Advertisement

மலர் 19:

புது எண்ணிலிருந்து தன்னுடைய மொபைலுக்கு வந்து கொண்டிருந்த போன் காலை எடுப்பதா..? வேண்டாமா..? என்ற யோசனையுடன் நீண்ட நேரம் மொபைலின் திரையையே வெறித்துக் கொண்டிருந்தாள் மலர்.

யோசனையுடன் அட்டென் செய்து காதில் வைக்க….

“நான் வெற்றி பேசுறேன்..!” என்ற குரல்….ஏனோ அவளைத் தாக்கியது என்றாள் மிகையாகாது.

“சொ..சொல்லுங்க சார்..!” என்றாள்.

“நான் என்ன சொன்னேன்…நீ என்ன பண்ணி வச்சிருக்க..?” என்று எரிந்து விழுந்தான்.

“என்ன சொன்னிங்க…?”

“போன் பண்ண சொன்னேன்….பேசுனியா…?” என்றான்.

“பேசுனேன்..!” என்றாள்.

“என்ன சொன்னாங்க…?”

“சொல்ல வேண்டியதை சொன்னாங்க..”

“என்ன நக்கலா…?”

“பின்ன என்ன சார்…செல்வா மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை விட எனக்கு பல மடங்கு இருக்கு…அதனால் நீங்க இவ்வளவு தூரம் கவலைப் பட வேண்டிய அவசியமே கிடையாது…” என்றாள் பட்டென்று.

“என்ன பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு..?” என்றான்.

“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை…? நான் பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டேன்…இனி அவங்க பாடு…குருவி தலையில் பனங்காய் மாதிரி..எல்லா பொறுப்பும் என் தலையில் விழுந்தால் நான் என்ன செய்வேன்…?” என்று மீண்டும் எரிந்து விழ…

“என்னம்மா ஆச்சு..?அவங்க ஏதாவது சொன்னாங்களா..?” என்றான் பரிவுடன்.

அவனுடைய அதட்டலில் வராத கண்ணீர்…அந்த பரிவில் வந்து தொலைத்தது.

அழுகையுடன் அவள் சொல்லி முடிக்க…அங்கு வெற்றிக்கு நரம்புகள் புடைக்க…கோபம் எகிறியது.

“சரி..நான் பார்த்துக்குறேன்…” என்றபடி போனை வைத்து விட்டான்.

“ம்ம்..என்னத்தை பார்ப்பார்….இவர் பெரிய இவர்..பார்க்க….?” என்று தனக்குள் முறுக்கிக் கொண்டாலும்…வெற்றியை கொஞ்சம் நம்பவே செய்தாள்.

“ஹேய் மலர்…? இங்க என்ன பண்ணிட்டு இருக்க..?” என்றபடி வந்தான் செல்வா.

“ம்ம் பார்த்தா எப்படி தெரியுது…?” என்றாள்.

“சரி..சரி…கூல்…ஆமா ஏன் உன் முகம் ரொம்ப டல்லா இருக்கு..? ஏதும் பிரச்சனையா…?” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை செல்வா…! நான் நல்லாத்தான் இருக்கேன்…! ஆமா நீ எங்க இங்க…கவி கூட பேசலையா..?” என்றாள் போட்டு வாங்கும் பொருட்டு.

“எங்க எப்ப கால் பண்ணாலும் அத்தை தான் எடுக்குறாங்க…! கவி குளிக்கிறா..கவி சாப்பிடுறா…. இப்படி ஏதாவது சொல்லி வச்சிடுறாங்க….எல்லாம் என் நேரம்…!” என்று தலையைத் தட்டிக் கொள்ள…

“இருந்தாலும் செல்வா…கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு பெரும் மனசு விட்டு பேசிகிட்டா…அது உங்க ரெண்டு பேருக்குமே நல்லது.பின்னாடி வருத்தப் படும் படி…ஏதும் நடந்திடக் கூடாதுல்ல…!” என்றாள்.

“ஹேய்..என்ன பெரிய மனுஷி மாதிரி பேசிகிட்டு.. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…” என்றபடி நகர்ந்தான்.

