Advertisement

மலர் 16:

மலர் சொன்னதைக் கேட்ட செல்வாவால் இன்னமும் அவள் சொன்ன செய்தியை நம்ப முடியவில்லை.

ஏற்கனவே கவி அவனைப் பார்த்து சிரித்ததை வைத்து அவனாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.இப்பொழுது மலர் சொன்ன செய்தி அதை மேலும் உண்மையாக்க…. மகிழ்ச்சியில் திளைத்தான்.

“நிஜமாவே கவி சம்மதம் சொல்லிட்டாளா..?” என்றான்.

“நிஜம்..நிஜம்..நிஜம்..” என்றாள் மலரும்.

“என்னால நம்பவே முடியலை மலர்…”என்று தன்னைத் தானே கிள்ளிக் கொண்டான்.

“நானே போய் பேசுறது நல்லாவா இருக்கு…இனி நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்…இனி நீங்களே பேசிக்கோங்கப்பா….என்னை ஆளை விடுங்க..” என்று ஜகா வாங்கினாள் மலர்.

செல்வாவிற்கும் அதுவே சரி எனப்பட்டது.கவியிடம் நேரடியாக பேச வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டான்.தன் காதலை அவளிடம் நேரடியாக சொல்லும் போது….அவளுடைய முகத்தில் தோன்றும் உணர்வினை…. சந்தோஷத்தினைக் காண விரும்பினான்.

அதற்கான சந்தர்ப்பமும் அவனுக்கு வெகு விரைவிலேயே அமைந்தது.ஆனால் அது அவனுக்கு சாதகமாக அமைந்ததா..? என்றால் அதற்கு பதிலில்லை.

வீட்டில்….

“என்ன சத்யா யோசனை..?” என்றார் திவாகர்.

“இல்லை…!எப்படி தனத்திடம் பேசுறதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்..!” என்றார்.

“இதில் யோசிக்க என்ன இருக்கு…..நீதான் பேசுறன்ன தெரிஞ்சா…. அவங்களுக்கு அதை விட சந்தோசம் வேற எதுவும் இருக்க போறதில்லை….அதனால் கவலைப் படாம நாம பொண்ணு கேட்கலாம்..” என்றார் திவாகர்.

“சரிங்க..! நான் இப்பவே பேசுறேன்….அவங்க நம்பரைக் கூட வாங்கிட்டேன்..!” என்றார்.

“எல்லாமே உனக்கு உடனே நடக்கணும்….அதுக்காக தீயா வேலை பார்க்குற…!” என்றார்.

“இல்லையா பின்னே..! என் பையன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியும்….அமைதியா இருந்தா….அப்பறம் நான் என்ன நல்ல அம்மா…ம்ம்ம்…என்ன நம்ம மலரையே அவனுக்கு பிடிச்சிருக்க கூடாதா…?” என்றார் இறுதியில் அங்கலாய்ப்பாய்.

“மறுபடியும் ஆரம்பிக்காத சத்யா…! முதலில் அவங்க கிட்ட பேசு..!” என்றார்.

சிறிது யோசனைக்கு பின்….கவியின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்தார் சத்யா.

“ஹலோ..! யாரு..?” என்றார் தனம்.

சில நிமிட மவுனத்திற்கு பின்…”நான் சத்யா பேசுறேன்..!” என்றார் சத்யா பட்டும் படாமல்.

சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் விழித்த தனம்… சட்டென்று முகம் பிரகாசமாக…”அண்ணி…எப்படி இருக்கீங்க…?” என்றார் பாசமாய்.

“இருப்புக்கு ஒரு குறையும் இல்லை…நல்லா இருக்கோம்…அங்க எல்லாரும் சவுக்கியமா..?” என்றார்.

“இங்க எல்லாரும் நல்லா இருக்கோம் அண்ணி…இப்ப தான் எங்க கூட பேசனும்ன்னு தோணுச்சா அண்ணி…?” என்றார் தனம்.

“பழசை எல்லாம் கிளற வேண்டாம் தனம்…எந்த வீட்ல தான் பிரச்சனை இல்லை….நான் நேரடியா விஷயத்துக்கு வரேன்…என் பையனுக்கு உன் பொண்ணைக் குடுக்க உனக்கு சம்மதமா…?” என்றார் பட்டென்று.

தனத்தின் முகம் மகிழ்ச்சியைக் காட்ட…”என்ன அண்ணி சொல்றிங்க…? என்னால நம்பவே முடியலை….என் பொண்ணை…உங்க பையனுக்கு…” என்று அவர் திணற…

“சந்தேகமே வேண்டாம்..! உண்மையா தான் கேட்குறேன்…! செல்வாவுக்கு உன் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு…. அதே மாதிரி உன் பொண்ணுக்கும் விருப்பம் இருந்தா… பேசி முடிக்கலாம்..” என்றார்.

