Advertisement

அத்தியாயம் முப்பத்தி எட்டு :

 

பதவி ஏற்று அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த போதே சக்தியின் காதுகளுக்கு விஷயம் வீரமணி மூலமாக கசிந்தது.

அப்படியே அமர்ந்துவிட்டாள்…….. அதன் பிறகு எதுவுமே அவளின் பார்வையிலோ மூளையிலோ ஏறவில்லை. முயன்று மனதை சிறிது நேரத்தில் சமன்படுத்தியவள்……

“நீங்க கிளம்பிடுங்க”, என்றாள் தந்தையை பார்த்து…..

“என்னம்மா சொல்ற?”, என்றார் அவர் அதிர்ச்சியாக….

“ஆமாம்பா நீங்க கூட இருந்தா கேள்விகள் அதிகமா வர வாய்ப்பிருக்க…. ஏன்னா முதல்ல வாசுகி கிரானைட்ஸ் உங்ககிட்ட இருந்தது… இப்போ கார்த்திக் அரஸ்ட் ஆகியிருக்கிறது வாசுகி கிரானைட்ஸ் உரிமையாளரா தான்”,

“நீ தனியா சமாளிப்பியாம்மா”,

“முடியாம என்னப்பா…… நீங்க கிளம்பிடுங்க….”,

“எங்கேம்மா?”,

“கிருஷ்ணகிரியே போயிடுங்கப்பா…… அங்க அம்மா மட்டும் தனியா இருக்காங்க, யாரவது விசாரணைன்னு வந்தா அம்மாக்கு கஷ்டம், கிளம்பிடுங்க……”,

“அம்மா உன்னை தனியா விட்டா திட்டுவாளேம்மா……”,

“நான் என்ன சின்ன பொண்ணா போங்க…… என்னை கேட்காம ஒரு வார்த்தை கூட யார்கிட்டயும் எதையும் பேசக் கூடாது…… முக்கியம்மா கார்த்திக் உங்க கூட இருந்திருக்கான்… எதுவுமே எனக்கு தெரியாதுன்னு சொல்லுங்க……. ரொம்ப வருஷம் முன்னாடியே க்ரானைட்ஸ் கைவிட்டு போயிடுச்சுன்னு சொல்லுங்க…… எதுவா இருந்தாலும் அப்புறம் பார்க்கலாம்…..”,

“கார்த்திக்கு சாதகமாவும் பேசாதீங்க, பாதகமாவும் பேசாதீங்க…. உணர்ச்சிவசப்பட்டு அவனை பார்க்க போறேன்னு கிளம்பி போயிடாதீங்க……”,

“எப்படிம்மா அவனை போய் பார்க்காம இருக்க முடியும்….. அவனும் நம்ம பையன் தானேம்மா”,

“போய் பார்த்து தான் கார்த்திக் நம்ம பையன்னு காட்ட வேண்டிய அவசியமில்லைபா.. எப்படியிருந்தாலும் அவன் நம்ம ஆளுதான்…. இப்போதைக்கு பார்க்க போகாதீங்க….. நாளைக்கு வேற ஏதாவது உங்களை சுத்தி கேள்விகள் வந்தா அவன் தான்பா என்னை விட டென்ஷன் ஆவான்”,   

“சக்தி நீ தனியா சமாளிப்பியா……”,

“செல்வம் இருக்கான்பா…. அவன் போதும் நான் பார்த்துக்குவேன்….. நான் இங்க ஆபிஸ் போய் சார்ஜ் எடுக்கனும், நகர முடியாது…..”, என்றாள்….

பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது… ஆங்காங்கே பேட்டிகள்…. பத்திரிக்கையாளர்களின் கேள்விகள்…..

“முதல் முறையா எலெக்ஷன்ல நின்னுருக்கீங்க…….. ஜெயிச்ச உடனே உங்களுக்கு மந்திரி பதவி…… இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க……..”,

“நான் நினைக்கிறது முக்கியமில்லீங்க மக்கள் நினைக்கறது தான் முக்கியம்…….  கட்சி நினைக்கறது தான் முக்கியம்….. என்னை நம்பி மக்கள் ஒட்டு போட்டு இருக்காங்க…… கட்சி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கு……..”,

