Advertisement

அத்தியாயம் – 6

மழை நின்றும் மிச்சமிருந்த மழைத்துளிகள் மரத்திலிருந்து தண்ணீர் முத்துகளாய் கீழே விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. சுகமான மாலைக்காற்று தேகம் தழுவ அந்தப் பூங்காவில் சிலர் நடை பயின்று கொண்டும், மழைக் காற்றை ரசனையோடு அனுபவித்துக் கொண்டும் இருந்தனர். பூச்செடிகளின் மேல் சில பூச்சிகள் ரீங்காரமிட்டபடி இசையமைத்துக் கொண்டிருந்தன.

பூங்காவின் வெளியே ஒரு காரில் ரிஷி நண்பர்களுடன் அமர்ந்து இருந்தான். கண்ணில் போதையின் சிவப்பு தெரிய இதழ்களில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

“ஏண்டா அஸ்வின், எவ்ளோ நாள்தான் உன் ஆளுகிட்ட லவ்வை சொல்லப் போறேன்னு சொல்லிட்டு, சொல்லாம இழுத்தடிச்சுட்டு இருக்கப் போற… சரியான பேடிப் பயடா நீ…” உள்ளே சென்ற மதுவின் காரணத்தால் சிறு குழறலாய் சீண்டலுடன் வந்தது நண்பன் சந்தோஷின் குரல்.

“ப்ச்… நான் என்னடா பண்ணுவேன், சொல்லிடலாம்னு தான் போவேன்… ஆனா அவ பக்கத்துல போனாலே நடுக்கமா இருக்கு, சொல்ல பயமா இருக்கு…” என்றான் அஸ்வின்.

“பொம்பளையப் பார்த்தாலே ஏண்டா இப்படித் தொடை நடுங்குற… அவங்க என்ன பேயா, பிசாஸா, அதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும்…” என்றான் ரகு.

“இதுக்கு எதுக்குடா தைரியம்…? அந்தப் பொண்ணுகிட்ட உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லு, ஓகேன்னா கண்டின்யூ, இல்லன்னா டிஸ்கண்டின்யூ பண்ணிட்டு அடுத்து இன்னொண்ணு பாரு, லவ்வை ஜவ்வு மாதிரி இழுக்காத… இந்த சூரியாவை இன்னும் காணமே…” சிகரெட்டை ஆழமாய் உள்ளே இழுத்துக் கொண்டே சொன்னான் ரிஷி.

“சூர்யா வருவான்… போங்கடா, நீங்க சொல்லுவிங்க… லவ் பண்ணறேன்னு சொன்னதும் அவ கோபத்துல என்னை ஓங்கி அறைஞ்சுட்டா என்ன பண்ணுறது…” என்றான் கடுப்புடன்.

“எதுக்கு அறையப் போறா, லவ்வ சொன்னா எந்தப் பொண்ணும் அறையாது, உனக்கு பயம்…” என்றான் ரிஷி.

“ஓஹோ, இவ்ளோ சொல்லறியே, நீ செய்வியா… அப்படி செய்தா தைரியசாலின்னு உன்னை ஒத்துக்கறேன், சாலஞ் வச்சுக்கலாமா…?” என்றான் குறை சொன்ன கடுப்பில்.

“சாலஞ்சா…? என்ன சாலஞ்ச்…?”

“நீ ஒரு பொண்ணுகிட்ட போயி லவ் பண்ணறேன்னு சொல்லிப் பாரேன்… அவ உன்னை அடிக்கிறாளா, அமைதியா நிக்கறாளான்னு பார்ப்போம்…”

“ப்ச்… அதுக்கு எனக்கு யார் மேலயும் லவ் இல்லையே டா…”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீங்க பெரிய தைரியசாலி தானே, ஏதாவது ஒரு பொண்ணுகிட்ட லவ் பிரபோஸ் பண்ணிட்டு அடி வாங்காம வா, நீ தைரியசாலிதான்னு ஒத்துக்கறேன்…”

“டேய், எதுக்குடா தேவையில்லாம சாலஞ்ச் எல்லாம்… ரிஷி எப்படி டா…” என்றான் தயக்கத்துடன் ரகு.