மலரிடம் அப்படி சொல்லி விட்டானே ஒழிய….அவன் மனதிலும் அந்த எண்ணம் இருந்தது.கவி தன்னுடன் சகஜமாக பேசுவதில்லையோ என்ற கவலை அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது.

என்ன செய்யலாம்..? என்று யோசித்தவன்…ஒரு முடிவுடன் அவளுக்கு அழைத்தான்.

கடவுள் சித்தமாக…அவளே போனை எடுக்க…நிம்மதி பிறந்தது செல்வாவிற்கு.

“நான் செல்வா..!” என்றான்.

“சொல்லுங்க..!” என்றாள்.

“ஹேய் கவி..நாம வெளிய எங்கையாவது மீட் பண்ணுவோமா… பிளீஸ்..உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்…” என்றான்.

“ம்ம்ம்….” என்று ஏதோ சொல்ல போனவள்…தனம் வருவது தெரிந்தவுடன்… ”நான் உங்களுக்கு கொஞ்ச நேரத்தில் கூப்பிடுறேன்… எதுவும் நிரந்தரமில்லை.ஆசையை வளர்த்துக்காதிங்க..!” என்றபடி பட்டென்று வைத்து விட்டாள்.

அவளுடைய வார்த்தைகளில்…சுயத்திற்கு வரவே அவனுக்கு வெகு நேரம் ஆகியது.கவி பேசிய பேச்சுக்கு என்ன அர்த்தம்..? நான் ஏன் ஆசையை வளர்த்துக்க கூடாது…? என்று குழம்பியவன்…அவளுடைய போனிற்காக காத்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் காத்திருந்தவன்…அவள் போன் செய்யவில்லை என்றவுடன்..குளிக்க சென்றான்.

அவன் சென்ற சில நிமிடங்களில்….மணி ஒலிக்க….

“செல்வா..சாப்பிட..வா..” என்று அழைத்துக் கொண்டே வந்த சத்யாவின் கண்களில் பட்டது போன்.

“யாரு…? விடாம அடிக்குது…!” என்று எண்ணியபடி எடுத்துப் பார்க்க….அதில் “மை வொய்ப்…” என்று இருந்ததைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டார்.

தன் வருங்கால மருமகளிடம் பேச…அட்டென் செய்து காதில் வைக்க….யார் எடுத்தார்கள் என்ற யோசனை இன்றி…

“இங்க பாருங்க செல்வா…நான் சொல்ல வந்ததை சொல்லி முடுச்சுடுறேன்…எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை…உங்களை எனக்கு பிடிக்கலை..நான் வெற்றி சாரை லவ் பண்றேன்…பிளீஸ்..இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க…!” என்று பட படவென்று சொன்னவள்…பட்டென்று போனை வைக்க….திக் பிரமை பிடித்தவர் போல் நின்றிருந்தார் சத்யா.

“அம்மா…அம்ம்மா…!” என்று செல்வா வந்து உலுக்கும் வரை.

“ன்காம்..என்னப்பா…?” என்றார்.

“என்னாச்சும்மா..? ஏன் இப்படி பிரீஸ் ஆகி நிக்குறிங்க..?” என்றான்.

“ஒண்ணுமில்லை செல்வா..! நீ சாப்பிட வா…!” என்ற படி செல்ல…

 “என்னாச்சு இந்த அம்மாவுக்கு..?” என்று புலம்பியடி சென்றான் செல்வா.

“என்னாச்சு சத்யாம்மா…? ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு..!” என்றாள் மலர்.

“ஒண்ணுமில்லை மலர்..!” என்றார்.

“அப்ப கண்டிப்பா ஏதோ இருக்கு…! என்னன்னு சொல்லுங்க..!” என்றாள்.

வேகமாய் அவளை மலரின் அறைக்குள் கூட்டிக் கொண்டு சென்றார்.

“என்னாச்சு சத்யாம்மா..?” என்று மலர் மீண்டும் கேட்க…

சத்யா தான் போனில் கேட்ட செய்தியை மலரிடம் சொல்ல…தலை குனிந்து நின்றாள் மலர்.

