதுக்காகவே எனக்கு இவங்களை ரொம்ப பிடித்திருக்கு..” என்று சாரதி சொல்ல…

சாரதியை தீ பார்வை பார்த்தார் அவனுடைய அன்னை.அனைவர் முன்னிலையிலும் அவனை திட்ட முடியாமல் அவர் பல்லைக் கடிக்க…

“இதோ பார் சாரதி…கொஞ்ச நேரம் பேசாம இரு…அதுக்காக நீ அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா…?முதல் புருஷன் எதுக்காக விவாகரத்து செய்தானோ என்னவோ…?” என்று அங்கிருந்த ஒரு கிழவி சொல்ல…

“அதானே..! என்ன நடந்ததோ….எதுக்காக விட்டுட்டு போனானோ… உனக்கு என்னடா குறைச்சல்….உனக்கு இதைவிட நல்ல பொண்ணா பார்த்து நான் கட்டி வைக்கிறேன்…” என்று அவனின் அன்னை சமயம் பார்த்து பேச…

“எனக்கு கவிபாரதியை தான் பிடித்திருக்கு..!” என்றான் மீண்டும் சாரதி.

“எங்க யாருக்கும் இந்த பெண்ணை பிடிக்கலை….” என்றார் அவன் அன்னை.

சாரதி செய்வதறியாது வெற்றியை துணைக்கு அழைக்க…அவனோ… எனக்கும் இதுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் அமர்ந்திருந்தான்.

“நாங்க சொல்றதையும் நீங்க கொஞ்சம் கேட்கணும்…எங்க பொண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆனவள் என்பதை உங்களிடம் மறைத்ததற்காக எங்களை மன்னித்து விடுங்கள்…ஆனா எங்க பொண்ணு ஒரு நாள் கூட வாழ்க்கை நடத்தவில்லை…” என்றார் தனம்.

“நீங்க என்ன சொன்னாலும்..ஏற்கனவே கல்யாணம் ஆன ஒரு பெண்ணை எங்களால் மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாது….” என்று சாரதியின் அம்மா திட்டவட்டமாக மறுக்க…

“அம்ம்மா…” என்று அதிர்ந்தான் சாரதி.

“நீங்க எங்க அம்மா சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்… எனக்கு உங்க பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. மனைவின்னு ஒருத்தி வந்தா அது கவிபாரதி தான்…” என்றான் சாரதி உறுதியாக.

“அதுதான் சாரதிக்கே பிடித்து போய்விட்டதே சந்திரா….இன்னமும் என்ன யோசனை…பெண்ணைப் பார்த்தால் தங்க விக்கரகம் போல் இருக்கிறாள்…. நல்ல வேலை,நல்ல குடும்பம்…இதற்கு மேல் என்ன வேண்டும்…” என்று வெற்றியின் அன்னை துர்கா சொல்ல…

“இல்லை அண்ணி….என் மனசுக்கு இது சரியா வரும் என்று தோணலை..” என்றார் சந்திரா.

“அதெல்லாம் சரியா வரும்….வாழப் போறவங்களுக்கு பிடித்தா சரி தான்…நீ சும்மா இரு…!” என்று அதட்டிய துர்கா…

“அதெல்லாம் சரியா வரும்…! சந்திரா இதுக்கு சம்மதம் சொல்லுவா…! பையனுக்கும் பெண்ணை பிடித்து விட்டது…அதனால் மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்..” என்று துர்கா சொல்ல…சாரதி அவரை நன்றி பார்வை பார்த்தான்.

விஜயனுக்கும்,தனத்திற்கும் மனம் குளிர்ந்து போக….கவியைப் பார்த்தனர். அவளோ வெற்றியின் மீதிருந்த பார்வையை திருப்பவேயில்லை.

