அவனோ அவளைத் தான் பார்வையால் அளந்து கொண்டிருந்தான். ஏனோ இன்று அவள் அதிக அழகில் இருப்பது போல இருந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவன் பார்வையே புரிந்தது. கோபமாக இல்லாமல் அவன் பார்வை ஏதோ செய்ய இப்படி பார்க்காதே என்றெல்லாம் தடுக்காமல் வேறு பக்கம் பார்வையை பதித்தாள்.
சத்யாவோ இத்தனை நாள் போல இல்லாமல் தன்னவளாக தான் அவளைப் பார்த்தான். அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு பிரமிப்பாக தான் இருந்தது. வீணாவுக்கு ஒல்லியான உடல்வாகு தான். லேசாக தள்ளினால் கூட விழுந்து விடுவாள். ஆனால் அவள் முகத்தில் இருந்த நிமிர்வு அழகாகவே இருந்தது.
இது வரைக்கும் அவன் என்ன தான் மட்டம் தட்டினாலும் அவள் எதிர்த்தே தான் நின்றாள். அவன் திட்டுகிறான் என்று பொறுத்து எல்லாம் போக வில்லை. அதே நேரம் அவன் மேல் இருந்த நேசத்தையும் அவள் கண்கள் பிரதிபலிக்கும். இப்போதும் அப்படி தான், அவன் பார்க்கிறான் என்று தெரிந்து நாணி கோண எல்லாம் இல்லை. அதே நேரம் அவனை முறைக்கவும் இல்லை.
எப்போதும் தைரியமாக அவனை நேருக்கு நேர பார்க்கும் அவள் இன்று அமைதியாக இருந்தாள். அவளும் குழப்பத்தில் கூட இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான்.
நீண்ட பின்னலை முன்னால் எடுத்து போட்டிருந்தாள். அவளைப் பார்ப்பதே அவனுக்கு தனி ரசனையாக தான் இருந்தது. அவள் அழகு தான். ஆனால் இன்று இன்னும் அழகாக இருப்பது போல இருந்தது.
அவளைப் பார்க்கும் போதே மனதுக்கு சுவாரசியமும் ஒரு ரம்மியமான உணர்வும் அவனுக்குள் எழுகிறது என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவன் தான் மாறிக் கொண்டே இருக்கிறானே? திடீரென்று அவளை பிடிக்க வில்லை என்கிறான். திடீர் என்று என்னுடன் வந்து விடு என்கிறான். அதனால் உண்மையிலே அவன் மனதில் என்ன தான் இருக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் தான் இருந்தாள்.
ஆனாலும் அவன் பார்வையில் இத்தனை நாள் இருந்ததை விட இன்று மாற்றம் தெரிய அதற்கு மேல் அவன் பார்வையை தாங்க முடியாமல் “என்ன பேசணும்னு வரச் சொன்னீங்க?”, என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் நடப்புக்கு வந்த அவனும் “கல்யாணம் பத்தி தான்”, என்றான்.
“என்ன முடிவு பண்ணிருக்கீங்க?
“அது.. அது வந்து..”, என்று அவன் ஆரம்பிக்கும் போதே அவனுக்கு அழைப்பு வந்தது. அதுவும் இரவு வந்த அதே எண்ணில் இருந்து தான்.
அவன் முகம் மாறுவதை அவளும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். குழப்பத்துடன் அதை எடுத்து காதில் வைத்தவன் “ஹலோ”, என்றான்.
“என்ன சத்யா, நின்னு போன விஷயத்தை ஆரம்பிக்கிற போல? நான் சந்தோஷமா இருந்தா உனக்கு எப்பவும் பிடிக்காதா? அப்ப உன்னை எப்படி சந்தோஷமா இருக்க விடுவேன்? கல்யாணம் நின்னுருச்சுன்னு நான் நிம்மதியா இருந்தா நீ மறு பேச்சு வார்த்தை நடத்த வந்திருக்க?”, என்றான் அவன். அவன் இங்கே தான் இருக்கிறான் என்று தெரிந்தது. ஆனால் யார் என்று தெரிய வில்லை. அவனுக்கு தெரிந்து அனைவருமே போனில் பேசிக் கொண்டிருக்க நிறைய பேர் காதில் இயர் போன் வேறு அணிந்து பேசிக் கொண்டிருக்க யாரைச் சந்தேகப் படுவதாம்?
