Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே,                                                       எதற்குமினி யுளைவதிலே பயனொன் றில்லை;

நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி                                                                            நினைத்த பயன் காண்பதவள் செய்கை யன்றோ?

                                              ( பாரதி )

செல்வத்தின் வீட்டில் இருந்து வந்த கார்த்திக்கிற்கு ஒரு பொட்டு தூக்கமில்லை…. செய்த செயலின் வீரியம் அவனுக்கு தெரியும்…… தெரியாதென்றேல்லாம் சொல்ல முடியாது……. இருந்தாலும் நிறைய வலித்தது.

என்றுமே தனக்கு நிம்மதி என்பதே இல்லையா…… ஏன் தனக்கு மட்டும் இப்படி…. நேர்மை என்ற ஒரு விஷயம் அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் என்று அவன் இந்த வீட்டை விட்டு வெளியேறினானோ அன்றிலிருந்து அவன் அதை கடை பிடித்ததே கிடையாது.

அதற்கு முன்பே மாபாதகமான செயலை வேறு செய்திருக்கிறான்.

வீட்டை விட்டு வெளியேறியது என்பது தன் தந்தை தொலைத்த சொத்தை திரும்ப பெற என்றாலும்…… அதையும் விட கார்த்திக் அவன் செய்த மாபாதகாமான செயலுக்கு அவனுக்கு அவனே தண்டனை கொடுத்துக்கொள்ள விரும்பினான். அவன் செய்த செயல்………???????

கண்ணின் ஓரம் நீர் துளிர்த்தது. எப்போதும் போல சக்தி நினைவுகளில் பின்னால் போக அவன் செய்த செயலின் நினைவுகள் முன்னால் வந்தன.

“கடவுளே! நான் உன்னிடம் கேட்பது நிம்மதியான உறக்கம் மட்டுமே அதை என்றாவது நீ எனக்கு கொடுப்பாயா?”, என்று மனமுருக கடவுளிடம் கேட்டான்.

ஆனால் கடவுள் அவனுக்கு அதை இப்போதைக்கு கொடுப்பதாய் இல்லை.

காலையில் செல்வம் அடிவாங்கி வீங்கிய முகத்துடன் தான் காலேஜ் வந்தான். காலையில் பத்து மணிக்கே சக்தி காலேஜ் வந்துவிட்டாள், வீரமணியை அழைத்துக்கொண்டு.

செல்வத்தை பற்றி சக்தி வீரமணியிடம் ஒன்றும் கூறவில்லை. அவனைப் பார்த்தும் வீரமணி இவன் எங்கே இங்கே என்பது போல பார்க்க……. “ஒரு பத்து நாளைக்கு முன்னாடியே இவனை காலேஜ் மாத்தி விட்டுடேன்பா”, என்று மட்டும் சொன்னாள்.

“என்னப்பா முகமெல்லாம் வீங்கியிருக்கு, உதட்டுல காயம், என்ன ஆச்சு?”, என்று வீரமணி செல்வத்தை பார்த்து கேட்டார்.

“வண்டில இருந்து விழுந்துட்டேன் ஐயா”, என்றான் செல்வம். சக்தி அதை நம்பவில்லை என்று அவளின் முகமே சொல்லியது.  அவள் செல்வத்தை பார்த்த பார்வையில் நிஜமாகவே செல்வத்துக்குள் ஒரு பயம் பதட்டம் தோன்றியது. கார்த்திக்கிடம் கூட அவன் இப்படி உணர்ந்தது கிடையாது.

ஏன் நேற்று அடிவாங்கிய போது கூட அவனுக்கு இந்த பயம் பதட்டம் இல்லை. பார்வையால் கூட மிரட்ட முடியும் என்பதை சக்தி அவனுக்கு காட்டினாள். 

பதட்டத்தில், “சாரி மேடம்!”, என்று செல்வம் ஆரம்பிக்க…… வீரமணி என்ன என்பது போல பார்க்க……. செல்வத்தை மேலே பேச விடாமல்…..

“நேத்து ஒரு வேலை சொன்னேன்பா, இன்னும் முடிக்காமல் இருப்பானா இருக்கும், போ! போய் வேலையை பார்!”, என்றாள்.

என்ன வேலையை பார்ப்பது? அவனுக்கு தான் எந்த வேலையும் சக்தி கொடுக்கவேயில்லையே. அவனாகவும் எதுவும் வேலை பார்க்க முடியாது. ஏனென்றால் இது செல்வத்திற்காக உருவாக்கப்பட்ட போஸ்ட். இதற்கு என்ன வேலை என்பது அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை.

அவன் யாருக்கு கீழே வருவான், யார் அவனிடம் என்ன வேலை சொல்வது, என்பது தெரிவில்லை. 

செல்வம் சோர்வுடன் அவனின் இடத்திற்கு திரும்ப…… சக்தி அவளின் தந்தையை அவளின் கேபின் உள் அனுப்பியவள், “ஒரு நிமிஷம்பா!”, என்று வெளியே வந்தாள்.

“செல்வம்”, என்றவளின் குரல் கேட்டு வேகமாக வந்தான். “அப்பா முன்னாடி மறந்தும் கார்த்திக் பத்தியோ, அவனை ஞாபகப்படுத்துற எந்த விஷயத்தையும் பேச வேண்டாம்”, என்றாள் கடுமையாக……

“சரிங்க மேடம்”, என்று அவன் சொல்ல…….

“ஆமா இது என்ன காயம்? முகமெல்லாம் வீங்கி கிடக்கு! வண்டில இருந்து விழுந்துட்டன்னு சொல்ற……. நம்பற மாதிரி இல்லையே”,

“கார்த்திக் சார் அடிச்சார்”, என்றான்.

“ஒஹ்! இது அடுத்த புது டிராமா வா?”, 

“இல்லை மேம்! சத்தியமா இல்லை……. இங்க நடக்கறதை அங்க சொல்ல மாட்டேன்னு சொன்னேன், கோவத்துல அடிச்சிட்டார்”,

“இதை நான் நம்பனும்”, என்று இளக்காரமாக சக்தி கேட்க……..

“நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் இது தான் உண்மை மேடம், நிச்சயமா நான் சொல்ல மாட்டேன்”, என்றான்.  

நேற்று இருந்த தடுமாற்றம்…….. பார்வை தவிர்த்தல்…….. எதுவும் செல்வத்திடம் இல்லை. நேர் பார்வை பார்த்தான். அவன் சொல்வது உண்மை என்று சக்தியின் மனதிற்கு தோன்றினாலும் அதை ஒப்புக்கொள்ள சக்தியின் மனம் மறுத்தது.

இரண்டு காரணங்கள், ஒன்று இனி வாழ்க்கையில் அவளால் யார் மேலாவது நம்பிக்கை வைக்க முடியுமா என்று தெரியவில்லை. இரண்டாவது அவளுக்கு கார்த்திக் செல்வத்தின் உறவு தெரியும்.

செல்வம் கார்த்திக்கை ஏதோ தெய்வத்தை பார்ப்பது போல பார்ப்பான். என்ன சொன்னாலும் செய்வான். அதனால் அவளால் இதை நம்ப முடியவில்லை. 

சக்தி செல்வத்தை பார்க்க… அவன் பார்வை, “நான் சொல்வது உண்மை”, என்ற செய்தியையே தாங்கியது. ஆனால் அதையெல்லாம் யோசிக்க சக்திக்கு விருப்பம் இல்லை. அவள் செய்ய வேண்டிய வேலைகள் அனேகம் இருந்தன.

செல்வத்திற்கு பதில் சொல்லாமல் திரும்ப நடந்தாள்.               

மதியம் வரை சக்திக்கு பார்க்க நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் மறந்தும் செல்வத்தை அழைக்கவில்லை.  

அவள் பாட்டிற்க்கு வேலை செய்தது மட்டுமில்லாமல் இருக்கும் வேலைகளையும் எல்லோருக்கும் சொன்னவள், அவனிடம் மட்டும் எந்த வேலையும் சொல்லவில்லை.

மாலைவரை இருந்தே வீட்டிற்கு கிளம்பினாள். இதுவே தொடர்ந்து ஒரு வாரம் வாடிக்கையானது.     

இந்த ஒரு வாரமாக கார்த்திக் செல்வத்தை தொடர்பு கொள்ள முயலவேயில்லை. செல்வத்திற்கு ஆச்சர்யம், ஆனால் அதே சமயம் வருத்தம் கூட….. கார்த்திக்கும் தொடர்பு கொள்ளவில்லை. சக்தியும் ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை, எந்த வேலையும் கொடுக்கவும் இல்லை.

கார்த்திக் நிஜமாகவே சக்தியை கவனிப்பதை விட்டுவிட்டானா என்றும் தெரியவில்லை.

அவசரமாக உணவை அள்ளிப் போட்டுக்கொண்டு….. கிடைக்கும் நேரத்தில் உறங்கி….. இப்படி வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்த செல்வத்தினால் இப்படி சோம்பி உட்கார முடியவில்லை.

சக்தி வேலை கொடுப்பதாக இல்லை என்றானவுடன் செல்வம் அவனாக வேலை உருவாக்கி கொண்டான். காலேஜ் முன் சில இடங்கள் பராமரிக்கப் படாமல் ஒழுங்கில்லாமல் இருந்தது.

அந்த இடங்களை ஆட்களை கொண்டு சுத்தப் படுத்த ஆரம்பித்தான்.  அன்று முழுவதுமே அந்த வேலையை செய்தான். காலேஜில் பணம்  கேட்காமல் சொந்த பணத்தை கொடுத்து வேலையாட்களுக்கு டீ வாங்கி கொடுத்தான்.

சற்று கடுமையான வேலை என்பதால் மதிய உணவும் வாங்கி கொடுத்தான். காலையில் வரும்போதே சக்தி இந்த வேலையைப் பார்த்துக்கொண்டு தான் வந்தாள்.

ஏன்? எதற்கு? என்னைக் கேட்காமல் யார் செய்வது? என்பது போன்ற எந்த கேள்விகளும் இல்லை. செல்வம் அந்த இடத்தில் இருப்பதால் அது அவன் வேலை என்பதும் புரிந்தது. தான் வேலை சொல்லாததால் அவனாக ஏற்படுத்திக்கொண்டான் எனவும் புரிந்தது.   

சக்தி தொடர்ந்து இப்போது காலேஜ் வருவதால்…… என்ன நடக்கிறது காலேஜில் என்று உடனுக்குடன் அவளுக்கு தெரியும் படி பார்த்துக்கொண்டாள்.   வேலை செய்கிறான் சரி! ஆனால் அவன் காசை செலவு செய்ததது சக்திக்கு கோபத்தை ஏற்படுத்த…….

அவனை அழைத்தவள்…….. “ஏன்? இந்த காலேஜ்ல வேலை  பார்க்கறவங்களுக்கு ஒரு நாள் சாப்பாடு கூட வாங்கி கொடுக்க முடியாத அளவுக்கு என் மேனேஜ்மென்ட் இருக்கா என்ன?”, என்றாள் கூர்மையாக.

செல்வமும் தைரியமாக பதில் சொன்னான், “யார் கிட்ட கேட்கறதுன்னு தெரியலை. யார் எனக்கு மேலதிகாரி, யார் கிட்ட நான் ரிப்போர்ட் பண்ணனும்னு தெரியலை, நீங்க என்னை இங்கயிருக்குற டேபிள் சேர் மாதிரி கூட மதிக்கிறது இல்லை”, என்றான் ஆதங்கமாக.  

“அவங்களுக்கு வேலை ரொம்ப அதிகம். அதான் வாங்கி கொடுப்போம். அப்புறம் பில் கொடுத்து கிளைம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்”, என்றான்.

“உனக்கு என்ன போஸ்ட்? நீ யார் கிட்ட ரிப்போர்ட் பண்ணனும், எதுவும் சொல்ல பயமாயிருக்கே! உன்னை வெச்சு கார்த்திக் அப்புறம் இதையும் பிடிங்கிட்டான்னா! இல்லை நீயே அவன் சிஷ்யன் தானே! நீயே பிடிங்கிட்டன்னா? அதான் பா யோசனையா இருக்கு!”, என்றாள் சீரியசாகவே.

செல்வத்தை சக்தியின் வார்த்தைகள் காயப்படுத்தினாலும்…… “எல்லா நேரமும் எல்லா மனுஷங்களும் தப்பா போயிட மாட்டாங்க மேடம்”, என்று பதிலும் கொடுத்தான்.

“அப்போ…….. இப்போ போச்சே! அதுக்கென்ன சொல்ற?”, என்றாள் வாசுகி குழுமத்திற்கு நடந்ததை நினைத்து…….

“அவங்களுக்கு என்ன சந்தர்ப்பமோ, சூழ்நிலையோ? சில சமயம் தப்பை நாம செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிடுறோம் மேடம்”, என்றான் வருத்தமான குரலில்.

“அப்போ கார்த்திக்கை நீ விட்டு குடுக்க மாட்ட…. அப்படிதானே..!”,

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் செல்வம் நிற்க…..

சக்தி மேலும் பேசினாள்………. “உனக்கு அந்த மாதிரி சந்தர்ப்பமோ, சூழ்நிலையோ, அமையாதுன்னு என்ன நிச்சயம்”, என்றாள்.

செல்வம் தளராமல், “நம்பிக்கை தானா வரனும் மேடம்! நம்புங்க நம்புங்கன்னு சொல்லி நம்பிக்கையை வர வைக்க முடியாது!”, என்றான்.

அவன் வார்த்தையிலும் பார்வையிலும் நேர்மை தெரிந்தது சக்திக்கு. அதற்கு மேல் வார்த்தையை வளர்க்காமல், “கிளைம் குடுத்து வாங்கிக்கோ”, என்றாள்.

அப்போதும் செல்வம் அசையாமல் நிற்கவும்…… “இன்னும் என்ன?”, என்பது போல சக்தி ஒரு பார்வையை பார்க்க…….. 

“நான் யார்கிட்ட ரிப்போர்ட் பண்ணனும், எனக்கு என்ன வேலை”, என்றான்.

“அப்போ நீ இங்கயிருந்து போகமாட்ட”, 

செல்வம் அசையாமல் நின்றான், பதிலும் பேசவில்லை.

“காலேஜ் அகாடெமிக் சைட்னா பிரின்சிபல்கிட்ட பண்ணனும்! நீ அட்மினிஸ்ட்ரேஷன் சைட், யார்கிட்ட ரிப்போர்ட் பண்ணனும்?”, என்று கேள்வியை அவனிடமே திருப்பினாள்.