அவன் கையில் தட்டிய ரிஷி, “விளயாட்டுக்கு தானடா, சரிடா அஸ்வின், நீ சொன்ன சாலஞ்சுக்கு நான் ரெடி… நான் பிரபோஸ் பண்ணி அந்தப் பொண்ணு என்னை எதுவும் சொல்லாம விட்டுட்டா நீ நாளைக்கே உன் ஆளுகிட்ட பிரபோஸ் பண்ணனும், இல்லேன்னா காதலும் வேண்டாம், கத்தரிக்காயும் வேண்டாம்னு அதைத் தூக்கிப் பரண்ல போட்டுட்டு எங்களை டார்ச்சர் பண்ணாம இருக்கணும்… முடியுமா…?” என்றான்.

“முதல்ல நீ ஒரு பொண்ணுகிட்ட பிரபோஸ் பண்ணிட்டு அடியோ, திட்டோ வாங்காம வா, அப்புறம் நான் என்ன பண்ணனும்னு டிசைட் பண்ணிக்கலாம்…”

“ம்ம்… டீலுக்கு நான் ரெடி, எந்தப் பொண்ணுகிட்ட சொல்லணும்…?” என்றான் ரிஷி.

“இரு, நானே ஒரு பொண்ணை செலக்ட் பண்ணறேன்…” சொன்ன அஸ்வின் சாலையில் நடந்து செல்லும் பெண்களை நோட்டம் போட்டான்.

“எல்லாம் வத்தலும் தொத்தலுமா இருக்கே… கொஞ்சமாச்சும் பார்க்கிற போல இருந்தாத் தானே நல்லாருக்கும்…” அஸ்வின் சொல்ல, “டேய் எதுக்குடா, இந்த வேண்டாத வேலை எல்லாம்… நீ பெரிய உலகமகா தைரியசாலிதான், ஒத்துக்கறோம், இந்த சாலஞ் எல்லாம் வேண்டாம்… எதுவும் பிரச்சனை ஆகிடப் போகுது…” என்றான் ரகு.

“டேய், நீதான் இப்ப பயப்படுற… அதான், ரிஷி டீலுக்கு ஒத்துகிட்டானே, அமைதியா பொண்ணை மட்டும் செலக்ட் பண்ணி சொல்லு…” என்றான் அஸ்வின்.

“ப்ச்… இவன் அடங்க மாட்டான், டேய்… ரிஷி, நீயாச்சும் அமைதியா இரேன்… எதுக்கு இந்த வில்லங்கம் எல்லாம், சூர்யா வேற இல்ல…” ரகு சங்கடப்பட்டான்.

“ஏண்டா, நொண்டிக்காலை வச்சுக்கிட்டு என்னால யாருக்கும் பிரபோஸ் பண்ண முடியாதுன்னு நினைக்கறியா…?”

“ச்சே, அப்படில்லாம் இல்லடா, எதுக்கு தேவையில்லாத விவகாரம்னு தான்…” மறுத்தால் அவன் வருத்தப்படுவான் எனப் புரிந்து ரகு அமைதியாய் கூறினான்.

“விடுடா, பார்த்துக்கலாம், நான் இதைப் பண்ணா இவனோட பயமாச்சும் போகும்ல…” என்றான் ரிஷி.

“ஹூம்… சரி, உன் விருப்பம் டா… ஆனா, எந்தப் பொண்ணா இருந்தாலும் பக்குவமாப் பேசு…”

“ம்ம்… நீயும் எனக்கு லவ் பிரபோஸ் பண்ண ஒரு பொண்ணு தேடேன்…” என்றான் ரிஷி குறும்புடன் கண் சிமிட்டி.

“ஆஹா, இந்த மாமா வேலை எல்லாம் எனக்கு வேண்டாம்… நான் இந்த ஆட்டத்துக்கு வரலை, சூர்யாக்குத் தெரிஞ்சா திட்டுவான்…” ரகு ஒதுங்கிக் கொள்ள,

“டேய் ரகு, நீயொரு சரியான பயந்தாங்கொள்ளி, நீ தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பாரு…” என்றான் அஸ்வின் கடுப்பு குறையாமல்.

சில நிமிட அலசல்கள், கலந்தாலோசனைகளுக்குப் பிறகு அஸ்வினும், சந்தோஷும் ஒரு பெண்ணைக் கண்டு பிடித்து ரிஷியிடம் காட்டினர்.

