Advertisement

மலர் 2:

 

பாடலைக் கேட்ட வெற்றியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை யாராலும் வரையறுக்க முடியாது.நினைவுகள் என்ற ஒன்றையே அவன் நினைப்பதில்லை.இருந்தாலும் அவை அவனையே சுற்றி கழுகாய் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

நடந்து முடிந்த எந்த செயலுக்கும் அவன் பொறுப்பாக மாட்டான்.ஆனால் பொறுப்பாளியாக ஆக்கப்பட்டிருந்தான்.அதை விபத்து என்று ஒதுக்கி விடவும் முடியாது….நினைவு என்று வைத்துக் கொள்ளவும் முடியாது. ரணப்பட்டு இருந்த அவன் மனதை…மேலும் ரணப்படுத்தியது அந்த பாடல் வரிகள்.

இப்பொழுதெல்லாம் அவன் பாடல் கேட்பதையே விட்டுவிட்டான்.இசை அவனுக்கு மருந்தாக இருப்பதற்கு பதிலாக…அவனின் நினைவுகளுக்கு விருந்தாக இருந்தது.அதனால் தானோ என்னவோ ….இசையையும் வெறுக்கத் தொடங்கினான்.

சுற்று வேலியிட்ட பயிர்களை அண்டுவது எவ்வளவு கடினமோ…அந்த அளவிற்கு தன்னை சுற்றி வேலி அமைத்திருந்த வெற்றியை நெருங்குவதும் கடினம்.

இந்த மனநிலையில் வீட்டிற்கு செல்வது கடினம் என்பதால்..அப்படியே அங்கிருந்த வரப்பில் அமர்ந்தான்.

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தடுமாறும் இளைஞன் அல்ல அவன்.ஆனால் அவனும் தடுமாறித்தான் போனான்…சில விஷயங்களில்.

தன்னை மறந்து அமர்ந்திருந்தவனின் தோளில் யாரோ கை வைக்க….சட்டென்று உதராமல்….

“வாடா சாரதி..!” என்றான்.

“எப்படிடா….திரும்பாமலேயே கண்டு பிடித்தாய்..?” என்றான் சாரதி.

“இதென்ன பெரிய வித்தையா…..நண்பனின் தொடுகை தெரியாத அளவிற்கு என் நட்பு மோசமாக இல்லை…” என்றான்.

“அது சரி….ஆமா இங்க என்ன பண்ற…? பார் மீண்டும் மழை வரும் போல் இருக்கிறது…!” என்றான் சாரதி.

“ம்ம்ம்…கிளம்பனும் சாரதி…உன் தொழில் எல்லாம் எப்படி போகுது…? இப்பதான் உனக்கு எங்களைப் பார்க்க நேரம் கிடைத்ததா…?” என்றான் வெற்றி.

“டேய்..! இதெல்லாம் அநியாயம்…நான் நேற்றே வீட்டுக்கு வந்தேன்…சார் நீங்க தான் இல்லை…நீங்க பிசியா இருக்கிங்கன்னு சொன்னாங்க..!” என்றான்.

“ஆமாடா…அறுவடை என்பதால் கொஞ்சம் வேலை அதிகம்…!” என்றான்.

ஏனோ அந்த வரப்பில் நண்பன் அருகில் இருக்க….அமர்ந்திருப்பதில் மனதினில் சிறு அமைதி நிலவுவதை உணர்ந்தான் வெற்றி.

“தேங்க்ஸ்டா….” என்றான் சாரதியிடம்.

“எதுக்குடா..?” என்று புரியாத பார்வை பார்த்தான் சாரதி.

“ஒண்ணுமில்லை…சும்மாதான்..” என்று மழுப்பியவன்….”சார் சீக்கிரம் குடும்பஸ்தன் ஆகப் போறீங்க போல…!” என்றான் சன்னமான சிரிப்புடன்.

