Advertisement

மலர் 14:

மொட்டை மாடியில் இருளை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் செல்வா.நடப்பது எதுவும் அவன் கையில் இல்லாததது போன்ற ஒரு பிரம்மை அவனுள்.அடுத்து என்ன செய்வது..? எப்படி செய்வது என்று எதுவும் புரியாமல் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தான்.

“என்ன சார்….ரொம்ப யோசனையில் இருக்கீங்க….? எந்த கோட்டை மீது போர் தொடுக்க போறிங்க…?” என்ற மலரின் குரலில்…கலைந்தான் செல்வா.

“ஒண்ணுமில்லை மலர்..! சும்மாதான்..!” என்றான்.

“அப்படியா…? பார்த்தா அப்படி தெரியலையே….?” என்று இழுத்தவள்….”இந்த கல்யாணத்தில் உனக்கு முழு சம்மதம் தானே…?” என்றாள்.

கல்யாணம் என்றவுடன் செல்வாவின் முகம் இருண்டது.மலரின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவன்… மனதிற்குள் என்ன எண்ணினானோ…..”சந்தோசம் தான் மலர்..!” என்றான் முகத்தில் வர வழைத்துக் கொண்ட மகிழ்ச்சியுடன்.

“வாய் தான் சொல்லுது…மனசு அப்படி சொல்லலையே…?” என்றாள்.

அவளது வார்த்தைகளில் எரிச்சலானவன்..”இப்ப உனக்கு என்ன பிரச்சனை…?” என்றான்.

“நீதான் பிரச்சனை..!” என்றாள் சற்றும் தயங்காமல்.

அதிர்ந்தான் செல்வா….என்ன சொல்ற…? என்னால் உனக்கு என்ன பிரச்சனை…? என்றான்.

அவனை ஒரு நிமிடம் உற்று நோக்கியவள்…”அதுவா…? நீ பேசாம கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டியா…? அதான் உன் நினைவில் சாப்பிட முடியலை…தூங்க முடியலை… நிற்க முடியலை..நடக்க முடியலை…எங்க பார்த்தாலும் நீதான் தெரியற…” என்றாள் குறும்புடன்.

“அதுக்கு நான் என்ன செய்ய…?” என்றான் வழிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்.

“என்ன செல்வா இப்படிக் கேட்டுட்ட…..இதுக்கு நீ தான் ஏதாவது பண்ணனும்…!” என்றாள் ஏற்ற இறக்கத்துடன்.

“என்ன பண்ணனும்…!”

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க….!” என்றாள்.

“ம்ம்ம்…சரி…!” என்றான்.

“ஓகே செல்வா குட் நைட்..” என்று இழுத்தவள்….”ஆனா ஒன்னு சொல்லியே ஆகணும் செல்வா….கண்டிப்பா உனக்கு சிலை வச்சே ஆகணும்…எங்க வைக்கலாம்…?” என்று யோசித்தாள்.

அதற்கு மேல் அவனுக்கு பொறுமை இருக்கவில்லை.

“மலர் தயவு செய்து கீழ போ..!” என்றான்.

“ம்ம் சரி….” என்றவள்…..தன் போக்கில் சென்றாள்.

அவள் சென்று விட்டாள் என்று தெரிந்தவுடன் தான் செல்வாவிற்கு மூச்சே வந்தது.

‘என்ன பண்ற செல்வா..?’ என்றது மனம்.

‘என்ன பண்ணினேன்…? எல்லாம் சரியாதான் பண்றேன்..’ என்றான்.

‘கிழிச்ச…’ என்றது மனசாட்சி.

‘மலர் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்…’ என்றான் முணுமுணுப்பாக.

“அப்ப உன்னோட சந்தோசம்…” என்ற மலரின் குரலில் சட்டென்று திரும்பினான் செல்வா.

“மலர் நீ..” என்று திக்கித் திணற…

சட்டென்று தன் கையில் இருந்த போட்டோவை அவன் முன் காட்டினாள் மலர்.

