Advertisement

மலர் 12:

அன்று மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக சென்றிருந்தான் வெற்றி.அவர்கள் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர் விடுமுறையில் சென்றிருந்ததால், வெற்றியை அந்த வகுப்பை எடுக்க சொல்லி…முதல்வர் பணித்திருந்தார்.

“இன்னைக்கு அந்த வெற்றி சார் தான் நமக்கு கிளாஸ் எடுக்க போறாராம்…?” என்றாள் சங்கரி.

“ஏன் நம்ம சார்க்கு என்னாச்சு..?” என்றாள் கவி பாரதி.

“சார் விடுமுறையில் போயிருப்பதால்…அவரை எடுக்க சொல்லியிருக்காங்களாம்….?” என்றாள்.

“ஹோ..அப்படியா…ஆனா அவ சூப்பரா பாடம் எடுப்பாராமே…? எல்லாரும் சொல்லிகிட்டாங்க… அன்னைக்கு நாம கூட செய்முறை வகுப்பில் பார்த்தோமே..?” என்று நினைவு கூர்ந்தாள் கவி பாரதி.

“ஆமாடி…ஆனா சரியான கோபக்காரராம்….சின்ன தப்பு என்று தெரிந்தாலும் பயங்கரமா திட்டி விடுவாராம்..நல்ல வேளை இதுவரைக்கும் நமக்கு வரலை…ஆனா இனி தான் நமக்கு இருக்கு கச்சேரி..!” என்று சங்கரி சொல்லி முடிக்கவும்..வெற்றி வகுப்பிற்குள் வரவும் சரியாய் இருந்தது.

அனைவரும் எழுந்து வணக்கம் சொல்ல…அதை ஒரு சின்ன தலையசைப்போடு ஏற்றுக் கொண்டவன்…அன்று வகுப்பு எடுப்பதற்கான குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் துரை வாயைத் திறந்து பதில் வணக்கம் சொல்ல மாட்டாரோ…?” என்று நொடித்தாள் கவி.

“அடியேய்..வந்தன்னைக்கே வம்பா…வேண்டாம் சாமி ஆளை விடு..அவர் வாயைத் திறந்து வணக்கம் சொன்னா என்ன..? சொல்லாட்டி என்ன..?” என்று சங்கரி சத்தம் வராமல் சொல்ல…அவளையும் மீறி அவள் சத்தம் வெளியே கேட்டு விட்டது.

முதல் வரிசையில் அமர்ந்திருந்த அவர்களை…வெற்றி கூர்மையாய் பார்க்க….

“ஆத்தி…என்ன பார்வைடி இது….விட்டா நம்மை வெளிய அனுப்பினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை….” என்று சங்கரி முனுமுனுக்க…

“பேசாம இரு…ஹி..ஹி…” என்று அவனைப் பார்த்து இளித்து வைத்தாள் கவி.

அவனோ எதையும் பொருட்படுத்தாது….”உங்க சார் வரவரைக்கும்…அவர் பாடத்தை நான் தான் எடுக்க போகிறேன்..! நான் வகுப்பு எடுக்கும் போது…பேசுவது, சிரிப்பது,நக்கல் அடிப்பது…இதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.அதனால் அப்படியானவர்கள் யாரேனும் இருந்தால்…இப்பொழுதே நீங்கள் வெளியே சென்று விடலாம்.நானாக அனுப்பினால்… உங்களுக்கு தான் பாதகம்…” என்றவன்…தன் போக்கில் திரும்பி பாடத்தை எடுக்கத் துவங்கினான்.

“நமக்கு தான் சொல்றார்..!’ என்றபடி வாயை மூடிக் கொண்டாள் சங்கரி.

“இவரு பெரிய இவரு.பேசினா வெளிய அனுப்பிடுவாரு…நீ பேசாம நடத்திகிட்டே இரு…நாங்க எங்க வேலையை செய்யுறோம்…” என்று மனதிற்குள் கவுண்ட்டர் கொடுத்த கவி…சங்கரியை சுரண்ட…அவளோ தீவிரமாய் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள். இல்லையில்லை கவனிப்பவளைப் போல் அமர்ந்திருந்தாள்.

