அத்தியாயம் 6 

விலகும் வழி தேடினாலும் 

உன் நினைவுகளில் தான் 

பயணித்துக் கொண்டிருக்கிறேன்!!!

            சத்யா பற்றி மாலினி சொன்னதை எல்லாம் அவனிடம் தெளிவாக சொன்னார் குல்கர்னி. அனைத்தையும் கேட்டவனுக்கு திகைப்பாக இருந்தது. நிச்சயம் இப்படி நடந்திருக்கும் என்று அவனுக்கு ஒரு சதவீதம் கூட யூகம் இல்லை.

            மாலினி அவனுடன் கல்லூரியில் படித்தாள். இரண்டாம் வருடம் அவனிடம் காதலிப்பதாக சொன்னாள். அவனுக்கு எந்த வித விருப்பமும் இல்லை என்று சொன்ன பிறகு அப்படியே அது பற்றி பேசாமல் நல்ல தோழமையோடு தான் இது வரை பேசிக் கொண்டிருக்கிறாள்.

            அவனுக்கு கூட சில நேரம் பெருமையாக இருக்கும் அவளது மாற்றம். ஆனால் அவள் இந்த அளவுக்கு இவரிடம் பேசி இருப்பாள் என்று அவனால் நம்ப கூட முடிய வில்லை. அதே நேரம் குல்கர்னி பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பதும் அவனுக்கு தெரியும்.

            இதற்கு பின் எதுவோ இருக்கிறது என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் என்ன என்று தெரிய வில்லை. கண்டு பிடிக்க வேண்டும் என்று எண்ணியவன் “சரி சார் நான் வரேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.

            இப்போது திகைப்பது குல்கர்னி முறையானது. வந்தான் காரணம் கேட்டான், கிளம்புகிறேன் என்கிறான். எந்த பதிலும் சொல்ல வில்லை. அது உண்மை தான் என்றும் சொல்ல வில்லை. அது பொய் என்றும் வாதாட வில்லை. என்னை சந்தேக படுறீங்களா என்று கோப படவும் இல்லை.

            அதனால் திகைப்பாக பார்த்தவர் “என்ன தம்பி கிளம்புறேன்னு சொல்றீங்க?”, என்று கேட்டார்.

            “வேற என்ன சொல்றீங்க? காரணம் தெரிஞ்சிக்க வந்தேன். கேட்டுட்டேன். கிளம்புறேன்”

“தம்பி”

“நீங்க கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுக்கு வேற ஏதாவது காரணம் இருந்திருந்தா அதை புரிய வச்சு உங்க பொண்ணை கட்டிக் கொடுங்கன்னு கேக்கலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா நீங்க வைக்கிற காரணம் இப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது. இது பத்தி பேச ஒண்ணுமே இல்லை. எனக்கு விருப்பமும் இல்லை”

            “நான் வேணும்னு உங்க மேல பழி போடலை தம்பி”

            “தெரியும் சார். நீங்க வேணும்னு பண்ணலை. மாலினி எதுக்காக இப்படி சொன்னான்னு எனக்கு தெரியலை. அதை நான் பாத்துக்குறேன். ஆனா உங்க கிட்ட நான் நல்லவன்னு வாதாடணும்னு எனக்கு தோணலை சார். நான் கிளம்புறேன்”

            “ஏன்?”

            “இன்னைக்கு சொன்ன காரணத்தை நீங்க நேத்தே உங்க வீட்ல வச்சு சொல்லியிருந்தா கூட நான் விளக்கம் கொடுத்துருப்பேன். இல்லை என் கிட்ட விளக்கம் கேட்டுருந்தா சொல்லியிருப்பேன். ஆனா நீங்க யாரோ ஒருத்தங்க சொன்னதை நம்பி அதை உண்மைன்னு ஏத்துகிட்டு கல்யாணத்தை நிறுத்தணும்னு முடிவு பண்ணின அப்புறம் இப்ப பேசி என்ன ஆக போகுது?”

“தம்பி”

“ஏன் சார் நான் ஒண்ணு கேக்கட்டுமா? இப்ப மாலினி சொன்னதை வச்சு என்னை தப்பா ஜட்ஜ் பண்ணி கல்யாணத்தை நிறுத்திட்டீங்க? ஒரு வேளை கல்யாணம் ஆன அப்புறம் யாராவது என்னைப் பத்தி இப்படி சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? அப்பவும் அதை எல்லாம் நம்பி உங்க பொண்ணை கையோட கூட்டிட்டு போயிருவீங்களா?”

            “அது..”, என்று ஆரம்பித்தவர் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். அவன் கோபப் படவில்லை. பதறவில்லை. வார்த்தையில் அப்படி ஒரு நிதானம் அவனிடம் இருந்தது. அதே நேரம் அவன் கோபத்தை அடக்குகிறான் என்றும் அவருக்கு புரிந்தது. ஏனோ தவறு செய்து விட்டோம் என்று எண்ணியவருக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

