Advertisement

மலர் 13:

வெற்றி தன்னையும்,தன் மனதையும் அடக்க மிகவும் சிரமப்பட்டான். ஒரு சில நேரங்களில் இந்த வேலையை விட்டு விடலாமா..? என்று கூட எண்ணினான்.கற்பிக்கும் இடத்தில் இருந்து கொண்டு….ஒருத்தியை மனதில் நினைத்து காதல்,கீதல் என்ற வார்த்தை பேசுவதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை.

தன்னையே மற்றவர்களும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற பயம் தான் அதற்கு காரணம்.ஆனால் இன்று செல்வாவின் வார்த்தைகளையும், பேச்சுக்களையும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை வெற்றியால். 

‘அதற்கு என்ன செய்ய முடியும் வெற்றி.ஆசிரியர் என்றால் காதலிக்க கூடாது என்ற சட்டம் ஏதேனும் உள்ளதா…? இல்லை அதை மறுக்கும் எண்ணம் தான் உனக்கு உள்ளதா..?’ என்று மனம் அவனிடம் கேள்வி கேட்க…

‘அப்படியில்லை…இருந்தாலும் நான் எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும்…? காதலை வெளிப்படுத்தி தான் தெரிய வேண்டுமா என்ன..?’ என்று மனதிடம் எதிர் கேள்வி கேட்டான்.

‘நீயென்ன லூசா….வார்த்தையிலும் சொல்லாமல், முகத்திலும் காட்டாமல்….பிறகு எப்படி சொல்வாய்…அதை எப்படி அவள் புரிந்து கொள்வாள்..?’ என்று மனம் கிண்டல் செய்ய…

‘அவள் சின்ன பெண்..படிப்பையே முடிக்கவில்லை..அதற்குள் எப்படி..?’ என்று வெற்றி என்ன…

‘இருந்திட்டு போகட்டும்…அதனால் என்ன இப்போ….ஏன் அவளுக்கு கல்யாணமே நடக்காதா..இப்படியே இருந்திடுவாளா…. எப்படியும் ஒருவனை மணந்து தான் ஆக வேண்டும்..அது ஏன் நீயாக இருக்க கூடாது..?’ என்று மனம் கேட்க…

‘அதுவும் சரிதான்….சீக்கிரம் இதற்கு ஒரு முடிவை எடுக்கிறேன்…!’ என்று எண்ணிய பிறகு தான் அவனால் நிம்மதியாக உறங்க முடிந்தது.

அங்கு செல்வாவின் வீட்டில் மலரோ…தூங்காமல் விழித்திருந்தாள்.இரவு சாப்பிடும் போதும் அவனிடம் பேசவில்லை அவள்.செல்வாவின் நிலை தான் பாவமாகிப் போனது.

‘இப்ப எதுக்காக மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருக்கா..?’ என்று யோசித்து யோசித்தே அவனுக்கு மண்டை வெடித்து விடும் போல் இருந்தது.

தன் அறையின் கதவு  தட்டப்படும் சத்தத்தில் உணர்விற்கு திரும்பினாள் மலர்.கண்டிப்பாக அது செல்வா தான் என்று அவளுக்கு தெரியும்.ஆனால் அவளுக்கே சில விஷயங்களில் தெளிய வேண்டி இருந்தது.இந்த நேரத்தில் அவனுடன் பேசுவது சரிப்படாது என்று எண்ணியவள்….கதவைத் திறக்கவேயில்லை.

அவள் வருவாள் என்று எண்ணி கதவை தட்டி தட்டி நொந்த செல்வா….ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்புடன் திரும்பி சென்றான்.

கதவு தட்டும் சத்தம் நின்று போக….’போயிருப்பான்…. போனா போகட்டும்..’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் மலர்.