எரிச்சலாக வந்தது சத்யாவுக்கு. “என்னை வேவு பாக்குறது தான் உனக்கு வேலையா? உனக்குன்னு வேற வேலை வெட்டி இல்லையா? வேணும்னா என் கம்பெனிக்கு வா. நல்ல சம்பளத்துல வேலை போட்டு தரேன். சும்மா சும்மா போன் போட்டு பூச்சாண்டி காட்டிக்கிட்டு”, என்றான் எரிச்சலாக.
“நக்கலா உனக்கு?”
“இல்லையா பின்ன? அவன் அவனுக்கு ஆயிரம் கமிட்மெண்ட்ஸ் இருக்கு. இவன் என்ன டான்னா என் சந்தோஷத்தை கெடுக்கணும்னு சுத்திக்கிட்டு இருக்கான். அவங்க அவங்க சந்தோஷம் அவங்க கிட்ட தான் இருக்கு. என்னை நினைச்சு என் சந்தோஷத்தை கெடுக்கணும்னு நினைச்சு இவ்வளவு ரிஸ்க் எடுக்குறியே? உன்னை எல்லாம் பைத்தியம்ன்னு தான் சொல்லணும். முதல்ல ஒரு நல்ல டாக்டரை பாரு மிஸ்டர் எக்ஸ். அது உனக்கு ரொம்ப நல்லது. டிரீட்மெண்ட் செலவு வேணும்னா நான் கொடுக்குறேன்”
“சத்யா”
“கத்தாத. இப்ப என்ன வேணும் உனக்கு? சொல்றதை சீக்கிரம் சொல்லிட்டு போனை வை”
“நீ அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ண கூடாது”
“அதைச் சொல்ல நீ யாரு டா? பண்ணினா என்ன பண்ணுவ? என்னைக் கொன்னுருவியா?”
“உன்னை ஒண்ணுமே பண்ண மாட்டேன் சத்யா. உன் உயிர் எனக்கு ரொம்ப முக்கியம். நீ சந்தோஷமா இருக்க கூடாது அவ்வளவு தான். அப்படி கல்யாணம் பண்ணினா உனக்கு முன்னாடி இருக்காளே அவளைக் கொன்னுருவேன்”
“ஏய்”
“பதறுதா? இது தான் எனக்கு வேணும், ஒழுங்கு மரியாதையா அந்த பிள்ளையை விட்டு நீ விலகிட்டா அவ வேற எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு உயிரோட நிம்மதியா இருப்பா? இல்லைனா அநியாயமா செத்துருவா. அவங்க அப்பாவுக்கு ஒரே பொண்ணாமே? நான் செய்ய மாட்டேன்னு நினைக்காத. நீங்க ரெண்டு பேரும் இப்ப என் கண்ணு முன்னாடி தான் இருக்கீங்க? அவளை இப்பவே முடிச்சிறவா? முடிச்சி காட்டட்டுமா?”
“நோ”
“அப்படினா நீ இந்த கல்யாணத்தை நிறுத்திரு”
“சரி”
“இவன்னு இல்லை, நீ எவளையுமே கல்யாணம் பண்ணக் கூடாது. உனக்குன்னு ஒரு வம்சமே இருக்க கூடாது. அவ கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு கிளம்பு”, என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.
அவன் முக மாற்றத்தையும் அவன் பேசுவதையும் வீணா கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். ஏதோ புரிவது போல இருந்தது. கொஞ்சம் அவளுக்கு பதட்டமாகவும் இருந்தது.
