Advertisement

மலர் 17:

விஷயத்தை கேள்விப்பட்ட விஜயனால் அதை இன்னமும் நம்ப முடியவில்லை.சத்யாவைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்பதும் ஒரு காரணம்.

“என்ன சொல்ற தனம்..? நிஜமாவா..? என்றார் நம்ப முடியாமல்.

“ஆமாங்க…! சத்யா அண்ணியே தான் போன் பண்ணி பேசுனாங்க…! நானும் யோசிக்காம சரின்னு சொல்லிட்டேன்…! என்றார் தனம்.

விஜயனின் முகம் யோசனையில் சுருங்க…

“என்னங்க யோசிக்கிறிங்க…? என்றார் தனம்.

“இல்லை…கவியை ஒரு வார்த்தை கேட்காம நாமளா பேசுறது தப்பில்லையா…? அதான் ஒரே யோசனையா இருக்கு.. என்றார்.

“நாம என்ன கவியை கேட்காமயேவா இருக்க போறோம்..! நம்ம பொண்ணு நம்ம பேச்சை மீற மாட்ட.அதுமட்டும் இல்லாம…..பிரிஞ்ச சொந்தம் இந்த கல்யாணத்துல தான் ஒன்னு சேரனும் என்று இருக்கோ என்னவோ…?செஞ்ச பாவத்துக்கு இப்பவாவது ஒரு புண்ணியத்தை தேடிக்கோங்க…!நான் சொன்னா சொன்னது தான்..! என்றார் தனம்.

“ஐயோ அப்படியில்லை தனம்….எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஆனா கவியோட சம்மதம் ரொம்ப முக்கியம்….. என்றார் மீண்டும்.

“சரி….அவகிட்ட கேட்டுட்டே செய்வோம்…இப்ப சரிதானா…? என்றார்.

“கவி மட்டும் இதுக்கு சம்மதம் சொல்லிட்டா…என்னை விட சந்தோஷப்படுறவங்க யாரும் இருக்க முடியாது தனம்…! என்றார்.

“நிச்சயமாங்க…! கிளம்புங்க..!நாம நேராவே போய் சத்யா அண்ணியைப் பார்த்து பேசிட்டு வந்திடுவோம்…! என்று தனம் பரபரக்க…

“கொஞ்சம் பொறு தனம்…எதுக்கு இவ்வளவு அவசரம்… அவங்களே இங்க வருவாங்க…! என்றார் விஜயன்.

“ஹோ..ஆமாம் இல்ல…சந்தோஷத்துல கை காலே ஓடலைங்க…! என்றபடி சென்றார் தனம்.

“ஹாய்..! என்றபடி வந்தாள் மலர்.

அவளைப் புரியாத பார்வை பார்த்த கவி…ம்ம்ம் சொல்லு..! “ என்றாள்.

“நீங்களும் உங்க காதலை சொல்லிட்டிங்கலாமே…! ரொம்ப சந்தோஷமா இருக்கு கவி அக்கா..! என்றாள் மலர்.

“ஹேய்..!ஸ்டாப்..ஸ்டாப்…நான் எப்போ சொன்னேன்..! என்று குழம்பினாள்.

“அட போங்கக்கா…உங்களுக்கு இதே வேலையா போய்டுச்சு..! என்று மலர் அலுக்க….

அருகில் நின்றிருந்த சங்கரிக்கும் எதுவும் புரியவில்லை.

அந்த நேரம் பார்த்து அந்த பக்கம் வந்து கொண்டிருந்த வெற்றியின் கண்களில் பட்டாள் மலர்.

அவனுடைய கண்கள் மலரை காதலுடன் வருட…..அதைப் பார்த்த சங்கரி திகைத்தாள்.

“என்ன இது..? கவியைப் பார்க்க வேண்டிய பார்வையை எல்லாம் இந்த மலரை பார்க்கிறாரே..? என்ற யோசனை அவளுள் ஓடியது.

“எனக்கு சத்தியமா புரியலை…. என்றாள் கவி.

“அதான் நேத்து கேண்டீன்ல… என்று மலர் இழுக்க…

‘நான் வெற்றியைப் பார்த்ததை பார்த்திட்டடாளோ..? என்று மனதினுள் ஓட….

“நானும் பார்த்தேனே..! என்றாள் மலர்.