“அதையேண்டா கேட்கிற…? கல்யாணம் செய்துக்கோ…கல்யாணம் செய்துக்கோ….என்று அம்மா தினமும் ஒரே நச்சரிப்பு.அது தான் சரி என்று தலையாட்டினேன்….உடனே தீயா வேலை செஞ்சுட்டாங்க…!” என்றான் சாரதி.

“அதில் உனக்கு வருத்தம் இருப்பதைப் போல் தெரியவில்லையே…?” என்றான் வெற்றி.

“உண்மைதான் வெற்றி…எனக்கு அவள் புகைப்படத்தை பார்த்ததில் இருந்து…ஏனோ அவள் நினைவு.அது எப்படின்னு சொல்ல முடியலை.ஆனா எனக்கு மனைவின்னு ஒருத்தி வந்தா அது அவதான் அப்படின்ற முடிவுக்கே வந்துட்டேன்…” என்றான்.

“பாருங்கப்பா…ரொம்ப மயங்கிப் போயிருக்க போலவே…?” என்று வெற்றி யோசனையாய் சொல்ல…

“மயக்கம் எல்லாம் இல்லை வெற்றி…என் மனதில் இருப்பதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது…அதான் உடனே உன்னைத் தேடி வந்துட்டேன்…!” என்றான்.

“டேய் உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா…? கண்டிப்பா உன் மனசு போலவே நடக்கும்…!” என்றான் வெற்றி.

“சரி…என் வாழ்க்கை இருக்கட்டும்…நீ எப்போ திருமணம் செய்து கொள்ள போகிறாய்..?” என்றான்.

“இந்த ஜென்மத்தில் இல்லை சாரதி.பிளீஸ் வேற பேச்சை பேசு…” என்று இறுகிக் கொண்டான்.இனி உயிரே போனாலும் அவன் வாயைத் திறக்க மாட்டான் என்று சாரதிக்குத் தெரியும்.அதனால் நண்பனின் மனநிலை எண்ணி அமைதி காத்தான்.

சாரதிக்கு எப்போதுமே தான் நினைத்து நடந்தே ஆகவேண்டும்.அவன் ஒரே பையன் என்பதால் வந்த குணம் அது.அதற்காக அவன் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டான்.

ஆனால் வெற்றியோ…எப்பொழுதும் தன்னை மீறி ஆசைப் பட மாட்டான். மற்றவரின் மனதிற்கு மதிப்பு கொடுப்பான்.

இவர்கள் இருவரும் இரு வேறு துருவங்களாக இருந்தாலும்….ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றிணைந்து….சில கோடுகளில் அவர்கள் நட்பு வளர்ந்து….இன்று ஒன்றாய் பிணைக்கப்பட்டிருந்தது.

நிறை குறைகளை விடுத்து…சாரதியை நல்ல நண்பனாகவே ஏற்றுக் கொண்டான் வெற்றி.ஆனால் சில விஷயங்களில் சாரதியைக் கூட அவன் அனுமதிப்பதில்லை.

நட்பை மீறிய ஒரு விஷயம் அவன் மனதில் இருக்கிறது என்றால்….அதன் முக்கியத்துவத்தை யார் அறிவார்.

படைத்தவனின் கணக்கில்….வெற்றி ஒரு தொடர் அத்யாயம்… சாரதியோ…ஒரு சிறு அத்யாயம்..அவ்வளவே…!

“ஆனா….. என்ன செய்வியோ தெரியாது…பெண் பார்க்க செல்லும் போது…நீயும் கண்டிப்பாய் என்னுடன் வர வேண்டும்..” என்று உறுதியாய் சொன்னான்.

“சரி…கண்டிப்பா வரேண்டா….” என்று வாக்குக் கொடுத்தான் வெற்றி.

“கிளம்பலாமா…?” என்று சாரதி கேட்க….

“ம்ம் கிளம்பலாம்…” என்றபடி எழுந்தனர் இருவரும்.

இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை…தாங்கள் இணைந்திருக்கும் கடைசி தருணம் இது தான் என்று…

ஒரு வாரத்திற்கு பிறகு….

தனது அறையில் முக்கியமான கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கவி பாரதி.