அந்த இரவு முழவதும் யோசனையில் சுழன்றது அவளுக்கு.ஆனால் விடியல் பெரிதாக இருக்கவில்லை. மறுநாள் திங்கள் கிழமை,கல்லூரி செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரமாக எழுந்தாள்.

தன் வேலைகளை முடித்துக் கொண்டு…கிளம்ப….சாப்பிடும் போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.

“என்ன மலர்..? செல்வா மேல் உனக்கு என்ன கோபம்..? ஏன் அமைதியா இருக்க..?” என்றார் திவாகர்.

“ஒண்ணுமில்லைப்பா…” என்று முனுமுனுத்தாள்.

நேற்று வரைக் கெஞ்சிக் கொண்டிருந்த செல்வாவோ… இன்று அவளைக் கண்டும் காணாததும் போல்..சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“எருமை..எருமை…நான் பேசவில்லை என்று கொஞ்சமாவது கவலை இருக்கா பார்..நல்லா தின்னுடா…கிடாமாடு…” என்று மனதிற்குள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

“இப்ப எதுக்கு ரெண்டு பேரும் மூஞ்சியைத் தூக்கிட்டு இருக்கீங்க…?” என்று சத்யா அதட்ட…

“விடு சத்யா…அவங்களுக்குள்ள ஏதாவது சண்டையா இருக்கும்…” என்று திவாகர் சமாதானக் கொடியை பறக்கவிட்டார்.

“முதல்ல இவங்க ரெண்டு பேருக்கும்  கல்யாணத்தை  முடிக்கணும்..அப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கும்..!” என்று போகிற போக்கில் சொல்லி சென்றார் சத்யா.

வாயில் வைத்த உணவு உள்ளே செல்ல மறுத்தது செல்வாவிற்கு. அவனையே பார்த்துக் கொண்டிருந்த மலருக்கு…ஏகத்திற்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. சந்தோஷமாக சாப்பிட்டவள்…”எனக்கு டபுள் ஓகே..சத்யாம்மா…” என்றாள்.

அவளின் வார்த்தைகளில் நிமிர்ந்தான் செல்வா.அவனால் நம்ப முடியவில்லை.மலர் அப்படி சொல்வாள் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.ஆனால் அவளோ.. அவனை அந்த அளவிற்கு எல்லாம் யோசிக்க விடாமல் சட்டென்று சம்மதம் சொன்னது…அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

“அப்படியாடி சொல்ற என் தங்கம்…” என்று சத்யா அவளுக்கு முகம் சுற்றி கை நொடிக்க….அதைக் கண்டும் காணாமல் இருந்தான் செல்வா.

சாப்பிட்டுவிட்டு அவன் கல்லூரி செல்வதற்கான அறிகுறி தோன்ற… வேகவேகமாய் உள்ளே சென்றவள்…தனது பேக் உடன் ஓடி வந்தாள்.

“மெதுவா வா மலர்..” என்று சத்யா சொல்ல…

“இருக்கிற கோபத்தில் உங்க பையன் விட்டுட்டு போய்டுவான்…” என்று சொல்லி சிட்டாய் பறந்தவள்.. வேகமாய் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

அவளின் வேகத்தைப் பார்த்து மனதிற்குள் சிரித்தவன் ஒன்றும் சொல்லாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.ஆனால் மனதிலோ ஆயிரம் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது. மலரிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்.ஆனால் வார்த்தைகள் தான் வரவில்லை.

அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு மனதிற்குள் சிரிப்பாக இருந்தது.”மவனே இருக்குடா உனக்கு..” என்று எண்ணியவள்.. வெளியில் வேடிக்கை பார்க்க…

“மலர் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!” என்றான்.

“நீ என்ன பேச போறேன்னு எனக்கு தெரியும்…இதை நான் முன்னாடியே சொல்லியிருக்கணும்…சாரி நான் தான் ரொம்ப லேட்.எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… நானும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்..” என்றாள்.

“மலர்..!!” என்று சன்னமாய் அதிர்ந்தான்.

