Advertisement

அத்தியாயாயம் பத்து :

நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த                                                                                              நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்                                                                            கொஞ்சமோ பிரிவினைகள்- ஒரு                                                                                                                                கோடி யென்றால்அது பெரிதாமோ?

                               ( பாரதி )

சக்தியால் கார்த்திக்கின் வார்த்தைகளை செயலை ஜீரணிக்கவே முடியவில்லை……..

வீரமணி தளர்ந்து அமர்ந்துவிட்டார். தெய்வானை பேச்சற்று போய்விட்டார்.

மூவரும் சொல்லொணா வேதனையில் இருந்தனர். சொத்து என்பது அங்கே இரண்டாம் பட்சம் ஆகிவிட்டது. அவர்களுக்கெல்லாம் வருத்தம் கார்த்திக் மேல் வைத்த நம்பிக்கை பொய்த்து போனதே……

தன்னுடைய பெண்ணுக்கே அவனை மணமகனாய் வரிக்க நினைத்தவர் தெய்வானை……. அந்தளவுக்கு அவன் மேல் நம்பிக்கை மட்டுமல்ல அன்பையும் வைத்திருந்தார். இந்த கார்த்திக்கின் செயல்…… எல்லாம் பொய்த்து போய்விட்டதே என்பதாக இருந்தது.

இங்கே கார்த்திக் பேசிக்கொண்டு இருக்கும் போதே மாரி ஆட்களோடு வந்து அவனின் ரூமில் இருந்த சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தான்.

“உங்ககிட்ட இல்லாத எல்லா பத்திரமும் இந்த பெட்டிகள்ள இருக்கு……. நான் இங்க இருந்து எதையும் எடுத்து போகலை, வாசுகி குழுமத்தை மட்டும் தான் எடுத்துட்டு போகறேன்”,

“உங்க சொத்து மதிப்பை அதுக்காக தான் பல நூறு மடங்கு உயர்த்திட்டேன்”, என்றான்.

யாரும் அவன் என்ன பேசுகிறான் என்று கேட்கும் மனநிலையிலேயே இல்லை.

வீரமணி, “என் சந்துருவோட பையனா நீ!”, என்று கேட்டவர் தான்…….. அதன் பிறகு வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவரின் தோற்றம் மிகவும் ஓய்ந்து தெரிந்தது.

எல்லாவற்றையும் கார்த்திக், வீரமணியையும் தெய்வானையையும் பார்த்தே பேசினான். மறந்தும் சக்தியின் புறம் திரும்பவில்லை.

இவ்வளவு பேசிய கார்த்திக் மன்னிப்பு என்ற வார்த்தையை மட்டும் கேட்கவேயில்லை. தெய்வானையும் ஏதாவது அவன் சமாதானமாக பேசுவானா……. உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

ஆனால் கார்த்திக் அதற்கான வாய்ப்பை கொடுக்கவேயில்லை. “வாசுகி குழுமத்தை  நான் எடுத்துகிட்டேன்! அதுக்கு பதிலா உங்களுக்கு சொத்தை அதிகப்படுத்தி கொடுத்துட்டேன்!”, என்பதாக தான் அவனின் நடவடிக்கை இருந்தது.

அவனும் அவர்கள் ஏதாவது பேசுவார்களா என்று காத்திருந்தான்.  

“ஏன் கார்த்திக் இப்படி எங்களுக்கு தெரியாம பண்ணின? ஒரு வார்த்தை எங்ககிட்ட நீ யாருன்னு சொல்லியிருக்கலாமே! நாமளே சுமுகமா பேசி தீர்திருக்கலாமே!”,

“நீ ஏதாவது கேட்டா நாங்க இல்லைன்னு சொல்லிடுவோமா”, என்றார் தெய்வானை.

