அத்தியாயம் ஐம்பத்தி ஒன்று :

துன்பமினியில்லை சோர்வில்லை                                                                                      சோர்வில்லை தோற்பில்லை                                                                                                           

நல்லது தீயது நாமறியோம்                                                                                                    நாமறியோம் நாமறியோம்                                                                                                               

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட                                                                                                                    நல்லது நாட்டுக தீமையை ஒட்டுக                                                                                                       

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா                                                                               நின்னைச் சரணடைந்தேன்                    

   ஐந்து வருடங்களுக்கு பிறகு

அன்று கார்த்திக்கின் வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாள்.

கார்த்திக் வழக்கை திசை திருப்ப எந்த முயற்சியும் எடுக்கவில்லை….. அதிக நாட்கள் இழுக்கவும் முயற்சிக்கவில்லை… ஒரு மாதிரி மனதை தயார்படுத்தி வைத்திருந்தான். என்ன தீர்ப்பு வந்தாலும் எதிர்கொள்வது என்ற முடிவில் இருந்தான். யாரையும் இதில் தலையிடவிடவில்லை.

வீரமணியும் வழக்கில் தலையிட்டு ஏதாவது செய்ய முடியுமா என்று பிரம்மப்ரயர்தனம் செய்து பார்த்தார்…… “ம்கூம்! இதில் தலைவேயிட கூடாது!”, என்று மிகவும் கண்டிப்பாக் கார்த்திக் சொல்லிவிட்டான். 

கார்த்திக்கின் முடிவு சக்தி அறிந்ததே… இருந்தாலும் அந்த நாள் வந்த போது…     

காலையில் எழுந்ததில் இருந்து வீடு அமைதியாக இருந்தது… ஐந்து வயது ஆதர்ஷ்                     யு கே ஜி படித்துக் கொண்டிருந்தான்.    

ஆதர்ஷை ஸ்கூலிற்கு ரெடி செய்து கொண்டிருந்த சக்தியின் முகத்தில் மிகுந்த கலக்கம்….. அவள் காலையில் அவனுக்கு ஒரு ஆம்லெட்டை ஊட்டி கொண்டிருந்தாள். அவள் ஊட்டிக் கொண்டிருக்கும் போதே கார்த்திக் அவனுக்கு யூனிபார்மை அணிவித்துக் கொண்டிருந்தான்.

அங்கே ஆதர்ஷின் குரல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. “அப்பா”, என்று கார்த்திக்கை அழைத்து, “நேத்து ஸ்கூல்ல…..”, என்று ஆரம்பித்து அங்கு நடந்தவைகளை மழலையில் மிளிற்றிக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.

இது எப்போதும் வழக்கமாக நடப்பது தான்…. காலை வேலைகளில் கார்த்திக் ஆதர்ஷிற்கு யூனிபார்ம் அணிவிக்கும்போது அவ்வளவு கதைகளையும் சொல்வான் ஆதர்ஷ்.

ஆதர்ஷ் ரெடியாகி வர…. கருப்பண்ணன் காருடன் தயாராக இருந்தார். “நான் இன்னைக்கு ஸ்கூல் கொண்டு போய் விடறேன்”, என்று காரின் சாவியை கருப்பண்ணனிடம் இருந்து வாங்கிய கார்த்திக்……. “அம்மாக்கு டாடா சொலிட்டு வா”, என்றான்.

“அம்மா பய்..”, என்று வாசலை நோக்கி சென்ற ஆதர்ஷ்… “அச்சோ! பாப்பா கிட்ட சொல்லலை”, என்று ஓடி வந்து அம்மாவின் வயிற்றில் முத்தமிட்டு, “பாப்பா பய்”, என்று சொல்லி போனான்.

ஆம்! இப்போது சக்தி நிறை மாத கர்ப்பிணி.       

சோர்வுடன் திரும்ப உள்ளே போகும் அவளை பார்த்தவாரே காரை எடுத்தான் கார்த்திக்.