“கண்டிப்பா அண்ணி…! இதை கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு…கவிக்கு கண்டிப்பா செல்வாவைப் பிடிக்கும் அண்ணி….நான் இவர் கிட்டயும் பேசிட்டு உங்களுக்கு கூப்பிடுறேன் அண்ணி….” என்றார் தனம்.

“ரொம்ப சந்தோசம்..! அப்ப நான் வச்சிடவா…?” என்று சத்யா கேட்க…

“ஏன் அண்ணி..உங்க அண்ணாகிட்ட பேசனும்ன்னு உங்களுக்கு தோணலையா..?” என்றார்.

“இப்ப தோணலை…தோணும் போது பேசுறேன்..!” என்றபடி சத்யா போனை வைத்து விட….தனம் ஆசுவாசமாய் மூச்சை விட்டார்.

சத்யாவின் பெரியப்பாவின் மகன் தான் விஜயன். இருந்தாலும் சொந்த அண்ணன் தங்கையாகவே நினைத்து வர…பூர்விக சொத்து பிரிப்பதில் ஆரம்பித்த வழக்கு… அவர்களின் பாசத்திற்கு எமனாக அமைந்து விட…

தனது பங்குகள் அனைத்தையும் விட்டுக் கொடுத்த சத்யா….சொத்தினை முக்கியமாக கருதிய உறவுகள் அனைத்தையும் துறந்தார்.அன்றிலிருந்து யாரிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை.

விஜயன் எவ்வளவு முயன்றும் அவரிடம் பேச மறுத்து விட்டார்.அவ்வளவு வைராக்கியமாக இருந்தவர்…இன்று தன் மகனுக்காக..அவனுடைய விருப்பத்திற்காக…அனைத்தையும்  மறந்து…கீழே இறங்கி வந்திருக்கிறார்.

விஜயனுக்கும் அவரின் மேல் பாசம் இல்லையென்று சொல்ல முடியாது.அந்த சமயத்தில் அவரது கெட்ட நேரமோ என்னவோ…சில உறவுகளின் தவறான வழிகாட்டுதலில்….கொஞ்சம் அதிகமாக பேசிவிட…

“அப்படிப்பட்ட சொத்தே எனக்கு தேவையில்லை…” என்று சத்யா உதறித் தள்ளிவிட்டு சென்ற பிறகு தான்…. தன்னுடைய தவறினை உணர்ந்தார் விஜயன்.

பாசத்தின் மதிப்பினை அங்குதான் கண்டு கொண்டார். ஆனால் அவருக்கு புத்தி வந்த நேரம்…அந்த உறவு வெகு தூரம் விலகி சென்றிருந்தது.

 

அன்று செல்வா மிகவும் பரபரப்பாகவே இருந்தான்.இன்று கவியுடன் பேசப் போகிறான்.அந்த ஒற்றைக் காரணமே அவனுடைய தவிப்பிற்கு காரணம்.

“சொதப்பாம பேசு செல்வா…!” என்று மலர் தைரியமூட்ட….

“நான் என்ன ஸ்கூல் பையனா…எல்லாம் எனக்கு தெரியும்..!” என்றான் கெத்தாய்.

நக்கலாய் சிரித்த மலர்…எதுவும் சொல்லாமல் மனதிற்குள் மட்டும் பேசிக் கொண்டாள்.

“இந்த செல்வா சார்…என்னை எதுக்கு கேண்டீனுக்கு வர சொல்லணும்…?” என்ற யோசனையுடனே சென்று கொண்டிருந்தாள் கவி.

“ஏய் கவி..! எங்க போயிட்டு இருக்க..?” என்றபடி சங்கரி வர…

“செல்வா சார்..வர சொல்லியிருக்கார்..அதான் பார்க்க போறேன்..!” என்றாள்.

“அதுக்கு ஏன் கேண்டீன் பக்கம் போற…?” என்றாள் சங்கரி.

“வர சொன்னதே அங்கதாண்டி…!” என்று கடுப்புடன் சொன்னவள்… அவளையும் எதிர்பார்க்காது அங்கு சென்றாள்.

செல்வா ஒரு தவிப்புடன் இருக்க….”சொல்லுங்க சார்…!” என்றாள் எப்பொழுது போல்.

“உட்காரு கவி…!” என்றவன்….

”நாளையோட எக்ஸாம் முடியுது…அப்பறம் என்ன பண்ண போறீங்க..!” என்றான்.

“நீயென்ன லூசா..?” என்பதைப் போல் பார்த்து வைத்தாள் கவி.