“ரிஷி, அதோ… பார்க் பெஞ்சுல பிங்க் கலர் சேலைல திரும்பி உக்கார்ந்து போன் பேசிட்டு இருக்கே, அந்தப் பொண்ணுகிட்ட பிரபோஸ் பண்ணு…”

“ம்ம்… ஓகே, என்னன்னு சொல்லனும்…” என்ற ரிஷியை கிண்டலாய் பார்த்தான் அஸ்வின்.

“இது கூடத் தெரியல, இவன் எப்படி பிரபோஸ் பண்ணப் போறானோ…” என்றவன், “உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, ஐ லவ் யூன்னு சொல்லு…” என்றான்.

“ம்ம்… ஓகே, நீங்க இங்க இருந்தே வேடிக்கை பாருங்க… ஐயா வெற்றிகரமா வேலையை முடிச்சிட்டு வரேன்…” சொன்னவன் காரிலிருந்து வெளியே இறங்க, அஸ்வினும், சந்தோஷும் உடன் இறங்கினர்.

“நீங்க எதுக்குடா…?”

“அந்தப் பொண்ணுகிட்ட திட்டு வாங்கிட்டு நீ இல்லேன்னு சமாளிச்சுட்டா, நாங்களும் வந்து அந்த மரத்துக்குப் பின்னாடி நின்னுக்கறோம்…” என்றனர்.

“ஹூம், ஓவர் விவரம்…! சரி, வாங்க…” என்றவன் நடக்க, வழியில் செடியில் இருந்த பூ ஒன்றைப் பறித்து அவனிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மரத்தின் மறைவில் நின்றனர்.

காலை விந்திக் கொண்டே மெல்ல நடந்து அப்பெண்ணின் பின்புறம் சென்றவன், மெல்லிய குரலில் சொன்னான். போதை குறைவாக இருந்ததால் குரல் தெளிவாக வந்தது.

“எக்ஸ்கியூஸ்மி மேடம், அப்படியே திரும்பாம உக்காருங்க… உங்களை வச்சு என் பிரண்ட்ஸ் ஒரு சாலஞ்ச் பண்ணியிருக்காங்க, ப்ளீஸ், நீங்க அதுல என்னை ஜெயிக்க வைக்கணும்…” என்றான்.

“என்ன சாலஞ்ச்…?” என்றாள் அப்பெண்ணும் திரும்பாமல்.

“நான் உங்ககிட்ட புரபோஸ் பண்ணுவேன்… ப்ளீஸ், நீங்க என்கிட்ட கோபப் படக் கூடாது…”

“எ..என்னது…? பிரபோஸ் பண்ணப் போறிங்களா…?” என்றாள் அப்பெண் அதிர்ச்சியுடன் எழுந்து.

அதைப் பொருட்படுத்தாமல் நண்பர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவள் முன்னே வந்து பூவை நீட்டிய ரிஷி, “எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு, ஐ லவ் யூ…! நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…?” கேட்டுக் கொண்டே திரும்பியவன் இனிதாய் அதிர்ந்தான்.

“பா…பாரதி நீங்களா…? நல்லவேளை, தெரியாத பொண்ணு கிட்ட பிரபோஸ் பண்ணி அடி வாங்கப் போறனோன்னு கொஞ்சூண்டு கலக்கம் இருந்துச்சு… நல்லவேளை, நீங்களாப் போயிட்டீங்க… இப்பதான் நிம்மதியா இருக்கு… நல்லவேளை, அவனுங்க உங்க முகத்தைப் பார்க்காம உங்களை செலக்ட் பண்ணி இருக்காங்க, நீங்க எங்கே இங்கே…” என்றான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து நிற்க கையில் ஐஸ்க்ரீம், பாப் கார்னுடன் அவளிடம் வந்து கொண்டிருந்த வான்மதியும், கல்பனாவும் இவன் சொன்னதைக் கேட்டு திகைப்புடன் அருகே வந்தனர்.

“ஹலோ மிஸ்டர், என்ன நீங்க… எங்க போனாலும் அவளைத் தேடி வந்து ஐ லவ் யூ, உன்னப் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு இருக்கீங்க… முன்னப் பின்னத் தெரியாத பொண்ணுகிட்ட இப்படில்லாம் சொல்லறிங்களே, இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டான விஷயமாப் போயிருச்சா…” வான்மதி படபடவெனப் பொரிய அருகே நின்ற கல்பனாவின் முகமும் சரியில்லை.