ஸ்கூலில் அவனை இறக்கி விட்டவன்… மகன் விரைந்து உள்ளே செல்ல முயலவும்….  “ஆதர்ஷ்”, என்று மகனை அழைத்தவன்…. “அப்பா ஊருக்கு போனாலும் போவேன்! அப்பா வர்ற வரைக்கும் அம்மாவையும் பாப்பாவையும் நீதான் பார்த்துக்கனும்! பார்த்துக்குவ தானே!”, என்றான் கார்த்திக்…

கார்த்திக்கின் பொறுப்பான குணம் அவனுடைய மகனிடம் இல்லாமல் போகுமா என்ன….? “ம்! நான் பார்த்துக்குவேன் பா!”, என்று சொன்னவனை அணைத்து தூக்கி  கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான் கார்த்திக்.

“அப்பா இல்லைனா அம்மா சரியா சாப்பிட மாட்டாங்க…. ஆதர்ஷ் என்ன செய்யனும்னா…… டெய்லி நீ சாப்பிடும் போதும் அம்மா சாப்பிட்டா தான் ஆதர்ஷ் சாப்பிடுவான்னு சொல்லனும், சரியா! சொல்லுவியா?”, என்றான்..    

“ம்! ம்! பா!”, என்று சமர்த்தாக தலையசைத்தான் ஆதர்ஷ்.

மனமேயில்லாமல் மகனை இறக்கிவிட்டு…… கார்த்திக்கே அவனை கிளாஸ் ரூம் வரை கொண்டு போய் விட்டு வந்தான்.  

கிளாஸ் உள் விடும்போது கூட, “அப்பா சொன்னதை மறக்க மாட்டியே!”, என்று கார்த்திக் உறுதி படுத்த, “மறக்க மாட்டேன் பா!”, என்ற உறுதியை உறுதியாக கொடுத்தான் அந்த ஐந்து வயது குழந்தை…..

சக்தி தன்னை தேற்றிக்கொள்ள வேண்டும் என்பதே கார்த்திக்கின் இடைவிடாத வேண்டுதலாக இருந்தது. எப்படியும் ஏதோ ஒரு தண்டனை உறுதி, அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் எண்ணமும் தற்போதைக்கு அவனுக்கு இல்லை…

அவனுடைய குழந்தைகள் பெரிதாவதற்கு முன் இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர அவன் முடிவு செய்திருந்தான்.  

வீடு வந்து சக்தியை தேடிய போது அவள் பூஜை அறையில் கடவுளை வணங்கிக் கொண்டிருந்தாள். கார்த்திக் வந்தவுடன் தீபாராதனை காட்டியவள்… கண்மூடி தெய்வத்தின் சன்னதியில் நின்று கொண்டிருந்த கார்த்திக் கண் திறக்கும் வரை காத்திருந்து அவளே ஆரத்தி ஒற்றினாள்……

பின்பு திருநீறை எடுத்து அவனுக்கு இட்டு விட்டாள். பின்பு தானும் திருநீற்றை இட்டு வெளியே வந்தாள்.

இருவரும் மெளனமாக காலை உணவினை உட்கொண்டனர்… சக்தி உணவு உண்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன்….. “தீர்ப்பு எது வந்தாலும் கலங்க கூடாது சக்தி…. தைரியமா இருக்கனும்…….. அப்போ தான் நீ ஆதர்ஷை பார்த்துக்க முடியும்! பொறக்க போற பாப்பாவையும் பார்த்துக்க முடியும்….. செய்யவ தானே!”, என்றான்.

“ம்!”, என்று தலையாட்டினாள்.