அந்த புகைப்படத்தைப் பார்த்தவன் அதிர்ந்து நிற்க…”இதற்கு என்ன அர்த்தம் செல்வா..?” என்றாள்.

“மலர் அது வந்து…” என்று இழுக்க…

“எது வந்து..?” என்றாள் இடக்காய்.

“இதெப்படி உன் கையில்…?” என்று அதிர்ந்தான்.

“அதெல்லாம் உனக்கு எதுக்கு…? இத்தனை வருசத்தில் நான் எதையாவது மறைத்திருக்கிறேனா…? ஆனா நீ மட்டும் எப்படி செல்வா..?” என்றாள் ஆதங்கமாய்.

“மறைக்கணும் என்று நினைக்கலை மலர்..!” என்றான் செல்வா.

“மறைக்க நினைக்கலை சரி…..அதெப்படி நான் சரின்னு சொன்ன உடனே சார் எனக்கு வாழ்க்கை குடுக்க தயாரானிங்க…?” என்றாள் அவனை குற்றம் சாட்டும் பார்வையுடன்.

“உன் சந்தோஷத்துக்காக…” என்று அவன் இழுக்க…

“ஹோ…சார்….உங்க காதலை விட்டுக் கொடுத்து …..எனக்கு வாழ்க்கை கொடுத்து தியாகிப் பட்டம் வாங்கிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிங்களோ…!” என்றாள்.

“மலர்..!” அதிர்ந்தான் செல்வா.

“பின்ன என்ன செல்வா…? அத்தை கல்யாணத்தை பத்தி பேசின பிறகாவது…நீ உண்மையை சொல்வாய் என்று நினைத்தேன்.ஆனா நீ இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்க….இது அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா எவ்வளவு மனசு வருத்தப்படுவாங்க..!” என்றாள்.

“அதெல்லாம் வருத்தப்பட மாட்டா….ஏன்னா நான் லவ் பண்ற விஷயத்தை இன்னும் அவகிட்ட சொல்லவே இல்லை…” என்றான்.

“அடப்பாவி…இன்னும் அவகிட்டவே சொல்லவில்லையா…?” என்று அதிர்ந்தாள் மலர்.

“ம்ம்ம்…ஆமா மலர்…நான் இன்னமும் அவகிட்ட சொல்லலை.ஒரு வகையில் அவளும் நமக்கு சொந்தம் தான்…கோவில் திருவிழாவில் தான் அவளை முதன் முதலில் பார்த்தேன்.என்னமோ தெரியலை பார்த்த உடனே எனக்கு பிடித்து போய்விட்டது.அம்மா கூட அவங்க அம்மா கூட பேசிட்டு இருந்தாங்க..!அப்பறம் அவங்க கிட்ட கேட்ட போது தான் சொன்னங்க…அவங்க நமக்கு சொந்தம் என்று…” என்று ஆழ்ந்த மூச்சை எடுத்தான்.

“அப்பறம் என்ன…உன் காதலை சொல்லியிருக்க வேண்டியது தானே..!” என்றாள்.

“சொல்லலாம் என்று தான் ஒரு நாள் போனேன்.அப்ப தான் அவ பிரண்டுகிட்ட அவ ஆம்பிஷன் பற்றி சொல்லிட்டு இருந்தா…”என்றான்.

“என்ன ஆம்பிஷன்..? அதுக்கும் காதலை சொல்வதற்கும் என்ன சம்பந்தம்..?” என்றாள்.

“மேடம் ஐஏஎஸ் பாஸ் பண்ணிட்டு தான் அடுத்து அவங்க வாழ்க்கையைப் பத்தி யோசிப்பாங்களாம்…!” என்றான்.

“அட லூசு செல்வா….அவங்க ஆம்பிஷன் அப்படியே இருக்கட்டும்… அதுக்காக நீ ஏன் காதலை சொல்லாம இப்படி ஜவ்வா இழுக்கற….முதலில் அவங்க கிட்ட உன் லவ்வ சொல்லிடு…இல்லை வேற எவனாவது லபக்கிட்டு போய்டுவான்..!” என்றாள் சிரித்தபடி.