ஆனால் வெற்றியோ அதி தீவிரமாய் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த கவி….ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி…அவன் பாடம் நடத்துவதைக் கேட்கலானாள்.

அனைத்து மாணவர்களும்…தங்களை மறந்து பாடத்தில் லயித்திருந்தனர். இந்த வித்தை எல்லாம் ஒரு சில ஆசிரியர்களால் மட்டுமே முடியும். பாடத்தை தவிர்த்து வேறெங்கும் கவனம் செல்ல முடியாதபடி…அதை நடத்துவது ஒரு பெரிய கலை.அதில் கை தேர்ந்தவனாய் இருந்தான் வெற்றி.

அன்று செய்முறை வகுப்பில்…எப்படி அனைவரும் மெய்மறந்து கவனித்தனரோ…அந்த நிலையில் இருந்தனர்.பாடம் அமைதியாக செல்ல…இடைமறித்தது ஒரு குரல்.

“எக்ஸ்கியுஸ்மி சார்…” என்றபடி வந்து நின்றாள் பனிமலர்.

அவளின் குரலில் சட்டென்று திரும்பினான் வெற்றி. வகுப்பே அவளை வேடிக்கை பார்க்க…

“எஸ்…” என்றான்.

“ராணி மேம் இந்த நோட்டை உங்ககிட்ட குடுத்து சைன் வாங்கிட்டு வர சொன்னாங்க…சார்..!” என்றபடி அவள் நீட்ட…கண்களில் அவனைக் கண்டதும் வரும் பயம் அப்படியே தெரிந்தது.

“என்னடி இது…ஒரு நோட் குடுக்க இந்த பொண்ணு இப்படி பயப்படுது….” என்று சங்கரி சொல்ல…

“உனக்கு விஷயம் தெரியாதா….அவ கிளாஸ் இன்சார்ஜே இந்த சார் தான்..!” என்று கவி சொல்ல…

“விளங்கிடும்…ஒரு மணி நேரத்துக்கே கண்ணாமுழி பிதுங்குது…. நல்லவேளை நாம தப்பிச்சோம்…” என்று சங்கரி சொல்ல…

“இல்லை சங்கரி …ஆனா இவர் நடத்துற விதம் போரடிக்கவே இல்லை..பார்த்தியா..?” என்றாள்.

“அது என்னவோ உண்மைதாண்டி…!” என்று ஒப்புக் கொண்டாள்.

அந்த நோட்டை வாங்கி…அதில் தன்னுடைய கையெழுத்தை அவன் இடும் வரை…பனிமலர் அந்த நோட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அவளைப் பாரேன்..! விட்டா அவர் கையில் இருந்து பிடுங்கிட்டு ஓடிடுவா போல…” என்று கவி சொல்ல…

“ஆள் செம்ம அழகா இருக்கா இல்ல…?” என்றாள் சங்கரி.

“ம்ம்ம் நல்லாத்தான் இருக்கா…ஆனா இவளை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு…!” என்று யோசித்தாள் கவி.ஆனால் நியாபகம் மட்டும் வரவில்லை.

“இந்தாங்க..இதை ராணி மேம் கிட்டவே குடுத்துடுங்க..!” என்று வெற்றி நீட்ட..அதை சட்டென்று வாங்கியவள்….அந்த வகுப்பறையை விட்டு வெளியே சென்று…

“உப்ப்..” என்று பெருமூச்சு விட்டாள்.அவளின் செய்கையைப் பார்த்த வெற்றிக்கு உதட்டில் புன்னகை உதித்தாலும்…வெளியில் தெரியாதவாறு அடக்கிக் கொண்டான்.

“இப்ப சார் சிரிச்சாரோ..?” என்றாள் கவி.

“ம்ம்க்கும்..சிரிச்சுட்டாலும்..” என்று சங்கரி சொல்ல…அதன் பிறகு வந்த இருபது நிமிடங்கள் பாடத்தில் சென்றது.

ஒருவழியாக அன்றைய வகுப்பு முடியும் நேரம் வர…”ஓகே ஸ்டூடண்ட்ஸ்… இந்த பகுதியில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா கேட்கலாம்..” என்றபடி திரும்பினான்.

