Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு :

திக்கு தெரியாத காட்டில் – உனை                                                                                                                             தேடித் தேடி இளைத்தேனே

                               ( பாரதி )

கால் போன போக்கில் நடந்தான் கார்த்திக்…….. எவ்வளவு நேரம் என்றே தெரியாது. கால்கள் துவள ஆரம்பிக்கும் போது கண்ணில் ஒரு பஸ் ஸ்டாப் தெரிய, அங்கே சேர் போடப்பட்டிருக்க அங்கே அமர்ந்தான். இலக்கின்றி வெறித்து அமர்ந்திருந்தான்.

கழுத்து விண் விண் என்று வலித்தது. சற்று டென்சன் ஆனாலும் வலித்தது. போன மாதம் கூட டாக்டரிடம் கம்ப்ளீட் செக் அப் செய்தான். ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால் வலி விடுவேனா என்றது.

மனம் மட்டும் வலியை தாங்க வேண்டும் என்பது என்ன? உன் உடலும் தாங்கட்டும் என்று கடவுள் நினைத்து விட்டாரா என்ன ?

சக்தியின் வார்த்தைகள் அவனை சாட்டையாய் சுழற்றி அடித்தன.

“நீ மாப்பிள்ளையா வர்றியா கார்த்திக்……”,

“எப்படி ஏமாற்றி விட்டு வந்தோம், இந்த சில மாதங்களாக பார்க்கக் கூட இல்லை. என்னைத் தூக்கி போடாமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்”,

“என்னை நடுத்தெருவில் நிற்க வைப்பாளாம்……”, அவனையறியாமல் ஒரு கசந்த முறுவல் தோன்றியது.

“அவளால் முடியுமா என்ன?”,

முடியும், முடியாது என்பது காலத்தின் கையில்.

சக்தி, சக்தி, சக்தி, சர்வம் சக்தி மயம்…….. அவன் எண்ணத்துள்……..

நிறைய தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பிக்கவும் தான் உணர்விற்கு வந்தான். எதிரில் ஒரு கண்ணாடி கடை தெரிய அங்கே போய் ஒரு கறுப்புக் கண்ணாடியை வாங்கி முதலில் அணிந்தான்.

கண்ணாடியை கடைக்காரன் கொடுத்தாலும் அவனை ஒரு மாதிரி பார்ப்பது போல தோன்ற அங்கே இருந்த கண்ணாடியில் தன் தோற்றத்தை பார்த்தான்.

அவன் ஒரு வெள்ளை சட்டை அணிந்திருக்க அதில் திட்டு திட்டாய் காபியின் கறைகள். முகம் பிசுபிசுவென்று இருந்தது. பரவாயில்லை காபி மிதமான சூட்டில் இருந்ததால் கார்த்திக்கின் முகம் தப்பித்தது.

ஒரு பக்கம் மனம் சக்தியிடம் பேசு…. என்று சொன்னது….. இன்னொரு பக்கம் இல்லையென்றான பிறகு அவளை விட்டுவிடு, உன்னை நிரூபிக்க முயற்சிக்காதே…. அவளின் மனம் வேறு புறம் திரும்பட்டும். அவள் நன்றாக இருக்கட்டும். நீ அவளுக்கு நம்பிக்கை துரோகியாகவே இருந்து விடு என்று சொல்ல…

நிலை பிறழ்ந்த மனதை நிலைபடுத்தினான்.

“நம்புவதா? உன்னையா?”, என்ற சக்தியின் வார்த்தைகள் அவனுள் ஓடிக்கொண்டே இருந்தன. மனம் இறுகியது.

அது மட்டுமா, “திருடன்……”, இது சக்திக்கு தெரிந்தது……..

தெரியாதது, “நான் கொலைகாரன்…….”,

அழ வேண்டும் போல இருந்தது. வலி அதிகரித்தது. ஆனால் ஆண்கள் அழக்கூடாது என்று அவனுக்கு அவனே விதித்துக் கொண்டவன்……

“இது நான் தளரும் சமயம் அல்ல…”, பலமுறை சொன்னான்.

“கலங்காதே, துணிந்து நில்….. இது மாயா லோகம்…… மாயை எல்லாம் மாயை…… பெண்ணும் மாயை……. சக்தியும் மாயை……. உன்னை கொண்டு போக விடாதே….”,

தன் தந்தையின் கடைசி காலங்களை கண் முன் கொண்டு வந்தான்.  அம்மாவை நினைத்தான். சக்தியை புறம் தள்ளினான். அவன் முதல் முதலில் பார்த்த அவளின் முகம் கண் முன் நிழலாட……. அதை விட்டு இப்போது இருக்கும் சக்தியின் முகத்தை கொண்டு வந்தான்.

“மேம்”, என்று உச்சரித்தான். வலி சற்று குறைந்தது.

புறப்பட்டு விட்டான்.

நேரே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்தான். அவன் எப்போதும் பெங்களூரில் துணி எடுக்கும் ஷோரூமிற்கு போன் செய்து அவனுக்கான துணிகளை வரவழைத்தான்.

அணிந்தான்……. தோற்றம் இப்போது  திருப்தியாக இருக்க…..

பிறகு தான் தொலைபேசியை எடுத்து பார்த்தான். பார்த்தால் வாசுகியிடமிருந்து நிறைய அழைப்புகள். அவனுடைய சினிமா வேலைகளை பார்க்கும் மேனேஜரிடமிருந்து நிறைய அழைப்புகள்.

வாசுகிக்கு முதலில் அழைத்தான், “சொல்லுங்கம்மா”,

“எங்கப்பா போன! ஏதோ அவசர வேலையா போனேன்னு இவங்க மூணு பேரும் சொல்றாங்க…. எல்லாம் ஆளுக்கு ஒரு மூலையில உட்கார்ந்து இருக்காங்க.. ஏதாவது பிரச்சனையா”,

“இல்லைம்மா ஒரு சின்ன வேலை…… முடிஞ்சிடுச்சு….. வந்துடறேன்”

பிறகு மேனேஜருக்கு அழைக்க……. “சார்! இன்னைக்கு நம்ம படம் ரிலீஸ்….. காலையில இருந்து நீங்க கூப்பிடுவீங்கன்னு பார்த்தேன். இப்போ தான் முதல் காட்சி…… சென்னையில இருந்தா, தியேட்டர்ல படம் பார்த்தா ரசிகர்களோட கருத்தை தெரிஞ்சிக்கலாம்”,

“இங்க கொஞ்சம் அவசர வேலை! என்னால வரமுடியாது! நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க”, என்றவன் அருகில் இருந்த கோவிலுக்கு சென்று வாசலில் நின்றான்..

“எங்கப்பாவோட இந்த ப்ரொடக்ஷன் கம்பெனி நல்லா வரனும். கடவுளே! படம் ஹிட் ஆகனும்”, என்று உளமார வேண்டிக்கொண்டான்.

அவனோடு சுத்தும் ஆட்களுக்கு அழைத்தவன், “டேய்! படம் ரீலீஸ் கலக்கனும்டா”, என்றான்.

நேற்றே அவர்களிடம் சொல்லி அவர்களை சென்னைக்கு அனுப்பியிருந்தான். இன்று காலையில் நடந்த விஷயங்களினால் அது ஞாபகத்தில் இல்லை.

இப்போது கார்த்திக் பேக் டு ஃபார்ம். அழுது வடிந்து கொண்டு வாழ்க்கை முடிந்தது போல உட்கார்ந்து இருந்தால் அது கார்த்திக் அல்லவே.

அவன் போராட்டங்கள் அவனோடு……. அதுவும் வெளியே தெரியாது.

கிருஷ்ணகிரி திரும்ப வேண்டும்…….. நேரே ஒரு கார் ஷோ ரூம் சென்றவன் பிடித்த காரை எடுத்தான்.  ப்ளாக் கலர் jaguar car கிட்ட தட்ட ஒன்றரை கோடி, இவன் போன் செய்த பத்து நிமிஷத்தில் பணம் வந்தது.

“சர், ரெஜிஸ்டரேஷன்”, என்று இழுத்த பணியாளரிடம்….

“என் சொந்த ரிஸ்க்ல எடுத்துட்டு போறேன், எல்லா ப்ரோசீஜரும் கிருஷ்ணகிரி வந்து பண்ணுங்க”, என்று சொன்னவன் அடுத்த பத்து நிமிடங்களில் ஹைவேசில் இருந்தான்.

கார் பறந்தது கிருஷ்ணகிரியை நோக்கி…… நேரே வீடு தான் சென்றான்.

இவனை பார்த்ததும் பிரபுவிற்கு ஆச்சர்யம், இவனா ஒரு பெண்ணிடம் காபி அபிஷேகம் வாங்கினான் என்று.

அவன் முகத்தில் இருந்து எதுவும் தெரியவில்லை என்பதை விட எதுவும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்பது மாதிரி இருந்தது அவனின் முகம்.

பிரபு விடம் கார் சாவியை நீட்டியவன், “இது உனக்கு”, என்றான்.

காரின் சாவி என்பது பிரபுவிற்கு புரிந்தது…. “எதுக்கு?”, என்றான்.

“உனக்கு கார் வேண்டாமா”,

“அது தான் வீட்ல ஒரு கார் இருக்குதே”, என்றான். அது கார்த்திக் வீட்டிற்கு வருவதற்கு முன் அவர்கள் உபயோகித்து கொண்டிருந்த கார்.

“என்ன அந்த பத்து வருஷத்திற்கு முன்னாடி வாங்கின காரா? அதெல்லாம் வேண்டாம் இதை யூஸ் பண்ணு”, என்றான்.

என்ன கார் என்று பிரபு பார்க்க…… கறுப்பு jaquar நிற்க…… “இவ்வளவு விலையா”, என்று பிரபு தயங்கினான்.

“நீ இது தான் யூஸ் பண்ற”, என்று பேச்சு முடிந்தது என்பது போல வெளியே செல்ல கிளம்ப……

“கார்த்திக், ஏர்போர்ட்ல….”, என்று பிரபு ஆரம்பிக்கும் போதே…

“அதை மறந்துடு!”, என்று ஒரே வார்த்தையில் சொல்லி சென்று விட்டான் கார்த்திக்.  பிரபுவிற்கு கவலையாக இருந்தது.

அந்த பெண் காலையில் தான் அவ்வளவு பேசியது…….. இவன் அசால்டாக எதுவுமே நடக்காதது போல கோடிக்கும் மேல் விலை இருக்கும் காரை வாங்கிக்கொண்டு வந்து நிறுத்துகிறான். என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

மெதுவாக அத்தையிடம், தாத்தாவிடம் என்று பேச்சுக் கொடுக்க….. அவன் குவாரி கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறான். கிரானைட்ஸ் எக்ஸ்போர்ட் செய்கிறான் என்பதுவரை தான் தெரிந்தது.

அதை சக்தியின் வீட்டினரிடம் இருந்து எப்படி வாங்கினான் என்பது தெரியவில்லை. இப்படி கோடியை நிமிஷத்தில் செலவு செய்யும் அளவுக்கு அந்த தொழில் அவ்வளவு லாபம் மிக்கதா என்றும் தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் அவன் திருடிக்கொண்டு வந்துவிட்டான் என்ற சக்தியின் வார்த்தைகளை கேட்ட பிறகு அந்த காரை உபயோகிக்க பிடிக்கவில்லை.

இதை யாரிடம் சொல்வது! யாரிடமும் சொல்ல முடியாது! பாதிக்கப்பட்டவர்களே அவனை ஒரு பற்றி ஒரு வார்த்தை வெளியே தெரிய விட்டிருக்கவில்லை என்னும் போது அவன் ஆராய்ந்து என்ன பயன்.

மெதுவாக கார்த்திக்கிடம் பேசி விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

யார் சொல் பேச்சையும் கேட்கும் நிலையை கார்த்திக் எப்போதோ தாண்டி விட்டான் என்று புரியவில்லை.

அவனால் இனி திரும்பியும் பார்க்க முடியாது.

காலையில் அடிவாங்கியதில் இருந்து வைஷ்ணவி யாரிடமும் பேசவில்லை. நடந்தது எதுவும் வாசுகிக்கு தெரியாது.

பிரபுவும் சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை.

சுமித்ராவும் அமைதியாக இருந்தாள். வெளியில் எதுவும் சுமித்ரா காட்டிக்கொள்ளாவிட்டாலும் மனதில் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.

அவள் முதலில் கார்த்திக்கிடம் பேசுவோம் தெளிவு படுத்திக் கொள்வோம் என்று நினைத்தாள். ஆனால் என்ன தெளிவு படுத்துவது என்று புரியவில்லை, “என்னை திருமணம் செய்வாயா”, என்று கேட்பதா?

அதைத்தானே சக்தியும் கேட்டாள்.

“செய்வேன் என்று சொல்லி விட்டால், நீ செய்து கொள்வாயா”, என்று மனம் கேட்டது. ஆம்! இன்றைய சக்தியின் செய்கைகள் அவளை முற்றிலும் கார்த்திக்கிடம் இருந்து விலக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

சக்தி கார்த்திக்கின் முகத்தில் காபியை ஊற்றிய போது சில நொடிகள் எல்லோரும் அதிர்ந்து நின்றனர், அதுவும் கார்த்திக் முகத்தில் எதையும் காட்டாமல் அதை துடைத்தான்.

அதை தொடர்ந்து பிரபு இடையில் போக…… “தூர போ நீ! எனக்கும் இவனுக்கும் நடுவுல யாரும் கிடையாது!”, என்று சக்தி சொன்ன போது கார்த்திக்கின் கண்களில் தோன்றி மறைந்த சந்தோஷம்……. கார்த்திக் தனக்கு வேண்டாம் என்று உடனடியாக சுமித்ராவை முடிவு எடுக்க வைத்தது.

திருமணம் செய்த பிறகு, “என் புருஷன் தான்! எனக்கு மட்டும் தான்!”, என்று கத்திக் கொண்டா திரிய முடியும். நினைத்த போது சுமித்ரா முகத்தில் ஒரு புன்னகை. ஆச்சர்யமாக சுமித்ரா இப்படி முடிவு எடுத்த பிறகு அவளுக்கு அவளே உற்சாகமாக உணர்ந்தாள்.

இத்தனை நாட்கள் இருந்த ஒரு மனதை அழுத்தும் பாரம் இல்லை.

அதுவும் காலையில் பிரபு வந்தவுடனே, “இவன் எப்பவும் இப்படி தான் பிரபு எப்போ போறான், எங்க போறான், எப்ப வருவான், எதுவும் சொல்ல முடியறது இல்லை. கேட்டா சில சமயம் தன்மையா பதில் சொல்றான்…….. சில சமயம் பேசறது கூட இல்லை”,

“நீ வர்றதுக்காக தான் காத்திருந்தேன்……. சீக்கிரம் அவன் கல்யாணம் முடிக்கனும். ரெண்டு கல்யாணத்தையும் சேர்ந்து வைக்கலாமா? இல்லை தனித் தனியா பண்ணலாமா?”, என்று வாசுகி உடனேயே கேட்டது சில முடிவுகளை உடனடியாக சுமித்ராவை எடுக்க வைத்தது.

பிரபு வேறு வாசுகி திருமணத்தை பற்றி பேசியதும் அவளுடன் பேச வர….. அவள் காது கொடுக்கவில்லை. பிரபு எப்படியும் வேண்டாம் என்று சொல்லுவான் என்பது தான் அவளின் அனுமானம். ஆனால் இனி யார் பேச்சையும் கேட்பதாய் இல்லை, முடிவுகளை அவளே எடுக்க நினைத்தாள்.

பிரபு சொல்லி இவள் செய்தாள் என்றாள் வாசுகிக்கு இவள் மேலும் வருத்தம் வரும் பிரபு மேலும் வருத்தம் வரும்.

என்ன இருந்தாலும் அப்பா அம்மாவின் குறை சற்றும் தெரியாமல் வளர்த்த அத்தை, அவருக்கு அதிக சங்கடத்தை கொடுக்க விரும்பவில்லை.

“நான் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கனும்! வெளில போயிட்டு வர்றேன் அத்தை!”, என்று கிளம்பினாள்.

அப்போது தான் பிரபு அவனின் ரூமின் உள் சென்று இருந்தான்.

வைஷ்ணவி, “தனியாவாப் போற! நானும் வர்றேன்!”, என்று வந்து நிற்க……..

“என்னை கொஞ்சம் தனியாத் தான் விடேன்”, என்று எரிந்து விழுந்தாள், வீடே திரும்பி பார்த்தது. வாசுகி வந்தார், பத்ரிநாத் வந்தார், பிரபுவும் வந்தான்.

இப்படி என்றுமே சுமித்ரா பேசியதே இல்லை. வைஷ்ணவியின் கண்களில் நீர் தளும்ப….

என்ன? என்ன? என்று எல்லோரும் கேட்க……. “ஒண்ணுமில்லை! எனக்கு கடைக்கு போகணும்! இவ வர்றேன்னு சொல்றா! நான் வேண்டாம்னு சொல்றேன்!”, என்றாள் சுமித்ரா.

“ஏன் சுமி மா”, என்று வாசுகி கேட்கவும்…….

“எனக்கு தனியாத் தான் அத்தை போகணும்”, என்றாள் பிடிவாதமாக.

“என்ன சுமித்ரா இது!”, என்று பத்ரிநாத் அதட்ட முகத்தை திருப்பினாள்.

“விடுங்கத்தை அவ என்ன சின்ன பொண்ணா! கடைக்கு தானே போறா! போகட்டும்!”, என்றான் பிரபு.

சுமித்ரா அவளின் ஸ்கூட்டியில் ஏறி அவள் நினைத்த இடத்திற்கு வந்துவிட்டாள். ஆனால் அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவள் வந்தது சிவாவின் வீடு….. ஓரிருமுறை அந்தப் பக்கம் போகும்போது அவனின் வீட்டைப் பார்த்து இருக்கிறாள். ஆனால் உள்ளே யார் இருப்பார். எப்படி சிவாவை பார்ப்பது, பார்த்து என்ன சொல்வது, ஒன்றும் தெரியவில்லை.

அதுவுமில்லாமல் சிவா இந்த நேரத்தில் வீட்டில் இருப்பானா என்றும் தெரியாது.

ரோடில் நிற்கவும் முடியாது. வீடுகள் மட்டும் இருக்கும் இடமல்ல அது. வீடுகள் கடைகள் என்று இருக்கும் சற்று மெய்னான இடம். அவள் தடுமாறி நிற்கும் போதே அந்த ரோட்டில் ஏதோ வேலையாக வந்த மாரி இவளைப் பார்த்ததும் உடனே கார்த்திக்கிற்கு அழைத்து தகவல் சொன்னான்.

“நம்ம பாப்பா இங்க நிக்குதுங்களே முதலாளி”, என்று…..

“நம்ம பாப்பா”, என்றதும் சக்தி ஞாபகம் தான் கார்த்திக்கிற்கு வந்தது.

“எங்க நிக்கறாங்க?”,

சிவாவின் கிரானைட்ஸ் பெயரை சொன்னவன், “அவங்க வீட்டு முன்னாடி”, என்றான்.

சிவா வீட்டுக்கு முன்னாடி எதுக்கு இவங்க நிக்கறாங்க என்று யோசித்தவன்……

“எங்க நிக்கறாங்க?”,

“ரோட்ல ஒரு ஓரமா வண்டியை  பிடிச்சிட்டு நிக்குதுங்க…..”,

வண்டியா? சக்தி டூ வீலர் ஒட்டவே மாட்டாள்…… கார்த்திக் அவளை முதன் முதலில் பார்த்தது வண்டி இடித்த போது தானே. அதன் பின் அவளை வண்டி எடுக்க விட்டதே இல்லை.

“எந்த பாப்பா சரியா சொல்லு!”, என்று எரிந்து விழுந்தான்.

“நம்ம சுமி பாப்பா!”, என்று அவன் சொல்லவும்….. யோசனையான கார்த்திக்……

“சும்மா பேச்சு குடுத்துட்டு அங்கேயே நில்லு….. கொஞ்ச நேரத்துல அங்க ஆள் வருவாங்க! தனியா விட்டுட்டுப் போகாத! அவளையும் போக விடாத!”, என்றான்.

அவனிடம் சொன்னவன், அடுத்த நொடி சிவாவின் நம்பரை அழுத்தினான். கார்த்திக்கின் நம்பரை பார்த்ததும் சிவாவிற்கு குழப்பம் எடுப்பதா வேண்டாமா என்று.

அன்று சுமித்ராவையும் கார்திக்கையும் பார்த்து வந்ததில் இருந்து அவன் கார்த்திக்கை பல இடங்களில் சந்தித்து விட்டாலும் பேசவில்லை….. ஒரு கோபத்தில் சக்தியிடமும் பேசவில்லை.

அதனால் நடந்த பிரச்சனைகள் அவனுக்கு தெரியாது. அவனுக்கு தெரிந்தது எல்லாம் சக்தி வீட்டினர் காலேஜ் பக்கம் சென்று விட்டனர். கார்த்திக் குவாரி பொறுப்பை ஏற்றுக்கொண்டான் என்பதாகத் தான்.

தொழில் முறையில் எல்லோரும் அப்படித்தான் நினைத்து இருந்தனர். ஏனென்றால் வீரமணியோ தெய்வானையோ சக்தியோ கார்த்திக்கை பற்றி யாரிடமும் பேசவே இல்லை. அதனால் இப்படித் தான் தெரிந்தது.

இப்போது எதற்கு கார்த்திக் கூப்பிடுகிறான், எடுப்பதா? வேண்டாமா? என்று யோசித்தவன்… எடுத்தே விட்டான்.

“சிவா”,

“சிவா இருக்கீங்களா?”,

“ம்”,

“உங்க வீட்டு முன்னாடி சுமித்ரா நிக்கறா! எதுக்குன்னு எங்களுக்கு தெரியாது! உங்களுக்கு போய் பார்க்கனும்னா பாருங்க! இப்போதைக்கு நான் சொன்னேன்னு அவளுக்கு தெரிய வேண்டாம்!”, என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

சில நொடிகள் சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை….. ஆனால் அதிகம் யோசிக்கவில்லை, காரை எடுத்திருந்தான் பத்தாவது நிமிடம் அங்கே இருந்தான்.

சுமித்ரா மாரியிடம்…….. “நீ போ…… நான் கிளம்பறேன்”, என்று சொல்லியும் விடாமல் நின்று பேசிக்கொண்டு இருந்தான். “எதற்கு இவன் இப்படி ரம்பம் போடுகிறான், இவனும் போகமாட்டேன் என்கிறான் என்னையும் போகவிடமாடேன் என்கிறான்”.

கார்த்திக், “ஆள் வரும்வரை வேறு ஏதாவது பேசிக்கொண்டு இரு”, என்று சொல்ல….. மாரிக்கு கார்த்திக்கை விட்டு என்னத் தெரியும், அவன் கார்த்திக்கின் புகழ் பாடிக்கொண்டிருக்க……… சுமித்ரா எரிச்சலின் உச்சியில் இருந்தாள்.

சிவாவை பார்த்ததும், “அப்பாடா”, என்று இருந்தது சுமித்ராவிற்கு. மாரி உடனே கிளம்பிவிட்டான்.

“பயங்கர அறுவை, பரவாயில்லை வந்தீங்க”, என்றாள் சுமித்ரா சிவாவை பார்த்து.

அவன் கார்த்திக்கின் ஆள்…….. அவன் இருக்கச் சொல்லி தான் அங்கே இருந்திருப்பான் என்று சிவாவிற்கு புரியாதா என்ன?

ஆனால் சுமித்ராவின் இந்த இயல்பான பேச்சு சிவா எதிர்பாராதது.

எப்படி பதில் சொல்வது என்று கூட அவனுக்கு தெரியவில்லை.

“இங்க ஏன் நிக்கறீங்க”, என்றான் மரியாதை பன்மையில்.

“உங்களை பார்க்கத் தான் வந்தேன்!”,

“ஏன்? எதுக்கு?”, என்று அவன் கேட்கவும்…….

“அது……..”, என்று இழுத்தாள்……. வந்துவிட்டாள்….. எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

அவள் தடுமாறுவதை பார்த்து…….. “வீட்டுக்குள்ள வாங்கப் போகலாம்”, என்று அவன் அழைக்க……

“இல்லையில்லை! வேண்டாம்!”, என்று அவசரமாக மறுத்தாள்.

“இங்க ரோட்ல நின்னு பேச வேண்டாமே! வேற எங்கயாவது போவமா?”,

“இல்லை, ஜஸ்ட் ஒரு நிமிஷம் தான் பேசணும்!”, என்றாள்.

“சரி சொல்லுங்க!”,

“என்னை………. என்னை…….. பொண்ணு கேட்டு எங்க வீட்டுக்கு வர்றீங்களா”, என்றாள் தயங்கி தயங்கி.

சத்தியமாக இதை சிவா எதிர்பார்க்கவில்லை.

அவன் அப்படியே நின்றுவிட்டான்…. கற்பனையாக கூட அவள் இந்த மாதிரி தன் மேல் இஷ்டம் கொண்டு வந்திருப்பாளோ என்று அவன் வரும்போது கூட நினைக்கவில்லை…. இன்னொரு ஏமாற்றத்தை தாங்கும் சக்தி அவனுக்கு கிடையாது.

அவன் அப்படியே நிற்கவும், “நீங்க வரலையா?”, என்றாள் குரலில் ஏமாற்றத்தோடு.

மென்மையாக புன்னகைத்தவன், “நான் வேற யோசிச்சிட்டு இருந்தேன்….. இப்போவே வரலாமா இல்லை சாயந்தரமா வரலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன். எப்போ வரட்டும்”, என்றான்.

மலர்ந்த சுமித்ராவின் முகம்…… “நான் உங்ககிட்ட சொல்லிட்டேன்! நீங்க எப்போ வந்தாலும் எனக்கு சரிதான்”,

“வீட்ல கேட்டுட்டு சொல்றேன்! உன் நம்பர் குடு…..”, என்றான், மரியாதை பன்மை எல்லாம் மறைந்து இருந்தது.

அவள் கொடுத்துவிட்டு, “ஏன் இந்த முடிவுன்னு கேட்கலையா”, என்றாள்.

“அவசியமில்லை! நீ கிளம்பு! இங்க ரொம்ப நேரம் நின்னு பேசவேண்டாம்! இது பிசியான ஏரியா!”, என்றான்.

“பொண்ணு குடுக்கலைனா என்ன பண்ணுவீங்க?”,

“என்ன பண்ணனும்?”,

“எனக்கு உங்களை தான் கல்யாணம் பண்ணனும்”,

“கண்டிப்பா நடக்கும்”, என்று சொல்லிவிட்டாலும்…… மனதில் ஒரு பயம் கார்த்திக்கை நினைத்து ஓடியது.

ஏன்? என்ன பிரச்சனை? அப்படி சொன்னவள் ஏன் இப்படி தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

அவன் சுமித்ராவை உண்மையாக விரும்பியிருந்தான். விரும்பியிருந்தான் தான். கார்த்திக்கிற்கும் அவளுக்கும் திருமணம் என்ற ஒரு பேச்சு காதில் விழுந்ததில் இருந்து சுமித்ராவின் நினைப்பை ஒதுக்கியிருந்தான்.

என்ன தான் காதலியாக இருந்தாலும் அடுத்தவன் மனைவியை நோக்குவதை விட வேறு பாவம் உலகில் இல்லை.

சுமித்ரா விஷயம் சொல்லி விட்ட திருப்தியில் கிளம்பி விட்டாள்.  எப்படி கரக்டாக சிவா அங்கே வந்தான் என்று யோசிக்கவேயில்லை.

அவள் சென்ற உடனே கார்த்திக்கிற்கு அழைத்த சிவா……. “சுமித்ரா என்னை பொண்ணு கேட்டு வரச் சொன்னாங்க”, என்று சொல்லவும்……

ஒரு நிம்மதி பெருமூச்சு கார்த்திக்கிடமிருந்து எழுந்தது……… எப்படி உணர்ந்தான் என்று அவனாலேயே சொல்ல முடியவில்லை………. மனம் மிகவும் லேசானது.

அவனின் இத்தனை நாள் பிரச்சனை இப்படி ஒரு அரை நாளில் முடிவுக்கு வரும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை.

சிவா அவனின் பதிலுக்காக காத்திருப்பது புரிய, “எப்போ வர்றீங்க?”, என்றான் கார்த்திக்கும்….

இப்போது தான் சிவாவிற்கு சற்று உற்சாகம் வர ஆரம்பித்தது. “நிஜமாத் தான் சொல்றீங்களா”, என்றான்.

“உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்! வாங்க! உங்க அப்பா கிட்ட நான் பேசவா!”, என்றான் கார்த்திக்.

“நான் சொல்றேன்! முடியலைன்னா நீங்க பார்த்துக்கங்க! அப்பா கொஞ்சம் நம்ம ஆளுங்களான்னு பார்ப்பாரு! அது ஒண்ணு தான் பிரச்சனை!”, என்றான் உள்ளதை உள்ளபடி…..

“உங்க வீட்ல பிரச்சனை வருமா”, என்றும் கேட்டான்.

கார்த்திக்கிற்கு தன் அம்மாவின் ஞாபகமும், தாத்தாவின் ஞாபகமும் வந்தாலும்…. “எல்லாம் பார்த்துக்கலாம்! நான் இருக்கேன்! இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்!”, என்று கார்த்திக் வாக்குறுதி கொடுத்தான்.

காலையில் இருந்ததற்கு மனம் சற்று ஆசுவாசப்பட்டது.

என்ன இருந்தாலும் சக்தி தன் வாழ்க்கையில் வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்று தான் தோன்றியது…… அவளின் மனம் புரிந்தும் தான் ஒன்றும் செய்யவில்லை……    அவளின் அம்மா கேட்டும் தான் ஒன்றும் செய்யவில்லை.

அவன் சக்தியை மறுக்கவில்லை………, அவன் சக்தியை நிராகரித்து இருந்தான். இரண்டிற்கும் மிகுந்த வித்தியாசம் இருந்தது.

“சுமித்ரா என்னுடைய வாழ்க்கையில் இல்லை நீ வந்துவிடு என்ற சக்தியிடம் கேட்க முடியாது…….. பிறகு அதைவிட அவமானம் அவளுக்கு தான் தேடிக்கொடுக்க முடியாது”, என்று நினைந்தவனாக கண்களை மூடிக்கொண்டான்.

சக்திக்காக அவன் தேங்க முடியாதே அவன் ஓட வேண்டுமே.

ஞாபகம் வந்தவனாக நேரத்தை பார்த்தவன்……. உடனே மானேஜரை அழைத்து, “படம் எப்படி போகுதுன்னு சொல்றாங்க”, என்று கேட்டான்.

“நல்லா இருக்குன்னு சொல்றாங்க”, என்று அவர் சொன்னாலும் அவரின் குரல் சுரத்தில்லாமல் ஒலிப்பது போன்று தோன்ற………

அவன் அனுப்பிய ஆட்களுக்கு போன் அடித்தான், “டேய் படம் எப்படிடா”, என்றான்…

“ஒண்ணும் தெரியலைண்ணா, ஒருத்தன் நல்லாயிருக்குன்னு சொல்றான்! இன்னொருத்தன்னு சுமார்ன்றான்! இன்னொருத்தவன் சகிக்கலைன்றான்!”,

பிறகு தேர்ந்த ஒரு சினிமாவை தெரிந்த ஒருவரை கூப்பிட்டு கேட்டான்……

“படம் நல்லாத்தான்ங்க இருக்குது! ஆனா இதை நீங்க கம்மி பட்ஜெட் படமா எடுத்திருந்தா லாபம் கொடுத்திருக்கும்! ரொம்ப பணம் செலவு பண்ணி எடுத்ததால அந்தளவுக்கு லாபம் கிடைக்குமான்னு தெரியலை!”, என்றார்.

இதனால் கார்த்திக்கிற்கு இழப்பொன்றுமில்லை, இது போல இன்னும் பத்து, இருபது படங்கள் தோல்வி அடைந்தாலும் அசையாமல் இருப்பான் என்றாலும்…..

நியாயமோ, அநியாயமோ, அவன் வீட்டை விட்டு வந்ததில் இருந்து பண விஷயத்தில் அவன் பார்த்து வெற்றியே….

தந்தையின் பெயரை…… பெரிய பேனர் என்ற ஒரு அடையாளத்தை கொடுக்க முயற்சித்து கொண்டிருந்தான்.

இது அவனின் பண வகையில் முதல் லாபமில்லாத செயல். கார்த்திக்கின் முதல் சறுக்கல் தொடங்கியது.

Advertisement