அத்தியாயம் 5

என்னை நெருங்குவாயா என்ற 

எதிர்பார்ப்பில் எனக்குள் நீ உறைந்ததை 

அறியாமல் தான் போனேன்!!!

வண்டியை வீட்டை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்த சத்யா மனதில் வேதனை அந்த அளவுக்கு நிறைந்திருந்தது. அவனால் நடந்ததை ஜீரணிக்கவே முடிய வில்லை. இத்தனை நாள் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் தான். அதற்காக போராடியும் பார்த்தான். அவன் ஆசைப்படி திருமணம் நின்றதில் அவன் சந்தோஷம் தான் பட வேண்டும். ஆனால் அவனால் முடிய வில்லை. அப்படி ஒரு வலி.

            அவளை பிடித்திருக்கிறதா காதலிக்கிறானா என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. ஆனால் இப்போது அவன் மனம் திருமணத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. விருப்பத்துடன் தான் அவளுக்கு மோதிரம் போட்டு விட்டான், நெற்றியில் விபூதி பூசி விட்டான், நெருக்கமாக நின்று புகைப்படமும் எடுத்தான்.

            அவளை அவன் மனம் ஏற்றுக் கொண்டிருந்தது. அதனால் தான் அவளிடம் அவனால் எதார்த்தமாக உரையாட முடிந்தது. இருவருக்கும் அப்படி ஒரு எதார்த்தமான உரையாடல், அழகான நட்பு இவை எல்லாமே அழகாக தான் இருந்தது,.

            இப்போது எதுவும் இல்லை என்றதும் அவனுக்கு கஷ்டமாக இருந்தது. வீணா அவனுக்கு சொந்தமானவள் இல்லை. இனி அவளிடம் அலைபேசியில் உரையாட முடியாது. நீ எனக்கு இணை இல்லை என்று வம்பிழுக்க முடியாது. அவளை சீண்டி அவள் கோபப் படுவதை ரசிக்க முடியாது.

அவன் அமைதியாக யோசனையில் இருக்க தீனாவோ கடுங்கோபத்தில் இருந்தார். பாமாவோ அழுது கொண்டே வந்தாள். ஸ்ரீக்கு என்ன செய்ய என்று தெரியாத நிலை.

காரில் அப்படி ஒரு இறுக்கம். அனைவருக்குமே இந்த சூழ்நிலையை எப்படி கடக்க என்று தெரிய வில்லை. மனதில் பெரிய ஏமாற்றம், சொந்த பந்தங்களின் முன் தலைகுனிவு,.

            இது அனைத்துமே சத்யாவால் தான் என்று வேறு நம்பி இருக்க அவன் மீது கோபமாக வந்தது. ஆனால் பேசினால் வார்த்தைகள் தடித்து எல்லை மீறி விடும் என்பதால் அமைதியாக இருந்தார்.

            வீட்டுக்குச் சென்ற பிறகும் அமைதியே நிலவ “ஏன் சத்யா இப்படி பண்ணின?”, என்று கேட்டாள் பாமா.

            அதற்கு சத்யா ஏதோ சொல்ல வரும் போது “பாமா, இப்ப எதுவும் பேச வேண்டாம். எல்லாரும் போய் படுங்க”, என்றார் தீனா.

            “இல்லைங்க இவன்..”

            “சொன்னா கேப்பியா மாட்டியா? போய் படு போ. நாளைக்கு பேசிக்கலாம்”, என்று சொன்னதும் அமைதியாக பாமா உள்ளே செல்ல அவரும் பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்று விட்டார்.

            “போய் தூங்கு அண்ணா”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றாள் ஸ்ரீ. வேறு வழி இல்லாமல் சத்யாவும் அவனுடைய அறைக்குச் சென்றான்.

            உடை கூட மாற்ற மனதில்லாமல் கட்டிலில் அமர்ந்தவன் உடனே போனை எடுத்தான்.

            ‘டெவில்’ என்ற எண்ணை தேர்ந்தெடுத்தவன் உடனே அதை ‘மை வொய்ப்’ என்று மாற்றினான். அடுத்து அவளுக்கு அழைத்தான். ஆனால் அவள் அழுது கொண்டே உறங்கி இருந்ததால் அவனுடைய அழைப்பை ஏற்க வில்லை. மதுவும் அதை கவனிக்க வில்லை.

