“அந்த பையன்  இந்த விஷயத்தை நம்ம கிட்ட மறைக்க கூட இல்லை. அது மட்டுமில்லாம கல்யாணம் உடனே நடக்க போறது இல்லை. அது யாரு என்னன்னு விவரம் கண்டு பிடிக்கட்டும்? அவனை பிடிச்ச அப்புறம் நம்ம பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வரப் போறது இல்லை. அவ சந்தோஷமா இருப்பா. கொஞ்சம் பொறுமையா இரு. மாத்தி மாத்தி முடிவு எடுக்க வேண்டாம். இன்னொரு தடவை வேற மாப்பிள்ளை அது இதுன்னு பேசாத. கோப பட்டு சாப்பிடாம போய்ட்டா. சமாதானப் படுத்தி கூட்டிட்டு வா”, என்று சொல்லி மனைவியை அனுப்பி வைத்தவர் தீனாவுக்கு தான் அழைத்து பேசினார். இருவரும் வெகு நேரம் பேசினார்கள். பேசி விட்டு நிம்மதியாக போனை வைத்தார்கள். பிள்ளைகள் திருமணம் காலதாமதம் ஆனாலும் நடக்கும் என்ற நம்பிக்கை இருவருக்கும்.

அடுத்த நாள் காலை யாருக்கும் நிற்காமல் விடிந்தது. அனைவருக்கும் மனதுக்குள் கேள்விகள் பல இருந்தாலும் அவரவர் வேலையைப் பார்த்தனர்.

ஸ்ரீ ஏதோ ஒரு குழப்பத்தில் கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள். உள்ளே நுழைந்ததும் அவள் எதிரே வந்து நின்றான் குணா. அவனைக் கண்டதும் ஒரு நொடி சோர்ந்து தான் போனாள் ஸ்ரீ.

அவளுக்கே தெரியும் அவள் தவறு செய்கிறாள் என்று. அதில் இருந்து வெளியே வரவும் நினைக்கிறாள். ஆனால் அதை குணா தடுத்துக் கொண்டே இருக்கிறான்.

“இன்னைக்கு மார்க்கெட்ல புது சரக்கு வந்துருக்கு. உடனே வாங்கிட்டேன். உனக்கும் சேத்து தான். வா போகலாம்”

“இல்லை குணா வேண்டாம்”

“என்ன வேண்டாம்? உன் கிட்ட என்ன பணமா கேட்டேன்? இல்லை இது வரைக்கும் உன் கிட்ட ஏதாவது தப்பா நடந்துருக்கேனா? இந்த உலகம் ரொம்ப மோசமானது. அதுல இருந்து கொஞ்ச நேரம் விடுபட்டு சந்தோஷமா இருக்கலாம்னு தானே கூப்பிடுறேன்”

“இல்லை ஏற்கனவே நம்ம லவ் பண்ணுறது அப்பாவுக்கு தெரிஞ்சு என் கிட்ட பேசக் கூட மாட்டிக்காங்க. இந்த விஷயமும் தெரிஞ்சா அவ்வளவு தான். காலேஜ்க்கு ஒழுங்கா வரது இல்லைன்னு தகவல் போயிருச்சுனா இன்னும் கஷ்டம்”

“அதெல்லாம் தெரியாது. நீ இப்ப என் கூட வர. வா. என்னை லவ் பண்ணுறது உண்மைனா வா?”, என்று சொல்லிக் கொண்டிருக்க வெகுவாக தயங்கினாள். அவனுடன் போகச் சொல்லி அவள் கை விரல் எல்லாம் நடுங்கியது.

என்ன முடிவெடுக்க என்று அவள் திணறிக் கொண்டிருக்கும் போது “எக்ஸ்கியூஸ் மீ”, என்ற குரலில் இருவரும் திரும்பினார்கள்.

அவனைக் கண்டு ஸ்ரீ மிரண்டு விழிக்க “என்ன?”, என்று திமிராக கேட்டான் மிதுன்.

அவனைக் கண்டு கொள்ளாமல் “எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா சிஸ்டர்?”, என்று அவளிடம் கேட்டான்.

அவள் பாதி மிரட்சியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே வீட்டில் சொல்லி விடுவேன் என்று அவளை மிதுன் மிரட்டி இருக்கிறான். ஆனாலும் அவள் அவன் பேச்சைக் கேட்க வில்லையே. அதனால் இன்று என்ன ஆகுமோ என்று பயமாக இருந்தது.

அவள் சூழ்நிலை புரிந்தோ என்னவோ “உங்க காலேஜ்ல தேர்ட் இயர் கம்ப்யூட்டர் படிக்கிற பொண்ணு கிட்ட.. அந்த பொண்ணு பேர் கூட நிவேதா. அவங்க கிட்ட இந்த சிடியை கொடுக்க  முடியுமா? இன்னைக்கு ஏதோ அவங்களுக்கு வைவா போல? ரொம்ப அவசரம். நான் தான் லேட் பண்ணிட்டேன்”, என்றான் மிதுன்.

அதற்கு குணா ஏதோ மறுப்பு சொல்ல வர ஸ்ரீ அவசரப் பட்டு அதை வாங்கி விட்டாள். அதைக் கண்ட குணா அவளை முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான். சரியாக அப்போது தான் சத்யா அங்கே வந்து சேர்ந்தான். அவன் கண்கள் தூரத்தில் நின்றிருந்த தங்கை மற்றும் மிதுன் மீது பதிந்தது.