“இல்லை மலர்…இனி அதுக்கு அவசியமில்லை. அம்மாவுக்கு நாம இரண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று தான் ஆசை….அதனால் இனி அதைப் பத்தி எல்லாம் பேச வேண்டாம்..” என்றான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்….நீ முதலில் உன் காதலை காப்பாற்று..!” என்றாள் எரிச்சலாய்.

“உனக்கு இதில் வருத்தம் இல்லையா மலர்..?” என்றான்.

“அட லூசே…நீ என்கிட்டே சொல்லலை அப்படின்ற கோபத்தில் தான் கொஞ்சம் விளையாடினேன்..மற்ற படி எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை..” என்றாள் தெளிவாக.

அவளின் தெளிவான வார்த்தைகளில் மீண்டான் செல்வா.எதிலிருந்தோ நிம்மதி அடைந்த உணர்வு.அவனின் மலர்ந்த முகத்தைப் பார்த்த மலரின் முகமும் மலர்ந்தது.

“தேங்க்ஸ் மலர்..” என்றான்.

“இருங்க தம்பி…இப்பவே தேங்க்ஸ் சொல்லிட்டா எப்படி…நாளைக்கு பாரு…என் பெர்பாமென்ச…!” என்றாள்.

“ஏய்…! என்ன பண்ண போற..?” என்றான்.

“உன் காதலுக்கு தூது செல்ல போகிறேன்.தலைவியைப் பிரிந்த தலைவனது சோகத்தை எடுத்து சொல்லப் போகிறேன்….உன் காதலின் மகிமையை புரிய வைக்கப் போகிறேன்..!” என்றான்.

“அம்மா… தாயே..! நீ ஆணியே புடுங்க வேண்டாம்…அதெல்லாம் நான் பார்த்துகிறேன்..!” என்றான்.

“எப்ப…அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தைங்க வர வரைக்குமா…? நீ கம்முன்னு கட…எல்லாம் நன்மைக்கே…!” என்றபடி துள்ளி சென்றாள்.

“சின்ன பெண்ணாக இருந்தாலும் எப்படி தெளிவாக யோசிக்கிறாள்…!” என்று எண்ணிய செல்வா..அவளை நினைத்து மனதிற்குள் பெருமிதம் கொண்டான்.விதி தனக்கு வைத்திருப்பதை அறியாமல்.

அறைக்கு சென்ற மலருக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. ஏனோ செல்வாவின் முகத்தில் குழப்பம் நீடிப்பதை அவள் விரும்பவில்லை.

போதும் விளையாண்டது என்று எண்ணியவள் இன்று அவனிடம் தெளிவாக விளக்கி விட்டாள்.அந்த தெளிவு அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்து செல்ல….அவளை மனதில் நினைத்துக் கொண்டிருந்த வெற்றியோ…..அங்கு உறக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன இருந்தாலும் நீ அவளை வெளியே அனுப்பியது தப்பு வெற்றி..!” என்றது மனம்.

“ம்ம்…அதற்காக அவள் வருத்தப்பட்டது போல் தெரியவில்லை..!” என்றான் மனதிடம்.

“உன் சொந்த கோபத்தை அவளிடம் காட்டாலாமா…?அவள் என்ன வேண்டும் என்றா செய்தாள்…?” என்றது மனம்.

“நான் வேறு என்னதான் செய்ய முடியும்…?அவளுக்கு செல்வாவை தானே பிடித்திருக்கிறது….விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகின்றனர்.நான் அட்சதை தூவி வாழ்த்தி விட்டு வர வேண்டும்…!” என்றான் இடக்காய்.

“அதற்கு என்ன செய்ய முடியும்…உனது இருமாப்பிற்கு அவள் என்ன செய்வாள்…!நீ நினைத்த வாழ்க்கைதான் கிடைக்கவில்லை…அவளையாவது நிம்மதியாக இருக்க விடு..” என்றது மனம்.

