Advertisement

மலர் 1:

வருண பகவானின் வருகைக்காக அனைவரும் காத்திருக்க…தனது கருணையை….தேனி மாவட்டம்…கம்பம் அருகில் உள்ள புதுப்பட்டிக் கிராமத்தில்….வஞ்சனையின்றி வழங்கிக் கொண்டிருந்தார்.

இரண்டு மணி நேரமாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக…..எல்லா இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்திருக்க….பல நாட்களாக வெயிலில் வாடிய சாலையோர மரங்கள்….புத்துணர்ச்சியுடன் தன்னை மீட்டெடுக்க….விவசாய நிலங்கள்..மகிழ்ச்சியுடன் மழைநீரை உள்வாங்கிக் கொள்ள….மழை நின்ற பின்பும் சாரல் விழுந்து கொண்டிருந்தது.

மழைநீர் சொட்டு சொட்டாய் வடிய ஆரம்பிக்க…..பரம்பரை பெருமையை தன்னுள் தாங்கி நிற்கும் அந்த பெரிய வீட்டில்….அனைவரின் முகமும் மயான அமைதியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தது.

வீட்டின் தலைவர் ரத்தினம்….என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்க….அவர் என்ன சொல்ல போகிறார்..அவர் வாயில் இருந்து என்ன வரப் போகிறது என்பதை எதிர்பார்த்து நின்றவராய்…அவரின் மனைவி துர்கா.

இவர்களுக்கு மூன்று மகன்கள்….மூத்த மகன் வெங்கட்,மருமகள் கலா…. இரண்டாவது மகன் கண்ணன்,மருமகள் தாரணி….மூன்றாவது மகன் வெற்றி…

அவனுக்காகத்தான் அனைவரும் காத்திருந்தனர்.ரத்தினம் குடும்பத்தின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்க…..அதிலிருந்து வரும் பொருட்களை….மூல பொருட்களாய் வைத்து…தங்களின் தொழிலை விரிவு படுத்தியிருந்தனர் மகன்கள்.

நெல்லும்,முந்திரியும் அவர்கள் தோட்டத்தில் விளைந்து குவிந்து கிடந்தது.மேகமலையில் எஸ்டேட்டும்….கூடலூர்..கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் எஸ்டேட்டும்…. பரந்து விரிந்திருந்தது.

காலம் காலமாக செய்த விவசாயத்தை அப்படியே பின்பற்றி..அதில் சில புதுமைகளைப் புகுத்தி…அதல் வெற்றியும் கண்டனர்.இவர்களின் வெற்றிக்கு காரணம்…இளைய மகன் வெற்றி என்றால் மிகையில்லை.

மழை நின்ற பின்பு கிளம்பினாலும்….அதற்கு பிறகு விழுந்த சாரலில்… கொஞ்சம் நனைந்தவனாய்….தூய வெள்ளை வேட்டியும்…கரும் சிவப்பு நிற சட்டையும்…அவனுக்கு தனி கம்பீரத்தைக் கொடுக்க….தனது புல்லட்டில் வந்தவன்…வீட்டின் முன் நிறுத்தினான்.

அவனுடைய புல்லட் சத்தமே அவன் வந்துவிட்டான் என்பதை உறுதிப் படுத்த….தன் மனைவி துர்காவைப் பார்த்தார் ரத்தினம்.

வெற்றி….முப்பது வயதைத் தொட்டிருந்தான்.அவன் சொன்னால் தானே தவிர…பார்த்தால் தெரியாது அவனுடைய வயது.அவனுடைய கடுமையான உழைப்பு….அவன் உடல்மொழியில் தெரிந்து விடும்.மாநிறத்திற்கும் கொஞ்சம் கூடுதல் நிறம்…..துடைத்து வைத்த முகம்…அவனின் முகத்தில் அவ்வளவு எளிதில் எதையும் கண்டுபிடிக்க முடியாது.கடுமையும்…இறுகிய தன்மையும் அவன் உடன் பிறப்பாய் இருக்க….எல்லோரையும் சற்று விலக்கியே வைத்திருந்தான்.