“ரொம்ப சந்தோஷம்ங்க…! உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு…” என்று விஜயன் சொல்ல…

“என்னம்மா உனக்கும் சாரதியை பிடிச்சிருக்கு தானே..!” என்ற துர்கா கவியைப் பார்க்க…அவள் பார்வை இருந்த திசையைப் பார்த்தவர்.. திகைத்தார்.

கவியோ ஆடாமல் அசையாமல் நிற்க…

“பாருங்க அண்ணி…! நீங்க கேட்குறிங்க…அவள் எவ்வளவு திமிரா நிற்கிறான்னு..” என்று சந்திரா புகைய…

“அம்மா…ப்ளீஸ்..!” என்று அன்னையை அடக்கினான் சாரதி.

“கவி உன்னைத்தாம்மா….மாப்பிள்ளையை உனக்கு பிடித்திருக்கா…?” என்று விஜயன் கேட்க….

“பிடிச்சிருக்கு…!” என்று அவள் சொல்ல…பெற்றவர்கள் சந்தோஷமாய் அவளைப் பார்க்க…சாரதி மகிழ்ச்சியின் உச்சத்தில் அவளைப் பார்க்க…

“இவரைத்தான் பிடிச்சிருக்கு…!” என்று வெற்றியை கை காட்டினாள் கவி.

அவளின் பதிலில்….அனைவரும் அதிர்ச்சியாய் பார்க்க….சாரதியோ கோபத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்க…வெற்றியோ முகம் இறுகினான்.

“உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா….இப்படி ஒரு பதிலை சொல்லுவ…செய்யப்போறது இரண்டாவது கல்யாணம்…இதுல இவ்வளவு திமிரா…?” என்று சந்திரா கத்த…

துர்காவும்,ரத்தினமும் அதிர்ந்து விழித்தபடி அமர்ந்திருந்தனர்.”என்ன சொல்கிறாள் இந்த பெண்..?” என்று துர்கா மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்க….

“ஆமா…எனக்கு இவரைத்தான் பிடிச்சிருக்கு…!” என்றாள் மீண்டும் நிமிர்வாய்.

“எழுந்திரு சாரதி…இதுக்கு மேல இங்க இருந்தா அவமானம் தான் மிஞ்சும்…ஒரு பொம்பளைப் பிள்ளைக்கு இவ்வளவு திமிர் ஆகாது.அதுவும் கொஞ்சமாவது பயம் இருக்கான்னு பாரேன்..இவ்வளவு பேர் முன்னாடியும் எவ்வளவு தைரியமா சொல்லுறா…?” என்று சந்திரா கத்த…

சாரதியோ அவமானத்தில் முகம் கருத்தான்.அந்த நொடியிலேயே வெற்றியை ஒரு வெறுமைப் பார்வை பார்த்தான்.

“ஏய்…!என்ன நினைச்சுகிட்டு இருக்க….? என்று உருமிய வெற்றி….உன்னை எனக்கு பிடிக்கலை..” என்றபடி சட்டென்று வெளியே எழுந்து சென்று விட்டான்.

“என்ன கவி இது..?” என்று விஜயன் அதட்ட..

“அப்பா..! எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு…!இது தான் என் விருப்பம்…” என்றவள்…சாரதியின் குடும்பத்தாரிடம் திரும்பினாள்.

“ஏன் பொண்ணுன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா..? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க என்னை பிடிக்கவில்லை என்று சொன்ன போது நான் அமைதியாகத்தானே இருந்தேன்.அதே வார்த்தையை நான் சொல்லும் போது உங்களுக்கு உள்ளுக்குள் எரிகிறதோ…!

என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது. அதை யார் கைகளிலும் ஒப்படைக்க நான் தயாராக இல்லை. இறுதிவரை வாழப் போவது நான்.விருப்பமற்ற ஒரு வாழ்க்கையில் என்னைப் பிணைத்துக் கொள்ள நான் ஒரு போதும் விரும்பியதில்லை.அதனால் என்னை பழி சொல்வதை விட்டு விட்டு…உங்கள் மகனுக்கு ஒரு நல்ல பெண்ணாய் பாருங்கள்..!நான் பேசிய விதம் தவறாக இருக்கலாம்…ஆனால் பேசிய வார்த்தைகள் உண்மை…சாரி மிஸ்டர் சாரதி…!” என்றபடி உள்ளே சென்று விட்டாள்.

மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது அவ்விடம்.சாரதியின் நரம்புகள் புடைக்க….கோபம் தலைகேறியது.

ஒரு நிமிஷம்..! என்று அவளை நிறுத்தியவன்…”எப்படியும் நான் உன்னை அடைந்தே தீருவேன்..!” என்றான் வெறியாய்.

“நீங்கள் ஆசைப்பட்டவுடன் அடைவதற்கு நான் என்ன கடையில் விற்கும் பொருளா என்ன..? என் விருப்பம் இன்றி என் வாழ்வில் எதுவும் நடக்காது….நடக்க இந்த பாரதியும் விட மாட்டாள்…” என்றாள்.

“திமிர் பிடித்தவள்…இப்படித்தான் முதல் புருஷன்கிட்டையும் பேசியிருப்பா.. அதான் இவளை இவ வீட்டுக்கே அனுப்பிட்டான் போல இருக்கு…” என்று சந்திரா வார்த்தையை விஷமாய் விட…

“ஆமாம் நான் திமிர் பிடித்தவள் தான் உங்களின் கண்ணோட்டத்திற்கு….. உங்கள் பார்வைக்கு நான் அப்படி தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல… எப்படியிருந்தாலும்..பெண்களுக்கு நியாயமான திமிர் இருப்பதில் தவறில்லை.உங்கள் பையனுக்கு பிடித்தால் போதுமா..? எனக்கு பிடிக்க வேண்டாமா..?” என்றாள்.

“இதில் உன்னுடைய விருப்பம் ஒரு கேடா…? யார் திருமணம் செய்ய முன் வருவாங்க உன்னை…? என் பையன் சரி என்று சொன்னதே உன்னுடைய அதிர்ஷ்டம்…” என்று சந்திராவும் எகிற..

“நான் யாரிடமும் வாழ்க்கை பிச்சை கேட்கவில்லை.அப்படி ஒரு வாழ்க்கையும் எனக்கு தேவையில்லை.நான் நானாக இருக்க ஆசைப் படுகிறேன்…உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி..!” என்றபடி யாரையும் சட்டை செய்யாமல் அறைக்குள் சென்று மறைந்தாள்.

விஜயனும்,தனமும் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதி காக்க…”நல்லா வளர்த்து வச்சிருக்கிங்க பெண்ணை..” என்ற சந்திரா…

“வாடா…இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் காணாமல் போய்விடும்…உனக்கு என்ன குறைச்சல்…ராணி மாதிரி பொண்ணா நான் உனக்கு பார்க்கிறேன்..!” என்று கூறியவர் அவனின் கை பிடித்து வெளியே அழைத்து செல்ல…

ரத்தினமும்,துர்காவும் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தனர்.ஒரு பக்கம்… அவள் வெற்றியை பிடித்திருக்கிறது என்று சொன்னது சந்தோசம் என்றாலும்…சாரதியை வேண்டாம் என்று சொன்னது வருத்தமாகத்தான் இருந்தது.அவனும் அவர்களின் பிள்ளை போன்றவன் தானே..!”

“மனசைப் போட்டு குழப்பிக்காதிங்க…! எல்லாம் நல்ல படியா நடக்கும்..” என்று தனத்தின் கைகளைப் பிடித்து துர்கா ஆறுதல் சொல்ல..

“நீங்க..?” என்று தனம் இழுக்க…

“உங்க பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்ன பையனோட அம்மா….இவர் அவனோட அப்பா..” என்று சொல்ல..

“மன்னிச்சுடுங்க..!ஏதோ என் பொண்ணு தெரியாம…” என்று விஜயன் இழுக்க…

“பரவாயில்லை விடுங்க…அதைப் பேச இது சரியான நேரமில்லை…நாங்க வரோம்..!” என்றபடி கிளம்பி சென்றனர்.

