அரூபரூபம் என்னும் ஊரில் உள்ள ஒரு அனாதை இல்லம். அந்த ஊரில் வீடுகளை விட விவசாய நிலங்கள் அதிகமாக இருக்கும். அனைத்து வீடுகளும் ஒரே அளவானவையாகவே இருக்கும். பெரிய மாளிகைகள் என்று எதுவும் இருக்காது. ஊரில் பெரிய கோபுரம் என்றால் கோவில்கள் மட்டுமே இருக்கும். அனைத்து மதத் திருவிழாக்களும் ஒன்றுபோலே கொண்டாடப்படும். மிகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருந்த அந்த ஊரில், ஒருநாள் ஒரு நபர் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்தார். அவர் தன் பிள்ளையைத் தரையில் கிடத்தி முருகனை நோக்கிக் கண்ணீர் வழிய கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.
இதைக் கவனித்து அங்கிருந்த பூசாரி ஒருவர் அருகே வந்து அவன் மேல் கை வைத்து கேட்டார்,
“என்னப்பா ஆச்சு? எதுக்கு அழுதுட்டு இருக்க?”.
கைவைத்த அந்தப் பூசாரியைப் பார்த்த அந்த நபர் அவர் முன் எழுந்து நின்றார். மீண்டும் பூசாரி கேட்டார்,
“பச்சப் பிள்ளையை வெட்டாந்தரையில் கெடத்திட்டு எதுக்குப்பா இப்படி அழுதுட்டு இருக்க? என்னாச்சு?” என்றார்.
உடனே அந்த நபர் கண்களைத் துடைத்துவிட்டு,
“ஐயா, இது என்னோட இரெண்டாவது பொண்ணுயா. எனக்கு மூத்ததும் பொண்ணுதான். ரொம்ப ஏழை குடும்பம். என் வீட்டுக்காரி இவளுக்கும் கட்டி கொடுக்கறதுக்கு, நகை செய்றதுக்கெல்லாம் நம்மகிட்ட தெறன் இல்ல. இந்தப் பிள்ளையை வளர்த்துப் பாவம் பண்றதுக்கு ஏதாவது ஒரு நல்ல ஆசிரமமா போயி சேத்துறுன்னு சொல்லி அனுப்பி விட்டாயா அதுதான் எங்க போகன்னு தெரியாம ஊரு ஊரா போறேன். இந்த ஊரு இல்லத்துல நல்ல பாத்துக்காங்கனு கேள்விபட்டேன் அதான் வேலன பாத்ததும் என் பிள்ளைய கெடத்தி அழுதுட்டு இருக்கேன்யா” என்றார்.
பூசாரிக்கு மனம் இளகியது. அவர் அந்தப் பிள்ளையைக் கைகளில் எடுத்து அவருடன் அணைத்துக் கொண்டார்.
“கவலைப்படாதப்பா, இந்தப் பிள்ளையை நாங்க பாத்துக்குறோம். எங்க ஊருக்கு நீயும் உன்னோட பொண்டாட்டியும் வந்துற வேண்டியதுதானே. இந்த ஊர்ல எல்லாருமே ஒரே குடும்பம் மாதிரிதான். எல்லாரும் உன்னைச் சேர்ந்து பாத்துக்குறோம்.”
“இல்லையா அந்தப் பொண்ணையாவது என் சொந்த காசுல சம்பாதிச்சு பாத்துக்கணும்னு ஆசை. இவளையும் எனக்கு விட்டுட்டு போக மனசே இல்லையா இருந்தாலும் சூழ்நிலை அவன் சோதிக்குறான்.” என சொல்லி வேலன் சிலையை திரும்பி பார்த்தார்.
“அதனால தான் உங்ககிட்ட குடுத்துட்டு போறேன்யா.”
“கவலைப்படாதப்பா! வேலன் கிட்ட உன் பிள்ளையைக் குடுத்துட்டன்னு நெனச்சுக்கோ. இனிமேல் எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான்.”
