Advertisement

அத்தியாயம் நாற்பது:

வாசுகியை பற்றி கேள்வி பட்டதும் கங்காதரனை ஒதுக்கி….. அடுத்த ஃபிளைட் பற்றி விசாரித்து…. இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் ஒரு பிளைட் பெங்களூர்க்கு இருக்கிறது என்று தெரிந்தவுடன் உடனே தாமதிக்காமல் கிளம்பினாள்.

அங்கே அமைச்சகத்தில் இருந்த உதவியாளரிடம் என்ன ஏதென்று உடனே தனக்கு தகவல் கொடுக்குமாறு பணித்து விட்டு அவள் வெளியே வரவும்….. ஒரு இளைஞன் வேகமாக வரவும்…….. 

மோத போனவர்கள் நிமிட நேரத்தில் சுதாரித்து விலகினார்கள்….

உடனேயே அந்த இளைஞன் மன்னிப்பும் கேட்டான்….. “சாரி மேடம்! டைம்ல ஜாயின் பண்றதுக்காக அவசரமா வந்தேன் கவனிக்கலை”, 

“நீங்க!”, என்றாள் சக்தி………. அவன் தான் என்று தெரியும்….. இருந்தாலும் அவன் தான் கங்காதரனா என்று தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பி….

“ஐ அம் கங்காதரன்”, என்று சொல்லவும்…

“ஐ அம் சக்தி பிரியதர்சினி…. ப்ளீஸ்டு டு மீட் யு….. நீங்க சார்ஜ் எடுத்துக்கங்க… நான் அவசரமா கிளம்ப வேண்டியிருக்கு….. நான் திரும்பி வந்ததும் பேசலாம்”, என்று சொன்னாள்.

“சுயூர் மேடம்!”, என்று அவளுக்கு மரியாதை கொடுத்தவன்…. வாயில் அருகில் இருந்ததால் மரியாதை நிமித்தம் அவன் வாயில் வரை வர…..

அங்கு வரவேற்பில் அவன் குடும்பம் அமர்ந்திருந்தது…..

வேகமாக அறிமுகப்படுத்தினான்….. “என் அம்மா, என் மனைவி, என் பொண்ணு”, என்று…..

அவன் பெண் குழந்தை மிஞ்சி போனால்….. எல் கே ஜி படிக்குமாயிருக்கும்…. தன் தந்தையை பார்த்ததும்…… “அப்பா, தூக்கு!”, என்றபடி அது அவன் காலை பிடிக்க…

முன்வந்து சக்தி தூக்கினாள்…..

அங்கிருந்தவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை….

“பரவாயில்லை மேடம்!”, என்று கங்காதரன் வாங்க போக….

குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்ட சக்தி….. “சாரி”, என்ற ஒற்றை வார்த்தையுடன் அவளை கங்காதரன் கையில் கொடுத்தவள்…. விரைந்து சென்று காரில் ஏறிக்கொண்டாள்.

பக்கத்தில் இருந்த செல்வம் அவனை பார்த்து ஒரு முறை முறைத்தான். கங்காதரன் செல்வத்தின் முறைப்பை கணக்கில் எடுக்கவே இல்லை. சக்தியின் முகமே கண்முன் நின்றது.  

“சாரி”, என்ற வார்த்தையில் அவ்வளவு வருத்தம் இருந்தது, அவளின் கண்களும் கங்காதரனை பார்த்து அந்த வருத்தத்தை பிரதிபலித்தது…… ஏன் எதற்கென்று கங்காதரனுக்கோ, அவன் மனைவி, அம்மாவுக்கோ புரியவில்லை….

அவனின் அம்மா திட்டினார்….. “நீ குழந்தையை தூக்க வேண்டாம்னு அவசரமா வாங்க போனல்ல, கோவிச்சிக்கிட்டாங்க போல”, என்று அவராக ஒரு காரணத்தையும் கண்டுபிடித்தார்.                    

“நான் அப்படி சொல்லலைம்மா”, என்று சொல்லி…… அவனின் அம்மாவிடமும் மனைவியிடமும் திட்டு வாங்கினான் கங்காதரன்.

