Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று :

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா                                                                                                மார்பு துடிக்குதடி                                                                                                                               பார்த்த இடத்திலெல்லாம் உன்னை போல்                                                                                          பாவை தெரியுதடி

( பாரதி )

“கார்த்திக், நாளைக்கு பிரபு விடியற் காலை ரெண்டு மணிக்கு பெங்களூர் ஏர்போர்ட் வர்றான், நீ போய் கூப்பிட்டுக்கிறியா”, என்றார் வாசுகி.

“பிரபு”, என்ற வார்த்தையை கேட்டதும் கார்த்திக்கின் முகம் புன்னகையை பூசியது. சிறு வயதில் கார்த்திக் இருந்தால் அவன் பின்னேயே சுத்திக் கொண்டிருப்பான் பிரபு.

கார்த்திக்காக அவனை தவிர்ப்பான் இருந்தாலும் அட்டைப் போலத் தான் ஒட்டிக்கொள்வான் பிரபு. இவனும் வீட்டை விட்டுப் போனான்…….. பிரபு மருத்துவம் படிக்கப் போனான்….. தொடர்புகள் விட்டுப் போயின என்றும் சொல்லலாம் கார்த்திக் அதை தொடரவில்லை என்றும் சொல்லலாம்.  

“சரிமா, நான் போறேன்”, என்றான் கார்த்திக்.

“அண்ணா, நானும் வர்றேன்!”, என்று வைஷ்ணவி உடனே ஒரு கோரிக்கையை வைக்க…….. கூடவே, “நானும்”, என்றபடி சுமித்ராவும் வந்து நின்றாள்.

“வேண்டாம், நான் மட்டும் போறேன்!”, என்று கார்த்திக் சொல்லியும் இருவரும் கேட்கவில்லை, “நாங்களும் தான் வருவோம்”, என்று பிடிவாதமாய் நின்றனர்.   

கார்த்திக் கிளம்ப வெளியே வந்த போது இருவரும் வாசலில் இருந்தனர். கார்த்திக் காரை எடுக்க வைஷ்ணவி பின்னால் அமர சுமித்ரா முன்னால் அமர்ந்தாள்.

கார்த்திக் இதை எதிர்பார்க்கவில்லை. முன்னால் உட்காருவது ஒரு சாதாரண செயல் தான். ஆனால் அது ஒரு உரிமையான செயலாக அந்த நேரத்தில் சுமித்ரா செய்வதாகவே பட்டது.

“நீ பின்னால் உட்காரு”, என்றும் சொல்ல முடியாது……… அது அவளை அவமானப்படுத்துவது போல ஆகும்.

கார்த்திக் வழி நெடுகிலும் அமைதியாகவே வந்தான். ஒரு வார்த்தை கூட தானாக பேசவில்லை. வைஷ்ணவி வள வள வென்று பேசிக்கொண்டே வந்தாள். சுமித்ராவும் வைஷ்ணவியோடு பேசிக்கொண்டே வந்தவள் கார்த்திக்கை பேச்சில் இழுக்க முற்பட… அவனாக கலந்துக் கொள்ளவேயில்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அவ்வளவே.

கார்த்திக்கின் ஒதுக்கம் இரு பெண்களுக்குமே புரிந்தது. இது அவன் வீட்டிற்கு வந்த நாள் முதலாக அவர்கள் உணருவது தான். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை, கார்த்திக் அவர்களிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் இப்படித் தான் என்று. அவர்கள் சிறு வயதில் பார்த்த கார்த்திக்கை தேட அவன் தான் மாறி இருந்தானே.

என்னவோ தன்னை அவன் ஒதுக்குவது போல சுமித்ராவிற்குள் ஒரு தோற்றம். கார்த்திக் வீட்டிற்கு வந்த நாள் முதலாக அவள் அதைத் தான் உணருகிறாள்.

கார்த்திக் பேசாமல் போனாலும் வாசுகியாலும் வைஷ்ணவியாலும்  அவனை இழுத்து வைத்துப்  பேச முடிந்தது. ஆனால் அது போல சுமித்ராவால் முடியவில்லை. இருந்தாலும் அவன் பதில் கொடுக்காவிட்டாலும் பேசும் சந்தர்பங்களை முடிந்த வரை உருவாக்கி பேசிக்கொண்டு இருந்தாள்.

அது போலத் தான் இப்போது காரில் போகும்போதும் பேசினாள், ஆனால் அவனிடம் அதற்கான சரியான பிரதிபலிப்பு இல்லாததாகவே தோன்றியது.

மனதினுள் ஒரு கோபம் முளைவிட ஆரம்பித்தது. அதன் பிறகு சுமித்ரா யாரிடமும் அதிகம் பேசவில்லை.

ஏர்போர்ட் உள்ளே நுழைந்து பிரபுவிற்காக காத்திருந்த போது அங்கே ஒரு கனமான அமைதி நிலவியது. வைஷ்ணவி மட்டுமாக எவ்வளவு நேரம் தான் பேசுவாள், சுமித்ராவும் பதில் சொல்லவில்லை, கார்த்திக் காதில் வாங்கவேயில்லை. அமைதியாகி விட்டாள்.

வந்த பிறகு தான் ப்ளைட் இரண்டு மணிநேரம் லேட் என்று தெரிய…. கார்த்திக் அங்கேயே உட்கார்ந்த வாக்கில் எதை பற்றியும் கவலைபடாமல் ஒரு கர்சீப்பை முகத்தில் போட்டு கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

அவனுக்கு இது பழக்கமே, குவாரியில் எத்தனையோ நாட்கள் ஆரம்ப காலத்தில் அவன் இப்படி தான் உறங்குவான்.

ஆழ்ந்த உறக்கமும் அல்லாமல் விழிப்புமல்லாமல் இருக்கும் ஒரு நிலை. பல நாட்கள் அவன் உறக்கம் அப்படியே.

கால் மணிநேரத்திற்கு ஒரு முறை விழித்து வைஷ்ணவியையும் சுமித்ராவையும் கண்ணில் பார்த்து உறங்கினான்.    

சுமித்ராவும் வைஷ்ணவியும் அப்படி அல்லவே மிகவும் சொகுசாக வளர்ந்தவர்கள்…….. ஏர்போர்டை சுற்றி ரவுண்டு அடித்து கொண்டிருந்தனர்.

இவன் தங்களை கால் மணிநேரத்திற்கு ஒருமுறை தேடுவதை பார்த்து வந்து பேசாமல் அமர்ந்து கொண்டனர்.

பிரபு வந்த போது விடியற்காலை மணி ஐந்து.

வந்தவன் கார்த்திக்கை எதிர்பார்போடு பார்த்தான். அவர்கள் சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

“கார்த்திக்!”, என்று ஆவலோடு பிரபு கார்த்திக்கை தழுவினான்.

“ஹேய் பிரபு! பெரிய டாக்டர் ஆகிட்ட நீ!”, என்று சொல்லிக் கொண்டே ஆர்வமாக தழுவிய பிரபுவை விலக்கி வைத்து பார்த்த கார்த்திக், அவனின் தோற்றத்தை எடை போட்டான்.

ஏற்கனவே சிவந்த நிறத்தில் இருக்கும் பிரபு, இப்போது அமெரிக்க வாசத்தில் இன்னும் சிவந்து இருந்தான். மீசையில்லாத, வசீகரிக்கும் கலையான முகம். ஒரு சாக்லெட் பாய் அப்பியரேன்ஸ். கார்த்திக்கின் உயரத்திற்கு ஈடு கொடுத்தான்.      

“ஏற்கனவே ஹாண்ட்சம் தான்…… இப்போ இன்னும் கலக்குறடா நீ, பொண்ணுங்க எல்லாம் உன் பின்னாடியே சுத்தறாங்களா என்ன?”, என்றான் கார்த்திக்.

கார்த்திக் இப்படி இயல்பாக பிரபுவிடம் பேசியது அவன் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் தான்.

அதன் பின்னும் பேசுவான் தான் ஆனால் ஒரு ஒதுக்கம் இருக்கும். அதற்கெல்லாம் இன்று தான் நன்றாக பேசினான்.  

“அப்படி எல்லாம் தப்பா எடை போடாத…… ஹாண்ட் சம்மா இருக்குறவங்களை எல்லாம் எட்ட நின்னு சைட் தான் அடிப்பாங்க! ஆனா ஒண்ணும் படியாது! உன்னை மாதிரி மேன்லியா இருக்கறவங்களுக்கு தான் ஈசியா படியும் டா!”, என்று சொல்லிக்கொண்டே பிரபு சுமித்ராவை தோளோடு அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினான்.

வேண்டுமென்றே வைஷ்ணவியை கண்டுகொள்ளவில்லை.

இடுப்பில் கைவைத்து முறைத்த வைஷ்ணவி, “பொண்ணுங்க உங்களுக்கு படியலைன்னு ரொம்ப வருத்தம் போல இருக்கு”, என்று பிரபுவிடம் சண்டைக்கு போக…..

“அட! நீ இங்க தான் இருக்கியா! அதான் என்னடா ஏர்போர்ட்ல இவ்வளவு வெளிச்சம் இருந்தாலும் இந்த இடம் மட்டும் இன்னும் ப்ரைட்டா தெரியுதேன்னு பார்த்தேன்!”, என்று வைஷண்விக்கு முகஸ்துதி வைக்க…..

“இந்த பேச்சுக்கெல்லாம் யாரும் இங்க மசிய மாட்டாங்க”, என்று வைஷ்ணவி உதட்டை சுளித்து சொல்ல…

சுளிக்கும் அவளின் உதடுகளை ரசனையோடு பார்த்தவன், “ஒஹ்! நீ அவ்வளவு பெரிய பருப்பா……. மசியிர அளவுக்கு”, என்று குரலை தாழ்த்தி அவளுக்கு மட்டும் கேட்குமாறு கண்ணடித்து சொன்னான்.

வைஷ்ணவியின் முகம் வெட்கத்தில் சிவந்தாலும் முகத்தை முறைப்பது போல வைக்க…… “சரி, சரி, உண்மை தெரிஞ்சிடுச்சா, நீ இருந்தா அந்த இடமே டல் ஆகிடும்னு”, என்று பிரபு அதற்கும் வார……

“உங்களை”, என்று வைஷ்ணவி பிரபுவை அடிக்க வர……

“சுமித்ரா! எப்படி இந்த பிசாசோட இருக்க நீ!”, என்று தங்கையின் பின் சென்று நின்றான் பிரபு.

எல்லாம் ஒரு புன்னகையோடு கார்த்திக் ரசித்திருந்தான். பிரபு எந்த இடத்தில் இருக்கிறானோ அந்த இடமே கலகலப்பாக இருக்கும். 

வைஷ்ணவியை ஒரு புறம் ரசனையோடு கண்களால் தழுவிக்கொண்டு இருந்தாலும் சுமித்ராவை பிரபுவின் கண்கள் அளவெடுத்தது…….

என்னவோ அவளின் முகத்தில் குறைவது போல ஒரு தோற்றம் பிரபுவிற்கு…… அடுத்த நிமிஷம் கார்த்திக்கிடம், “லக்கேஜ் என்ன ஸ்டேடஸ்ன்னு பாரு கார்த்திக்!”, என்று அவனிடம் சொல்ல….

கார்த்திக் அதைப் பார்க்க செல்ல…… வைஷ்ணவி அங்கேயே இருந்தாள்.

“சுமி எல்லாம் நான் எங்க போனாலும் பின்னாடியே வருவா”, என்றான் பிரபு…..

வைஷ்ணவி புரியாமல் பார்க்க……….

“ஏய், ட்யூப் லைட் உங்கண்ணன் பின்னாடி போன்னு சொன்னேன்”, என்றான்.

அப்போதும் வைஷ்ணவி, “எதுக்கு”, என்றபடி அங்கேயே நிற்க…..

“போடி”, என்றான் பிரபு..

“வா சுமி! நம்ம போகலாம்!”, என்று வைஷ்ணவி அவளை இணை சேர்க்க…

கடுப்பான பிரபு……. “இப்போ தான் வந்து இறங்கியிருக்கிறேன்! இப்போவே என்கிட்ட உதை வாங்காத…….. நீ மட்டும் போ”, என்றான், அவன் வார்த்தை பலிக்க போவது தெரியாமல்.

“போடா”, என்று திருப்பி திட்டியபடி வைஷ்ணவி கார்த்திக்கை தேடி செல்ல…….

“என்னடா ஏதாவது பிரச்சனையா, ஒரு மாதிரி இருக்க”, என்று சுமித்ராவிடம் பிரபு கேட்டது தான் போதும்……… பொல பொல வென்று சுமித்ராவின் கண்களில் இருந்து நீர் இறங்கியது.

“என்னாடாம்மா”, என்று பிரபு பதற….

“தெரியலைண்ணா! சொல்லத் தெரியலை! ஆனா எனக்கு மனசு சரியில்லை. என்னவோ மாதிரி இருக்கு! ஐ மிஸ்ட் யூ எ லாட்!”, என்றாள்.

“அண்ணா கிட்ட எதுனாலும் சொல்லுடா”, என்று பிரபு கனிவாக கேட்க……

“எனக்கே தெரியாத போது உன்கிட்ட எப்படி சொல்வேன்”, என்று கண்ணீரோடு புன்னகைத்தாள் சுமித்ரா.

“இதுக்கு தான் நான் இங்கேயே படிக்கறேன்னு சொன்னேன். நீயும் அத்தையும் தான் என்னை துரத்தி விட்டீங்க”,

“அதான் நீ வந்துட்ட இல்ல! இனிமே ஐ வில் பீ ஆல் ரைட் அண்ணா!”, என்று சுமித்ரா கண்களை துடைத்தபடி சொல்லி பிரபுவின் தோள் சாய….. ஆதரவாக பிரபு அவளின் தோளை அணைத்து பிடித்தான்.

அவர்களை முறைத்தபடி எதிரில் வந்து நின்றாள் வைஷ்ணவி… “உங்களுக்கு பாச மலர் படத்தை ஓட்டனும்னா ஓட்டுங்க! நான் என்ன வேண்டாம்னா சொன்னேன்! அதுக்கு ஏன் என்னை துரத்துணீங்க!”, என்று பிரபுவிடம் சண்டை போட்டவள்,

“நான் உங்களுக்கு நடுவுல வர்றேன்னு நினைக்கிறீங்களா”, என்று குரல் கமற கேட்க……. 

“ஏய், லூசு”, என்றபடி வைஷ்ணவியின் அருகில் பிரபு போய் அவளை தோளோடு அணைத்து அவளை சமாதானப்படுத்த…..

“டேய், அண்ணா!”, என்று பிரபுவை அழைத்த சுமித்ரா………

“உன் தங்கச்சி தோள் மேல நீ கை போட்டா அவங்கண்ணா சும்மா இருப்பாங்க…… ஆனா அவங்க தங்கச்சி மேல கையை போட்டா என்ன பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது”, என்று சுமித்ரா சிரிப்போடு ஒரு பஞ்ச் டைலாகை சொல்லி கொண்டிருக்கும் போதே கார்த்திக் வர……… அவசரமாக வைஷ்ணவியை விட்டு விலகி நின்றான் பிரபு.

அது ஒரு கவிதைத்துவமான காட்சி……. அதை ஒரு இயலாமையோடு பார்த்திருந்தது இரு கண்கள்.

அது சக்தியின் கண்கள்.   

அவளுடன் பீ ஜி படித்த அவளுடைய தோழி ஒருத்தியும் தோழன் ஒருவனும் காதலித்து மிகுந்த எதிர்ப்புகிடையில் திருமணம் செய்திருந்தனர்.

படித்த படிப்புக்கு வேலை கிடைத்தாலும் அதை செய்ய விடாமல் ஏதோ ஒரு வகையில் இரு வீட்டினருமே அவர்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்க…..

சக்தியிடம் உதவி வேண்டி வந்து நின்றனர் இருவரும். இருவரும் வெளிநாடு செல்ல விருப்பப்பட, அவர்களுக்கு அதற்கு தேவையான பண உதவிகள் செய்து…. விசா எடுப்பதிலும் உதவி செய்து…..

ஆறு மாத கைக் குழந்தையோடு இருக்கும் அவர்களை வழியனுப்ப வந்திருந்தாள் சக்தி.

அவர்கள் செல்லவும் வெளியே வர திரும்பும்போது….. “கார்த்திக்”, என்ற அழைப்பு செவிகளில் விழ…….

அவசரமாக திரும்பி பார்த்தாள்.

பார்த்தால் அது கார்த்திக் தான்…..

அவன் யாரையோ அணைத்து விடுவித்து அவனை பார்வையால் ஆராய்ந்து அவனுடன் ஒரு புன்னகையோடு பேச ஆரம்பிக்கவும்……

ஆறு மாதத்திற்கு பிறகு கார்த்திக்கை பார்த்த அவளால் அந்த இடத்தை விட்டு விலக முடியவில்லை. அதுவும் கறுப்பு கண்ணாடி இல்லாத கார்த்திக்கின் முகமும் கண்களும் அவனின் உணர்வுகளை பிரதிபலிக்க…….. அவள் அங்கேயே ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.  அவர்களின் பார்வையின் வட்டத்தில் தான் இருந்தாள்.

ஆனால் சுமித்ராவோ, வைஷ்ணவியோ, கார்த்திக்கோ கவனிக்கவில்லை. ஆறு மாதமாக சக்தியின் கண்களில் கார்த்திக்கோ……. கார்த்திக்கின் கண்களில் சக்தியோ படவில்லை. இப்போது இருவரையும் விதி பார்க்க வைத்தது.

அவர்களுக்குள் நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள். என்னவோ ஒரு இயலாமை, ஒரு ஏமாற்றம், அந்த இடத்தை விட்டு அசைய விடாமல் அவர்களை பார்க்க வைத்தது.  

கார்த்திக் வரவும்…… “சட்டுன்னு திரும்பிடாத கார்த்திக்! ஒரு ஃபிகர் ரொம்ப நேரமா நான் வந்ததுல இருந்து லுக் விடுது…. பொண்ணுன்னா அது பொண்ணு! பார்க்கவே அவ்வளவு சாஃப்ட்டா, அழகா இருக்குது”, என்றான்.

அப்போதும் கார்த்திக் பார்க்கவில்லை, “டேய்! இப்போ தான் இண்டியால வந்து லேண்ட் ஆகியிருக்க! இப்போவே யார் கிட்டயாவது அடி வாங்கி அடுத்த பளைட் பிடிக்காத”, என்று சொன்னபடி கார்த்திக் நிற்க…….

வைஷ்ணவி முகத்தை தூக்கி வைத்து கொண்டு நின்றிருந்தாள்.

“இவங்களை வெச்சிட்டு சைட் தான் அடிக்க முடியாது……”, என்று சுமித்ராவையும் வைஷ்ணவியையும் காட்டியவன்……..

“அட்லீஸ்ட் ஒரு ஃபிரண்ட்டாவாவது ஆகறேன்…. ரொம்ப நேரமா பார்க்குறா, ஒரு ஹாயாவது சொல்லிட்டு வர்றேன்! இவ்வளோ பியூட்டி எல்லாம் மிஸ் பண்ணக்கூடாது”, என்று பிரபு திரும்ப…..

“யாருக்குடா இவ்வளவு பில்ட் அப்பு”,  என்பது போல சுமித்ராவும் வைஷ்ணவியும் திரும்பினர். அப்போதும் கார்த்திக் அங்கே பார்க்கவில்லை.

அவர்கள் மூவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்தாள் சக்தி.

பார்த்த சுமித்ராவின் முகத்திலும் வைஷ்ணவியின் முகத்திலும் ஒரு அதிர்ச்சி. சுமித்ரா பார்த்தபடி நிற்க….. வைஷ்ணவியின் முகத்தில், “இவள் எங்கே இங்கே”, என்பது போல சட்டென்று ஒரு எரிச்சல் தோன்ற……..

சற்று ஏளனமான குரலில், “அது உங்களை பார்க்கலை, கார்த்திக் அண்ணாவை பார்த்திருக்கும்”, என்றாள். 

கார்த்திக் உடனே திரும்பினான். அங்கே சக்தி அமர்ந்திருக்கவும்….. ஒரு ஆச்சர்யம், ஒரு அதிர்ச்சி அவன் முகத்தில்.  முதலில் கவனித்தது அவளின் கூட யார் இருக்கிறார் என்பது போல தான்.

யாரும் அருகில் இல்லை என்பதை உணர்ந்து அருகே செல்ல துவங்கினான்.

“யார் அது”, என்று பிரபு கேட்க……

“ம்! அண்ணனோட மேடம்! அப்படிதான் அவன் சொல்லிட்டு திரியறான்”, என்றாள் கோபமான குரலில் வைஷ்ணவி.

அவள் பதில் சொன்ன விதத்திலேயே, பிரபு மேலே அவளிடம் விவரம் கேட்கவில்லை.  அவர்களை கவனிக்க துவங்கினான்.    

“இங்கே எங்கே மேம் நீங்க தனியா?”, என்று கார்த்திக் அருகில் சென்று கேட்க…….

“அவங்கல்லாம் உன் பாமிலியா கார்த்திக்!”, என்றாள்.   

கார்த்திக் அதற்கு பதில் சொல்லாமல்……… “நீங்க எங்க இங்க தனியா”, என்று மறுபடியும் அதையே கேட்டான்.

சக்தி பதில் சொல்லவில்லை. என்னவோ துக்கம் தொண்டையை அடைக்க…… அருகே இருந்த காபி ஷாப்பை நோக்கி திரும்பியவள், ஒரு காபி ஆர்டர் செய்து நிற்க…….. கார்த்திக் பொறுமையாக அவளுடன் நின்றான்.

“நீ போ கார்த்திக்!”, என்றாள்.

அவன் அப்போதும் அங்கேயே நிற்க…… “ப்ளீஸ், நீ போ!”, என்றாள்.

“உங்களை இப்படி தனியா விட்டுட்டுப் போக முடியாது, எதுக்கு இங்க வந்தீங்க?”,

“சொல்ல முடியாது!”,

“சரி! எப்படி வீட்டுக்கு போவீங்க! கூட யாரு இருக்காங்க! தெரியாம இடத்தை விட்டு நகர மாட்டேன்!”, என்றான்.

ஆர்டர் செய்த காபி வர அதை கையில் வாங்கிக்கொண்டே……. “கருப்பண்ணன் வெளியே நிக்கறார்! போதுமா! நீ கிளம்பு!”, என்று பல்லை கடித்து கொண்டு அவள் வார்த்தைகளை துப்ப……

மனமேயில்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் கார்த்திக்.

சக்திக்கு அந்த காபியை பருக கூட விருப்பமில்லாமல் கையில் வைத்துக்கொண்டே நின்றிருந்தாள்.

கார்த்திக் அருகில் வரவும், “யார் கார்த்திக் அது, உனக்கு ரொம்ப தெரிஞ்சவங்களா?”, என்று பிரபு கேட்க……

“ம்!”, என்று சொல்லி…….. தலையை மட்டும் ஆட்டியவன்……… “கிளம்பலாம்”, என்றபடி இருந்த லக்கேஜ்ஜை ட்ராலியில் வைத்துத் தள்ள…..

சக்தி வேறு புறம் பார்த்து நின்றிருந்தாள்.

விடு விடு வென்று சுமித்ராவை இழுத்து கொண்டு சக்தியின் அருகே சென்றாள் வைஷ்ணவி.

அவர்கள் செல்வதை பார்த்த கார்த்திக், பிரபுவிடம் ட்ராலியை தள்ளி வேகமாக அவனும் போனான்.

“வைஷு”, என்றவன் அழைக்க, அழைக்க சக்தியின் அருகில் சென்ற வைஷ்ணவி சுமித்ராவை காட்டி…….. “இது தான் எங்க அண்ணா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு”, என்றாள்.

அதற்குள் அருகில் வந்திருந்த கார்த்திக்…….. “வைஷு”, என்று கோபமாக அவளை அடக்க முற்பட……..

அவன் புறம் திரும்பிய சக்தி, “நீ வாயை மூடு! ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது!”, என்று அவனை அடக்கியவள் வைஷ்ணவியின் புறம் திரும்பினாள்.

அப்போதும், “ப்ளீஸ் மேம்! அவ தெரியாம பேசறா!”, என்று கார்த்திக் இடைப் புக….

“அவ என்ன கார்த்திக் தெரியாம பேசறா, இவளை தானே நீ கல்யாணம் பண்ணிக்க போற”, என்று சொன்னவள்….

வைஷ்ணவியை நோக்கி பார்வையை திருப்பினாள். அதற்குள் பிரபுவும் அருகில் வந்திருந்தான்.

“நீ வா போகலாம்!”, என்று கார்த்திக் வைஷ்ணவியின் கையைப் பிடித்து இழுக்க….

“விடு கார்த்திக் அவ கையை!”, என்றாள் சக்தி.

பிரபு பார்த்துகொண்டே தான் இருந்தான். பார்க்க இவ்வவ்ளவு மென்மையாக இருக்கும் பெண்ணின் குரலில் இத்தனை வலிமையா, அதுவும் எல்லோரும் பார்த்து பயப்படும் கார்த்திக்கை எப்படி அதட்டுகிறாள்….. பிரபு என்ன நடக்கப்போகிறதோ என்றபடி பார்க்க….

“ம்! இப்போ சொல்லு!”, என்றாள் வைஷ்ணவியை பார்த்து….

கார்த்திக்கின் முகத்தில் பயம்…. ஆம் பயமே தான்……. மறந்து வந்த கண்ணாடி இல்லாததால் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

சக்திக்கு கோபம் வந்தாள் வலிக்க, வலிக்க, பேசுவாள். ஒன்று அவளுக்கு வலிக்கும், இல்லை எதிராளிக்கு வலிக்கும்… இங்கே எதுவாகினும் அவனுக்கு வலியே.

தவிப்புடன் சக்தியை பார்க்க…

“இவ தான் என் அண்ணா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு!”, என்றாள் மறுபடியும் வைஷ்ணவி……

“வைஷு!”, என்று ஒரு அதட்டல் போட்ட கார்த்திக் அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து நின்றான்.

“சாரி மேம்! சாரி! அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கறேன்”, என்று வைஷ்ணவியின் கையை பிடித்து கூட்டி செல்லப் பார்க்க……..

“உன் தங்கச்சியில்ல, அதான் ப்ரோடக்ட் பண்ற! நான் யாருமில்லைல உனக்கு!”, என்றாள், அதை சொல்லும் போது அவள் முகத்திலும் குரலிலும் அவ்வளவு வலி…. ஒரு நொடியில் அதை மாற்றியவள்……

“நகரு கார்த்திக்!”, என்று அவனின் கையை பற்றி தள்ளி நிறுத்தியவள்…….. நேருக்கு நேராக வைஷ்ணவியை பார்த்தாள், பார்வையில் அத்தனை சீற்றம்…..  

“உங்க அண்ணன் கல்யாணம் பண்ணினா என்ன? இல்லை, என்ன கருமம் பண்ணினா தான் என்ன? அதை ஏன் நீ என்கிட்ட சொல்ற”,

அவளின் வார்த்தையில் பதைத்தார்கள் எதிரில் நின்றவர்கள். கார்த்திக் இனிமேல் அவளாக நிறுத்தினால் தான் உண்டு, அவளை நிறுத்த முடியாது என்பதாக ஒரு இயலாமையோடு பார்த்தான்.

சுமித்ரா பிரபுவின் பக்கத்தில் சென்று நின்று கொண்டாள்.

ஒரு நிமிஷம் அதிர்ந்து நின்ற வைஷ்ணவி, “ஏய், என்ன கருமம் கிருமம்னு பேசற?”, என்று எகிற……..

“ஏய், ஏய் கீய்ன பல்லெல்லாம் பேத்துருவேன், என்ன மொத்த குடும்பமும் என்னோட விளையாடிப் பாக்கறீங்களா…….”,

“நான் கேட்டனா? நான் வந்து உன்கிட்ட கேட்டனா? நீயா வர்ற! நீயா கல்யாணம்னு சொல்ற! வேற எப்படி பேசுவாங்க….?”, என்று வைஷ்ணவியிடம் கத்தியவள்,

கார்த்திக்கை நோக்கி பார்வையை திருப்பினாள், “ஏன் கார்த்திக்? உன் தங்கச்சி ஏன் வந்து என்கிட்ட இதை சொல்றா……?”, என்று நிறுத்தியவள்….

அவனருகில் வந்து வார்த்தையை கடித்து துப்பினாள்…….. “ஒரு வேளை நான் இப்படி கேட்பேன்னு நினைச்சிருப்பாளோ……..”, என்று நிறுத்தினாள்,

என்ன வரபோகிறதோ என்று கார்த்திக் பதைத்துப் பார்க்க…….. தயவுதாட்சன்யமேயில்லாத குரலில், “நீ எனக்கு மாப்பிள்ளையா வர்றியா கார்த்திக்”, என்றாள்.  

அங்கிருந்த நால்வரின் இதயம் துடிக்கும் ஓசையும் வெளியே கேட்டது.

அவனையே சில நொடிகள் பார்வை எடுக்காமல் பார்த்தவள், “முடியாதில்ல”, என்றவள் கையில் இருந்த காஃபியை, அவன் முகத்தில் அப்படியே ஊற்றி கப்பை தூக்கி தூர எறிந்தாள்.

யாரும் எதிர்பார்க்கவில்லை.

எல்லோரும் கார்த்திக்கை பார்க்க அவன் முகத்தில் எதுவுமில்லை…….. கோபம், வெறுப்பு, வருத்தம் மாதிரி எதுவுமில்லை. அவள் என்ன செய்தாலும் வாங்க கடமை பட்டவன் போல முகத்தில் வழிந்த காபியை துடைத்துக்கொண்டு நின்றான்.  

சுமித்ராவிற்கு வெறுத்தே விட்டது.  

பிரபு, “என்ன பண்றீங்க”, என்று கார்த்திக்கிற்கும் சக்திக்கும் நடுவில் வர…….

“தூர போ நீ! எனக்கும் இவனுக்கும் நடுவுல யாரும் கிடையாது!”, என்றவள்……… “என்னவோ நீங்கல்லாம் ரொம்ப யோக்கியம் மாதிரி இந்த பொண்ணு வந்து பேசறா!”, என்று வைஷ்ணவியை காட்டியவள்….

“இவங்கண்ணன் கல்யாணம் பண்ண போறானமா…… இவங்கண்ணன் ஒரு திருட்டு பய! எங்க வீட்ல வந்து…… இருந்து……. எங்க சொத்தை…… எங்க நம்பிக்கையை….. திருடி இருக்கான்”,

“இவங்கப்பா சிரமப்பட்டு நடுத்தெருவுல நின்னப்போ எங்கப்பா உதவி செஞ்சார். கொஞ்சமா மதிப்பு இருக்குற சொத்தை நிறைய பணம் போட்டு வாங்கினார்……. பதிலுக்கு இவன் என்ன செஞ்சான்? எங்க வீட்ல வந்து திருடினான். வெளில இது யாருக்கவது தெரியுமா?”,

“யாருக்கும் தெரியாது! எங்கப்பா அப்போ கூட நண்பனோட பையன்னு யாருக்கும் சொல்லலை!”,

“எங்கப்பா மட்டுமில்ல விஷயம் தெரிஞ்ச யாரும் இதை வெளில சொல்லலை..”,  

“நாய்களுக்கு கூட நன்றியிருக்கும்….. ஆனா உங்க குடும்பத்துக்கே அது கிடையாது”,

“நாய்”, என்ற வார்த்தையை கேட்டதும் நொறுங்கியே போனான்.

“ஒவ்வொரு தடவையும் இந்தப் பொண்ணு என்னைப் பார்க்கும் போது இன்சல்ட் பண்றா! அவங்கண்ணன் பெரிய திருட்டுப்பயன்றது தான் நிஜம். இதுல வாசுகி குழுமம் எங்களோடதுன்னு நான் சொன்னதுக்கு அவ்வளவு கேவலமா என்னைப் பார்த்தா…….. உங்களோடதான்னு நக்கலா கேட்டா……”,  

“நீங்க தான் கேவலமானவங்க…….”,

“கார்த்திக்! இன்னொரு தடவை என்னை யாராவது இப்படி சீண்டினாங்க……. நீயும் உங்கப்பா மாதிரி நடுத்தெருவுல நிப்ப கார்த்திக்….. நடுத்தெருவுல நிற்ப…….. இல்லை நான் நிற்க வைப்பேன்!”, என்ற சக்தியின் வார்த்தைகளில் அவன் இறந்தே போனான்.

சொன்ன சக்தி சொன்ன வார்த்தையின் வீரியம் உணர்ந்து……. “சே! சே! என்னை எவ்வளவு கீழ இறங்க வெச்சிட்ட கார்த்திக்…….. இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்க இருந்தா என்னையே எனக்கு பிடிக்காம செஞ்சிடுவ நீ!”, என்று சொன்னவள் விடு விடு வென்று வெளியேறினாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பிரபு ஆத்திரமிகுதியில் வைஷ்ணவியை ஓங்கி ஒரு அறை விட……… வைஷ்ணவி தூரப் போய் விழுந்தாள்.

“மனுஷங்கன்னா கொஞ்சமாவது வாயை அடக்கனும். அந்த பொண்ணை பேசப் போய் உங்கண்ணனை எவ்வளவு அசிங்கப்படுத்திட்ட நீ”, என்று அவன் கத்த……… ஏர்போர்ட்டே வேடிக்கை பார்த்தது.

“ப்ளீஸ் அண்ணா! என் மேல இருக்குற அன்பால இப்படி பண்ணிட்டா”, என்று சுமித்ரா வந்து வைஷ்ணவியை தூக்கி விட்டாள்.  

சக்தியின் பின்னால் போன கார்த்திக்…….. “ப்ளீஸ்! ப்ளீஸ் சக்தி! சாரி!”, என்று கெஞ்சினான்.

“சாரியா”, என்று ஆத்திரமானவள்……. “சொத்தை கொள்ளையடிச்சிட்டு போனப்போ கூட ஒரு சாரி சொல்லாதவன் இப்போ எதுக்கு சொல்ற……”,

“நீ ஒரு பொய்யை சொல்லி……. அதை நிஜம் போல நம்ப வெச்ச……..”,

“நான் உன்னை இஷ்டப்பட்டேன், அதான் அந்த பொய் சொன்னேன்”, என்று கத்த வேண்டும் போல கார்த்திக்கிற்கு இருந்தது, ஆனால் முடியவில்லை.

“உன் தங்கச்சி…….. இதுதான் எங்கண்ணன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுன்னு சொல்றா….  நான் என்ன பண்ணிடுவேன் உன்னைன்னு அப்படி சொல்றா”,

“ஒரு வேளை எங்கம்மா உன்கிட்ட பேசினதை நீ எல்லார்கிட்டயும் சொல்லிட்டியா?”, என்று சந்தேகமாக கேட்க……

அவள் கையை அவனறியாமலேயே பற்றிக் கொண்டான்……… “இல்லை சக்தி! இல்லவே இல்லை! நான் அதை பத்தி யார்கிட்டயும் பேசலை! இனிமேயும் பேச மாட்டேன்! என்னை நம்பு!”, என்றான்.

“மேம்”, என்ற அழைப்பு நின்றதோ….. அவளை, “சக்தி”, என்று பெயர் சொல்லி ஒருமையில் அழைத்ததோ……. எல்லாம் தானாக நடந்தது.   

“நம்பறதா? உன்னையா?”, என்றவள்……… பிடித்திருந்த கையை வெறுப்போடு உதறினாள்.  

அவள் கையை உதறவும்…… இவர்கள் மூவரும் வரவும் சரியாக இருந்தது.

“you know karthick, every war is personal” என்றாள். அது மூவர் காதிலும் விழுந்தது.  வைஷ்ணவி சுமித்ராவின் கையை பயத்தோடு பிடித்தாள்.

அவள் கருப்பண்ணனுடன் காரில் ஏறுவதை பார்த்த பிறகே திரும்பினான்.

கார் சாவியை பிரபுவின் கையில் குடுத்த கார்த்திக்…… “நீங்க கிளம்புங்க”, என்றான்.

“நீ கார்த்திக்……….”, என்ற பிரபுவிற்கு பதில் சொல்லவில்லை.

விடிந்தும் விடியாத அந்த பொழுதில் ரோடில் கால் போன போக்கில் நடக்க துவங்கினான்.   

விடியல் எல்லோருக்கும் விடியலா என்ன? கார்த்திக்கின் காதுகளில், every war is personal என்ற சக்தியின் வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலித்தது.

Advertisement