            “பதில் சொல்ல சங்கடப்படாதீங்க? ஒரு பொண்ணை பெத்து வச்சிருக்கீங்க? அதனால கொஞ்சம் பதட்டத்துல முடிவு பண்ணிட்டீங்கன்னு என்னால உங்களை புரிஞ்சிக்க முடியுது. நான் உங்களை தப்பா எதுவும் நினைக்கலை. ஆனா என் பக்கமும் நீங்க பாக்கணும். என்னை நம்பி என் குடும்பத்தை நம்பி தான் நிச்சயம் வரைக்கும் வந்தீங்க? கண்டிப்பா விசாரிச்சிருப்பீங்க தானே? அதைக் கூட விடுங்க. நேத்து என் கிட்ட இப்படியான்னு ஒரு தடவை கேட்டுருக்கலாம். இல்லை பெரிய மனுஷன் எங்க அப்பா அவர் கேட்டப்பவாது உங்க பையன் இப்படியான்னு ஒரு வார்த்தை கேட்டுருக்கலாம்? காதுல ஒரு விஷயத்தை கேட்டீங்க? உடனே நான் கெட்டவன்னு  முடிவு பண்ணிட்டீங்க. கல்யாணத்தை நிறுத்தவும் செஞ்சிட்டீங்க? நமக்குள்ள  இருந்த உறவு முடிஞ்சதாவே இருக்கட்டும். உங்க பொண்ணுக்கு நல்ல பையனா பாருங்க”

            “நம்ம பேசலாமே தம்பி? உங்க முகத்துல உண்மை தெரியுது. அந்த பொண்ணு பொய்யா கூட சொல்லியிருக்கலாம்? நான் தான் அவசரப் பட்டுட்டேன்”

            “நீங்க  பெரிய மனசு பண்ணி இறங்கி வரலாம் சார். ஆனா நான் வாழ்க்கை முழுக்க யார் எப்ப என்ன சொல்லுவாங்களோ அதை என் மாமனார் எப்ப நம்புவாரோன்னு பயந்துட்டு ஒரு வாழ்க்கை வாழ முடியாது பாருங்க. நான் நல்லவனா கெட்டவனான்னு இப்ப எனக்கே தெரியலை. நீங்க உங்க பொண்ணுக்கு நல்ல வரனா பாருங்க. ஒரு வேளை மாலினி சொன்னது உண்மைன்னு உங்க மனசை நம்ப வச்சிக்கோங்க, கஷ்டமா இருக்காது. நான் வரேன்”, என்று சொன்னவன் கிளம்பி விட்டான்.

            “தம்பி, என் பொண்ணு…”

            “வீணாவை பத்தி பேச வேண்டாம் சார். பேச எதுவும் இல்லை. முதல்ல உங்க கிட்ட பேச தான் நினைச்சேன். அப்புறம் என்னவோ அவங்க கிட்ட பேசணும்னு தோணுச்சு. அவங்களை பாத்துட்டு தான் இங்க வரேன். அவங்க உங்களுக்கு நல்ல மகள். நீங்க என்ன சொல்றீங்களோ அதை அப்படியே செய்வாங்க. பரவால்ல பிள்ளையை நல்லா வளத்துருக்கீங்க. நான் வரேன்”, என்றவன் போயே விட்டான்.

            அவர் எவ்வளவோ தடுத்தும் அவன் கேட்கவே இல்லை. மனது முழுக்க தீயாக எரிந்தது. தோழி என்று எண்ணியிருந்தவள் செய்த துரோகம், வாழ்க்கை துணை என்று வந்தவளின் நிராகரிப்பு எல்லாமே அவனைச் சோர்வடைய வைத்தது.

தேவையில்லாத நினைவுகளை தள்ளி வைத்தவன் நேராக அவனது அலுவலகத்துக்கு சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். மாலினி ஏன் அப்படிச் சொன்னாள் என்று விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது தான். ஆனால் இப்போது அவனது கோபம் எல்லாம் குல்கர்னி மீதும் அவர் பெற்ற பெண்ணின் மீதும் இருந்ததால் அந்த விசாரிப்பை தள்ளிப் போட்டான்.

அவன் சென்றதும் குல்கர்னிக்கு கஷ்டமாக இருந்தது. அவசரப் பட்டு விட்டோம் என்று இப்போது புரிந்தது. தூக்கு தண்டனை கைதிக்கு கூட அவனின் மறு பக்கத்தை கேட்க அவகாசம் உண்டு. ஆனால் வீட்டு மாப்பிள்ளையாக நிச்சயம் செய்த ஒருவனிடம் என்னவென்று கூட காரணம் கேட்காமல் திருமணத்தை நிறுத்தி மிகப் பெரிய முட்டாள் தனம் செய்து விட்டார்.

            அடுத்து என்ன செய்ய என்று தெரிய வில்லை. இவனை விட்டா வேற மாப்பிள்ளையா கிடைக்காது என்ற எண்ணம் அவருக்கு ஒரு நொடி கூட வர வில்லை. சத்யாவை அப்படி அவரால் கடந்து வர முடிய வில்லை.

            மகளின் முகம் கண் முன் வந்தது. வீணாவும் சத்யாவும் ஜோடியாக நின்ற காட்சி கண் முன் வந்து அவரை கொன்றது. மகளை அவன் காணச் சென்றிருக்கிறான், அவள் என்ன பேசி வைத்தாள் என்று தெரியாது. அவன் சொன்ன படி பார்த்தால் அப்பா சொன்னால் திருமணம் செய்வேன் என்று அவள் சொல்லி இருப்பாள் என்று அவரால் யூகிக்க முடிந்தது. அப்படிப் பட்ட நல்ல பெண்ணுக்கு தான் மன வலியை அல்லவா கொடுத்து விட்டோம் என்று வேதனையாக இருந்தது.