பின்னர் பணியில் சேர்ந்து அவனுக்கு அவசரத்திற்கு ஒதுக்கப் பட்டிருந்த விருந்தினர் மாளிகைக்கு செல்ல….. அப்போதும் சக்தியின் சாரியும் அவளின் பார்வையுமே கங்காதரன் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.   

நாலும் நாலும் எட்டு என்று மனது கணக்குப் போட விழைந்தது…..

பிளைட் பிடித்து பின்பு பெங்களூரின் அந்த கோடியில் இருந்து இந்த கோடி வரை பயணித்து… பின்பு பெங்களூரை விட்டு வெளியேறி ஹோசூர் வழியாக கிருஷ்ணகிரியை அடைந்த போது…… மணி நான்கு…..

கார்த்திக்கின் அம்மாவிற்கு ஒன்றும் ஆகக் கூடாது என்ற இடைவிடாத பிரார்த்தனை வேறு….

அமைச்சர் ஆன பின் முதன் முதலாக தொகுதிக்கு வருகிறாள்…. வரவேற்ப்பு கட்சியில் தடபுடல் படும் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ரகசியமாக வேறு வருகிறாள்.

அமைச்சரின் சைரன் வைத்த கார் இல்லை ஒன்றுமில்லை…. அவளின் அமைச்சர் அடையாளத்தை மறைத்து ஒரு சாதாரண பிரஜையாக…… கட்சி ஆட்கள் எல்லோரையும் தவிர்த்து யாரும் கண்டுவிடக் கூடாது என்று பயந்து…. நேராக வீட்டிற்கு போகாமல் தெய்வானைக்கு ஆயிரம் சமாதானங்கள் சொல்லி அவளின் ஹாஸ்பிடலுக்கே வந்தாள்.   

வாசுகி ஐ சீ யு வில் இருந்தார்……. எல்லோரும் அங்கே இருந்தார்கள்….  பிரபு, வைஷ்ணவி….. சிவா, சுமித்ரா…… ஏன் பத்ரிநாத் கூட அந்த தள்ளாத வயதில் அங்கே தான் அமர்ந்திருந்தார்.

வாசுகியின் நிலைமை சற்று சீரியசாக இருந்தது…..  “என்ன ஆச்சு”, என்று பொதுவாக சக்தி கேட்க…..

“தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க?”, என்றாள் வெடுக்கென்று வைஷ்ணவி அவளின் இயல்பு குணம் தலை தூக்க…. கார்த்திக்கின் பொருட்டு சக்தி ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சிவாவிடம் சொன்ன எதிரொலி அது.

“வைஷு”, என்று பிரபு அதட்ட……

ஆனால் இந்த முறை சக்தி அமைதியாக இருக்கவில்லை……

“நீ என்ன பண்ற? நின்னு வேடிக்கை தானே பார்க்கிற….”,

“அவங்க எங்கம்மா”,

“நான் உங்கம்மாவை பார்க்க வரலை! கார்த்திக் அம்மாவை பார்க்க வந்தேன்!”,

“பார்த்து என்ன பண்ண போறீங்க?”,

“அதை உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை….. சும்மா எங்கம்மான்னு சொன்னா ஆகாது…… அவங்க கூட இருக்கனும் இந்த சமயத்துல தனியா விடக் கூடாதுன்னு உனக்கு தெரியாது….. இந்த நிலைமைல அவங்களை படுக்க வெச்சிட்டு சும்மா என்கிட்டே சண்டைக்கு வர்ற”, என்றாள்…..

பிரபு எதிலும் தலையிடவில்லை… இது உனக்கு தேவை தான் என்பது போல் வைஷ்ணவியை பார்த்தான்.    

அதன் பிறகு வைஷ்ணவி அமைதியாக…. சக்தி பிரபுவிடம் வாசுகியை பார்க்க வேண்டும் என்று கேட்கவில்லை… அவள் பாட்டிற்கு செல்வத்தை அனுப்பி தலைமை மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தாள்.

ஆங்காங்கே உபகரணங்கள் மாட்டப்பட்டு…… அந்த பெண்மணி படுத்திருந்தார்.