“ரிஷி அண்ணா, உங்களைப் பத்தி ரதீஷ் ஆஹா, ஓஹோன்னு அவ்வளவு சொன்னார்… நீங்க என்னடான்னா இப்படி நடந்துக்கறீங்க, என்னண்ணா இது…?” என்றாள் வருத்தத்துடன்.

அதற்குள் ரிஷியைத் தேடி சூர்யாவும் அங்கே வந்தான்.

பெண்களின் கேள்விக்கு திகைத்துப் போன ரிஷி, “ச..சாரி கல்பனா, நான் ஒரு சாலஞ்சுக்கு… அவங்ககிட்ட சொல்லிட்டு தான்…” என்று சமாதானம் சொல்லத் தொடங்க, சூர்யா அதற்குள் இடையிட்டான்.

“டேய் ரிஷி, என்னடா இது… அவனுங்க விவரமில்லாம சாலஞ் பண்ணா நீயும் பிரபோஸ் பண்ண வந்திடுவியா…? உனக்கு காதல், கல்யாணம் எல்லாம் சாதாரண வார்த்தையா இருக்கலாம்… அவங்க ஒரு பொண்ணு…! இதெல்லாம் சொல்லும்போது அவங்க மனசு எவ்ளோ பாடுபடும்னு யோசிச்சியா…?” சூர்யா வருத்தத்துடன் நண்பனிடம் கேட்க ரிஷி பாரதியைப் பார்த்தான்.

அவள் முகம் சிவந்திருக்க அதிர்ச்சியுடன் தலை குனிந்து நின்றவளின் மனநிலை யாருக்கும் புரியவில்லை.

“பா..ரதி… சாரிங்க…! நாங்க சும்மா விளையாட்டுக்கு, என்னால பிரபோஸ் பண்ண முடியாதுன்னு அவங்க கிண்டல் பண்ணதால யோசிக்காம… ஐ ஆம் ரியல்லி சாரி…” என்றவனின் குரலில் உண்மையான வருத்தம் தெரிய நிமிர்ந்தாள் பாரதி.

“மிஸ்டர் ரிஷி, உங்க மனக் காயத்துக்கு மத்தவங்க உணர்வுகளோட விளையாடறது தப்பு… இதெல்லாம் பண்ணிதான் உங்களை நீங்க நிரூபிக்கணும்னு இல்லை, இனி தயவுசெய்து இப்படி யாருகிட்டயும் சொல்லாதீங்க… ப்ளீஸ்…” என்றவள், “வாங்க போகலாம்…” என்றபடி அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு தோழிகளை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள். அந்தப் பார்வையின் ஆழத்தில் சிக்கி தான் சிதறிப் போவது போல் தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி. அவன் தோளில் தட்டிக் கொடுத்து, “இனியும் உன்னை நீ எங்கயும் குறைச்சுக்காதடா…” என்றபடி கை பற்றி அழைத்துச் சென்றான் சூர்யா.

*************************

அன்னை குரூப் ஆப் கம்பெனீஸ்.

பெரிய கட்டிடத்தின் முகப்பில் நிமிர்வோடு நின்ற பெரிய பெயர்ப்பலகையை பார்த்துக் கொண்டே தயக்கத்துடன் உள்ளே நுழைந்தனர் பாரதியும், வான்மதியும். அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்தில் இயங்கும் நிறுவனங்களைப் பற்றிய விவரங்கள் முன்னில் பெரிய போர்டில் எழுதி வைத்திருக்க, திகைப்புடன் அந்த போர்டில் பார்வையைப் பதித்தனர். இருவரும் நேரமே கிளம்பி வந்து விட்டதால் அலுவலக நேரம் தொடங்க இன்னும் அரைமணி நேரம் இருந்தது.

