Advertisement

மலர் 10:

வெற்றி இப்படி செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அனைவரை விடவும் அதிர்ந்தது சாரதி தான்.இப்படி ஒரு திருப்பத்தை அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.

கவி பாரதியின் கண்களோ…கோபத்தைக் கக்கிக் கொண்டிருந்தது. வெற்றியோ சிறிதும் அசராமல் அவளை எதிர்கொண்டான்.உனக்கு நான் சளைத்தவனில்லை என்பதைப் போல் இருந்தது வெற்றியின் பார்வை.

“வெற்றி என்ன பண்ணி வச்சிருக்க..?” என்று துர்கா கோபமாக கத்தத் துவங்கினார்.

“ஒன்னும் பண்ணல…எதை செய்யணுமோ அதை செய்திருக்கேன்…இதில் வருத்தபடவோ,கோபப்படவோ இடம் இல்லை…” என்றான் வெற்றி.

“இதை செய்ய உனக்கு எவ்வளவு தைரியம்..?” என்றார் சத்யா.

அவரைப் பார்த்து புன்னகை செய்தவன்…”உண்மைதான்..” என்றதோடு முடித்துக் கொண்டான்.

“உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை வெற்றி…!” என்றார் திவாகர்.

“அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்..?” என்றான் வெற்றி.

தனமோ அழுது கொண்டிருக்க…அவருக்கு ஆறுதல் சொல்லும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் விஜயன்.

இவர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க…..பேச வேண்டிய மலரோ எதுவும் பேசாமல் திக் பிரமை பிடித்தவள் போல் நின்றிருந்தாள்.

“ஏன் வெற்றி இப்படி பண்ணின..?” என்றான் சாரதி.

சாரதியைப் பார்த்து புன்னகைத்த வெற்றி…”இதில் உனக்கு வருத்தமோ…?” என்றான் இடக்காய்.

அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான் சாரதி.

“எந்த இடத்தில் ஒரு நண்பனை நம்ப வேண்டுமோ..அந்த இடத்தில் நீ என்னை நம்பவில்லை.நியாயமாகப் பார்த்தால்…இந்த இடத்தில் நீ சந்தோசம் தான் பட வேண்டும்…ஆனால் நீ படவில்லை.இயற்கையில் நீ கெட்டவனில்லை. சந்தர்ப்பமும்,சூழ்நிலையும் உன்னை அப்படி சித்தரிக்கிறது….ஆனால் இழந்த நட்பை புதுபிக்க….எனக்கு அவகாசம் வேண்டும்…சட்டென்று என்னால் மாற முடியாது..” என்றான் வெற்றி.

“வெற்றி..!!!!!” என்று அதிர்ந்து நோக்குவதைத் தவிர…சாரதிக்கு வேறு வழி தெரியவில்லை.

கவிபாரதியின் அருகில் சென்றான் வெற்றி.

“நான் திருமணத்திறுகு சம்மதம் என்று சொன்ன உடனே உனக்கு தெரிந்திருக்க வேண்டாம்…இதில் என்னுடைய வேலையைக் காட்டுவேன் என்று..?” என்றான் கிண்டலாய்.

முகம் இறுக நின்றிருந்தாள் கவிபாரதி.உணர்வுகளை அடக்க அவள் படும் பாடு அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

“இப்போ கவலைப் பட்டு ஒன்னும் செய்ய முடியாது.காலம் கடந்து வரும் ஞான உதயம்…தேவையில்லாதது… ஆனாலும் உன்னை பாராட்டியே ஆக வேண்டும்…கொஞ்சம் கூட அசராமல்…பிடித்த பிடிவாதம் மாறாமல் அப்படியே இருக்கும் உன்னை கண்டு உண்மையாகவே எனக்கு மெய் சிலிர்க்கிறது.” என்றான் வெற்றி.

“போதும் நிறுத்துங்க..!” என்றாள் கவி.

“நான் ஏன் நிறுத்த வேண்டும்…உண்மையை சொன்னால் கசக்குதோ..??” என்றான்.