“நீ கேட்டாலே நாங்க மறுக்க மாட்டோம்! அதுவும் நீ இவரோட நண்பனோட பையனா கேட்டிருந்தா இவர் கண்டிப்பா செஞ்சிருப்பார்”,

“உங்கப்பா இந்த சொத்தை எங்களுக்கு குடுப்பார்ன்னு நினைச்சு….. இவர் உங்கப்பாவுக்கு உதவி பண்ணலை! அதுக்கு முன்னாலயே பண்ணினோம்”,

“அவர் பணத்தை திருப்பி குடுக்க முடியாம எங்களுக்கு இதை குடுத்தப்போ……. இதோட மதிப்பை விட நாங்க குடுத்த பணம் அதிகம்”,

“அப்போவே உங்க தாத்தா நாலுல மூணு பங்கு பணத்தை குடுத்திருந்தா கூட நாங்க திரும்ப குடுத்திருப்போம்! ஆனா அவர் ஒத்துக்கவேயில்லை! கேஸ் போட்டார்…..”,

“அந்த கேஸ் நடந்துட்டு இருந்த போது எங்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் தெரியுமா? நாங்க ஒண்ணுமில்லாம போயிடுவோமொன்னு எவ்வளவு பயந்தோம் தெரியுமா”,

“அப்போ கூட உங்கப்பாவுக்கு உதவுனதுக்காக இவர் வருத்தப்பட்டதே இல்லை! நானும் அவரை இது நமக்கு தேவையா? நீங்க ஏன் உதவி செஞ்சிங்கன்னு கேட்டதே இல்லை”,

“ஆனா! எல்லாத்தையும் நீ ஒண்ணுமில்லாம பண்ணிட்ட கார்த்திக்…”, என்றார். சொல்லும்போது அவரின் குரல் உடைந்தது. கண்களில் கண்ணீர் பெருகியது.

“உலகத்துல யாரையும் நம்பக்கூடாதுன்ற படிப்பினையை எங்களுக்கு குடுத்திருக்க….. யாருக்கும் உதவி செய்யக் கூடாதுன்னு எங்களுக்கு புரிய வெச்சிருக்க……”, சொல்லிக்கொண்டு இருந்த தெய்வானை உடைந்தே விட்டார். கண்ணீர் பெருகியது.

அந்த அன்பான பெண்மணியின் கண்ணீருக்கு காரணமாகி நின்றான் கார்த்திக். இந்த பாவங்கள் என்றும் தனக்கு தீராது என்று அவனுக்கு தெரியும்.   

சக்தி அவளின் அம்மா உடையவும் தான் எழுந்தாள்……. “அம்மா எழுந்திருங்க! உள்ள போங்க!”, என்று அவரை கைபிடித்து அழைத்து ரூமிற்குள் சென்று விட்டு வந்தாள்.

கார்த்திக் சக்தியை பார்ப்பதையே தவிர்த்தான்.

ஒரு பயம் அவனுள், அவனால் வீரமணியையும் தெய்வானையையும் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் சக்தியை எதிர்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. 

அவளை அவன் தவிர்ப்பதை சக்தியால் உணர முடிந்தது.

தந்தை அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்தவள், “உங்களுக்கு ஏதாவது இவன் கிட்ட சொல்லனுமாப்பா”, என்றாள்.

அவனை பார்த்தவர், “எனக்கு ஆம்பிளை பசங்க கிடையாது, ஒரு பொண்ணை தானே பெத்து வெச்சிருக்கேன், என்னால என்ன செய்ய முடியும்னு தானே நீ என்கிட்ட விளையாடி பார்த்துட்ட…..”, என்று வீரமணி அவனை பார்த்து விரக்தியாக சொன்னார்.

“என்ன பேச்சுப்பா இது! நான் இருக்கேன் பா! நான் பார்த்துக்குவேன், இவன் என்ன செய்யறான்னு நான் பார்க்குறேன்பா!”, என்றாள் அவனை பார்த்தபடி தைரியமாக….  

கார்த்திக் அசையாமல் நின்றான். மறந்தும் கண்களை சக்தியின் புறம் திருப்பவில்லை. 

