Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஏழு :

வாசுகியும் சக்தியும் கார்த்திக்கையே பார்த்துக் கொண்டிருந்தனர்… பிறகு அவர்களுக்குள் பேச்சு இல்லை….. வாசுகியிடம் திருமணத்திற்கு வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போக வந்தனர்.

வாசுகிக்கு  அவர்களுடன் பேச சரியாக இருக்க…… சக்தியும் இங்கிதம் அறிந்து நகர்ந்து அமர்ந்தவள்…. அவர் பேசுவதை…. மணமக்களை…… கார்த்திக்கை என்று பார்வையிட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

வாசுகியும் எல்லோரிடமும் சக்தியை தன் கணவரின் நண்பரின் பெண் என்று சலிக்காமல் அறிமுகப்படுத்தி வைத்தார். சக்திக்கே கூச்சமாக போயிற்று.      

அவ்வப்போது சுமித்ராவும் சிவாவும் வந்து பேச்சுக் கொடுத்து கொண்டிருந்தார்கள். சுமித்ரா வைஷ்ணவியோடு வேறு இருக்க வேண்டி இருந்தது.

சக்தியால் அங்கே மணமக்களின் அருகில் போக முடியவில்லை… ஒன்று அவள் வைஷ்ணவியை விட பெரியவள், அதே  சமயம் திருமணமாகாதவள்…… அதுவுமில்லாமல் பிரபு அவளின் ஹாஸ்பிடல் இருப்பவன். அங்கே போய் நின்றுகொண்டிருந்தால், திருமணத்திற்கு வரும் அவளின் மற்ற ஊழியர்களின் முன் நன்றாக இருக்காது.

ஒரு மாதிரி தேமே என்று அமர்ந்திருந்தாள்.     

கார்திக்கினால் அவர்கள் அருகில் கூட வரமுடியவில்லை. அவனுக்கும் எல்லோரையும் பார்க்க வேலைகளை பார்க்க என்று நேரம் சரியாக இருந்தது. 

திருமணம் முடிந்து மதிய விருந்தும் முடிந்து மண்டபத்தை காலி செய்யும் வேலை வேறு இருந்தது…..

மணமக்கள் வீட்டிற்கு கிளம்பினர்…… சிவாவும் சுமித்ராவும் அவர்களோடு சென்று விட்டனர். சக்திக்கு  எங்கே போவது என்று தெரியவில்லை. எல்லோரும் அவரவர் வேலையில் இருந்ததால் இவளை அழைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை.  

வாசுகி உறவுகளோடு பேசிக்கொண்டு இருந்ததால் இவளை கவனிக்கவில்லை. கார்த்திக்கும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

ஏறக்குறைய மண்டபம் காலி ஆகிக்கொண்டிருந்த நிலையில் செல்வத்தை அழைத்தவள், “என்னை வீட்ல விட்டுடுங்க”, என்றாள்.

செல்வமும் உடனே கிளம்பினான். வாசுகியிடம் சென்று, “நான் கிளம்பறேன்மா……”, என்று சொன்னாள். 

“வீட்டுக்கு வாயேன்மா”, என்றார் அவர்.

“இப்போ கல்யாண வேலைல பிசியா இருப்பீங்க…… இன்னொரு நாள் வர்றேன்மா”, என்று சொல்லி கிளம்பினாள்.

கார்த்திக்கிடம் சொல்லிவிடுவோம் என்று தேடினால் அவன் கண்ணில் படவில்லை…..

“எங்க செல்வம் உங்க பாஸ்”,

“தெரியலீங்களே மேடம்! இங்க தான் எங்கயோ இருந்தார்….., நான் பார்க்கட்டுமா!”, என்று செல்வம் போகப் போக….

“விடு செல்வம்! பிசியா இருக்கான்! நான் கிளம்பறேன்…. கார் இருக்கா?”,

“இருக்கு, பாஸ்ஸோடது ஒரு கார் என்கிட்டே தான் இருக்கு!”, என்று அவன் அதை எடுத்து வந்தான்.

சக்தியும் அதில் ஏறி வீட்டின் பாதி தூரத்திற்கும் சென்று விட்டார்கள்…. சக்தியின் போன் அடித்தது….

“எங்க இருக்கீங்க?”,

“வீட்டுக்கு கிளம்பிட்டேன் கார்த்திக்! பாதி தூரத்துல இருக்கேன்!”,

“திரும்பி வாங்க”,

“எதுக்கு கார்த்திக்?”,

“நான் தானே கொண்டு போய் விடறேன்னு சொல்லியிருந்தேன்”,

“அதனால என்ன கார்த்திக்…… நீ கல்யாண வேலையை பார்! பரவாயில்லை!”,

“திரும்பி வாங்கன்னு சொன்னேன்”, என்றான்.

“என்ன பிடிவாதம் இது கார்த்திக்! காலைல இருந்து உட்கார்ந்து…… ஐ அம் ரியல்லி டயர்ட், நான் வீட்டுக்கு போறேன்……. இன்னைக்கு ஒரு நாள் தான் எனக்கு ரெஸ்ட் நாளைக்கு பிரசாரத்துக்கு போகணும்”,

“வரமுடியுமா? முடியாதா?”,

“வர்றேன்!”, என்றவள்…….. “மண்டபதுக்கே போங்க செல்வம்!”, என்றாள்.

கார்த்திக் இப்படி பேசுபவன் அல்ல….. அங்கே சென்றாள்… எல்லோருமே கிளம்பியிருந்தனர்…. கார்த்திக்கும் இன்னும் சாமான்களை எடுத்துக் கொண்டிருக்கும் வேலையாட்கள் மட்டுமே.

கார்த்திக் நிற்பதை பார்த்தும், “நான் பார்த்துக்கறேன்! நீங்க கிளம்புங்க பாஸ்!”, என்று செல்வம் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான்.

 “நான் தான் கொண்டு போய் விடறேன்னு சொல்லியிருந்தேனே”,

“அதனால என்ன?”,

“பார்க்க வர்றது இல்லை……. கூட இருக்கறது இல்லைன்னு கம்ப்ளைன்ட் மட்டும் பண்ண தெரியுது……. நான் வர்றேன்னு சொல்லும்போது எதுக்கு அவசரமா போகணும்”,

“யார்கிட்ட நான் கம்ப்ளைன்ட் பண்ணினேன்”, என்றாள் ரோஷமாக சக்தி.

“ஏன்? என்கிட்டே தான்!…… நானா வந்தா நீ தள்ளிப் போற! அப்புறம் நான் வரலைன்னு சொல்ற…”,

“ஏய் கார்த்திக்! உனக்கு என்னமோ ஆயிடுச்சு!”, என்று கன்னத்தில் கைவைத்து கவலையாக சொன்னாள்.

“என்ன ஆச்சு?”,

“நீ இப்படியெல்லாம் பேச மாட்ட…..”, என்றாள் நிஜமான கவலையோடு.

அவளின் பாவனைகளை பார்த்த கார்த்திக் வாய் விட்டு சிரித்து விட்டான்.

“கார்த்திக், நிஜம்மா ஏதோ ஆகிடுச்சு…… நீ இப்படியெல்லாம் சிரிக்க மாட்ட….”,

“இடுக்கண் வருங்கால் நகுக”, என்று சொல்லவந்தவன்…… மாற்றி, “ஒன்னும் ஆகலை! எனக்கு என்னவோ இன்னைக்கு உன்கூட இருக்கனும் போல் இருக்கு…… இருப்பியா? மாட்டியா?”,

“இருக்கேன்! எங்க போகலாம்?”,

“எங்க வீட்டுக்கு…”,

“அம்மா கிட்ட கேட்கனும்”,

“நான் சொல்லிக்கறேன்”,

“திட்டுவாங்க கார்த்திக்”,

“எனக்காக திட்டு கூட வாங்க மாட்டீங்களா”,

“அங்க உங்க உறவுக்காரங்க எல்லாம் இருப்பாங்க கார்த்திக்”,

“பரவாயில்லை வா!”,

எதற்கு இவ்வளவு பிடிவாதம் என்று சக்திக்கு தெரியவில்லை…… “என்னவோ புதுசா தெரியற கார்த்திக்!”, என்று அவனுடன் கிளம்பினாள்.

நெருங்கிய உறவுகள் சில பேரே இருக்க… எல்லோரும் திருமண அலைச்சல் மதிய நேரம் என்று உறங்கிக்கொண்டிருந்தனர்.

வைஷ்ணவி அவளின் ரூமில் தூங்க…… பிரபு அவனின் ரூமில் உறங்கி கொண்டிருந்தான்.

வாசுகியும் அவரின் ரூமில் உறங்கிகொண்டிருந்தார். உறங்காமல் இருந்தது பத்ரிநாத்தும் சுமித்ராவும் மட்டுமே.

சுமித்ரா மாலைக்கான சிற்றுண்டி மற்றும் சமையல் ரெடியாவதை மேற் பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்.

சக்தி வந்ததும் உற்சாகமாக, “வாங்க! வாங்க!”, என்று வரவேற்றாள் சுமித்ரா.

மண்டபம் ஒன்றும் தெரியவில்லை, இப்போது சற்று கூச்சமாக இருந்தது சக்திக்கு.  

அவள் சோபாவில் அமர்ந்தாள்…… “ஒரு அஞ்சு நிமிஷம் உட்காரு…. குளிச்சிட்டு வந்துடறேன்…. கசகசன்னு இருக்கு”, என்று அவளிடம் மெதுவாக சொல்லி கார்த்திக் ரூமிற்கு சென்றுவிட்டான்.

சுமித்ராவையும் ஏதோ சாமான் எடுத்து கொடுப்பதற்காக சமையல் செய்பவர்கள் அழைக்க…. “இதோ வந்துடறேன்கா”, என்று அவளும் சென்றாள்.

தனித்து விடப்பட்ட சக்தி மறுபடியும் தேமே என்று அமர்ந்திருக்க…. அந்த பக்கம் வந்த பத்ரிநாத், “யாரு”, என்று கேட்டபடி பக்கத்தில் வந்தமர்ந்தார்.

“வீரமணி பொண்ணு தாத்தா!”, என்று சக்தி எடுத்துக் கொடுக்க….

“யாரு நம்ம அரசியல்ல நிக்கற பாப்பாவா”, என்று கேட்டார்.

“ஆமாம்”, என்பது போல் தலையசைத்தாள்.

அரசியலை பற்றி கார்த்திக்கின் தாத்தா சக்தியிடம் பேச ஆரம்பித்தவர் தான் நிறுத்தவேயில்லை…… அரை மணிநேரம் ஆகிற்று சளைக்காமல் பேசிக்கொண்டு இருந்தார்.

பத்து நிமிடங்களில் எல்லாம் கார்த்திக் வந்துவிட்டான்…..      

தாத்தாவின் அருகில் சக்தி இருந்ததால், அவனால் அங்கே போய் அவளை எழுப்ப முடியவில்லை. அவளை, “எழுந்து வா”, என்பது போல சைகை செய்தான்……

அவளோ, “இரு! இரு!”, என்று காட்டிக்கொண்டே பேச்சு மும்முறத்திலேயே இருந்தாள்.

வேறு வழியில்லாமல்  சுமித்ராவை அழைத்து சக்தியை அழைத்து வருமாறு பணித்தான்.

சுமித்ரா தாத்தாவிடம் போய்….. “மண்டபத்துல இருந்து இப்படியே இங்க வந்து இருக்காங்க தாத்தா, முகம் கை காலாவது கழுவி வரட்டும்”, என்று சொல்லி சக்தியை அழைத்து சென்றாள்.

எழுந்து வந்த சக்தி, “நானே கேட்கனும்னு நினைச்சேன், எங்க இருக்கு”, என்று சக்தி ஆரம்பிக்கும் போதே சமையல் செய்பவர்கள் சுமித்ராவிற்கு குரல் கொடுக்க……

“இதோ வந்துடறேங்கா”, என்று அவள் போக…..

அவள் சென்ற அடுத்த நொடி, “என்ன”, என்றபடி கார்த்திக் வந்து நின்றான்.

“உங்கம்மா ரூம் எங்க கார்த்திக்”, என்றாள்.

“எதுக்கு?”,

“நான் கொஞ்சம் ப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்”,

“ஏன்? என் ரூம்ல ஆகமாட்டியா!”,

“லூசு மாதிரி உளறாத! வீடு ஃபுல்லா ரீலேடிவ்ஸ் இருக்காங்க! நான் உன் ரூம்க்கு வருவேனா…. ஏற்கனவே அம்மா கிட்ட சொல்லாம வந்துட்டேன்! இப்போ சொல்லலாம்னா, உடனே கிளம்பி வர சொல்லிட்டா என்ன பண்றதுன்னு சும்மா இருக்கேன்! நீ வேற…….”,

“இதெல்லாம் பேச்சில்ல, எல்லோரும் தூங்கறாங்க, என் ரூம்க்கு வருவியா? மாட்டியா?”,

“உங்க தாத்தா இருக்கார்……. சுமித்ரா என்ன நினைப்பா?”,

“எங்க தாத்தாக்கு அங்க இருந்து பார்த்தா ஒன்னும் தெரியாது! அதில்லாம இநேரம் சுமித்ரா கிட்ட நீ ஏன் வீட்டுக்கு வந்திருக்கன்னு விசாரணையை ஆரம்பிச்சு இருப்பார்!………அதனால் சுமித்ரா அவர்கிட்ட மாட்டி இருப்பா…..”,

“என்ன சொல்லுவா அவ?”, என்றாள் கவலையாக.

“அது அவளைத் தான் கேட்கனும்”, என்றான்.  

“போடா! திட்டிறப் போறேன்! நமக்கென்ன டீன் ஏஜ்ன்னு நினைச்சியா……. இன்னைக்கு இந்த கலாட்டா பண்ற”,

“ஆக்சுவலா……. உன்னை நான் என் டீன் ஏஜ்ல தான் பார்த்தேன்”,

“அச்சோ!”, என்று தலையில் கைவைத்தவள்……. “கிளம்பு! கிளம்பு! உன் ரூம்கே வர்றேன்! என்னால இந்த பேச்செல்லாம் கேட்க முடியாது….. என்னோட கார்த்திக் இப்படி உளர்னா எனக்கு பிடிக்காது……”,

“வா! வா! இத முதல்லயே பண்ணியிருக்கலாம் தானே!”, என்றபடி கூப்பிட்டுக்கொண்டு போனான்.

ரூமினுள் சென்று…… அங்கேயிருந்த பாத்ரூமிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு… முகம் கழுவி வந்தாள்.

வந்தவள் அங்கே இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அவள் கையில் வைத்திருந்த பொட்டை ஒட்டி உடனே, “போகலாமா”, என்றாள்.

“என்ன அவசரம்…… டையர்டா இருந்தா கொஞ்ச நேரம் தூங்குறியா சக்தி!”,

“நீ என்கிட்டே இன்னைக்கு அடி வாங்காம விட மாட்ட போல!”,

“ஏன்? என் பெட்ல தூங்க மாட்டியா!”,

“இதுக்கு நான் ஏதாவது ஏடாகூடமா சொல்லிடுவேன்! அப்புறம் எனக்கு வெக்கமா இருக்கோ இல்லையோ…….. உனக்கு ரொம்ப வெக்கமா போயிடும்!”,

“பழய சக்தி திரும்பரா போல”,

“பின்ன எங்க வீட்டுக்கு நீ வந்ததுக்கு அப்புறம் இதை பேசாத…….. அதை பேசாதன்னு…… இப்படி பேசு…….. அப்படி பேசுன்னு…… உன் கான்வென்ட் இங்கிலிஷையும் மரியாதையான தமிழையும் கத்து குடுத்த….”, 

“இல்லைனா நான் என் பாட்டியோட இருந்தப்ப கத்துகிட்ட பாஷையை பேசினேன்னு வை…….”, என்றாள் மிரட்டலாக.

“ஓகே, கூல்! கூல்!”, என்றான்.

“கீழ போலாம் கார்த்திக்……….. முறையில்லாத ஒன்னை என்னால எப்பவுமே செய்ய முடியாது…….. அந்த மாதிரி பேச்சுக்களோ, விமர்சனங்களோ எனக்கு பிடிக்காது! அதுக்கு பயந்து தான் அரசியல் வேண்டாம்னு சொன்னேன். என்னவோ அதை சொல்லி, இதை சொல்லி, நான் கூட இருக்கேன்னு சொல்லி…….. என்னை ஏமாத்தி தள்ளி விட்டுட்ட”, என்று குறைபட்டாள்.

அவளருகில் வந்தவன்……. “என்மேல இப்படி எத்தனை குறைகள் இருந்தாலும் என்னை விட்டுட மாட்டியே……”, என்றான்.

“பயப்படாத! நீ கொலையே பண்ணியிருந்தாலும் நான் விடமாட்டேன்”, என்றவள், “அதுக்காக கொலை பண்றேன்னு கிளம்பிடாதப்பா”, என்றாள் விளையாட்டுத்தனமாக……..

அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் அவளுக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் கார்த்திக்கிற்கு எத்தனை நிம்மதியை கொடுத்தது என்பது அவனுக்கு தானே தெரியும்…… அவனின் மனதில் இத்தனை வருடங்களாக அழுத்திக் கொண்டிருந்த அவனின் தந்தையின் பாரம் சற்று குறைந்தது.

அவளை நோக்கி கைகளை விரித்தான்.

“என்ன கார்த்திக் இது? தனியா இருக்கும் போதெல்லாம் பத்தடி கேப் விட்டு தள்ளி நின்னுட்டு இப்போ… ப்ளீஸ்!”, என்று கெஞ்சலாக பார்க்க……

கார்த்திக் விரித்த கையை இறக்கவேயில்லை.

“என்ன பிடிவாதம் கார்த்திக்”, என்று சக்தி சலித்தாலும்….. தயங்கினாலும் கார்த்திக் அசையாமல் நின்றான்.

சற்று சிணுங்கிக்கொண்டே வந்து அவனின் கைகளில் தஞ்சம் புகுந்தாள்….. சக்தி மனம்  முழுவதும் பதட்டம் மட்டுமே….. தாத்தாவோ சுமித்ராவோ அவள் எங்கே இன்னும் காணோம் என்பது மாதிரி தேடினால் என்ன செய்வது என்று.

ஆனால் கார்த்திக்கிற்கு எந்த பதட்டமும் இல்லை, சக்தி அவனின் கைகளுக்குள் இருக்கும் அந்த நொடியை அனுபவித்தவன்……. “தேங்க்ஸ் சக்தி! தேங்க்யு வெரி மச்!”, என்றான் உணர்ந்து.

என்னவோ அவன் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறான் என்று புரிந்த சக்தியும், ஏன்? எதற்கு? என்று கேட்காமல் அவன் அவனின் கைகளுக்குள் அடங்கி நின்றாள்.

நீண்ட நேரம் நீடித்த அந்த அணைப்பில் சக்தியின் இதயத் துடிப்பு கார்த்திக்கிற்கு இடம் மாறியது. அவளின் துடிப்பை உணர்ந்தான்.

“என்ன சக்தி உன் தைரியமெல்லாம் பேச்சுல தானா! ஏதாவது பேசிடுவேன்! எனக்கு வெக்கமா இருக்காது! உனக்கு  வெக்கமா இருக்கும்! அப்படி இப்படின்னு சொன்ன! இப்போ உன் ஹார்ட் பீட் நான் பில் பண்றேன்”, என்றான் அணைப்பை விலக்காமல்.

அதற்கு பதில் சொல்லாத சக்தி, அவளின் கைகளை உயர்த்தி…. அவனின் ஷர்ட் காலரை தாண்டி ,அவனின் கழுத்தில் கைவைத்து, “கழுத்து வலி பரவாயில்லையா”, என்றாள்.

அவளின் பஞ்சு விரல்கள் அவன் கழுத்தில் பட்டதுமே உடல் சிலிர்த்த கார்த்திக்…. “உன் கைபட்டா வலி தெரியலை”, என்றான்.

அதை தடவிக்குடுத்த படியே மெதுவாக விலகியவள், “போகலாமா”, என்றாள்.

“இன்னும் பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்!”, என்றான்.

அவள் தடவ தடவ….. “தூக்கம் வருது”, என்றான்.

“என்ன…..?”,

“தூக்கம் வருது”, என்றான் சீரியசாக……

“அப்போ தூங்கு”,

“வேலையிருக்கும்”,

“கொஞ்ச நேரம் தூங்கு! ஒன்னும் ஆகாது!”, என்றாள். அவன் படுக்கவும் பக்கத்தில் அமர்ந்தவள் கழுத்தை தடவிக் கொடுக்க…… இரண்டே நிமிடத்தில் உறங்கிவிட்டான்.

வெளியே வந்து கதவை சத்தம் செய்யாமல் மூடவும்…. சுமித்ரா வரவும் சரியாக இருந்தது.

“மாமாகிட்ட ஏதோ கேட்கனுமாம்! அவர் எங்கேன்னு செல்வம் கேட்கறாங்க……”, என்று சுமித்ரா கதவை தட்டப் போக…….

“வேண்டாம் சுமித்ரா…….. கார்த்திக் தூங்கறாங்க”, என்றாள் சக்தி.

“என்ன தூங்கறாங்களா…… நைட் கூட பேய் மாதிரி முழிச்சிகிட்டே இருப்பாங்க! பகல்ல தூங்கறாங்களா”, என்று ஆச்சர்யமாக கேட்டாள் சுமித்ரா. 

“ஆம்”, என்பது போல் தலையாட்டியவள்……. “செல்வம் தானே, வா, நான் பேசறேன்!”, என்றாள்….

செல்வத்தை பார்த்ததும், “ஏன், உன்னால பார்க்க முடியாத”, என்று எடுத்த உடனே கடினமான குரலில் கேட்டாள்.

தூங்கும் கார்த்திக்கை டிஸ்டர்ப் செய்வதா என்ற கோபம் அவளுக்கு….. எதற்கு கோபம் என்று புரியாத போதும் உடனே தலையாட்டினான்…. “முடியுமே! நான் பார்த்துக்கறேன்!”, என்று பரிதாபமாக…..

“ம்! பார்த்துக்கோ!”, என்றாள் அதட்டலாக.

“ஏன் கோவம்?”, என்றான் மெதுவாக.

“கோவமா? இல்லையே! கார்த்திக் தூங்கறாங்க, அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு பார்த்தேன்!”, என்றாள்.

“என்ன தூங்கறாங்களா?”, என்றான் வேண்டுமென்றே….. “ங்களா”, வில் அழுத்தம் கொடுத்து……… சக்தியின் மரியாதை பன்மையை கிண்டல் செய்தான். 

முகம் மாற்றத்தை காட்டிவிடாமல் இருக்க வெகுவாக சிரமப்பட்டாள் சக்தி.

விட்டேனா என்று செல்வமும்….. “தூங்கறதுக்கா பாதி வழி போன உங்களை வர சொன்னாங்க”, என்று ராகமிழுக்க….

“வேலையை பார்த்து கிளம்பு! கிளம்பு!”, என்றாள் புன்னகையோடு சக்தி…..

சிறிது நேரம் இருந்தவள், வாசுகி எழுந்ததும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

“இருங்க நான் பிரபு அண்ணாவையாவது எழுப்பறேன்! நீங்க வந்து அவரை எழுப்பலைன்னா, திட்டுவாங்க!”, என்று சுமித்ரா சொல்ல சொல்ல….

“வேண்டாம் சுமித்ரா”, என்று சொல்லி கிளம்பிவிட்டாள்.

அதன் பிறகு சக்தி தேர்தலில் பிஸியாகிவிட……. கார்த்திக்கும் பிசியாக இருந்தான்….. பார்த்துக்கொள்ள சந்தர்ப்பங்கள் அமையவில்லை….. இருவரும் உருவாக்கவுமில்லை.   

சக்தி சற்று பதட்டமாகவும் இருந்தாள், நின்று விட்டோம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பது மாதிரி……. அந்த சுழற்சியிலேயே இருந்தாள்…. அரசியலின் எண்ணத்தில் இருந்ததால் கார்த்திக்கின் ஞாபகம் அதிகமில்லை….

அவன் மனதில் தான் இருக்கிறோம், அவன் தன்னை தேடுகின்றான் என்பதே அவள் மனதில் ஒரு திருப்தியை கொடுத்திருக்க……. தேர்தல் வெற்றி மட்டுமே அவளின் எண்ணமாக இருந்தது.   

ஒரே மாதத்தில் வாழ்க்கை தலைகீழானது……

சக்தி எம் பீ எலெக்ஷனில் அமோக வெற்றி பெற்றாள்….

அவளின் அந்த வெற்றி மட்டுமல்லாமல்…. சக்தி ப்ரியதர்சினியாகிய அவள்….. யாரும் எதிர்பார்க்காத வண்ணம்…….   ஏன் அவளோ வீரமணியோ கூட எதிர்பார்க்காத வண்ணம் THE MINISTER OF STATE IN THE MINISTRY OF COMMERCE AND INDUSTRY எனப்படும் மத்திய இணை அமைச்சர் தனிப்பொறுப்பு சக்திக்கு கொடுக்கப்பட்டது…   

ஒரு பக்கம் மத்திய அமைச்சரவையின் பதவி ஏற்பு விழா டீ வீ யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க…. மற்றொரு புறம் ஸ்க்ரோல் நியூஸ் அதனடியில் ஓடிக்கொண்டிருந்தது…

granite scam in tamilnadu… more than 10,000 crores suspected… என்று ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க….. நான்கைந்து கிரானைட் உரிமையாளர்களின் பெயர் போடப்பட்டிருக்க…. அதில் முதலாவதாக வாசுகி கிரானைட்ஸ் கார்த்திக்கேயன் என்ற கார்த்திக்கின் பெயர் இருக்க….

முதல் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட அடிப்படையில் கார்த்திக் கைது செய்யப்பட்டிருந்தான்.      

 

Advertisement