“சக்தி!!!!! இப்படி நீ ரொம்ப சோர்ந்து தெரிஞ்சா நான் எப்படிடா தீர்ப்பை எதிர் கொள்வேன்”, என்றான் மென்மையாக அவளை அணைத்து……

“நான் எப்படி கார்த்திக் தனியா குழந்தை பெத்துக்குவேன், will miss you karthick”, என்று கரகர வென்று கண்ணில் கண்ணீர் விட்டாள்.

“சக்தி!”, என்று கார்த்திக் அதட்டி அவளை விலக்க முற்பட…. சக்தி அவனை இறுக கட்டிக்கொண்டாள்…..

“வயிறு அழுந்த போகுது சக்தி!”, என்று கார்த்திக் அவளின் அணைப்பை தளர்த்தி விட்டான்.            

“நீ தைரியமா இருந்தா தான் சக்தி! என்னால நிம்மதியா ஒரு முடிவை எடுக்க முடியும்…”,

“நான் இருந்துக்குவேன்! நீ இல்லாம இருந்துக்குவேன்! ஆனா இப்போ எப்படி இருப்பேன்!”, என்று குனிந்து அவள் வயிற்றை பார்த்தபடி கேட்க…..

“இருந்துக்குவா, என் சக்தி தைரியமான பொண்ணு!”, என்று அவளை தேற்றினான்.

“எதுவா இருந்தாலும் நான் அதை ஏத்துக்க போறேன் சக்தி… ஜட்ஜ்மென்ட் வந்துடுச்சுன்னா அப்பீல் பண்ண மாட்டேன்….. ஜெயில்ல இருக்கும் போது போன் பண்ண மாட்டேன்…. நீயும் என்னை அங்கெல்லாம் வந்து பார்க்க கூடாது…. எதுவா இருந்தாலும் மாரி மூலமாவோ செல்வம் மூலமாவோ சொல்லி அனுப்பு….”,

“உங்கப்பாவை அனுப்பாத!, இன்கேஸ் நான் வர நாளாகும்னா நான் வர்ற வரைக்கும் நீ உன் அப்பா வீட்ல தான் இருக்கனும், நான் இல்லைன்ற ஃபீலிங் ஆதர்ஷ்க்கு வரவே கூடாது”, என்றான்.

“ம்”, என்று தலையாட்டினாள்….

பின்பு மென்மையாக அவளின் நெற்றியில் இதழ் பதித்து விடுவிக்க…. பதிலுக்கு சக்தி அவனின் இதழ்களில் அழுத்தமாக தன் கவிதையை எழுதினாள்.

அவள் விடவும், “கிளம்புவோமா நேரமாச்சு, நான் பத்து மணிக்கு கோர்ட்ல இருக்கனும்”, என்றான்.

மெளனமாக அவனுடன் சக்தி கிளம்ப…… அவளை அழைத்துக் கொண்டு வீரமணியின் வீட்டிற்கு வந்தான்…. அங்கே வீரமணியும் தெய்வானையும் இருக்க…..

“பார்த்துக்கோங்கம்மா…..”, என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே சொல்லி கிளம்ப…. அவனுக்கு முன்னால் வீரமணி போய் வெளியில் நின்றுகொண்டிருந்தார். “நானும் வருவேன்!”, என்ற பிடிவாதம் முகத்தில் இருக்க… 

“நீங்க எம்.பீ ஐயா! நீங்க வரவேண்டாம்!”, என்றான்.

ஆம்! இப்போது வீரமணி மந்திரி பதவியில் இல்லை! ஏனென்றால் அவரின் கட்சி ஆட்சியில் இல்லை… ஆனால் தேர்தலில் நின்று ஜெயித்து எம் பீ பதவியில் இருந்தார்.

“இருந்தா? நீ என் மாப்பிள்ளை இல்லைன்னு ஆகிடுமா!”,

“ஏதாவது பத்திரிக்கைல தேவையில்லாம எழுதுவாங்க..”,

“எழுதிட்டு போறாங்க! நானே கவலைப்படலை! உனக்கென்ன! நான் வருவேன்!”, என்றார் பிடிவாதமாக.