“நீயே பார்த்துக்கோம்மா! எனக்கு இவன் கிட்ட பேசவே பிடிக்கலை!”, என்றார் வெறுப்பாக வீரமணி.

அவரின் வெறுப்பான பார்வை கார்த்திக்கை உயிரோடு பொசுக்கியது.

வீரமணி பின்பு எழுந்து தளர்ந்த நடையுடன் ரூமிற்குள் போக போனவர்…. கார்த்திக்கை பார்த்து, “நீ எங்களுக்கு ஏதாவது நிஜமாவே செய்யனும்னு நினைச்சன்னா…… இனிமே எங்க முகத்துல எப்பவுமே முழிக்காத”, என்றார்.

“ஏம்பா அதை மட்டும் சொல்றீங்க! நம்ம சொத்துப்பா அது! அதை நம்ம திரும்ப வாங்குவோம்ன்னு சொல்லுங்கப்பா!”, என்றாள் ஆவேசமாக சக்தி.

“இல்லைம்மா! நமக்கு அது வேண்டாம்….. வேண்டவே வேண்டாம்…… இவன் எனக்கு இனிமே எந்த வகையிலும் பொருட்டு கிடையாது, ஆனா என் சந்துருவோட குடும்பத்துக்கு நான் செய்ய கடமை பட்டிருக்கேன்மா…..”,

“போகட்டும்! எடுத்துட்டு போகட்டும்! இதுமட்டுமில்ல இன்னும் வேணும்னாலும் எடுத்துக்க சொல்லு! அவன் எதை கேட்டாலும் குடுத்துடு! இந்த சொத்து முழுசும் கேட்டாலும் குடுத்துடு………!”,

“நீ படிச்சிருக்க, உனக்கு வேலை கிடைக்காது! நீ எங்களை காப்பாத்த மாட்ட! இவனுங்க சங்காத்தமே எனக்கு வேண்டாம்மா…… இவன் மட்டுமில்லை எவன் சங்காத்தமும் எனக்கு வேண்டாம்மா”, என்றார் விரக்தியாக….

“ஆனா என் கண்ல மட்டும் எப்பவும் இனிமே படவேண்டாம்னு சொல்லு……..”,

“ஏன்னா இவன் என் கண்ல பட்டா இவன் என்னை ஏமாத்தினது ஞாபகத்திற்கு வரும். நான் இவன் நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்க நிறைய வாய்ப்பு இருக்கு….. என் சந்துருவோட பையன் நல்லாதான்மா இருக்கனும்.  இவனை இப்போவே இங்கயிருந்து போகச் சொல்லு”, என்று சொல்லி சென்றுவிட்டார்.

கார்த்திக் உயிரோடு இறந்தான்.

அவன் சந்திரசேகரின் மகன் என்று தெரிந்த பிறகு அவனுடன் வீரமணி சண்டை போடவில்லை, அவனை ஒதுக்கி அப்படியே தூக்கி தூரப் போட்டு விட்டார்.

அவ்வளவு பெரிய ஹாலில் இப்போது சக்தியும் கார்த்திக்கும் மட்டுமே இருந்தனர்.

அவனைப் பார்க்க பார்க்க சக்திக்கு ஏமாற்றம் சூழ்ந்தது. “நீயா? நீயா இப்படி?”, என்று அவளின் பார்வை அவனை குற்றம் சாட்டியது.  

இருவர் மட்டுமே உள்ளனர் என்று தெரிந்தும் கார்த்திக் சக்தியின் முகம் பார்க்கவில்லை.

வீரமணியிடம் இருந்து வந்ததே அவனால் தாங்க முடியவில்லை இனி சக்தி பேசினால்…..

அவனருகில் வந்தாள் சக்தி……..

“ஏன் கார்த்திக்? ஏன் கார்த்திக் இப்படி பண்ணின? நாங்க உனக்கு யாருமேயில்லையா கார்த்திக்? ஒரு தடவை எங்ககிட்ட பேசி பார்க்கணும்னு கூட தோணலையா கார்த்திக்? அப்படியா நான், அப்பா, அம்மா, உன்கிட்ட நடந்துகிட்டோம்”,

 “நாமளாவது எப்பயாவது சண்டை போடுவோம்! ஆனா எங்கப்பாவும் அம்மாவும் நீ எது சொன்னாலும் கேட்பாங்களே கார்த்திக்! நானும் உன்கூட சண்டை போட்டாலும் கடைசியா நீ சொல்றதை தானே கார்த்திக் கேட்பேன்!”, என்று சொல்லும்போதே தேம்பல் வெடித்தது.

அப்போதும் கார்த்திக் வேறு புறம் தான் பார்த்து நின்றான்.

அவன் முன்னால் நிமிர்ந்து நிற்க வேண்டும், அழுகையை காட்டக் கூடாது என்று நினைத்தாலும் அவளால் முடியவேயில்லை.

கார்த்திக் அவளுக்கு பதில் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

அவன் போவதையே பார்த்து நின்றாள் சக்தி…….. திடீரென்று அவளுக்கு ஒரு சந்தேகம் தோன்ற……..  கண்களை அவசரமாகத் துடைத்தபடி…….

அவன் வாயிலை நெருங்கும் போது அவனிடம் வேகமாக ஓடிச் சென்று அவன் முன் நின்றாள் சக்தி.

மூச்சு வாங்க முன் நின்ற சக்தியை பார்க்காமல் வேறெங்கோ பார்த்தான் கார்த்திக்.

“என் முகத்தைப் பாரு கார்த்திக்!”, என்றாள் அழுகையை கட்டுப்படுத்தியவளாக……..

கார்த்திக் பார்க்கவும், “உண்மையா சொல்லு, உன் வயசென்ன?”, என்றாள்.

கார்த்திக்கிற்கு சக்தி கண்டுகொண்டாள் என்று புரிந்து விட்டது. பார்வையை வேறு புறம் திருப்பினான்.

அவன் பார்வை சென்ற புறம் அவன் முன்வந்து நின்ற சக்தி, “சொல்லு கார்த்திக்!”, என்றாள்.

சொல்லும்வரை விடமாட்டாள் என்று புரிந்தவன், “உங்களை விட ரெண்டு பெரியவன் மேம்”, என்றான்…..

சக்திக்கு இன்னும் அழுகை பொங்கியது…..

“ஏன் கார்த்திக்? ஏன் கார்த்திக் பொய் சொன்ன?”, உதடுகள் அழுகையில் பிதுங்கியது.

இவ்வளவு நேரம் கண்ணாடி போடாமல் இருந்த கார்த்திக் கண்களுக்கு கறுப்பு கண்ணாடியை மாட்டினான்.

சக்தியின் அழுகையை பார்க்க பார்க்க அவனுக்கு டென்சன் ஏறியது. அவனின் கழுத்து வேறு, “விண்! விண்!”, என்று வலித்தது. அவனையறியாமல் கைகள் கழுத்துக்கு சென்று அதனை அழுத்திக் கொடுத்தது. 

சக்தியால் கார்த்திக் என்ற பெயரை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவனோடு இப்போது சண்டை போடும்போதும், அவளுக்கு அழுகை அடக்க முடியாமல் வந்து கொண்டு இருந்த போதும், கார்த்திக் என்ற பெயர் ஒவ்வொரு வாக்கியதிற்கும் வந்தது.   

“சொல்லு கார்த்திக்! ஏன் கார்த்திக் பொய் சொன்ன? பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன கார்த்திக்?”,

“நான் எங்கப்பா கிட்ட கார்த்திக் மாதிரி ஒரு மாப்பிள்ளை வேணும்னு கேட்கறதுக்கு பதிலா……….. கார்த்திக் தான் வேணும்னு கேட்டுவேன்னு பயந்து இப்படி சொன்னியா கார்த்திக்”, என்றாள்.

அவனின் எண்ணங்களை அப்படியே சொன்னாள். கார்த்திக் அதிர்ந்து நின்றான். வார்த்தையால் அவனை வலிக்க வலிக்க அடித்தாள் சக்தி. ஆனால் அவனை விட அவளுக்கு இன்னும் வலித்தது.    

“சொத்தை எங்களுக்கு தெரியாம எடுத்துக்கறதுல உனக்கு காரணம் இருக்கலாம், ஆனா வயசை கம்மியா சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது கார்த்திக்”,

அவனால் அவள் முன்னால் நிற்கவே முடியவில்லை……. தூர ஓடிப்போ என்று அவனின் மூளை கட்டளையிட்டது. ஆனால் அவளின் கேள்விகளில் ஆடிப் போயிருந்த மனதால், கால்களை அசைக்க முடியவில்லை. நடையை எட்டிப் போட முடியவில்லை.

“இந்த பொய்ய நீ இப்போ சொல்லியிருந்தா கூட பரவாயில்லை. ஆனா ரொம்ப முன்னமே…… நீ இங்க வந்து கொஞ்ச நாள்ல……… நான் உனக்கு ஃபிரண்ட் ஆனாவுடனேயே சொன்னியே கார்த்திக்! அப்போ எனக்கு ஒரு பதினேழு பதினெட்டு வயசு இருக்குமா?”,

“அப்போவே நான் உன்னை என்ன பண்ணிடுவேன்னு பயந்த கார்த்திக்”, வார்த்தைகளை சாட்டையாய் சுழற்றி அவனை மட்டும் அடிக்கவில்லை சக்தி….. அவளுக்கு அவளே அடித்துக்கொண்டாள்.

“நான் அப்போவே உன்கிட்ட விழுந்துடுவேன்னு நினைச்சியா கார்த்திக்! என்னை அவ்வளவு மோசமாவா நினைச்ச நீ! நான் அவ்வளவு மோசமான பொண்ணா…”, கேட்கும் போதே தேம்பினாள்.   

கார்த்திக் அவளுக்கு பதில் சொல்லும் மொழியையே மறந்து போனான்.

“நீ என்மேல இத்தனை நாள் காட்டின அன்பு, அக்கறை எல்லாம் பொய்யா கார்த்திக்…..”,

“இல்லை! இல்லை!” என்று கத்த வேண்டும் போல கார்த்திக்கிற்கு தோன்றினாலும் அவனால் முடியவில்லை.

“நீ இருந்தா என்னோட கார் கதவை கூட திறக்கமாட்டேனே கார்த்திக், நீதானே திறப்ப! நான் யார் கூட பேசணும், பேசக்கூடாது, எல்லாம் நீதானே முடிவு பண்ணுவ கார்த்திக்”,

அவள் கேட்க கேட்க அவனின் உயிர் உருகியது.

“என்னை…. என்னை…. உனக்கு அடிக்ட் பண்ணிவெச்சிருக்குற கார்த்திக்…. நான் தனியா என்ன பண்ணுவேன்….”, என்றாள் அடிப்பட்ட குழந்தையாக.    

“ஏன் கார்த்திக்? கீழ இருந்து தள்ளிவிட்டா எனக்கு அதிகமா அடிபடாது, எழுந்துக்குவேன்னு தெரிஞ்சு………. நான் எழுந்துக்கவே கூடாதுன்னு என்னை மேல இருந்து தள்ளிவிட்டுட்டியா கார்த்திக்”, என்றாள்……

சொல்லும்போதே கேவல் வெடித்தது சக்திக்கு. முகத்தை கைகளால் மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

கண்ணன் முகமறந்து போனாள் – இந்தக்                                                                                                கண்க ளிருந்துபய னுண்டோ?                                                                                                                         வண்ணப் படமுமில்லை கண்டாய் –  இனி                                                                                                     வாழும் வழியென்னடி தோழி?

                     (பாரதி )

கார்திக்கினால் அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியவில்லை….. ஏறக்குறைய எதிலிருந்தோ தப்ப நினைப்பவன் போல ஓடி காரில் ஏறி அமர்ந்தான்……

சக்தியின் மேலே இருந்து என்னை ஏன் தள்ளி விட்டாய் என்ற கேள்வியில் உயிர் வாழ தகுதியற்றவனாக உணர்ந்தான்.

சக்தி கேட்கும் எந்த கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் அவனிடம் அதற்கெல்லாம் பதிலே கிடையாது.

அவரவற்கு………. அவரவர் நியாயங்கள்……… அவரவர் தர்மங்கள்…….

அராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ                                                                                         யாரோ யாரோ எனக்காரோ யாரோ                                                                                                                          என் தெய்வமே இது பொய் தூக்கமா                                                                                                            நான் தூங்கவே இனி நாளாகுமா

எப்போதும் அவனுள் ஒலிக்கும் பாடல் இப்போதும் ஒலித்தது.  எதையோ பார்க்க விரும்பாதவன் போல கண்களை இறுக்க மூடிக் கொண்டான்.

இவன் வேகமாக வந்து காரில் ஏறி அமர்வதை பார்த்த மாரி, “டேய் பசங்களா நீட்டா பேக் பண்ணி, ஒரு துண்டு சீட்டு கூட விடாம……. பத்திரமா கொண்டு வாங்கடா”, என்று கார்த்திக்கின் சாமானை எடுக்க சொல்லி விரைந்து வந்து காரை எடுத்தான்.

சிறிது தூரம் போன பிறகே, “எங்கே போகட்டும் சார்?”, என்றான் மாரி.

யாரும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று கத்தி சொல்லி…….. இங்கேயிருந்து எங்கேயாவது தொலைந்து போய் விட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது கார்த்திக்கிற்கு.  

ஆனால் முடியாதே……… வீரமணியை மட்டும் தானே இதுவரை எதிர்க்கொண்டு இருக்கிறான். இன்னும் அவனின் தாத்தா இருக்கிறாரே.

அவனின் தந்தையை எப்போதும் கேவலமாக பேசும் தாத்தா…….

மனிதனாக பிறந்துவிட்டால் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி தான் அடைய வேண்டும் என்பது நியதியா என்ன?…….. தோல்விகளை ஏற்று வாழ முடியாதா?

அவனின் தாத்தாவை பொருத்தவரை வாழக்கூடாது… வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

எல்லோருக்கும் எல்லா நேரமும் அது சாத்தியமல்ல…..

எல்லா நேரமும் தன் மகளின் வாழ்க்கை வீணாகி விட்டதே என்று அவனின் தந்தையை திட்டுவார். அதுவும் கார்த்திக் தான் அந்த திட்டுகளை எல்லாம் வாங்கும் பிரதிநிதி.  அவனின் தந்தை தனியாக இருந்தார்.

அவரை எதுவும் சொல்ல முடியாததால் அவன் ஸ்கூல் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போது அத்தனையும் கார்த்திக்கை நோக்கி பாயும். சில சமயம் ஸ்கூலுக்கு பார்க்க வந்து திட்டிவிட்டு போவார்.  

ஏன் சாப்பிடும் போது கூட விடமாட்டார், “உங்கப்பா இந்த சாம்பார்ல போடற கருவேப்பிலை மாதிரிடா……… எல்லோரும் தூக்கி போட்டுடுவாங்க”, என்பார்.

பிறக்கும் போதே கனவானாக பிறப்பவர்கள் இறக்கும் போது சிலசமயம் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவார்கள்….. பிறக்கும் போது ஒன்றுமில்லாமல் இருப்பவர்கள் சிலசமயம் இறக்கும் போது கனவான் ஆகிவிடுவார்கள்.

இதில் அவனின் தந்தை முதல் ரகம்….. அவரின் இறப்பு யாருக்கும் வரக்கூடாத இறப்பு…. அந்த சாவை பற்றி நினைக்கும் போது கார்த்திக்கின் பற்கள் அரைபட்டன. பற்களை கடித்து வாயை கையில் பிடித்துக்கொண்டான். அவரை பற்றி நினைக்கும் போதே கண்கள் கலங்கின.

இன்னும் அவன் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.

சினிமா தொழிலில் மிக மோசமாக தோற்றுப் போனவர் அவனின் தந்தை. அவர்கள் ப்ரொடக்ஷனை மீண்டும் உயிர்த்தெழ செய்ய வேண்டும். அவனின் தந்தை பெயரை கட்டாயம் நிலை நாட்ட வேண்டும்.

பணமில்லாதவன் பணமில்லாமல் இருந்தால் ஒன்றுமில்லை. ஆனால் பணமுள்ளவன் பணமில்லாமல் போய்விட்டால் அவன் சந்திக்கும் அவமானங்கள் சொல்லில் அடங்காதவை. அதில் கடனும் சேர்ந்து கொண்டால்…… வாழ்க்கையே ?????????

பணமில்லாதவன் பிணத்திற்கு சமம் என்பது முற்றிலும் உண்மை. அவனின் தந்தை அதனாலேயே அப்படியாகிப் போனார்.   

சக்தியின் நினைவுகள் பின்னோடு போயின……. அவனின் அம்மாவின் வீடு நோக்கி பயணப்பட்டான். பத்து வருடங்களுக்கு பிறகான பயணம். அவனின் தாத்தாவை பார்க்கப் போகிறான்.

எப்போதாவது வாசுகி……., வைஷ்ணவி, சுமித்ரா மற்றும் பிரபுவை அழைத்துக்கொண்டு வந்து அவனை எங்காவது வெளியில் சந்திப்பார். அவன் தான் வீடு செல்ல மாட்டானே.

ஆனால் அவன் வீட்டை விட்டு வந்த பிறகு அவனின் தாத்தாவை பார்க்கவேயில்லை. அவரைப் பார்க்க போகிறான்.

 இங்கே சக்தி அழுது அழுது ஓய்ந்தாள். அதுவும் பெற்றோர்களுக்கு தெரியாமல் வேறு அழ வேண்டி இருந்தது. அவளின் அழுகை இன்னும் அவர்களை பாதிக்கும்…….. இது அவர்களுக்கு அவள் நம்பிக்கை கொடுக்க வேண்டிய சமயம்.

தொழில் போனது ஒரு புறம் என்றாலும்……. அந்த தொழிலை வைத்து தான் இத்தனை சொத்துக்களும். அந்த தொழில் போய்விட்டது……..

அதையெல்லாம் விட மோசடி………. கார்த்திக் அவர்களை மோசம் செய்திருக்கிறான், நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறான்…….. கூட இருந்தே குழி பறித்திருக்கிறான்…..

அவன் விரோதி அல்ல அவன் துரோகி….. அவன் ஏமாற்றினான் என்பது ஒரு புறம் இருக்க……. இவர்களும் அவனை நம்பி மிக மோசமாக ஏமாந்து இருக்கிறார்கள். 

அவளின் அம்மாவையும் அப்பாவையும் தேற்றுவதே பெரிய வேலையானது அவளுக்கு. அதில் அவளுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் எல்லாவற்றையும் அவளுள் போட்டு புதைத்தாள்.

அழுகையை அடக்கினாள்……  கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. சொத்துக்கள் இருந்தாலும், பணம் இருந்தாலும், அதைக் கட்டி மேய்க்க வேண்டாமா? அதை கட்டிக் காப்பாற்ற வேண்டாமா?.

புதிதாக காலேஜ் தொழிலில் வேறு அவளை இறக்கியிருக்கிறான்.