உடனே அந்தக் குழந்தையை கடைசியாக ஒருமுறை அந்தத் தந்தை தன் கைகளில் வாங்கி வாரி அணைத்து முத்தமிட்டுப் பூசாரிடம் சொன்னார்,
“பொண்ணு பேரு வேல்விழி. நல்லபடியா பாத்துக்கோங்க” என்று கண்ணீர் மல்கக் கூறி அங்கு இருந்து கடந்தார்.
வேல்விழி அதே ஊரில் வளர்ந்தாள். ஊரில் உள்ள அனைவரும் தன் சொந்த மகளாக அவளை ஏற்றுக்கொண்டனர். ஆசிரமத்தில் இருக்கும் பிற குழந்தைகளும் கூட ஒருமுறை கூடத் தனக்கென்று சொந்தங்கள் இல்லை என்று எண்ணியதே கிடையாது.ஊர்க்கார பிள்ளைகள் ஆசிரமத்தில் வந்து தங்குவதும், ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகள் ஊரில் உள்ள ஏதாவது ஒரு வீட்டில் தங்குவதும், சாப்பிடுவதும் என அனைவரும் பாகுபாடின்றி ஒரே போலவே இருந்தனர். வாரம் ஒரு முறை ஊர் கூடிப் பொது சமையல் செய்து சாப்பிடுவதாலும், ஆசிரமத்திற்கென்று தனிச் சாப்பாடு கிடையாது. மற்ற வீடுகளில் இருந்து தான் சாப்பாடு வருகிறது என்பதனாலும், தங்கள் தனித்து இருக்கிறோம், எங்களுக்கு யாருமில்லை என்ற உணர்வு எந்தக் குழந்தைக்கும் வந்தது கிடையாது. ஊரில் ஒரே ஒரு பள்ளி மட்டும்தான் உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு வரை அங்குப் பாடம் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.வாரம் இருமுறை ஊரிலுள்ள பெரியவர் பனுவன் தாத்தா சிறு பிள்ளைகள் அனைவரையும் அழைத்துப் புராணக் கதைகள் நிறைய சொல்வது வழக்கம். குழந்தைகள் எப்போதும் விளையாடிக்கொண்டும், வரப்பில் வேலை பார்த்துக்கொண்டும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.
அன்றைய நாள் அமுதனும் வேல்விழியும் ஆசிரம வாசலில் உட்கார்ந்து பரிட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தனர். அமுதனுக்குப் பார்வை இல்லை என்பதால் வேல்விழி அனைத்தையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். எங்கிருந்தோ வந்த பிரபு வேல்விழியை பார்த்து,
“ஏய் வேலா! உனக்குத் தெரியுமா? முத்தண்ணன் ரொம்ப நாளுக்கு அப்புறம் ஊருக்கு வந்திருக்காங்கல. அவங்களுக்கு வெளிநாட்டுல நிரந்தரமா வேலை கிடைச்சுச்சுன்னா, கருப்பனுக்கு கெடா வெட்டுறேன்னு வேண்டி இருந்தாங்களாம். அதனால இன்னைக்கு கருப்பசாமி கோயில்ல கெடா வெட்டுறாங்க” என்றான்.
பிரபு உடனே சொன்னான், “அதெல்லாம் பயமா இருக்கும் வேலா. அதெல்லாம் நீ பார்க்க முடியாது. நீ அவ்ளோ பெரிய தைரியசாலி எல்லாம் இல்ல. நீ உக்காந்து படி. நான் சும்மா உன்கிட்ட சொல்லலாம்னு தான் வந்தேன்” என்றான்.
வேல்விழி உடனே,
“அதெல்லாம் எங்களுக்குத் தைரியம் இருக்கு. அமுதா, நீ என் கூட வாரியா, நம்ம ரெண்டு பேரும் போய்ப் பாப்போமா?” என்றாள். அமுதன் உடனே சரி வா போகலாம் என்றான். பிரபு மீண்டும் “போகாத வேலா சொன்னா கேளு பயந்துருவ” என்றான். வேல்விழி எதையும் காதில் வாங்காமல் அமுதனையும் அழைத்துக்கொண்டு கெடா வெட்டும் இடத்திற்கு சென்றாள்.