அவன் சக்தியை பார்க்க…. சக்தி, “விட்டுவிடு!”, என்பது போல ஒரு பார்வை பார்த்தாள்…..

பின்பு கருபண்ணன் கார் எடுக்க, இருவரும் கிளம்பினர். அவர்கள் கோர்ட் சென்றால் மாரியும் செல்வமும் அவர்களுக்கு முன்னே இருந்தனர். மாமனாரும் மருமகனும் அல்லவா அதனால் அவர்கள் முன்னே காத்திருந்தனர். மாரியின் பெண்ணை செல்வம் திருமணம் செய்திருந்தான்.

இவர்கள் கோர்ட் சென்று அமர்ந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் பிரபுவும் சிவாவும் வேறு வந்துவிட்டனர்.   

கார்த்திக் கேசின் முறை வந்த போது…. கார்த்திக் என்னவோ கூலாக தான் அமர்ந்திருந்தான். ஆனால் வீரமணி, பிரபு, சிவா, செல்வம், மாரி என அனைவர் முகத்திலும் பதட்டம்.

கேஸ்ஸின் தீர்ப்பு படிக்கப்பட அதன் சாராம்சம் இதுதான்….. கார்த்திக்கிற்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனையும்….. குவாரியில் கவர்மென்ட்டிற்கு கணக்கு காட்டாமல் எடுத்த கிரானைட்டிற்கு ஒரு மதிப்பு போட்டு…. அதற்கு ரிகவரி ஃபைன் ஆக ஒரு மிகப் பெரிய தொகையை செலுத்த சொல்லியிருந்தனர்….

செலுத்த தவறினால் மேலும் இரண்டு ஆண்டு காலம் தண்டனை நீட்டிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் என்றதுமே கேஸ் நடத்திய வக்கீலின் முகத்தில் அவ்வளவு சந்தோசம்….. ஏன் வீரமணி, செல்வம், மாரி, பிரபு, சிவா என்று அனைவரின் முகத்திலும் ஒளி…….

ஏனென்றால் இரண்டு ஆண்டுகள் என்றால் அப்படியே இரு நபர் ஜாமீன் கொடுத்து ஜெயிலுக்கு போகமால் உடனே வெளியே வந்துவிடலாம்…. பின்பு மேல் கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளலாம்……

ஜெயிலுக்கு போவதை தவிர்த்து விடலாம்……..

ஆனால் கார்த்திக்கின் முடிவு வேறு மாதிரியாக இருந்தது…. அவன் ஜாமீனுக்கு முயற்சிக்கவில்லை….. அப்பீல் போகவும் இல்லை…. இரண்டு வருட தண்டனையை ஏற்று…. ரிகவரி ஃபைன்னையும் செலுத்த முடிவு செய்தான்.

இந்த ஐந்து வருடமாக அவன் சம்பாதித்ததை….. முன்பு கணக்கில் வராமல் மிச்சம் இருந்ததை அத்தனையையும் கணக்கில் வரும் பணமாக செய்திருந்தான்.

ஃபைன் மிகப்பெரிய தொகை…. அதை கட்டினால் மீண்டும் அவன் ஒன்றுமில்லாமல் போய்விடுவான்…. வாழ்க்கையை ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவான்…. ஆனால் தயங்கவேயில்லை….

முடிவெடுத்து விட்டான்…….

தண்டனையை அனுபவிப்பது…… ஃபைனை கட்டுவது……

அவன் முடிவை சொன்னதும் வீரமணி ஒத்துக் கொள்ளவேயில்லை…. “ஜாமீனில் வந்தே ஆக வேண்டும்!”, என்று ஒற்றைக்காலில் நின்றார்.

“முடியவே முடியாது!”, என்று பிடிவாதமாக கார்த்திக்கும் மறுத்துவிட்டான்.

இவர்கள் வழக்காடிக் கொள்வதை பார்த்த செல்வம், சக்தியை போனில் அழைத்து சொல்ல….

வீரமணியை அழைத்தவள், “அப்பா ப்ளீஸ்! வீட்டுக்கு வாங்க! அவரை அவர் போக்குல விடுங்க!”, என்று வற்புறுத்த…. 

ஒன்றும் செய்ய இயலாதவராக வீரமணி வீடு திரும்பினார்.

அங்கேயே கார்த்திக் அரெஸ்ட் செய்யப்பட்டு இம்முறை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டான்.    

அவன் வேன் ஏறும் முன் செல்வத்திடம் சொல்லிவிட்டான்…. “என்னோடது எல்லாத்தையும் யூஸ் பண்ணி ஃபைன் கட்டு….. முடியலைன்னா மட்டும் மேடம் கிட்ட கேளு”, என்று…

பின்பு பிரபுவை பார்த்தவன், “சக்தியை பார்த்துக்கோடா அவ டெலிவரில எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது! நீ இருக்குற தைரியத்துல நான் இந்த டைம்லயும் அவளை விட்டுட்டு போக முடிவெடுத்தேன்!”, என்றான்.

“நான் பார்த்துக்கறேன்! நல்ல படியா குழந்தை பிறக்கும்”, என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்து பிரபு அனுப்பினான்.  

செல்வம் தீர்ப்பில் இருந்தபடி ஃபைன் கட்டி நிமிர்ந்த போது…… கார்த்திக்கிடம் இருந்த எல்லாமும் போயிருந்தது….

ஆனால் அவன் மனதில் ஒரு நிம்மதி, அமைதி குடி புகுந்தது…… பஞ்சு மெத்தையில் வராத உறக்கம் ஜெயிலின் கட்டாந்தரையில் கார்த்திக்கிற்கு வந்தது.

சக்தி நல்லபடியாக ஒரு பெண் மகவை ஈன்றெடுக்க….. அவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“என்ன பெயர் வைப்பது?”, என்ற சக்தியின் கேள்வி செல்வம் மூலமாக அவனை சென்றடைய…. “எங்கம்மாவை கேட்க சொல்லு செல்வம்! அவங்க சந்தோஷப்படுவாங்க!”, என்றான்.

சக்தி அவன் பேச்சை தட்டவில்லை….. வாசுகியிடம் கேட்க…. அவர், “காயத்ரி”, என்ற பெயரை சொல்ல….

“காயத்ரி! காயத்ரி! காயத்ரி!”, என்று முதன் முதலில் குழந்தையின் காதுகளில் அவளின் அண்ணன் தான் சொன்னான்.

அவன் தானே அம்மாவையும் பாப்பாவையும் பார்த்துக் கொள்ளும் பெரிய மனிதன். சக்திக்கு கார்த்திக்கின் ஞாபகங்கள் எப்போதும் இருந்தாலும் அதை யோசிக்க விடாமல்…. ஆதர்ஷும் காயத்ரியும் அவளை ஒரு வழியாக்கினர்.

காயத்ரி அவளின் அம்மாவை விட்டு யாரிடமும் போக மாட்டாள்…. தெய்வானையிடமும் கொஞ்ச நேரம் தான் இருப்பாள்.

தன் இரு மக்களையும் கவனிப்பதில் வருடங்கள் போனதே தெரியவில்லை….. கார்த்திக் இல்லாத குறை தெரியாமல் இருவரும் அவளின் நேரத்தை எடுத்துக் கொள்ள….. அவளும் மக்களின் மழலையில் தொலைந்திருந்தாள். 

அதுமட்டுமல்லாமல் கார்த்திக்கின் ப்ரொடக்ஷன் கம்பனி அதையும் சேர்த்து பார்த்துக் கொண்டாள். அது கார்த்திக்கின் கனவு அதை விட மனமில்லை…. பணத்தை அவள் போட்டு பர்ஸ்ட் காபி அடிப்படையில் படத்தை தயாரித்தாள்.