கவி தனது அறையில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே பார்க்க… இறுகிப் போன முகத்துடன் நின்றிருந்தான் வெற்றி.அவன் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளும் இல்லை.

அப்படியே அவள் பார்த்துக் கொண்டே இருக்க….சட்டென்று மேலே பார்த்தான் வெற்றி.இருவரின் பார்வைகளும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க….கவியும் நேர்கொண்ட பார்வையாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே வந்த சாரதிக்கு இந்த காட்சி விழ….”ரொம்ப நல்லா இருக்குடா… உள்ள பிடிக்காத மாதிரி சொல்லிட்டு வந்துட்டு…வெளிய வந்து உங்க காதல் லீலையை அரங்கேற்றம் பன்றிங்களோ..?” என்றான் எகத்தாளமாய்.

அவனின் வார்த்தைகளில் மீண்டவன்….”என்ன சாரதி இது…என் மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை…!” என்றான் வெற்றி.

“இல்லாமத்தான் இந்த பார்வை பார்க்குறியோ..!நீயெல்லாம் என்னடா நல்ல நண்பன்…துரோகி…!” என்றான் வார்த்தை கடித்து துப்பியவாறு.

“வார்த்தையை அளந்து பேசு சாரதி.நான் எந்நாளும் துரோகியாக இருக்க மாட்டேன்….அந்த பெண் விருப்பம் இல்லை என்று சொல்லும் போது…நான் என்ன செய்ய முடியும்…” என்றான் வார்த்தைகள் இறுகியவனாய்.

“என்னைப் பிடிக்கவில்லை என்று மட்டுமா சொன்னா…உன்னைப் பிடித்திருக்கிறது என்று சேர்த்து தானே சொன்னா….இதிலிருந்து தெரியலை உன்னோட லட்சணம்…உன்னை மாதிரி நாலு பேரை தாண்டா கூட கூட்டிட்டு போகணும்…” என்றான்.

“வேண்டாம் சாரதி…வாய் இருக்கிறது என்பதற்காக் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமில்லை.அது அந்த பெண்ணோட தனிப்பட்ட விருப்பம்..இப்பவும் சொல்றேன் எனக்கு அந்த பெண்ணைப் பிடிக்கவில்லை..அவளுக்கு பிடித்தமானவனாக மாறி..நீயே அவளை திருமணம் செய்து கொள்…என்னை ஆளை விடு..நட்புக்கு நல்ல மரியாதை கொடுத்து விட்டாய்…” என்றவன்…ரத்தினமும்,துர்காவும் வர வாயை மூடிக் கொண்டான்.

“போகலாமா…” என்றவன் சாரதியை சட்டை செய்யாது….விருட்டென்று காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

சாரதியின் முகம் மீண்டும் அவமானத்தில் சிவக்க….அதே கோபத்துடன் மேலே பார்த்தான்.

கவி நின்றிருந்த இடம் காலியாக இருக்க….”என்னைக்கா இருந்தாலும்…நீ எனக்கு தான்….உன்னை அடைந்தே தீருவேன்….” என்ற வக்கிர குணம் தலை தூக்க..நிமிடத்தில் அவனுடைய இயல்புகள் மாறிப் போனது.

மனிதன் ஒரு நூலிழையில் தான் நல்லவனாகவும்,கெட்டவனாகவும் மாறுகிறான்.அந்த வகையில் அந்த இடத்தில் தடம் மாறினான் சாரதி.

அவள் வேண்டாம் என்று சொன்னதை விட…வெற்றியை வேண்டும் என்று சொன்னதே..அவன் தன்மானத்தை தட்டி எழுப்பியது.

சேர்ந்து வாழ இருவரின் விருப்பமும் தேவை என்பதை சாரதியும் மறந்து போனான்…அதே சமயத்தில் கவியும் மறந்து போனாள்.

