Advertisement

அத்தியாயம் ஆறு :

அதட்டி உருட்டி வாசுகி, அதாகப்பட்டது நம் கார்த்திக்கின் அம்மா, வைஷ்ணவியின் அதாகப்பட்டது நம் கார்த்திக்கின் தங்கை…… அவளின் வாயை கட்டி திருமண வீட்டிற்குள் அவளையும் சுமித்ராவையும் அதாகப்பட்டது நம் கார்த்திக்கின் தாய் மாமாவின் பெண்…… இருவரையும் அழைத்து சென்றார்.

அவர்களுக்கு அங்கே நல்ல வரவேற்ப்பு…… மாப்பிள்ளை வீட்டினர் அவர்களுக்கு நெருங்கிய சொந்தமே….. மாப்பிள்ளையின் அன்னையும் தந்தையும் வாசலுக்கே வந்து அவர்களை அழைத்து சென்றனர்.

“வாம்மா! வா! வா! எப்பவும் போல வர்றேன்னு சொல்லிட்டு வராம இருந்திடுவியோன்னு மனசுக்குள்ள ஓடிட்டே இருந்தது, நீ வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்”, என்றார்.

“வாங்கண்ணி வாங்க! வாங்க!”, என்று வந்த மாப்பிள்ளையின் அம்மாவும்……. “நீங்க வந்ததுல எனக்கு தலை கால் புரியலை போங்க! என்னவோ மனசு வந்து இப்பவாவது சொந்தக்காரங்க முகத்தையெல்லாம் பார்க்கனும்னு தோணிச்சே!”, என்று கை பிடித்து அழைத்து சென்றார்.

அவர் உள்ளே சென்றதும் பல உறவுகள் அவர்களை சூழ்ந்து கொள்ள…. “இந்த பொண்ணுங்க யாரு”, என்று ஆர்வமாக வைஷ்ணவியையும் சுமித்ராவையும் விசாரித்தனர்.

“இது என் பொண்ணு வைஷ்ணவி, இது என் அண்ணன் பொண்ணு சுமித்ரா……”, என்று அவர்கள் இருவரையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினர்.  

“எங்க அண்ணி பசங்களை காணோம்”

“சுமித்ராவோட அண்ணன் டாக்டர் மேற் படிப்புக்காக அமெரிக்கா போயிருக்கான். என் பையனுக்கு இங்க தான் வேலை, ஒரு வேலை இருந்ததினால எங்களோட வர முடியலை, அப்புறமா வர்றேன்னு சொல்லியிருக்கான்”, என்று சமாளித்தார்.

“பொண்ணுங்களை கண்ல காட்டிட்டீங்க…….. இன்னும் பசங்களை தான் காட்டலை, பார்க்கலாம் அதுக்கு எப்போ வேளை வருதுன்னு”, என்று ஒரு பெண்மணி சொன்னார்.

“ரெண்டு பொண்ணுங்களும் அம்புட்டு அழகா இருக்காங்க! எப்போ கல்யாணம் பண்ண போறீங்க! எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கொள்ளாம அசல்ல பேசிடாதீங்க………. நம்ம வீட்லயே நல்ல பசங்க இருக்காங்க”, என்றார் மற்றொரு பெண்மணி….

“அதுக்கென்ன அண்ணி சொல்லிட்டா போச்சு! ஆனா பாருங்க அதுக்கு அவசியமே வராதுன்னு நினைக்கிறேன்! எங்க வீட்டுக்குள்ளேயே பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துக்கலாம்னு இருக்கேன்……. எனக்கு ஒரு பையன் பொண்ணு…… என் அண்ணனுக்கும் அப்படிதான்……..”,

“எல்லாம் நான் வளர்த்த பசங்க! நம்ம கண்முன்னாடியே இருக்கும்! அதான்!”, என்றவர்….

“பார்ப்போம் என் ஆசை அதுதான்! ஆனா கடவுள் என்ன வெச்சிருக்கார்ன்னு அவருக்கு தானே தெரியும்”, என்றார் தத்துவார்த்தமாக.

“ஒண்ணும் குறைபடாத வாசுகி உன் நல்ல மனசுக்கு நீ பட்ட கஷ்டம் எல்லாம் போதும்! நீயும் உன் பசங்களும் நல்லா இருப்பீங்க!”, என்றார் ஒரு முதிய பெண்மணி. 

“உங்க வாக்கு பலிக்கட்டும் அத்தை!”, என்றார் வாசுகி……. என்னதான் பேசிக்கொண்டு இருந்தாலும் அவரின் கண்கள் மகன் தென்படுகிறானா என்று அலசிக்கொண்டே இருந்தது.

வீரமணியும் சக்தியும் கார்த்திக்கும் உணவருந்தி விட்டு அப்போது தான் வந்தனர். வாசுகி அவர்களை பார்க்க…… வீரமணி அப்போது தான் வாசுகியை பார்த்தார்.

அவருக்கு பார்த்ததும் சற்று அதிர்ச்சி, அது வாசுகி தானா என்று உற்று பார்த்தார். அவர் பார்க்கும் போதே அருகில் வந்த வாசுகி, “நல்லா இருக்கீங்களா அண்ணா?”, என்றார்.

அவர் பேசிய பிறகு எப்படி பேசாமல் இருப்பது என்று வீரமணியும், “நல்லா இருக்கேன்மா! நீ எப்படி இருக்க?”, என்றார்.

“இருக்கோம்”, என்றார் வாசுகி…… கார்த்திக் யாரோ எவரோ போல பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

“இது என் பொண்ணு சக்தி”, என்று வீரமணி சக்தியை வாசுகிக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்,

அவளிடம், “இவங்களை உனக்கு ஞாபகம் இருக்காம்மா?”, என்று சக்தியிடம் கேட்டார்.

“எங்கயோ பார்த்த மாதிரி இருக்குப்பா! சரியா ஞாபகம் வரலை!”, என்றாள்.

“பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு! ரொம்ப சின்ன பசங்களா இருக்கும் போது பார்த்தது, எப்படி நினைவு இருக்கும்? அதுவுமில்லாம அதிகம் பார்த்தது இல்லையே”, என்று வாசுகி சொல்ல…..

“என் நண்பன் சந்திரசேகர் மனைவி மா. அவன் இருந்த வரைக்கும் நானும் அவனும் ரொம்ப ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தோம்….  குடும்ப அளவுல ரொம்ப பழக்கம் இல்லை! இவங்க அப்பா அப்படி! அப்புறம் என்னென்னவோ பிரச்சனை! ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கலை! ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறோம்!”, என்று சொன்னார்.    

கார்த்திக் சற்று விலகி நின்றிருந்தான், இருந்தாலும் அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் நின்றிருந்தான்.    

“வணக்கம்மா”, என்று சக்தி கை குவித்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்த வாசுகி, “என்ன படிச்சிருக்க சக்தி? என்ன பண்ற?”, என்று கேட்க ……..அவளின் கல்வி தகுதிகளை சொன்னவள்…..

“இப்போதான்ம்மா ஒரு காலேஜ் பொறுப்பெடுத்த நடத்த ஆரம்பிச்சிருக்கேன்”, என்றாள்.

அவர்கள் பேசும்போதே வைஷ்ணவியும் சுமித்ராவும் அருகில் வர…… “இவ என் பொண்ணுண்ணா, வைஷ்ணவி”, என்று வைஷ்ணவியை அறிமுகப்படுத்தி வைத்தவர்…….

“இது என் அண்ணன் பொண்ணு சுமித்ரா”, என்று அவளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

வைஷ்ணவியின் கண்கள் சற்றும் சக்தியை பார்த்து சிநேக பாவத்தை காட்டவில்லை,  பதிலுக்கு ஒரு முறைப்பையே காட்டியது. சுமித்ராவுக்கு எப்போது போல உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாத பாவனை. ஆனால் அவளும் சக்தியை தெரிந்தது போல காட்டவில்லை. 

சக்தியும், “அவர்களுக்கே இப்படி என்றால் எனக்கென்ன வந்தது”, என்பது போல அவளும் முன்பு அவர்களுக்குள் அறிமுகம் இருந்தது போல காட்டவில்லை.

அதற்குள், “எங்கேம்மா பையன், சில சமயம் அவனை பார்க்கனும்னு நினைப்பேன், சந்துரு அவன் பையன் மேல அவ்வளவு உயிரா இருந்தானே”, என்றார்.

“அவனுக்கும் அவனுடைய அப்பான்னா உயிர்ண்ணா! உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன? இப்போ அவன் எங்க கூட இல்லை, எங்கப்பாக்கும் அவனுக்கும் பிரச்சனை வீட்டை விட்டு போயிட்டான்”, என்றார்.

“உங்கப்பா எப்போ என் சந்துருக்கு மரியாதை குடுத்திருக்காரு, அவர் பையனுக்கு குடுக்கறதுக்கு”, என்று கசப்பான ஒரு புன்னகையை சிந்தியவர்….

“எங்கே இருக்கான்மா அவன்”, என்றார்.

கேட்ட கார்த்திக்கின் இதயத்துடிப்பு அதிகமாக ஆரம்பித்தது……. 

“எங்க இருக்கான்னு எனக்கு  தெரியும்ண்ணா, ஆனா அதை சொல்ற உரிமையை எனக்கு அவன் கொடுக்கலை!”, என்றார்.

“எப்படி இருக்கான்மா நல்லா இருக்கான் தானே”, என்றார் அக்கறையாக…….

“வசதி வாய்ப்புகள்ள நல்லா இருக்காண்ணா, மனசளவுல எப்படி இருக்கான்னு தெரியாது”, என்றார்.

வைஷ்ணவிக்கு எரிச்சலாக வந்தது, அவளின் அம்மாவின் பேச்சை கேட்டு… “இந்தம்மா இதை இவங்ககிட்ட சொல்லலைன்னா என்ன”, என்று இருந்தது.

கார்த்திக்கிற்கு அதை விட எரிச்சலாக இருந்தது, எப்போது இவர்கள் இந்த இடத்தை விட்டு கிளம்புவார்கள் என்றிருந்தது.

வீரமணி கேட்காத தகவலாக வாசுகி அவரை பார்த்து……… “இவ தான் அண்ணா என் மருமக”, என்று சுமித்ராவை காட்டி……… “இவளை தான் என் பையனுக்கு கல்யாணம் பண்ண போறேன்”, என்றார்.

அந்த தகவல் வீரமணிக்கா…… இல்லை கார்த்திக்கிற்கா…….. இல்லை சக்திக்கா……. இல்லை சுமித்ராவிற்கா……… இல்லை வாசுகி அவருக்கு அவரே சொல்லிகொண்டாரா அவருக்கே வெளிச்சம்.

கேட்ட சக்தி அதிர்ந்தாள்………. “ஐயோ இந்த சிவா வேற இவளை நினைச்சு மனசுல ஆசையை வளர்திருக்காறே”, என்று…….

“என்ன செய்ய முடியும்?, இந்த பெண் பேசுவதே குறைவு……. இதில் பேசினாலும் பக்கத்தில் இருக்கும் பெண் சண்டைக்கு வருகிறாள்”, என்று  அமைதி காத்தாள்.

பிறகு வாசுகி கையை குவித்து, “வர்றோம்ணா”, என்று விடைபெற்றார்.  

“என்ன உதவினாலும் தயங்காம கேளும்மா. என் சந்துருக்காக நான் செய்ய கடமை பட்டிருக்கேன்”, என்றார் வீரமணி.

பதிலுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தார் வாசுகி……..

அவர்கள் உணவருந்த செல்ல வீரமணியும் கார்த்திக்கும் கிளம்பினர்…

“அப்பா நான் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கவா கல்யாண பொண்ணு கேட்கறா”, என்றாள் சக்தி.

அவர் பதில் சொல்லும்முன்னே கார்த்திக், “வேண்டாம் மேம் கிளம்புங்க! அவங்களுக்கு இன்னைக்கு உங்ககிட்ட பேச கூட நேரம் இருக்காது, ஒரு வார்த்தைக்கு சொல்றது தான் அதெல்லாம்”, என்றான்….

“ஓகே! அஸ் யூ விஷ்!”, என்று எப்போதும் போல ஒப்புக் கொடுத்தாள் சக்தி.

காரில் போகும்போது, “யாருப்பா அவங்க?”, என்றாள் சக்தி.

“என் நண்பன் சந்துரு வோட மனைவிம்மா. நானும் அவனும் உயிர் நண்பர்கள்ன்னு கூட சொல்லலாம்”.

“எனக்கு அவங்களை தெரியுமாப்பா…..”,

அவர் மடை திறந்த வெள்ளமாய் சொல்ல ஆரம்பித்தார்.

“தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் கம்மி மா. அவன் வீடு வரைக்கும் அதிகம் வந்ததில்லை. நானும் அவன் வீட்டுக்கு அதிகம் போக மாட்டேன்”. 

“அவங்க வீட்ல நான் வர்றதை விரும்ப மாட்டாங்க…….. எங்க வீடு கூட்டுக்குடும்பம், என்னாலயும் அதிகம் அவனை வீட்டுக்கு கூப்பிட முடியாது. எங்க சந்திப்பு எல்லாம் அவன் ஆபிஸ்ல தான்ம்மா…… இல்லை என் தொழில் நடக்கற இடத்துக்கு அவன் வந்துடுவான்……”.

“என் குடும்பத்துல நடக்கற எல்லா விஷயமும் அவனுக்கு தெரியும், அவன் குடும்பத்துல நடக்கற எல்லா விஷயமும் எனக்கு தெரியும். இருந்தாலும் குடும்ப அளவுல அதிக தொடர்ப்பு கிடையாது, ஏன்னா அப்போ நாம இந்தளவுக்கு வசதி கிடையாது…..”,

“அவன் ரொம்ப வசதி, அதுவும் அவன் கல்யாணம் பண்ணின இந்த பொண்ணு இன்னும் வசதி, ரொம்ப பெரிய பாரம்பரியமான குடும்பம். நமக்கு அந்த மாதிரி எந்த அடையாளமும் கிடையாது….”,

“அதனால அந்த பொண்ணோட அப்பா……. அவர் தலையீடு அவன் விஷயத்துல அதிகமா இருக்கும். அதனால என் தொடர்பு அவனோட மட்டும் தான்றதுல நான் ரொம்ப கவனமா இருப்பேன் சக்தி”, என்றார்.

அவர் குரலில் அவ்வளவு வருத்தம்…..

“உங்களுக்கும்  அவருக்கும் ரொம்ப ஸ்நேகிதமாப்பா”,

“ரொம்ப இல்லைம்மா……… ரொம்ப! ரொம்ப! ரொம்ப! அவனுக்கு அப்புறம் எனக்கு யாரோடயும் இப்போ ஸ்நேகிதம்னு கிடையாது………. எல்லாரோடையும் நான் பழகினாலும் பேசினாலும் யாரையும் என்னை நான் நெருங்க விடறதே இல்லை…..”,

“அதுகெல்லாம் கார்த்திக் தான் சந்துருக்கு அப்புறம் எனக்கு நெருக்கம்”, என்றார்.

கார்த்திக்கின் கண்களில் வேதனையின் சாய்கல்கள்…… அவனின் கண்ணாடி அதை நன்கு மறைத்தது.

“கடைசி காலத்துல ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிடான்மா என் நண்பன். என்னாலையும் ஒண்ணுமே செய்ய முடியலை. அவனோட துன்பங்களுக்கு நானும் ஒரு காரணமானேன்”, என்றார் கலங்கிய குரலில்.

“இல்லை! நீங்க இல்லை!”, என்று கார்த்திக்கிற்கு அவரிடம் சொல்ல வேண்டும் போல ஒரு ஆவேசம், ஆனால் அவனால் முடியவில்லை.

“நீங்க அவரை பத்தி பேசினதே இல்லையேப்பா”.

“சந்தர்ப்பம் அமையலைம்மா! இப்போ வாசுகியை பார்த்ததும் எனக்கு அவனோட ஞாபகம் அதிகமா இருக்கு”, என்றார். 

“வாசுகி…..”, என்று அந்த பெயரை உச்சரித்தவள்………

“அப்பா நம்ம கம்பெனி அவங்க பேர்ல எப்படி?”, என்று சந்தேகத்தை கேட்டாள்.

“இது எங்க தாத்தா கம்பெனி!”, என்று கார்த்திக்கிற்கு சொல்ல வேண்டும் போல இருந்தது, ஆனால் சொல்ல முடியாதே….

“அவங்களது தான்மா அது!”, என்றார் வீரமணி.

“என்னப்பா சொல்றீங்க!”, என்று சக்தி ஆச்சர்யமாக வினவ……..

“அது இந்த பொண்ணு வாசுகியோட அப்பா கம்பெனி தான்மா….. எனக்கு என் நண்பன் எழுதி குடுத்தான்”, என்றான்.

“என்னப்பா என்னென்னவோ சொல்றீங்க? எப்படி எனக்கு எதுவுமே தெரியாம போச்சு”,

“இது என் மனசை வருத்துற விஷயம்மா……. அதனால நான் இதை ஞாபகப்படுதிக்கவே இல்லை…… அதனால உன்கிட்ட சொல்லலைமா”,

“எனக்கு தெரியக்கூடாத விஷயமாப்பா”,

“அப்படி எல்லாம் இல்லைமா……. அவன் பெரிய சினிமா தயாரிப்பாளர்ம்மா…….. ஓஹோன்னு இருந்தான். அதுல மூணு பெரிய பட்ஜெட் படம் பெரிய ஹீரோக்களை வெச்சி ஒரே சமயத்துல எடுத்தான்”.

“சொன்னபடி படம் வெளில வர்றதுல சிக்கலாச்சு…….. அப்புறம் படத்தை எப்படியோ ரிலீஸ் பண்ணினான். பெரிய கொடுமை மூணு படமுமே ப்ளாப்! அவனால அதுல இருந்து எந்திரிக்கவே முடியலை”.

“இருந்த சொத்தையெல்லாம் வித்து எல்லோருக்கும் பணம் குடுத்தான். அப்பவும் பணம் பத்தலை. அவங்க மாமனார் அவனுக்கு உதவி செய்ய தயாராயில்லை. அவர் வாசுகிக்கு கொடுத்த தொழில் தான் இது. தொழில் வாசுகி பேர்ல இருந்தாலும் பவர் சந்துரு பேர்ல இருந்தது”.

“அதை விக்க முயற்சி பண்ணினான், யாரும் வாங்கலை. கடைசியா என்கிட்ட வந்தான். ஏதாவது செய்டான்னு அவன் மனசொடிஞ்சு நின்னப்போ என்னால அப்படியே விட முடியலைம்மா……..”,

“என் பேர்ல, உங்கம்மா பேர்ல இருந்த சொத்து, நகை எல்லாத்தையும் வித்து அவனுக்கு குடுத்தேன். அதுமட்டுமில்லாம நானும் சில பேர்கிட்ட கடன் வாங்கி கொடுத்தேன்”.

“பதிலுக்கு அவன் இந்த தொழிலை என் பேர்ல மாத்திட்டான்”. 

“எப்படியோ எல்லோருக்கும் பணத்தை செட்டில் பண்ணி……… கடன் தொல்லையில இருந்து மீண்டான்……. ஆனா வாழ்க்கை அவனுக்கு ரொம்ப சிக்கலா போச்சு”.

“வாசுகியோட அண்ணன் டாக்டர். அவர் இந்த தொழிலை பார்க்க மாட்டாருன்னு தான் வாசுகிக்கு இதை கொடுத்தாங்க. இவன் அதை என்பேர்ல மாத்தினதுல வாசுகியோட அப்பாவுக்கு ரொம்ப கோபம்”.

“வாசுகியை அவர் கூப்பிட்டுகிட்டார். இவனுக்கு வீடில்லை, தொழிலில்லை, ஒண்ணுமில்லை……. குடும்பத்தை அவனோட கூட்டிட்டு வரவும் வழியில்லை. பையன் ஊட்டி கான்வென்ட் ல படிச்சிட்டு இருந்தான்”.

“வாசுகியால இவனை நம்பி வர முடியக்கூடிய சூழல் இல்லை……. ஏன்னா குடி…….. குடிச்சு குடிச்சு ஒழிஞ்சு போனான்”.

“அதுக்குள்ள எனக்கும் அவங்க மாமனாருக்கும் ரொம்ப பிரச்சனையாயிடுச்சு….. நான் என் மாப்பிள்ளைக்கு பவர் தான் கொடுத்திருந்தேன்…….. அவனுக்கு விக்க உரிமையில்லைன்னு பிரச்சனை பண்ணினார்”.

“சக்தி! நான் என்கிட்ட இருந்த எல்லாத்தையும் குடுத்துட்டேன்! அதுமட்டுமில்லாம கடன் வேற வாங்கி குடுத்திருக்கேன்! திரும்ப குடுன்னா எப்படி குடுப்பேன்! எனக்கு அது ஜீவ மரண போராட்டம்……”,

“அப்பவும் நான் வாசுகியோட அப்பாவோட சமாதானமா போக முயற்சி எடுத்தேன். எனக்கு இந்த கம்பனி தான் வேணுங்கற மாதிரி எல்லாம் எதுவுமில்லை……. நீங்க எனக்கு நான் குடுத்த பணத்தை குடுங்க! நான் திரும்ப குடுத்தற்றேன்னு சொன்னேன்”,

“பணமெல்லாம் குடுக்க முடியாது! இது எங்க சொத்து! என் மாப்பிள்ளைக்கு விக்கற உரிமையெல்லாம் இல்லைன்னார்……”,

“பணத்தை குடுத்தா குடுக்கறேன் இல்லைன்னா குடுக்க முடியாது, உங்களால ஆனதை பார்த்துக்கோங்க அப்படின்னு அவன் மாமனார் கிட்ட சொல்லிட்டேன்”.

“அவர் கேஸ் போட்டார்……. கொஞ்ச வருஷம் நடந்துச்சு…. இந்த பிரச்சனையினால சந்துருக்கு மனவருத்தம்…….. சொத்தையும் வாங்கிட்டு என்னை ப்ரச்சனையிலையும் மாட்ட விட்டுடோம்னு…..”,

“கேசை வாபஸ் வாங்க சொல்லி அவன் வாசுகி கிட்ட சொல்ல…. வாசுகிக்கு புருஷன் பக்கமும் நிக்க முடியலை, அப்பா பக்கமும் நிக்க முடியலை…..”,

“சந்துரு வேற அவன் குடும்பத்தோட இல்லை……. ஒரு மேன்சன்ல ரூம் எடுத்து இருந்தான்….. என்னன்னு தெரியலை எனக்கும் அவனுக்கும் ஒரு ரெண்டு மூணு மாசமா ஒரு தொடர்பும் இல்லை…….”,

“எனக்கும் இங்க நம்ம குடும்பத்துல பிரச்சனைகள்…….. அதனால நான் அப்போ தான் தனிக்குடித்தனம் வந்தேன்……. திடீர்ன்னு அவன் இறந்துட்டான்னு எனக்கு செய்தி வருது……”,

தந்தையின் சாவை பற்றிய செய்தி……….

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியுமா அந்த நிகழ்வை கார்த்திக்கினால்……. கண்களில் நீர் துளிர்த்தது……. மனதினில் துக்க பந்து அடைத்தது.

“வாசுகியோட அண்ணன் குடும்பம் அப்போ மலேசியால இருந்தது. இவன் சாவுக்கு அவசரமா அவங்க குழந்தைங்களை விட்டுட்டு வாசுகி அண்ணனும் அண்ணியும் வந்திருக்காங்க……..”,

“வந்த ப்ளேன் அக்சிடன்ட் ஆகி கடலுக்குள்ள விழுந்துடுச்சி…….. ரெண்டு பேரோட பாடி கூட கிடைக்கலை….. ரொம்பவும் அவங்க குடும்பம் ஆடிபோச்சு……

“அதுக்கப்புறம் அவங்கப்பா வாசுகியை அவ பசங்களை அவங்க அண்ணன் பசங்களை எல்லாம் கூட்டிகிட்டு ஈரோடு போயிட்டார்……… அங்க பக்கத்துல அவங்களுக்கு நில புலன் எல்லாம் இருந்தது”.

“அதுக்கப்புறம் கேஸையும் அவங்க கவனிக்கலை……… தானா கேஸ் தள்ளுபடி ஆகிடுச்சு. கேஸ் மட்டும் தொடர்ந்து நடந்திருந்தா என்னவாகியிருக்கும்னு என்னால சொல்ல முடியலை”, என்றார் வருத்தத்துடன்.

கேட்டுகொண்டிருந்த கார்த்திக் அந்த நாளின் நினைவுகளுக்கே சென்றுவிட்டான். என்னமுயன்றும் அவனால் அவனின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அவனின் இறுகிய முகமும் கண்களின் கண்ணாடியும் கூட அவனுக்கு துணை புரியவில்லை. காரை வேறு அவன் ஒட்டிகொண்டிருந்தான்.

வண்டி வேகமெடுத்து அவர்களின் வீட்டின் முன் நின்றது. அவர்கள் இறங்கியதும், “ஒரு சின்ன வேலை வந்துடறேன்”, என்று சொல்லி அவன் காரை விட்டு இறங்காமல் அப்படியே கிளம்பி விட்டான்.

கார் பாட்டிற்க்கு சென்று கொண்டே இருந்தது. ஏதோ ஒரு ஹைவேஸ் வர அதில் இலக்கில்லாமல் சென்றான். நடுவில் டோலில் நின்றது, அவன் பணம் செலுத்தி ரசீது வாங்கியது எல்லாம் இயந்தர கதியில் நடந்ததது. 

ஒரு வழியாக டிராபிக்கில் மாட்டி கார் நின்ற போது அவன் சுற்று புறத்தை பார்க்க அது பெங்களூர் சிட்டியை காட்டியது.   

இறங்கி அங்கே இருந்த ஒரு டீக்கடையில் டீ குடித்தவன் மறுபடியும் கிருஷ்ணகிரி நோக்கி காரை திருப்பினான்.

அந்த நாட்களின் நினைவுகள், அதுவும் அவனின் தந்தையின் நினைவு அவனை மிகவும் பாதித்தது. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தான்.

அதுவும் தான் வீரமணியுடனும் அவரின் குடும்பத்துடனும் செய்ய போவது அவன் தந்தை அவனை என்றும் அதற்கு மன்னிக்க மாட்டார் என்று தெரியும். ஆனால் அவனுக்கு வேறு வழியில்லை.

இது அவனின் தாத்தாவின் சொத்து….. தந்தை அதை கணக்கில் கொள்ளாமல் விற்று விட்டார். அதை அவர்களுக்கு திருப்பி தர வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது. அதே சமயம் வீரமணியின் மேலும் தப்பில்லை. அவரும் பாதிக்க படக்கூடாது.

அவனின் எண்ணம் எல்லாம் அவனின் தந்தை…… வீரமணி……….. அவனின் தாத்தா என்று சுழன்றதால்…. அவன் சக்தியை பற்றியோ சுமித்ராவை பற்றியோ யோசிக்க மறந்துவிட்டான்.

மறக்கப்படவேண்டியவர்கலல்ல அந்த இரு பெண்களும்…… சுமித்ராவால் தான் அவனுக்கு வீட்டை விட்டு வரவேண்டிய சூழலே ஏற்பட்டது.   

ஆனால் அந்த பெண்கள்………. அவர்களை அவன் பெரிதாக எடுக்கவில்லை. அவர்கள் அவனை உயிரோடு கொல்லக் கூடியவர்கள் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.  

அவனின் தந்தையை பற்றிய எண்ணமே அவனுள் ஓங்கி இருந்தது.

எண்ண அலைகள் அவனை சுழற்ற………. அவன் அதற்குள் சுழன்று நசுங்க ஆரம்பித்தான். அது நான்கு வழிப்பாதை எதிரில் வண்டி வர வாய்ப்பில்லாததால் வண்டி நூற்றி முப்பது கிலோமீட்டர் வேகத்தை தொட்டது.

நடுவில் ஒரு டிவைடர் வர கடைசி நிமிஷத்தில் அதை கவனித்து பிரேக் போட நினைக்கும் போது……… அவன் பிரேக் போட்டால் பின்னால் இருந்த வண்டி மோதி பின்னால் வருபவன் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவான் என்பது கடைசி நொடியில் தோன்ற,,,,,,,, தெரிந்தே டிவைடரில் மோதினான். கார் பல சுழற்சியை பார்த்தது.  

கார் சுழன்ற போதும் பின்னால் வந்தவர்களுக்கு ஏதாவது ஆகியதா என்று அவன் பார்க்க…… அதில் வந்தவன் லாவகமாக காரை திருப்பி அவன் கார் மோதாமல் பார்த்துகொண்டு தள்ளி நிறுத்தினான்.

பின் வந்த வண்டிகள் எல்லாம் சர சர வென்று அணிவகுத்து நின்றன. யாருக்கும் எந்த பாதிப்புமில்லை என்று பார்த்தான்.

அதை பார்த்த பிறகே கார்த்திக்கின் கண்கள் மயக்கத்தில் சொருகின.   

        

 

            

 

 

                                    

                   

 

    

      

 

                       

        

Advertisement