தனது அடர்ந்த மீசையை சரி செய்தபடி…வேட்டி நுனியை கையால் பிடித்தபடி…அவன் படியேற….தன் மகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் துர்கா.

“உன் பிள்ளையை ரசித்தது போதும்..! வந்த உடனே கேளு அவன்கிட்ட..” என்றார் ரத்தினம்.

“நான் எப்படிங்க…?” என்று துர்கா தயங்க…

“ஏன்..? நீ கேட்டாதான் உருப்படியா பதில் சொல்லுவான்…என் பேச்சையா கேட்கிறான்…?” என்றார் சன்னமாய் வெளிப்பட்ட கோபத்துடன்.

“வரான்…கேளு…” என்று அடக்கப்பட்ட குரலில் சொல்ல…

“வெற்றி…!” என்றார் துர்கா.

தன் அறைக்கு செல்வதற்காக காலடி எடுத்து வைத்தவன்….தாயின் அழைப்பில் திரும்பினான்.

“சொல்லுங்கம்மா…!”என்றான்.

“பொண்ணு வீட்டுல இருந்து…” என்று அவர் முடிக்கும் முன்…

“விருப்பமில்லைன்னு நான் சொல்லியும்…நீங்களா பார்த்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.என்னோட பதில் ஒண்ணுதான்….எனக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை….எப்ப கேட்டாலும் இதே பதில் தான்…அதனால் எனக்கு பெண் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு… உருப்படியா ஏதாவது ஒரு வேலையைப் பாருங்க…!” என்றான்.  

அவன் முகம் பிரதிபலிக்கவில்லை….அவன் குரல் பிரதிபலிக்கவில்லை… ஆனால் வார்த்தையில் அப்படி ஒரு கடினம்…அப்படி ஒரு இறுக்கம்.

அவனை நினைத்து ஆயாசமாய் இருந்தது துர்காவிற்கு.வெற்றி என்றால் அந்த வீட்டில் அனைவருக்கும் கொள்ளை பிரியம்.அதிலும் மூத்த அண்ணன் மகள் சுவாதிக்கு அவன் தான் எல்லாம்.

இதுவரையில் தனது அண்ணன்களிடமோ…அண்ணிகளிடமோ அவன் பாரமுகம் காட்டி பேசியது கூட கிடையாது.அதற்காக பேசிக் கொண்டே இருப்பவனும் கிடையாது.

குடும்பத்திற்கு அவனுடைய தேவை எந்த அளவிற்கு தேவைப்பட்டதோ… அந்த அளவை பூர்த்தி செய்தான்..திருமண விஷயத்தை தவிர.

“இப்ப திருமணம் செய்யாம…அப்பறம் எந்த வயதில் செய்வதா உத்தேசம்..” என்றான் வெங்கட்.

“எந்த வயதிலும் செய்யப் போவதில்லை அண்ணா…” என்று வெற்றி பதில் சொல்ல…

“வெற்றி கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க..! அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு..” என்றாள் கலா.

“அந்த பெண்ணைப் பற்றி நான் குறை சொல்லவில்லை அண்ணி..! எனக்கு விருப்பமில்லை என்று தான் சொல்கிறேன்..!” என்றான்.

சின்ன அண்ணன் ஒன்றும் சொல்லாமல் இருக்க…அவனை நிமிர்ந்து பார்த்தான் வெற்றி.

கண்ணன் கூர்மையாய் இவனையே பார்த்துக் கொண்டிருக்க…”அவ்வளவு தானே..! வேற ஒன்றுமில்லையே…!” என்றபடி தன் அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டான்.மனக் கதவையும்.

“என்ன கண்ணா இவன் இப்படி சொல்லிட்டு போறான்…?” என்று வெங்கட் வினவ…

“எனக்கும் அதான் அண்ணா புரியலை….இவனுக்கு என்ன குறைச்சல்…. சொந்த பந்தம் எல்லாம் ஒரே கேள்வி..ஏன் உங்க தம்பிக்கு கல்யாணம் முடிக்கலைன்னு…” என்றான் கண்ணன்.