“எப்படி இருக்காங்க டாக்டர்…….”,

“இப்போதைக்கு நிலைமை சீரியஸ் தான். ஆனா முதல்ல இருந்ததுக்கு பரவாயில்லை, இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு…… கண்டிப்பா பிழைச்சிடுவாங்க…….”, என்றார் தலைமை மருத்துவர்.

“எனக்கு பயமா இருக்கு. ஒன்னும் ஆகாதே”,

“ஆகாது மேடம்! நிறைய தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்காங்க…. ஆனா பிரபு இருந்ததனால உடனே பிரஸ்ட் எய்ட் குடுத்து இங்கே கூட்டிட்டு வந்துட்டான்….”,

“எப்போ நடந்தது இது……”,

“நேத்து நைட்……”,

நேற்று இரவு நடந்தது யாரும் அவளிடம் சொல்லவில்லை….. மனதிற்கு ஒரு மாதிரி இருந்தது.

வெளியே வந்தவள் அங்கேயே உட்காராமல் தன்னுடைய ரூம் போய் அமர்ந்து கொண்டாள்.

அவள் வெளியே வந்த போது யாரவது அவளுடன் பேசுவார்களா என்பது போல் பார்க்க…. யாரும் பேசவில்லை……

சக்தியும் அவளாக போய் யாருடனும் பேசவில்லை……..

கார்த்திக் தொலை பேசியில் அழைத்து விட்டால் பரவாயில்லை….. என்பது போல் இருந்தது…… அவனுக்கு தெரியப்படுத்திவிட மனம் நினைத்தது…

ஹாஸ்பிடலிலேயே அமர்ந்திருந்தாள்….. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சென்று வாசுகியை பார்த்து வந்தாள்….. எல்லாம் ஸ்டேபிள் ஆக தான் இருந்தது, ஆனால் அவர் கண் விழிக்கவில்லை.

இரவு எட்டு மணி ஆனதும் தெய்வானையும் வீரமணியும் வந்துவிட்டனர், அவளை வீட்டிற்கு அழைத்துப் போக……….

வாசுகியை மரியாதை நிமித்தம் சென்று பார்த்து வந்தவர்கள்……

ஐ சீ யு வில் இருந்து வெளியே வந்தவுடனே, “கிளம்பு சக்தி வீட்டுக்கு போகலாம். நாளைக்கு வேணா வருவியாம்”, என்றார் தெய்வானை.

அங்கே தான் பிரபு, வைஷ்ணவி, சுமித்ரா, சிவா எல்லோரும் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் தான் பேசினார். 

“இல்லைம்மா, அவங்க கண் முழிக்காம நான் வரமாட்டேன்”, என்றாள்.

“பிடிவாதம் பிடிக்காத சக்தி…… வாசுகியோட பொண்ணு மாப்பிள்ளை எல்லோரும் இங்க தானே இருக்காங்க…. நீ வா!”, என்றார்.

“ம்கூம்!  நான் வரமாட்டேன்! கார்த்திக் என்னை தான் கேட்பான்!”, என்றாள் குரலில் வரமாட்டேன் என்ற உறுதியோடு…..

தெய்வானைக்கு ஏனோ கண்மண் தெரியாத கோபம் வந்தது……. “சும்மா எப்போ பார்த்தாலும் கார்த்திக், கார்த்திக்….. இதை விட்டா உனக்கு ஒன்னுமே கிடையாதா… அப்போ நான் யாரு உனக்கு…… அந்தம்மா பக்கத்துல எனக்கும் ஒரு பெட் போட்டு படுக்க வைக்கப் போற நீ”, என்று கத்தியவர்…… வேகமாக கிளம்பினர்.

அவர் முன் வேகமாக போய் நின்றவள், “அம்மா! ப்ளீஸ்!”, என்றாள் கெஞ்சுதலாக கண்களில் நீரோடு…..

அவள் நின்றவிதத்தில் தெய்வானைக்கு மனம் உருகி தான் போயிற்று….. ஒன்று செய்ய முடியாதவராக, “இரு”, என்று சொல்லி சென்றார். வீரமணி இதில் வெறும் பார்வையாளர் மட்டுமே…..

செல்வமும் நடப்பவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

பின்பு சுமித்ராவும் சிவாவும் பத்ரிநாத்தை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினர்… சுமித்ரா தான் வந்து, “நாங்க கிளம்பறோம்கா….. பிரபு அண்ணாவும் வைஷ்ணவியும் இருக்காங்க”, என்றாள்….