“ம்ம்ம் ஆமா…! என்று ஒப்புக்கு சிரித்து வைத்தாள் கவி.

“எனிவே கங்கிராட்ஸ் கவி அக்கா…! என்றபடி மலர் நகர போக…

“ஹேய் நில்லு…! என்றாள் சங்கரி.

“சொல்லுங்க அக்கா…

“இனி எதுவா இருந்தாலும் நாங்களே பேசிக்கிறோம்….! இனி அவர் கூட நீ போய் பேசத் தேவையில்லை… என்றாள் வெற்றியை மனதில் நினைத்து பட்டென்று.

சங்கரியின் வார்த்தையில்….மலரின் முகம் விழுந்து விட்டது.

‘என்னை செல்வாவிடம் பேச வேண்டாம் என்று சொல்வதற்கு இவங்க யார்…? என்ற கோபம் மனதினில் தோன்ற….அதைக் கேட்கும் பொருட்டு வாயைத் திறக்க போனாள்…

“என்ன சங்கரி பேசுற….?அப்படியெல்லாம் இல்லை மலர்…! நீ போ…நான் பார்த்துக்கறேன்…! என்றாள் கவி.

“சரிக்கா….சீக்கிரம் டும் டும் கொட்ட போகுது…கண்டிப்பா எனக்கு ட்ரீட் குடுக்கணும்… என்றாள்.

“கல்யாணம் அளவுக்கு இன்னும் யோசிக்கலை… என்றாள் கவி.

“நீங்க யோசிக்கலை..! பட் உங்க ஆள் யோசிச்சிருக்கார்… சோ..இந்நேரம் உங்க வீட்டில் பொண்ணே கேட்ருப்பாங்க…. நீங்க வேணா பாருங்க..! என்றபடி மலர் செல்ல….

புரியாமல் குழம்பித் தவித்தாள் கவி.

அவகிட்ட அளவா வச்சுக்கடி..! என்றாள் சங்கரி.

“எதுக்குடி அப்படி சொல்ற..? கவி.

“வெற்றி சார் பார்வை….தேவையில்லாமல் அவளைப் பார்க்கிற மாதிரி இருக்கு.உன்னைப் பார்க்க வேண்டிய பார்வையை எல்லாம் அவளைப் பார்க்கிற மாதிரியே ஒரு பீலிங்…  என்றாள் சங்கரி.

“உனக்கு வேற வேலையே இல்லையா…? அவ என்ன சொல்லிட்டு போறா பார்த்தியா..? பொண்ணே கேட்ருப்பாங்கன்னு சொல்லிட்டு போறா….அப்பறம் எப்படி அவளைத் தப்பான பார்வை பார்க்க முடியும்..? என்றாள் கவி.

“என்னமோ..போ….எனக்கு எதுவும் சரியா படலை..! என்றாள்.

அந்த நேரம் பார்த்து அவளுடைய மொபைல் ஒலிக்க….

“சொல்லுங்கம்மா..! என்றாள் கவி.

“ஒரு முக்கியமான விஷயம் கவி..! என்றார் தனம்.

“சொல்லுங்கம்மா…அப்படி என்ன முக்கியமான விஷயம்..! என்றாள்.

“எல்லாம் உன் கல்யாண விஷயம் தான்…! என்று பீடிகை போட்டவர்…

“பையன்…உங்கப்பாவுக்கு சித்தப்பா பேரன்….உனக்கு அத்தை பையன் முறை ஆகுது….செல்வாவுக்கு உன்னைப் பார்த்ததும் ரொம்ப பிடிச்சு போயிடுச்சாம்…. அதான் கேட்கிறாங்க…!  உனக்கு சம்மதமா கவி..! என்றார்.

“என்னம்மா திடீர்ன்னு…! என்று மென்று விழுங்கினாள் கவி.

“ஏன் கவி…யோசிக்கிற..! பையன் கூட நீ படிக்கிற காலேஜ்ல தான் வேலை பார்க்கிறாராம்….உனக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்….இதனால் பிரிஞ்ச சொந்தமும் ஒன்னு சேரும்.. என்றார் தனம்.

“சரிம்மா…உங்க விருப்பம்…ஆனா ஒரு கண்டிஷன்… கல்யாணத்துக்கு அப்பறம் நான் கண்டிப்பா ஐஏஎஸ் படிப்பேன்…அதை மட்டும் சொல்லிடு..! என்றாள்.