“அப்படிக் கேட்டா கூட பரவாயில்லை.எங்க பக்க சொந்தமெல்லாம்..எங்க வீட்ல பொண்ணு இருக்கு…உங்க வீட்ல பொண்ணு இருக்குன்னு…ஒரே ஆர்வமா இருக்காங்க…வெற்றி சரின்னு சொன்னா….ஒரு சுயம் வரமே நடத்திடலாம் போல…” என்று அன்பாய் சலித்தாள் கண்ணனின் மனைவி தாரணி.

இதையெல்லாம் கேட்கும் போது துர்காவின் மனம் பெருமையில் விம்மித் தணிந்தது.பெற்ற மனம் இல்லையா.

அவன் விரல் இடுக்கில் கூட அழுக்கை கான முடியாத அப்பழுக்கற்றவன். படிப்பில் இருந்து…விளையாட்டில் இருந்து..விவசாயம் வரைக்கும்…அவன் பெயரைப் போலவே..அவன் தொட்டதெல்லாம் வெற்றி..வெற்றி..வெற்றி.

“அவனுக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பா…கண்டிப்பா அவளைப் பார்த்தா அவனே முன் வந்து சொல்வான்…நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று…” என தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார் துர்கா.

“இவன் செய்றது எல்லாம் எனக்கென்னமோ சரியா படலை…நான் முந்திரி தோட்டம் வரை போய்விட்டு வருகிறேன்…” என்றபடி ரத்தினம் நடையைக் கட்ட…

வெங்கட்டும்,கண்ணனும் தங்கள் மில்லை மேர்பார்வையிட சென்றனர். மழை பெய்திருந்ததால் குளிர்ந்த காற்று உடலை ஊடுருவி செல்ல…

வெற்றி அறையில் திறந்திருந்த ஜன்னல் வழியாக அந்த காற்று அவனையும் தீண்டி சென்றது.ஏனோ அந்த காற்று முகத்தில் பட்டவுடன்…புத்துணர்ச்சியாய் உணர்ந்தான்.

களத்தில் நெற்பயிர் அடித்து முடித்திருக்க…குடோனிற்குள் குவித்து வைக்கப் பட்டிருந்தது.அவற்றை மூடையிட்டு… மில்லுக்கு அனுப்ப வேண்டும் என்று நியாகம் வந்தவனாய் மீண்டும் கிளம்பினான் வெற்றி.

அவன் வெளியே வர…”சித்தப்பா…” என்று ஓடி வந்த சுவாதியை அள்ளி அணைத்துக் கொண்டான் வெற்றி.

“எங்க கிளம்பிட்டிங்க…?” என்றாள் தெளிவாய்.

“சித்தப்பா வயலுக்கு கிளம்பிட்டேன்…ஏண்டா செல்லம்..?” என்றான்.

“நானும்..நானும்…” என்றாள்.

“வெளிய ஒரே மழைத் தண்ணியா இருக்கு…பாப்பாக்கு சளி பிடிச்சுடும்… சித்தப்பா உங்களை நாளைக்கு கூட்டிட்டு போறேன் சரியா..?” என்றான்.

“ம்ம் சரி…” என்றபடி அவனுக்கு கன்னத்தில் இரு முத்தங்களை கொடுத்து விட்டு செல்ல…அந்த குழந்தையின் அழகிய ஓட்டத்தில் தன்னை தொலைத்து நின்றான்.

“இந்தா வெற்றி..சூடா காபி குடிச்சுட்டு கிளம்பு..” என்றபடி துர்கா கையில் காபியைத் திணிக்க…வெளியே பெய்த மழைக்கு….அந்த சூடான காபி..இதமாய் தொண்டைக்குள் இறங்கியது.

“வெற்றி நம்ம சாரதிக்கு அடுத்த வாரம் பெண் பார்க்க போகலாம் என்று முடிவு பண்ணிருக்காங்களாம்….நீயும் கடிப்பா வரணும்… என்று சொல்லிவிட்டு போனான்…” என்றார் துர்கா.

