Advertisement

மலர் 11:

தேனி விவசாயக் கல்லூரி….ஆண்டிப்பட்டி அருகே.. குள்ளப்புரம் என்ற கிராமத்தில் அமைந்திருந்தது.சுமார் நூற்றி இருபது ஏக்கர் பரப்பளவில்… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாய் காட்சியளித்தது.கல்லூரி வளாகமும்,அழகான கட்டிடங்களும்,சுற்றிலும் வயல் வெளிகளும்…. மாணவர்களுக்கு..செயல் முறை விளக்கத்திற்கு வயல்களும்… நாற்றங்கால்…விதைகள்…. உழுதல்,விதைத்தல் என தனி தனியான பகுதிகள்  காணப்பட்டது.

கேட் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட அந்த கல்லூரியில்…இளநிலை விவாசய பட்டப் படிப்பில் சேர்ந்திருந்த முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகை அன்று.

சாக்லேட் வண்ண சுடிதாரில்…..அன்றலர்ந்த பூவாய்…முதல் நாள் கல்லூரியில் நுழைந்தாள் மலர்.அவர்களுக்கான சீருடை வழங்கும் வரை… அவர்கள் கலர் டிரசில் வரலாம் என்ற அனுமதியில்… முதல் நாள் தனக்கு பிடித்த நிறத்தில் சுடிதார் அணிந்து வந்திருந்தாள் மலர்.

ஏனோ அந்த கல்லூரியும்…அதனை சுற்றி இருந்த பசுமையும் அவளை வெகுவாய் கவர்ந்தது.எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல்….சுற்றிலும் இயற்கையின் வனப்பு மட்டுமே மிகுந்த அந்த இடத்தை யாருக்கு தான் பிடிக்காமல் போகும்.

முதல் நாள் என்பதால்…எங்கு செல்ல வேண்டும்,எப்படி செல்ல வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை. உடன் வந்த செல்வா….வண்டியை பார்க் செய்ய சென்றிருக்க…அங்கிருந்த செடி கொடிகளை ரசித்தவாறு அவள் நடந்து கொண்டிருக்க…

அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாணவி கவிபாரதி…வேகமாக அவளைக் கடந்து சென்றாள்.

போன வேகத்தில் அவளை இடித்துக் கொண்டு செல்ல….இதை எதிர்பார்க்காத மலர் தவறி விழப் போனாள்.

“ஏய் மலர்…!” என்றபடி அங்கு வந்த செல்வா அவளை விழாமல் பிடிக்க….

“ஹப்பா…நல்ல வேளை…இல்லைன்னா இன்னைக்கு புதையல் எடுத்திருப்பேன்…” என்றபடி செல்வாவை நன்றியுடன் பார்க்க…

“நடக்கும் போது பேலன்ஸ் பண்ணி நடக்கணும்..எப்ப பார்த்தாலும் பொத்து பொத்துன்னு விழுந்து வைக்க கூடாது…” என்று அதட்டினான் செல்வா.

ஆம்….! செல்வா அந்த கல்லூரியில் ஆசிரியராக பணியில் இருந்தான்.பனி மலருக்கும்..அவனைப் போல் விவசாயம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட….கவுன்சிலிங் போட்டாள்.

ஒருவழியாக அவன் வேலை செய்யும் அந்த கல்லூரியிலேயே இடமும் வாங்கி விட்டாள். சத்யாவிற்கு இருந்த பெரிய மனக்குறை அன்றோடு தீர்ந்தது என்றே சொல்லலாம்.அவளை எங்கும் தனியாக அனுப்ப அவருக்கு பயம்…அதற்காகவே அவளை கல்லூரி விடுதியில் சேர்க்காமல்…தேனியில் தங்கியிருந்தனர்.

“எப்பா சாமி…!காலையிலேயே அட்வைஸ் மழையை பொழியாதிங்க..!” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

“எல்லாம் என் நேரம்..!” என்று தலையில் அடித்துக் கொண்டான் செல்வா.