வேல்விழியும் அமுதனும் தாங்கள் தைரியசாலி என்று கெடா வெட்டுமிடத்திற்கு சென்றனர். பூசாரி அருவாளை ஓங்கியதும், வேல்விழி கண்களையும் காதுகளையும் இறுக்கமாக மூடிக்கொண்டு “இறைவா” எனக் கத்தினாள். வெட்டும்போது தெறித்த ரத்தம் அமுதனின் கைகளில் வந்து விழுந்தது. இருவரும் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடிச் சகாய அன்னை ஆலய வாசலில் வந்து அமர்ந்தனர். வேல்விழி சொன்னாள்,
“இனிமே கெடா வெட்டுறத நான் பார்க்கவே மாட்டேன்டா!” .
“ஆமா வேலா. ஆடு ரத்தம் என் கையில பட்டதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அந்த ஆடுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்ல. இதைப் பார்க்கக் கூடாதுன்னு தான் கடவுள் எனக்குக் கண்ணு கொடுக்கல போல” என்றான்.
பிரபு ஓடி வந்தான் இருவரும் தெறித்து ஓடி வருவதை கண்டு சிரித்துக்கொண்டே அங்கு வந்தான். “அப்பவே சொன்னேன்ல வேலா! நீ எல்லாம் இதெல்லாம் பார்க்கமாட்டேன்னு” என்றான். வேல்விழி பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை.
“சரி வா, உன்னை அம்மா கூப்பிட்டாங்க. வேலனுக்கு பூஜை பண்றதுக்கு நேரமாயிடுச்சாம். நீ வந்து பாட்டு பாடுவியாம்” என்றான். உடனே வேல்விழி, பிரபு, அமுதன் மூவரும் வேலனின் கோவிலுக்குச் சென்று அங்கு உட்கார்ந்து பாடல் பாட ஆரம்பித்தனர். வேல்விழி மிகவும் அருமையாகப் பாடல் பாடுவாள். தினமும் மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவளது பாடல் எப்பொழுதும் வேலனின் கோவிலில் கேட்டுக் கொண்டே இருக்கும். அவளுக்குப் பிடித்த தெய்வமும் வேலன் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் பாடுவாள்.
அறிவியல் வாத்தியாரொருவர் ஊருக்குக் குடிவந்திருந்தார். அவரின் பெயர் பாலன். அவரது மனைவி பெயர் உமையாள். இவர்களின் மகன் பெயர் கார்த்தி. இவர்கள் மூவரும் அரூபரூபத்திற்குள் குடிவந்திருந்தனர். பாலன் வாத்தியாருக்கு ஊரிலுள்ள பள்ளியில் வேலை கிடைத்ததால் மூவரும் இங்குக் குடிவந்திருந்தனர்.
அவர்கள் குடிவரும்போது கார்த்தி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.ஒருநாள் மாலை பள்ளி முடிந்ததும் ஊரிலுள்ள ஆண் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து ஊர் மன்றலில் விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து தாய்மார்கள் பிள்ளைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாவாட்டிக் கொண்டும் அரிசியில் கைப் பார்த்துக் கொண்டும் இருந்தனர். உமையாள் எழில் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தாள்.
எழில் அவர்களைப் பார்த்து “நீங்கதான் ஊருக்குப் புதுசா வந்தீங்களா?” என்று கேட்டாள்.
மீண்டும் எழில் சொன்னாள்.
“நீங்க வேணா பாருங்க. உங்க பையன் பெரிய பையன் ஆகும்போது என் பொண்ண தான் கட்டிக்கணும், உன் பொண்ண தான் கட்டிக்கணும்னு ஊர்ல இருக்குற அத்தனை அம்மாமார்களும் சண்டை போடப்போறாங்க” என்றார். சிரித்தாள் உமையாள்.
“உங்க பிள்ளை எங்க இருக்கு?” என்றாள் உமையாள்.
“அதோ அந்த மரத்து பக்கத்துல உக்காந்து விளையாடிட்டு இருக்காளே, அந்தப் பச்சை கலர் டிரஸ் போட்டுருக்காள்ள. அவ தான் என் பொண்ணு. பேரு வசுமதி” என்றார்.
“உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா” என்றார்.
“இங்க ஊரு பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் எழில்.
“ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க பார்த்தாலும் வயக்காடு. நல்லா சில்லுன்னு காத்து. அதுவும் இல்லாம ஊர்ல திரும்புற
இடத்துல எல்லாம் கோவில் இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு. அங்க டவுன்ல இருந்தபோது நினைச்சா கூடக் கோயிலுக்குப் போக முடியாது” என்றாள்.
“கோயிலுக்கு ஏன் போக முடியாது? என கேட்டாள்.
“என் வீட்டுக்காரருக்கு கடவுள் நம்பிக்கை சின்ன வயசுல இருந்தே இல்ல. அறிவியல் வாத்தியார் வேறயா? அதனால பிள்ளைக்கு மூடநம்பிக்கை எல்லாம் சொல்லி கொடுத்து வளர்க்காத அப்படின்னு சத்தம் போடுவார். அதனால நாங்க கோயிலுக்குப் போறதே இல்ல” என்றார்.
“இது என்ன கொடுமையா இருக்குது! கோயிலுக்குப் போகாமலா இருக்குறது? இங்க வந்ததுக்கு அப்புறம் தான் கோவில் போனீங்களா?” என்றான்.
தயக்கத்துடன் கார்த்தியைப் பார்த்தாள். “இருட்டப்போகுது, கார்த்தி….” என்று இழுத்தாள்.
உடனே எழில் சொன்னாள். “அவனையும் கூட்டிட்டு வாங்க போவோம்”. தயங்கி தயங்கி ஒப்புக்கொண்டாள்.
கார்த்தியை அழைத்துக்கொண்டு வேலன் கோவிலுக்குச் சென்றனர். போகும் வழி எல்லாம் கார்த்தி
“மா! நீங்கக் கோவிலுக்குப் போறது நான் அப்பா கிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்” என்று மிரட்டிக் கொண்டே சென்றான்.
எழில் சிரித்துக்கொண்டே வந்தாள். “நான் என்ன கேட்டாலும் வாங்கி தந்தீங்கன்னா நான் அப்பா கிட்ட சொல்லமாட்டேன்” என்று கார்த்தி மீண்டும் மீண்டும் மிரட்டிக் கொண்டே வந்தான்.
கோவிலுக்குள் நுழையும் பொழுது அழகான சூரிய அஸ்தமனம் நிகழ்ந்து கொண்டிருந்தது. சூரியன் தான் தான் இந்த உலகில் மிக அழகான நிறமுடையவள் என்பது போல வானம் முழுவதையும் அந்த நிறத்தை கொண்டு சிறைப்படுத்திக் கொண்டு இருந்தது. குளிர்ந்த காற்று வரப்பிலிருந்து வர, கோவிலுக்குள் தேவதையின் குரல் போல் வேல்விழியின் குரல் ஒலித்து கொண்டிருந்தது.
உள்ளே வந்து அவளின் குரல் கேட்டவுடன் தன்னையும் அறியாமல் கார்த்தி வேலனை கையெடுத்து கும்பிட்டான். கண்களில் அவள் உருவம் மட்டுமே இருந்தது, என்றாலும் வேலனை பார்த்தே கை கும்பிட்டிருந்தான். பாடலும் தரிசனமும் முடிந்ததும். உமையாள் வேல்விழியை அழைத்து அவள் தலையில் கையை வைத்து
“ரொம்ப மங்களகரமா பாடினம்மா. ரொம்ப நல்லா இருந்தது” என்றாள்.
வேல்விழி உடனே
“தினமும் நான் சாயங்காலம் இங்க வந்து பாடுவேன். நீங்கத் தினமும் வாங்க” என்றாள். அன்றிரவு வீட்டுக்குச் சென்று அப்பாவிடம் கோவிலுக்குப் போனதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை கார்த்தி. அவளின் முகமும் குரலும் அவன் கனவில் அவனை தொந்தரவு செய்தன.
