அத்தியாயம் 7 

நான் நானாக இல்லை என்ற 

வார்த்தை இருவருக்கும் பொருந்தும் 

பைத்தியம் மற்றும் காதல்!!!

இரவு வந்த அழைப்பில் சத்யாவுக்கு குழப்பம் வந்திருந்தாலும் காலையில் வீணாவிடம் இருந்து வந்த காலை வணக்கத்தில் அனைத்தையும் மறந்தான் சத்யா.

“குட் மார்னிங் வீணா. இன்னைக்கு மீட் பண்ணலாமா? கொஞ்சம்  பேசலாமா? கவலைப்படாதே. டேட் லிட்டில் பிரின்சசை அவங்க அப்பா கிட்ட இருந்து பிரிச்சு தூக்கிட்டு எல்லாம் போக மாட்டேன்”, என்று அவளுக்கு அனுப்பி வைத்தான்.

அந்த மெசேஜைப் பார்த்து சிரித்த வீணா “நான் 58 கிலோ. என்னைத் தூக்குறேன்னு உங்க இடுப்பு எலும்பை உடைச்சிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லைப்பா”, என்று பதில் அனுப்பி வைத்தாள்.

இப்போது அவனுக்கு சிரிப்பு வந்தது. “லஞ்ச் டைம் வரேன். அன்னைக்கு மாதிரி வெளிய சாப்பிட போகலாம்”, என்று சொன்னதும் சரி என்று அனுப்பி வைத்து விட்டு பள்ளிக்கு கிளம்பி வந்தாள்.

“இன்னைக்கு நீ லீவ்ன்னு அப்பா சொன்னார்?”, என்று கேட்டாள் அம்சவேணி. “வீட்ல இருந்தாலும் நேரம் போகாது மா. நான் போய்ட்டு வரேன்”, என்றாள்.

“சாப்பிட்டு போயேன் டி”

“பசிக்கல, அப்பா எங்க?”

“எங்கயோ போகணும்னு சொன்னார். என்னையும் கிளம்ப சொன்னார்”, என்று சொன்னதும் அவள் எங்கே என்று யோசிக்கும் போதே வெளியே கிளம்பி வந்தார் குல்கர்னி.

“அப்பா”, என்று அவள் கேள்வியாக இழுக்க “சம்பந்தியை பாக்க போறேன் மா. எல்லாம் பேசிட்டு வந்துறேன்”, என்று சொல்ல இரண்டு பெண்களின் முகமும் மலர்ந்தது.

மகளின் முகத்தில் சிரிப்பைக் கண்டதும் அந்த தந்தைக்கும் சந்தோஷம் தான். “சரி வேணி, நீ கிளம்பி தயாரா இரு. நான் வீணாவை ஸ்கூல்ல விட்டுட்டு வரேன். அப்புறம் நம்ம தோட்டத்துல உள்ள சீனிக்கிழங்கு, பனங்கிழங்கு, கீரை, பழம் எல்லாம் பழனிசாமி கிட்ட சொல்லி கொண்டு வரச் சொல்லி இருந்தேன். கொண்டு வந்தா கார் டிக்கியில வச்சிரு. நீ வா வீணா போகலாம்”, என்று சொன்ன குல்கர்னியுடன் சந்தோஷமாக கிளம்பினாள்.

“பாப்பா நீ இப்ப ஓகே தானே?”

“ஓகே தான் பா. உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்”

“என்ன டா?”

“இன்னைக்கு அவங்க என்னை பாக்க வாறேன்னு சொல்லியிருந்தாங்க”

“சந்தோஷமா போய்ட்டு வா மா. நானும் கண்டிப்பா இந்த கல்யாணத்தை பேசி முடிச்சிருவேன்”, என்று சொன்னவர் மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினார். ஆனால் அவருக்கு தெரிய வில்லை. இந்த திருமணம் நடப்பது அவ்வளவு எளிதில்லை என்று.

அடுத்த ஒரு மணி நேரத்தில் குல்கர்னி மனைவியுடன் சத்யா வீட்டுக்கு வந்து இறங்கினார். சத்யா மற்றும் ஸ்ரீ இருவரும் வீட்டில் இருக்க வில்லை.