சக்திக்கு அங்கே வேலையில்லை, பணம் கொடுப்பது மட்டுமே அவளின் வேலை… பாக்கி எல்லாம் டைரக்டரே பார்த்துக் கொள்வார்.

குவாரியை கொடுத்து விட சொல்லியிருந்தான் கார்த்திக்…. அதை கொடுத்த பணமாக பெரும் தொகை கை மாறி அதுவும் ஃபைன் கட்டுவதற்கு தான் போனது….

ஆனால் அது கைமாறியது சக்தியிடம்….. கார்த்திக்கின் முக்கியமான சொத்துக்கள் எல்லாம் தன்னிடம் வருவது போல பார்த்துக் கொண்டாள்.  குவாரியை மாரியும் செல்வமும் பார்த்துக் கொண்டனர்.  

இரண்டு வருடம் ஓடியே விட்டது…..

அடுத்த  வாரம் கார்த்திக்கின் ரிலீஸ்…. இவ்வளவு நாட்களாக தாக்காத கார்த்திக்கின் பிரிவு அன்று  சக்தியை அதிகமாக தாக்கியது… எப்போது வருவான், எப்போது வருவான்… என்று மனது ஓயாமல் நினைக்க…..

சக்தியால் முடியவேயில்லை.

அவனை போயாவது பார்த்துட்டு விட்டு வருவோமா என்று யோசிக்கும் அளவிற்கு வந்துவிட்டாள்.

காயத்ரியை தூங்க வைத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள். 

“அம்மா!”, என்று ஆதர்ஷ் உலுக்கும் வரை சக்தி அதே யோசனையில் இருந்தாள்…

“என்ன  ஆதர்ஷ்?”,

“அப்பா!”, என்று ஆதர்ஷ் ஆரம்பிக்க…..

அவளாக, “அப்பா நெக்ஸ்ட் வீக்  வந்துடுவாங்க!”, என்று சொல்ல ஆரம்பிக்க….

“அம்மா!”, என்று ஆதர்ஷ் இடை புக…..

“ஷ்!”, என்று சைகை காட்டிகொண்டே ஒரு உருவம் சக்தியின் கண்களை பொத்தியது.  கதவிற்கு எதிர்புறம் அமர்ந்திருந்தாள். அதனால் யாரென்று தெரியாவிட்டாலும் உணரக் கூடவா முடியாது… உணர்வதில் தாமதமானாலும்…….. அவளின் கண்களை இப்படி உரிமையோடு பொத்தும் தைரியம் ஒருவனை தவிர யாருக்கு உண்டு….

“கார்த்திக்!”, என்று ஆனந்த அதிர்ச்சியோடு கூவிக் கொண்டே கைகளை விலக்கி திரும்ப…. அங்கு சாட்சாத் கார்த்திக் தான் நின்று கொண்டிருந்தான்.

“கார்த்திக்!”, என்று அவனை ஆவேசமாக அணைத்துக் கொண்டாள்….

“ஹேய்! இரு! இரு! அழுக்கா இருக்கேன்… குளிச்சிட்டு வர்றேன்!”, என்று கார்த்திக் சொன்னதை காதில் வாங்கவேயில்லை…. அவனை விடவும் இல்லை… 

எதிர்பாராமல் வந்து நின்றதால் சக்தி உணர்ச்சிகளின் பிடியில் இருந்தாள்…

அவளை விலக்காமல் தன் மகளை பார்த்தான்…. அவனின் மகள் ஒரு ஆனந்த நித்திரையில் இருந்தாள்.

சக்தியாக விலகும் வரை தன் மகளை கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான்…….

சிறிது நேரம் கழித்து விலகியவள், அவனை பார்க்கவும், அவனின் கவனம் முழுவதும் மகளிடத்தில் இருப்பது புரிய…… முறைக்க முயன்று தோற்றாள்.