எதுவும் புரியாமல்,என்ன பிரச்சனை என்று தெரியாமல் அனைவரும் குழம்பி நிற்க…பனி மலரோ…தனக்கு நடந்த திருமணத்தில் இருந்து மீளாமல் நிற்க…வெற்றியோ கவிபாரதியை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான்.

“உன்னோட பிடிவாதத்தால நீ சாதித்தது என்ன…? பெரிய பதவிக்கு சென்று விட்டால்..கடந்த காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடுமா..?” என்றான்.

“நானும் எதையும் மறக்கவில்லை.இப்பவும் சொல்றேன்.. என்மேல் எந்த தப்பும் இல்லை…என்னுடைய பக்கம் இருந்து பார்த்தால் அதுவே சரி…மற்றவர்களின் விருப்பத்திற்காக நான் ஆட முடியாது.எனக்கென்று ஒரு சுய கவுரம் உள்ளது.அதை எந்த நேரத்திலும் நான் இழக்க மாட்டேன்…” என்றாள்.

“இந்த ஆள்கிட்ட எதுக்குக்கா போய் பேசிட்டு இருக்க…? நீ கிளம்புக்கா… இவனை விட நல்ல மாப்பிள்ளையா பார்த்து நான் உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்…”என்றான் அவளின் தம்பி கிஷோர்.

“கிளம்பு கிளம்பு….அதான் உன் தம்பி சொல்றான் இல்ல…” என்றவன்…

“உங்க அக்காவுக்கு இந்த ஜென்மத்தில் அப்படி ஒரு நிகழ்வு நடக்க போவதில்லை.இவளின் குணத்திற்கு எவனும் இவளைக் கட்ட மாட்டான்…” என்றான் வீம்புக்கென்று.

எதை சொன்னால் அவள் பாய்வாள் என்று தெரிந்தே சொன்னான் வெற்றி.அவன் எண்ணம் போல் அது சரியாக வேலை செய்தது கவி பாரதியிடம்.

“உங்களுக்கு இவ்வளவு அகம்பாவம் ஆகாது மிஸ்டர் வெற்றி..என்ன சொன்னிங்க…? எனக்கு…திருமணமே நடக்காதா…வந்த அத்தனை பேரையும் விட்டு…உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்ததற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசலாம் என்று அர்த்தமில்லை…” என்று அனல் கக்க சொன்னவள்…. சாரதியின் முன்னே சென்றாள்.

சாரதி எதுவும் புரியாமல் நிற்க….

“இப்பவும் உங்களுக்கு என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா..?” என்றாள்.

சாரதிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தன்னிடம் வந்து இப்படி சாந்தமாக பேசுவது கவி பாரதி தானா என்ற சந்தேகமே வந்து விட்டது அவனுக்கு.

“சொல்லுங்க சாரதி…உங்களுக்கு விருப்பமா…?” என்றாள் விடாமல்.

அப்பொழுது தான் சாரதி நண்பன் வெற்றியைப் பார்த்தான். அவன் முகம் சொன்ன செய்தி…சாரதிக்கு பெறுத்த ஆச்சர்யம்.இது முழுவதும் நண்பனின் வேலைதான் என்பதை உணர்ந்து கொண்டான் சாரதி.

வெற்றி ஜாடை காட்ட…

“எனக்கு விருப்பம் தான் இப்பவும்….” என்றான் சாரதி.

“என்ன நடக்குது இங்க..? எல்லாமே நீங்களா பேசி முடிச்சுகிட்டா பெரியவங்க நாங்க எதுக்கு இருக்கோம்…?” என்று சாரதியின் தாய் சந்திரா சத்தம் போட…

“கவி பேசாம இரு..!” என்று அதட்டினார் விஜயன்.

“நீங்க பேசாம இருங்கப்பா….வலிய சென்றதால்.. என்னுடைய அருமை சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.என் வாழ்க்கை என் கையில்…. அதை கேலிக் கூத்தாக ஒருவர் பேசும் போது..அதை என்னால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது..” என்றாள் தீர்க்கமாக.