மனதில் பட்டதை பேசலாம்…ஆனால் மனதில் பட்டதையெல்லாம் பேசக் கூடாது என்பதை இருவரும் மறந்து போயினர்.

அவளுக்கு அவளுடைய விருப்பம் பெரிதாகப் பட்டது.சாரதிக்கு அவனுடைய விருப்பம் பெரிதாகப் பட்டது.இடையில் வெற்றியின் நிலை..??

காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை…அவனுடைய பெற்றோர்களால்.

“ரிஷி அந்த பொண்ணு சொன்னதைப் பற்றி என்ன நினைக்கிற..?” என்றார் துர்கா தைரியமாக.

வெற்றியோ பதில் சொல்லாமல் அழுத்தமாய் காரை ஓட்ட….

“வெற்றி உன்னைத்தான்….உனக்கு அந்த பெண்ணை பிடிச்சுருக்கா…நாங்க வேணா பேசி முடிக்கவா…பட்டு பட்டுன்னு பேசினாலும்…அந்த பெண் பேசியது எதுவும் தவறில்லை..” என்றார் ரத்தினம்.

“ஆமாங்க…! அந்த பொண்ணுகிட்ட என்ன ஒரு நிமிர்வு…கண்களில் என்ன ஒரு நேர்மை….எனக்கு பார்த்த உடன் பிடித்து விட்டது..” என்றார் துர்கா.

இருவரும் பேசிக்  கொண்டே வர..பதில் சொல்ல வேண்டியவனோ..எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான்.அவன் மனதில் சாரதி பேசிய வார்த்தைகள் வலம் வந்து கொண்டிருந்தது.

தன்னுடைய நட்பு….கற்பிழந்து விட்டதாக அவன் எண்ணினான். அதுவும் அவளால் என்று என்னும் போது…அவனுடைய கோபம் முழுவதும் அவள் மேல் திரும்பியது.

“எவ்வளவு தைரியம் இருந்தா…அவ்வளவு பேர் முன்னிலையில் என்னைக் கை காட்டுவா…! கொஞ்சம் கூட பணிவு என்பதே கிடையாது…” என்று மனதிற்குள் அவளை முழுதாய் வெறுத்தான் வெற்றி.

“வெற்றி..!” என்று துர்கா மீண்டும் அழைக்க..

“எனக்கு அந்த பெண்ணை சுத்தமா பிடிக்கலை…அப்ப சொன்னது தான் இப்பவும்…எனக்கு திருமணத்தில் சுத்தமா விருப்பமில்லை.இது தான் என் இறுதி பதில்..” என்றான் தீர்க்கமாய்.

“கேட்டியா துர்கா எப்படி பேசுறான்னு…ரெண்டு புள்ளைங்க பச்சை மரமா நிற்குது…இவன் என்னடான்னா பட்ட மரமா நிற்குறான்.நம்ம பேச்சைக் கேட்க கூடாது என்ற முடிவோட இருக்கான்….” என்று ரத்தினம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த..அதற்கும் அவனுடைய மவுனம் தான் பதிலாய் கிடைத்து.

அங்கே கவிபாரதியும் நிம்மதியின்றி தவித்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன செய்துவிட்டாய் கவி…!எப்படி சொல்ல முடிந்தது உன்னால்… ஒரு நிமிடம் யோசித்தாயா..?’ என்று மனம் கேட்க…

“என்ன யோசிக்க வேண்டும்…?” என்றாள் மனதிடம்.

‘உன் நிலைமை என்ன…? உன் வாழ்வில் நடந்தது என்ன..?இப்போ நீ நடந்து கொள்ளும் முறை என்ன…?’ என்று பல கேள்விகளை மனம் கேட்க…எதற்கும் பதிலில்லை அவளிடம்.

சாரதியை வேண்டாம் என்று சொல்ல வாய் திறந்த அவளுக்கு… வெற்றியை நோக்கி தன் கை எப்படி நீண்டது என்று தான் தெரியவில்லை.