இடம் மாறுதலுக்காக…சென்னை சென்ற விஷயம் அவளை அடியோடு மாற்றியிருந்தது.அவள் எதிர்பார்க்காத ஒரு இடத்திற்கு அவளுக்கு இடம் மாறுதல் அளிக்கப்பட்டிருந்தது.

அதை எண்ணி மனதிற்குள் வெகுவாய் கலங்கியவள்…மறந்தும் அதை வெளிக்காட்டவில்லை.

“அக்கா….உன்னை அப்பா கூப்பிடுறார்…!” என்று கிஷோரின் வார்த்தைகள் காதில் விழ…பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை…சில நிமிடங்களில் மூடி வைத்தாள்.

“சொல்லுங்கப்பா…!” என்றபடி தந்தையின் அருகில் சென்று அமர…

“வேலையிருக்காடா…” என்றார் விஜயன்.

“அதெல்லாம் இல்லைப்பா…..எல்லாம் முடிந்து விட்டது….சொல்லுங்க என்ன விஷ்யம்ப்பா…இல்லைன்னா நீங்க இந்த நேரத்திற்கு கூப்பிட மாட்டிங்களே..!” என்றாள்.

அவள் சொல்வது உண்மைதான்..எப்பொழுதும் அவள் கவியை தொந்தரவு செய்ய மாட்டார்.அதற்கான அவசியத்தையும் அவள் கொடுக்க மாட்டாள்.

இன்று தான் கூப்பிட்டவுடன்…அவள் புரிந்து கொண்டது அவருக்கு வியப்பைத் தர…

“உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் கவிம்மா..” என்றார்.

“ம்ம்…பேசுங்கப்பா….!” என்றாள் சாதாரணமாய்.

“அது வந்து கவி…நீ கோபப் படக் கூடாது..!” என்றார்.

“கண்டிப்பா…கோபம் வரும் படியான ஒரு விஷயத்தை தான் சொல்லப் போறிங்கப்பா…”என்றாள் முன்கூட்டியே கணித்தவளாய்.

“உன்னோட வாழ்க்கை பிரச்சனைம்மா…!” என்றார்.

“புரியுதுப்பா…ஏன் நாளைக்கு யாரும் என்னை பெண் கேட்டு வராங்களா என்ன..?” என்றாள் சாதரணமாய்.

“கவி….!” என்று அதிர்ந்தார் விஜயன்.

“அப்ப விஷயம் இது தான் இல்லையாப்பா…?” என்று அவள் கேள்வி தொடுக்க…

“எங்க நிலையில் இருந்து யோசித்து பாரு கவிம்மா…உன்னை இப்படிப் பார்க்க எங்களால் முடியவில்லை கவி….” என்றார் மனது தளர்ந்தவராய்.

“அவங்களுக்கு நடந்த உண்மை தெரியுமாப்பா..?” என்றாள்.

“இல்லைம்மா…சொல்லலை…அதற்கான சந்தர்ப்பத்தை அவங்க கொடுக்கலை…” என்றார்.

“சந்தர்ப்பம் எல்லாம் தானா வராதுப்பா…உண்மையை சொல்ல என்ன சந்தர்ப்பம்,தயக்கம்….?” என்று கேட்டவளுக்கு…அவரால் என்ன பதிலை சொல்லி விட முடியும்.

“அவங்களை நாளைக்கு வர சொல்லிட்டேன் கவிம்மா..!” என்றார்.

முடிவு செய்து..,அதை முடித்தும் விட்டு….என்னிடம் கேட்பது… அனுமதியா..? இல்லை அழைப்பா..? என்றாள் கவி.

அவர் பதில் பேச முடியாமல் மனைவியைப் பார்க்க..அதுவரை அவர்கள் உரையாடலை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த தனம்… இயலாமையுடன் கணவரை நோக்கினார்.