“சரி..சரி..என் கிளாஸ் ரூம் எங்க இருக்கு..?” என்றாள்.

“என்கூட வா..! நான் கூட்டிட்டு போறேன்..!” என்றபடி செல்வா அவளை அழைத்து செல்ல….அவன் பின்னால் சென்ற மலருக்கு அவனை நினைத்து பெருமையாக இருந்தது.

“என்ன மாதிரி மனிதன் இவன்…! எனக்கு பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று இவனுக்கு என்ன தலையெழுத்தா…?” என்று எண்ணியவள்…அவனை பின் தொடர்ந்தாள்.

“சும்மா சொல்லக் கூடாது செல்வா..பார்க்க அப்படியே அரவிந்த் சாமி மாதிரி இருக்க…ம்ம்ம்..” என்று அவள் கிண்டல் அடித்துக் கொண்டே செல்ல…

“பண்ணி….(பனியின் சுருக்கமாம்…) இது காலேஜ்…இங்க நான் வாத்தியார்…நீ ஸ்டூடன்ட்…நியாபகத்தில் வச்சுக்கோ சரியா..?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“ஹி..ஹி..அப்படின்ற..சரி சரி..” என்றபடி அவள் தனது வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

“ஆல் த பெஸ்ட்….! எனக்கு கிளாஸ் இருக்கு..பார்த்து இருந்துக்கோ..!” என்று செல்வா நகர போக..

“நான் என்ன ஸ்கூல் ஸ்டூடண்ட்டா….நீ போ….சாரி…நீங்க போங்க சார்…நான் பார்த்துக்குறேன்..!” என்றபடி சிரிக்க…

“அடிப்பாவி….!” என்று வாயைப் பிளந்தபடி சென்றான் செல்வா.

ஏனோ அன்று மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தாள் பனி மலர்.அது ஏன் என்று அவளுக்கு தெரியவில்லை.

அது போல்….செல்வாவும் அன்று ஏனோ மிகவும் மகிழ்ச்சியாய் உணர்ந்தான்.இறுதியாண்டு மாணர்கள் பயிலும் வகுப்பறைக்குள் நுழைந்தான் செல்வா.

கவிபாரதி அன்று கடுப்புடன் அமர்ந்திருந்தாள். காலையிலேயே அவள் தம்பி கிஷோர் உடன் சண்டை.அதனால் ஏனோ அன்று அவளுக்கு மனநிலை சரியாக இல்லை.

செல்வா…பாடம் எடுத்துக் கொண்டிருக்க….”என்னடி ஆச்சு…ஏன் டல்லா இருக்க..?” என்றாள் சங்கரி.

“ஒன்னும் இல்லடி…காலையிலேயே தம்பி கூட சண்டை..அதான் அப்செட்…” என்றாள்.

“இது உனக்கே ஓவரா தெரியலை…அப்படிப் பார்த்தா.. நீங்க வாரத்தில் ஏழு நாளும் தான் சண்டை போடுறிங்க…? அதெல்லாம் எதில் சேர்த்தி..” என்று சங்கரி வாரி விட…

“நீயெல்லாம் நல்லா வருவடி..” என்று பல்லைக் கடித்தாள் கவிபாரதி.

“அங்க என்ன பேச்சு…?” என்று செல்வா கத்த…

அப்பாவியைப் போல் முகத்தை வைத்துக் கொண்டனர் இருவரும். அவர்களின் முக பாவனைகளைப் பார்த்து செல்வாவிற்கு சிரிப்பு வர…..சிரிக்காமல் அடக்கிக் கொண்டான்.

