அத்தியாயம் 8 

தொட்டால் சிவக்கும் என்பது பொய் 

பார்த்தாலே முகம் சிவந்து தான் 

போகும் காதலில்!!!

சத்யாவை துரத்தி கொண்டிருப்பவனின் பெயர் அகில். அவன் தான் சத்யாவை சந்தோஷமாக இருக்க விடக் கூடாது என்று குறியாக இருக்கிறான். அதற்கு காரணம் என்ன என்று அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும்.

இப்போதும் மிதுனுக்கு எதிரே தான் அமர்ந்து போனைப் பார்த்துக் கொண்டிருந்தான். மிதுன் அவனைப் பார்த்தாலும் அவனை பெரிதாக எடுக்க வில்லை. ரெஸ்டாரண்டில் அத்தனை பேர் இருக்க அவன் ஒருவனை எப்படி கண்டு கொள்ள முடியும்?

            வீணா வாழ்க்கையைப் பற்றி யோசித்த படியே அமைதியாக உண்டு முடித்து கை கழுவ எழுந்து சென்றான் மிதுன். கை கழுவி விட்டு வரும் போது தான் அந்த எதிர் டேபிளில் அமர்ந்திருந்த அகிலின் எதிரே ஒருவன் வந்து அமர்ந்து “சாரி அண்ணா, கொஞ்சம் டைம் ஆச்சு. டிராபிக்ல மாட்டிக்கிட்டேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

            அப்போதும் மிதுன் அவர்கள் இருவரையும் கவனிக்க வில்லை. வெளியே வந்து பார்க்கிங்கில் இருந்து வண்டியை எடுத்து விட்டு வரும் போது தான் அகிலின் எதிரே அமர்ந்திருந்தவன் முகம் மிதுனுக்கு தெரிந்தது.

            அவன் குணா. ஸ்ரீயுடன் அவனை அடிக்கடி பார்த்திருக்கிறான். அதுவும் அவனது பிரவுசிங் சென்ட்டரில் வைத்து. அதனால் அவனை நன்கு அடையாளம் காண முடிந்தது. “இவன் அந்த பொண்ணு கூட சுத்துறவன் ஆச்சே? இவன் இங்க பண்ணுறான்?”, என்று எண்ணிய மிதுனின் கவனம் அவர்கள் பக்கம் சென்றது. ஆனால் அவர்கள் தீவிரமாக எதுவோ பேசிக் கொண்டிருப்பது மட்டுமே தெரிந்தது. என்ன என்று புரிய வில்லை. அகிலையும் சேர்த்து ஒரு முறை மனதில் நிறுத்திக் கொண்டவன் அங்கிருந்து சென்றான்.

            சத்யாவின் தங்கை தான் ஸ்ரீ என்று தெரிந்திருந்தால் அவர்கள் பேசுவதையும் கவனித்திருப்பானா என்னவோ? அவனை பொறுத்த வரை குணா ஒரு தறுதலை. அவன் இன்னொருவனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனும் ஒரு தறுதலை தான் என்று மட்டும் எண்ணிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

            வீணாவை பள்ளியில் இறக்கி விட்டான் சத்யா. “பாத்து கவனமா இருங்க”, என்று சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கினாள் வீணா.

            “நீயும் கவனமா இரு வீணா. நான் கூடிய  சீக்கிரம் அது யாரு என்னன்னு கண்டு பிடிக்கிறேன்”

“சீக்கிரம் பண்ணுங்க. பெரியவங்க ரொம்ப கவலைப் படுவாங்க. இப்பவே நான் அப்பா அம்மா கிட்ட என்ன சொல்ல போறேன்னு தெரியலை”

“ரெண்டு வீட்லயும் நான் பேசுறேன். நீ கவலைப் படாம இரு. அப்புறம் தேங்க்ஸ்”

“எதுக்கு?”

“எனக்கு ஒரு பிரச்சனை, அதுவும் என்னால உனக்கும் பிரச்சனைன்னு தெரிஞ்சு பயந்து ஓடாம கூடவே நிக்கணும்னு நினைக்கிற பாத்தியா அதுக்கு?”

“ஆஹான்”, என்று சொல்லி அவள் புன்னகைக்க “எனக்கு ஒண்ணு தோணுது”, என்றான்.

“என்ன?”

“நீ என்னை லவ் பண்ணுறியோன்னு”

“ஆசையைப் பாரு. லவ் பண்ணுற அளவுக்கு இவரு மன்மதன். அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீங்களும் குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணுறீங்க. நானும் அதே தான். வேணும்னா கல்யாணத்துக்கு அப்புறம் லவ் பண்ணலாம். அதுவும் இந்த முகத்தை பாத்தா வருமான்னு தெரியலை. எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள். அவனும் சிறு சிரிப்புடன் அங்கிருந்து கிளம்பினான்.

அன்று இரவு இருவருமே இரண்டு வீட்டு பெரியவர்களிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி விட்டார்கள். சத்யாவுக்கு தீனாவிடம் சொல்ல பயம் தான். ஏற்கனவே உடல் நிலை சரி இல்லாதவர். ஆனாலும் நிதர்சனம் அவருக்கும் தெரிய வேண்டுமே. பாமாவுக்கும் நடந்ததை நினைத்து பயமாக இருந்தது.

“என்ன டா இப்படி சொல்ற? எதுக்கு அந்த பொண்ணு அதான் மாலினி இப்படி பண்ணுச்சு? உன்னையே எதுக்கு அவன் டார்கெட் பண்ணுறான்? சம்பந்தி வந்து பேசும் போது கூட என் மகனை எப்படி நீங்க சந்தேகப் படலாம்னு கோபம் வந்துச்சு. ஆனா இன்னைக்கு நடந்ததை வச்சுப் பாத்தா அவர் பக்கமும் நியாயம் இருக்கு போலவே? இப்ப அவங்க பொண்ணுக்கு ஆபத்துனா அவங்க எப்படி இந்த கல்யாணத்தை நடத்த விடுவாங்க?”

“வீணாகிட்ட சொன்னேன் பா. ஆனா அவ இந்த பிரச்சனையை கண்டு பிடிங்கன்னு சொல்றா. அவங்க வீட்லயும் பேசுறேன்னு சொல்லியிருக்கா”

“அதான் சொன்னேன் அந்த பொண்ணு தான் உனக்கு பொருத்தமானவன்னு. வேற யாராவது இருந்தா போடான்னுட்டு விட்டுட்டு போயிருவா”

“ஆமா பா”

“என் மருமகளை யாரும் கஷ்ட படுத்தக் கூடாது. அந்த மாலினியை விசாரி”

“அதை விசாரிச்சா அவளையும் கொன்னுருவானாம் பா. பாவம் அவ கொஞ்சம் கஷ்ட படுற குடும்பம். அவளை ஏதோ மிரட்டி தான் செய்ய வச்சிருக்கான் போல”

“இப்ப என்ன பண்ண போற சத்யா? எல்லா வழியும் அடைச்ச மாதிரி இருக்கே?”

“போலீஸ் கிட்ட போகலாமா பா?”

“நல்ல ஐடியா தான். ஆனா இவ்வளவு உன்னைப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்குறவன் அதைக் கவனிக்காம இருக்க மாட்டான். உங்க அம்மாவோட சித்தப்பா தானே இங்க எஸ்.பி யா இருக்கார். அவர் கிட்ட மறைமுகமா விசாரிக்க சொல்லலாம்”

“சரிப்பா”

“நிம்மதியா இரு சத்யா. எல்லாம் சரியாகும். நீயும் கொஞ்சம் யோசி. எதுக்கு அவன் பழி வாங்குறான்னு தெரிஞ்சா நாம அதை சரி பண்ண பாக்கலாம்”

“சரிப்பா, நீங்களும் ரொம்ப கவலைப் படாதீங்க. இப்போதைக்கு எனக்கும் வீணாவுக்கும் நல்ல நேரம் இல்லைன்னு நினைச்சிக்கோங்க”, என்று சொன்னவன் அன்னையிடமும் கண்ணைக் காட்டி விட்டு அறைக்குச் சென்றான்.

அதே நேரம் வீணாவும் நடந்ததை அன்னை தந்தையிடம் சொல்லிக் கொண்டிருக்க குல்கர்னி யோசனையில் ஆழ்ந்தார். அம்சவேணியோ “என்னங்க எனக்கு என்னமோ எதுவுமே சரியா படலை. முதல்ல இருந்தே ஒரே தடங்கலா இருக்கு. வீணாவுக்கு வேற மாப்பிள்ளை பாக்கலாம்”, என்று சொல்ல அன்னையை முறைத்தாள் வீணா.

“என்ன டி?”

“எத்தனை நாள் ஆனாலும் பரவால்ல நீங்க இந்த பிரச்சனையை முடிச்ச அப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டு வந்துருக்கேன். இப்ப வந்து வேற மாப்பிள்ளை பாக்க சொல்ற? என்னைப் பாத்தா உனக்கு எப்படி மா தெரியுது?”, என்று கோபமாக கேட்டாள் வீணா.

“வீணா பொண்ணு பாக்க வர மாப்பிளை எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு போறது இல்லை. இது சாதாரண விஷயம் மா”

“எது சாதாரண விஷயம்? நீ சொல்றது பொண்ணு பாத்துட்டு போறதுக்கு வேணும்னா சரி. ஆனா அன்னைக்கு நிச்சயதார்த்தமே முடிஞ்சிருச்சு. நீங்க தானே பண்ணி வச்சீங்க. இது நீங்களா ஏற்படுத்தினது தானே? உடனே உடனே மனசை மாத்திக்க முடியாது மா. உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லைன்னா சொல்லுங்க. நானும் இந்த பேச்சை விட்டுறேன். ஆனா வேற மாப்பிள்ளைனு பேசி மனசைக் கஷ்டப் படுத்தாதீங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

“என்னங்க இவ இப்படி சொல்லிட்டு போறா?”

“அவ சரியா தானே சொல்றா. இப்ப விஷயம் தெரிஞ்சிருச்சு அந்த பையனை வேண்டாம்னு சொல்ற? கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி நடந்திருந்தா? உன்னையும் நான் தப்பு சொல்லலை வேணி. நீ ஒரு அம்மாவா பயப்படுற? ஆனா வீணா அந்த பையனை விரும்ப ஆரம்பிச்சிட்டா”

“ஆனா உயிருக்கு ஆபத்து இருக்கே?”