தன் தாயின் முகத்தை ஒரு நிமிடம் உற்று நோக்கியவள்…. ”வரட்டும்…. பார்ப்போம்…!” என்று விட்டேறியாய் சொன்ன படி…அங்கிருந்து செல்ல… அப்பொழுது தான் அவர்களுக்கு உயிரே வந்தது.

நடக்க போகும் விஷயம் அறியாமல்…அவளுக்கு நல்லது நடந்து விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் செல்ல…இதை தடுப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தாள் கவி.

எவ்வளவு தான் வேலை வேலை என்று அதனுள் புதைந்து கொண்டாலும்… அதையும் மீறிய சில துன்பங்களை அவளால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.

அவளிடம் இருந்த அழகுக்கு நிகராய் வைராக்கியமும் இருந்தது.எந்த விஷயத்திலும் அவள் பெண் என்று முடங்கியதில்லை.பெண்ணாக நடந்து கொள்ளும் இடத்தில்…பெண்மையின் இலக்கணமாகவே திகழ்ந்தாள்.

“அக்கா…!” என்று கிஷோர் அழைக்க…

“சொல்லுடா …!” என்றாள்.

“இல்லை…நீ ஏன் அம்மாவை மன்னிக்கக் கூடாது….? எனக்கு அவங்களைப் பார்க்கவே பாவமாய் இருக்கு…!” என்றான்.

“அவங்களை மன்னிக்கும் அளவிற்கு நான் பெரியவளும் இல்லை.அந்த அளவிற்கு அவர்கள் தாழ்ந்தும் போய்விடவில்லை.அதனால் இனியொரு முறை இப்படி பேசாமல் இருப்பது உனக்கு நல்லது..” என்றாள்.

“அப்ப உனக்கு என்ன தான் பிரச்சனை…அவங்களை விட்டுக் கொடுக்காம பேசுற…சில சமயம் நீயே அளவுக்கு மீறிய கடுப்பை காட்டுற…இதில் எந்த கவி பாரதி நிஜம்…யார் பொய்..!” என்றான்.

கேட்டுவிட்டான்…அவளை விட எட்டு வருடங்கள் சின்ன பையன்…சரியான இடத்தில்…சரியான கேள்வியைக் கேட்டுவிட்டான்.

“அப்படியெல்லாம் இல்லை கிஷோர்.உனக்கு புரியும் போது கண்டிப்பா புரியும்..” என்று மழுப்பினாள் கவி பாரதி.

“என்னவோக்கா…நீயும் சொல்ற…நானும் கேட்டுக்கிறேன்…” என்றவன்..

“ஆனா ஒன்னுக்கா…எக்காரணம் கொண்டும்…நீங்க இப்படியே இருப்பதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது…உனக்கு என்ன பிரச்சனை என்று இந்த தம்பிகிட்ட சொல்லு…நான் தீர்த்து வைக்கிறேன்..!” என்றான்.

“சரிடா பெரிய மனுஷா…ஒவ்வொரு நேரம் நீங்க…ஒவ்வொரு நேரம் நீ…எப்ப மரியாதையா பேசுவ..எப்ப காலை வாரி விடுவன்னு தெரியாம்மா நான் தான் முழிக்க வேண்டியிருக்கு..” என்றாள்.

“ஹி..ஹி…அது எப்படியோ வாய்ல வந்திடுதுக்கா…” என்றான் அசடு வழிந்தவனாய்.

“சரிங்க மை டியர் தம்பி…எனக்கு தூக்கம் வருது…இப்ப நீங்க இடத்தை காலி செய்தால்…நான் தூங்க வசதியாய் இருக்கும்..!” என்றாள்.

“ஓகே….தூங்குக்கா…குட் நைட்..” என்று சொல்லி அவன் கிளம்ப…

தூக்கம் வருகிறது என்று சொல்லி அவனை அனுப்பியவளுக்கு…தூக்கம் தூர சென்றிருந்தது.

‘கவி..! இன்னும் எத்தனை நாளைக்கு உன் வாழ்க்கையை மற்றவர்கள் முடிவு செய்வர்….இனியும் நீ இப்படி இருக்கலாமா..?” என்று மனம் கேட்க..

‘அவர்கள் மற்றவர்கள் இல்லை…என்னைப் பெற்றவர்கள்..’ என்று பதில் சொன்னால் மனதிற்கு.

‘பெற்றவர்களா..???’ என்று மனம் எக்காளமிட்டு சிரிக்க..அதிர்ந்தாள் கவி.

‘எது எப்படியோ…உனக்கு திருமண வாழ்வு சிறக்காது…அதனால் அதை தூக்கி எரிந்து விடு..உனது வழியில் நீ செல்…நீயும் மற்ற பெண்கள் போலதானா..?’ என்று மனசாட்சி அவளை உசுப்பேத்தி விட…

மனதிற்குள் ஒரு உறுதி எடுத்தவளாய் உறங்க ஆயத்தமானாள்.நிலா மகள் தன்னுடைய ஒளியால் அவள் அறையை நிறைக்க….அந்த பவுர்ணமி ஒளியில்…தன்னை மறந்து துயில் கொள்ளத் தொடங்கினாள் கவி பாரதி.

காலையில் கண் விழித்தவள்…நேராக தன் தந்தையை தேடி சென்றாள்.

இவ்வளவு காலையில் அவளை எதிர்பார்க்காத விஜயன்…”சொல்லும்மா கவி..என்ன இவ்வளவு காலையில்..?” என்றார் கேள்வியாய்.

“உங்ககிட்ட ஒன்னு சொல்லன்னும்ப்பா….இன்னை என்னைப் பார்க்க வருபவர்களிடம்…நீங்க உண்மையை சொல்லணும்…!அப்படி என்றால் எனக்கு சம்மதம்..!” என்றாள் ஒரே போடாய்.

“கவி அதெப்படி…?” என்று விஜயன் தயங்க…

“எப்படின்னு கேட்டா என்ன சொல்லப்பா…? யாரையும் ஏமாற்றுவதில் எனக்கு விருப்பம் கிடையாது.அதே சமயம் உண்மை தெரிந்து அவர்கள் சரி என்று சொன்னால் அதில் எனக்கு மறுப்பில்லை..” என்றாள்.

“முயற்சி பண்றேன்மா…” என்றார் விஜயன்.ஆனால் அவருக்கு அப்பொழுதே ஏதோ ஒன்று சரி இல்லாததைப் போன்று தோன்றியது.

“இது உன்னோட புது உத்தியா கவிம்மா..?” என்றார்.

“அப்படியும் எடுத்துக்கல்லாம் அப்பா…” என்றவள் சாதாரணமாய் செல்ல…அவருக்கு தான் இருட்டிக் கொண்டு வந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் குழம்ப…நேரம் ஆக..ஆக…அவருடைய மனம் நிம்மதியை இழக்கத் தொடங்கியது.

“விடுங்க…நல்லதாகவே நடக்கும்..” என்று தனம் எவ்வளவு ஆறுதல் சொல்லியும் அவரால் அப்படி எளிதில் விட்டு விட முடியவில்லை.

ஆனால் கவியோ வழக்கத்திற்கு மாறான சந்தோஷத்தில் இருந்தாள். அவளுக்கு நன்றாகத் தெரியும் எப்படியும் இது நடக்கப் போவதில்லை என்று.பிறகு ஏன் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டும் என தெளிவாக இருந்தாள்.

இந்த தெளிவு எல்லாம்…இன்னும் சில மணித் துளிகளில் இருந்த இடம் தெரியாமல் சென்று ஒளிந்து கொள்ளப் போவதை அவள் அறிந்திருக்கவில்லை.

கானலும்…நாணல் ஆகுமோ…?

வெற்றி மற்றும் அவன் பெற்றோருடன்… சாரதியின் குடும்பம் வந்து கூட்டமாக இறங்க….அவர்களைப் பார்த்தவர்கள் திகைத்தார்கள்.

“என்ன தனம் பெண் பார்க்க இவ்வளவு பேரா..?” என்று அதிர்ந்தார் விஜயன்.