மறுநாள் காலைப் பள்ளியில் இடைவேளை பொழுதில் பள்ளித் திடலில் வேல்விழி எங்காவது இருப்பாளா என்று தேடிக் கொண்டிருந்தான்.
பிரபு, என்ன கார்த்தி யாரையோ தேடுவது போல் தெரிகிறது என்று அவன் அருகில் சென்றான். “என்னடா கார்த்தி யாரடா தேடுற” என கேட்டான்.
“இல்லடா நேத்து நானும் அம்மாவும் கோவிலுக்குப் போனோமா. அங்க ஒரு பொண்ணு பாட்டு பாடிட்டு இருந்துச்சு. அதுதான் அது யாருன்னு எங்கன்னு பாக்குறேன்”. “
“வேலாவா? அவ 10 D டா. அந்தப் பக்கம் இருப்பா. அவ பாட்டு மட்டும் இல்ல. டான்ஸும் நல்லா ஆடுவாள்” என்றான்.
“வேல்விழி எங்க ஊர்ல எல்லாரும் சின்ன ஆண்டாள்னு சொல்லுவாங்க”
“ஆண்டாளா அது யாருடா?”
“ஆண்டாள் தெரியாதாடா! ஆண்டாள் அம்மா கிருஷ்ணர் தான் அவங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி ரொம்ப நாளா அவருக்காகக் காத்துட்டு இருந்து ஒரு நாள் உண்மையிலேயே கிருஷ்ணர் வந்து அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாங்கடா”
“என்ன அவங்க இறந்துட்டாங்களா?” என்று கேட்டான் கார்த்தி.
“இல்லடா மறைஞ்சுட்டாங்க.”
“இதெல்லாம் சும்மாடா. இதெல்லாம் நம்பிட்டு இருக்கீங்களா இன்னும்? அப்ப என்ன வேல்விழி அந்த வேலன் வந்து கூட்டிட்டு போயிருவானா” என்றான்.
“யாருக்கு தெரியும்? அவளுக்கு ரொம்ப நம்பிக்கை. ரொம்ப பக்தி”
மணி அடித்ததும் வகுப்புக்குள் சென்றனர். சாயங்காலம் பள்ளி முடிந்து வந்து கொண்டிருக்கும் பொழுது பெரிய மரத்தடியில் பனுவன் தாத்தா உட்கார்ந்திருந்தார்.
அவரைச் சுற்றிச் சிறு பிள்ளைகள் அனைவரும் உட்கார்ந்திருந்தனர். கார்த்தி இதைக் கவனித்தான். பிரபுவிடம் கேட்டான். என்னடா அங்க எல்லாரும் உக்காந்துருக்காங்க. Special classஅ? என்றான்.
“இல்லடா பனுவன் தாத்தா கதை சொல்லுவாரு. நல்லா இருக்கும் கதை. வாரியா நாம போய்க் கேப்போமா?”
“என்ன மறுபடியும் சாமி பத்தி பேசத் தான கூட்டிட்டு போற” என்று சொல்லிவிட்டு அந்தக் கூட்டத்தைப் பார்த்தான். கூட்டத்தில் வேல்விழியின் முகம் தெரிந்தது. உடனே அப்படியே உறைந்தான்.
“உனக்கு வேண்டான்னா…..” என்று கார்த்தியின் முகத்தைப் பார்த்தபோது, கார்த்தியின் கண்கள் வேல்விழியையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தன. ஏதோ சரியில்லாதது போல் உணர்ந்த பிரபு சிரித்துக்கொண்டே சொன்னான்.
“உனக்குப் பிடிக்கலைன்னா நீ வேணும்னா வீட்டுக்குக் கெளம்புடா. நான் போயி கதை கேட்டுட்டு தான் வரப்போறேன்” என்றான். கார்த்திக்கு எதுவும் காதில் விழவே இல்லை. அவனை ஒரு உலுக்கு உலுக்கி “டேய்” என்றான்.
“என்னடா சொன்ன” என்றான் கார்த்தி.
“உனக்கு வேண்டான்னா நீ வீட்டுக்குப் போ. நான் போய்க் கதை கேக்கப்போறேன்” என்றான்.