“கவி…” என்று தனம் அழுக….அவரை முறைத்தாள் கவி.

“எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான்..” என்பது போல் இருந்தது அந்த பார்வை.

“வாய்ச் சொல் வீரன் வாள் வீச மாட்டான்..” நீ கேள்விப் பட்டதில்லையா..? என்றான் வெற்றி.

“வெற்றி என்ன நடக்குது…இந்த பொண்ணை உனக்கு முன்னமே தெரியுமா..? என்ன பேசிட்டு இருக்கீங்க…அப்படி என்ன தான் பிரச்சனை…?” என்று ரத்தினம் சத்தம் போட..

கவியின் கண்கள்….மலரை வெறித்து நோக்க…அந்த பார்வையின் பொருள் புரியாமல் முழிப்பது மலரின் முறையாயிற்று.

அடுத்த சில நிமிடங்களில்…சாரதியின் கையால் தாலி வாங்கியிருந்தாள் கவி பாரதி.அந்த இடத்தில் அவளை விட்டுக் கொடுக்க முடியாமல் அவள் சொல்லியதற்கு தலையை ஆட்டி விட்டானே தவிர….சாரதிக்கும் அதில் சுத்தமாக உடன் பாடு கிடையாது.அவனின் அம்மாவிற்கோ உள்ளுக்குள் நெருப்பாய் எரிந்தது.

இதில் அதிகம் அதிர்ந்தது சத்யாவும்,திவாகரும் தான்.இது தான் நடக்கும் என்று அவர்கள் யாரும் எதிர்பார்த்து அங்கு வரவில்லை.அப்படி ஒரு நிலையிலும் அவர்கள் இல்லை.ஆனால் இங்கு நடந்தது.

“வா மலர்..! நாம கிளம்பலாம்..!” என்றார் சத்யா.

“எங்கே..?” என்றான் வெற்றி.

“அதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..எங்கள் பெண்ணை எங்கள் வீட்டுக்கு கூட்டி செல்ல…யாரிடமும் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்..!” என்றார் சத்யா.

“அது கொஞ்ச நேரத்திற்கு முன்பு வரை…இப்பொழுது அவள் என் மனைவி.நான் தாலி கட்டிய மனைவி….. அதனால் அவளை எங்கும் அனுப்ப முடியாது…என்னுடன் தான் இருப்பாள்…செல்வதென்றால் நீங்கள் மட்டும் செல்லலாம்…!” என்றான் வெற்றி இறுகிய முகத்துடன்.

“இங்க நடந்ததுக்கு பேரு கல்யாணமா…? அப்படி என்று நீ மட்டும் தான் சொல்ல முடியும்…நீ கிளம்பு மலர்..” என்றார் சத்யா.

“சத்யா..!!!” என்று திவாகர் அதட்ட..

“நீங்க சும்மா இருங்க…! மலரை இங்கு விட்டு விட்டு என்னால் உங்களுடன் வர முடியாது..!” என்ற சத்யா…

“மலர் நீ இப்ப என் கூட வர போறியா இல்லையா…?” என்றார்.

அதிர்ச்சியில் இருந்த மலருக்கு எதுவும் புரியவில்லை.தன் வாழ்க்கை அனைவராலும் பந்தாடப்படுகிறது என்று மட்டும் தெளிவாய் தெரிந்தது.

மலரின் அருகில் சென்று அவளைத் தோளோடு அணைத்தவன்…”இவளை எங்கும் அனுப்ப முடியாது…!” என்றான் உறுதியாய்.

அவனின் அருகில்…அவனை அண்ணாந்து…..அவன் முகம் பார்த்தாள் மலர்.எதையும் சாதிப்பேன் என்ற உறுதியும்…. விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற உணர்வும்..அவன் முகத்தில் மாறி மாறி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

“மலர் நீ இங்கு இருப்பது தான் சரி..” என்று அவளின் மனம் கூற..

“உன் சம்மதம் இல்லாமல் உன் கழுத்தில் தாலி கட்டியவன் உனக்கு பெரிதா…?உன்னை வளர்த்தவர்கள் உனக்கு பெரிது இல்லையா..?” என்று மற்றொரு மனம் கேள்வி கேட்டது.