பார்க்க வேண்டும்…… எல்லாம் அவள் பார்க்க வேண்டும்…….. கார்த்திக்கின் தயவு எதுவுமின்றி அவள் பார்க்க வேண்டும்.

முடியுமா ????

“முடியும்”, என்று அவளுக்கு அவளே சொல்லிகொண்டாள்.

இதையெல்லாம் சமாளிக்கும் தைரியமும் தெம்பும் அவளுக்கு இருந்தது. அவளுடைய தந்தையும் சாமான்யறல்ல அவரும் எல்லாமும் பார்ப்பார். ஆனால் கார்த்திக்கை நம்பி மோசம் போனது அவரை மனதளவில் வெகுவாக பாதித்து இருந்தது.

அவருக்கு சற்று அவகாசம் வேண்டும் என்று சக்திக்கு புரிந்தது. எல்லாம் அவள் பார்ப்பாள் தான்…… ஆனால் கார்த்திக் அவனின் வயதை பொய்யாகக் கூறி தன்னை ஏமாற்றியதை நினைக்கும் போதெல்லாம் கண்ணில் நீர் பெருகியது.

அவளின் படுக்கையில் அமர்ந்து எதிரில் நிலைக்கண்ணாடியில் தெரிந்த அவளின் உருவத்தை பார்த்தாள். அதில் தெரிந்த அவளிடம் அவளே கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.

“அவன் ஏமாற்றினானா? நீ ஏமாந்தாயா?”,

“என்ன நடக்கக் கூடாது என்று நினைத்தான்…”,

“என்ன நான் செய்து விடுவேன் என்று நினைத்தான்…..”,   

“ஏன் பொய்யுரைத்தான்…….”,

யோசிக்க யோசிக்க அவளின் மனம் சொல்லொணா வேதனையில் துடித்தது…….

யாரிடம் சொல்ல முடியாத வேதனையும் இது…… 

“என்ன ஒரு அசிங்கம்! ஒரு ஆண்மகன் எனக்குள்ளும் அவனுக்குள்ளும் என்ன மாற்றம் வரும் என்று அவனின் வயதை என்னிடம் குறைத்துக் கூறினான்”,

“நான் அவனிடம் மயங்கி விடுவேன் என்றா”,

“நானும் பையித்தியம் மாதிரி அவன் என்னை விட சிறியவன், அவன் எனக்கு மாப்பிள்ளையாக வேண்டாம்! அவனைப் போல ஒருவன் தான் மாப்பிள்ளையாக வேண்டும் என்று கூறியிருக்கிறேனே……”,

“அவன் என்னை எவ்வளவு கேவலமாக நினைத்திருப்பான்…. இதற்கு தான் வயதை குறைத்துக் கூறினானா?”,

“என்னிடம் வயதைக் குறைத்து கூறி என்ன நினைத்து என்னை பார்த்திருப்பான். இந்த பெண் என்னிடம் மயங்கிவிடுவாள்……. நான் தான் வேண்டும் என்று கேட்பாள்….. என்று நினைத்திருப்பானா?”,

“சக்தி அவ்வளவு  கேவலமான பிறவியா…..”,  

கண்ணாடியில் அவளைப் பார்த்து அவளேக் கேட்டாள்……..

“என்ன மாதிரி கேவலமான பிறவியா உன்னை நினைச்சிட்டான் சக்தி…..”,

அவளின் முகத்தை அவளுக்கே பார்க்கப் பிடிக்காமல்…..  கையில் கிடைத்ததை தூக்கி கண்ணாடி மேல் எறிந்தாள்…….

அது உடைந்து சில்லு சில்லானது…… அவளின் இதயம் போல அதுவும் சுக்கு நூறானது……  

கார்த்திக்கின் உயிரையே எடுக்க வேண்டும் போல ஒரு ஆவேசம் எழுந்தது…..  

நான் வீழ்வேனென்று நினைத்தானோ…………

Advertisement