“ஆனால் ஒருவரும் ஒரு சந்தேகமும் கேட்கவில்லை…. கேட்கும் அளவிற்கு ஒன்றுமில்லை என்பதைப் போல் அமர்ந்திருந்தனர்.

“ஓகே….இது தான் உங்களுக்கு கடைசி வருடம்..அடுத்து என்ன செய்ய போறீங்க…?” என்றான் பொதுவாய்.

“அடுத்து என்ன சார்…நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும் சார்..” என்றான் குறும்புக்கார மாணவன் ஒருவன்.

அவனைப் பார்த்து லேசாக சிரித்தவன்..”அப்படியா..இது ரொம்ப நல்ல விஷயம் ஆச்சே…நாட்டுக்கு இப்ப ரொம்ப முக்கியம்..!” என்றான் வெற்றி.

“ஹிஹி…” என்று அந்த பையன் அசடு வழிய..

“வேற..” என்றான்.

“நல்ல வேலைக்கு போகணும் சார்..” என்றான் ஒருவன்.

“ம்ம் அப்பறம்..” என்றான் வெற்றி.

“கவர்மென்ட் வேலைக்கு போகணும் சார்..” என்றான் ஒரு மாணவன்.

“அப்ப விவசாயம் படிச்சுட்டு யாரும் விவசாயம் பார்க்க போறதில்லை…” என்றான் வெற்றி.

“விவசாயம் பார்த்தா பிழைக்க முடியுமா சார்..” என்று ஒருவன் சொல்ல..

“அது உண்மைதான்….அதெப்படி பிழைக்க முடியும்….”என்று நக்கலாய் வெற்றி சொல்ல..

“இவ்வளவு சொல்றிங்களே..நீங்க மட்டும் என்ன சார்…நீங்க விவசாயம் பார்க்க வேண்டியது தானே..!” என்றான் துடிப்பான மாணவன் ஒருவன்.

“நான் பார்த்தா..விவசாயம் என்னோடு போகும்…நான் கற்றதை வைத்து….பல விவசாய மாணவர்களை என்னால் உருவாக்க முடியும்….உங்களால் முடியுமா…? தேவைக்கு ஒரு டிகிரி…பொழுது போக்கிற்காக படிப்பு என்று வருபவர்களுக்கு புரியாது…இந்த படிப்பின் அருமை.போகப் போக புரிந்து கொள்வீர்கள்.இப்போது வரை எந்த இலக்கும் இல்லாமல் நீங்கள் இருந்தால்…இனியாவது மாறுங்கள்… உங்களுக்கான இலக்கை தீர்மானித்து…அதை நோக்கி செல்லுங்கள்…” என்று சொல்ல…பெல் சத்தம் கேட்கவும்…

“அடுத்த வகுப்பில் பார்ப்போம்..” என்றபடி சென்று விட்டான் வெற்றி.

கேண்டீனில் அமர்ந்து சூடான டீயைப் பருகிக் கொண்டிருந்தனர் வெற்றியும்,செல்வாவும்.

“என்னாச்சு வெற்றி..என்ன ஒரே சிந்தனையில் இருக்க மாதிரி தெரியுது..?” என்றான் செல்வா.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல செல்வா..ஏதோ ஒரு யோசனை…” என்று வெற்றி சொல்ல…

“டேய் எருமை…” என்ற பனிமலரின் குரலில் விழுக்கென்று நிமிர்ந்தான் செல்வா.வெற்றி செல்வாவை பார்த்து அமர்ந்திருந்ததால் அவனை கவனிக்கவில்லை மலர்.

“ஏய்..” என்று அவன் சுற்றும் முற்றும் பார்த்து முறைக்க… அப்பொழுது தான் அவளுக்கு நியாபகம் வந்தது.

“சாரி…செல்வா..இல்லையில்லை…செல்வா சார்…மறந்த நியாபகத்தில் அப்படி கூப்பிட்டு விட்டேன்..!” என்றடி அருகில் வர…

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு….?” என்றான்.

“எனக்கு தலைவலிக்குது.எனக்கும் டீ வாங்கித் தாங்க செல்வா சார்…” என்றபடி அருகில் இருந்தவனைப் பார்த்தவள்….வார்த்தைகள் தந்தியடிக்க…

வெற்றியோ அவளைக் கண்டும் காணாததும் போல் இருக்க…..”அப்பாடா கவனிக்கலை..” என்று மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் மலர்.