“என்ன இதை சொல்லத்தான இவ்வளவு பில்டப் குடுத்த….உனக்கு அந்த சிரமமே வேண்டாம்…உன்னை அந்த அளவுக்கு கஷ்ட்டப்படுத்த மாட்டேன்…” என்றாள் சந்தோஷமாய்.

முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்…”ம்ம்ம்’ என்றதோடு முடித்துக் கொண்டான்.

‘நான் இவளிடம் எப்படி சொல்வதென்று இருந்தேன்…இவள் என்றாள் பட்டென்று உடைத்து விட்டாளே…!’ என்று எண்ணியவன்… அதற்கு மேல் யோசிக்க வில்லை.கல்லூரியும் வந்து விட்டிருந்தது.

“ஓகே செல்வா…பாய்…நான் கிளாஸ்க்கு போறேன்… சிடுமூஞ்சி கிளாஸ் தான் பர்ஸ்ட் …” என்றபடி சிட்டாய் பறந்தாள்.

அவனுக்கும் கடமை அழைக்க…அவளை மறந்து தன்  பணியில் கவனம் செலுத்தத் துவங்கினான் செல்வா.

“என்னாச்சு செல்வா..?” என்றான் வெற்றி ஸ்டாப் ரூமில்.

“ஒண்ணுமில்லை வெற்றி..! ஒரு சின்ன குழப்பம்…. அதான்..” என்று இழுக்க…

“என்ன பிரச்சனை..?” என்றான் வெற்றி.

“இல்லை..வீட்டில் அம்மா கல்யாண பேச்சை எடுக்கிறாங்க.. எனக்கும், மலருக்கும்…!” என்றான்.

மனம் ஆயிரம் அதிர்வலைகளைக் காட்டினாலும்….அதன் சாயம் கொஞ்சம் கூட வெற்றியின் முகத்தில் தெரியவில்லை.

“அதுக்கு என்ன…? நல்ல விஷயம் தானே..மலருக்கு சம்மதம் தானே… என்றான் கொஞ்சம் இருந்த நப்பாசையுடன்..!” என்றான்.

“அவளுக்கு சம்மதம் தான்…ரொம்ப சந்தோஷமா… என்கிட்டவே சொல்லிட்டு போறா..?” என்றான் செல்வா.

அவ்வளவு தான் சுத்தமாக உடைந்தான் வெற்றி.தான் அவளுள் ஒரு சிறு பாதிப்பைக் கூட ஏற்படுத்தவில்லை…. என்று எண்ணியவனுக்கு…மனம் பாறாங்கல்லாய் அழுத்த….

“அப்பறம் என்ன…சீக்கிரம் கல்யாண சாப்பாடு தான்…” என்றான் வரவழைத்துக் கொண்ட மகிழ்ச்சியுடன்.

கிளாஸ் இருக்கு செல்வா..! என்றபடி சென்றான் வெற்றி.

முதல் வகுப்பே…மலர் இருக்கும் வகுப்பு தான்.அவனுக்கு வகுப்புக்கு போகவே மனமில்லை. ஆனால் சொந்த விஷயங்களை இதில் போட்டுக் குழப்பிக் கொள்ள கூடாது என்று நினைத்தவன்..எப்பொழுதும் போல் சாதாரணமாகக் காட்டிக் கொண்டான்.

வகுப்பிற்குள் நுழைந்தவனோ…அவளைப் பார்க்கவே கூடாது என்று எண்ணியிருந்தான். ஆனால் அவனையும் மீறி கண்கள் அவள் புறமே சென்றது.அவளோ தீவிரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.முகம் எப்போதும் இருப்பதை விட…சற்று பிரகாசமாய் இருப்பதைப் போன்று தெரிந்தது வெற்றிக்கு.

