Advertisement

அத்தியாயம் ஒன்பது :

நெஞ்சி லுரமுமின்றி                                                                                                                                நேர்மை திறமுமின்றி                                                                                                                                          வஞ்சனை சொல்வாரடீ                                                                                                                                                                                                                      கிளியே  வாய்ச்சொல்லில் வீரரடி                                                                                                                            கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி 

                   ( பாரதி ) 

கார்த்திக் மூவரையும் பார்க்கவும், வைஷ்ணவி மற்றும் சுமித்ராவின் கண்களில் அப்பட்டமான பயம் தெரிந்தது.

சிவாவிற்கு கார்த்திக்கை பார்த்தது அதிர்ச்சி தான் என்றாலும் தன்னுடன் இருந்த பெண்களையும் பார்த்தான்.

அவர்களின் கண்களில் பயத்தை பார்க்கவும்….. சற்று பதட்டம் வந்தது சிவாவிற்கு.

கார்த்திக்கை…. யாரோ ஒரு புதியவனை….. அவனின் ஆஜானுபாகுவான தோற்றத்தை….. பார்த்து பயந்து விட்டனர் என்று நினைத்தான்.

அவர்களுக்கு அவன் தெரிந்தவனாய் இருப்பான், உறவினனாய் இருப்பான் என்று சற்றும் சிவாவிற்கு தோன்றவில்லை.

கார்த்திக்கை பார்த்ததும் பதட்டத்தை மறைத்து, “ஹலோ கார்த்திக்”, என்றான்.

கார்த்திக்கும் கோபத்தை எல்லாம் காட்டவில்லை, “ஹலோ சிவா”, என்றான்.

கார்த்திக் கோபத்தை காட்டாதது, இன்னும் பெண்கள் இருவருக்கும் பயத்தை அதிகப்படுத்தியது. கார்த்திக்கின் கோபம் அவர்கள் அறியாததா.

மீண்டும் அவர்களை பார்த்த சிவாவிற்கு அவர்களின் பயமும் பதட்டமும் புரிய…… அவர்களை பார்த்தது, “பயம் தேவையில்லை, சார் எனக்கு தெரிஞ்சவங்க தான்”, என்றான் வைஷ்ணவியையும் சுமித்ராவையும் பார்த்து.

பெண்கள் இருவருக்கும் கார்த்திக்கை தெரிந்த மாதிரி காட்டிக்கொள்வதா, இல்லை தெரியாத மாதிரி நிற்பதா என்று பயங்கர குழப்பம்.

கார்த்திக் அவர்கள் இருவரையும் பார்த்து, “இங்க என்ன பண்றீங்க?”, என்றான்.

சிவா முகத்தில் குழப்பம், “உங்களுக்கு இவங்களை தெரியுமா”, என்றான் கார்த்திக்கை பார்த்து……..

“தெரியும்”, என்றான் கார்த்திக்.

“நான் அன்னைக்கு போட்டோ காட்டினப்ப நீங்க தெரிஞ்ச மாதிரி சொல்லலையே”, என்றான் சிவா.

“இல்லையே, நான் மேம்கிட்ட சொன்னேனே, உங்க எதிர்ல தானே சொன்னேன்!”, என்றான்.

என்ன சொன்னான் சிவா புரியாமல் பார்க்க………

“உங்க ஃபிரண்ட்கிட்ட இந்த போட்டோவ டெலிட் பண்ண சொல்லுங்கன்னு சொன்னேனே”, என்றான். 

“அது அந்த பொண்ணுக்கு விருப்பமில்லாம அந்த போட்டோ வெச்சிக்க கூடாதுன்னு தானே சக்தி சொன்னாங்க”,

“அது அவங்க சொல்லியிருக்கலாம், ஆனா நான் அதுக்கு சொல்லலை”, என்றான்.

சிவா ஸ்தம்பித்து நின்றான். கார்த்திக் என்ன சொல்லவருகிறான் என்று புரியாமல் பார்க்க……

கார்த்திக் வைஷ்ணவியையும் சுமித்ராவையும் பார்த்து……. “உங்களுக்கு காலேஜ்க்கு டைம் ஆகலையா”, என்றான்.

உடனே வண்டியில் ஏறிய வைஷ்ணவி, “கிளம்பறோம் அண்ணா”, என்றுவிட்டாள்.