“இந்த ஆளுக்கு பெரிய கடமை கண்ணாயிரம் என்று நினைப்பு…எப்ப பார்த்தாலும் பாடம் எடுத்தே கொள்ளுறார்…” என்று சங்கரி நொடிக்க…

“ஏண்டி..! நல்லாத்தானே  நடத்துகிறார்…இதில் என்ன குறையைக் கண்ட…?” என்று கவி சொல்ல…

“அதெல்லாம் உன்னை மாதிரி படிக்கிற புள்ளைங்களுக்கு…எனக்கு இல்ல…” என்று சங்கரி சொல்ல…கவி சிரிக்க…அந்த வகுப்பும் முடிந்திருந்தது. செல்வாவும் கண்டும் காணாமல் சென்றிருந்தான்.

மலருக்கு ஏனோ அன்று பொழுதே போகவில்லை.முதல் நாள் என்பதால் அவர்களுக்கு வகுப்புக்கள் ஆரம்பிக்கப் படவில்லை.அறிமுகப் படலம் மட்டுமே நடந்தது.

அந்த நாள் எப்பொழுது முடியும் என்று காத்திருந்தாள் மலர்.ஒரு வழியாக மாலை வேளை நெருங்க…கல்லூரியும் விட்டது.

செல்வாவைத் தேடி மலர் செல்ல…அவனோ…கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி காத்திருக்க சொன்னான்.

“சரி” என்றபடி அவள் வெளியே வர….மீண்டும் அவளை இடித்துக் கொண்டு ஓடினாள் கவி.

“ஏங்க நில்லுங்க…!” என்றாள் அதட்டலாய்.

“யாருடா இது…நம்மை இப்படி அதட்டிக் கூப்பிடுவது..?” என்றபடி திரும்பினாள் கவிபாரதி.

“என்ன..?” என்றாள்.

“காலையிலும் இடிச்சுட்டு நீங்க பேசாம போய்ட்டிங்க…! இப்பவும் இடிச்சுட்டு…ஒரு சாரி கூட சொல்லாம போறீங்க..!” என்றாள் கோபமாய்.

“இடிச்சேனா…சாரி…கவனிக்கலை..” என்றபடி திரும்பி செல்ல…

“இதுக்கு நாம கேட்காமையே இருந்திருக்கலாம்…” என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

“யாருக்கு அர்ச்சனை..” என்றபடி செல்வா வர…”எல்லாம் அந்த இடிச்ச பொண்ணு தான்…” என்று முகத்தை சுருக்கிக் கொண்டு சொல்ல… செல்வாவின் பின்னால் வந்த நெடியவனைக் கண்டு திகைத்தாள் மலர்.

“யார் செல்வா இது..?” என்று கேட்க…

“ம்ம்ம் இவனும் இங்க வாத்தி தான்…என் நண்பனும் கூட….” என்றான்.

“பிரண்டுன்னு சொல்ற…ஒரு நாள் கூட வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததில்லை…” என்றாள்.

“அவன் வந்திருக்கான்…நீ தான் அப்ப வீட்டில் இருந்ததில்லை…” என்று பதில் சொன்னவன்…

“அப்போ கிளம்பலாமா வெற்றி…!” என்றான்.

“ம்ம்ம்..” என்றான் மலரை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டே.

“சீக்கிரம் வா செல்வா….எனக்கு பசில உயிரே போய்டும் போல… சிறுகுடலை பெருங்குடல் தின்று விடும் போல..” என்றாள்.

“சரி..சரி…கிளம்பலாம்…” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு சென்றான் செல்வா.

அவர்கள் சென்ற திசையையே வெறித்துக் கொண்டு நின்றான் வெற்றி.

“சத்யாம்மா…சத்யாம்மா..!” என்றபடி வீட்டிற்குள் வேகமா நுழைந்தாள் மலர்.

“என்னாச்சு மலர்…!” என்று சத்யா அடித்து பிடித்து வர….

“மெதுவா வாங்க..எனக்கு பசிக்குது…சாப்பிட ஏதாவது குடுங்க..!” என்றாள்.

“இவ்வளவுதானா…?நான் கூட என்னமோ ஏதோ என்று பயந்துவிட்டேன்..!” என்று சத்யா பெருமூச்சை விட..

“அம்மா இவளுக்கு சாப்பாட்டை விட முக்கியமான ஒன்னு இருக்கா..நெவர்….” என்றான் பின்னால் வந்த செல்வா.

“பாருங்க சத்யாம்மா…இவன் காலேஜ்ல வேலை பார்க்கிறான்னு பேரு…ஆனா செய்றது எல்லாம்… ரோமியோ வேலை..எல்லா பொண்ணுங்களையும் சைட் அடிக்கிறான்..!” என்றாள் மலர்.

“என்ன செல்வா…? மலர் சொல்வது உண்மையா..?” என்றார் சத்யா.

“ஐயோ அம்மா..அவதான் ஏதோ சொல்றான்னா… நீங்களும் உங்க பையனை நம்பாம கேள்வி கேட்குறிங்க..!” என்றான் அப்பாவியாய்.

“மலர் பொய் சொல்ல மாட்டா..!” என்றார் சத்யா.

“விளங்கிடும்….யாரு இவ…பொய்..சொல்லவே மாட்டாளா….? எல்லாம் என் நேரம்…”என்றபடி தலையில் அடித்துக் கொண்டு சென்றான்.

“சத்யாம்மா…நான் சும்மா தான் சொன்னேன்..!” என்று மலர் சிரிக்க….உன்னை பற்றி எனக்கு தெரியாத என்ற ரீதியில் பார்த்து வைத்தார்.

அவளின் கல்லூரி வாழ்க்கையும்….மகிழ்ச்சியாய் போய்க் கொண்டிருந்தது. தினமும் செல்வா உடனே சென்று… அவனுடனேயே வந்து விடுவாள்.இது சத்யாவின் உறுதியான கட்டளையாக இருந்தது.

கல்லூரியும் அவளுக்கு மிக மிக பிடித்தமானதாக இருந்தது.கவிபாரதியை அதற்கு பிறகு அவள் சந்திக்கவில்லை.

கல்லூரியில் அவளுக்கு பிடிக்காத ஒரு வகுப்பு என்றால் அது வெற்றியின் வகுப்புதான்.

மற்ற ஆசிரியர்கள் இலகுவாய் பழக…வெற்றியோ கஞ்சி போட்டவன் போல் விறைப்பாகவே இருப்பான்.ஏனோ அவனைப் பார்த்தாலே அவளுக்கு ஒரு வித பயம். அவளுக்கு மட்டும் என்றில்லை….. அனைவருக்குமே அப்படித்தான்.

வெற்றியின் கடுமை அவனிடம் யாரையும் நெருங்க விடாது.செல்வாவைத் தவிர அனைவரும் அவனிடம் விலகியே நிற்பர்.

“இன்னைக்கு அந்த சிடுமூஞ்சி கிளாஸ் இருக்கு..!” என்று நொந்தவளாய் கிளம்பினாள் மலர்.

“என்னாச்சு மலர்…? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றான் செல்வா.

“ஒண்ணுமில்லை செல்வா….இன்னைக்கு அந்த சிடுமூஞ்சி கிளாஸ் இருக்கு..!” என்றாள் பரிதாபமாய்.

“ஏய்..! எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…அவனை சிடுமூஞ்சின்னு சொல்லாதே என்று..!” என்று அதட்டினான் செல்வா.

“இது உனக்கே ஓவரா தெரியலை…ஒருத்தர் சிடுசிடுன்னு இருந்தா சிடுமூஞ்சின்னு தான் சொல்வாங்க…!” என்றாள்.

“என்னதான் இருந்தாலும் அவன் டீச்சர்…இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா…?” என்று கேட்க…

“நான் தெரியாம கேட்கிறேன்…நீ படிக்கும் போது இப்படியெல்லாம் பேசினதே இல்லையா..? என்னா புலம்பு புலம்புவ…? இப்ப சார் ஆனா உடனே பில்டப்பா..” என்றாள்.

“அம்மா தாயே…! என்னை ஆளைவிடு….” என்றான்.

“அது…!அப்படி வா வழிக்கு…” என்றாள்.

“ஆமா என்ன கிளாஸ் இன்றைக்கு…?” என்றான்.

“ம்ம்ம் நாற்று நடப் போறோம்..!” என்றாள் சிரித்தவளாய்.

“நடுங்க நடுங்க..! நல்லா நடுங்க..!” என்றான்.

“ஐயோ கடவுளே..! எனக்கு புல்லு கூட நடத் தெரியாது..என்னைப் போய் நெல்லு நட சொல்றாங்க…? இதை கேட்க யாருமே இல்லையா..?” என்று மலர் மேலே பார்த்து புலம்ப…

“மலர்…! புல்லு தானாதான் முளைக்கும்… அதையெல்லாம்  நடவேண்டிய அவசியமில்லை..” என்று சிரிப்புடன் சொல்ல…

“ம்ம்ம் நக்கலு…” என்றாள்.

“அதே தான் எப்படி கண்டுபிடிச்ச…?” என்று வாரினான்.

பேசிக் கொண்டே வந்ததில் கல்லூரியும் வந்து விட்டிருந்தது.

அன்றைய நாள் நல்லபடியாக செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டே சென்றாள் மலர்.அவள் படப் போகும் பாட்டை அறியாமல்.

செயல்முறை வகுப்பிற்காக…அங்கிருந்த வயலுக்கு அழைத்து சென்றான் வெற்றி.அங்கு ஏற்கனவே மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருக்க… இவர்களும் அவர்களுக்கு அருகில் உள்ள வயலில் இறங்கினர்.

மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர்…எப்படி நாற்றை நடுவது என்று சொல்லிக் காட்ட…இவர்கள் அதைப் பின்பற்றி நாற்றை நடத் தொடங்கினர்.

ஆனால் பனி மலருக்கோ   கை வரவேயில்லை.என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க…. அவளைப் பார்த்த வெற்றி கடுப்படைந்தான்.

“என்ன பண்ணிட்டு இருக்க…?” என்றான் கடுப்பாய்.

“சார்….நெல்…நாற்று…நட…” என்று அவள் திக்கித் திணற….

“இப்ப எதுக்கு இப்படி நிக்குற…மத்தவங்க எல்லாம் எப்படி செய்றாங்க என்று பார்….அதைப் பார்த்து செய்..” என்று அதட்ட…

“எனக்கு வர மாட்டேங்குது சார்..!” என்றாள் பாவமாய்.

“உங்களுக்கு எல்லாம் தட்டுக்கு சாப்பாடு ஈசியா வந்துடுது.ஆதான் எந்த கஷ்ட்டமும் இல்லாம வளர்ந்துட்டு வந்து…இப்ப எங்க உசுர வாங்குறிங்க..” என்று எரிந்து விழுந்தவன்….

அங்கிருந்த நாற்றுக் கட்டு ஒன்றை எடுத்தான்.தனது பேண்டை கொஞ்சம் மேலே உயர்த்தி விட்டவன்…. சட்டென்று வயலில் இறங்கினான்.

அனைவரும் ஆச்சர்யமாய் பார்க்க…இறுதியாண்டு மாணவர்கள் குழுவில் இருந்த கவிபாரதியும் அவனை ஆர்வமுடன் பார்த்தாள்.

“கவனிங்க எல்லாரும்….எப்பவுமே நெல் நாற்று கட்டு…இடது கையில் இருக்க வேண்டும்…ஒவ்வொரு நாற்றையும் பிரித்து எடுத்து நடும் போது…வலது கையின் ஆள்காட்டி விரலும்,பெருவிரலும் மட்டுமே ஈடுபட வேண்டும்.அப்பொழுதுதான்….சீரான இடைவெளியில்… நேராக,சரியாக நட முடியும்…” என்று சொன்னவன்…சில நிமிடங்களில்…கையில் இருந்து அந்த நாற்று முழுவதையும் நடவு செய்து முடித்தான்.