ஒப்பனையற்ற பளிங்கு முகம்…அவள் மனதினை முகத்தில் காட்ட…மனசுக்குள் இருக்கும் மகிழ்ச்சி… முகத்தில் தாண்டவமாடியது. அதானால் தானோ என்னவோ அன்று மிகவும் அழகாய்த் தெரிந்தாள்.

‘என்ன பண்ற வெற்றி…!இது கிளாஸ் ரூம்…கண்ட்ரோல் யுவர் செல்ப்…’ என்று தனக்கு தானே சொன்னவன்… பாடத்தில் கவனத்தை செலுத்தினான்.இறுதியில் வெற்றியும் பெற்றான்.

மலருக்கு தான் எரிச்சலாய் இருந்தது.வாரத்தின் முதல் நாள்…முதல் வகுப்பு…இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வகுப்பெடுத்தால் எப்படி இருக்கும்…அதே தான் மலரின் விஷயத்திலும்.

“சிரிப்புன்னா எந்த கடையில் விற்கிறது…?” என்று கேட்பார் போல இந்த சார்… என்று எண்ணியவள்….குரங்கு போல்..அவனை உருவகப் படுத்திப் பார்க்க…அவளையும் மீறி சிரிப்பு வந்தது அவளுக்கு.தன்னையும் மீறி சிரித்து விட…..அவளைப் பார்த்த வெற்றியோ எரிமலையாய் சீறினான்.

“என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு….கெட் அவுட் ஆப் மை கிளாஸ்…” என்று இரைந்தான்.அவனின் கோபம் பார்த்து மிரண்டாள் மலர்.அவனின் இந்த முகம் புதிது.சிடுசிடு என்று இருப்பானே தவிர..இப்படி ஒரு சிரிப்பிற்காக எல்லாம்..வகுப்பை விட்டு வெளியே அனுப்ப மாட்டான். ஆனால் இன்று அவளை அப்படி சொன்னது…அதுவும் எல்லார் முன்னிலையிலும் கத்தியது…அவளுக்கு பெருத்த அவமானமாக போக…சட்டென்று வெளியேறினாள் மலர்.

‘என்ன பண்ற வெற்றி…?எதற்காக இப்பொழுது அவள் மேல் கோபத்தை காட்டுகிறாய்…?தப்பு அவள் மீது இல்லை… உன்மீது தான்…அப்படி இருக்கும் போது…அவளைக் கடிந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்…?’ என்றது அவனின் மனம்.

தேவையில்லாமல் தனது கோபத்தைக் காட்ட மாட்டான் வெற்றி.ஆனால் இன்று ஏனோ அவனையும் மீறி அவள் மேல் கோபப்பட்டு விட்டான்.

‘போ என்று சொன்ன உடனே வெளிய போய்ட்டா…?’ என்று மனதிடம் கடிந்து கொள்ள….

‘அவ என்ன உன் பொண்டாட்டியா…? இருந்து உன்னை சமாதானப் படுத்த..?’ என்று மனம் கிண்டல் அடிக்க….. தன்னைத் தானே நொந்து கொண்டான் வெற்றி.

அவன் பார்க்கும் வேலை..அவன் மனதை வெளிப்படுத்த தடையாய் இருந்தது.இரும்பாய் இருகியிருந்தவனின் மனமும் இறுகிப் போனது.

ஆனால் வெளியே சென்ற மலருக்கோ எரிச்சலாய் இருந்தது.என்ன மனிதர் இவர்….ஏதோ தெரியாம சிரிச்சுட்டேன்….அதுக்கு இப்படியா…” கெட் அவுட் ஆப் மை கிளாஸ்” என்று அவனைப் போலவே சொல்லிப் பார்த்தவள்…. மீண்டும் சிரிப்பு வர…மலர்ந்த முகத்துடன்  வெளியே நின்றிருந்தாள்.

உள்ளிருந்து அவளைப் பார்த்தவனின் கோபம் அநியாயத்திற்கு எகிறியது.

செல்வா வீட்டில்….

