எனக்கென்று எண்ணி அங்கிருந்து செல்லும் சத்யாவைப் பார்த்த படி நின்ற மிதுனிடம் ஆட்டோ டிரைவர் மேலும் சண்டைக்கு வர “சரி சார், இப்ப என்ன? பணம் தானே தரணும்? இருங்க தரேன்”, என்று சொன்னவன் தன்னுடைய கையில் இருந்த ஐயாயிரம் பணத்தை அவனுக்கு கொடுத்து விட்டே அங்கிருந்து சென்றான்.
பணம் போனது அவனுக்கு பிரச்சனை இல்லை. அதை விட அவனை அதிகம் பாதித்தது சத்யாவின் பாரமுகமும் அவனது செய்கையும் தான். என்ன தான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் மனது மட்டும் பாரமாக இருந்தது.
முதலில் இருந்தே சத்யா இப்படி இருந்தால் மிதுன் இதை பெரிதாக எண்ணியிருக்க மாட்டான். ஆனால் அன்று நன்றாக பேசி விட்டு இப்போது இப்படிச் செய்வது அவ்வளவு வருத்தமாக இருந்தது.
அதுவும் வீணா. மிதுனுக்கு அவள் அவ்வளவு முக்கியம். அவளுக்கு உடன் பிறந்தது யாரும் இல்லை. அவளுக்கு மட்டும் இல்லை. மதுவுக்கும் தான். இருவருமே இவனை மட்டும் தான் உடன் பிறந்தவனாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க சத்யா இப்படி நடந்து கொள்வது மிதுனை அவ்வளவு காயப் படுத்தியது.
ஐயாயிரம் பணம் அவன் இரண்டே நாளில் சம்பாதித்து விடுவான். ஆனால் சத்யா அப்படி செய்தது அவனுக்கு ஏற்புடையதாக இல்லை. இது காலத்துக்கும் மனதுக்குள் ஒரு வடுவாக இருந்து கொண்டே தானே இருக்கும்?
உண்மையைச் சொல்லப் போனால் சிறு எரிச்சலும் கோபமும் கூட அவனுக்கு வந்தது. வீணாவிடம் சொல்ல அவன் நாவு துடித்தது. ஆனால் இதைச் சொல்லி அவர்கள் இருவருக்கும் இடையே பிணக்கு வருவதை அவன் விரும்ப வில்லை. அதனால் அவன் அமைதியாக தன்னுடைய வேலையைப் பார்க்க கிளம்பினான். ஆனால் வீணாவே அப்போது அவனை அழைத்தாள்.
“சொல்லு வீணா”
“எங்க டா இருக்க?”, என்று பட்டென்று வந்தது அவளது கேள்வி.
“இது என்ன கேள்வி? சென்டர் போய்ட்டு இருக்கேன்”
“அவங்க வீட்டுக்கு போனியா? என்ன சொன்னாங்க? அவர் கால் எடுக்கவே இல்லை”
“டிரைவிங்ல இருந்துருப்பாங்க வீணா. அப்புறம் நான் அவங்க வீட்ல இருந்து இப்ப தான் கிளம்புறேன். மாம்ஸ் கிட்ட சொல்லியிருக்கேன். ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேக்குறேன்னு சொல்லியிருக்காங்க. இப்ப வரைக்கும் அது யாரு என்னன்னு எதுவும் கண்டு பிடிக்கலையாம்? நம்மளை ரொம்ப கவலைப் பட வேண்டாம்னு சொன்னாங்க”, என்று அவளை சமாதானப் படுத்தும் விதமாகவே சத்யாவைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னான்.
ஆனாலும் அவன் குரல் ஒரு மாதிரி இருக்க “டேய் மித்து நீ ஓகே வா? அங்க யாரும் எதுவும் சொன்னாங்களா?”, என்றாள். அவள் அக்கறையில் அவன் கண்கள் பணித்தது. அவனுக்கு நிச்சயம் தெரியும் வீணாவைப் பற்றி. மிதுனுக்கோ அவளைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதாவது தவறாக நடந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாள்.
“ஏய் லூசு, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. ஆண்ட்டி என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. சாப்பிட வச்சு தான் அனுப்பினாங்க. வெயில்ல போறதுனால அப்படி இருக்கும். நான் நல்லா தான் இருக்கேன். எனக்கும் அங்க போனது சங்கடமா எல்லாம் இல்லை. அது உன் வீடு. அப்படினா நம்ம வீடு. என்னை யாரு என்ன சொல்ல போறா? நீ அப்புறம் உன் ஆள் கிட்ட பேசு சரியா? எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. நான் வைக்கிறேன்”
“சரி டா வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்தவளுக்கு மனதுக்கு ஒரு மாதிரி தான் இருந்தது. என்ன தான் இருந்தாலும் மனதுக்கு பிடித்த உறவுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நமக்கு ஒரு மாதிரி இருக்கும் தானே? அப்படி ஒரு உணர்வு வீணாவுக்கு. அதுவும் சத்யா போனை எடுக்காதது வேறு ஒரு மாதிரி இருந்தது. ஏதோ தவறாக தான் பட்டது அவளுக்கு.
மனது கேட்காமல் அன்று இரவு மீண்டும் சத்யாவை அழைத்தாள் வீணா. அந்த மனது மயங்கும் இரவுப் பொழுதில் வானத்தையும் நிலவையும் பார்த்து குழப்பத்தில் இருந்தவன் என்ன நினைத்தானோ அவளது போனை எடுத்து விட்டான்.
இத்தனை நாள் போனை எடுக்காததால் அவன் எடுத்ததும் “ஏன் இப்படி பண்ணீங்க?”, என்று தான் கேட்டாள். அவள் எந்த உள் அர்த்தம் வைத்தும் கேட்க வில்லை.
ஆனால் அதை தவறாக புரிந்து கொண்ட சத்யாவோ ”என்ன மேடம் அதுக்குள்ள தகவல் வந்துருச்சா? போட்டுக் கொடுத்துட்டானா உன் தம்பி? சாரி சாரி அந்த பொறுக்கி”, என்று நக்கலாக கேட்டான். அதைக் கேட்டு வீணாவுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. சத்யா முகத்தில் அடிப்பது போல பேசுவான் தான். அவளையே கூட மட்டம் தட்டுவான் தான். ஆனால் இப்படி மிதுனை பொறுக்கி என்று சொல்லுவான் என்பதை அவள் எதிர் பார்க்கவே இல்லை.
என்ன ஏது என்று புரிய வில்லை என்றாலும் அவன் மிதுனைப் பற்றி பேசியதற்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனால் அதை அப்படியே காட்ட வீணா ஒண்ணும் சாதாரண பெண் இல்லையே?
அதனால் அவள் அமைதியாக இருக்க சத்யாவே பேச ஆரம்பித்தான். “ஆமா வேணும்னு தான் பண்ணுனேன். நான் நினைச்சா அவனைக் காப்பாத்திருக்க முடியும்? ஆனா பண்ணலை? ஏன் பண்ணனும்? எதுக்கு பண்ணனும்? அவன் உன் தம்பின்னு நினைக்கும் போதே எனக்கு நம்ம கல்யாணம் வேணுமான்னு இருக்கு. சரி கொஞ்சம் இரிட்டேட்டா இருக்கு. அப்புறம் கால் பண்ணுறேன்”, என்றவன் அவளை பேசக் கூட விடாமல் அவள் குழப்பத்தில் இருக்கும் போதே போனை வைத்து விட்டான்.
சத்யாவின் பேச்சே ஒரு அதிர்ச்சி என்றால் மிதுனுக்கு என்ன ஆனதோ என்ற பயமும் வந்தது. உடனே அவனை அழைத்து விட்டாள். அதே நேரம் சத்யாவையும் பட்டென்று விட்டுக் கொடுக்க மனதில்லாமல் அவன் போனை எடுத்ததும் “என்ன டா பண்ணுற நெட்ட கொக்கு?”, என்று சாதாரணமாகவே பேச்சை ஆரம்பித்தாள்.
“இப்ப தான் வீட்டுக்கு வந்தேன். சரி குள்ள வாத்து என்ன தூங்காம இந்நேரம் கால் பண்ணிருக்க?”, என்று கேட்டான் மிதுன்.
“சும்மா தூக்கம் வரலை. அதான். சரி ஒண்ணு கேப்பேன். உண்மையைச் சொல்லணும். பொய் எல்லாம் சொல்லக் கூடாது. சத்யா எல்லாமே சொல்லிட்டாங்க. நீ ஏதும் பண்ணுனியா மித்து?”, என்று போட்டு வாங்கினாள்.
“சத்தியமா நான் எதுவுமே பண்ணலை வீணா. எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. அன்னைக்கு நீ இருக்கும் போது எப்படி பேசினார்? ஆனா இன்னைக்கு அப்படியே ஆள் வேற மாதிரி. சிரிப்பே இல்லை அவர் முகத்துல. ஆசையா மாம்ஸ்ன்னு கூப்பிட்டேன். இப்ப கூப்பிடவே மனசு வர மாட்டிக்கு வீணா. உன் கிட்ட என்ன சொன்னார்? நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா? உன் கிட்ட எதுவும் சொன்னாரா?”, என்று அவன் வெகுளியாக கேட்க வீணா மனதுக்கு திக்கென்று இருந்தாலும் அவனை பேச விட்டு அமைதி காத்தாள்.