“நான் அப்பா வந்ததை தான்மா சொல்ல வந்தேன்!”, என்று ஆதர்ஷ் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க…..

மகளின் அருகில் போன கார்த்திக்கை, பாத்ரூம் நோக்கி திருப்பி விட்டவள், “ஓடு! ஓடு! ஓடு!, சீக்கிரம் குளிச்சிட்டு வா! அப்புறம் தான் தூக்க விடுவேன்…!”, என்றாள் புன்னகையோடு.  

“ஃபைவ் மினிட்ஸ், அப்பா வந்துடுவேன்!”, என்று ஆதர்ஷிடம் சொல்லிக்கொண்டே கார்த்திக்கும் குளிக்க போனான்.

அவன் எப்போது கதவை திறப்பான் என்பது போல அம்மாவும் மகனும் குளியலரைக் கதவை பார்த்து இருந்தனர்.

வெளியே வந்தவன் ஆதர்ஷை நோக்கி கை நீட்ட…. அவன் தாவி ஏறினான் தந்தை மேல்…

“வர்றேன்னு சொல்லவேயில்லை கார்த்திக்! நெக்ஸ்ட் வீக் தானே வர்ற மாதிரி இருந்த…..”, கேட்டுக்கொண்டே அவனை பார்வையில் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அப்படியே அவனின் வசீகரிக்கும் தோற்றத்துடன் இருந்தான். 

“அப்படிதான் சொல்லிட்டு இருந்தாங்க…… நேத்து ஈவினிங் தான் இன்னைக்கு போகலாம்னு சொன்னாங்க…. உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கனும்னு யார்கிட்டயும் சொல்லலை”, என்று சொல்லிக்கொண்டே ஆதர்ஷை இறக்கி விட்டவன்….

காயத்ரியை கையில் தூக்கினான்… தூக்கவும் தூக்கம் தடைபட காயத்ரி சிணுங்க….

“தோள்ல போட்டு தட்டிக் குடு!”, என்று அவசரமாக கார்த்திக்கிற்கு சொல்லிக் கொடுத்தாள் சக்தி…..

அவன் தட்டவும் திரும்ப அவன் மகள் அவனின் தோள் மேலயே உறங்கினாள்.

சக்திக்கு இன்னும் கேட்க நிறைய கேள்விகள் இருக்க…… “ஹால்ல இருந்த உங்கப்பா ஏதோ கேட்டார் சக்தி! நான் பதில் கூட சொல்லலை! இதோ வர்றேன்னு சொல்லிட்டு உங்களை பார்க்க வந்துட்டேன்… அவரை பார்க்கலாம் வா!”, என்று ரூமை விட்டு வெளியேறினான்.

மகளை தோளில் போட்டு அவளை கையால் அணைத்தபடி மாடிப்படி இறங்க… ஆதர்ஷ் அவனின் டீஷர்டின் நுனியை பற்றிக் கொண்டு அவனிடம் கதை பேசிக்கொண்டே இறங்கினான்.

பார்த்த சக்தி கண்கள் பணித்தது….. இருந்த எல்லா டென்ஷனும் சட்டென்று வடிந்துவிட்டது….  இனி எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்பது அவளுக்கு எத்தனை பெரிய ஆசுவாசத்தை கொடுத்தது என்பது அவளுக்கு தான் தெரியும்.

தெய்வானைக்கு அழுகையே வந்துவிட்டது….. ஆதர்ஷ் இத்தனை நாட்கள் பெரிய மனித தோரணையில் சுத்திக் கொண்டிருந்த சிறு குழந்தை… இப்போது தந்தையை பார்த்ததும் குழந்தையாக மாறிவிட்டான்.   

அது இரவு எட்டு மணி….