அன்னை குரூப் ஆப் கம்பெனீஸ் என்ற தலைப்புக்குக் கீழே வரிசையாய் அந்நிறுவனத்தின் டிவிஷன் பெயரும், அது எந்தத் தளத்தில் செயல்படுகிறது என்ற விவரமும் இருந்தது. வியப்புடன் அந்த லிஸ்டைப் படித்து முடித்தவள், “ஒவ்வொரு டிபார்ட்மெண்டுக்கும் ஒவ்வொரு டிவிஷன்… இதுல அந்த மேடம் எங்க இருப்பாங்கன்னு தெரியலியே…” என்றவளிடம், “பாரு… வா, ரிசப்ஷன்ல விசாரிப்போம்…” என்றாள் வான்மதி.

ரிசப்ஷனில் அப்போது தான் ஒரு பெண் வந்திருக்க, ஒட்டி வைத்த புன்னகையுடன் பளிச்சென்று இருந்த பெண்ணை நெருங்கி “எக்ஸ்கியூஸ் மி…” என்றனர். குனிந்து அவளது காபினில் பாகை வைத்துக் கொண்டிருந்தவள், “எஸ்…” புன்னகையுடன் நிமிர்ந்தாள். அவள் கழுத்தில் தொங்கிய ஐடி கார்டில் மஞ்சுளா எனப் பெயர் சொல்ல, அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தப் புன்னகை இவர்களையும் தொற்றிக் கொள்ள சிநேகமான சிரிப்புடன் பேசத் தொடங்கினர்.

“குட்மார்னிங் மேம்… ஐ ஆம் பாரதி, ஒரு ஜாப் விஷயமா மேடத்தைப் பார்க்க சொல்லி மிஸ்டர் ஹரி சொல்லியிருந்தார், அவங்க வந்துட்டாங்களா…?”

“எந்த மேடத்தைக் கேக்கறிங்க…?”

“சாரி, அவங்க நேம் தெரியல, மிசஸ் ஹரியைப் பார்க்கணும்…”

“ஓ… மேடம் வர்றதுக்கு 11 மணி ஆகிடுமே… ஜாப் ரிலேட்டடா பார்க்கணும்னா எங்க HR மானேஜர் இப்ப வந்திடுவார், அவரைப் பார்க்கறிங்களா…?”

“ஓ…” என்றவள் யோசனையுடன் தோழியைப் பார்க்க,

“பாரு, நீ ஹரி சாருக்கு கால் பண்ணி வந்திருக்கேன்னு சொல்லு, அவர் என்ன சொல்லுறாரோ, அதைப் பண்ணலாம்…” என்றாள் வான்மதி.

“ம்ம் கால் பண்ணறேன்…” என்றவள், போனை எடுத்து ஹரிக்கு அழைத்தாள். அழைப்பு முடியும் தருவாயில் எதிர்ப்புறம் எடுக்கப்பட்டு ஹரியின் கம்பீரக் குரல், “எஸ், ஹரி ஸ்பீக்கிங்…” என்றது.

“கு…குட்மார்னிங் சார்… நான் பாரதி பேசறேன்…”

“பாரதி…” சட்டென்று யோசித்தவன், “ஓ… பாரதி…! ஆபீஸ் வந்துட்டிங்களா…?”

“எஸ் சார், உங்க ஆபீஸ்ல தான் இருக்கேன்… மேடம் வர்றதுக்கு லேட் ஆகும்னு ரிசப்ஷன்ல சொன்னாங்க…”

“ம்ம்… எஸ், எஸ்… கெமிக்கல் பாக்டரில பத்து மணிக்கு ஒரு மீட்டிங் இருக்குன்னு சொன்னா, 11 மணிக்கு வந்திடுவா… நீங்க ஒண்ணு பண்ணுங்களேன், HR ல மிஸ்டர் மணிகண்டன் இருப்பார்… அவரைப் போயி பாருங்க, நான் அவர்கிட்ட பேசறேன்… மத்த பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்கிறதுக்குள்ள என் ஒயிப் ஆபீஸ் வந்திடுவாங்க…”

“ஓகே சார், தேங்க் யூ…” என்றவள் அழைப்பைத் துண்டித்து புன்னகையுடன் நிமிர்ந்தாள்.

“தேங்க்ஸ் மஞ்சுளா… மிஸ்டர் ஹரி உங்க HR மானேஜரைப் பார்க்க சொன்னார், அவர் வந்துட்டாரா…?”