“ரெண்டையும் நான் செம்மையா செய்வேன்ற நம்பிக்கை இருக்கு…… கட்சியை மீறி என்னோட எந்த செயல்பாடும் இருக்காது….தலைமை என்ன சொல்லுதோ அதை செய்வேன்….. அதே சமயம் அதெல்லாம் மக்களை சார்ந்த பணிகளே…. அவர்களுக்காகவே இந்த பதவி எல்லாமே…..”,   

“இப்போ இந்தியாவையே திடுக்கிட வைத்திருக்குற கிரானைட்ஸ் ஊழல்…… வாசுகி கிரானைட்ஸ்…… உங்க கம்பனியாமே…..”,

“ஒரு சின்ன திருத்தம், ஒரு பீரியட்ல எங்க அப்பாவோட கம்பனியா இருந்தது, அவ்வளவவே…… அது கூட எங்கப்பாவோட கம்பனி தான் என்னோடது இல்லை…. அதுக்கு முன்னாடி அது வேற ஒருத்தரோடது…… இப்போவும் அது அவங்களோடது தான்…”,      

“நம்ம சட்டம் நியாயமானது….. அப்படி எதாவது எங்கப்பா மேல தவறு இருந்தா கண்டிப்பா அவரை நோக்கியும் பாயும்….. என்னோட தலையீடு இதுல எதுலயும் இருக்காது”,

“இந்த வெற்றி சக்தின்ற தனி மனுஷியோடது…. நீங்க அவளோட செயல்பாடுகள் பற்றி எந்த கேள்வி வேனும்னாலும் கேட்கலாம், நான் சொல்ல கடமை பட்டிருக்கேன்…”,

“வேற எதை பத்தின கருத்தும் என்னால சொல்ல முடியாது…. சொல்லவும் கூடாது… ஏன்னா பிரச்சனையை ஓடிட்டு இருக்கும் போது அதை பத்தி நான் கருத்து சொன்னா.. மக்கள் அதனால கொண்டு போக படுவாங்க….. அதை நான் விரும்பலை……. எது உண்மையோ கூடிய விரைவில் அது வெளியே வரும்”,

“என் கடன் பணி செய்வதே”, என்று பேச்சை முடித்து கொண்டாள்.

சக்தி முழுமையாக அரசியல்வாதியாக மாறியிருந்தாள்.     

“கார்த்திகேயன்……”, என்று ஒருவர் ஆரம்பிக்கும் போதே….

“என்னை பத்தி கேளுங்க சொல்றேன்……. வேற யாரை பத்தியும் பேச எனக்கு விருப்பமில்லை…..”, என்று சொல்லி சென்று காரில் ஏறிக் கொண்டாள்.             

அவள் பின்னே போய் செல்வம் ஏறினான்…..

சக்தியின் பதில்கள் அவனுக்குள் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தன. அதன் தாக்கத்தினால், “அப்போ எங்க பாஸை நீங்க விட்டுடுவீங்களா”, என்றான்.

சக்திக்கு முதலில் அவன் கேட்டதே புரியவில்லை……  புரிந்த போது கண்மண் தெரியாத  கோபம்…..

“டிரைவர், ஸ்டாப் தி கார்”, என்றவள்…. “இறங்கு நீ”, என்றாள் செல்வத்தை பார்த்து….. அவள் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரமும்….. அடிபட்ட வலியும் நன்கு தெரிந்தது….

சக்தியை காயப்படுத்தி விட்டோம் என்று செல்வத்திற்கு புரிந்தது.

அதற்குள் காரும் நின்றிருந்தது. “இறங்கு நீ”, என்றாள்……

“சாரி மேடம்”, என்று செல்வம் கேட்க……

“நீ இறங்குறியா…. இல்லை நான் இறங்கட்டுமா”, என்று சொல்லி சக்தி கதவை திறக்கப் போக……

இறங்கிகொண்டான் செல்வம்…….

ஆனால் அவள் தங்க சென்ற இடத்திற்கு, அவளுக்கு முன்னே இருந்தான்….. “சாரி”, என்று சொல்லிக்கொண்டு.

“என்கூட கிட்டத்தட்ட இப்போ ஒரு வருஷத்துக்கும் மேல இருக்க….. நீயே என்னை பத்தி புரிஞ்சிக்காம பேசினா எப்படி……..”,

“அரசியல்லாம் ஒரு புதை குழி….. மீள்றது ரொம்ப கஷ்டம்….. நம்ம இஷ்டத்துக்கு எதுவும் பண்ண முடியாது…… நாலு விஷயத்தை யோசிச்சு தான் பண்ணனும்…….   எத்தனை தடவை கார்த்திக் கிட்ட சொல்லியிருப்பேன்…… இது எனக்கு வேண்டாம்னு….. கேட்டானா….. நான் கூட இருப்பேன், இருப்பேன்னு சொல்லியே என்னை ஏமாத்திட்டான்”,

“சரி அதை தான் கேட்கலை….. என்னை கல்யாணமாவது பண்ணிகிட்டானா, அதுவும் இல்லை…. இப்போ என்னன்னு சொல்லி அவன் கூட என்னால நிக்க முடியும்…. அவனோட காதலின்னா…. கேட்கவே அசிங்கமா இல்லை…….”,

“முதல்ல அவன் செஞ்சது தப்பு…. மனைவின்னு கூட நின்னா அது வேற…… இப்போ… இப்போ என்ன செய்ய முடியும்……..”,

“கண்டிப்பா என்னால அவன் கூட நிக்க முடியாது….. நிக்கவும் மாட்டேன்…. அவன் பிரச்சனை அவன் பார்த்துக்குவான்…….”,

“என்னால நியாயத்தை மீற முடியாது…… நான் ஹெல்ப் பண்ணலைன்னா என்ன? அவன் வெளில வரமாட்டானா? இவ்வளவு செஞ்சவனுக்கு வெளில வர மட்டும் தெரியாதா என்ன……  கண்டிப்பா வருவான்….. என்ன கொஞ்சம் நாள் ஆகும்….”,

“சின்னதா ஏதாவது நான் மூவ் பண்ணி, அது வெளில தெரிஞ்சா கூட கிரானைட் அதிபரின் அமைச்சர் காதலின்னு எழுதுவாங்க பத்திரிக்கைல…. அதையெல்லாம் என்னால டாலரேட் பண்ண முடியாது….”,  

“இப்போவே என்ன வரப் போகுதோன்னு நான் பயந்துகிட்டே இருக்கேன்…. கார்த்திக் எங்ககூட தான் இருந்தான்றது ஊரரிஞ்ச ரகசியம்…”,

“என்னால இப்போதைக்கு செய்ய முடிஞ்சது ஒன்னே ஒன்னு தான்…… எவ்வளவு நாள் ஆனாலும் அவனுக்காக வெயிட் பண்ணுவேன் அவ்வளவு தான்…. கார்த்திக் கூட நீ போகறதுனா போ…… எனக்கு ஆட்சேபனையில்லை……”,

“இல்லை! நான் உங்க கூட இருக்கேன்……..”,

“என்ன உன் பாஸ் சொல்லியிருக்கானா……. எனக்கு என்ன ஆனாலும் நீ சக்தி கூட தான் இருக்கனும்னு…..”, என்று கேட்டாள்.

செல்வம் அமைதியாக நிற்க…… அவனின் அமைதியே கார்த்திக் தான் அதை சொல்லியிருக்கிறான் என்று புரிந்தது.

“ஸோ! நீ உன் பாஸ்க்காக தான் என்கூட இருக்க….. எனக்காக இல்லை…..”,

“இல்லை! அது அப்படி இல்லை”, என்று செல்வம் அவசரமாக மறுக்க……

“பின்ன என் பாஸை விட்டுடுவீங்களான்னு கேட்ட…… உன் பாஸ்கிட்ட எப்பயாவது என் மேடமை ஏன் இப்படி கஷ்டப்படுத்தறீங்கன்னு கேட்டிருக்கியா….”,

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் செல்வம் நிற்க…..

“போடா! போடா!”, என்றவள் அவளின் ரூமிற்குள் போய் கதவை அறைந்து சாத்தினாள்…. சாப்பிடவில்லை….. போனை எடுத்து போகவில்லை…… அழைத்தவர்களுக்கு எல்லாம் செல்வம் தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

பிரபு அழைத்திருந்தான்….. சுமித்ரா அழைத்திருந்தாள்…….

எல்லோரையும் சமாளித்தவனால் தெய்வானையை சமாளிக்க முடியவில்லை….. அவரிடம் பல திட்டுக்கள் வாங்கி போனை வைத்தான். அதன் பிறகு அடுத்த நாள் காலை வரை சக்தி வெளியே வரவும் இல்லை. 

வந்தவுடனே தெய்வானையிடம் பேச சொன்னான்.

பிறகு கட்சி ஆபிஸ் சென்றார்கள்…..  

காலை கட்சியின் தலைமையை சந்தித்து…. அவளாகவே விஷயத்தை பகிர்ந்து கொண்டவள்…. கார்த்திக்கை திருமணம் செய்ய உத்தேசித்திருப்பதை மறைக்காமல் சொன்னாள். “என்னுடைய அப்பாவின் பெயரும் அடிபட நிறைய வாய்பிருக்கிறது…. நான் ராஜினாமா செய்துவிடவா”, என்று கேட்டாள்.

“இப்போதா திருமணம்”, என்றார் தலைமை.

“இல்லை”, என்றாள்.

“அப்போது அதை பற்றி பேச வேண்டாம்”, என்றவர்…… “நிறைய பேர் பல ஆண்டுகளாக கட்சிக்கு உண்மையாக உழைத்திருக்கிறார்கள்…. அவர்களையெல்லாம் விட்டு  இளைஞர்களுக்கு பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தான் உனக்கு கொடுத்தேன்….. இப்போதே எதுவும் செய்ய முடியாது…….”,

“அது வேடிக்கையாகி நாமாகவே ஏன் எதற்கு என்பது போல் விமர்சனத்திற்கு ஆளாகிவிடுவோம்… அடுத்தவர்களின் கவனத்திற்கு வராத விஷயத்தை நாமாக பரப்பிவிடுவோம்”,   

“நேற்று தான் மந்திரி சபை அமைத்தேன்…. இன்று ராஜினாமாவா? வேண்டாம்….. பிரச்சனை வந்தால் சமாளித்துக் கொள்வேன் என்ற தைரியதுடன் இரு….”,

“எனக்கு உன்னுடைய செயல் பாடுகள் உண்மையாக நேர்மையாக இருக்க வேண்டும் அவ்வளவே…. இன்னும் இதை விட பெரிய பிரச்சனைகளை கொண்டு கூட ஆட்கள் மந்திரிசபையில் இருகிறார்கள்”,   

“வேறு ஏதாவது சலசலப்பு வந்தால் பிறகு யோசித்துக் கொள்ளலாம்”, என்று விட்டார்.  

சக்திக்கு அப்போதும் மனதில்லை…… எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு கார்த்திக்கிடம் ஓடிவிடலாமா என்று மனது போராட ஆரம்பித்தது.

ஆனால் அவளை அதிகம் யோசிக்க விடாமல்….. கட்சியே நல்ல நேரம் பார்த்து சொல்ல…. அமைச்சகத்தில் போய் பொறுப்பெடுத்துக்கொண்டாள்.   

அங்கே யார் வந்து அவளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்…. யார் அங்கே எந்த பொறுப்பில் இருக்கிறார் ஒன்றும் மனதில் பதியவில்லை…… முகம் புன்சிரிப்பை கொண்டிருந்தாலும் அதில் ஒரு இயந்திரத்தனம் இருந்தது. 

அப்போது பிரபு அழைத்தான்…….

“சொல்லுங்க பிரபு”, என்றவளிடம்…..

“நீங்களே கூப்பிடுவீங்கன்னு நினைச்சேன்”, என்றான் பிரபு….. 

“கொஞ்சம் பிஸி பிரபு…. இனிமே தான் கூப்பிடலாம்னு இருந்தேன்”, என்றாள் சமாதானமாக……. “என்ன நடக்குது பிரபு….. கார்த்திக்க எங்க வெச்சிருக்காங்க….”,

“ஒன்னும் தெரியலைங்க மேடம்”, என்றான் பிரபு.

“ஏன்?”, என்ற சக்தியின் கேள்விக்கு…..

“நாங்க யாரும் இதுல பிக்ச்சர்லயே வரக்கூடாதுன்னு சொல்லிட்டான்…….. அதுவுமில்லாம எனக்கும் என்ன பண்றதுன்னு ஒன்னும் தெரியலை…..”,

“சிவா இல்லையா……”,

“கூட தான் இருக்கார்……”,

“குடுங்க”, என்றாள்.

“என்ன சிவா, என்ன நடக்குது….”,

“சரியா தெரியலை சக்தி…..”,

“லாயர் வெச்சு மூவ் பண்ண வேண்டியது தானே……  யார் லாயர்….. யாரவது பெரிய ஆளா பார்க்கனும்… யாரையாவது அப்ரோச் பண்ணிடாதீங்க…”,

“அவன் எப்பவும் டீல் பண்ற லாயர் இருக்கார்…. ஆனா அவரை எந்த மூவ்வும் பண்ண வேண்டாம்னு கார்த்திக் சொல்லிட்டான் போல…..”,

“ஏன்?”, என்றாள் சக்தி……..

“தெரியலை…. கார்த்திக்கிட்ட யார் பேச முடியும்……. சும்மாவே யாராலையும் பேச முடியாது….இந்த சிச்சுவேஷன்ல யார் பேச முடியும்… அவனோட கோ-ஆப்ரேஷன் இல்லாம நாங்க என்ன பண்ண முடியும்….”, என்றான் சலிப்பாக…. 

பிறகு, “நீங்க ஏதாவது பண்ண முடியுமா சக்தி”, என்றான் சிவா நேரடியாக….

“சாரி சிவா! என்னால இந்த விஷயத்துல ஒன்னுமே பண்ண முடியாது”, என்றுவிட்டாள் சக்தி….

இதை சக்தியிடமிருந்து சிவா எதிர்பார்க்கவில்லை……

“என்ன சக்தி? இப்படி சொல்றீங்க!”, என்றான்.

சக்தி பதிலே சொல்லவில்லை……

“நான் நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கலை… நீங்க மட்டுமே கார்த்திக்கை அப்ரோச் பண்ணக்கூடியவங்க…… நீங்களே இப்படி சொன்னா எப்படி….”, என்றான் சிவா….       

“அவன் மேல தப்பில்லாம இருந்து அவன் மாட்டியிருந்தா என்னன்னு பார்க்கலாம், ஆனா அவன் செஞ்சதுக்கு தானே மாட்டியிருக்கான்……. இதுல நான் என்ன பண்ண முடியும்….. இப்போதைக்கு என்னால ஒன்னும் பண்ண முடியாது…..”,

“நேரடியா பண்ணலைன்னா போகுது… மறைமுகமா எதாவது பண்ணலாம் தானே”,

“சாரி சிவா, இப்போதைக்கு என்னால எதுவும் பண்ண முடியாது”, என்றுவிட்டாள் முடிவாக……..

சிவா கோபத்தில் டக்கென்று போனை வைத்து விட்டான்.

என்னவென்று கேட்ட பிரபுவிடம்…… “சக்தி, இதுல ஒன்னும் பண்ண மாட்டாங்களாம்”, என்றான் ஆதங்கத்தோடு….    

சிவா போனை வைத்த விதம் சக்திக்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது. “என்ன நட்பு இவன்”, என்ற கோபம் தான் பெருகியது. முன்பொருமுறை இப்படிதான் சுமித்ரா அவனுக்கு இல்லையென்றான போது பல மாதங்கள் சிவா சக்தியை தொடர்பு கொள்ளவேயில்லை…

அவனுக்கு சுமித்ராவுடன் திருமணம் நிச்சயமான பிறகு பத்திரிகை கொடுக்க தான் வந்தான்.

சக்தி அதிகம் அதை மனதில் வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் இப்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது…. முன்பு நடந்தவற்றை அசை போட விழைந்தது.

இனி எத்தனை பேரிடம் இப்படி பேச்சுக்கள் கேட்க வேண்டி வருமோ என்று பயமாக இருந்தது…

கார்த்திக் இல்லாத தனிமையை அவள் தான் அதிகமாக உணர்ந்தாள். கண்கள் கரித்தது.

செல்வம் வந்தவன்…… அவளை பார்த்து ஏதோ சொல்ல விழைந்து சொல்ல முடியாமல் நின்றான்……

“என்ன செல்வம்?”, என்று சக்தி வற்புறுத்தவும்……

“அந்த கலக்டர்….. இந்த கிரானைட் ஸ்காம் பத்தி எல்லாம் கண்டுபிடிச்சிவன்…..”, என்று நிறுத்தினான்.

“அவனுக்கு என்ன……?”,

“அவனுக்கு ஒண்ணுமில்லை……… ஆனா அவன் குடும்பம் காணோமாம்”, என்றான்.

“என்ன உளர்ற…..?”,

“இன்னைக்கு காலையில அவன் ஆபிஸ்க்கு வந்ததுக்கு அப்புறம்……. அவன் அம்மா, பொண்டாட்டி, குழந்தை மூணு பேரும்  காணாம போயிட்டாங்களாம்”, என்றான்.                                            

சக்திக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.                          

 

Advertisement