“இல்லடா வீட்டுல போயி சும்மா தான் இருப்பேன். அதுக்கு வந்து நீங்க என்ன கதை சொல்றீங்கன்னு கேக்கேன் வா போலாம்” என்றான்.
சிரித்துக்கொண்டே பிரபு சென்றான். வேண்டுமென்றே வேல்விழி அருகில் பிரபு அமர்ந்தான். பிரபுவினருகில் கார்த்தி அமர்த்திக்கொண்டான். பனுவன் தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தான். பிள்ளைகளா!
இன்னைக்கு வேலன் ஞானப்பழத்துக்காகச் சண்டை போட்ட கதையைத் தான் பார்க்கப்போறோம் என்றார்.
வேலனின் கதை என்பதால் வேல்விழியின் முகம் முழுவதும் பூத்து கிடந்தது. அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்தி. அவளை எப்படியாவது நாம கவனிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து கதையில் ஏதாவது கேள்வி கேட்டுக் கவனிக்க வைக்கலாம் என்று நினைத்தான்.
அதனால் தாத்தா கதை சொல்வதை கவனமாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.
தாத்தா கதையை ஆரம்பித்தார். “ஒரு நாள் கைலாயத்துல சிவனையும் பார்வதியும் பாக்குறதுக்கு நாரதர் வந்தாரு. அவர் கையில ஒரு ஞானப்பழம் வச்சிருந்தாரு. அந்த ஞானப்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தாரு. பார்வதி தேவி நமக்கு வேண்டாம், நம்ம பிள்ளைங்களுக்கு கொடுக்கலாம்னு சொன்னதுனால விநாயகரையும் வேலனையும் அங்க கூப்பிட்டாங்க. அப்ப ரெண்டு பேர்ல யாருக்கு இந்தப் பழத்தைப் கொடுக்கலாம்ன்னு பேச்சு வந்துச்சு.
அப்போது நாரதர் சொன்னாரு, “இந்தப் பழத்தை அரையா மட்டும் கொடுக்கக் கூடாது. முழுசா தான் கொடுக்கணும்” அப்படின்னு சொன்னார். உடனே கார்த்தி கையை உயர்த்தினான்.
“எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்.
பனுவன் தாத்தா, “யாரு இது? புது பையனா! உன் பேரு என்னப்பா?” எனப் கேட்டார். “கார்த்தி” என்றான்.
வேல்விழியும் பனுவன் தாத்தாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். கார்த்திக்கு எதுவும் புரியவில்லை.
“என் பேரு என்ன சிரிப்பாகவா இருக்குது?” என கேட்டான். பனுவன் தாத்தா சிரித்துக்கொண்டே சொன்னார்,
“பேரு சிரிப்பா இல்லப்பா. வேலனைப் பத்தி பேசும்போது வேலனே வந்து கேள்வி கேக்குற மாதிரி இருக்கு. அதனால தான்” என்றான்.
“நான் ஒன்னும் அந்த வேலன் இல்ல. நான் அந்த வேலனா இருந்தா அந்தச் சிவன் கிட்டே இந்தக் கேள்வி கேட்டு இருப்பேன்” என்றான்.
தாத்தா மீண்டும் கலகலவென சிரித்தார். “அப்படி என்ன கேள்வி கேட்கப்போற?” என்றான்.
“இந்த உலகத்தை மொத்தமும் படைச்ச அந்தக் கடவுளுக்கு அந்தப் பழத்தைக் கூட வா ரெண்டாக்கத் தெரியாது?” என்றான் என்று கேட்டான்.
பனுவன் தாத்தா சிரித்துக்கொண்டே, “நல்ல கேள்வி அந்தப் பழத்தை ஏன் பிரிக்க கூடாதுன்னு உனக்குத் தெரியணும். அவ்வளவுதானே! நில் இப்ப சொல்றேன்” என்றார்.