“நீ போய் வாங்கிக்க….” என்றான் செல்வா.

“தலைவலின்னு உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு… வீட்டுக்கு வா…சத்யாம்மா கிட்ட சொல்லி நல்லா மொத்த சொல்றேன்…” என்று மலர் சொல்ல…

சட்டென்று அங்கிருந்து எழுந்தான் வெற்றி.அவன் நகர்ந்து செல்ல…அந்த இருக்கையில் அமர்ந்தாள் மலர்.

“ஸப்பா….அந்த சாரை பார்த்தாலே கைகால் எல்லாம் தானா வெடவெடக்குது செல்வா…!” என்றாள் மனதிலிருந்து.

“பரவாயில்லையே…நீ கூட ஒருத்தனுக்கு பயப்படுற..?” என்று செல்வா கிண்டல் செய்ய…அவள் முன் ஆவி பறக்கும் டீயை வைத்தான் வெற்றி.

மலர் நம்ப முடியாமல்…முட்டைக் கண்ணை முழித்து பார்க்க…. ”கிளம்பலாமா செல்வா..?” என்றான் வெற்றி.

“ம்ம் சரி வெற்றி…!” என்றவன்…”முழிச்சு முழிச்சு பார்க்காம… டீயைக் குடிச்சுட்டு கிளாஸ்க்கு போற வழியைப் பார்..!” என்றவன் வெற்றியுடன் சேர்ந்து நகர்ந்தான்.

“என்ன இது..? நான் செல்வா கிட்ட தானே கேட்டேன்… வெற்றி சார் வாங்கிக் குடுத்துட்டு போறார்.என்னடா இது…நமக்கு வந்த சோதனை…?” என்று எண்ணியவள்… வேறேதும் யோசனை செய்யாமல்…அந்த டீயைப் பருகத் தொடங்கினாள்.

“டேய் வெற்றி..இருந்தாலும் நீ ஓவர் சிடுசிடுப்புடா….பாவம் மலர் தினமும் வீட்ல புலம்பி தள்ளுறா…!” என்று செல்வா சொல்ல…

“அது என்னவோ தெரியலை செல்வா…எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிச்சிருக்கு..!அது என்னோட இயல்பா கூட இருக்கலாம்.ஆனா…இப்ப இருக்குற கால சூழ்நிலையில்… பெண்களும் படிக்கும் கல்லூரியில் நாம் இப்படி இருப்பது தான் நல்லது…ஒரு சின்ன விஷயம் என்றாலும் அது எதிர்மறையாக மாறும் வாய்ப்பு அதிகம்..!” என்றான் வெற்றி.

“நிஜம்தான் வெற்றி..!” என்று ஒப்புக் கொண்டான் செல்வா.

“ஆனா…பனிமலர்…முழிக்கிற முழியைப் பார்த்தால்.. என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது…இருந்தாலும் கஷ்ட்டப்பட்டு அடக்குவேன்..” என்றான் வெற்றி.

“உண்மைதான் வெற்றி…அவள் எங்களுக்கு கிடைத்த வரம்…பார்க்கத்தான் சின்ன பொண்ணு…ஆனா ரொம்ப பொறுப்பா நடந்துப்பா…எனக்கே சில சமயம் ஆச்சர்யமாய் இருக்கும்….அம்மாவும் அடிக்கடி சொல்லுவாங்க..எங்க மலர் பொறுப்பு யாருக்கும் வராது என்று…எந்த சூழ்நிலையையும் பக்குவமாக கையாலுவாள். அனைவரையும் புரிந்து கொள்வாள்…அது தான் அவளிடம் இருக்கும் மிகப் பெரிய பிளஸ்…” என்றான் செல்வா.

“ம்ம் படிப்பிலும் கெட்டி தான்..” என்று வெற்றி சொல்ல…

மலரைப் பற்றிய நினைவில் பூரித்து நின்றான் செல்வா.

”செல்வா..” என்று வெற்றி உலுக்க…

“ஒன்னுமில்லைடா….நான் கிளாஸ்க்கு போறேன்..!” என்றபடி நகர்ந்தான் செல்வா.

அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை வெற்றியால்.மலரைப் பற்றி பேசும் போது… அவன் முகம் அடையும் பெருமை..நல்லதா..?கெட்டதா..?” என்று தனக்குள் எண்ணிக் கொண்டான் வெற்றி.

எப்படி இருந்தாலும் நன்மைக்கு என்று எடுத்துக் கொள்வோம்…! என்று தனக்குத் தானே நினைத்தவனாய் அங்கிருந்து சென்றான்.

அதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் புயல் வீசுவதற்கென்றே…..மலரின் கண்களில் பட்டது ஒரு புகைப்படம்.

வீட்டில் செல்வாவின் அறையை சுத்தம் செய்யலாம்.. என்று அவள் செல்ல….அவன் டைரியில் இருந்து விழுந்தது அந்த புகைப்படம்.

“யார் போட்டோ..?” என்று எண்ணியவள்…அதைத் திருப்பிப் பார்க்க பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தாள்.

“செல்வாவின் டைரியில்…அதுவும் இந்த போட்டோ எப்படி வந்தது..?” என்று அதிர்ச்சி மாறாமல் அதையே பார்த்துக் கொண்டு நின்றாள் மலர்.

அவளுக்கு தலையும் புரியவில்லை…வாலும் புரியவில்லை…கண்கள் கலங்க….கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.”மைடியர்..” என்று எழுதியிருந்த அந்த போட்டோவைப் பார்த்தவளுக்கு…தன்னையும் அறியாமல் அழுகை வர…

“நீயா செல்வா இப்படி….உன்னை எவ்வளவு நம்பினேன்…!” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

விடையளிக்க வேண்டியவனோ…விசில் அடித்தபடி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை இருந்த இடத்தில் வைத்து விட்டு வெளியே வந்தாள்.முகத்தில் எதையும் காட்டாமல் வர…

“ஹேய் பப்ளிமாஸ்…..இங்க வா….செம்ம காமெடி படம்..” என்று அவளின் கையைப் பிடித்து இழுக்க….

சட்டென்று கைகளை இழுத்துக் கொண்டாள் மலர்.முதலில் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும்… அன்று முழுவதும் அவனுடன் பேசாமல் அமைதியாகவே வலம் வந்தாள்.

“என்னாச்சு இவளுக்கு…? எதுக்கு இப்படி இருக்கா..?” என்று செல்வா யோசிக்க….மலரோ அவனின் அருகில் வருவதையே தவிர்த்தாள்.

“அம்மா இவளை என்னன்னு கேளுங்க..?” என்றான் செல்வா.

“என்ன மலர்..?” என்றார் சத்யா.

“அம்மா…!!” என்று பல்லைக் கடித்தான் செல்வா.

“என்னன்னு கேளுங்க என்று சொன்னால்..என்ன..? என்று மட்டும் தான் கேட்பிங்களா..?” என்றான் கடுப்புடன்.

“நீதானடா அப்படிக் கேட்க சொன்ன…!” என்று சிரித்தவர்…

“சொல்லுடா மலர்…ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு…என்ன பிரச்சனை…இந்த தடியன் ஏதும் சொன்னானா…?” என்றார் சத்யா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சத்யாம்மா…! எனக்கு தலைவலிக்குது…! நான் போய் கொஞ்ச நேரம் தூங்குறேன்..” என்றபடி அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

சத்யா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செல்ல….அவளின் முகத்தைப் பார்த்த செல்வாவிற்கோ முகம் யோசனையில் சுருங்கியது.

அறையில் சென்று படுத்த மலருக்கோ…அந்த போட்டோவும்,அந்த வார்த்தைகளும் கண்முன் தோன்ற…கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அவளின் மவுனத்திற்கு காரணம் தெரியாமல் தவித்து நின்றான் செல்வா…!!!

வெற்றியோ…தனது வீட்டில் மாறுபட்ட மனநிலையில் யோசனையில் இருந்தான்…!!.

அன்பே அன்பே…

இது நிஜம் தானா சொல்…!

சகியே..சகியே…

என்னைக் கொல்லாமல் கொல்லாதடடி….!

 

 

 

 

Advertisement