“உங்ககிட்ட மேடம்!”, என்று செல்வம் சொல்ல……

“இனிமே அதை செய் போ!”, என்றாள் அதிகாரமாக.

“ஹப்பா!”, என்று செல்வம் ஒருவழியாக சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வேலையை பார்க்க செல்ல……. அந்த நிம்மதிக்கு ஆயுட்காலம் குறைவாக இருந்தது.

ஆம்! அந்த ஒரு நாளிலேயே அவ்வளவு வேலை கொடுத்தால் சக்தி. செல்வம் வேலை செய்பவன் தான்….. கார்த்திக்கும் அவனிடம் அவ்வளவு வேலை வாங்குவான் தான், ஆனால் கார்த்திக்கிற்கு இணையாக சக்தி வேலையை கொடுக்கவும் செல்வமே சற்று அசந்து தான் போனான்.

மணி இரவு ஏழு என்றது. சக்தி உட்கார்ந்து இருந்தாள் என்று அந்த பிரின்சிபலும் இன்னும் பலரும் அங்கே இருந்தனர்.

செல்வம் சக்திக்கு தெரிந்தவன் போல அங்கே முதலிலேயே ஒரு செய்தி பரவியிருந்தது. அதனால் அங்கே வந்த மற்ற ஊழியர்கள், கிளம்பலாமா கேளுங்களேன் சார்!”, என்று செல்வத்திடம் சொல்ல……

இன்று தான் என்னை நம்பி சில வேலைகளை கொடுத்து இருகிறார்கள், இன்றே போய் எப்படி கேட்பது என்று யோசித்தபடியே செல்வம் நின்றான்.

அதுமில்லாமல் அவனுக்கு பயங்கர யோசனை வேறு. என்ன தெரியும் இந்த பெண்ணிற்கு. இத்தனை நாட்கள் கார்த்திக் சக்தியை பொத்தி பொத்தி பாதுகாத்தான் என்பது தான் உண்மை.   

ஒரு நாள் தான் வீரமணி சக்தியுடன் கல்லூரி வந்தார். அதன் பிறகு அவர் வரவில்லை. இந்த ஒரு வாரமாக சக்தி கல்லூரிக்கு தனியாக தான் வந்தாள். காலையில் பத்து மணிக்கு வந்தால் மாலையில் ஐந்து மணிவரை இருந்தாள்.  இன்று அதையும் மீறி ஏழுமணி ஆகிவிட்டது.

என்ன செய்கிறாள் என்று செல்வத்திற்கு புரியவில்லை. எப்போதும் கம்ப்யூட்டரில் இருந்தாள், இல்லை போன் பேசிக்கொண்டு இருந்தாள். மொத்தத்தில் பிசியாக இருந்தாள்.        

ஊருக்கு சற்றுத் தள்ளி இருந்தது கல்லூரி……. செல்வம் போய், “மேடம்! வண்டியிருக்கிறவங்களுக்கு பிரச்சனை இல்லை, பஸ்ல போறவங்களுக்கு இந்த நேரத்துக்கு மேல இந்த ஸ்டாப்பிங்ல பஸ் நிக்கறதே கஷ்டம்!”, என்றான்.

உடனே கிளம்பிய சக்தி……. “நீ மட்டும் நேரா எங்க வீட்டுக்கு வா!”, என்று சொல்லி கிளம்பிவிட்டாள்.

“வீட்டிற்கா! எதுக்கு? மறுபடியும் திட்டா!”, என்றபடி நொந்துகொண்டு செல்வம் சக்தியின் வீட்டிற்கு சென்றான்.  

சக்தியின் கார் வருவதற்கு முன்பே செல்வம் அங்கே போய் விட்டான். அவன் வீட்டின் உள்ளே போகாமல் அந்த பிரமாண்டான கேட்டின் முன் தான் நின்றிருந்தான்.

ஆங்காங்கே ஆட்கள் இருந்தனர். எல்லோரும் செல்வத்திற்கு தெரிந்தவர்கள் தான் என்றாலும் செல்வம் உள்ளே போகவில்லை. அந்த வீட்டிற்கு கார்த்திக்கை பார்க்க அடிக்கடி வருவான். அவனுக்கு அது புது இடமல்ல. 

சக்தியின் கார் வீட்டிற்குள் நுழைய…. செல்வமும் அவனுடைய டூ வீலரை உள்ளே விட்டு நிறுத்தினான். 

நிறுத்தி வீட்டைப் பார்த்தவன்….. அதிர்ந்து விட்டான்.

பங்களாவின் முன் புறம் ஒரு சைடில் இருந்தது கார்த்திக்கின் ரூம். இப்போது அங்கே ஒரு ரூம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அதை இடித்து ஏதோ ஆர்ச் போல வடிவமைத்து இருந்தனர்.

ஒரு வாரத்தில் இந்த வேலை நடந்திருக்கிறது என்றால் இரவு பகல் பாராமல் வேலை நடந்திருக்க வேண்டும்.

அதையும் விட அதிர்ச்சி……. கார்த்திக்கின் ரூம் இருந்த இடத்தில் கட்டி வைக்கபட்டிருந்த நாய்கள்.

மூன்று நாய்கள் இருந்தன. எல்லாம் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

காரை விட்டு இறங்கிய சக்தியை பார்த்ததும் அதில் ஒரு நாய் குலைக்க…. “டாமி!”, என்ற அவளின் அதட்டலுக்கு அது கட்டுப்பட்டது. அதனருகில் சென்று இரண்டு பிஸ்கட் போட்டு அதனை தடவிக்கொடுத்தாள். அது இரண்டு காலில் நிற்க…. அது சக்தியின் உயரதிற்கே வந்தது.

செல்வத்திற்கு அந்த நாயை பார்த்தால் பயமாக இருந்தது. இப்போது அந்த நாய்கள் செல்வத்தைப் பார்க்க மூன்றும் ஒருங்கே பெரும் குரலெடுத்து குரைத்தது மட்டுமல்லாமல்……. சங்கிலியை பிய்த்துக் கொண்டு வருவது போல முன்னும் பின்னும் போக செல்வம் இன்னும் பயந்து விட்டான்.

சக்தி ஒரு அதட்டு அதட்ட, அவளின் குரலுக்கு மீண்டும் கட்டுப்பட்டு அமைதி காத்தது. சக்திக்கு நாய்கள் என்றாள் மிகவும் இஷ்டம். ஆனால் கார்த்திக்கிற்கு நாய்களை கண்டாலே பிடிக்காது.

கார்த்திக் சக்தியின் வீட்டிற்கு வருவதற்கு முன்பிருந்தே அவளின் வீட்டில் பெரிய அல்சேஷன் வகை நாய் ஒன்று இருந்தது.  

சக்திக்கு அதன் மேல் மிகவும் பிரியம். கார்த்திக் வந்த சில மாதங்களில் அது இறந்து போக…… அதன் பிறகு சக்தி வாங்கிய ஒன்றிரண்டு நாய்களும் வந்த சில நாட்களிலேயே இறந்து போனது.

அதற்குள் சக்திக்கும் கார்த்திக்கிற்கும் இடையில் ஒரு நல்ல புரிதல் வந்திருக்க… அதன் பிறகு கார்த்திக் எந்த நாயையும் வாங்க அனுமதிக்கவேயில்லை.    

“உள்ள போ செல்வம்!”, என்று சக்தி சொல்ல……. வீட்டிற்கு உள் நுழைந்தான் செல்வம். சக்தி வந்தவள் நேரே அவளின் ரூம் போய்விட்டாள். “உட்காருங்க”, என்று கூட சொல்லவில்லை.

செல்வமும் அவனாக உட்காரவில்லை நின்று கொண்டே தான் இருந்தான்.

அங்கே வந்த வேலையாளிடம், “அய்யா இல்லை”, என்று கேட்டான்.

“அய்யாவும் அம்மாவும் வெளில போய் இருக்காங்க!”, என்று அவன் சொன்னான். சக்தியின் மென்மையான குணம் கடுமையாக மாறிவிட்டது போல தோன்றியது.

இப்படி யாரையும் மரியாதை இல்லாமல் பேச மாட்டாள். கார்த்திக்கை ஒருமையில் அழைத்தாலும் அவனை மட்டுமே அப்படி அழைப்பாள். மற்றபடி வேறு யாரையும் அழைக்க மாட்டாள். இப்போது?

முன்பல்லாம் செல்வம் வீட்டிற்குள் வந்தாலே, “உட்காருங்க!”, என்று சொல்லி அடுத்த நிமிடம் குடிக்க தண்ணீர் வரும்…… பின்பு காபியோ, டீயோ, குளிர்பானமோ, எதுவோ ஒன்று குடிக்க வரும். இப்போது அவனை உட்கார் என்று கூட சொல்லவில்லை.

சக்தியின் இயல்பு குணங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக செல்வத்திற்கு தோன்றியது.        

ஒரு ஐந்து நிமிடத்திலேயே சக்தி வந்துவிட்டாள்.

அமர்ந்தவள்………  செல்வத்தை பார்த்து, “அவனுக்கு போன் பண்ணு!”, என்றாள்.

“அவன்”, என்றதுமே, “எவன்”, என்று செல்வத்திற்கு புரிந்தது. செல்வத்திற்கு பதட்டம் ஆனது. என்ன வரப்போகிறதோ தெரியவில்லையே. இந்த பெண்ணானால் வார்த்தையால் என்னைக் குத்தி கிழிக்கிறது.

பாஸ்ஸானால் அடிப் பின்னி எடுக்கிறார். “வாங்குன அடியில ஒரு வாரமா ஒரு லெக் பீஸ் கூட கடிக்க முடியாம, நேத்து தான் ஒன்னை கடிச்சேன்! அது பொறுக்கலையா இவங்களுக்கு!”, என்பது போல சக்தியை பார்க்க……

அவனின் பாவமான பார்வையை பார்த்து எல்லாம் சக்தி இளகவில்லை…… “போன் பண்ணு!”, என்றாள் அதிகாரமாக.

செல்வம் கார்த்திக்கிற்கு போன் செய்த நேரம் தான்…… இரவு உணவு சாப்பிட அங்கே வாசுகியின் வீட்டில் எல்லோரும் அமர்ந்து இருந்தனர்.

பத்ரிநாத், கார்த்திக், வைஷ்ணவி, சுமித்ரா, வாசுகி என்று எல்லோரும் டைனிங் டேபிளில் இருந்தனர்.

வாசுகி எப்போதும் அந்த பழக்கத்தை கடைபிடித்தார். காலை நேரம் பரபரப்பானது ஒன்றுகூட முடியாது. மதியம் எல்லோருக்கும் அவரவர் வேலை இருக்கும் இல்லை கல்லூரியில் இருப்பார்கள்.

அதனால் இரவு உணவு சேர்ந்து தான் உண்பது. இதை வந்த நாளில் இருந்து கார்த்திக்கிடம் சொன்னாலும் அவன் எப்போதும் அதை கடைப்பிடிக்க மாட்டான். வேலை ஏதாவது வந்துவிடும் இல்லை பசியில்லை அப்புறம் உண்ணுகிறேன் என்று விடுவான்.

இன்றைக்கு தான் அவன் வந்து உட்கார்ந்தான்….. அவன் முன் ப்ளேட் வைக்கப்பட்ட நேரம் செல்வத்தின் போன் வந்தது. ஒரு வாரமாக தன்னை எதற்கும் கூப்பிடாதவன் இப்போது கூப்பிடுகிறான் என்றதுமே பதட்டம் தொற்றிக்கொண்டது…..

அதற்குள் வாசுகி, “என்ன வைக்கட்டும் கார்த்திக்”, என்று கேட்க…….

“அம்மா! கொஞ்சம் அமைதியா இருங்க!”, என்றான் பட்டென்று…….. வாசுகிக்கு முகம் சுருங்கி போயிற்று…….. அங்கிருந்த எல்லோரும் அதைப் பார்த்து இருந்தனர்.  

உடனே போன் எடுத்தவன், “சொல்லுடா!”, என்றான்.

“மேடம் உங்ககூட பேசணுமாம்”, என்றான் செல்வம்.

சக்தியா? தன்னிடம் பேசுகிறாளா?…. இன்னும் குழப்பம் முகத்தில் படிய….. “சக்தி மேமா?”, என்றான் உறுதி படுத்திக்கொள்ள.

“ஆமாம்”, என்று செல்வம் சொல்ல……..

“குடு”, என்று சொல்லி அந்த இடத்தை விட்டு எழுந்து போனான்.

அங்கிருந்தவர்களுக்கு அவன், “சக்தி மேமா”, என்று கேட்டது காதில் நன்றாக விழுந்தது. வைஷ்ணவின் முகத்தில் கடுமை பரவ……. சுமித்ராவின் முகத்தில் பிடித்தமின்மை பரவியது.

பத்ரிநாத்திற்கு சக்தி யாரென்பது எல்லாம் தெரியவில்லை. அவர் பாட்டிற்க்கு உணவு உண்ண ஆரம்பித்தார். வைஷ்ணவியும் சுமித்ராவும் வாசுகியும் கார்த்திக் வருவதற்காக அவர்களும் உணவு உண்ணாமல் காத்திருந்தனர்.

அங்கே செல்வத்திடம் இருந்து போனை வாங்கினாள் சக்தி…….

“சுவிஸ் அக்கௌன்ட்ல எவ்வளவு பணம் இருக்கு?”, என்றாள் எடுத்தவுடனே……

கார்த்திக் அதற்கு பதில் சொல்லாமல், “எப்படி இருக்கீங்க மேம்”, என்றான்.

சக்தி அவனின் அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை………   மீண்டும், “அக்கௌன்ட்ல எவ்வளவு இருக்குன்னு கேட்டேன்”, என்றாள் கடினமாக.

இந்த முறை கார்த்திக் எவ்வளவு இருக்கிறது என்று சொல்ல……

“அந்த பணம் ஃபுல்லா எனக்கு இங்க இண்டியால வேணும்”, என்றாள்.

“ஏன்? எதுக்கு?”, என்று கார்த்திக் அதிர்ச்சியாக கேட்டான். நிறைய பணம்….  பல நூறு கோடி பணம்………

“எதுக்குன்னு உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை”, என்றாள்.

மூச்சுக்கு முன்னூறு தரம் கார்த்திக் என்ற வார்த்தையை சொல்லும் அவள், இப்போது மிகவும் கவனமாக இருந்தாள் அந்த பேரை சொல்லக் கூடாது என்று.

கார்த்திக்கும் கவனித்தான் சக்தி அவன் பேரை சொல்லவே இல்லை என்பதை.

“எதுக்கு?”, என்றான் மறுபடியும் குரலுயர்த்தி கார்த்திக்.

“உன்கிட்ட சொல்லனும்னு அவசியமில்லை. எனக்கு இங்க பணம் வேணும். அது வைட் மணியா இருந்தா பேங்க் ட்ரான்ஸ்ஷாக்ஷன் நானே பண்ணிடுவேன். அது வைட் மணியா இருக்கும்னு எனக்கு தோணலை”, என்றாள்.

“ஆமாம், அந்த மணிக்கு எந்த அக்கௌண்ட்டும் கிடையாது!”, என்றான் கார்த்திக்.

“அது தான் உன்கிட்ட கேட்கறேன், எனக்கு அந்த பணம் இங்க வேணும்”, என்றாள்.

“எதுக்குன்னு சொல்லாம பணம் கண்டிப்பா இங்க வராது”, என்றான் கார்த்திக்கும் உறுதியான குரலில்.

சக்திக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. “எங்க பணம், நாங்க என்ன வேணா செய்வோம், உன்கிட்ட சொல்ல முடியாது”,

கார்த்திக் அசரவேயில்லை….. “நான் இல்லாம அந்த பணம் உங்களுக்கு வரலை”,

“நானும் அதையே திருப்பி சொல்வேன், எங்க கம்பனி இல்லாம உனக்கும் பணம் வரலை”, 

“எதுக்குன்னு சொல்லாம கண்டிப்பா இங்க வராது!”, என்றான் மீண்டும் உறுதியுடன்.

அவனின் குரலில் இருந்த உறுதியை பார்த்தவள் முயன்று கோபத்தை அடக்கி…. “ப்ளாக் மணி எல்லாம் வைட் ஆக்கனும்…….. அந்த மணிய அக்கௌண்ட்ல கொண்டு வரனும்….. அதுக்கு டாக்ஸ் பே பண்ணனும்”, என்றாள்.

அவளின் பேச்சை கேட்ட கார்த்திக்கிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. “முட்டாளா நீங்க”, என்று சீறினான். “அவ்வளவு பணத்தை வைட் பண்ணினா எங்கிருந்து வந்ததுன்னு கேள்வி வரும்…… எல்லோரும் மாட்டுவோம்”, என்றான்.

“நான் வராம பார்த்துக்கறேன்”, என்றாள் சக்தியும் பதிலுக்கு சற்றும் சீற்றம் குறையாமல். 

“எப்படி? எப்படி பார்த்துக்குவீங்க? என்ன பண்ணபோறீங்கன்னு சொல்லுங்க?”, என்றான் அதட்டலாக கார்த்திக்.

“சொல்ல முடியாது! எனக்கு பணம் வேணும்!”,

“சொல்லாம என்னால இங்க கொண்டு வர முடியாது……”,

“நானே பார்த்துக்குவேன், வீணா தேவையில்லாமா ரிஸ்க் வேண்டாம்னு பார்க்குறேன்”,

“என்ன? என்ன பார்ப்பீங்க? நீங்க எப்படி கொண்டு வருவீங்க?”, என்றான் அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து……

“ஏன்? ஏன் கொண்டு வர முடியாம? அங்க இருக்குற ஆளுங்க கிட்ட பணம் கொடுத்தா அவன் இங்க இருக்குற அவன் ஆளு கிட்ட சொல்லி எனக்கு பணம் கொடுக்க சொல்ல போறான். அதுக்குன்னு சில பேர் இருக்காங்க…… யாருன்னு கூட லோகேட் பண்ணிட்டேன்…….. என்ன தெரியாதவங்கன்னு அநியாயத்துக்கு கமிஷன் எடுப்பாங்க அவ்வளவு தானே!”, என்றாள்.

கார்த்திக் வாயடைத்து போனான். நிஜம்! அதுதான் நிஜம்…… ஹவாலா மூலமாக பணம் பரிவர்த்தனை இப்படியும் நடக்கும்.

“தேவையில்லாம ஏதாவது பண்ணி மொத்தமா அழிச்சிடாதீங்க! அழிக்கறது ரெண்டாவது விஷயம்! பிரச்சனையாச்சு நிறைய சிக்கல்ல மாட்டிக்குவோம்…. தோண்ட தோண்ட வந்துக்கிட்டே இருக்கும்”, என்று நிதர்சனத்தை புரிய வைக்க முயன்றான். 

அவள் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை, “இதைதான் எங்கப்பாவும் சொல்லுறார். தேவையில்லாம ரிஸ்க் எடுக்க வேண்டாம், பிரச்சனை ஆகிடுச்சுன்னா மொத்த பணமும் போயிடும்னு பயப்படறார். அதான் உன்கிட்ட பேசறேன்”, என்றாள் சக்தி மீண்டும்.