“இப்ப என்ன செய்றது மலர்…பத்திரிக்கை அடிச்சாச்சு… ஊர் எல்லாம் கொடுத்தாச்சு….இப்ப போய் இப்படி சொன்னா என்ன பண்றது…செல்வா வேற…அவ மேல உயிரையே வச்சிருக்கான்..!” என்று சத்யா புலம்ப…

“இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும் சத்யாம்மா…!” என்றாள் தயங்கி தயங்கி.

“மலர்..!” என்று அதிர்ந்தார் சத்யா.

தயக்கத்துடன் அவர் முகத்தை ஏறிட்டாள் மலர்.

“இதை ஏன் நீ என்கிட்டே முன்னாடியே சொல்லலை..!” என்றார் கோபமாய்.

“நீங்க கஷ்ட்டப்படுவிங்கன்னு தான்…” என்று அவள் இழுக்க…

“நீ முன்னாடியே சொல்லியிருந்தா நான் கஷ்ட்டம் மட்டும் தான் பட்டிருப்பேன்…ஆனா இப்ப..நாம அவமானப் பட்டு நிக்க போறோம்..செல்வாவை நினைச்சிப் பார்த்தியா நீ….அவனுக்கு கடைசி நேரத்தில் தெரிய வந்தால்…அவன் எப்படி இதைத் தாங்குவான்…?” என்று மலரை உலுக்க…

“சாரி சத்யாம்மா..! கல்யாணத்துக்கு அப்பறம்..கவி… செல்வாவை புரிந்து கொள்வாங்க என்று நினைத்தேன்..!” என்று மீண்டும் பழியைத் தன் மீதே போட்டுக் கொள்ள…மலரை கோபமாகப் பார்த்தார் சத்யா.

“என்னை பொறுத்த வரைக்கும் இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்..!” என்று பட்டென்று சொல்லிவிட்டு சென்றார் சத்யா.

தன் மேல் கோபமாக செல்லும்…சத்யாவை எண்ணி கவலை கொண்டாள் மலர்.

கவியோ..எப்படியும் செல்வா திருமணத்தை நிறுத்தி விடுவான் என்ற நப்பாசையில் இருந்தாள்.

ஆனால் விடிந்தால் திருமணம் என்னும் நிகழ்வு வரை..அவள் எதிர்பார்த்த அந்த தருணம் மட்டும் வரவே இல்லை.

சத்யா மட்டும் அவளைக் கோபமாக பார்ப்பது போன்ற ஒரு பிரம்மை அவளுக்குள்.அது பிரம்மை இல்லை…உண்மை என்று அவள் எப்படி அறிவாள்.

கொஞ்சமும் ஆராயாமல் எடுத்த ஒரு முடிவு…அவளை அங்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

சொந்தத்தையும்,சொத்தையும் நிலை நாட்டுவதற்காக… கவியின் பெற்றோர் எடுத்த முடிவு…அவளை அங்கு நிறுத்தியிருந்தது.

தோழிக்கு நல்லது செய்வதாய் எண்ணிய சங்கரியின் தவறான புரிதல் அவளை அங்கு நிறுத்தியிருந்தது.

இவர்களின் சேர்க்கையில்…உண்மையான காதலை மட்டும் கொண்டு அவளை மணக்க கேட்ட செல்வாவின் நிலை…?

அவன் எண்ணங்களை தன் எண்ணங்களாய் மதித்து…அவனுக்கு உதவி செய்ய போன மலரின் நிலை…

எதிலும் சம்பந்தப்படாமல்….மனதில் ஒருத்தியை நிலையாய் வைத்து…ஆணுக்கும் கற்புண்டு என்பதை போல்..மற்ற பெண்களை தலை நிமிர்ந்தும் பார்க்காமல்… காதலுக்காக காத்திருந்த வெற்றியின் நிலை…

அனைத்தையும் ஒரு திருமணம் நிர்ணயிக்க போகிறது.சில சுயநலங்களால்…பல சுயங்கள் அழியப் போகிறது.

மனதிலே காதலும்,காதலியையும்…. கண்களிலே…. கனவும் சுமந்து மேடையேறினான்… செல்வா.

இப்பொழுதாவது நிறுத்தி விடமாட்டானா…? என்கிற ஏக்க பார்வையுடன் மேடையேறினாள் கவி பாரதி.

முன்னால் எரியும் அக்னி குண்டம் போல்..அவளுடைய உள்ளமும் எரிந்து கொண்டிருந்தது.

வெற்றியோ அவர்களின் கண்ணில் படாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்த சத்யாவின் கண்களில் கோபம் அப்பட்டமாய் அப்பிக் கிடந்தது.

தனத்திற்கு விஷயம் தெரியாது என்று சத்யாவும்.. சத்யாவிற்கு விஷயம் தெரியாது என்று தனமும் எண்ணிக் கொண்டிருக்க….

மலரோ…கடவுளை வேண்டியபடி நடமாடிக் கொண்டிருந்தாள்.

மலரை கண்ணசைவில் அழைத்தான் செல்வா.

“என்ன செல்வா..?” என்றாள் அருகில் வந்து.

“எங்க ஓடிட்டே இருக்க…இங்கயே நில்லு…நாத்தனார் முடுச்சையே நீதான் போடணும்..அது தான் என் ஆசையும் கூட…சரியா..?” என்றான்.

மலருக்கு கண்கள் கலங்க…”சரி..” என்பதைப் போல் தலையை ஆட்டினாள்.

மலர்..செல்வாவுடன் பேசுவதை தனத்தின் கண்கள் எரிப்பதைப் போல் பார்த்திருந்தது.

அவர் முறைப்பதைப் பார்த்த மலர்…”இதோ கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன் செல்வா….” என்றபடி அங்கிருந்து நகர்ந்து சென்று….சத்யாவின் அருகில் நின்று கொண்டாள்.

மாம்பழ வண்ண கலரில் அவள் கட்டியிருந்த பட்டுப் புடவை…நிஜ தேவதையோ என்று என்னும் படி காட்ட…மலரை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வெற்றி.

முடிகள் நடனமாட..அவள் அங்கும் இங்கும்..பம்பரமாய் வேலை செய்வது கண்டு சொக்கித்தான் போனான் வெற்றி.

“கெட்டிமேளம்..கெட்டிமேளம்..” என்று ஐயர் முழங்க.. தன்னவளின் கழுத்தில் தாலியைக் கட்ட போன செல்வா அதிர்ந்து அப்படியே நிறுத்தினான்.

கவியின் முகம் தான் அதற்கு காரணம்.தீயை விட ஜுவாலையாய் இருந்தது அவள் முகம்.

“கட்டிடுவியா தாலியை..?” என்கிற பாவனையில் அவள் பார்வை இருக்க..

“கவி..” என்று அதிர்ந்தான் செல்வா.

“என்ன கவி…?இந்த கல்யாணத்தை நிறுத்திடுன்னு சொன்னதுக்கு அப்பறமும் கூட…நிறுத்தாம..தாலியைக் கட்ட போற இல்ல…கட்டு.ஆனா ஒரு பொணமாத்தான் உன்கூட இருப்பேன்…உனக்கு மனைவியா மட்டும் இருப்பேன்னு கனவுல கூட காண்காத..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல…

செல்வாவிற்கு உலகமே இடிந்து தலை மேல் விழுவது போன்ற பிரம்மை…

“என்னாச்சு செல்வா..கட்டு…” என்று சத்யாவும்…

“தாலியைக் கட்டுங்க மாப்பிள்ளை..” என்று தனமும்…

“கட்டு செல்வா….” என்று மலரும் சொல்ல…

அனைவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தவன்… கவியை பார்த்து விட்டு எழுந்து விட்டான்.

“இந்த கல்யாணம் நடக்காது…!” என்று மட்டும் சொன்னவன் மேடையை விட்டு எழுந்தான் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு.

“ஏன் என்னாச்சு..?” என்றார் தனம் பதறியவராய்.

“நடக்காதுன்னா நடக்காது…” என்றான் மொட்டையாய்.

“இப்படி கடைசி நேரத்தில் சொன்னா எப்படி..?என் பொண்ணோட கதி..?” என்றார் விஜயன்.

“அதை உன் பொண்ணுகிட்ட தான் கேட்கணும்..!” என்றார் சத்யா.

“என்னம்மா சொல்ற..?” என்றார்.

“உன் பொண்ணுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா.. இல்லையா..?” என்றார் சத்யா.

“விருப்பம் தான்…” என்றார் தயங்கி.

“பொய்…!ஆனா….உன் பொண்ணு காரியக்காரி…கடைசி நேரத்துல கூட அவ நினைச்சத சாதிச்சுட்டா….!” என்றார் சத்யா.

சத்யாவிற்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்று தெரிந்து கொண்ட தனத்தால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அவருடைய கோபம் பற்றிதான் தெரியுமே..!

மலர் தான் சொல்லியிருப்பாள்…என்று எண்ணிய தனத்தின் கோபம் முழுவதும் மலரின் மேல் திரும்பியது.

“எல்லாம் உன் வேலை தானா…?” என்றார் கோபமாய்.

“அம்மா..நான்..” என்று மலர் முடிக்கும் முன்..அவள் கன்னத்தில் அறைந்தார் தனம்.

“பேசாத…! நான் அவ்வளவு சொல்லியும் அண்ணிகிட்ட சொல்லியிருக்க…உனக்கு எவ்வளவு தைரியம்..!நீ செல்வாகிட்ட போய்…குசுச்குசுன்னு பேசுறப்பவே நினைச்சேன்..!” என்றான்.

மலரை அவர் அறைவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.கவி உட்பட.

தனத்தை கோபமாய் முறைத்த செல்வா..மலரை தன் பின்னால் இழுத்துக் கொண்டான்.

“மலரை அடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது தனம்..?” என்று சத்யா எகிற…

“என்ன அண்ணி..அந்த அனாதைக் கழுதைக்கு பரிஞ்சுகிட்டு…என்னை கேள்வி கேக்குறிங்க…?” என்று தனம் கூற….

“வார்த்தையை அளந்து பேசும்மா…யார் அனாதை…நான் இருக்கும் வரை அவள் அனாதையில்லை…” என்ற திவாகர்…மலரை தன்னருகில் இறுத்திக் கொள்ள…

“என்னிடம் சொன்னது மலர் கிடையாது..உன் மகளே தான் போன் பண்ணி சொன்னா…செல்வான்னு நினைச்சு என்கிட்ட..” என்றார் சத்யா.

“அப்போ..அன்னைக்கு செல்வா போனை எடுக்கவில்லையா…? ஐயோ வீணாக அவரை தப்பாக நினைத்து….இப்படி பேசிட்டோமே…?” என்று நொடியில் தன் தவறை உணர்ந்த கவி…

“சாரி செல்வா…நான் பேசினது தப்புதான்…” என்று உடனடியாக மன்னிப்பையும் வேண்ட…

செல்வாவோ முகம் இறுக நின்றான்.

“சம்பந்தப்பட்ட என்னைத் தவிர எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கு… ஆனா யாரும் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லலை…மேடை வரை வந்து என் கழுத்தை அறுக்கத்தான் எல்லாரும் அமைதியா இருந்திங்களா…?” என்று கத்தினான் செல்வா.

“செல்வா…” என்று மலர் அவனை சமாதானப் படுத்த முயல…

“பேசாத..நீ பேசாத….நீயாவது என்கிட்டே சொல்லியிருக்கலாம்ல… உன்னை எவ்வளவு நம்பினேன்….!” என்று மலரை வெறுத்த பார்வை பார்க்க…

அவனுடைய பார்வையில் அப்படியே மடங்கி அமர்ந்து அழத் தொடங்கினாள் மலர்.

“அப்படி எல்லாம் இல்லை செல்வா…!”என்று அவள் தன்னிலை விளக்கம் தருவதற்கு முன்….இடை மறித்தான் வெற்றி.

“சபாஷ்..கடைசியில் எல்லாம் அவள் தான் செய்தாள் என்பதைப் போல் கொண்டு வந்துட்டிங்க…? இப்ப உனக்கு சந்தோஷமா..?” என்று கவியைப் பார்த்து வெற்றி ஆக்ரோஷமாய் கேட்க…

“எங்க குடும்ப விஷயத்தில் நீ தலையிடாத வெற்றி…!” என்றார் சத்யா.