‘கேட்க கூடாததை கேட்டுட்டோமோ…!’ என்று மனதில் எண்ணிய செல்வா…

“அது வந்து நான் என்ன சொல்ல வரேன்னா…?” என்று இழுக்க…

“ம்ம் சொல்லுங்க சார்…!” என்றாள்.

அப்பொழுது அங்கு வெற்றி வர….செல்வா பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன்….அவனுக்கு பின்னால் உள்ள டேபிளிலேயே அமர்ந்து கொண்டான்.

ஆனால் செல்வாவிற்கு எதிரில் இருந்த கவிக்கு…அவன் தெரிய….அவனைப் பார்த்தவள் தன்னை மறந்தாள்.

ஆனால் வெற்றியோ கர்ம சிரத்தையாய்…காபியை பருகிக் கொண்டு…நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

“நான் என்ன சொல்ல வரேன்னா…நான் இதை எதிர்பார்க்கவே இல்லை கவி….இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு…எங்க என் காதலை ஏத்துக்காம போய்டுவியோன்னு நினைச்சேன்…நல்ல வேலை அப்படி நடக்கலை.வீட்ல அம்மாகிட்ட கூட சொல்லிட்டேன்… அவங்களே பேசிக்கறதா சொன்னாங்க..! உன்னோட எதிர்கால ஆம்பிஷன் பத்தி நீ கவலைப் பட வேண்டாம்…கல்யாணத்துக்கு அப்பறம் கூட நீ கலெக்டருக்கு படிக்கலாம்…நான் உனக்கு உறுதுணையா இருப்பேன்…ஐ லவ் யு கவி..!” என்று அவன் போக்கில் பேசிக் கொண்டிருக்க…

அவன் பேசிய வார்த்தைகள் எதுவும் காதில் விழாமல்…வெற்றியை பார்த்து ரசித்துக் கொண்டு வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் கவி.

“கவி..கவி…” என்று இரண்டு ,மூன்று முறை செல்வா சத்தமாய் அழைத்த பின்னரே நினைவுக்கு திரும்பினாள்.

“ங்காம்….சொல்லுங்க சார்..!” என்றாள்.

“அவ்வளவுதான் கவி…இதைத்தான் பேசனும்ன்னு நினைச்சேன்…உனக்கு ஓகே தானே பிரச்சனையில்லையே..!” என்றான்.

“என்ன சொன்னார்…? எதுவும் கேட்கலையே…?” என்று எண்ணியவள்… ஒப்புக்கு தலையை ஆட்டி வைத்தாள்.அது தன் வாழ்க்கையை ஆட்டுவிக்க போவதை அறியாமல்.

“ஓகே சார்…அப்ப நான் கிளம்புறேன்..!” என்றபடி கவி நகர….

செல்வாவின் மனமோ அமைதியை குத்தகைக்கு எடுத்தது.பின்னால் அவன் முதுகில் அடி விழும் வரை.

விழுந்த அடியில் அதிர்ந்து பின்னால் திரும்ப…அங்கே வெற்றி நின்றிருந்தான்.

“என்னடா….? அந்த பொண்ணுகிட்ட அவ்வளவு சீரியசா பேசிட்டு இருந்த..?” என்றான் அவன் முன்னால் அமர்ந்தவனாய்.

“ஆமாம் வெற்றி….!இன்னைக்கு தான் மனசுக்கு நிறைவா இருக்கு…ஏதோ ஒரு அமைதி..!” என்றான் செல்வா.

“சத்தியமா ஒன்னும் புரியலை…! என்ன மண்ணாங்கட்டின்னு தெளிவா சொல்லு..!” என்றான் வெற்றி.

“அது கவி காதலுக்கு ஓகே சொல்லிட்டா…வீட்ல அம்மா,அப்பாக்கும் சம்மதம்…..எல்லாமே என் கைவசம் ஆன ஒரு சந்தோசம்…” என்றான்.

வெற்றிக்கு ஒன்றும் புரியவில்லை….

“என்னடா சொல்ற..? கவி….லவ்….ஒன்னும் புரியலை..!” என்றான்.

“ஆமாடா…நான் கவியை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன்…!ஆனா அது நிறைவேறுமா அப்படின்ற ஒரு உறுத்தல் இருந்தது.ஆனா…இப்போ அது இல்லை..” என்றான்.

“என்ன செல்வா சொல்ற…? உனக்கும்,மலருக்கும் கல்யாணம் அது இதுன்னு சொன்ன…இப்ப என்னடான்னா… ஒரு புது கதை சொல்ற..?” என்றான் வெற்றி புரியாமல்.