“என்ன அண்ணனா?”, என்று அதிர்ந்தான் சிவா……

“இவர் உங்க அண்ணனா?”, என்று மறுபடியும் வைஷ்ணவியை பார்த்து சிவா கேட்டான்….. ஏனென்றால் அவளின் அண்ணனை தானே சுமித்ரா திருமணம் செய்ய போவதாக வைஷ்ணவி கூறினாள்.

வைஷ்ணவி கார்த்திக்கை பார்க்க……

கார்த்திக் சிவாவை பார்த்து, “ஆமாம் சிவா!”, என்றான்.

இதுவரை கார்த்திக் அவனின் உறவு முறைகளை யாரிடமும் சொல்லியதில்லை. இனி மறைப்பதாக எண்ணமுமில்லை……

சிவா இன்னும் அதிர்ந்தான். “அப்போ சுமித்ராவை………”, என்று சிவா இழுக்க…….

“வீட்ல அம்மா அப்படி தான் பேசிக்கறாங்க”, என்றான் கார்த்திக்.

சிவாவிற்கு இது மிகுந்த அதிர்ச்சி……. “எவன் அவன்? அத்தை பையன்! என்னை மீறி எவன் கல்யாணம் பண்ணிக்குவான்னு பார்த்துக்கறேன்!”, என்ற இறுமாப்புடன் தான் இதுவரை சிவா இருந்தான்……….

சத்தியமாக சிவா, கார்த்திக் அந்த அத்தை பையனாக இருப்பான் எதிர்பார்க்கவில்லை.

கார்த்திக்கின் உயரம் அவனுக்கு நன்கு தெரியும். அவனுடன் மோதுவது என்பது சாமான்யமல்ல. சுமித்ராவின் சம்மதம் இருந்தால் பேச்சே வேறு.

அவளிடம் இன்று தான் பேசியேயிருக்கிறான்…… அவளும் அத்தை மகனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது மாதிரி தான் சொல்லியிருக்கிறாள்.

எங்கே யாருடன் போராடுவது அவன் காதலுக்காக……. அவனுக்கு புரியவேயில்லை.

“உங்களுக்கு என் காதல் தெரிஞ்ச அன்னைகே சொல்லியிருக்கலாமே”, என்றான் கார்த்திக்கை பார்த்து……

“அதான் இப்போ தெரிஞ்சிடுச்சே”, என்றான் கார்த்திக்.

என்ன பதில் இது என்று சிவாவிற்கு புரியவில்லை.

அதோடு மட்டும் நிறுத்தாமல், “மேடமோட நண்பர் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக தான் நான் உங்களோட பிரச்சனை பண்ணாம விடறேன்….. இனிமே சுமித்ராவை பார்க்காதீங்க”, என்றான். 

சிவாவின் பார்வை அனிச்சையாய் சுமித்ராவின் புறம் திரும்பியது.

நேற்று போனில் சக்தி இதை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தாளோ?

என்னவோ தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவே சிவாவிற்கு தோன்றியது. ஒரு வார்த்தை இது போல என்று என்று சுமித்ரா சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. தினமும் தானே இவள் பார்வை படும் இடத்தில் இருந்திருக்கிறேன்.

கார்த்திக் அவன் கூட சொல்லவில்லையே..

சக்தி அவளுமா? நல்ல நட்பாய் எண்ணினேனே……

ஒன்றும் பேசாமல் காரின் கதவை திறந்து ஏறினான்.

கார்த்திக் அவனின் காரை எடுத்தால்தான்…… சிவா எடுக்க முடியும் என்ற நிலை. அப்போதும் அவனின் காரை எடுக்க சிவா சொல்லவில்லை. அப்படியே ரிவர்ஸ் எடுத்தால் கண்டிப்பாய் சுவரில் மோதும்.

இருந்தாலும் அப்படியே ரிவர்ஸ் எடுத்தான். கார் சுவரில் மோதி டேமேஜ் ஆனது. அப்படியே திருப்பி காரை கரன்ட் போஸ்டிலும் முன்னால் மோதினான், பின்பு   வேகமெடுத்தான்.

அங்கிருந்த சுமித்ரா, வைஷ்ணவி, கார்த்திக் மூவருக்குமே அவனின் நிலை தெளிவாக புரிந்தது.

வைஷ்ணவிக்கு சுமித்ராவின் மேல் கோபமாக வந்தது……. முன்பே இந்த விஷயத்தை அவள் சிவாவிடம் தெளிவு படுத்தியிருக்க வேண்டும் என்று.

கார்த்திக் அவர்களை முறைத்து பார்த்தவன், “முதல்லயே என்கிட்ட சொல்றதுக்கு என்ன?”, என்றான்.

வைஷ்ணவி, “இந்த அளவுக்கு போகும்னு நாங்க எதிர்ப்பார்க்கலை”, என்று சமாளிக்க முயற்சிக்க……

என்னவோ சிவாவின் வருத்தம் சுமித்ராவிற்கும் வருத்தத்தை கொடுத்தது. அதுவும் சிவா அவளின் போட்டோ வைத்திருந்து கார்த்திக்கிற்கு தெரியும் என்றதும் அப்படி ஒரு கோபத்தை சுமித்ராவிற்கு கொடுத்தது.

“ஏன் வைஷு? உங்க அண்ணா தான் அவர் என் போட்டோவை வெச்சிருந்ததை பார்த்திருக்காரில்லை! என்ன செஞ்ஜாராம்?”, என்றாள்.

இதை கார்த்திக் எதிர்பார்க்கவில்லை வாயடைத்து நின்றான்.

“ஒரு வேளை அவரோட மேம் இருந்ததால சொல்லியிருக்க மாட்டார்! ஏன்னா எல்லோரையும் விட அவரோட மேம் அவருக்கு ரொம்ப முக்கியம்”, என்றாள். அவள் குரலில் தெரிந்தது வருத்தமா, கோபமா, பொறாமையா, வரையறுக்க முடியவில்லை. 

பின்பு சுதாரித்து, “நான் டெலிட் பண்ண சொன்னேன்”, என்றான் கார்த்திக்.

“நான் யாருன்னு சொல்லியா டெலிட் பண்ண சொல்லியிருபாங்க வைஷு?”,  

அவளை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாமல் காரில் ஏறினான். அவர்கள் கிளம்பும் வரை நின்றான்.

அவர்கள் கிளம்பியதும் கிளம்பிவிட்டான். இந்த பெண்களின் மேல் எரிச்சலாக வந்தது. நேற்று சக்தி அவனை நிற்க வைத்து கேள்வி கேட்டாள்…….. இன்று சுமித்ரா….????

“என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்னைச் சுற்றி?……. இந்த பெண்கள் என்னை கொண்டு போக விடுவதா”, என்ற இறுமாப்பு எழுந்தது.

சக்தியின் திருமணம் வரை முதலில் பொறுப்போம் என்று நினைத்தவன்……. இப்போது முடிவை மாற்றினான். யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் சக்தி எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லுவாள் என்ற அவனுக்கு தோன்றவில்லை.

அவளுக்கு பிடிக்காமல் வீரமணி கட்டாயம் அவளுக்கு திருமணம் செய்ய மாட்டார். அதுவும் அவனுக்கு தெரியும்.வீரமணி மகளுக்காக எதையும் செய்ய கூடியவர்.

பின்பு தாமதிப்பானேன் என்று தோன்ற…….     

செய்யப் போகும் செயல்களின் தீவிரம் புரிந்தாலும்,

உடனே செய்….. வருவதை எதிர்கொள்…… இனியும் தயங்காதே……

என்று முடிவெடுக்க வைத்தது.

விரோதமோ? துரோகமோ? உடனே பாராட்டு, என்று முடிவெடுத்து விட்டான்.

இரண்டு மூன்று நாட்களாக கழுத்தில் வலியில்லை என்று அந்த காலரை எடுத்திருந்தான்.

நேற்று சக்தியிடம் அவனை மீறி தம் கட்டி கத்திய போதே சுளீரென்று ஆரம்பித்த வலி, இப்போது இங்கே வந்து வைஷ்ணவி, சுமித்ரா, சிவாவை பார்த்த பிறகு சற்று அதிகரித்து இருந்தது.

வலி குறையட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாமா? என்று நினைத்தவன், வேண்டாம் என்று உடனயாக முடிவெடுத்தான்.      

தானாக சக்திக்கு விஷயங்கள் தெரிய வருவதற்கு முன்னால் சிவா சொல்லிவிடுவானோ என்றும் யோசனையாக இருந்தது. ஆனால் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்பதே அவன் எண்ணமாக இருந்தது.

அன்று…… அப்போது……… அந்த நிமிடமே….. வேலையை ஆரம்பித்தான். ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்தது தான். அதை செயல் படுத்தினான், அவ்வளவே!

யாருடைய போனும் எடுக்கவில்லை……. வீரமணி அழைத்திருந்தார், சக்தி அழைத்திருந்தாள்……… வைஷ்ணவி அழைத்திருந்தாள், யாருடையதும் எடுக்கவில்லை.

வீட்டிற்கும் செல்லவில்லை.

செல்வம் வந்து வீரமணியிடம் தகவல் சொன்னான். “ரெண்டு நாள் ஏதோ முக்கிய வேலை, வீட்டுக்கு வர மாட்டேன்னு உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க”, என்றான்.

“ஏன்? அவன் போன் என்னாச்சு?”, என்று சக்தி கூட கேட்டாள்.

“தெரியலை மேடம்”, என்று விட்டான்.

முழுதாக இரண்டு நாட்கள் வீட்டிற்கே வரவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து காலையிலேயே வீட்டிற்கு வந்துவிட்டான் கார்த்திக்.

அவன் வீட்டிற்குள் நுழையும் போது சக்தி தான் முதலில் அவனை பார்த்தாள். அவன் கையில் இரண்டு பெரிய பெட்டிகள் வேறு………

அவனை பார்த்ததும் சக்தி, “ஹேய் கார்த்திக்!”, என்று ஆவலாக ஓடி வந்தவள்…. “எங்கபோன ரெண்டு நாளா? ஒரு போன் கூட பண்ணலை! நாங்க பண்ணினாலும் எடுக்கலை, எங்கேயிருக்கன்னும் சொல்லலை! எங்கப் போன?”, என்றாள்.

கார்த்திக் அவளின் கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல்….. “நான் அப்பாவையும் அம்மாவையும் பார்க்கணும் மேம், வர சொல்லுங்க”,என்றான்.

“எதுக்கு?”,

“கூப்பிடுங்க! சொல்றேன்!”, என்றான். அவனின் குரலில் விலகல் தன்மை நன்றாக தெரிந்தது.

“என்ன கார்த்திக்? ஏதாவது பிரச்சனையா”, என்றாள் அக்கறையாக……

“அதை நீங்க தான் முடிவு பண்ணனும்”, என்றவன்……. “அவங்களை கூப்பிடறீங்களா”, என்றான் சற்று அதட்டலாக…….

ஏதோ அவனுக்கு டென்சன் போல என்று நினைத்த சக்தி……… மேலும் அவனை டென்சனாக்காமல்……. “ஓகே! அஸ் யூ விஷ்!”, என்று எப்போதும் போல அவனுக்கு ஒப்புக்கொடுத்தபடி அவர்களை கூப்பிட போனாள்.

இதுதான் தான் அவனிடம் கடைசியாக சொல்ல போகும், “ஓகே! அஸ் யூ விஷ்!”, என்ற வாக்கியம் என்பதை அறியாமல்.

“அப்பா! கார்த்திக் கூப்பிடறான் பா!”, என்று வந்தாள் சக்தி வீரமணியிடம்……..

“அவன் வந்துட்டானாம்மா! எங்க போயிருந்தானாம்?”, என்று அவர் கேட்க…….

“தெரியலைப்பா! எதை கேட்டாலும் அப்பாவையும் அம்மாவையும் கூப்பிடுங்கங்கறான்! ஏதோ டென்சனா இருக்கான் போல! நான் அதிகம் கேள்வி கேட்கலை”, என்றாள்.

இவள் கார்த்திக்கிற்கு டென்சன் என்றதும், என்னவோ ஏதோவென்று வீரமணியும் தெய்வானையும் அவசரமாக ரூமில் இருந்து வெளியே வந்தனர்.

“என்ன விஷயம் கார்த்திக்”, என்று வீரமணி கேட்டார்.  

“உட்காருங்க அய்யா!”, என்றான்.

“என்னவோ நீ டென்சனா இருக்கேன்னு சக்தி சொன்னா! ஏதாவது பிரச்சனையா?”, என்றார்.

கார்த்திக் அமைதி காத்தான்.

“என்ன விஷயம்ன்னு சொல்லுப்பா! எதுவா இருந்தாலும் சமாளிச்சிக்கலாம்! நம்மால முடியாதது எதுவுமே கிடையாது!”, என்று அவனுக்கு தைரியம் கொடுத்தார்.

கார்த்திக் அப்போதும் அமைதியாக இருக்க…….. ஏதோ சரியில்லை என்று தெய்வானையின் மனதுக்கு தோன்ற ஆரம்பித்தது.

“சொல்லுப்பா”, என்றார் அவரும்…….

“அது வந்துங்கம்மா……..”, என்று இழுத்தவன்……. பேச ஆரம்பித்தான்……….

“உங்க சொத்து மதிப்பு இப்போ……..”, என்று அவன் சொல்ல ஆரம்பித்தான்.  

“இப்போ எதுக்கு இது கார்த்திக்”, என்று வீரமணி கேட்டார்.

“உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும்னு எனக்கு தெரியாது! சொல்ல வேண்டியது என் கடமை!”, என்று சொல்லி…….. அவன் விவரங்களை சொல்ல ஆரம்பித்தான்……

பாதி சொத்துக்களை பற்றி தான் வீரமணிக்கும் தெய்வானைக்கும் தெரிந்திருந்தது. மீதி அவர்களுக்கே தெரியவில்லை. கேட்க…… கேட்க……. இவ்வளவா என்ற பிரமிப்பு! அங்கிருந்த வீரமணி, தெய்வானை, சக்தி மூவருக்குமே ஏற்பட்டது.

“இது உங்க சுவிஸ் அக்கௌன்ட்”, என்று அவனின் லேப் டேப்பை திறந்து அதன் விவரத்தையும் சொன்னான்.

“இவ்வளவு பணமா? எப்படி?”, என்ற கேள்வி சக்திக்குள் எழ ஆரம்பித்தது. அதை கேட்கவும் செய்தாள்.

“நம்ம கிரானைட்ஸ ஃபாரின் கன்ட்ரீஸ்க்கு எக்ஸ்போர்ட் பண்றோம்! அதுல வந்தது தான் இது! என்ன? திஸ் இஸ் நாட் வைட் மணி, திஸ் இஸ் ப்ளாக்!”, என்றான்.   

கடைசியா, “சக்தி மேம் பேர்ல வாங்கின காலேஜ்!”, என்று அதன் விவரத்தையும் கொடுத்தான்.

“எதுக்குப்பா இதையெல்லாம் இப்போ சொல்ற?”,

“நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க”, என்றான் வீரமணியிடம்.

“நீ கேட்கறது புரியலை”, என்றார் அவர்.

“உங்க சொத்து மதிப்பை பார்த்து நீங்க எப்படி ஃபீல் பண்றீங்கன்னு கேட்டேன்!”, என்றான்.

“இதென்னப்பா கேள்வி? ரொம்ப சந்தோஷம் தான். எனக்கு ஆரம்பத்துல இருந்த சொத்தை விட பல நூறு மடங்கு அதிகம்”, என்றார் உண்மையாக.

இந்த வார்த்தைக்காக தானே அவன் அந்த கேள்வியை கேட்டதே.

“ஒத்துக்கறீங்களா? உங்க முந்தைய சொத்தை விட இது பல நூறு மடங்கு அதிகம்ன்றதை”,

“தாராளமா….. இதுல என்ன உனக்கு சந்தேகம்”, என்றார் வீரமணி……

“இந்த சொத்தை நான் தான் பெருக்கி குடுத்தேன்னு ஒத்துக்கறீங்களா”, என்றான்.

“ஒத்துக்கறேன்! அதுக்கு இப்போ என்ன?”, என்றார் வீரமணி.

தெய்வானைக்கு ஏதோ சரியில்லை என்று  உள்ளுணர்வு அதிகமாக சொல்லியது. நடப்பது புரிந்தாலும், ஏன்? என்பது போல சக்தி பார்த்திருந்தாள்.

“நான்……. நான்……..”, என்று தடுமாரியவன்……….,

“வாசுகி குழுமத்தை என் தாத்தா பேருக்கு மாத்திட்டேன்”, என்றான்…

முதலில் வீரமணிக்கு ஒன்றும் புரியவில்லை……

அப்போதுதான் அங்கிருந்த வீரமணிக்கும், தெய்வானைக்கும், சக்திக்கும் உரைத்தது, இதுவரை அவன் சொன்ன சொத்துக்களில் வாசுகி குழுமம் வரவேயில்லை என்று….   

“என்னப்பா சொல்ற?”, என்றார் சற்று உயர்ந்த குரலுடன் வீரமணி……

“ஐயா! நான் வாசுகி குழுமத்தை என் தாத்தா பேர்ல மாத்திட்டேன்”, என்றான் தெளிவாக……

“என்ன உளர்ற?”, என்று உட்கார்ந்திருந்தவர் பதட்டமாக எழுந்தார்.

சக்தியும் தெய்வானையும் உட்ச பட்ச அதிர்ச்சியில் இருந்தனர்.

“யார் சொத்தை, யார்டா மாத்துறது? என்னடா திரும்ப திரும்ப உளர்ற?”, என்று கோபமாக அவனருகில் போனார்.

அவர் போன வேகத்தை பார்த்தால் எங்கே அவர் கார்த்திக்கை அடித்து விடுவாரோ என்று தெய்வானை பயந்துவிட்டார்.

“பொறுமையா இருங்க! என்னன்னு விசாரிப்போம்!”, என்று அவரும் பதட்டமாக வீரமணியின் அருகில் வந்தார்.

சக்திக்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை. என்ன நடக்கிறது என்று அவள் புரிந்து கொள்ள முயலவில்லை……

கார்த்திக்கா இப்படி என்ற எண்ணம் மட்டுமே ஓங்கி நின்றது.

“என்ன கார்த்திக் சொல்ற?”, என்றார் தெய்வானை இழுத்து பிடித்த பொறுமையுடன்….

மறுபடியும் கார்த்திக் அதையே சொன்னான். “நான் வாசுகி குழுமத்தை என்னோட தாத்தா பேர்ல மாத்திட்டேன்”, என்று……

பொறுமை மீறியவராக வீரமணி கார்த்திக்கின் சட்டையை கொத்தாய் பற்றினார்…..

சக்தி மலங்க மலங்க விழித்தபடி நின்றாள்.

“விடுங்க! விடுங்க!”, என்று தெய்வானை அவரை விலக்க முயல……. அவர் விலக்கவில்லை…….. கார்த்திக்கும் விலக முற்படவில்லை, அசையாமல் நின்றான்.

தெய்வானைக்கு பயம் கார்த்திக் ஒரு தள்ளு தள்ளினால் வீரமணி கீழே விழுந்து விடுவாரே என்று…….

பற்றிய கையை விடாமல், “எப்படி? எப்படி மாத்தின?”, என்றார் வீரமணி.

“உங்க கிட்ட நிறைய வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கி வெச்சிருந்தேன், அதை வெச்சு மாத்தினேன்”, என்றான்.

“ஏண்டா? ஏண்டா இப்படி பண்ணின?”, என்று நரம்பு புடைக்க ஆவேசமாக வீரமணி கத்த….

தெய்வானை, “யாரு? யாரு உன் தாத்தா?”, என்று கேட்டார்.

“பத்ரிநாத்”, என்று கார்த்திக் சொல்ல…..

வீரமணியும் தெய்வானையும் அதிர்ந்தனர். 

“என், என் சந்துருவோட பையனாடா நீ……..”, என்றார் அவசரமாக உணர்ச்சி மிகுதியில் வீரமணி. 

“ஆமாம்!”, என்று கார்த்திக் சொல்ல…..

வீரமணியின் கைகள் தானாக தளர்ந்தது, உடலும் தளர்ந்தது…….. அப்படியே சோபாவில் அமர்ந்தார்.

சக்திக்கு சொத்து போனது அவளின் கருத்தில் பதியவில்லை….. 

“வாசுகி குழுமம் உங்களோடதா”, என்று அலட்சியமாக கேட்ட வைஷ்ணவி ஞாபகத்திற்கு வந்தாள்……

அப்போது கல்யாணத்தில் பார்த்த வாசுகி, கார்த்திக்கின் அம்மா….

கார்த்திக்கிற்கு தான், அந்த பெண் சுமித்ராவை திருமணம் செய்ய போவதாக சொன்னது. அதனால் தான் நேற்று கார்த்திக்கிற்கு, சுமித்ரவை பற்றி சிவாவிடம் பேசியதற்கு அவ்வளவு கோபம் வந்திருக்கிறது.

கார்த்திக் சொத்திற்காக இத்தனை வருடம் இந்த வீட்டில் இருந்து ஏமாற்றி இருக்கிறான்.

கார்த்திக் ஏமாற்றி இருக்கிறான்.

சக்தியால் அதை தாங்க முடியவில்லை……….

Advertisement