“இப்ப வந்திடுவார்…” என்றவள் முடிக்கும் முன்னே, “அதோ, சாரே வந்துட்டார்…” என்று கூற திரும்பினர். கண்ணாடியுடன், முதுகில் ஒரு தோல் பாகும் வயிற்றில் ஒரு சதை பாகுமாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்த நாப்பதில் இருந்த நபரைக் காட்டிக் கூறினாள்.

“குட் மார்னிங் சார்…” மஞ்சுளா புன்னகையுடன் சொல்ல,

அவரும் பதிலுக்கு குட்மார்னிங் சொல்ல, “ஹரி சார் இவங்களை உங்களைப் பார்க்க சொன்னார், உங்களுக்கு வெயிட் பண்ணறாங்க…” என்றாள் அவரிடம் புன்னகையுடன்.

“ஓ… மிஸ் பாரதி…?” என்றான் அவன் கேள்வியுடன்.

“எஸ் சார்…”

“ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு என் காபினுக்கு வாங்க…” எனவும் “ஓகே சார்…” என்று பாரதி சொல்ல லிப்டை நோக்கி நகர்ந்தான் மணிகண்டன்.

“சாருக்கு வந்ததும் முதல்ல காபி குடிக்கணும், அப்புறம் தான் வொர்க் ஸ்டார்ட் பண்ணுவார், நீங்க சோபால வெயிட் பண்ணுங்க…” என்றாள் மஞ்சுளா புன்னகையுடன்.

“தேங்க்ஸ் மஞ்சுளா… உங்க புன்னகை ரொம்ப அழகாருக்கு, பார்க்கிறவங்களுக்கும் ஈஸியா பாஸ் ஆயிடுது, நைஸ் ஸ்மைல்…” எனக் கூறியபடி நகர மஞ்சுளாவின் புன்னகை இன்னும் பெரிதானது.

பத்து நிமிடத்திற்குப் பிறகு மணிகண்டனை சென்று காண அவளுடைய சர்டிபிகேட்ஸ், மற்றும் பொது அறிவைப் பற்றி பரிசோதித்துத் தெரிந்து கொண்டவர் ஹரியை அழைத்து விவரத்தைக் கூறினார்.

“குட்… பாரதி புத்திசாலியான பொண்ணுன்னு தெரிஞ்சுதான் வர சொன்னேன்… கங்கா இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபீஸ் வந்திடுவா… நீங்க அந்தப் பொண்ணுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் ரெடி பண்ணிடுங்க, என்ன போஸ்டிங், என்ன சாலரின்னு மட்டும் கங்கா வந்ததும் கேட்டு முடிவு பண்ணிடலாம்…”

“ஓகே சார்…” என்ற மணிகண்டன் அவளிடம் விஷயத்தை சொல்ல சந்தோஷித்தாள் பாரதி.

“நீங்க முன்னாடி விசிட்டர் ஹால்ல வெயிட் பண்ணுங்க, மேடம் வந்ததும் ஆர்டர்ல சைன் வாங்கிட்டு கூப்பிடறேன்…” மணிகண்டன் சொல்ல ஹாலில் வான்மதியிடம் சென்றாள்.

“வானு, இன்னும் கொஞ்ச நேரத்துல என் வேலைக்கான ஆர்டர் கைக்கு வரப்போகுது… அம்மாவும், அக்கா, மாமாவும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க… நேத்து அவ்ளோ பேசின அத்தை ஆர்டரோட போயி நின்னா மூஞ்சியை எங்க கொண்டு போயி வச்சுக்கப் போறாங்களோ…?” சந்தோஷமாய் தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தவள் மெயின் டோர் திறக்கும் ஓசையில் திரும்பினாள்.

புயலென கண்ணில் கூலருடன் வேகமாய் உள்ளே கடந்தாள் கங்கா. இவர்கள் சற்று உள்ளே தள்ளி அமர்ந்திருந்ததால் கவனிக்காமல் அவளது அறைக்கு சென்றுவிட அதிர்ச்சியில் கண்களை விரித்தனர் தோழியர் இருவரும்.

நானொரு புல்லாங்குழல்

நீயொரு காற்று…

இருவரும் தழுவி

இசையாகிறோம்…

நானொரு சலங்கை

நீயொரு நாதம்…

இருவரும் இணைந்தே

ஒலித்திருப்போம்…

Advertisement