அடுத்த நொடி,அவன் கைகளில் இருந்து விலக முயற்சி செய்தாள்.ஆனால் முடியவில்லை.அவனின் பிடி இரும்பு பிடியாய் இருக்க..அதைப் பார்த்த துர்காவிற்கே மனதிற்குள் குளிர் பிறந்தது.

அவன் முரடன் என்று தெரியும்.ஆனால் எந்த அளவு என்று இன்று கண்டு கொண்டார் துர்கா.

இருந்தாலும் மலரை மருமகளாய் எற்றுக்  கொள்ள அவரால் முடியவில்லை.கவியை வைத்த இடத்தில் மலரை வைத்துப் பார்க்க முடியவில்லை அவரால்.

“அவளை மருமகளாய் ஏற்க..எங்களுக்கும் விருப்பம் இல்லை..” என்றார் துர்கா பட்டென்று.

அவர் அப்படி சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.கலாவும், தாரணியும் கூட செய்வதறியாது திகைத்தனர்.ரத்தினமும் பேசாமல் இருக்க…

“அம்மா..!!!” என்றான் கண்ணன்.

“இதில் நீ தலையிடாத கண்ணா..இவன் நம்மை யாரையாவது மதித்தானா…இல்லை நம்மிடம் தான் ஒரு வார்த்தை சொன்னானா..? நாங்க என்ன காதலுக்கு எதிரியா..? இவளைத்தான் பிடித்திருக்கு என்று முன்னாடியே சொல்லி இருந்தால்…அவளையே அவனுக்கு பேசி முடித்திருக்கலாமே..! இப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடி இருக்க வேண்டிய அவசியம் இல்லை..” என்றார் கவியைப் பார்த்துக் கொண்டே.

கவி நேர் பார்வையாய் பார்த்துக் கொண்டே நிற்க…

“காதலா..???” என்று அதிர்ந்தாள் மலர்.வெற்றிக்குமே அவன் அம்மா அப்படி பேசியதில் கொஞ்சம் அதிர்ச்சி தான்.காதல் என்ற வார்த்தையைக் கேட்டவனின் மனம் வேப்பங்காயாய் கசக்க…

“நான் யார்கிட்டயும் முடிவோ,சம்மதமோ கேட்வில்லை…. அதற்கான அவகாசமும் எனக்கு இல்லை.யார் என்ன சொன்னாலும் மலர் தான் என் மனைவி…!” என்றான் உறுதியாய்.

அவனின் உறுதி கண்டு திகைத்துப் போனாள் மலர்.இப்படி உறுதியாய் இருக்க என்ன காரணம்…? என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க…

“மலர் கிளம்புன்னு சொன்னேன்..!” என்றார் சத்யா.

மலர் ஒரு எட்டு முன் எடுத்து வைக்க….அவள் கைகளைப் பற்றினான் வெற்றி.

சத்யாவின் முகம் பார்த்த மலர்..என்ன நினைத்தாளோ… அவன் கைகளில் இருந்து மெதுவாக தன்னை விடுவித்துக் கொண்டவள் சத்யாவின் அருகில் நிற்க…அந்த நிமிடம் வெற்றியின்  முகம் கருத்துப் போனது.அதைப் பார்த்துக் கொண்டிருந்த கவியின் முகத்தில் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி.

ஆனால் சாரதியோ நண்பனின் நிலை கண்டு வெதும்பினான். அவனை அதற்கு முன் அவன் அப்படிப் பார்த்ததில்லை.மலரின் மேல் கோபம் கூட வந்தது சாரதிக்கு.

“உன்னை மதிக்காம போற ஒரு பொண்ணுக்காக.. எங்களையே எடுத்தெறிந்து பேசுற இல்லையா வெற்றி..?” என்று கண்கலங்கினார் துர்கா.

“கிளம்பலாம்..” என்று சத்யா சொல்ல…திவாகர் ஒரு நிமிடம் யோசித்தார்.