“அவனுக்கு பொண்ணு பார்க்க…நான் ஏன்மா …?” என்று வாய் சொன்னாலும்…சாரதிக்கு என்றால் முன்னாடி நிற்பான் வெற்றி.

இருவரும் சிறு வயது முதலே உற்ற தோழர்கள்….சாரதி படிப்பின் பொருட்டு வெளிநாடு செல்ல…இவர்கள் நட்பின் இடையே சிறிய இடைவெளி.

மீண்டும் இந்தியா வந்தவன்….சென்னையில் தொழில் ஆரம்பித்து..அதை திறம்பட நடத்திக் கொண்டு வருகிறான்.இருவரும் அருகருகே இல்லையென்றாலும்….அவர்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது.

சாரதியும் அதே ஊரைச் சேர்ந்தவன்.தொழில் சென்னையில் தான் என்றாலும்…மாதம் இரு முறை சொந்த ஊருக்கு வந்து விடுவான்.

“நேற்று தான் ஊரில் இருந்து வந்திருப்பான் போல…இன்னைக்கு சாயந்திரம் வரேன்னு சொன்னான் வெற்றி..” என்று துர்கா சொல்ல..

“சரிம்மா…நான் வரேன்.முடிஞ்சா நானே போய் அவனைப் பார்க்கிறேன்..” என்றபடி சென்றான்.

மதுரை மாநகரின் அண்ணா நகர் பகுதியில் இருந்த அந்த வீட்டில்…. தன்னுடைய அறையில் தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் கவி.

கதவு தட்டும் ஓசையில் நிமிர்ந்தவள்…”உள்ள வாங்க..!” என்றபடி..மீண்டும் தனது பணியைத் தொடர்ந்தாள்.

“என்ன கவி..எல்லாம் எடுத்து வைத்தாயிற்றா…?” என்றபடி வந்தார் விஜயன்.

“ம்ம்ம்..ஆச்சுப்பா…” என்று வாய் சொல்ல..கை அதை செய்து கொண்டிருந்தது.

“இருந்தாலும் கவிம்மா…நீ இங்க இருந்தே போய் வரலாமே…? எதுக்காக தனியா போய் இருக்கணும்..?” என்றார்.

“அது சரிப்படாதுப்பா…!எனக்கு அங்க இருப்பதில் தான் வசதி…சென்னை போயிட்டு வந்த உடனே கிளம்பிடுவேன்..!” என்றவள்..பெட்டியை மூடி விட்டு நிமிர்ந்தாள்.

கவி என்று அழைக்கப்படும் கவி பாரதி….வயது இருபத்தியேழு.கத்தரி ஊதா வண்ணத்தில் காட்டன் புடவையும்….இடையைத் தாண்டி பின்னப்பட்ட கூந்தலும்….பால் வண்ண முகமும்…ஒப்பனையில்லாத முகத்தில் இருந்த அந்த சிறிய பொட்டும்….அவளை வசீகரமாகவே காட்டியது.

மற்ற பெண்களை விட…பிடிவாதமும்…சற்று அழுத்தமும் அதிகம். நினைத்ததை முடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே அவளுக்கு வேரூன்றி வளர்ந்தது.

இது வரை அவள் நினைத்தை நடத்தியே முடித்திருக்கிறாள்.ஆனால் இனி..?

கவி கிளம்புவதை வெளியில் இருந்து ஒரு இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் தனம்.பெற்ற தாய் தான்.இருந்தாலும் சில வருடங்களாக அவருடன் கவிபாரதி பேசுவதில்லை.

அவர்களுக்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு வருமா என்றால் அது இருவருக்கும் தெரியாது.ஆனால் அதீத அன்பே அவர்களின் இந்த பிரிவுக்கு காரணமாய் இருந்தது.

கண்கலங்கி நின்ற மலரை….ஆறுதலாய் தோள் சாய்த்துக் கொண்டார் விஜயன்.

