அவள் போனதும் மிதுன் ஏதோ பேச நினைக்கும் போது சத்யா முகம் இறுக்கத்தில் இருப்பது போல இருந்தது. தப்பான நேரத்துல வந்துட்டோமோ என்று எண்ணியவன் “அந்த மிரட்டல் ஆசாமி பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதான்னு வீணா கேட்டுட்டு வரச் சொன்னா. நேத்து உங்களுக்கு கால் பண்ணினாளாம். நீங்க எடுக்கலையாம்”, என்றான்.

            நேற்று ஸ்ரீ பற்றிய குழப்பத்தில் இருந்ததால் தான் வீணாவின் போனை எடுக்க வில்லை. அதைச் சொல்ல மனதில்லாமல் “தேடிட்டு தான் இருக்கோம் மிதுன். கண்டிப்பா கண்டு பிடிச்சிருவோம். பிடிச்ச அப்புறம் அவனுக்கு என் கையால தான் சாவு. எப்படி தான் நிம்மதியா இருக்குறவங்க மனசை கெடுக்க முடியுதோ தெரியலை”, என்று வேறு சொல்ல மிதுனுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

            “சரி மாம்ஸ் நான் கிளம்புறேன்”, என்று சொல்லி அவன் எழுந்து கொள்ள “அம்மா டிபன் எடுத்து வைக்கிறேன்னு சொல்லிட்டு தானே போனாங்க? சாப்பிட்டு போ”, என்று சொல்ல மிதுனுக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை என்றாலும் வீணாவுக்காக அமைதியாக அமர்ந்து போனைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

            சத்யா அவனை நோட்டம் விட அப்போது கேட்டுக் கொண்டே வெளியே வந்த ஸ்ரீ அங்கே அமர்ந்திருந்த மிதுனைக் கண்டு திகைத்து போனாள். திகைப்பு என்பதை விட ஒரு வித பயம். தன்னைப் பற்றிச் சொல்ல தான் வந்திருக்கிறான் என்று எண்ணியவளுக்கு ஒரு மாதிரி படபடப்பாக வந்தது. நெற்றியில் வியர்வை துளிர்க்க பயந்து போய் அவள் நிற்க அவளைக் கண்ட மிதுனுக்கும் திகைப்பு தான்.

“இது இவ வீடா?”, என்று எண்ணியவனுக்கு சட்டென்று இயல்புக்கு கூட வர முடிய வில்லை.

“இவ என்னோட பொண்ணு. பேர் ஸ்ரீ பா. சரி மூணு பேரும் சாப்பிட வாங்க”, என்ற பாமாவின் குரலில் தான் அனைவரும் கலைந்தார்கள்.

ஸ்ரீ பயந்து அசையாமல் ஒரே இடத்தில் நிற்க “ஏய் காலேஜ்க்கு நேரம் ஆகலையா? சாப்பிட வா. இந்த தம்பி வீணாவோட தம்பி. உன் அண்ணனை பாக்க வந்திருக்காங்க”, என்று சொன்னதும் தான் நிம்மதி பெருமூச்சி விட்டாள்.

மூவரும் உணவு அருந்த சத்யா இருவரையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஸ்ரீயோ அப்படி ஒரு படபடப்பில். எப்போது தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வான் என்று பயந்து நடுங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

            ஆனால் மிதுன் அவளை அவ்வளவாக கவனிக்க வில்லை. இன்னும் சொல்ல போனால் அவனும் அங்கே விருப்பம் இல்லாமல் தான் அமர்ந்திருந்தான். அதற்கு காரணம் சத்யாவின் நடவடிக்கை என்பது தான் உண்மை. வீணாவுடன் இருக்கும் போது அவன் பேசிய பேச்சுக்கும் இப்போது அவனது முறைப்புக்கும் ஆயிரம் வித்தியாசம் இருந்தது. அதனால் இயல்பை தொலைத்து இருந்தான் மிதுன்.

“என்ன வேலை பா செய்யுற?”, என்று கேட்டாள் பாமா.

“ஆன் என்ன ஆண்ட்டி? வேலையா? வேலை எல்லாம் பாக்கல. எதுக்கு அடுத்தவன் கிட்ட வேலைக்கு போய்க்கிட்டுன்னு நானே ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வச்சிட்டேன். உங்க பொண்ணுக்கு கூட அந்த சென்டர் தெரியுமே?”, என்று சொல்ல அவள் இன்னும் பயந்து போனாள்.

            அனைவரும் அவளைப் பார்க்க “அது.. அது வந்து..”, என்று பதில் சொல்ல முடியாமல் திணறினாள். அவளை நக்கலாக பார்த்தவன் “இவங்க படிக்கிற காலேஜ்க்கு பக்கத்துல தான் சென்டர் இருக்கு. அடிக்கடி ஜெராக்ஸ் எடுக்க வருவாங்க”, என்று மட்டும் சொன்னான்.

            ஸ்ரீ நிம்மதியாக மூச்சு விட சத்யா அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். தங்கள் வீட்டுப் பெண்ணை ஒருவன் இவ்வளவு மிரட்டி வைத்திருக்கிறானே என்று அவ்வளவு கோபமாக வந்தது சத்யாவுக்கு. என்ன இருந்தாலும் ஒரு பெண்ணின் அண்ணன் அல்லவா? ஆனாலும் கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆனால் மிதுன் மீதிருந்த மரியாதை வீணாவின் தம்பி என்று இருந்த பாசம் அனைத்தும் அற்றுப் போயிருந்தது.