“என்ன யோசனை..நாம கிளம்பலாம்…” என்றபடி திவாகரையும் மலரையும் வம்படியாய் அழைத்துக் கொண்டு சென்று விட்டார் சத்யா.

சென்று விட்டாள் மலர்.என்ன முடிவெடுப்பது…? என்ற அவகாசத்தை யாரும் அவளுக்கு வழங்கவில்லை.வளர்த்தவர்களின் வாக்குக்கு இணங்கி அவர்களுடன் சென்று விட்டாள்.

திரும்பி அவனைப் பார்க்க வேண்டும் என்று உள் மனம் சொன்னாலும்… அதை செய்ய முடியாமல்….ஒரு மனம் தடுக்க….சென்று விட்டாள் அந்த இடத்தை விட்டு.

வெற்றியின் முகம் உக்கிரமாய் இருக்க….நரம்புகள் தெறித்து விடும் அளவிற்கு புடைக்க…அந்த இடத்தை விட்டு சட்டென்று அகன்றான்.

கவியின் மனம் அவன் நிலை கண்டு கொஞ்சம் வெதும்பினாலும்…அடுத்த நிமிடம் அதை மாற்றிக் கொண்டது.

சாரதிக்கோ…வெற்றியின் பின்னால் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உதிக்க…அது வெற்றிக்கு பிடிக்காது என்பதால் அமைதி காத்தான்.

மலரின் வாழ்வு வெற்றியுடனும்…கவியின் வாழ்வு சாரதியுடனும் பிணைக்கப்பட்டது.

கடந்த காலத்தை அறிந்தால்….கவியை நேசிப்பானா சாரதி….?

கடந்ததை அறிந்தால் வெற்றியை நேசிப்பாளா மலர்…?

இதில் எது சாத்தியம் என்று தெரியவில்லை.ஆனால் இனி இவர்களின் வாழ்வு……எங்கு ஆரம்பித்து..எங்கு முடியப் போகிறது என்று தெரியவில்லை.

காரில் சென்று கொண்டிருந்த மலரின் மனம் முழுவதும்.. வெற்றி கடைசியாக பார்த்த பார்வை நியாபகத்திற்கு வர…..அவளால் நிம்மதியாக செல்ல முடியவில்லை.

அவன் கண்கள்….எதையோ..தன்னிடம் சொல்ல வந்ததோ…? என்று எண்ணினாள்.

இறுகிய அவன் முகமும்….அவனின்  இரும்புப் பிடியும் நியாபகம் வர…அவன் அணைத்திருந்த அவளுடைய தோள்கள் சிலிர்த்தது.

இன்னதென்று புரியாத ஒரு உணர்வுக்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் மலர்.

அங்கே…..

வயலின் அருகில் இருந்த வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த வெற்றிக்கு ….உடல் உணர்வற்று இருந்தது. பார்வை சூனியத்தை வெறிக்க…சுற்றிலும் தெரிந்த பசுமை..அவனை குளிர்விக்கவில்லை.மாறாக மனம் நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்தது….

ஆள் அரவமற்ற அந்த வயல் வெளியில்…அவனுடைய நினைவும் அமைதியாக..கடந்த காலத்திற்கு அவனை இட்டு சென்றது….

நினைவுகள் அவனை அழைக்க….மரித்துப் போன நினைவுகளுடன் சஞ்சரிக்க தொடங்கினான் வெற்றி.

 

நானும் நீயும் சேர்ந்திடும் உலகை…..

ஒரு நிமிடம் மறந்ததில்லை…

கண் உறங்கும் நேரத்தில் கூட…

நினைவு உறங்கிப் போனதில்லை…

உயிரைப் போன்ற என்னவள் நீயே…

உள்ளம் உன்னை மறந்திடுமா..?

குளிரைப் போன்ற உணர்வில் என்னில்..

உயிரைப் போல உறைந்தவளே..!

காலம் கொஞ்சம் கடந்ததினாலே…

காதல் நெஞ்சம் பிரிவதில்லை..!

என்றுமே..! என்றுமே..!

என் காதல் உனக்கே சொந்தமடி..!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement