Advertisement

அத்தியாயம் இருபத்தி எட்டு :

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்                                                                                            நிறைந்த சுடர்மணிப் பூண்;                                                                                                                                பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்                                                                                                                               பார்வைக்கு நேர்பெருந்தீ;                                                                                                                       ( பாரதி )

கார்த்திக்கின் தலையீட்டுக்கு பிறகு வேலைகள் இன்னும் சூடு பிடித்தன. கார்த்திக் அழைப்புக்களை பார்க்க ஆரம்பித்தான்.

சக்தி கட்டிட வேலையை பார்த்து விட்டு. காலேஜ் வரவும் சிவாவின் தொலைபேசி அழைப்பு..

“சொல்லுங்க சிவா”,

“சக்தி உங்களை பார்க்கனுமே எங்க இருக்கீங்க, இப்போ பார்க்கலாமா”

“வாங்க காலேஜ்ல இருக்கேன்”,

“என்னோட என் மச்சான் பிரபுவும் வர்றாங்க”,

“பிரபுவா”, என்று மனதிற்குள் நினைத்தவள், அவனை மனதில் கொண்டு வர நினைத்து முடியாமல். “ம், கூட்டிட்டு வாங்களேன்”, என்றாள்.

சொன்ன ஒரு அரைமணி நேரத்திற்கு எல்லாம் சிவாவும் பிரபுவும் அங்கே இருந்தனர்.

பிரபுவை பார்த்ததும் இப்போது சக்திக்கு நன்கு அடையாளம் தெரிந்தது, ஏர்போர்டிலும் பார்த்து இருக்கிறாள், திருமணத்திலும் பார்த்து இருக்கிறாள்.    

“வாங்க”, என்று உபசரித்து அமர வைத்தவள்..

“எப்படி இருக்கீங்க சிவா? திருமண வாழ்க்கை எப்படி போகுது? சுமித்ரா எப்படி இருக்காங்க..? எங்கயும் அவங்களை ஊருக்கு கூட்டிட்டு போகலையா?”,  என்று அவள் கேட்க..

“இருங்க எழுதிக்கறேன்”, என்றான்.

“எதை”,

“இவ்வளவு கேள்வி கேட்டா முதல்ல கேட்ட கேள்வியெல்லாம் மறந்து போயிடும் அதான்”,

 சக்தியின் முகத்தில் புன்னகை விரிந்தது. “இருங்க, டைப் பண்ணி குவஷன் பேப்பர் குடுக்க சொல்றேன்”, என்றாள்.

“காலேஜ் ஓனர்ன்னு நிருபிக்கறீங்க.”,

இரண்டு பேரும் மிகவும் சகஜமாக பேசிக்கொள்வதை பிரபு ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

அதற்குள் வாசலில் இருந்த அட்டெண்டர் இருமுறை வந்து எட்டி பார்க்க..

“என்ன”, என்றாள் சக்தி.

“ஒரு அர்ஜென்ட் வேலை உங்க கிட்ட சைன் வேணும்ன்னு பிரின்சிபல் சார் கேட்க சொன்னார்”,

“வாங்கிட்டு வா”,

“அவர் நேர்ல வரவான்னு கேட்க சொன்னார்..”,

“நாங்க வெயிட் பண்றோம் சக்தி”, என்று சிவா எழ.

“நீங்க இருங்க!”, என்று சொன்னவள், “ஒரு பைவ் மினிட்ஸ்ல நானே வந்துடறேன்”, என்று எழுந்து போனாள்.

பிரபுவை சக்தியின் செயல் கவர்ந்தது. அவர்களையும் வெளியே போக சொல்லவில்லை. அவர்கள் முன்னிலையில் பிரின்சிபலை கூப்பிட்டு பேசி அவருக்கும் தர்ம சங்கடம் கொடுக்கவில்லை. முதலாளி என்ற கர்வம் இல்லாமல் அவளே எழுந்து உடனே சென்றது ஆச்சரயத்தை கொடுத்தது.             

ஆனால் ஏர்போர்டில் அவளின் நடவடிக்கையை பார்த்தவன் அல்லவா, குழம்பினான்.

“உங்களுக்கு ரொம்ப நல்லா இவங்களை தெரியுமா”, என்றான் சிவாவை பார்த்து.

“ம்! தெரியும்! பழகறதுக்கு ரொம்ப இனிமையான பொண்ணு. எல்லோரோடையும் நல்லா சட்டுன்னு பழகிடுவாங்க.. ஆனா இவங்க பாடி கார்ட் ஆளுங்களை அப்படியே ஃபில்டர் பண்ணி இவங்களை விட்டு தூர நிறுத்திடுவான்.. ரொம்ப சில பேரை அவனுக்கு சரின்னு தோன்ற ஆளுங்களை தான் பழக விடுவான்”,

“மொதல்ல என்னை கூட பேசவே விடமாட்டான், அப்புறம் கொஞ்ச நாளைக்கு பிறகு தான் அனுமதிச்சான்.. இவங்களும் அவனை மீறி எதுவும் செய்ய மாட்டங்க”,

“பாடி கார்டா, யார் அது?”,

“கார்த்திக்.. வீரமணி அய்யாவோடையும் சக்தி கூடவும் நிழல் போல கூடவே தான் இருப்பான்”.

பிரபு யோசனையில் ஆழ்ந்தான்.

“ரொம்ப கோபம் வரும் போல இவங்களுக்கு”,

“என்ன கோபமா? சக்திக்கா? சான்சே இல்லை. நான் இதுவரைக்கும் சக்தி கோபப்பட்டு பார்த்ததே இல்லை”, 

சக்தியின் கோபத்தை ஏர்போர்டில் பார்த்தவன் தானே பிரபு. யோசனைகள் ஓடும்போதே சக்தி வந்துவிட்டாள்.

அவள் வந்தவுடனேயே சிவா நேரே விஷயத்திற்கு வந்தான், “சக்தி! பிரபு உங்களோட பேசனுமாம்”, என்று.

“என்ன?”, என்பது போல சக்தி பார்க்க..

பிரபுவிற்கு தயக்கமாக இருந்தது. சக்தியை எப்படி அழைப்பது என்று. மொட்டையாகவே பேச்சை ஆரம்பித்தான்.

“நான், டாக்டர் பிரபு!”, என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேச்சை ஆரம்பித்தான்.

அவன் டாக்டர் என்பது சக்தியின் கவனத்தில் இல்லை. “ஒஹ்! நீங்க டாக்டரா!”, என்று ஆர்வமாக கேட்டாள்.

“ம்! யு ஜி இங்க சென்னையில பண்ணினேன், பீ ஜி யு எஸ் ல பண்ணினேன்..”,

“எதுல பண்ணியிருக்கீங்க”,

“ஜெனரல் மெடிசின்”, 

“என்ன விஷயம்? சொல்லுங்க!”, என்றாள்.

“ஹாஸ்பிடல் கட்டிட்டு இருக்கீங்க போல, அதை மெயின்டைன் பண்ண நல்ல மெடிக்கல் காலேஜ் அட்மினிஸ்ட்ரேடிவ் நாலெட்ஜ் இருக்குற மாதிரி டாக்டர்ஸ் பார்க்க சொன்னான் கார்த்திக்..”,

“ஆரம்பிச்சிட்டானா அவன் வேலையை”, என்று சலிப்பாக இருந்தது சக்திக்கு, இருந்தாலும் முகத்தில் காட்டவில்லை. மேலே சொல்லு என்பது போல பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அதான் பார்க்கட்டுமா? வேண்டாமான்னு? உங்களை கேட்க வந்தேன்”,

“உங்களுக்கு இஷ்டமிருந்தா பாருங்க! இல்லை விட்டுடுங்க! என்னை ஏன் கேட்கறீங்க. கார்த்திக் தானே சொன்னான்”. 

“அது.. அது. கார்த்திக்கும் உங்களுக்கும் பிரச்சனை, அதான் பார்க்கிறதா வேண்டாமான்னு”, என்று பிரபு இழுக்க.

“எனக்கு அவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும்.. அதை எதுக்கு நீங்க கன்சிடர் பண்றீங்க.. கார்த்திக்காக உங்களுக்கு பண்ணனும்னு தோணினா பண்ணுங்க.. இல்லைன்னா விட்டுடுங்க”,

“கார்த்திக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்றது வேற விஷயம். இது அப்படி கிடையாது. நீங்க தானே அப்பாயின்ட் பண்ண போறீங்க.. அவன் சொன்னான்னு நான் கூட்டிட்டு வந்துட்டு, அப்புறம் வேண்டாம்னு சொன்னா நல்லா இருக்காது.. எனக்காக நான் சொல்லலை, அவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற ஒரு டாக்டரை நம்ம கூட்டிட்டு வந்துட்டு அப்புறம் போன்னு சொல்ல முடியாது. அதான்.”, 

அவன் சொல்வதில் இருந்த நியாயத்தை புரிந்தவள்..   “நாங்களே பேப்பர்ல நாளைக்கு காலையில டாக்டர்ஸ் வான்டட் குடுக்கலாம்னு இருந்தோம்”, என்றாள்.

“என் ஃபிரன்ட்டோட அப்பா கவர்மென்ட் மெடிக்கல் காலேஜ்ல டீன்னா இருந்து இப்போ தான் ரிடையர் ஆனார். அவர் கிட்ட பேசட்டுமா”, என்றான்.

“பேசுங்களேன்! எனக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லை! எனக்கு தேவை திறமையானவங்க! அதே சமயம் நேர்மையானவங்க! அதுல எந்த காம்ப்ரமைசும் பண்ண மாட்டேன்”,

“என்ன எல்லோரும் சாலரியா குடுக்கறாங்களோ, நான் அதை விட அதிகமா குடுக்கறேன். எனக்கு தேவை திறமை, நேர்மை, அதைவிட பேஷன்ட்ஸ் அப்ரோச் பண்ற மாதிரி இருக்கனும். கனிவா பேசனும், எரிஞ்சு எரிஞ்சு விழக் கூடாது, இப்படி சில கண்டிஷன்ஸ் மட்டும் தான்”, 

“எந்த டாக்டரும் எரிஞ்சு விழனும்னு கட்டாயமா வெச்சிருக்க மாட்டாங்க.. வேலை பளு, ஓய்வில்லாம தொடர்ந்து நோயாளிகளை பார்க்கும் போது. சில சமயம் அப்படி ஆகறது உண்டு, அவ்வளவு தான்!”, என்று தன் இனத்தை விட்டு கொடுக்காமல் பேசினான் பிரபு.

“உங்களுக்கு உங்க ப்ரச்சனைங்க பிரபு. அதை நான் தப்புன்னு சொல்லலை! ஆனா ஒரு சாதாரண மனிதனோட பார்வையில இருந்து நான் பேசறேன்.. எனக்கு எப்பவும் இதுவரைக்கும் வீ ஐ பீ ட்ரீட்மென்ட் தான். ஆனா நான் என்னை வெச்சு அடுததவங்களை பார்க்க முடியாது.”,

“என்னோட ஹாஸ்பிடலுக்கு வர்ற ஆளுங்க எப்படி திரும்ப போனாலும். உதாசீனத்தாள வர்ற வருத்தத்தை சுமந்து போகக் கூடாது. இது நிஜமான ஒரு ப்ரீ ஹாஸ்பிடலா இருக்கனும்”,

“எனக்கு இதுல லாபமே அவசியமில்லை”, என்றாள் தெளிவாக..         

“சொல்றது ஈசி. ஆனா செயல் படுத்தறது ரொம்ப கஷ்டம். ஹாஸ்பிடல்னா சாலரி மட்டும் கிடையாது.. அதை மெயின்டைன் பண்றதுக்கே நிறைய செலவாகும்.. எல்லாமே ஃப்ரீனா கண்டிப்பா முடியாது. மே பீ உங்களுக்கு மெடிக்கல் ஃபில்டை ஒரு பார்வையாளரா தான் தெரியும். இன் அண்ட் அவுட் தெரியாது”,  

“எஸ், நீங்க சொல்றது சரிதான். ஆனா எத்தனையோ அநியாயமான விஷயங்கள்னால நாம கஷ்டப்படும் போது நியாயமான விஷயத்துக்கு கஷ்டப்பட்டா என்ன.. யோசிச்சு பாருங்க! ஒரு கோடி ரூபாய்க்கும் மேல செலவு பண்ணி ஒரு யு ஜி யும் பீ ஜி யும் முடிக்கிற டாக்டர் கிட்ட நீ இலவசமா சிகிச்சை பண்ணுன்னு சொல்றது அபத்தம். அவங்க போட்ட பணத்தை எடுக்கனும்னு தான் நினைப்பாங்க”,          

“அதனால நான் இங்க கண்டிப்பா கவர்மென்ட் காலஜ்ல என்ன பீஸ்ஸோ அதுக்கு மேல ஒரு பைசா கூட வாங்க மாட்டேன். கண்டிப்பா மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே செலக்ஷன்.. நாம ஒரு விஷயத்தை நியாயமா செய்யும் போது தான் அடுத்தவங்க கிட்ட அதை எதிர்பார்க்க முடியும்”,

“இப்படி படிச்சு வர்ற டாக்டர்ஸ்லயும்  ஒரு சில பேர் அப்படி முழுசும் சேவை மனப்பான்மையோட இருந்தாலே பெரிய விஷயம்.  அதை நான் இப்போதைக்கு செஞ்சாலே போதும்”, என்றாள்.

“ப்ராக்டிகலா இது ரொம்ப கஷ்டம்! இதையெல்லாம் செய்யறதுக்கு பணம் வேண்டாமா..?”,

“இப்போதைக்கு அது எனக்கு பிரச்சனையில்லை! ஆனா பிரச்சனை வரும்னு நான் பீல் பண்ற பட்ச்ச்துல.. வேற ஏதாவது லாபம் வர்ற தொழிலா ஆரம்பிச்சு அதை இதுல போடறேன்.”,

பிரபு ஏதோ பேச வரவும். தடுத்து பேசியவள். “இப்படி எல்லாம் பேசறவங்களை பைத்தியக்காரங்க பொழைக்க தெரியாதவங்க இப்படி பல பெயர்னால சொல்ல படுவோம் தான்..”,

“இருந்தாலும் எடுத்த உடனே எந்த வேலையும் முடியாதுன்னு சொல்ல கூடாது.. நம்மளால முடிஞ்சவரைக்கும் ஒரு முயற்சியாவது பண்ணி பார்க்கனும் இல்லையா.”, “நீங்க சொல்ற மாதிரி நடைமுறை சிக்கல்கள் இருக்கு.. ஆனா என்னோடது hard and fast rules கிடையாது. நான் இப்படிதான்னு நானும் இருக்கமாட்டேன்.. அடுத்தவங்களையும் இருக்க சொல்ல மாட்டேன்.. அடுத்தவங்களை பாதிக்காத சில மீறல்கள் வரும்போது பார்த்துக்கலாம்”, என்றாள்.

பிரபு அவளின் பேச்சுக்களினால் வாயடைத்து போய் நின்றான். அவனுடைய சக்தியை பற்றிய கணிப்பு.. ஒரு பணக்கார, மரியாதை தெரியாத, எதையும் யோசிக்காமல் பேசுகிற பெண்ணாகவே சித்தரித்து இருந்தான்.

அன்று ஏர்போர்டில் அவன் கண்ட சக்தி அப்படி. கார்த்திக்கிடம், நீ எனக்கு மாப்பிள்ளையா வர்றியா என்று கேட்டது.. அவன் மேல் காபியை ஊற்றியது.. இந்த மாதிரி செயல்கள் அவளை அப்படித்தான் உருவகப்படுத்தி இருந்தன..

அது மட்டுமில்லாமல் சக்தி காபியை ஊற்றிய போது எப்படி இப்படி கார்த்திக் வாங்கிக்கொண்டு நிற்கிறான். ஒரு அப்பு விடவேண்டும் போல ஏன் தோன்றவில்லை.. எதற்கு இவன் இப்படி பின்னால் கெஞ்சிக்கொண்டு போகிறான் என்பது போல தான் அப்போது தோன்றியது.

இப்படிப்பட்ட பெண்ணிடம் கெஞ்சிக்கொண்டு நிற்பதில் தப்பில்லை என்று இப்போது தோன்றியது.

கார்த்திக் அவனிடம் இரவு பேசிய போது கூட. இது எதுக்குடா நமக்கு இந்த தொல்லை என்பது மாதிரி தான் இருந்தான். கார்திக்கிற்காக வந்தான்.. இப்போது சக்தியின் பேச்சு அவனை மிகவும் ஆகர்ஷித்தது. அவளை வியந்து பார்த்தான்.

“எதுக்குடா இப்படி ஒரு பேச்சுன்னு பார்க்கறீங்களா. நீங்க இப்போதான் உங்க வேலையை ஆரம்பிக்க போறீங்க.. கண்டிப்பா இலவச சேவை செய்யுங்கன்னு சொல்ல மாட்டேன். ஆனா குடுக்க வசதியில்லாத மனுஷங்க கிட்ட கொஞ்சம் கருணை காட்டலாமேன்னு தான்”, என்றாள்.

இவ்வளவு நேரமாக சக்தி பேசியதை வாய் திறந்து கேட்டிருந்த சிவா. “சூப்பர்ங்க சக்தி”, என்று மெதுவாக கைதட்டினான். “நீங்க அரசியல்ல நுழையலாம். இப்படி சிந்தனை இருக்குறவங்க நம்ம நாட்டுக்கு தேவை.”, என்றான் அவனின் வாய் முகூர்த்தம் பலிக்க போவது தெரியாமல்.

பிரபு வேறு டாக்டர்சை இங்கே  கூப்பிட்டுக்கொண்டு வந்து விடுவதே தேவையில்லாத வேலை போல நினைத்தவன். இப்போது சக்தியை பார்த்து, “எனக்கு உங்க ஹாஸ்பிடல்ல வேலை செய்ய ஒரு வாய்ப்பு குடுப்பீங்களா மேடம்! இந்த மாதிரி சிந்தனையுள்ளவங்க கீழ வேலை பார்க்க ஆர்வமா இருக்கேன்”, என்றான்.

“நிச்சயமா, அப்படின்னு சொல்ல தான் ஆசை! ஆனா நான் சில பேசிக் கிரைட்டீரியா வெச்சிருக்கேன்.. ரொம்ப பேசிக்ஸ்.. அதை ஃபுல்பில் பண்ணுனிங்கன்னா நாளைக்கே கூட வந்துடுங்க.. இங்க எங்களுக்கு ஒரு டாக்டர் கூட இருந்தா பரவாயில்லைதான், ஏன்னா நீங்க சொல்ற மாதிரி எனக்கு இன் அண்ட் அவுட் தெரியாது”, என்றாள்.    

“என்ன பேசிக்ஸ் அது?”,

செல்வத்தை இன்டெர் காமில் அழைத்தவள். அவன் வந்ததும், “சார்! நம்ம கிட்ட ஜாயின் பண்ண போறார். நம்ம ரிக்குவயர்மென்ட்ஸ் சொல்லுங்க”, என்றாள். 

இருவரும் பேசிக்கொள்வதை வேடிக்கை தான் பார்த்தாள்.. தலையிடவில்லை. “சார்! இப்போவே கூட சேரட்டும்”, என்றான் செல்வம்.

“நீங்க சொன்ன டாக்டர்ஸ் எங்க இருக்காங்க!”, என்றாள்.

“சென்னை”,

“எப்போ பேசறீங்க”,

“ஃபோன்ல மரியாதையா இருக்காது! நேர்ல போகனும்! நான் அதை என்னன்னு பார்க்கிறேன்”, என்றான்.

“ஓகே சக்தி! நாங்க கிளம்பறோம்!”, என்று எழுந்த சிவா.. “என்னோட மேரேஜ்க்கு எனக்கு ஒரு ட்ரீட் கொடுக்கனும்னு ஆசை, நீங்க வரனும்”.

“இப்போ முடியாதே! ரொம்ப வேலை! ட்ரீட்ன்னு வந்துட்டு அங்கயும் ஃபோனை பிடிச்சிட்டு பேசிட்டே இருக்குறதுல எனக்கு இஷ்டமில்லை. இந்த திறப்பு விழா முடியறவரைக்கும் நான் பிசி, இன்னும் ஒரு வாரம் இருக்கு”,

“ஒரு வாரம் தானே, ஒன்னும் பிரச்சனையில்லை! நாம அதுக்கப்புறம் போகலாம்! ஆனா அப்போ எந்த காரணமும் சொல்ல கூடாது!”, என்று சொல்லியபடி சிவாவும் பிரபுவும் விடை பெற்றனர்.

விடை பெரும் முன், “நல்ல சிந்தனைகள் உங்களுக்கு”, என்று பிரபு புகழ..

“அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.. நிறைய பெண்களுக்கு இது இருக்கறது தான்.. என்ன அவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலை! எனக்கு கிடைச்சு இருக்கு! அவ்வளவு தான்!”, என்று இன்முகத்தோடு விடை கொடுத்தாள்.

“beautiful smile”, என்று சொல்ல வேண்டும் போல பிரபுவிற்கு தோன்றியது.. சாதாரண நேரமாக இருந்தால் நிச்சயமாக சொல்லியிருப்பான். இப்போது அவளுக்கு கீழே வேலை பார்க்க போகிறான் என்பதால் சொல்லாமல் வெளியே வந்தான். 

பிரபுவின் நினைவு முழுக்க சக்தியிருந்தாள். நிஜமாகவே அவள் சொல்லும் பெண் மட்டுமல்ல செயலிலும் காட்டுவாள் என்றே தோன்றியது.

அவன் அந்த சிந்தனையோடு இருக்கும் போதே.. கார்த்திக் அவனை அழைத்தான்.

“சொல்லு கார்த்திக்..”,

“நீ எதுக்கு சக்தியை பார்த்த.”,

“சக்தியை நான் பார்த்தது உனக்கு எப்படி தெரியும்?”,

“நீ எத்தனை மணிக்கு உள்ள போன. இப்போ எத்தனை மணிக்கு வெளிய வந்த எல்லாம் தெரியும்.. சக்தியோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரிய வரும். அதில்ல இப்போ பேச்சு! அவங்களை எதுக்கு பார்த்த.”,

“நீ சொன்ன வேலையை செய்யறதுக்கு முன்னால அவங்க கிட்ட கேட்க வேண்டாமா?”,

“சக்தி கிட்ட எதுக்கு கேட்கணும்.”,

“உனக்கும் அவங்களுக்கும் ப்ரச்சனைன்னு எனக்கு தெரியும்.. அப்புறம் பார்க்காம..”,

“எனக்கும் அவங்களுக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும்! அதுக்கு உனக்கு என்ன வந்தது! செய்ய முடியும்னா முடியும்னு சொல்லு! முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லு!”, என்றான் சண்டை பிடிப்பவன் போல்..

“புரியாம பேசாத! நான் டாக்டரை கூட்டிட்டு வந்த பிறகு சக்தி வேண்டாம்னு சொல்லிட்டா. அவருக்கு மரியாதையில்லாம போயிடாது.”,

“அப்படி எல்லாம் சக்தி பண்ண மாட்டாங்க”,

“பண்ண மாட்டாங்கன்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும். நான் பார்க்கிறப்போல்லாம் உன்கூட சண்டை போட்டாங்க! அப்புறம் எப்படி நம்பி வேலையை செய்யறது!”,

“விடு, சக்தி என்ன சொன்னா.”,

“சரின்னு சொல்லிட்டாங்க! நானும் நாளையில இருந்து ஜாயின் பண்றேன்”,

“நீயா? நான் சொன்னபோ அங்கல்லாம் வேலை பார்க்க மாட்டேன்னு சொன்ன.. எவ்வளவு நேரமா உன்னை கன்வின்ஸ் பண்ணினேன்.. நீ ஒத்துக்கவேயில்லையே”, என்று குறை பட்டான். 

“அப்போ எனக்கு சக்தியை பெர்சனலா தெரியாதே! இப்போ எனக்கு அவங்க கிட்ட வேலை பார்க்கனும் போல இருக்கு……. such an admirable personality….”, என்றான் உண்மையாக.

இது என்னடா புது வம்பு.. பெர்சனலா தெரியுமா.. என்று நொந்து கொண்டான் கார்த்திக்..

“என்னடா அப்படி ஒரு மணி நேரத்துல பெர்சனலா தெரியும்”, என்றான் கார்த்திக். அவன் குரலில் அப்பட்டமான பொறாமை.

“ம்! எவ்வளவு பெர்சனலாவா. நல்ல சிந்தனைகள் இருக்கு! அதை செயல்லையும் காட்டனும்னு பிரியபடறாங்க! அது எனக்கு பிடிச்சு இருக்கு. அதனால அவங்களோட வேலை செய்ய பிரியப்படறேன்”,

“இதுல என்ன பெர்சனல்?”, 

“அதுவா கார்த்திக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும்! நீ அதுல தலையிடாத. உன் வேலையை மட்டும் பார்ன்னு சொன்னாங்க! அந்தளவுக்கு பெர்சனலா தெரியும்!”, என்றான் பிரபு கார்த்திக்கின் மனம் புரிந்தவனாக.

கார்த்திக்கிற்கு அவனையறியாமல் பெருமூச்சு கிளம்பியது. 

கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா.

Advertisement