பாமா வேறு பேச்சுக்கு தாவ அதற்கு மிதுன் பதில் அளிக்க உணவு நேரம் கடந்தது. ஸ்ரீயோ இப்போதும் பதட்டத்துடன் தான் இருந்தாள். அவள் தட்டில் வைத்த ஒரு இட்லி கூட இன்னும் உண்ணப் பட வில்லை.

தன்னுடைய தங்கையை ஏதோ பிளாக் மெயில் செய்யும் அவனை தனியே சந்தித்து நன்றாக கவனிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். உணவு நேரம் முடிந்ததும் “தம்பி இப்ப சென்டர் தானே போறீங்க? அப்படியே ஸ்ரீயையும் அவ காலேஜ்ல விட்டுறீங்களா?”, என்று பாமா கேட்க ஸ்ரீக்கு கண்கள் தெறித்து விடுவது போல விரிந்தது.

மிதுன் என்ன செய்து மறுக்க என்று விழித்துக் கொண்டிருக்கும் போதே “நானே அவளை விட்டுட்டு போறேன் மா”, என்றான் சத்யா.

அப்போது வாக்கிங் முடித்து விட்டு வந்த தீனா அமர்ந்து மிதுனிடம் பேச அண்ணன் தங்கச்சி அனைவரும் மற்றவர்களிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள்.

போகும் முன் எதுவும் சொல்லி விடாதே என்ற கெஞ்சல் பார்வையை மிதுனை நோக்கி வீசி விட்டுச் சென்றாள் ஸ்ரீ. ஆனால் மிதுனின் கெட்ட நேரம் சத்யா அதைக் கவனிக்க வில்லை.

ஸ்ரீயை கல்லூரியில் விடப் போகும் போது சத்யா ஏதோ சொல்ல வர “அண்ணா இப்ப எதுவும் என் கிட்ட கேக்காதேயேன்”, என்ற ஒற்றை வரியில் அவன் வாயை அடைத்து விட்டாள்.

என்ன நடந்தது என்று தெரியாமல் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் சத்யாவுக்கு தான் எரிச்சலாக வந்தது. அப்போது மிதுன் அங்கே வந்தானா என்ற காரணத்தை வைத்துக் கொண்டு வீணா அவனுக்கு அழைக்க இருந்த எரிச்சலில் அவள் போனை கட் செய்து விட்டான். அவளுக்கு குழப்பமாக இருந்தது இரண்டு நாட்களாக அவன் பேசாதது. எதற்காக தன்னை தவிர்கிறான்.  ஒரு வேளை என்னிடம் பேசக் கூடாது  என்று அந்த மர்ம ஆசாமி சொல்லியிருப்பானோ என்ற குழப்பத்தில் இருந்தாள்.

ஸ்ரீயை கல்லூரியில் விட்டவனுக்கு அப்போது தான் இருந்த குழப்பத்தில் முக்கியமான ஒரு பைலை வீட்டில் வைத்து விட்டு வந்தது நினைவில் வந்தது.

“போச்சு டா, திருப்பி போகனுமா?”, என்று எண்ணிக் கொண்டு வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான். அப்போது அவன் வீட்டுக்கு சற்று தள்ளி இருந்த வழியில் சிறு கும்பல் கூடி இருக்க என்ன ஆனதோ என்று எண்ணி இறங்கி அங்கே பார்த்தான்.

அப்போது அங்கே ஒரு ஆட்டோகாரனுக்கும் மிதுனுக்கும் இடையே தான் சண்டை நடந்து கொண்டிருந்தது. “சார் உங்களுக்கு என்ன பைத்தியமா? நான் எங்க உங்களை இடிச்சேன். வீணா என் மேல பழி போடுறீங்க? நீங்க வந்ததும் தப்பான வழி”, என்று கேட்டான் மிதுன்.

“நான் பழி போடுறேனா?. நீ தான் தப்பா வந்த. ஒழுங்கா என்னோட ஆட்டோவை இடிச்சதுக்கு பணம் கொடு”, என்று ஆட்டோக்காரன் கத்திக் கொண்டிருந்தான்.

மிதுன் ஏதோ சொல்ல “சத்யா சார், இங்க வாங்க. என்னனு கேளுங்க”, என்று ஆட்டோகாரன் அழைக்க அங்கே வந்தான் சத்யா. அவனைக் கண்ட மிதுனும் “மாம்ஸ்க்கு தெரிஞ்ச ஆட்டோக்காரன் தான். எப்படியும் பேசிச் சமாளிச்சிருவார்”, என்று எண்ண “வண்டியை விட ஆட்டோவுக்கு சேதாரம் அதிகம் தான் போல? ஒழுங்கா பணத்தைக் கொடுத்துட்டு கிளம்பு மிதுன். வரேன் சுரேஷ்”, என்று சொல்லி விட்டுச் சென்றான் சத்யா.

திக் பிரம்மைப் பிடித்து நின்று விட்டான் மிதுன். இப்படி ஒரு அவமானத்தையும் உதாசீனத்தையும் இது வரை வாழ்க்கையில் அவன் அனுபவித்ததே இல்லை.

வீணாவுக்கு அமைந்திருப்பது தவறான வாழ்க்கைத் துணையோ என்று மிதுன் மனதில் சிறு நெருடல் எழுந்தது.

தொடரும்..