“அவங்க தேனிக்காரங்க….எப்பவும் ஆளும் பேருமாதான் வருவாங்க… போவாங்க..!” என்று தனம் விளக்கம் சொல்ல…”ஹோ…” என்று ஓசையுடன் பேச்சை முடித்துக் கொண்டார்.

சாரதி கோட் சூட்டில் அழகனாய் இறங்க….வெற்றியோ….வேட்டி மற்றும் ஊதா நிற சட்டையில் கம்பீரமாக இறங்கினான்.

“என்ன சொல்லுடா….நீ தான் செம்மையா இருக்க..?” என்று சாரதி குறை பட…

“வாயை மூடிகிட்டு வாடா…” என்றபடி அவனை அழைத்து சென்றான் வெற்றி.

வரவேற்பு சம்பிரதாயங்கள் முடிந்து அனைவரும் அமர…ஏனோ வெற்றிக்கு அந்த வீட்டில் சூழல் சரியில்லாததைப் போல் தோன்றியது.

“எப்படா பெண்ணைக் காட்டுவாங்க…?” என்று சாரதி வாய்க்குள் மென்று துப்ப…

“இப்பதிக்கு இல்லை…”என்று அவனின் அம்மா ஒரு அதட்டல் போட்டார்.

“உன்கிட்ட பேசுனது எப்படி அவங்களுக்கு கேட்டது…சரியான பாம்புக் காது…” என்று பம்மினான் சாரதி.

அவர்கள் வந்து விட்டார்கள் என்று தெரிந்தவுடன்…யாரும் அழைக்காமல்… தானாகவே வெளியே வந்தாள் கவி பாரதி.

தனம் இயலாமையுடன் பார்க்க….”பரவாயில்லை…விடு..” என்று விஜயன் கண்களால் சாந்த படுத்தினார்.

வெற்றியும்,சாரதியும் அவளைக் கவனிக்காமல் பேசிக்கொண்டிருக்க…

“வாம்மா…உட்கார்..!” என்றார் சாரதியின் அம்மா.

அவரின் வார்த்தையில் நிமிர்ந்தனர் இருவரும்.சாரதியின் கண்கள் கவியை அள்ளிப் பருக….வெற்றி சாதரணமாக அமர்ந்திருந்தான்.

“பொண்ணு உனக்கு பொருத்தமா இருக்கா சாரதி..!” என்றான் வெற்றி குனிந்து.

“தேங்க்ஸ்டா…நான் தான் சொன்னேன்ல…எப்படி…செம்மையா இருக்கா தானே…?” என்றான்.

“உண்மைதான்….ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரம்மாதம்..” என்றான் வெற்றி

ஆனால் கவியின் கண்களோ…வெற்றியை மட்டுமே பார்த்துக்  கொண்டிருந்தது.

அதற்குள் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க….”என் மருமகள் கலெக்டரா இருந்தா எங்களுக்கு பெருமை தானே…?” என்று கதையளந்து கொண்டிருந்தார் சாரதியின் அம்மா.

“உண்மையை சொல்லுங்கள்..!” என்ற ரீதியில் கவி தந்தையைப் பார்க்க…

“வேண்டாம் பொறும்மா..!” என்றார் கண்களால்.

“முடியாது..!” என்று பதில் சொன்னவள்….

“நான் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவள்…” என்றாள் பட்டென்று.

சலசலவென்று பேசிக் கொண்டிருந்தவர்கள்…திகைத்து அமைதியாக…,அந்த இடத்தில்…ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.

வெற்றி யாருக்கு வந்த விருந்தோ…என்று அமர்ந்திருக்க…கவியின் பார்வையோ….அவனை ஊடுருவிக் கொண்டிருந்தது.

 

உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில்…

காதல் வலி அன்பு  என்றும் கய்ந்ததில்லை..

உருவங்கள் தாண்டியும்…உள்ளங்கள் வாழுமே…

அண்டம் மறையும் அன்பே நித்தியமே..!

 

மலர் பூக்கும்..!

Advertisement