“என்னால் அவள் வாழ்க்கையில் எந்த தொந்தரவும் வராது.ஆனால் அவளின்றி என் வாழ்வில் வேறு எந்த பெண்ணுக்கும் இடம் கிடையாது. எனக்கு மனைவி என்று ஒருத்தி வருவதானால் அது மலர் மட்டுமே..!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

தன் மன சாட்சிக்கு கொடுத்த வாக்கை அவன் காப்பாற்றுவானா…? என்பது அவன் அறியான்.மனமே செத்துவிட்ட பிறகு மனசாட்சி எங்கிருந்து வரும்..?

மறுநாள் உற்சாகமாக கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மலர்.இன்று எப்படியாவது செல்வாவின் காதலை அவளிடம் சொல்லி சம்மதம் வாங்க வேண்டும் என்று உறுதி செய்திருந்தாள்.

செல்வாவிற்கோ மனதிற்குள் பக்கு பக்கென்று இருந்தது.மலர் எதையாவது சொல்ல போய் அவள் கோவித்துக் கொண்டாள் என்ன செய்வது என்ற குழப்பம் தான் அது.

ஆனால் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய காதலை அவள் புரிந்து கொண்டாள் போதும் என்று அவன் நினைத்தான்.

காதலில் தூது என்பது கூடாது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.அது அவனின் நேரமா..? அல்லது விதியின் நேரமா என்று அவனுக்கு தெரியவில்லை.

“என்ன ரெண்டு பேரும் ராசி ஆகிட்டிங்களா…?” என்றார் சத்யா.

“ஹோ…அதெல்லாம் நேற்றே நாங்க ராசி ஆகிட்டோம்… இல்லையா செல்வா..?” என்று கண்ணடித்தாள் மலர்.

“ஆமாம்மா…இந்த பிசாசு ஒரு வழியா என் கூட பேசி விட்டாள்…!” என்றான் செல்வா.

“நான் உனக்கு பிசாசா…?” என்று முறைத்தாள் மலர்.

“ஆமா….எங்க வீட்டோட குட்டி பிசாசு நீதானே…இதில் உனக்கு சந்தேகம் வேற இருக்கா..?” என்றான் சிரிக்காமல்.

“சொல்லு மகனே சொல்லு…! இப்ப உன் குடுமி என் கையில்.அதை மறந்திட்டு பேசுற மாதிரி  இருக்கே..!” என்றாள் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே.

“சச்சா….நாம என்ன அப்படியா பழகியிருக்கோம்….நீ எங்களுக்கு செல்ல பிசாசு…இல்லையாமா..?” என்று சத்யாவை துணைக்கு அழைத்தான் செல்வா.

“என்னடா நடக்குது இங்க..? நீங்க பேசுறது எதுவும் புரியலை…!” என்று சத்யா முழிக்க…

“அதெல்லாம் புரியும் போது…தன்னால் புரியும் சத்யா அம்மா…அப்ப பாருங்க வேடிக்கையாய்..” என்று அவள் வாயை மூடி சிரிக்க…

“நல்ல பிள்ளைங்க.!” என்றபடி சென்றார் சத்யா.

“ஏண்டி பிசாசு…உன் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா..?”என்று செல்வா எகிற…

“அப்படி இருந்தா நான் மலர் இல்லையே…!” என்று அவள் கண்ணை சிமிட்ட…

“மலர் சொதப்பிடாது இல்ல…” என்றான் யோசனையாய்.

“அதெல்லாம் ஒன்னும் சொதப்பாது…நீ மட்டும் கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா போதும்..!” என்றாள்.

“அவ சரின்னு சொல்லுவாளா..?” என்றான்.

“அது தெரியலையே தம்பி.எல்லாம் உன் நேரம் காலத்தைப் பொறுத்தது.நல்லதாவே நடக்கும் என்று நம்புவோம்..!” என்றாள் பெரிய மனுசியாய்.

“எப்படியே….நல்லதா நடந்தா சரி….!” என்று எண்ணியவன்…மலரை அழைத்துக் கொண்டு கல்லூரி சென்றான்.

செல்லும் வழியெல்லாம் அவளிடம் என்ன சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டு வந்தாள் மலர். அதைப் பார்த்து செல்வா சிரிக்க…

“சிரிப்படி மகனே சிரிப்ப…நீ செய்ய வேண்டியதை எல்லாம் நான் செய்துகிட்டு இருக்கேன்ல…அதனால் என்னைப் பார்த்தா உனக்கு சிரிப்பா தான் இருக்கும்…என் பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குது…” என்றாள்.

வழக்கத்தை விட அன்று வேகமாகவே கல்லூரிக்கு சென்றனர் இருவரும்.

“செல்வா ஆர்வ கோளாறுல…சீக்கிரமே வந்துட்டோமா..?” என்று மலர் கேட்க..

“இதில் உனக்கு சந்தேகம் வேறயா…மனுசன நிம்மதியா சாப்பிட விட்டியா…?” என்று சலித்துக் கொண்டான்.

“மிஸ்டர் காதல் மன்னன்…காதலுக்காக ஒரு நேரம் சாப்பிடாமா இருந்தா உங்க சொத்தா அழிந்து போய் விடும்…” என்றாள்.

“அம்மா தாயே..! உன்கிட்ட பேசி என்னால தப்பிக்க முடியாது.இன்னைக்கு நீ எது சொன்னாலும்…சரின்னு மட்டும் தான் தலையை ஆட்டுவேன் சரியா..?” என்றான்.

“ஹான்..! இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு..!”  என்று அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் சங்கரியும்,கவியும் வந்து கொண்டிருந்தனர்.

“செல்வா…அங்க பாரு உன் ஆள் வந்தாச்சு…! நீ எங்கயும் போகாம இங்கயே இரு…மத்ததை நான் பார்த்துக்கிறேன் சரியா…? எங்கேயும் போய்டாதா…” என்று திரும்ப திரும்ப சொன்ன படி சென்றாள் மலர்.

அவனும் சரி என்று தலையை ஆட்ட…..கவியை நோக்கி சென்றாள் மலர்.

“என்னடி இது….இந்த பொண்ணு நம்மகிட்ட வருது…!” என்றாள் சங்கரி.

“தெரியலை…!வரட்டும் என்னவென்று கேட்போம்..!” என்றாள் கவி.

“ஹாய்..அக்கா..!” என்றபடி அவர்களின் அருகில் சென்றாள் மலர்.

“ஹாய்..!” என்றாள் கவி.

எப்படி சொல்வது என்று கவி ஒரு நிமிடம் தயங்க…

“என்ன விஷயம்…ஜூனியர் எல்லாம் சீனியரைத் தேடி வந்திருக்கிங்க..!” என்றாள் சங்கரி.

“அது வந்து நான் இவங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..!” என்றாள் மலர்.

“நமக்குள்ள பேசுற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விஷயம்..?” என்றாள் கவி கேள்வியாய்.

“நமக்குள்ள இல்லை…ஆனா இது உங்க வாழ்க்கை சம்பந்தப்பட்டது..!” என்றாள் மலர்.

“இதோ பார்..! சுத்தி வளைக்காமல் சொல்லு….எனக்கு எதையும் நேரா பேசித்தான் பழக்கம்..!” என்றாள் கவி பட்டென்று.

“சரி…நான் நேரா விஷயத்துக்கு வருகிறேன்..! நான் சொல்லப் போறதை கேட்டு கோபப்படக் கூடாது.ஓகே என்றால் ஓகே சொல்லுங்க… இல்லையென்றால்.. அப்படியே விட்டுடுங்க..!” என்றாள்.

“முதலில் நீ சொல்லு..!” என்றாள் கவி.

“விஷயம் என்னவென்றால்….நம்ம செல்வா சார்….உங்களை விரும்புகிறார்.அவர் சார்பா நான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்..!” என்றாள் மலர் பட்டென்று.

“வாட்…!” என்று அதிர்ந்தாள் மலர்.

“அதுக்கு எதுக்கு இவ்வளவு அதிரிச்சி ஆகுறிங்க..?”

“நம்ம செல்வா சாரா…?”