வீரமணிக்கு உணவருந்தும் நேரம்… இவன் வருவதற்காக காத்திருந்தார்…

அவன் வருவதை பார்த்தும் டைனிங் டேபிள் முன் அமர்ந்துகொண்டு, “வா கார்த்திக், சாப்பிடலாம்!”, என்றார்.

கார்த்திக்கிற்கு பசி இருந்தாலும் மகளை கைகளில் இருந்து இறக்கிவிட யோசிக்க….

“இப்படி கொடு கார்த்திக்!”, என்று வாங்கிய தெய்வானை…. “சக்தி நீ பரிமாறு!”, என்றாள்.

கார்த்திக் அமர்ந்தவன்….. “ஆதர்ஷ், நீயும் உட்கார்!”, என்று சொல்ல……

“அம்மா இன்னும் சாப்பிடலைப்பா! நீங்க தானே சொல்லியிருக்கீங்க….. அம்மா சாப்பிட்ட அப்புறம் தான் நான் சாப்பிடனும்னு”, என்று உண்மையை சொல்ல……

இத்தனை நாட்கள், “நீ சாப்பிடும் போது தான் சாப்பிடுவேன்”, என்ற மகனின் பிடிவாதத்தின் காரணம் புரியாமல் இருந்த சக்தி……  கார்த்திக்கை பார்த்தாள்.

அவன் தன் மகனை பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்…. வாய் வார்த்தையாக சொன்னதை தன் மகன் அப்படியே செயலில் கொண்டு வந்திருப்பதை பார்க்க பெருமையாக இருந்தது…..

அவனை அள்ளி அணைத்துக் கொண்டான்….

வீரமணிக்கே கண்கள் கலங்கிவிடுமோ என்பது போல தோன்றியது…

“இனி நான் பார்த்துக்கறேன், நீ அப்பாவோட சாப்பிடு”, என்று சொல்ல…… அவன் சமர்த்தாக சாப்பிட உட்கார்ந்தான்.

வீரமணிக்கு அவர் கேட்க நினைத்ததெல்லாம் மறந்துவிட்டது…… மௌனமாக மாமனாருடனும் மகனுடனும் உணவருந்தினான் கார்த்திக்.

வெகு நாட்களுக்கு பிறகு ருசியறிந்து உண்ணுகிறான்….    

ஆதர்ஷ் வாயை மூடவேயில்லை……. அவனுக்கு அப்பாவிடம் சொல்ல நிறைய விஷயமிருந்தன….

“ஆதர்ஷ் எல்லாம் ஒரே டைம்ல சொன்னா அப்பா மறந்துடுவாங்க….. டெய்லி கொஞ்சம் கொஞ்சமா சொல்லலாம்…. சாப்பிடு!”, என்று சக்தி சொல்லவும் தான் சாப்பிட ஆரம்பித்தான்.

கார்த்திக் சாப்பிட்டு முடித்து… “ப்ளேட்ல எடுத்துகிட்டு மேல வா!”, என்று சக்தியிடம் சொல்லி மகள் மகனுடன் ரூமிற்கு போய் விட்டான்.  

காயத்ரியை படுக்க வைத்தவன் சாய்ந்து அமர…. ஆதர்ஷ் அவன் மேல் ஏறிப் படுத்தவன் நிமிஷத்தில் உறங்கியும் விட்டான்.

சக்தி கீழேயே சாப்பிட்டு விட்டு தான் வந்தாள்…. அவளுக்கு அன்று சாப்பாடு இறங்கும் போல தோன்றவில்லை… அவன் முன்னால் அரைகுறையாக சாப்பிட்டால் திட்டு விழும்…..

அதனால் சாப்பிட்டேன் என்று பெயர் செய்து விரைந்து மேலே சென்றாள். 

மகளின் மேல் ஒரு கையை வைத்து கொண்டு…. மகனை நெஞ்சின் மீது போட்டுக் கொண்டு பாந்தமாய் கார்த்திக் சக்திக்காக காத்திருந்தான்.