“எல்லாம் சரி ஆகிவிடும் தனம்….சீக்கிரமே கவி உன்கூட பேசுவா..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்தான் கிஷோர்.அவளின் ஒரே தம்பி.

“அக்கா ரெடியா…?” என்றபடி வர…

“ம்ம் ரெடிதான்…” என்றாள்.

“அம்மா…அக்காவுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வச்சுட்டிங்களா..?” என்று கேட்க…

“நானே எடுத்து வச்சுகிட்டேன் கிஷோர்….” என்றாள் கவி பட்டும் படாமல்.

“ஹோ..அப்ப சரிக்கா…கிளம்பலாமா…?” என்றபடி அவன் அவள் பெட்டியை தூக்கிக் கொண்டு செல்ல….நிமிர்ந்த நடையுடன் அவன் பின் சென்றாள் கவிபாரதி.

தனது இடம் மாறுதல் சம்பந்தமான வேலைக்காக சென்னை செல்கிறாள் கவி.

வெளியே….. மாவட்ட ஆட்சியருக்கான கார் நிற்க…இவள் பாதுகாவலர் கதவை திறந்து விட….காரில் ஏறி அமர்ந்தவளின் முகத்தில் மிடுக்கும்….பார்வையில் ஒரு தீட்சண்யமும் இருந்தது.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜயன்-தனத்தின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசம் கொண்டது.

தங்கள் பெண்..இப்படி உயர்ந்த இடத்தில்…மிடுக்குடன் செல்வதைப் பார்க்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் ஏற்படும் ஒரு உணர்வு தான் அது.

“ஏங்க அவளைப் பெண் பார்க்க வரும் விஷயத்தை அவளிடம் சொல்லவில்லையா..?” என்றார் மலர்.

“இல்லை தனம்…சொல்லவில்லை.நான் ஏதாவது சொல்ல போக…கவி கிளம்பும் போது…டென்சன் ஆகிடுவளோ என்ற பயம் தான்…என்னை சொல்லவிடலை…” என்றார் விஜயன்.

அதுவும் சரிதான்….அவள் வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம்…என்று தனமும் மனதைத் தேற்றிக் கொண்டார்.

காரில் ஏறி அமர்ந்தவளுக்கு மனதில் பலவிதமான கலவையான உணர்வுகள் …..

அவளும் தன் அம்மாவின் முகத்தைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.தாயின் முன்பு கடினப்பட்டு தன்னை அடக்கியவளுக்கு…ஏனோ இப்பொழுதும் அப்படியே இருக்க முடியும் என்று தோணவில்லை.

விழியோரத்தில் பூத்த சிறு துளிக் கண்ணீரையும் வழிய விடாமல் தன்னுள் அடக்கினாள்.

“எதற்காக இந்த போராட்டம் கவி…எதை நிரூபிப்பதற்காக இப்படி ஓடிக் கொண்டு இருக்கிறாய்…உன்னுடைய பிரச்னைக்கு தீர்வு தான் என்ன…?நடந்ததை எப்படி உன்னால் சரி பண்ண முடியும்…?” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவள்…இறுதியில் வழி தெரியாது விழி பிதுங்கி நின்றாள்.

சில விஷயங்களில் நாம் ஒன்று நினைக்க..தெய்வம் ஒன்று நினைக்கும்.கவியின் வாழ்வில் நடந்ததும் திருவிளையாடல் தான்.ஆனால் அது தெய்வத்தின் மூலமாக நடந்ததா….இல்லை மனிதர்களால் நடந்ததா என்று கணிக்க முடியாத அளவிற்கு நடந்தேறியிருந்தது.

இதுவும் கடந்து போகும்…என்ற ஒற்றை வாக்கியத்தில் நம்பிக்கை கொண்டவளாய்….தன் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி நகர்ந்தாள்.வாழ்க்கையின் போக்கிற்கு வாழாமல்…தன் போக்கிற்கு வாழ்க்கையை இழுத்துக் கொண்டாள்.

 

லேப்டாப்பில் தெரிந்த அவளின் உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சாரதி.

எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத் தெவிட்டாத முகம்.பார்த்தவுடன் மனதிற்கு சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டாள்.ஏனோ வாழ்ந்தால் அவளுடன்தான் வாழ வேண்டும் என்று துடிக்கும் அளவிற்கு அவனுடைய மனநிலை இருந்தது.

“இன்னும் பொண்ணே பார்க்கப் போகலை…அதற்குள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி…? எல்லாம் முடிவான பிறகு பார்த்துக் கொள்..!” என்று அவனின் அம்மா போகிற போக்கில் சொல்லிவிட்டு போக…அப்பொழுது தான் உண்மை உரைத்தது சாரதிக்கு.

‘உண்மைதானே..!இன்னும் அவள் என்னைப் பார்க்கவில்லை.நானும் அவளை நேரில் பார்க்கவில்லை.பெரியவர்கள் கலந்து பேசவில்லை… அப்படியிருந்தும் என் மனம் அவளை நினைக்கிறது.ஒரு போட்டோவில் பார்த்ததற்கே இப்படி என் மனம் மாறிப் போனது என்றால் நேரில் பார்த்த பிறகு…?’ என்று எண்ணியவனுக்கு உதட்டில் புன்னகைய பூக்க..

‘உன்னை போய் ஒரு பெண் வேண்டாம் என்று சொல்வாளா…? என்ன குறை உன்னிடம்..!’ என்று தன்னையே சமாதானமும் செய்து கொண்டான்.

ஏனோ இதை வெற்றியிடம் உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனது துடித்தது.அவனும் வெற்றியை பார்க்க முயற்சி பண்ண…அது முடியாமலே போனது.

எப்படியும் அவனைப் பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பினான் சாரதி.

குடோனில் இருந்து நெல் மூடைகளை மில்லிற்கு ஏற்றி அனுப்பிவிட்டு… அனைவருக்கும் சம்பள பணத்தை பட்டுவாடா செய்து முடித்து விட்டு…. வேலைகள் முடிய….நெட்டி முறித்தான் வெற்றி.

உடல் எனக்கும் கொஞ்சம் ஒய்வு கொடேன் என்று கெஞ்ச…வீட்டிற்கு செல்லலாம் என்று தனது புல்லட்டின் அருகில் சென்றான்.

ஏனோ அன்று வானம் மீண்டும் மேக மூட்டத்துடனே காணப்பட்டது. இன்னும் சற்று நேரத்திற்கு மழை வரக் கூடாது என்று வேண்டியவனாய்….. வண்டியை எடுத்தான்.

மழை பெய்தாலும் பிரச்சனை…பொய்த்துப் போனாலும் பிரச்சனை என்பது விவசாயிகளின் வாழ்வில் ஒரு சாபக் கேடு.பயிரை விதை செய்யும் பொழுது மழையை வரவேற்கும் விவசாயி…அதை அறுவடை செய்யும் பொழுது மழையைப் பார்த்து பயப்படுவர்.இதுவே வெற்றியின் வேண்டுதலுக்கு காரணம்.

இப்படி மனதில் பல யோசனைகளுடன் சென்றவனின் காதில்…..அங்கிருந்த ஒரு இளைஞன் தனது செல்லில் கேட்டுக் கொண்டிருந்த பாடல் வரிகள் விழுந்தது.

“உயிரே உயிரே….

உடம்பில் சிறந்தது எதுவென்று கேட்டிருந்தேன்..

அதை இன்று தான் கண்டுபிடித்தேன்…

கண்ணே உன்னைக் காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி…”

 

பாடல் வரிகளில்…தன்னையும் அறியாமல் அவன் கை புல்லட்டை சடன் பிரேக் போட…..முகம் அதீத இறுக்கத்திற்கு சென்றது.

முகம் கனலைக் கக்க…உடம்பின் ஒவ்வொரு அணுவும்.. நினையாதே.. நினையாதே….! என்று சொல்லிக் கொண்டிருந்தது.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்….?

 

 

 

 

 

 

 

 

Advertisement