“ரொம்ப சந்தோஷம் கவி….நீ எப்போ ஊருக்கு வர….? என்றார்.

“இன்னும் ரெண்டு நாளில் வந்துடுவேன் ம்மா…! என்றாள்.

“சரிடா…அப்ப நேர்ல பேசிக்கலாம்..! என்றபடி போனை வைத்து விட்டார்.

“என்னாச்சுடி…? என்றாள் சங்கரி.

“அந்த மலர் சொன்ன மாதிரி…ஜெட் வேகம் தாண்டி… என்றவள்…நடந்ததை சொல்ல…

“வார்ரே வா….ம்ம்ம்ம்…..இவ்வளவு வேகம் ஆகாதுடி யம்மா… என்று கிண்டல் செய்தாள் சங்கரி.

“நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி அவர்கிட்ட கண்டிப்பா பேசியே ஆகணும் டி… என்றாள்.

“பேசிடுவோம்.. என்று சங்கரி உற்சாக மூட்ட….

வெற்றியிடம் பேச தயாரானாள் கவி.

வீட்டில்…

“என்ன விஷயம்..? என்றா திவாகர்.

“தனம் தான்..! அவ பொண்ணுக்கும் இதில் சம்மதம் தானாம்…அதான் மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்ன்னு சொன்னாங்க..! என்றார் சத்யா.

“நல்ல விஷயம் தான்….நல்ல காரியத்தை தள்ளிப் போடாம…நாளைக்கே போய் பேசி முடுச்சுட்டு வந்திடலாம்…. என்று திவாகர் சொல்லிக் கொண்டிருக்க….உள்ளே நுழைந்தனர் செல்வாவும்,மலரும்.

“என்ன…? ரெண்டு பேரும் சீரியஸா பேசிட்டு இருக்கீங்க..? என்றாள் மலர்.

“மதுரையில் இருந்து போன்….! கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி…! என்றார் சத்யா.

செல்வாவின் முகம் மகிழ்ச்சியைக் காட்ட…

“அத்தை….இங்க பாருங்க செல்வா முகத்தை… கல்யாணம்ன்னு சொன்ன உடனே எவ்வளவு சந்தோசம் என்று…! என்று கவி சொல்ல…

“என்னை ஆளைவிடுங்க…எனக்கு வேலையிருக்கு… என்று செல்வா நகர போக…

“டூயட் பாட போறேன்னு சொல்லு..! என்றாள் மலர்.

“எப்படியோ வச்சுக்க… என்றபடி அங்கிருந்து தப்பித்தான் செல்வா.

கடவுளே..!பிள்ளைங்களுக்கு இந்த சந்தோஷத்தை காலம் முழுவதும் கொடுப்பா..! என்று கடவுளை வேண்டிக் கொண்டார் சத்யா.

வேண்டுதல் நிறைவேறுமா..?

மறுநாள் விடியல் புயல் வேகத்தில் விடிந்தது.

அன்றைய நாள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தாள் கவி.ஆனால் வெற்றியோ அன்று கல்லூரி வந்திருக்கவில்லை.

அவனுக்காக காத்திருந்தவள்…ஒரு கட்டத்தில் சலிப்படைந்தாள்.அடுத்து என்ன செய்வது என்று முடிவு எடுத்தவள்….மலரைத் தேடி சென்றாள்.

“சொல்லுங்க கவி அக்கா…! என்றாள் மலர்.

“இன்னைக்கு அவர் வந்திருக்காரா..? என்றாள்.

“யாரு…? என்றாள் மலர்.

“வெற்றி சார் தான்..! என்றாள் கவி….(அதிரடி ஆரம்பம்.)

“வெற்றி சார் இன்னைக்கு வரலை…! அவர்தான் எங்க இன்சார்ஜ் சார்..! என்றாள் மலர்.

“இப்ப ரொம்ப முக்கியம் மலர்..! இதென்ன தெரியாத விஷயமா..?சரி அவர் நம்பர் இருந்தா குடு..! என்றாள்.

“அவர் நம்பர் என்கிட்டே எப்படி இருக்கும்…? என்றாள் மலர்.

“உன்கிட்ட காதலை சொல்லிவிட தெரியுது…நம்பரைக் குடுக்க தெரியாதா..? என்று நொந்தாள் கவி.

கவியின் வார்த்தைகளைக் கேட்ட மலருக்குள்…அப்படி ஒரு அதிர்வு.

“நீங்க என்ன சொல்றிங்க..? என்றாள் அதிர்ச்சியாய்.

“என்ன…என்ன சொல்றிங்க…?லவ் பன்றார்ன்னு பேரு…அவர் நம்பர் கூட என்கிட்டே இல்லை….எல்லாம் என் நேரம்.. என்று பொரிந்தாள்… அவனை அன்று பார்க்க முடியவில்லையே என்ற கோபத்தில்.

“நீங்க என்ன சொல்றிங்க….வெற்றி சாரா…இல்லை செல்வா தானே..! என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…இடைமறித்தாள் கவி.

“இப்ப இது ரொம்ப முக்கியமா….வெற்றி செல்வம் என்ற பேர்ல…எனக்கு செல்வம் பிடிக்கலை…வெற்றி தான் பிடிச்சிருக்கு…அதான் அப்படி சொன்னேன்…அதை விடு…எனக்கு இப்ப அவர் நம்பர் உடனே வேண்டும்…! என்றாள் கவி.

மலருக்கோ…அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.கவி சொல்வது எங்கோ புரிந்தாலும்…..பாதிக்கு மேல் புரியவில்லை.

‘அப்போ வெற்றி சாரை செல்வா என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளா…? என்று எண்ணிய மலரால் அதை யோசிக்க கூட முடியவில்லை.

‘இதை செல்வா எப்படித் தாங்குவான்….? இல்லை வீட்டில் சொன்னால் என்ன ஆகும்..? என்ற பல யோசனைகள் அவள் புத்தியில் ஓடியது.

“என்ன கவி இங்க நிக்குற..? என்றபடி சங்கரியும் அருகில் வர…

“இல்லை..வெற்றி சார் உங்களை லவ் பண்ணலை..! நீங்க ஏதோ தப்பா.. என்று மலர் சொல்லி முடிப்பதற்கு முன்…

“வெற்றி சார்…இவளை லவ் பண்ணாம உன்னை லவ் பன்றாருன்னு சொல்ல வரியா…? என்று சங்கரி இடக்காய் கேட்க…

“சங்கரி…! என்று கத்தினாள் கவி.

“இல்லை கவி..! சும்மா.. என்று சங்கரி இழுக்க…

“சும்மா கூட அப்படி எல்லாம் சொல்லாதே…! வெற்றி மனதில் நான் தான் இருக்கேன்…! அதே என் மனதிலும் அவர் தான்..அதை என்னால் மாற்ற முடியாது..பேச்சுக்கு கூட அப்படி பேசாத சங்கரி…..! என்ற கவியைப் பார்த்து திகைத்தாள் மலர்.

“கவி அக்கா…நான் என்ன சொல்ல வரேன்னா…? என்று மலர் சொல்ல வர…

“நீ ஒன்னும் சொல்ல வேணாம்….நானே அவர்கிட்ட நம்பர் வாங்கிக்கிறேன்..! என்றபடி அந்த இடத்தை காலி செய்தாள் கவி.

மலரோ…தலையில் கை வைத்தவளாய் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

‘கடவுளே…! எங்கே தப்பு நடந்தது…..நான் அன்று செல்வாவை காட்டி சொன்ன போது….கவி மறுக்கலையே..! செல்வாவும் பேசினதா சொன்னானே…! என்று யோசிக்க யோசிக்க மலருக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.

நேராக செல்வாவிடம் சென்றாள் மலர்.

“என்ன மலர்..? என்னாச்சு…ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு…? என்றான் அக்கறையாய்.

“அன்னைக்கு கவி கிட்ட என்ன பேசின…? என்றாள் மலர் எடுத்த எடுப்பில்.

“அதான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே…இப்போ மறுபடியும் ஏன் கேட்கிற…? என்றான்.

“சொல்லு…காரணமாத்தான் கேட்குறேன்..! என்றாள்.

செல்வா பேசியதை சொல்ல…..மலருக்கு குழப்பம் தான் அதிகரித்தது.

“நீ பேசும் போது…யாராவது கூட இருந்தாங்களா..? என்றாள்.

“இல்லையே…ஏன்..? என்றான்.

“இல்லை….நான் வரும் போது வெற்றி சார் இருந்தாரே..! அதான் கேட்டேன்.. என்றாள்.

“வெற்றி எனக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தான் போல.நான் கவனிக்கலை.கவி போனதுக்கு அப்பறம் என்கிட்டே வந்தான்….சரி இப்போ எதுக்கு இவ்வளவு ஆராய்ச்சி…? என்றான்.

“சும்மாதான் கேட்டேன்.. என்றாள்.

“விளையாடாம போ மலர்…! எனக்கு நிறைய வேலை இருக்கு..! என்றான்.

இரண்டு அடி எடுத்து வைத்தவள்….ஒருவேளை கவி உனக்கு நோ சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்ப..? என்றாள்.

“என்னை கோபப்படுத்தாம போ மலர்…அவ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை… என்றான் முகத்தில் அவ்வளவு உறுதியாய்.

அவனின் பதிலில் மேலும் அதிர்ந்தாள் மலர்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்கு சுத்தமாய் புரியவில்லை.

‘சத்யா அத்தையிடம் சொல்லி….இதை எப்படியாவது நிறுத்த வேண்டும்… என்று எண்ணினாள்.

‘ஆனால் செல்வாவின் நிலை… என்று யோசிக்க….

எதுவும் புரியவும் இல்லை…என்ன செய்வதென்று தெரியவுமில்லை…. அவளுக்கு.

அங்கே மதுரையில் இருபது வருடங்களுக்கு பிறகு…தன் வீட்டிற்கு வந்த தங்கையை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார் விஜயன்.

அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி பொங்க…..இரு வீட்டினரும் பேசி முடித்திருந்தனர்.

இரவு நிச்சயதார்த்தம்..மறுநாள் திருமணம்….என்பதை எல்லாம் பேசி முடித்து விட்டு கிளம்பினர் சத்யா-திவாகர் தம்பதி.

வீட்டு மொட்டை மாடியில் நின்று வானத்தினை வெறித்துக் கொண்டிருந்தாள் மலர்.

விஷயத்தை எப்படி சத்யாவிடம் சொல்வது என்ற யோசனையில் இருந்தாள்.

கீழிருந்து சத்யா அழைக்கும் குரல் கேட்க…

“இதோ வந்துட்டேன் சத்யாம்மா.. என்றபடி சென்றாள்.

‘சொல்லிடு மலர்…நடந்த குழப்பத்தை அப்படியே அவங்க கிட்ட சொல்லிடு… என்று மனதிற்குள் சொல்லியபடி சென்றாள்.

அதோ பரிதாபம்…சத்யாவின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியைக் கண்டவளுக்கு…சொல்ல வந்த வார்த்தைகள் தொண்டையோடு சிக்கி நின்றது.

“போன காரியம் நல்ல படியா முடிஞ்சது மலர்….இத்தனை வருஷத்துக்கு அப்பறம் அண்ணனைப் பார்த்ததில் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்…. இது இப்படியே நிலைக்கனும் மலர்… என்றார் சத்யா.

 

வார்த்தைகள் காற்றோடு போக செய்வதறியாது நின்றாள் மலர்.

“ரொம்ப சந்தோசம் சத்யாம்மா….! என்றவள் அதற்கு அடுத்து அங்கு நிற்கவில்லை.

தன்னுடைய அறைக்கு சென்ற மலர் தீவிரமாக யோசிக்க துவங்கினாள்.

“கவி தன்னை விரும்பவில்லை என்பதை செல்வா எப்படி தாங்கிக் கொள்வான்.வெற்றி சாரை விரும்புவது தெரிந்தால்…. என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே…

‘கவி தான் வெற்றியை விரும்புகிறாள்…வெற்றியுமா கவியை விரும்புகிறார்…..? என்று உள் மனம் எடுத்துக் கொடுத்தது.

‘அட ஆமாமில்லை…..!இதை எப்படி மறந்தேன்….ஒரு வேளை வெற்றி சார் கவியை விரும்பவில்லை என்றால்…..ஈசியாக அவளை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாம்..அதற்கு என்ன செய்வது… என்று யோசித்து இறுதியாக ஒரு முடிவை எடுத்தாள்.

வெற்றியிடம் நேரில் சென்று பேசுவது தான் இதற்கு சிறந்த முடிவு என்று எண்ணினாள்.

ஆனால் அவனிடம் பேசுவதை நினைத்தாலே கை கால் உதறியது அவளுக்கு.

‘செல்வாவிற்காக…’ என்று தேற்றிக் கொண்டாள்.

மறுநாள் கல்லூரியில்…..

வெற்றியின் வரவுக்காக….வண்டி பார்க் செய்யும் இடத்திலேயே காத்திருந்தாள் மலர்.

அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வந்து சேர்ந்தான் வெற்றி.

வந்தவன் அப்பொழுது தான் கவனித்தான்…மலர் அங்கு யோசனையுடன் நின்றிருப்பதை.

ஒரு நிமிடம் யோசித்தவன்…..”இங்க வா..!” என்றான்.

வேகமாய் அவன் அருகில் சென்றவள்…..எதுவும் பேசாமல் அவனைப் பார்த்து முழிக்க….

‘இப்ப எதுக்கு இந்த முழி முழிக்கிறா….?’ என்று எண்ணியவன்….”இங்க எதுக்காக நிற்குற…?” என்றான்.

“உங்களைப் பார்க்க தான் சார்..!” என்றாள் வேகமாக.

“என்னைப் பார்க்கவா….?” என்றான் யோசனையாய்.

“ம்ம்..ஆமாம் சார்..உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…” என்றாள் இழுவையாய்.

என்னவா இருக்கும்… என்ற நினைத்தவன்…”இது காலேஜ்..இங்க அப்படியெல்லாம் பேச முடியாது….பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க…நீ ஸ்டாப் ரூம் வா….இந்த நேரத்துக்கு யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை….” என்றான்.

“ஓகே சார்..!” என்றவள்….அவன் சென்ற பிறகு …சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றாள்.

“இப்ப சொல்லு என்ன விஷயம்…?” என்றான்.

“அது வந்து சார்…நான் ஒன்னு கேட்பேன் நீங்க கோபப்படாம பதில் சொல்லணும்…” என்றாள்.

“நீ கேட்குற விஷயத்தை பொறுத்தது..” என்றான்.

“அது வந்து …வந்து சார்…நீங்க பைனல் இயர் படிக்கிற…கவி பாரதியை லவ் பண்றிங்களா…?” என்று ஒரு வழியாக கேட்டே விட்டாள்.

அவள் கேட்ட நொடி தான் தாமதம்…வெற்றியின் முகம் முழுவதும் கோபம் ஜிவு ஜிவு என்று ஏறியது.

‘என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கிறாள் இவள்….செல்வாவிற்கு தூது சென்று விட்டு…இப்பொழுது என்னிடம் இப்படி ஒரு கேள்வியா..?” என்று எண்ணியவனின் முகம் முழுவதும் ரத்தம் பாய…

அவனின் முகத்தைப் பார்த்தவள்..பயந்து இரண்டு எட்டு பின்னே வைத்தாள்.

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…?லவ் பண்ணிட்டு திரியற ரோமியியோ மாதிரியா…? நீ இங்க படிக்க வந்தியா இல்லை…” என்று அவன் வார்த்தையை முடிக்கும் முன் அவள் கண்கள் அழுவதற்கு தயாராய் இருந்தது.

தன்னவளின் முகம் கலங்குவதைப் பார்த்த வெற்றி…தன்னை அப்படியே அடக்கிக் கொண்டான்.

‘இவளை உயிராய் நினைத்துக் கொண்டிருக்கும் போது…இவளே வந்து இன்னொருத்தியை காதலிக்கிறாயா..? என்று கேட்டால் என்ன அர்த்தம்…’ என்ற கோபம் தான் அவனுக்கு.

“சாரி…சார்..!” என்றாள்.ஏனோ மேற்கொண்டு பேச அவளுக்கு மனம் வரவில்லை.அவள் திரும்பி செல்ல முற்பட..

அவளை அப்படியே அனுப்ப முற்படாத வெற்றி…”ஒரு நிமிஷம் மலர்..!” என்றான்.

அவள் நடை தடை பட…”அப்படிப்பட்ட எந்த எண்ணமும் எனக்கு இல்லை…உறுதியாக..!” என்றான் தெளிவாய்.

மலரின் முகம்…ஆயிரம் வாட்ஸ் பல்பாய் மின்னியது.அடுத்த நொடி இருள…”என்ன…?” என்றான்.

“அவங்க வந்து உங்க கிட்ட பிரபோஸ் பண்ணா என்ன பண்ணுவிங்க..?” என்றாள்.

“கண்டிப்பா நோ தான்…என் மனதில் வேற ஒரு பெண் இருக்கிறா.அவளைத் தவிர…அங்கு யாருக்கும் இடமில்லை….அதே போல…இதை பேச வேண்டிய இடம் இது கிடையாது.படிக்கிற வயசில் படிக்கிறதை மட்டும் பார்க்கணும்….புரிந்ததா…?” என்றான்.

எதில் இருந்தோ விடுபட்ட உணர்வு மலருக்கு.கவி நிச்சயம் செல்வாவை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை வந்தது.

ஆனால் இந்த உண்மையை அவளிடமும் சொல்ல வேண்டுமே என்று எண்ணினாள்.

அனால் விதி வலியது.சங்கரியின் உருவத்தில் அங்கு வந்தது.

அவர்கள் பேசியதை அறை குறையாக கேட்டவள்…நேராக கவியிடம் சென்றாள்.

“என்னடி..? எதுக்கு இப்படி வேகமா வர..?” என்றாள் கவி.

“கவி..! நான் அப்பவே சொன்னேன்…நீ தான் கேட்கலை.அந்த மலர் ஆளே சரியில்லை.இன்னைக்கு வெற்றி சார் கிட்ட தனியா நின்னு அவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கா….என்ன சொன்னான்னு தெரியலை…ஆனா வெற்றி சார் உறுதியாய் சொல்லிட்டார்…என்று அவன் இறுதியாய் கூறிய வாக்கியங்களைக் கூறினாள் சங்கரி…”

“நீ சொல்வது நிஜமா..?” என்றாள்.

“ஆமாடி….எதுக்கும் ஜாக்கிரதையாய் இரு…!” என்று சொல்லி  முடிக்க..அவர்கள் அருகில் வந்தாள் மலர்.

“கவி அக்கா…உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்றாள்.

“என்கிட்டே பேச உனக்கு எதுவும் இல்லை..” என்றாள் முகத்தில் அடித்தார் போல்.

“ஒரு உண்மையை சொல்லணும்…” என்றாள்.

“என்ன உண்மையை சொல்ல போற..?” என்று சங்கரி இடை புக…

“வந்து…வெற்றி சார் உங்களை காதலிக்கலை…செல்வா தான் உங்களை லவ் பண்றார்…வெற்றி சார் மனதில் வேற ஒரு பெண் இருக்குறா…” என்றாள் ஒரு வழியாக பட்டென்று.

சங்கரி அர்த்தமாய் கவியைப் பார்க்க…அவளும் அவளைத்தான் பார்த்தாள்.

“அப்படியா….?சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்….” என்றாள் கவி.

“இனி பேச எதுவுமில்லை…நீ இங்க இருந்து கிளம்பலாம்…!” என்றாள் சங்கரி.

“எப்படியோ சொல்ல வந்ததை சொல்லியாச்சு..!” என்று எண்ணியபடி அங்கிருந்து நகன்றாள் மலர்.

“பார்த்தியா கவி…! நான் சொன்னேன்ல…இவளுக்கு வெற்றி சார் மேல் ஒரு கண்….சேர்த்து வைக்கிற மாதிரியே…பிரிக்க நினைக்கிறா… அப்பதானே அவள் நினைத்தது நிறைவேறும்…!” என்று சங்கரி சொல்ல…

அந்த நிமிடம் தன் மதியை இழந்தாள் கவி பாரதி. யானைக்கும் அடி சறுக்கும் என்ற வாக்கியம் அங்கு உண்மையாகிப் போனது.

மலர் தன்னுடைய காதலை பிரிக்க நினைப்பதாகவே எண்ணினாள் கவி.ஆத்திரம் அவள் கண்ணை மட்டுமல்ல…அறிவையும் மறைத்தது.

  

கனவே வாழ்வாக…

வாழ்வே கனவாக….

வளர்த்தேன் உயிரை வீணாக….

காதல் பொய்யானது….

அது கானல் நீரானது….

இதயம் ஒன்று இரண்டானது…..

 

Advertisement