“அம்மா…!” என்று வெற்றி அதிர…

“போதும்..உன்னால் தான் என் மகன் வாழ்க்கை கெட்டது….இதோ இங்கே நிக்குறாளே…இவ உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லி தான் என் மகனை மறுத்தாள்…!” என்றார் கவியைப் பார்த்து.

“அம்மா..என் மனசில் அப்படி எந்த எண்ணமும் இல்லை…” என்று அவன் முடிப்பதற்குள்….

“போதும் வெற்றி..யார் சரி..யார் தவறு என்ற ஆராய்ச்சிக்கு நான் வரலை…” என்றவர் கவியைப் பார்த்து…

“கடைசியாய் கேட்குறேன்….இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல…நல்லா யோசிச்சு சொல்லு..!” என்றார்.

“இனி அவளே சரின்னு சொன்னாலும்…எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்…” என்றான் செல்வா உறுதியாய்.

“ஆனா எனக்கு என் பையன் கல்யாணம் நடந்தே ஆகணும்…!” என்றார் சத்யா.

“நீ மேடைக்கு போ…செல்வா…” என்றார் கட்டளையாய் திவாகர்.

“அப்பா..!” என்று அதிர்ந்தான்.

“இந்த அப்பாதான் சொல்றேன்..! என் மேல் உனக்கு கொஞ்சமாவது மதிப்பு மரியாதை இருந்தா…நீ மேடையில போய் உட்கார்…!” என்றார் கட்டளையாய்.

தந்தையின் முகத்தை வேதனையுடன் பார்த்தவன்… இயந்திர கதியில் சென்று அமர்ந்தான்.

மலரின் முன் சென்ற திவாகர்….அவள் முன் கையெடுத்து கும்பிட…அதிர்ந்தாள் மலர்.

“மாமா….!” என்றாள்.

“மாமா தான்…உன் தாய்மாமன் தான்…உன்கிட்ட உதவி கேட்குறேன்…!என் பிள்ளைக்கு சரியான துணை நீதான்…. என் பிள்ளையின் வாழ்வில் நீதான் பங்கெடுக்க முடியும்….போய் மேடையில் உட்காரும்மா…!” என்றார்.

“மாமா…!” என்று மலர் அதிர்ந்து விழிக்க….செல்வாவிற்கோ மனதிற்குள் அனைத்தும் சுக்கு நூறாய் உடைந்தது.

“என்னால் முடியாது…” என்பதைப் போல் மலர் இரண்டு புறமும் தலையை ஆட்ட…அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்…. அனைவரின் இதயத்தையும் உருக்குவதாய்.

வெற்றியோ இருண்டு போன முகத்துடன்….அடுத்த கணமே அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டான். யாரோ இதயத்தை உயிருடன் பிடுங்கி எரிவதைப் போல் இருக்க…அதன் கணம் தாங்க முடியாமல்…வெறித்த பார்வையுடன் வெளியேறினான்.

“நீ எனக்கு ஏதாவது செய்யனும்ன்னு நினச்சா…இதை செய் மலர்…இதை உன் மாமன் பிச்சையா கேட்குறேன்…!” என்ற வார்த்தையைத் தாண்டி அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தன்னை வளர்த்தவரின் யாசகத்தை தவிர்க்க முடியாமல்…சத்யாவின் முகத்தைப் பார்க்க…

“எனக்கும் அதே எண்ணம் தான் மலர்..” என்று அவரும் தன் எண்ணத்தை வெளிப்படுத்த….

கல்லாய் சென்று அமர்ந்தாள்.

செல்வாவோ அவளை மருந்துக்கும் திரும்பிப் பார்க்கவில்லை.இயந்திர கதியில் தாலியைக் கட்டி முடித்தான்.

தன் காதலைக் காப்பாற்றிக் கொண்ட இதயம் நிம்மதியில் துடிக்க…தன் காதலியை தாரை வார்த்தவனின் இதயம்…துடிப்பை நிறுத்த தயாராய் இருந்தது.

அந்த முகூர்த்த நாளில்…மலர்..திருமதி செல்வா ஆனாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement