Advertisement

அத்தியாயம் முப்பது :

சாத்திரம் பேசுகிறாய் – கண்ணம்மா!                                                                                                                               சாத்திர மேதுக்கடீ?                                                                                                                                 ஆத்திரங் கொண்டவர்க்கே – கண்ணம்மா!                                                                                                        சாத்திர முண்டோடீ? 

( பாரதி )

எல்லோருக்கும் பணத்தை செட்டில் செய்து கார்த்திக் முடிக்க இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. செய்தி கசிந்ததும் பிரச்சனை செய்யாத டிஸ்ட்ரிபுயுட்டர்களும் வந்து விட்டனர்.

எல்லோருக்கும் முகம் சுளிக்காமல், அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் செட்டில் செய்தான்.

இப்படியும் ஒரு மனிதனா……. இவன் ஒரு வேளை ஏமாளியா என்று எண்ணத் தோன்றியவர்களுக்கும்……. அவனின் பேச்சு நடை உடை பாவனை மிகவும் பெரிய மனிதனாக காட்டியது.

கடைசியில் அவனை வியந்தே சென்றனர்.  

கார்த்திக்கிற்கு பணம் பிரச்சனையில்லை…… ஆனால் மீண்டும் தோல்வி மனதிற்கும் என்னவோ மாதிரி இருந்தது.

அவனுக்கு படம் எடுக்க வேண்டும், லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. அவனின் தந்தையின் பேனர் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். அவர் பெயர் நிலைக்க வேண்டும். 

“நடக்க வேண்டும்…. நடத்தியே ஆகவேண்டும்…. அது எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் செய்வேன் செய்தே தீருவேன்…..”, உள்ளுக்குள் கனன்றது……   

அதுமட்டுமல்லாமல் இன்னொரு வேலையும் பாக்கி இருந்தது. உன் சொத்து உன்னிடம் திருப்பி விட்டேன் என்பது மாதிரி பத்ரிநாத்திடம் சொல்லியிருந்தான். அவர் அங்கே வந்து என்ன என்று பார்ப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. அவனும் வாருங்கள் என்று அழைக்கவில்லை.

அவர் தந்தையை சொல்லி சொல்லி காட்டி இருந்ததால்……… திருப்பிவிட்டேன், உங்களிடம் சேர்த்து விட்டேன் என்று சொல்லியிருந்தான். ஆனால் அவருக்கு எதுவும் செட்டில் செய்யவில்லை. செய்து விட்டால் பரவாயில்லை என்று தோன்றியது…..

பிரபுவிடமும் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்று வீட்டிற்கு தகவல் சொல்லியிருந்தான்.

இங்கே சக்திக்கு அவன் எதற்கு அவ்வளவு அவசரமாக போனான் என்று தெரிந்தே ஆகவேண்டி…… செல்வத்திடம் தெரிந்து சொல்லுமாறு சொல்லியிருந்தாள்.

செல்வமும் நேரடியாக கார்த்திக்கிற்கே அழைத்திருந்தான்.

“என்னடா அங்க வேலையெல்லாம் நல்ல படியா முடிஞ்சதா”,

“முடிஞ்சது பாஸ்…. ஆளாளுக்கு புதுசு புதுசா பில் குடுக்கறானுங்க….”,

“நீயென்ன பண்ணின?”,

“ஒண்ணும் பண்ணலை! நீங்க வரணும்னு சொல்லிட்டேன்! எப்போ வர்றீங்க?”,

“தெரியலை! ஒண்ணு ரெண்டு நாள் ஆகும்!”,

“அங்க என்ன வேலை?”,

“என்னடா கேள்வி எல்லாம் பலமா இருக்கு”,

“கேட்க சொல்லியிருக்காங்க”,

“அது யாருடா என்னை கேட்க சொன்னது”,

“மேடம்”,

“என்னவாம் அவங்களுக்கு……..”, கேட்கும் போதே அத்தனை பிரச்சனைகளுக்கிடையிலும் கார்த்திக்கின் முகத்தில் புன்னகை……..

“அதை அவங்களை தான் கேட்கனும்”,

“கேளேன்”,

“நான் அவங்களை கேள்வி கேட்கறதா, என்னை தொலைச்சிட மாட்டீங்க”,

“ஒஹ்! தெளிவா இருக்கியா நீ”,

“அதான் தெளிய வெச்சு, தெளிய வெச்சு, அடிக்கறீங்களே….. அதை விடுங்க என்ன விஷயம், எதுக்கு அவசரமா போனீங்க”,

“ம், படம் மறுபடியும் ப்ளாப்! அதான் எல்லோருக்கும் செட்டில் பண்ண வந்தேன்….”,

“என்ன பாஸ் சொல்றீங்க?”, என்றான் கவலையாக……

“விடுடா பார்த்துக்கலாம், அப்புறம் கூப்பிடறேன்”, என்று சொல்லி போனை வைத்தான். 

சக்தியிடம் அட்சரம் பிசகாமல் விவரத்தை சொன்னான்.

“என்ன பண்றான் அவன்?”, என்று சக்தி விவரம் கேட்டாள்…..

பட தயாரிப்பை சொன்னான். நிறைய பேருக்கு அது தெரியாது…… அதுவுமில்லாமல் கார்த்திக்கின் பெயரும் அதில் வராது……. அவனின் அப்பாவின் பெயர் தான் இருக்கும்.

“என்ன படம் தயாரிக்கறானா? என்னென்ன படம்?”,

முதலில் எடுத்த படம், இப்போது எடுத்த படம் இரண்டையும் சொல்ல……..

புதுமுகங்களை வைத்து எடுத்த படத்தை பற்றி சக்திக்கு அதிகம் ஒன்றும் தெரிவில்லை. ஆனால் அந்த படத்திற்கு நிறைய விளம்பரம் என்ற அளவில் தெரிந்தது.

ஆனால் இந்த படத்தை பற்றி நன்கு தெரிந்திருந்தது….. “படம் பெரிய ப்ளாப்ன்னு சொல்றாங்களே செல்வம்”, என்றாள் கவலையாக……… 

“ஆமாம் மேடம்….. அதான் இவரால யாரும் நஷ்டம் ஆகக்கூடாதுன்னு எல்லோருக்கும் பணத்தை திருப்பி கொடுக்கிறார்”,

“அது அவன் அவன் பிசினெஸ்….. அடுத்தவங்க நஷ்டத்துக்கு நம்ம எப்படி பொறுப்பெடுத்துக்க முடியும்………. அப்படி இருக்குறவன் தொழில் பண்ண கூடாது…….  ஏன் இப்படி படம் எடுக்கணும்னு என்ன?”,

“அவங்கப்பா பேர் தான் மேடம் போடறார்! என்னோட கணிப்பு என்னன்னா திரும்ப அவர் பேர் கொண்டு வர இப்படி செய்யறார்னு நினைக்கிறேன்”, என்றான்.

வீட்டில் உடனே வீரமணியிடம் விவரம் கேட்டாள் சக்தி…. பேப்பரில் படத்தின் விளம்பரத்தை பார்த்தவர்……. “ஆமாமா இது சந்திர சேகரோட பேனர் தான்மா…. டெய்லி பேப்பர் பார்க்கிறேன்….. ஆனா என் கவனத்தை இது கவரலை பாரேன்”, என்றார்.

“படம் எப்படி போகுது”, என்று சக்தியிடம் விவரம் கேட்டார்………

“இந்த படமா இது நல்லாயில்லைன்னு சொன்னாங்களே”, என்று தெய்வானை குரல் கொடுத்தார்.

“அம்மா”, என்றாள் சக்தி…

“உள்ளதை தானே சொன்னேன்”, என்றார் தெய்வானை….

“அப்போ அவன் படம் தயாரிக்கறது உனக்கு முன்னமே தெரியுமா”,

“தெரியும்”,

“எப்படி தெரியும்?”,

“அப்பப்போ கருப்பண்ணன் கிட்ட விசாரிச்சுக்குவேன்”.

“நீயேன் விசாரிக்கற?”,

அதற்கு பதில் சொல்லாமல் தெய்வானை வீரமணியை பார்த்து……. “ஹாஸ்பிடல் கட்டியாச்சு…… பொண்ணுக்கு சீட்டும் கேட்டாச்சு……. அவளுக்கு எப்போ கல்யாணம் பண்ண போறீங்க……. வயசு ஏறுதில்ல……. இப்போவே இருபத்தியாறு வயசாச்சு…..”, என்றார்.

வீரமணி பதில் சொல்லும்முன்பே சக்தி, “அம்மா! எனக்கு இப்போ கல்யாணம் பண்ற எண்ணம் இல்லை!”, என்றாள்.

அவளருகில் வந்த தெய்வானை……… “அவனை பத்தி எதுக்கு விசாரிக்கிறன்னு நீ கேட்டயில்லை, இதுக்கு தான்”, என்றார் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்….

“அம்மாவும் பொண்ணும் என்ன பேசறீங்க?”, என்று வீரமணி கேட்டார்.

“சக்திக்கு யாரையாவது பிடிச்சிருக்கான்னு கேட்கறேன்”, என்றார் தெய்வானை.

சக்தியின் முகம் சுருங்கி விட்டது.

“என் பொண்ணுக்கு என்னடி? யோக ஜாதகம்…….. அவ தொட்டதெல்லாம் துலங்கும்… அவ ஆளப் பிறந்தவடி…. பெரிய ஆளா வருவா”,

“அவ பெரிய ஆளா வர்றது இருக்கட்டும்….  அவ கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு வாழ வேண்டாமா”, 

“ஏன் வாழமாட்டா…… என் பொண்ணு கண்ணிறைஞ்ச கணவனோட மனசு நிறைஞ்ச வாழ்க்கை வாழுவா”,

“கல்யாணத்துக்கே இன்னும் அடி எடுத்து வைக்க மாட்டேங்கறீங்க”,

“இது சத்தியமான வார்த்தை தெய்வானை…. நான் சொல்லலை….. இப்போ டெல்லி போனப்போ அங்கிருந்த ஒரு பெரிய சுவாமிஜிகிட்ட ஜோசியம் பார்த்தேன்……. எல்லா அரசியல்வாதிங்க…….. விளையாட்டு வீரர்ன்னு அவர் கிட்ட கியூ கட்டி நிக்கறாங்க…”,   

“அவர் சொல்றது அப்படியே நடக்குதாம்…… அவளை கட்டிக்க போறவன் அத்தனை யோகக்காரனா இருப்பானாமா….. அவ வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னார்”,

“சரி, அவர் சொல்றது எல்லாம் இருக்கட்டும், அவளுக்கு எப்போ மாப்பிள்ளை பார்க்க போறீங்க…..”,

“அப்படி அவசரப்பட வேண்டாம்னு சொல்லியிருக்கார்….. அவளுக்கு கங்கன பொருத்தம் இருபத்தி ஏழுல தான் வருதாம், அப்போ தான் பார்க்க சொன்னார்”,

“உங்களுக்கு அறிவு ஏதாவது இருக்கா? நல்லா என் வாயில வந்துடும்”, என்று எகிறினார் தெய்வானை.

“ஏன் தெய்வா திட்டுற”,

“ம், பின்ன கொஞ்சுவாங்களா? நம்ம பொண்ணுக்கு என்ன குறை? இப்போவே இருபத்தி ஆறு ஆகிடுச்சுன்னு சொல்றேன்…… இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு சொல்றீங்க….. அந்த வயசுல எல்லா பொண்ணுங்களும் ரெண்டு குழந்தையே பெத்திருப்பாங்க”, என்று வீரமணியிடம் சண்டை போட்டார்.

“அந்த சுவாமிஜி தான் சொன்னார், அதுக்கு முன்னாடி நம்ம முயற்சி எடுத்தாலும் அமையாதுன்னு……..”,

“அவர் ஆயிரம் சொல்வார், அதுக்காக நம்ம முயற்சி எடுக்க கூடாதுன்னு இல்லை…. நம்ம செய்யறதை செய்யலாம்….. அப்புறம் கடவுள் விட்ட வழி”,      

இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த சக்தியின் மனதில் ஓடியது ஒன்று தான், “என்னை தவிர யாரும் உன் கழுத்துல தாலி கட்ட விட மாட்டேன்னு சொன்னானே! நிஜமா சொன்னானா? இல்லையா?”,

“நான் வேற இப்படி பேசினா எவனை வேணா கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேனே!”,

“மறுபடியும் என்கிட்ட கேட்பானா? மாட்டானா? கேட்டா நான் என்ன சொல்லுவேன்!”, என்ற யோசனையிலேயே இருந்தாள்…….   

அதே எண்ணத்தில் இருந்தவள் நேரே ரூமிற்கு சென்று விட்டாள்…..

அவள் போவதையே யோசனையோடு பார்த்த தெய்வானை வீரமணியிடம் இன்னும் எகிறினார்….. “எல்லாத்தையும் அவ முன்னாடியே பேசனுமா…… நான் மாப்பிள்ளை பார்க்கனும்னு சொன்னா, உடனே பார்க்கறேன்னு சொல்ல வேண்டியது தானே!”,

தெய்வானைக்கு தன் மகளின் வாழ்க்கையை நன்றாக இருக்க வேண்டும் என்று மனது சஞ்சலமாக இருந்தது.  

என் மகள் வாழ்க்கையில் வருவதாக இருந்தால் வீட்டிற்கு வா இல்லையென்றால் வராதே என்று கார்த்திக்கிடம் சொல்லியிருந்தார்.

இத்தனை நாட்களாக வராதவன் இப்போது தானாகவே வந்து எல்லா வேலைகளையும் செய்கிறான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. எதுவாகினும் இவருக்கு திரும்பவும் கேட்கும் எண்ணமில்லை……. வருவது என்றால் அவன் தான் வரவேண்டும்….. என் பெண் கிடைக்க அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதாக தான் தெய்வானையின் எண்ணமிருந்தது. 

சக்தியின் எண்ணமும் தெரியவில்லை. இறைவனை நாடுவதை தவிர அவருக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை.    

இரண்டு நாட்கள் வேலைகள் இயந்தர கதியில் நடந்தாலும்…… “நான் தான் அவனை வேண்டாம்னு சொல்லிட்டேனே, மறுபடியும் இப்படி ஏன்? நான்…. எனக்கு…… என்ன பண்றேன்?”, என்று பயங்கரமான குழப்பத்தில் இருந்தாள்.

அவள் அவளின் குழப்பத்தில் இருந்ததால் கார்த்திக்கின்  தற்போதைய நிலையை அலசி ஆராய்ந்த அவளின் மனது பின்னுக்கு சென்றது.

“அவன் என்னை ஏமாற்றியதை நான் மறந்துவிட்டேனா…….”, இரண்டு நாட்களாக இதே யோசனை……..

அன்று சிவா இரவு ட்ரீட்டிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லியிருந்தான்… இவளும் சரி என்று சொல்லியிருந்தாள்….. வெளியே போயே நிறைய நாட்கள் ஆகிவிட்டன…….

ஒரு மாற்றம் அவளுக்கே தேவையாயிருந்தது…..

போவோம் என்று கிளம்பினாள்…..

கருப்பண்ணன் ஏதோ வேலை என்று சென்றிருந்தார்…. அதனால் செல்வத்தை தான் துணைக்கழைத்து கிளம்பினாள். எத்தனை ஆட்கள் இருந்தாலும் வீரமணியோ, செல்வமோ, கருப்பண்ணனோ இல்லாமல் செல்ல மாட்டாள். இது அவளுக்கான கார்த்திக்கின் எழுதப்படாத விதி.

கார்த்திக்கோடு பிரச்சனைகள் வந்த போதும், அவனை எரிச்சல் படுத்தவென்று அவள் செய்த ஒரே காரியம் நாய்களை வீட்டுக்குள் கொண்டு வந்தது தான். அதுவும் இரண்டு மூன்று நாட்களே….. அவன் திட்டிய பிறகு அனுப்பி விட்டாள்.

அவன் இல்லாத போதும் அவன் சொற்களை மீறி நடந்ததில்லை.

ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் இவர்களுக்காக ஸ்பெஷல் அரேஞ்ச்மேன்ட்ஸ் செய்யப்பட்டு இருந்தது.

ஜீன்ஸ் குர்தாவில் இருந்தாள்….. அது அவளை காலேஜ் படிக்கும் ஒரு பெண்ணின் தோற்றத்தை தான் கொடுத்தது. அழகாக இருந்தாள் சக்தி…… கண்ணை கவரும் அழகு என்பதை விட இது கண்ணுக்கு குளிர்ச்சியான அழகு…… 

அங்கே அவள் சென்ற போது…… சிவா, சுமித்ரா, பிரபு, வைஷ்ணவி இருந்தனர்… இவள் தூரத்தில் இருந்து வரும்போது பார்த்த சுமித்ரா, “தேவதை மாதிரி இருக்காங்க”, என்றாள்….

சுமித்ராவே சொல்லவும்….. சக்தி பக்கத்தில் வந்ததும், “வெல்கம் ஏஞ்சல்”, என்றான் சிவா….

“ஏன்? என்னை அண்ணான்னு சொல்ல வெச்சே தீருவேன்னு சபதம் எடுத்திருக்கீங்களா?”, என்றாள் சக்தி.

“என்ன அண்ணாவா? எத்தனை பேரை நான் கல்யாணம் பண்ணினாலும் உங்க வாயில இருந்து என்னை பார்த்து அந்த வார்த்தை வரலாமா”, என்று சிவா நியாயம் கேட்க….

“பின்ன நீங்க ஏஞ்சல் சொன்னா, நான் அண்ணா சொல்லுவேன்னு முன்னமே சொல்லியிருக்கேன்”, என்றாள்……..

“அது உங்க பாடி கார்ட் கூட இருக்கும் போது”,

“இது மட்டும் அவன் காதுல விழுந்திச்சி, எங்கிருந்தாலும் அடுத்த நிமிஷம் இங்க இருப்பான்”, என்று சக்தி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அங்கு கார்த்திக் வர, எல்லோர் முகத்திலும் சிரிப்பு…..

கார்த்திக்கை பார்த்தும் பார்க்காதவள் போல திரும்பிக்கொண்டாள்…..  இருந்தாலும் அகத்தின் உற்சாகம் முகத்தில் பிரகாசமாக தெரிந்தது.

“ஏஞ்சல்ன்னு நான் சொல்லலை சுமித்ரா தான் சொன்னா”, என்று உடனே பல்டி அடித்தான் சிவா…

“அது……. அந்த பயம் இருக்கனும்”, என்று சக்தி மறுபடியும் சிவாவை வார…..

“நீங்க நிஜமாவே ஏஞ்சல் மாதிரி தான் இருக்கீங்க”, என்றான் கிடைத்தது சாக்கென்று பிரபுவும்….

“அடங்குங்க மச்சான், பாடிகார்ட் காதுல விழுந்தது……. நம்மளை துவைச்சு காய வெச்சுருவார்”, என்றான் சிவா…

“இருங்க, அவன்கிட்டயே கேட்கறேன்”, என்ற பிரபு…..  

கார்த்திக் அவர்களை நெருங்கியவுடன், “என்ன கார்த்திக், மேடம் ஏஞ்சல் மாதிரி தானே இருக்காங்க…….”,

கார்த்திக் அங்கே வந்து எல்லோரையும் பார்த்ததும் ஒரு உற்சாகம் தொற்ற…… என்ன ஏதென்று தெரியாத போதும் சக்தியை பார்த்து…… “அதென்ன ஏஞ்சல் மாதிரி இருக்காங்க……. அவங்க ஏஞ்சல் தான்”, என்றான்…

சக்தியால் அவளின் முக சிவப்பை மறைக்கவே முடியவில்லை….

“கார்த்திக்க்க்க்க்க்க்க்கு…….. நீயா பேசின?”, என்று பிரபு வாய்திறந்து கேட்க…… மற்றவர்கள் வாய் திறக்கவிட்டாலும் எல்லோர் முகத்திலும் அதுதான் இருந்தது. 

“இதென்ன எல்லோரும் என்னை இன்னைக்கு ஓட்டனும்னு முடிவெடுத்து வந்திருக்கீங்களா…… இதெல்லாம் விவரமான பசங்களுக்கு அழகே கிடையாது…… மூணு பொண்ணுங்க இருக்கும் போது யாராவது ஒரு பொண்ணை இப்படி புகழ்ந்தா….. அந்த பொண்ணுங்களுக்கு உங்க மேல கோபம் வருதோ இல்லையோ என்னை பிடிக்காம போயிடும்”, என்றாள் சக்தி…..

“இது பாயின்ட்! என்ன வைஷ்ணவி உனக்கு கோபம் வருமா?”, என்று பிரபு வம்பிழுக்க……..

“இல்லை, இல்லை, வராது”, என்று அவசரமாக மறுத்தாள்…….

“அதானே பொண்ணுங்களுக்கு தானே கோபம் வரும்! உனக்கு ஏன் வருது?”, என்று பிரபு அவளை வார……

வைஷ்ணவி கார்த்திக்கிடம்…… “அண்ணா! இவங்களை நீ எதுவும் கேட்க மாட்டியா?”, என்று கார்த்திக்கிடம் குறைபட….    

“அதொன்னுமில்லை.. நீயும் ஏஞ்சல்ன்னு சொல்றான் வைஷு”, என்றான் கார்த்திக்.  

பிரபு உடனே, “எப்போ நீ ஃப்ரீ”, என்றான்…….

“எதுக்குடா கேட்கற”,

“இல்லை, உன்கிட்ட டியுஷன் வரலாம்னு இருக்கேன்”, என்றான் சிரிக்காமல்….

எல்லோரும் சிரிக்க……. “இவன்கிட்ட டியுஷன், விளங்கும்”, என்றாள் வாய்விட்டு சக்தி….   

அதை கவனியாதவன் போல கார்த்திக் சுற்றிலும் கண்களை ஓட்ட…. செல்வமும் அங்கே தான் இருந்தான்.  

அதன் பின்னர் எல்லோரும் அமர்ந்தனர். செல்வம் இருக்கவா போகவா என்பது போல நிற்க……

“கீழ வெயிட் பண்ணுங்க செல்வம்”, என்று சக்தி சொல்ல…….

“எங்களோட ஜாயின் பண்ணுறியாடா”, என்றான் கார்த்திக்…..

அவன் அருகில் வந்த செல்வம், அவனை பார்த்து திரும்பி……. அவனுக்கு மட்டும் தெரியுமாறு கண்களை சிமிட்டியவன்….. பின்பு முகத்தை சீராக்கி எல்லோரும் பார்க்குமாறு நின்று, “நோ பாஸ்”, என்றவன்……

“அக்கா ஊர்ல இருந்து வந்து இருக்காங்க……. ரெண்டு சின்ன பசங்களை கூட்டிட்டு வந்திருக்காங்க…..”, என்றான் சமந்தமில்லாமல். 

“சரி, அதுக்கு”,

“நான் தான் அவங்களை ஊருக்கு கொண்டு  போய் விடனும்….”,

“கொண்டு போய் விடுடா”,

“எனக்கு இப்போ போனா பரவாயில்லை”,

“இதை ஏண்டா என்கிட்ட சொல்ற”,

“மேடமை வீட்டுக்கு கொண்டு போய் விடனும்”,

அவன் சொல்ல வருவது அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது……….

“இப்போ நான் என்ன செய்யனும்”,

“அவங்களை டின்னர் முடிஞ்சவுடனே வீட்ல விட்டுடறீங்களா……..”,

“அவங்க வந்தா விடறேன்”, என்றான் கார்த்திக் சக்தியை பார்த்தவாறு….

சக்தி இதில் தலையிடவேயில்லை…… பதிலும் சொல்லவில்லை….. வேடிக்கை மட்டுமே பார்த்தாள்…..   

“அப்போ அவங்க வரலைன்னா கூட்டிட்டு போக மாட்டீங்களா, சரி நான் அக்கா கிட்ட குழந்தைங்களை கூட்டிட்டு பஸ்ல போக சொல்லிடறேன்….”,

“என்னடா ப்ளாக்மெயில் இது”, என்றான் கார்த்திக்…… எல்லோர் முகத்திலும் புன்னகை.   

“ஒன்னு இடுப்புல, ஒன்னு கையில, இதுல பையை எங்க தூக்கிட்டு போகும் எப்படியோ போகட்டும்… நான்லாம் தம்பின்னு இருந்து என்ன பிரயோஜனம்…..”, என்று செல்வம் பெருமூச்சு விட…….

“இங்க இத்தனை பேர் இருக்காங்க, யாராவது உங்க மேடமை பத்திரமா கொண்டு போய் விட்டுடுவாங்க”, என்று கார்த்திக் சொல்ல….

“நீங்க கொண்டு போய் விடுவீங்களா? மாட்டீங்களா? அதை மட்டும் சொல்லுங்க….. அவங்க கிட்ட கேட்கனும்னா நானே கேட்க மாட்டேனா…… நீங்க என்ன சொல்றது…….”,

“டேய்”, என்று கடுப்பான கார்த்திக்……. “நீ பாஸா? நான் பாஸா?”,

“நீங்க என் பாஸா இருக்கலாம்….. ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் அவங்க தானே மேடம்….. நீங்க அப்படிதானே அவங்களை கூப்பிடறீங்க”, என்றான் செல்வம்…..

சக்தியால் என்ன முயன்றும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை….. கார்த்திக்கை இவ்வளவு பேச வைக்கும் செல்வத்தை பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு….. 

“டேய்! எல்லோர் முன்னாடியும் அடி வாங்காத…….”, என்றான் நிஜமான கோபத்தோடு கார்த்திக்.

“நீங்க போங்க செல்வம், நான் வந்துடுவேன்”, என்றாள் சக்தி.

“சாரி மேடம்! என் பாஸ் என்னை……. கருப்பண்ணனை தவிர வேற யாரோடயும் நீங்க போக கூடாதுன்னு சொல்லியிருக்கார்”, என்றான்.

வேகமாக எழுந்து கார்த்திக் அவன் அருகில் வர….. சக்தியின் அருகில் போய் நின்று கொண்டான் செல்வம்……..

அங்கே சிரிப்பு எல்லோரிடமும் வெடித்து கிளம்பியது. கார்த்திக்கின் முகத்திலும் புன்னகை…….

“போடா டேய் போடா, உங்க மேடம் என்கூட வரலைன்னா கூட நான் அவங்களை கூட்டிட்டு தான் போவேன்….”, என்றான் கோபத்தையெல்லாம் கைவிட்டு கார்த்திக்….

“இப்போ தான் பாஸ்……. நீங்க என் பாஸ்”, என்ற செல்வம்…. எல்லோரிடமும் விடை பெற…. சக்தி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

அவளை பேசவிடாமல், “மேடம் காலையில நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறேன்”, என்றான் செல்வம்.

“எதுக்கு”,

“நீங்க திட்றதெல்லாம் தனியா அங்க திட்டிக்கங்க”, என்று சொல்லியபடி நிற்காமல் ஓடியே விட்டான்.

எல்லோரையும் அவன் செயல் இன்னும் கலகலப்பாக்கியது.

கார்த்திக்கை பார்த்த பிரபு…… “உன்கூட எப்படிடா இப்படி ஒரு ஜாலியான ஆளு…..”, என்றான்.

“ரொம்ப நல்ல பையன், எங்க கூட ரொம்ப வருஷமா இருக்கான்….. போடான்னு நாங்களே துரத்தி விட்டாலும் போகமாட்டான்…. இந்த மாதிரி ஆளுங்க கிடைக்கறது அபூர்வம்”, என்றான்.

சக்தி சுமித்ராவை பார்த்து…… “எப்படி இருக்கு லைஃப்”, என்றாள்….

“இதைவிட லைஃப் நல்லா இருக்கும்னு தோணலை”, என்றாள் சிவாவை பார்த்து மனமார்ந்து……

“என்ன சிவாவை பார்த்து இப்படி ஒரு காம்ப்ளிமெண்டா”, என்று போலியாக சக்தி ஆச்சர்யப்பட…..

“வொய் சக்தி? வொய்?”, என்றான் சிவா……..

“பின்ன எத்தனை பேரை கல்யாணம் பண்ணிகிட்டாலும்ன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டையலாக் அடிக்கறீங்க”,

“அது ஒரு டைமிங்க்ள ரைமிங்கா வர்றது”,

“என்னது டைமிங் ரைமிங்……. பொண்ணுங்க இந்த மாதிரி சொன்னா நல்லாயிருக்குமா…….”,

“நல்லாயிருக்காதுதான்”,

“அப்போ நீங்களும் சொல்ல கூடாது……… என் சார்பா ஒரு ரெண்டு அடி அடிங்க சுமித்ரா”, என்றாள் சக்தி….

இதுதான் சாக்கென்று சுமித்ரா தோளில் ஒரு அடிவைக்க……

“என்ன வைஷ்ணவி உனக்கு கேட்டுச்சா, கேட்கலை தானே, இன்னும் பலமா ஒரு அடி குடு சுமித்ரா”, என்றாள் சக்தி.

தன்னிடமா சக்தி பேசினார்கள் என்பது போல வைஷ்ணவி விழிவிரித்து பார்க்க…..

“எதுக்கு இப்படி முழிக்கற, இப்படி பார்வையாலேயே ஆளை முழிங்கிடுவோம்னு தான் உங்கண்ணன் கண்ணாடியை போட்டுட்டே சுத்தறானோ”, என்றான் பிரபு.    

“என்னை ஏண்டா இழுக்கற”, என்றான் கார்த்திக்….

“நீயும் உங்கண்ணாடியும் சகிக்கலை….. ஏன் மேடம் இதை போட்டா தான் இவன் அழகா இருக்கான்னு சொன்னிங்களா….”, என்றான் பிரபு சக்தியை பார்த்து.

“நீங்க சொல்றது தான் ஒருவகையில் நிஜம், அவன் பார்வை யாருக்கும் தெரியக்கூடாதுன்னு தான் இதை போட்டுட்டு சுத்தறான்”, என்றாள் சக்தி.

அடுத்த நிமிடம் கார்த்திக் அதை கழட்டி கீழே வைக்க…….

“அதை அவன் தலையை சுத்தி தூக்கி வீசுங்க பிரபு”, என்றாள் சீரியஸாக சக்தி…….  மனதினில்…….. “அதை போட்டு போட்டு தான் என்னை ஏமாத்தியிருக்கான், என்னால அவனை கண்டுபிடிக்க முடியாம போயிடுச்சு”, என்று நினைத்துக்கொண்டே……       

 

Advertisement