“அதுவா…? ஆமா வெற்றி நானும் முதலில் அப்படித்தான் நினைச்சேன்.மலருக்கு என்னால் தான் வாழ்க்கை அமையனும் என்று இருந்தா…அதுக்காக…என் காதலை உதறி, அவளைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்.ஆனா மலர்….தனக்கு அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லைன்னு தெளிவா சொல்லிட்டா…அது மட்டுமில்லை…என்னோட காதலை சேர்த்து வச்சது கூட அவதான்..!” என்றான் செல்வா.

செல்வா சொல்ல சொல்ல…வெற்றி எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கு விளங்கவில்லை.தன்னை சுற்றியிருந்த இருள்…சட்டென்று விலகி… வெளிச்சம் சூழ்ந்ததைப் போல் உணர்ந்தான்.

‘செல்வா அவளைக் காதலிக்கவில்லையா..?இருவருக்கும் திருமணம் இல்லையா…? மலருக்கு அப்படிப்பட்ட எண்ணம் இல்லையா..?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனுக்கு…அதற்கான பதிலை உணர்ந்த நிமிடம்……எழுந்து கத்த வேண்டும் போல் இருந்தது.

“என்னாச்சு வெற்றி..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றான் செல்வா.

“ஒண்ணுமில்லை செல்வா…! அப்பறம் கல்யாணம் எப்போ..?” என்றான் நழுவியவனாய்.

“கூடிய சீக்கிரமே வெற்றி..!” என்றான் மகிழ்ச்சியுடன் செல்வா.

“வாழ்த்துக்கள் நண்பா..” என்று அவனை அணைத்துக் கொண்டான் வெற்றி.

“தேங்க்ஸ்டா…”

கவி கேண்டீனை விட்டு வெளியே வருவதைப் பார்த்த மலர்…வேகமாய் உள்ளே சென்றாள்.

செல்வாவின் அருகில் சென்றவள்…”என்னாச்சு செல்வா…? பேசிட்டியா… என்ன சொன்னாங்க…?சீக்கிரம் சொல்லு…!” என்றாள் ஆர்வக் கோளாறுடன்.

செல்வா அவளை முறைக்க….

‘இப்ப எதுக்கு முறைக்கிறான்…?’ என்று எண்ணியவள் அவன் பார்வை போன இடத்தை நோக்க…

அங்கே வெற்றி அமர்ந்திருக்க…அவனை உரசிக் கொண்டு நின்றிருந்தாள் மலர்.

“ஆத்தி….” என்று சிங்கத்தைக் கண்டவள்  போல் துள்ளி நகர….அதைப் பார்த்த வெற்றிக்கு சிரிப்பு வர…அடக்கிக் கொண்டான்.

‘ஏற்கனவே இவர் ஒரு சிடு மூஞ்சி…இப்ப என்ன காய்ச்சி எடுக்க போறாரோ….?’ என்று எண்ணியவள்…

‘செல்வா ப்ளீஸ்..! காப்பாத்தேன்..!’ என்ற ரீதியில் அவனைப் பார்க்க…

“விடுடா வெற்றி…!அவ உன்னை கவனிக்கலை….!” என்றான் செல்வா.

“ஆமா சார்..! நான் டேபிள்..சேர்ன்னு நினைச்சேன் சார்..!” என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.

அவளை முறைத்துக் கொண்டே எழுந்த வெற்றி…..

“நான் கிளம்புறேன் செல்வா..!” என்றபடி சென்று விட்டான்.

“அப்பாடா…! நல்லவேளை கிளம்பிட்டார்.சும்மா இருந்த சிங்கத்தை சொரிஞ்சு விட்டுட்டியே மலர்..!” என்று அவள் புலம்ப…..அவளைப் பார்த்து சிரித்தான் செல்வா.

“என்னைப் பார்த்தால் உனக்கு சிரிப்பா இருக்கா…?” என்று மலர் முறைக்க…

“அங்க பார்..!” என்றான் செல்வா.

அவள் திரும்ப…..மீண்டும் அவளை முறைத்துக் கொண்டு நின்றான் வெற்றி.அங்கிருந்த அவனுடைய மொபைலை எடுத்துக் கொண்டு சென்றான்.

“மலர் உனக்கு டைமே சரியில்லை…இப்போ கிளாஸ்க்கு போறது தான் உனக்கு சேப்…” என்று எண்ணியவள்…

“வீட்ல பேசிக்கலாம் செல்வா..” என்றபடி சென்று விட்டாள்.

அங்கே வெற்றி.. மலரை நினைத்து சிரித்தவனாய்….முகம் முழுவதும் காதலை சுமந்தவனாய் சென்று கொண்டிருந்தான்.

கவியோ…அன்று வெற்றியின் தரிசனம் கிட்டியதில்…அதீத சந்தோஷத்தில் இருந்தாள்.

இனி நடக்க போவது என்ன…?

 

 

 

Advertisement