“என்ன பண்ணப்போறீங்கன்னு சொல்ற வரைக்கும் பணம் இங்க வராது. ஏதாவது தப்பாச்சுன்னா வீணா எல்லோரும் மாட்டிக்குவோம்”, என்றான் கார்த்திக் மீண்டும் மீண்டும்.      

“சொல்ல முடியாது!”, என்றாள் பிடிவாதமான குரலில்.

“அப்போ பணம் வராது!”, என்றான் கார்த்திக்கும் பிடிவாதமான குரலில்.

“கார்த்திக்……!”, என்று கத்தினாள்……… அவளையும் மீறி அவன் பேர் வந்தது. கோபம் மண்டையின் உச்சி வரை ஏறியது சக்திக்கு………

“நான் என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியாது கார்த்திக்!”, என்றாள்.

“என்ன பண்ணுவீங்க?”, என்று கார்த்திக்கும் திரும்ப கேட்க…..

“அதை நீ செல்வத்துக்கு கிட்ட கேளு”, என்று போனை செல்வத்திடம் கொடுத்தாள்.

செல்வம் இந்த காரசாரமான விவாதத்தை ஒருவித பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் போனை கொடுத்த சக்தி……. கண்ணிமைக்கும் நேரத்தில் ஹாலின் டீபாயில் ஒரு ஆப்பிளும் அதை கட் செய்ய ஒரு கத்தியும் இருக்க…… அதை எடுத்து தன் கையில் ஒரே கிழியாக கிழித்தாள்…….

ரத்தம் கொட்டியது…….

“ஐயோ! என்ன பண்றீங்க? ரத்தம் கொட்டுது”, என்று செல்வம் கத்த……..

அங்கே கார்த்திக் பதறினான், அவனையும் மீறி…. போன் என்பதயும் மறந்து கத்தினான், “டேய்! என்னடா? என்னடா நடக்குது?”, என்று…….. கார்த்திக்கின் கத்தலை கேட்டு பத்ரிநாத்தை தவிர எல்லோரும் அவனருகில் என்னவோ ஏதோவென்று விரைந்து வந்தனர்.  

“பாஸ் கையை கிழிச்சுக்கறாங்க!”, என்று செல்வம் அலறினான். அவன் சொல்லும் போது பக்கத்தில் இன்னொரு இடத்தில் கிழித்தாள் சக்தி..

“மேடம் செய்யாதீங்க”, என்று போனை பிடித்துக்கொண்டே செல்வம் பதறி அவளருகில் போக.

“கிட்ட வராத! அங்கயே நில்லு……. அவன் கிட்ட சொல்லு அவன் சரின்னு சொல்ற வரைக்கும் கிழிச்சிக்கிட்டே இருப்பேன்னு சொல்லு!”, என்றாள்.

மீண்டும் கிழிக்க போக…..

“ஐயோ! இருங்க மேடம்!”, என்று கத்தினான் செல்வம்….. வீட்டில் இருந்த வேலையாட்கள் ஓடி வந்தனர்.

கார்த்திக்கிற்கு உயிரே போனது…… 

“பாஸ் சரின்னு சொல்ற வரைக்கும் இப்படிதான் செய்வாங்களாம்! ரத்தம் கொட்டுது பாஸ்!”, என்று பதற………

“சரின்னு சொல்லுடா!”, என்று கார்த்திக் சொல்லும்போதே கார்த்திக் காரில் அமர்ந்து அவனின் வீட்டின் கேட்டை தாண்டி இருந்தான்.

கார்த்திக் பதட்டமாக ஓடுவதை அவனின் குடும்பமே வேடிக்கை பார்த்தது.

“ஐயோ மேடம்! கையை தூக்கி பிடிங்க!”, என்று செல்வம் பதறினான். துணியை கொண்டு கட்டலாம் என்றாள் அவள் செல்வத்தை அருகில் வர விடவில்லை. ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.   

அங்கே சக்திக்கு உயிர்போகும் வலி இருந்தாலும்…… வலியை பொறுத்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளின் முகத்தில் வலியையும் மீறிய கடினத்தன்மை தென்பட்டது. நான் நினைத்ததை செய்தே தீருவேன் என்ற உறுதி தெரிந்தது.

சக்திக்கு தெரியும், கார்த்திக்கை வேறு எந்த செய்கையாலும் பணிய வைக்க முடியாது…… கெஞ்சினாலும் வேலைக்காகாது, மிஞ்சினாலும் வேலைக்காகாது.  

சக்தி அவனின் பலவீனம் என்ன? எங்கே அடித்தால் அவனுக்கு வலிக்கும் என்று பலமுறை இந்த ஒரு வாரமாக யோசித்து விட்டாள்.

அவளுக்கு கிடைத்த விடை அவள் தான்! அவளே தான்!  

                                                   

                          

  

     

   

     

                                

         

     

          

 

Advertisement