“இவன் என்ன இங்க? அதுவும் ஸ்ரீ கூட பேசிக்கிட்டு இருக்கான். அவனுக்கு தெரியுமா? ஒரு வேளை வீணா சொல்லியிருப்பாளோ?”, என்று எண்ணி அவர்களை நெருங்க நினைக்கும் போது தான் தங்கையின் முக மாறுதல் அவன் கண்ணில் பட்டது.

            ஸ்ரீ அங்கிருந்து செல்ல முயலும் போது அவளை நிறுத்திய மிதுன் “நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ இன்னும் அவன் கூட தான் சுத்திக்கிட்டு இருக்கியா? கண்டிப்பா நான் இதை உங்க வீட்ல சொல்ல தான் போறேன்?”, என்று சொல்ல அவள் முகம் இருண்டு போனது.

            சத்யாவுக்கு உண்மையிலே அவன் அவளை மிரட்டுவது போல தான் இருந்தது. அப்படியே மிதுனை தவறாக நினைத்தான். ஸ்ரீ அவன் சொல்வதற்கு எல்லாம் தலையசைத்து விட்டு கல்லூரிக்குள் செல்ல மிதுனும் அங்கிருந்து சென்று விட்டான்.

            பழைய சத்யாவாக இருந்திருந்தால் இந்நேரம் மிதுனின் சட்டையை பிடித்து “என் தங்கச்சி கிட்ட உனக்கு என்ன பேச்சு?”, என்று கேட்டிருப்பான்.

            ஏற்கனவே ஒரு மிரட்டல் இருக்க, ஸ்ரீயும் எதிலோ மாட்டிக் கொண்டிருப்பது தெரிந்ததும் அவனால் அவசரமாக முடிவு எடுக்க முடியவில்லை. அதை விட மற்றொரு முக்கியமான காரணம் வீணா. அவனுடைய தம்பியை சட்டென்று தவறாக நினைத்து விட முடியாதே. அதனால் பொறுமை காத்தான். மாலை ஸ்ரீயிடம் பேசி விட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று எண்ணி காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

            அன்று மாலை கல்லூரியில் இருந்து ஸ்ரீயை அழைக்க சத்யாவே வந்திருந்தான்.

            “அண்ணா நீ எங்க?”

            “இன்னைக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை. அதான் வீட்டுக்கு கிளம்புனேன். போற வழி தானே? உன்னையும் கூட்டிட்டு போகலாம்னு தான் வந்துட்டேன்”, என்றவன் அவள் ஏறி அமர்ந்ததும் காரைக் கிளப்பினான்.

            இருவருக்கும் இடையே அமைதியே நிலவியது. ஸ்ரீ எப்போதும் இப்படி எல்லாம் இருக்க மாட்டாள்.

            “ஸ்ரீ”

            “ஹான்?”

            “நீ ஓகே வா?”

            “எனக்கு என்ன ஓகே தான்”

            “காலைல உன் கூட ஒரு பையன் நின்னு பேசிட்டு இருந்தானே? அவன் யாரு?”, என்று கேட்டதும் ஸ்ரீக்கு சட்டென்று அது மிதுன் என்று நினைக்க முடியவில்லை.

            குணா என்று நினைத்து அண்ணனை அதிர்ச்சியாக பார்த்தாள். அவள் அதிர்ச்சியைக் கண்டவன் “அப்ப உன்னோட பிரச்சனைக்கு அவன் தான் காரணம் ரைட்? அப்பாவுக்கும் அவனை வச்சு தான் ஏதோ கோபம் போல? அவன் உன்னை ஏதாவது மிரட்டுறானா?”, என்று கேட்டான்.

            அவள் அப்போதும் மிரண்டு போய் அமைதியாக இருக்க அவள் அமைதியே அது உண்மை என்று உணர வைத்தது. அவள் ஒரு மாதிரி பதட்டத்தில் இருக்க “ரிலாக்சா இரு. நான் எதுவும் கேக்கலை. இன்னொரு நாள் பேசலாம். ஆனா என்ன ஆனாலும் அண்ணன் நான் இருக்கேன் உனக்கு. சரியா?”, என்று சொல்ல சரி என்னும் விதமாய் தலையசைத்தவள் அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.

            இப்போது சத்யாவுக்கு மிதுன் வீணாவின் தம்பி என்பது பின்னுக்கு போய் தங்கையே முன்னால் நின்றாள். அதனால் அவன் மீது கோபம் வந்தது.

            அடுத்த நாள் காலை தன்னுடைய அறையில் இருந்து கிளம்பி வந்தான் சத்யா. அப்போது ஹாலில் யாரோ ஒரு ஆடவன் அமர்ந்திருப்பதும் அவனிடம் பாமா சிரித்து பேசிக் கொண்டிருப்பதும் தெரிந்தது.

            யார் என்ற குழப்பத்தில் சத்யா அவர்களை நெருங்க அங்கே அமர்ந்திருந்த மிதுனை அவன் எதிர் பார்க்கவே இல்லை. “ஹாய் மாம்ஸ்”, என்று மிதுன் இயல்பாக புன்னகைக்க இப்போது சத்யாவால் இயல்பாக அவனிடம் சிரிக்க முடியவில்லை.

            “உக்காரு”, என்று மட்டும் சொன்னான்.

            “நம்ம வீணாவோட தம்பியாம்ல சத்யா. உன்னைப் பாக்க தான் தம்பி வந்துருக்கு. வந்ததுல இருந்து சிரிச்சு சிரிச்சு பேசுது. சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் உங்க ரெண்டு பேருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றார் பாமா.