“ஆமா..! செல்வா சாரே தான்..! என் பின்னாடி பாருங்க…எப்படி டென்சனா நின்னுகிட்டு இருக்கார் என்று…” என்றாள் ஆர்வமுடன்.

“எங்கே..!” என்று கவி கண்களை சுழல விட….

அதோ பாவம்..அந்த நேரம் பார்த்து செல்வாவை சக ஆசிரியர் அழைக்க….அவன் அந்த புறம் நகர்ந்திருந்தான்.வெற்றிதான் அந்த இடத்தில் வந்து கொண்டிருந்தான்.

“இவரா…?” என்றாள் மலர் ஆச்சர்யம் விலகாமல்.

மலரோ அவன் செல்வாதான் என்ற நம்பிக்கையில் திரும்பாமலேயே…”அவரேதான்..!” என்று உறுதியாக சொன்னாள்.

“நம்பவே முடியலையே..!” என்றாள் கவி.

“நீங்க நம்பித்தான் ஆகணும்..!” என்றாள் மலர்.

சற்று நேரத்தில் செல்வா மீண்டும் அங்கு வர… வெற்றியுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

“ஓகே..நான் வந்த வேலை முடிந்தது…நான் கிளாஸ்க்கு போறேன்…உங்க முடிவு என்னவென்று நீங்க அவர்கிட்டவே சொல்லிடுங்க..!” என்ற மலர்…அதற்கு மேல் சிட்டாகப் பறந்தாள்.

செல்லும் போது…திரும்பி செல்வாவைப் பார்த்து புன்னகைக்க நினைத்தவள்…உடன் வெற்றி நிற்கவும்….புன்னகைக்க மறந்தவளாய் சென்றாள்.

“இவ என்ன சொல்லிட்டு போறா..?” என்றாள் சங்கரி.

“அதான் எனக்கும் ஒன்னும் புரியலை சங்கரி..!” என்று மலர் குழம்ப…

“ஏன் வெற்றி சாரை உனக்கு பிடிக்கலையா..?” என்றாள் சங்கரி.

“அவரை யாருக்காவது பிடிக்காமல் போகுமா..?ஆனால் அவரை செல்வா சார் என்று ஏன் சொல்ல வேண்டும்..! ஒரு வேலை நம்ம செல்வா சாரை சொல்லி இருப்பாளோ..!” என்றாள் மலர்.

“சான்சே இல்லை…அவள் சொல்லும் போது வெற்றி சார் தான் அங்க இருந்தார். அவர் முழு பெயர் வெற்றி செல்வன் தானே…அதான் செல்வா சார் என்று சொல்லிவிட்டு போகிறாள்.அது மட்டுமில்லாமல்…அவர் அவ வகுப்புக்கு.. வகுப்பு ஆசிரியர் வேற…அதான் நேரில் சொல்ல தயங்கி அவளிடம் சொல்லி…உன்னிடம் சொல்ல சொல்லியிருக்கலாம்…என்று அழகாய் குழப்பினாள் சங்கரி..”

“அப்படின்ற..?”

“அப்படித்தான்…! வெற்றி சார்க்கு உன்னை பிடித்திருக்கிறது என்றால்… உண்மையாலுமே நீ லக்கி தான் கவி…” என்ற சங்கரியின் சொற்கள்.. அவளை மேற்கொண்டு யோசிக்க விடாமல் செய்தது.

ஏற்கனவே வெற்றியின் மேல் அவளுக்கு இருந்த ஒரு சிறு ஈர்ப்பு…கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறத் தொடங்கியது.

இதையறியாத செல்வா…ஒரு பக்கம் வாழ்க்கை பற்றிய கனவில் திளைக்க….அவனுக்கு நல்லது செய்து  விட்டோம் என்று எண்ணிய மலர்…நிம்மதியாக வகுப்பில் அமர்ந்திருந்தாள்.

இங்கு வெற்றியோ மலரின் நினைவிலும்….கவியோ வெற்றியின் நினைவிலும்….சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

 

 மலர் பூக்குமா..? வாடுமா…?

 

 

 

Advertisement