“உனக்கு என்கிட்டே பேச இப்போ தான் மனசு வந்ததா”, என்று சக்திக்கு கேட்க வேண்டும் போல் தோன்றியது இருந்தாலும் எதுவும் பேசாமல்…. சரியென்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொண்டாள்.

செல்வத்தையும் சக்தி அனுப்பிவிட்டாள்.

இன்றாவது கார்த்திக் அழைப்பானா என்ற எதிர்பார்ப்போடு…. சக்தி தூங்காமல் நிமிஷத்திற்கு ஒரு முறை போனை எடுத்து பார்த்தாள்….. டவர் சரியாக இருக்கிறதா சார்ஜ் இருக்கிறதா என்பது போல் அடிக்கடி பார்த்து உறுதி வேறு படுத்திக் கொண்டாள்.

இரவு இரண்டு மணிக்கு அவளுடைய காத்திருப்பு வீண் போகாமல் தொலை பேசி அழைத்தது.

அவ்வளவு நேரமாக அவனுடைய அழைப்பிற்கு எதிர்பார்த்து இருந்தவள்…. இப்போது எடுக்க பயமாக இருந்தது…..

எடுத்தவுடன், “கார்த்திக்”, என்றாள்……

கார்த்திக் எதிர்புறம் அமைதியாக இருந்தான்.

“கார்த்திக், வாசுகி அம்மாக்கு உடம்பு சரியில்லை….. ஹாஸ்பிடல்ல இருக்காங்க”, என்றாள்.

கார்த்திக் அப்போதும் அமைதியாக இருக்கவும்…..

அவன் அமைதியே அவனுக்கு தெரியும் என்று சக்திக்கு எடுத்து சொல்ல “உனக்கு தெரியுமா கார்த்திக்…….”, என்றாள்.

“நைட் தான் தெரியும்”, என்றான் கார்த்திக்…

“நான் கலெக்டர் விஷயத்தை பார்த்துகிட்டே இருந்தனா….. உடனே பேசாம தள்ளி போட்டுட்டேன்…. கார்த்திக் இப்படியாகிடுச்சு”, என்றாள் சிறு விசும்பலோடு……

“நான் உன்கிட்ட சொன்னேன் தானே, அவங்க கிட்ட பேசுன்னு…”, என்றான்…. சொல்லும் போதே குரல் கமறியது…

“சாரி கார்த்திக்! நான் இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கலை..”,

“தப்பு என்னோடது தான் சக்தி! நான் உன்கிட்ட பேசினப்ப அம்மா கிட்டயும் பேசியிருக்கனும் கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன்………. ஒரு மணிக்கு போன் அடிச்சு திடுக்குனு எழுந்தா பயந்துக்குவாங்கன்னு நினைச்சு கூப்பிடாம விட்டுடேன்… நான் இந்த மாதிரி பண்ணிக்குவாங்கன்னு கொஞ்சமும் எப்பவும் நினைச்சது இல்லை”, என்றான்…. சொல்லும் அவனின் குரலில் கலங்கியது…..

“அதான் உன்கிட்ட பேசு சக்தின்னு சொன்னேன்…”, 

“அழறியா கார்த்திக்”, என்றாள் அவனின் குரலை வைத்தே….   

“உனக்கு தெரியாது சக்தி, எங்கப்பாவோட உயிர் போனதுக்கும் நான் தான் காரணம்…… இப்போ எங்கம்மாக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா என்னால என்னை என்னைக்கும் மன்னிக்கவே முடியாது”, என்றான் மித மிஞ்சிய வருத்தத்தோடு.  

“ஒன்னும் ஆகாது கார்த்திக் அவங்களுக்கு……. நான் பார்த்துக்குவேன் அவங்களை”, என்றாள்.

“அப்படி தான் நம்பினேன்! இப்போ என்ன ஆச்சு?….”,

“என்னை நம்பலையா கார்த்திக் நீ”,

“நம்பறதும் நம்பாததும் வேற விஷயம் சக்தி…… உன்னை நம்பலைன்னா என்னையே நான் நம்பலைன்னு அர்த்தம்…….. ஆனா அசம்பாவிதமா ஏதாவது நடந்துடுச்சின்னா? என்னால அதுல இருந்து எப்பவுமே வெளில வரமுடியாது….”,

“தானா உடம்பு சரியில்லைன்னா அது வேற! ஆனா இப்படி ஏன் செய்யனும் எங்கம்மா? ஏன் இப்படி செஞ்சாங்க? நான் என்ன செத்தா போயிட்டேன்…….”, என்றான் ஆவேசமாக.

“கார்த்திக்! இப்படி எல்லாம் பேசாத கார்த்திக்”, என்றாள் அழுகையோடே…….

“நான் எதைன்னு பார்ப்பேன்….. விடு! உன்னையும் சேர்த்து அப்செட் பண்ணிட்டு இருக்கேன்….. இனி என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்… எப்படி இருக்காங்க இப்போ”,

“எல்லா உறுப்புகளும் நல்லா தான் இருக்கு…. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை… கண்முழிக்கறதுக்காக பார்த்துட்டு இருக்கோம்….. அவங்க கண்முழிச்சா உன்னை எப்படியும் தேடுவாங்க கார்த்திக்…..”,

அமைதியான கார்த்திக் சற்று யோசித்தவன்……. “சக்தி முடியுமான்னு தெரியலை? எதுக்கும் ஒரு ட்ரை குடுத்து பாரு…… நம்ம லாயர் பார்த்து  பரோல்ல என்னை  எடுக்க முடியுமான்னு கேளு…….”,

“அம்மாக்கு உடம்பு சரியில்லை……. சீரியஸ்ன்னு சொல்லி ஜெயிலர் கிட்ட பெட்டிஷன் குடுத்து கேட்டு பார்க்க சொல்லு…..”,

“விடுவாங்களா”,

“தெரியலை சக்தி! ஒரு முயற்சி பண்ண சொல்லு!”, என்றான்….       

சொன்னவன், “நிறைய நேரம் பேச முடியாது சக்தி….”, என்று போனை வைக்க போக..

“கார்த்திக்! அந்த கலெக்டர அங்க டெல்லிக்கு எனக்கு கீழ மாத்திகிட்டேன்…”,  

“ம்”, என்றான் சுரத்தே இல்லாமல்….

“உனக்கு தெரியுமா….?”,

“ட்ரான்ஸ்பர்ன்ற மாதிரி தெரியும்……. ஆனா எங்க ஏதுன்னு தெரியாது”, என்றவன், “சரி வெச்சிடறேன்”, என்று வைத்து விட்டான்.

இப்போது அவன் மனதில், மூளையில் எல்லா இடத்திலும் அவனின் அம்மா பற்றிய சிந்தனையே……

கலெக்டரின் நினைவுகள் மற்ற பிரச்சனைகள் பின்னுக்கு சென்று விட்டன.

அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று அவனும் இடைவிடாது பிரார்த்திக்க ஆரம்பித்தான்.

கார்த்திக் கூட சக்தியிடம் பேசிய பிறகு மனதை திடப்படுத்திக் கொண்டான்…. ஆனால் சக்தியினால் முடியவேயில்லை என்னவோ அவளே தவறு செய்துவிட்டது போல மிகவும்  வருந்தியவள் அழுகையிலேயே கரைந்தாள்……

இரவு முழுவதும் உறக்கமும் இல்லை…. காலையில் சக்தியே வேறு மாதிரி தெரிந்தாள், முகமெல்லாம் அழுது வீங்கி….. பார்க்கவே ஏதோ பத்து நாட்கள் படுக்கையில் இருந்து எழுந்தவள் போல……

காலை ஏழு மணிக்கெல்லாம் செல்வம் வந்தவன்….. சக்தியை பார்த்தும் அதிர்ந்து விட்டான்.

“என்ன மேடம்? என்ன ஆச்சு……?”, என்று பதறினான்.

“ஒன்றுமில்லை”, என்று அவளால் சொல்ல கூட முடியவில்லை……

அதற்குள் ஐ சீ யு விற்கு ஓடினான்……. வாசுகிக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று.

அங்கே பிரபுவை பார்த்ததும், “எப்படி இருக்காங்க”, என்றான்.