அவன் அதை செய்த லாவகத்தைப் பார்த்த இறுதியாண்டு மாணவர்கள் அவனை ஆச்சர்யமாய் பார்க்க…..மலரோ..வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

கவிபாரதியோ அவனை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி பண்ணிட்டு இருக்க கவி..?” என்று சங்கரி உலுக்க…

“ம்ம்ம்…ஒண்ணுமில்லை…” என்றபடி தன்னிலை அடைந்தாள்.

“சூப்பர் சார்..!” என்று அனைவரும் கைதட்ட….

“இது கைதட்ட வேண்டிய விஷயமில்லை…கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.நாம் சாப்பிடும் உணவிற்கு பின்னால்…எத்தனை பேருடைய உழைப்பும், வியர்வையும் இருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

கொஞ்ச நேரம் இந்த வயலில் நிற்பதற்கே….பலரின் முகம் சங்கடத்தைக் காட்டுகிறது.நாள் முழுவதும்…இதே வயலில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளின் நிலையை நினைத்துப் பாருங்கள்….ஏனோ தானோ என்று படிக்காமல்….ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று மனதில் வைத்து படியுங்கள்…. எப்பொழுதும் கற்றுக் கொள்ள தயங்கவே கூடாது.

விவசாயம் தானே படிக்கிறோம் என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்….இந்த விவசாயம் தான் முதுகெலும்பு.அதைப் படிக்கும் நீங்கள்…இதில் எப்படி புதுமையைப் புகுத்தி வெற்றி பெறலாம் என்று எண்ணுங்கள்…குறைந்த செலவில்..குறைந்த தண்ணீரில்… எப்படி விவாயம் செய்யலாம்..எப்படி செய்ய முடியும் என்று யோசியுங்கள்…பெரிய பதிவிகளுக்கு செல்ல வேண்டும் என்று எண்ணுவதை விட…..அழிந்து வரும் நம்முடைய வாழ்வாதாரத்தை எப்படி காப்பது என்று முயற்சி செய்யுங்கள்….

பிறகு பாருங்கள்..! படிக்கும் பாடமோ..கற்றுக் கொள்ளும் விவசாயமோ…உங்களுக்கு கஷ்ட்டமாக தோன்றாது…!” என்றான்.

அனைவரும் வாயைப் பிளந்து அவனைப் பார்த்துக் கொண்டிருக்க…”இந்த சார் இவ்வளவு பேசுவாரா..?” என்று விழித்துக் கொண்டு நின்றாள்.கையில் நெல் நாற்றை வைத்துக் கொண்டு..அவள் விழித்துக் கொண்டிருக்கும் அழகைப் பார்த்தால்….யாருக்கும் அவளைப் பிடிக்காமல் போகாது.

அவன் பேசியதைக் கேட்ட கவியோ…”சூப்பர்..” என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

“சும்மா சொல்லக் கூடாது…இந்த சார்கிட்ட சரக்கு நிறைய இருக்கு..!” என்று சங்கரி காதைக் கடிக்க….

“உண்மைதான்..” என்றாள் கவிபாரதி.

அவர்களை விட்டு விலகி நடந்தான் வெற்றி….! பனி மலர்..சக மாணவிகளுடன் சேர்ந்து..அவன் சொன்ன மாதிரி நடவு செய்து பழகிக் கொண்டிருந்தாள்.

சிறிது தூரம் சென்ற வெற்றியோ…திரும்பி நின்று அவளைப் பார்த்தான்.அவன் பார்ப்பதைக் கவனிக்காத மலர்..தன் வேலையில் மும்முரமாய் இருக்க… அவளையே பார்த்துக் கொண்டு நின்றவன்….சட்டென்று தன்னை உலுக்கியவனாய்….திரும்பி நடந்தான்.

பார்வையின் பொருளை யார் அறிவார்..?

 

 

 

 

 

Advertisement