‘அவனுக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொன்ன போது கூட ஏன் எனக்கு கோபம் வரவில்லை….இந்த நிலையில் எனக்குள் இப்படி ஒரு ஆசை வரலாமா…?’ என்று மனதிற்குள் விரக்தியாய் பேசிக் கொண்டாள்.

‘என்னதான் சாரதியிடம் வாய்கிழிய பேசினாலும்…நான் ஏற்கனவே திருமணம் ஆனவள் தானே..! அதை யாராலும் மறுக்க முடியாதே…! எனக்குள் ஆசை வந்ததே தவறு…அதுவும் இந்த நிலையில் வந்தது அதை விடவும் தவறு…’ என்று தனக்குத் தானே அறிவுரை சொல்லிக் கொண்டாள்.

“கவி..” என்று விஜயன் வர…

“சொல்லுங்கப்பா….” என்றாள் விரக்தியாய்.

“நீ இப்படி செய்வேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைமா..” என்றார்.

“வேற எப்படி எதிர்பார்த்திங்க…?, என் மனதில் பட்டதை சொன்னது தவறா….இல்லை அப்படி சொல்லும் தகுதி எனக்கு இல்லையா..?” என்றாள்.

“நான் அப்படி சொல்ல வரவில்லை கவி….!அந்த பையனை பிடித்திருக்கிறது என்று உணர்ந்து தான் சொன்னாயா…?” என்றார்.

“உணராமல் சொல்வதற்கு நான் என்ன சின்ன பிள்ளையா..?” என்றாள்.

“இது நடக்காது கவி..அந்த பையனுக்கு உன்னை பிடிக்கவில்லை…” என்றார்.

“அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.பிடித்திருக்கிறது என்று தான் சொன்னேன்…அவர் சம்மதிக்க வேண்டும்,திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை..” என்றாள்.

சத்தியமாக விஜயனுக்கு ஒன்றும் புரியவில்லை.என்ன சொல்கிறாள் இந்த பெண்…? என்று குழம்பினார்.

“நான் நாளைக்கு கிளம்ப வேண்டும்..!” என்றாள்.

“இந்த நேரத்தில்…!” என்று அவர் தயங்க…

“இப்ப ஒன்னும் நடந்திடலை..இதை ஏன் பெரிசு பண்றிங்க…?இப்ப எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு நான் அழுதேனா…?எனக்கு என் துறையில் நான் நினைத்தை சாதிக்க வேண்டும்…சராசரி பெண்ணாய் வீட்டிற்குள் முடங்குவதில் எனக்கு விருப்பமில்லை… சோ..ப்ளீஸ்..” என்றாள்.

“சரிம்மா…உனக்கு சரின்னு தோணுவதை செய்..” என்றபடி வெளியேறினார்.

“என்னங்க சொன்னா..?” என்றார் தனம்.

“இந்த ஜென்மத்தில் அவள் நம்மை மன்னிக்க போவதுமில்லை… உன்னுடன் பேசப் போவதுமில்லை…” என்றார் விஜயன்.

“என்னங்க..!” என்ற தனத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியேற…

“அழாத தனம்…என்ன நடக்க வேண்டும் என்று இருக்கோ அதான் நடக்கும்…. என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான்…” என்றபடி நகர…தனத்திற்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.

வெற்றியின் அடக்கப்பட்ட கோபமும்…சாரதியின் அவமான உணர்வும்…கவியின் குழப்பமும்….இனி நடக்க போவது என்ன…? இவர்கள் வாழ்வில்…கடவுள் நடத்த போகும் சோதனைகள் தான் என்ன…?

இங்கே கடல்..

அங்கே நதி…

இணைந்திட நடை போடுதே..!

அங்கே வெயில்..

இங்கே நிழல்…

விழுந்திட இடம் தேடுதே…!

 

 

 

 

 

 

 

 

Advertisement