“வாங்க வாங்க”, என்று இருவரையும் வரவேற்ற பாமா கணவரையும் அங்கே அழைத்து வந்தார். உடல் நிலை பற்றிய பேச்சு வார்த்தை வந்ததும் நால்வரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். திருமணம் பற்றி தான் எப்படி பேச என்று தெரிய வில்லை.

அவசரப் பட்டது குல்கர்னி தானே? அதனால் அவரே “என்னை மன்னிச்சிருங்க சம்பந்தி”, என்று ஆரம்பித்தவர் நடந்ததைச் சொன்னதும் தீனாவுக்கு திகைப்பு தான்.

“என்ன சொல்றீங்க நீங்க?”

“ஆமா மாப்பிள்ளையோட பிரண்ட் மாலினி. அவ தான் அப்படி எல்லாம் சொன்னா. ஆனா நான் விசாரிச்சிருக்கணும், தப்பு பண்ணிட்டேன்”

“நீங்க தப்பு பண்ணிட்டேன்னு சொல்லும் போது மன்னிக்க தான் தோணுது. ஆனாலும் எனக்கு இந்த கல்யாணம் வேணுமானான்னு தோணுதே?”

“சம்பந்தி”

“தப்பா எடுத்துக்காதீங்க. நான் உங்களை தப்பு சொல்லலை. ஒரு அப்பாவா நீங்க முடிவு எடுத்தீங்க? அதே முடிவை நானும் எடுக்கணும்ல? இந்த உலகத்துல ரொம்ப முக்கியமானது நம்பிக்கை. அது முன்ன பின்ன தெரியாதவங்க மேல வர வாய்ப்பு இல்லை தான். ஆனா அதை எங்க கிட்ட கேட்டுருக்கலாம்ல? என் மகன் கோபக்காரன், கொஞ்சம் முசுடு. அதுக்காக தப்பான வேலை எல்லாம் செய்றவன் இல்லை. அவனுக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருந்தா திருட்டு தனமா எதுக்காக அப்படி செய்ய போறான்? அப்படி காதலுக்கு எதிர்ப்பு சொல்ற அம்மா அப்பாவும் நாங்க இல்லை. அந்த பொண்ணு தப்பா சொன்னதும் இப்பவே என் மகனை நீங்க அப்படி தான்னு நம்பிட்டீங்க? நாளைக்கு ஏதாவது அவன் மேல பழி வந்தாலும் நீங்க நம்புவீங்க தானே? நீங்க மாமனாரா இருந்தாலும் நீங்களும் என் மகனுக்கு அப்பா மாதிரி தான். உங்க பொண்ணு எங்களுக்கு மகனா அவன் உங்களுக்கு மகன் தானே?”, என்று கேட்க அவர் பேச்சு பெண்ணை பெற்றவர்களுக்கு சிறு புல்லரிப்பைக் கொடுத்தது. ஆனாலும் கஷ்டமாக இருந்தது.

“இது எங்களுக்கு ஒரு பாடம் சமபந்தி? பிளீஸ் என்னை மன்னிச்சிருங்க. நான் அவசர பட்டுட்டேன். பொண்ணோட வாழ்க்கை பாத்தீங்களா? அதான். நாங்க இப்ப மாப்பிள்ளையை நம்பறோம். பிள்ளைகளை சேத்து வைப்போமே”, என்று கை கூப்பினார் குல்கர்னி.