“நல்லா இருக்காங்க”, என்று பிரபு சொல்லவும் தான் நிம்மதியானவன்…… “அப்புறம் ஏன் மேடம் அப்படி இருக்காங்க”, என்று பிரபுவை பார்த்து கேட்டான்……

“எப்படி இருக்காங்க”, என்று பிரபு பதிலுக்கு கேட்க…….

“உங்ககிட்ட சொல்லி என்ன பண்ண போறேன் டாக்டர்… நேத்திருந்து நீங்க யாரும் மேடம் கிட்ட சரியாவே பேசலை…. இல்ல தெரியாம தான் கேட்கறேன்? என் மேடம் விடவா உங்களுக்கெல்லாம் பாஸ் மேல அக்கறை”, என்று சண்டைக்கு போக……

பிரபுவிற்கு அந்த கேள்வியில் இருந்த நியாயம் சுள்ளென்று உரைத்தது.

செல்வத்தின் பின்னே வந்த சக்தி…..

“வா செல்வம் போகலாம்”, என்றாள்…… அவளுக்கு குரல் கூட சரியாக வரவில்லை.

பிரபு கூட சக்தியை பார்த்து அதிர்ந்து விட்டான்….. “என்ன மேடம்? என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?”, என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை”, என்பது போல் தலையசைத்தவள்……. உள்ளே போய் வாசுகியை பார்த்தாள். அங்கிருந்த சிஸ்டரிடம் விசாரிக்க….. “ஒரு தடவை கண்முழிச்சாங்க மேடம்… தண்ணி கூட கேட்டாங்க…. அப்புறம் திரும்பவும் மயக்கத்துக்கு போயிட்டாங்க……..”,

“பிரபு சர் பார்த்தாங்க….. இனி பயமில்லைன்ற மாதிரி தான் சொன்னாங்க”

அதற்குள் பிரபுவும் வந்து, “அத்தை நல்லா இருக்காங்க மேடம், ஷி இஸ் சேஃப்”, என்றான்.

தலையை மட்டும் அசைத்தாள் பேசவில்லை.     

வெளியே வந்தவள், “வக்கீல் பாக்க போகனும் அப்பாவை வர சொல்லு… என் போன் பார்த்து அம்மா எடுத்துட்டாங்கன்னா என்குரலை கேட்டே என்னை எங்கயும் அனுப்ப மாட்டங்க செல்வம்….”, என்றாள்.

பிரபுவும் அருகில் தான் இருந்தான்.

“எதுக்கு”, என்றான் செல்வம்.

“கார்த்திக் பரோல் அப்ளை பண்ண சொன்னான், அவனுக்கு அம்மாவை பார்க்கனுமாம்..”,

“பாஸ்க்கு அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு எப்படி தெரியும்…. அவர் பரோல்ல எடுக்க உங்க கிட்ட எப்ப சொன்னார்….”,

எதற்கும் சக்தி பதில் சொல்லவில்லை….

பிரபுவும் எப்படி என்பது போல சக்தியையே பார்த்து நின்றான்.

திரும்ப திரும்ப செல்வம் கேட்டும் பதில் இல்லாமல் போக…..

“வக்கீல் தானே நான் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன், நீங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க”,

“இல்லை, வேண்டாம்”,

“சொன்னா கேட்கனும்……   உங்களுக்கு சின்னதா பிரச்சனைன்னா கூட பாஸ் என்னை கொன்னே போட்டுருவார்…. என்ன செய்யனும்னு சொல்லுங்க, நான் செய்யறேன்….. முதல்ல இந்த காய்ச்சல் மாத்திரையை சாப்பிடுங்க”, என்று கட்டாயப்படுத்தி ஒரு மாத்திரையை கொடுத்தான்.

சக்திக்கும் காய்ச்சல் வருவது போல் இருக்க… அதை உட்கொண்டாள்…… அது கொஞ்சம் பவர்புல்லான தூக்க மாத்திரை…

அவள் காரில் போகும்போதே தூக்கம் ஆட்கொள்ள…… அவளை வீட்டில் பத்திரமாக விட்ட செல்வம்……. சக்தி சொன்னதை செயல் படுத்த சென்றான்.  

 

Advertisement