“ஏங்க அதான் ரெண்டு பேருமே சம்மதம் சொல்லிட்டாங்களே…! அதனால் உடனே கல்யாணத்தைப் பண்ணிடலாம்…!” என்று சத்யா முகம் எல்லாம் மகிழ்ச்சியுடன் சொல்ல…

“இரு சத்யா…எதுக்கு அவசரப்படனும்…பொறுத்து செய்வோம்…மலர் இப்போதான் முதல் வருஷம்…படிப்பு முடியட்டும்..” என்றார் திவாகர்.

“இப்ப என்ன….கல்யாணம் பண்ணினா படிக்க கூடாதுன்னு இருக்கா….நீங்க செல்வாவை யோசிங்க…அவனுக்கும் வயசு ஏறுது இல்ல…” என்றார் சத்யா.

“அதுவும் உண்மைதான்….செல்வாகிட்ட பேசிட்டு… அவனுக்கு சரி என்றால் செய்வோம்…” என்றார் திவாகர்.

“அதெல்லாம் அவன் சரின்னு சொல்லிட்டான்….மலர் தான் சொன்னா…!” என்று சத்யா சொல்ல..

“சரி ரெண்டு பேரும் வரட்டும்…என்னன்னு முடிவு எடுப்போம்…!” என்று திவாகர் அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைக்க…

சம்பந்தப்பட்ட இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

“என்ன ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கீங்க….?” என்றபடி சத்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள் பனி மலர்.

“ஆமாம்ம்மா….நாங்க வருவது கூட தெரியாமல்..அப்படி என்ன பேசிட்டு இருந்திங்க ரெண்டு பெரும்…?” என்றான் செல்வா.

“நாங்க வேற எதைப் பற்றி பேசப் போறோம்…? எல்லாம் உங்க கல்யாணத்தைப் பத்தி தான்…!” என்று சத்யா சொல்ல…

“அதைப் பற்றி பேச இப்ப என்ன இருக்கு..?” என்று செல்வா கேட்க…

“ம்ம்ம் என்ன இருக்கு…?” என்று மலரும் ராகம் பாடினாள்.

சத்யாவே ஒரு நிமிடம் குழம்பிப் போனார்.காலையில் தான சொல்லிட்டு போச்சுங்க….இப்ப இப்படி பேசுதுங்க..? என்று எண்ணியவர்…

“என்ன ரெண்டு பேரும் விளையாடுறிங்களா….? மலர் காலையில்  நீ தான சொன்ன…?” என்றார் சத்யா.

“ஹி…ஹி..ஆமாம் இல்ல…நீங்க பார்த்து எது செய்தாலும், எப்படி செய்தாலும் எனக்கு சம்மதம்…ஓகே வா…” என்றபடி புள்ளிமானாய் அறைக்குள் சென்று விட்டாள்.

“அப்பறம் என்னங்க..? அதான் அவளும் சரின்னு சொல்லிட்டா…! அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்போம்..நீ என்ன சொல்ற செல்வா..?” என்றார் சத்யா.

“மலர் சொன்னது தான் அம்மா….உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படி செய்ங்க…!” என்றபடி அவனும் சென்று விட்டான்.

“என்னங்க…ரெண்டு பெரும் இப்படி சொல்லிட்டு போறாங்க..?” என்று சத்யா கேட்க…

“இப்ப உனக்கு என்ன பிரச்சனை…? நீ தான இவ்வளவு நேரம் புலம்பி தள்ளிட்டு இருந்த…இனி பிரச்சனை இல்லைதானே…இனி உன் விருப்பம் தான்…ஜமாய்..” என்றார் சந்தோஷமாய்.

“ஆமாங்க இப்பதான் மனசு நிறைஞ்சு இருக்கு…” என்றார் சத்யா.

 

விதியின் விளையாட்டு ஆரம்பம்……..

 

 

 

 

 

 

Advertisement