“இல்லை இது சரி வராதுன்னு தோணுது..”, என்று அவர் சொல்லும் போது “என்னங்க? என்ன இருந்தாலும் அவங்க பொண்ணை பெத்தவங்க. மாப்பிள்ளையை பத்தி இப்படி தப்பா சொன்னா கொஞ்சம் பயமும் பதட்டமும் இருக்க தானே செய்யும்? நாளைக்கு நம்ம ஸ்ரீக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா நாமளும் அப்படி தான் யோசிப்போம்,. அது மட்டுமில்லாம அண்ணன் அந்த விஷயத்தை சபைல வச்சு நம்ம கிட்ட கேட்டுருந்தா அவங்க சொந்தம் நம்ம சொந்தம் எல்லாரும் நம்ம சத்யா பத்தி என்ன நினைச்சிருப்பாங்க? நாம நம்ம பிள்ளையை நம்புவோம். மத்தவங்களும் நம்பனும்னு அவசியம் இல்லையே? எல்லார்கிட்டயும் போய் எங்க பையன் நல்லவன்னு நாம சொன்னாலும் அவங்க நம்புவாங்களா? இப்பவும் இவங்க நம்ம நிரூபிக்கிறதுக்கு முன்னாடி தானே நம்ம பிள்ளையை நம்பி வந்துருக்காங்க. அந்த நம்பிக்கை போதுங்க? கடவுள் வீணாவுக்கும் சத்யாவுக்கும் தான் முடிச்சு போட்டுருக்கார். அதை நம்ம எதுக்கு தடுக்கணும்? நிச்சயம் அன்னைக்கு பிள்ளைங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்களே அது போதும்”, என்று சொன்னாள் பாமா.

 அவளுடைய பெருந்தன்மையை கண்ட குல்கர்னி மற்றும் அம்சவேணிக்கு தங்களின் மகளுக்கு சம்பந்தம் இதை விட நல்ல வீட்டில் தேடினாலும் கிடைக்காது என்று தான் தோன்றியது.

            தீனாவும் பாமா சொன்னதை யோசித்துப் பார்த்தார். அவருக்கும் அது சரி என்றே பட்டது, என்ன தான் அவர் மகனுக்காக பார்த்தாலும் நிதர்சனம் என்ற ஒன்று இருக்கிறதே,.

            “சரி சம்பந்தி, நம்ம பேசின படியே இந்த கல்யாணத்தை வச்சிக்கலாம். ஒரு ஆதங்கத்துல பேசிட்டேன். மனசுல எதுவும் வச்சிக்காதீங்க”, என்றார் தீனா.

            “பரவால்ல சம்பந்தி. ஆனா மாப்பிள்ளை..”

            “அவன் கோபம் நியாயமானது தான். ஆனா அவன் தெளிவா சொல்லிட்டான் அவன் பொண்டாட்டி வீணா தான்னு. என் மகன் கமிட் ஆக தான் யோசிப்பான். ஆனா பிடிச்சிருச்சுன்னா அவங்களுக்காக உயிரையே கொடுப்பான். அவன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னது இன்னொரு பிரான்ச் ஓப்பன் பண்ணனும்னு தான். மத்த படி வேற காரணம் எதுவும் இல்லை. அந்த மாலினி விஷயம் என்னன்னு நான் பாத்துக்குறேன். பய எங்கயோ பகையை மிச்சம் வச்சிருக்கான். அவன் கிட்ட நான் பேசிக்கிறேன்”

            “சரி சம்பந்தி, மாப்பிள்ளை மேல பழி சொன்னவங்களை கண்டிப்பா ஏதாவது பண்ணனும். எல்லாருக்கும் எவ்வளவு மனசு கஷ்டம் பாருங்க. உங்களுக்கு உடம்பு வேற இந்த அளவுக்கு சரி இல்லாம போச்சு. சரி நம்ம பேசின படியே கல்யாணத்தை நடத்திறலாம். சரி நாங்க கிளம்புறோம். என்ன உதவினாலும் என் கிட்ட கேளுங்க. மாப்பிள்ளைக்காக நான் வந்து நிப்பேன். வரோம் சமபந்தி, வரோம் தங்கச்சி”, என்று சொல்லி விட்டு குல்கர்னி எழுந்து கொள்ள அம்சவேணியும் எழுந்து கொண்டாள்.

            “சாப்பிடாம உங்க ரெண்டு பேரையும் விட்டுருவேணா? கல்யாணம் பத்தி பேசிட்டு இருங்க. நான் சீக்கிரம் சமைச்சிறேன். சாப்பிட்டு தான் போகணும்”, என்று கேட்ட பாமா அவர்களை சாப்பிட வைத்து தான் அனுப்பி வைத்தாள்.

            அதே நேரம் வீணாவும் சத்யாவும் அந்த ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்திருந்தார்கள். இருவருக்கும் உணவு ஆர்டர் தந்த பிறகும் அவர்களுக்குள் மௌனமே நிலவியது. அவன் கோபமாக இருப்பான் என்று எண்ணி அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.