“என்ன ஆச்சு சத்யா?”
“உங்க அப்பாவுக்கு கால் பண்ணி மிரட்டினவன் தான் இப்ப போன் பண்ணினான். இங்க எங்கயோ இருந்து நம்மளை பாக்ககுறான். நான் உன்னைக் கல்யாணம் பண்ணக் கூடாதாம், நிம்மதியா இருக்கக் கூடாதாம். உன்னைன்னு இல்லை யாரையுமே கல்யாணம் பண்ணக் கூடாதாம்? எனக்கே தெரியாம ஏதோ ஒரு பகையை வளத்து வச்சிருக்கேன் போல?”
“அப்படின்னா இந்த கல்யாணத்தை நிறுத்த போறீங்களா?”, என்று கேட்கும் போதே அவளுக்கு அவ்வளவு வலித்தது.
அது புரிந்தாலும் வேறு வழி இல்லாததால் “ஆமா”, என்றான்.
“இது தான் உங்க முடிவா? இதைச் சொல்ல தான் என்னை இங்க வரச் சொன்னீங்களா? என் அம்மா அப்பா நம்ம கல்யாணத்தை முடிவு பண்ணுறதுக்காக உங்க வீட்டுக்கு போயிருக்காங்க. இப்ப அவங்க கிட்ட நான் என்னன்னு சொல்ல? உண்மைலே நீங்க எதுக்கு என் வாழ்க்கைல வந்தீங்கன்னு இருக்கு? கல்யாணம் அது இதுன்னு பேசி.. இப்ப எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிப் போனது.
அவனுக்கு மட்டும் சந்தோஷமாகவா இருக்கிறது? “வீணா பிளீஸ் புரிஞ்சிக்கோ. இது நாம நினைக்கிற மாதிரி சின்ன விஷயம் இல்லை”, என்று சமாதானப் படுத்தினான்.
“சின்ன விஷயமா பெரிய விஷயமா தெரியாது. ஆனா நீங்க நினைச்ச மாதிரி இந்த கல்யாணத்தை நிறுத்திட்டீங்கல்ல?”
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை டி. நீ வேற படுத்தாத. கண்ணுக்கு தெரிஞ்ச எதிரினா கூட சமாளிச்சிறலாம். இது எவன்னே தெரியலை. நான் ஏதும் பிளான் பண்ணலை டி. எனக்கு தோணினா முகத்துக்கு நேரா தான் செய்வேன் சொல்லுவேன். இப்படி முதுகுக்கு பின்னாடி செய்ய மாட்டேன். அவன் என்னை ஏதாவது செய்வேன்னு சொன்னா கூட நான் பயப்பட மாட்டேன். ஆனா உனக்கு ஒரு ஆபத்துன்னா என்ன பண்ணுறது?”
“அப்படின்னா என்னை விட்டுக் கொடுக்க முடிவு பண்ணிட்டீங்க அப்படித் தானே? உங்களுக்கு முதல் நாளே என்னைப் பிடிக்கலை. அதான் சான்ஸ் கிடைச்சதும் இப்படி முடிவு பண்ணிட்டீங்க?”, என்று சொல்ல அவனுக்கு என்ன சொல்ல என்றே தெரிய வில்லை.
அவனுக்காக ஒரு பெண் கலங்குவதை நினைத்து சந்தோஷப் படக் கூட முடியாமல் அவன் நிலை இருக்கிறதே? அந்த முகம் தெரியாதவன் மேல் அவ்வளவு கடுப்பு வந்தது.
இந்த நிமிடம் அவன் மேலேயே அவனுக்கு அவ்வளவு கோபமும் வந்தது. நமது வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தது எவ்வளவு பெரிய உண்மை என்று இப்போது புரிந்தது. அவன் அவனுடைய திருமணத்தைப் பற்றி நல்ல விதமாக பேசி இருந்தால் நினைத்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காதோ என்று எண்ணியவன் அவளை பாவமாக பார்த்தான்.