வேல்விழியையும் பிரபுவையும் அழைத்து தள்ளிப்போய் நிற்க சொல்லிவிட்டு,
“குழந்தைகளா நான் இப்பொழுது உங்களுக்கு முழு ஞானப்பழம் கொடுக்க போறேன் அது என்னனா “அங்கு மரம் இருந்தது அதில் ஒரு குரங்கு இருந்தது” எல்லாரும் ஞாபகம் வச்சுக்குங்க இப்போ அவங்கள கூப்பிட போறேன் அவங்ககிட்ட பாதி ஞானபழம் மட்டும் கொடுக்க போறேன் கவனமாக கவனிங்க”.
பிரபுவை அழைத்து குழந்தைகள் முன்னாடி பிரபுவிடம் “உனக்கு பாதி ஞானபழம் “அங்கு ஒரு மரம் இருந்தது” என்றார். பின்பு பிரபுவைத் தூரமாக தள்ளி நிற்க சொல்லிவிட்டு
வேல்விழியை அழைத்து “உனக்கு பாதி ஞானபழம் “அதில் குரங்கு இருந்தது” என்று சொன்னார். இப்பொழுது வேல்விழி பிரபு இரண்டு பேரையும் அழைத்து இரண்டு பேரையும் நிற்க வைத்து வேல்விழியிடம் “உனக்கு பாதி ஞான பழம் கொடுத்தேன் அல்லவா சொல்லு அது எங்கு இருந்தது?” என்று கேட்டார்.
ஆனால் வேல்விழிக்கு அது குரங்கு என்று மட்டும்தான் தெரியும். அது எங்கு இருந்தது என்று தெரியாது. அது குரங்கு என்பதால் அது காட்டில் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு காட்டில் இருந்தது என்று சொன்னாள்.
குழந்தைகள் அனைவரும் சிரித்தனர், வேல்விழிக்கு எதுவும் புரியவில்லை, பின்பு பிரபுவிடம் அதில் என்ன இருந்தது என்று கேட்டார். ஆனால் பிரபுவிற்கு அங்கு மரம் இருந்தது மட்டும்தான் தெரியும். அதனால் மரத்தில் பறவை இருந்திருக்கும் என்ற நினைத்துப் பறவை என்று சொன்னான்,
குழந்தைகள் மீண்டும் சிரித்தனர். பனுவன் தாத்தா அனைத்து குழந்தைகள் பக்கமும் திரும்பி “முழு ஞான பழம் என்ன நான் என்ன சொன்னேன் இவங்க ரெண்டு பேர்கிட்டயும்”என்று கேட்டார்.
உடனே அனைத்து குழந்தைகளும் “அங்கு ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தில் குரங்கு இருந்தது” என்று சொல்லினர். பனுவன் தாத்தா கார்த்தின் பக்கம் திரும்பி, “இப்போ புரியுதா? அந்த ஞானப்பழம் உண்மையான பழம் கிடையாது. அது ஞானத்தை குறிக்கும். ஒரு ஞானம் எப்பவுமே நாம மத்தவங்களுக்கு கொடுக்கும்போது முழுசா தான் கொடுக்கணும். இல்லன்னா இந்த மாதிரி தான். வேல்விழிக்கு அங்க குரங்கு இருந்ததுன்னு தெரியும். ஆனா அது எங்க இருக்குன்னு தெரியாது. அதனால எந்தப் பயனுமே கிடையாது. அதே மாதிரி பிரபுவுக்கு அங்க மரம் இருந்ததுன்னு தெரியும். ஆனா அந்த மரத்துல என்ன இருக்குன்னு தெரியாது. அதனால அறிவை எப்பவுமே பாதியா கொடுக்கக் கூடாது. இது தான் நம்ம முன்னோர்கள் “அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்”னு சொன்னாங்க.
இதனால தான் அந்தப் பழத்தை பிரிக்க முடியாதுன்னு சொல்றாங்க. இப்ப புரியுதா?” என்று கேட்டார். கார்த்திக்கு இந்த விளக்கம் மிகவும் புதியதாக இருந்தது. அவனை இது மேலும் யோசிக்க வைத்தது. அவன் பனுவன் தாத்தாவின் விளக்கத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். அதற்குப் பிறகு வேறு எந்தக் கேள்வியும் கேட்கத் துணியக்கூட இல்லை. பனுவன் தாத்தா கதையைத் தொடர்ந்தார்.