            “ஃபோன் எடு வீணா.. பிளீஸ்”, என்று புலம்பியவன் பல முறை அவளை அழைத்து விட்டான். எடுக்க வில்லை என்றதும் சோர்ந்து போய் அப்படியே படுத்தவன் அப்போது தான் கவனித்தான் அவன் கண்களில் தேங்கி இருந்த கண்ணீரை.

அவரசமாக எழுந்து அமர்ந்தவன் நேராக கண்ணாடி முன்னாடி சென்று நிற்க அவன் கண்கள் கண்ணீர் மழையை பொழிந்தது. அவன் கண்ணீர் அவனுக்கே வியப்பாக இருந்தது. அதுவும் அந்த கண்ணீர் வீணாவுக்காக எண்ணும் போது அப்படி ஒரு ஆச்சரியம். அவன் உதடுகள் லேசாக சிரிப்பில் மலர “விட மாட்டேன் டி. அப்படி உன்னை வேற யாருக்கும் விட்டுக் கொடுத்துற மாட்டேன். இவ்வளவு நாள் எப்படியோ? இனி நீ எனக்கு மட்டும் தான். தயாரா இரு என் கையால தாலி வாங்க”, என்று சொன்னவன் அப்படியே படுத்து தூங்கி விட்டான்.

            தீனதயாளனுக்கு தூக்கம் சற்றும் வர வில்லை. அவர் நினைத்தது நடக்க வில்லை என்றால் இல்லை ஏதாவது தவறாக நடந்தால் அனைத்தும் தன்னால் தானோ என்று எண்ணி குழம்பிக் கொள்வார்.

இன்றும் தன்னுடைய மகனின் மடத்தனத்தால் ஒரு பெண்ணை ஆசை காட்டி இப்போது கஷ்ட படுத்தி விட்டோம்? அன்றே மகன் பேச்சைக் கேட்டிருந்தால் அந்த பெண்ணுக்கு இவ்வளவு கஷ்டமாகி இருக்காதே என்று எண்ணி சோர்ந்து போனார்.

            பாமா தூங்கிக் கொண்டிருக்க அதற்கு மேல் கட்டிலில் உருண்டு கொண்டிருந்தால் அவளும் எழும்பி விடுவாள் என்பதால் அறையை விட்டு வெளியே வந்தார்.

            “ஏய் சொன்னா கேளு டா”, என்ற ஸ்ரீயின் கிசுகிசுப்பான குரலில் அப்படியே அதிர்ந்து நின்றார்.

            “வீட்ல இருக்கேன் டா. நிச்சயம் வேற நின்னுருச்சு. நானே கடுப்புல இருக்கேன், இப்ப போல முத்தம் கொடுன்னு கேட்டுட்டு இருக்க? நான் நாளைக்கு பேசுறேன்”

            “ஒரு பப் இழுத்தேன். அதான் உன்னை ரொம்ப தேடுது டி. ஆசையா கூப்பிட்டா நீ என்ன டான்னா தேவையில்லாதது பேசி புலம்பிட்டு இருக்க? ஒரே ஒரு முத்தம் தானே?”, என்று அந்த பக்கம் குணா பேசுவது அவருக்கு கேட்க வில்லை.

“மாட்டேன்”, என்று ஸ்ரீ சொல்ல “அப்படின்னா நாளைக்கு வருவியா? பிரண்ட் ரூமுக்கு போகலாமா?”, என்று கேட்டான் அவன்.

“பிரண்ட் ரூமுக்கா? அதெல்லாம் வேண்டாம். தனியா நம்ம எங்கயும் போக வேண்டாம்”, என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு மேல் மகள் பேச்சைக் கேட்க முடியாமல் அறைக்குள் சென்று அமைதியாக படுத்துக் கொண்டார்.

            அவர் மனம் ஒரு மாதிரி விரக்தி நிலைக்குச் சென்றது. அவர் அறிந்து ஸ்ரீ அவரிடம் செல்லம் கொஞ்சும் அழகான குழந்தை. அவளுக்குள் இப்படி ஒரு மறு பக்கம் இருக்கும் என்று அவர் எதிர் பார்க்காதது.

            அவரைப் பொறுத்த வரை மகளுக்கு ஒன்றும் தெரியாது. அவள் வெகுளி என்பது தான் அவர் எண்ணம். ஆனால் அவளோ தான் இன்னும் ஒரு குழந்தை இல்லை என்று அவருக்கு சொல்லி இருந்தாள்.

            ஏனோ தான் ஒரு அப்பாவாக தோற்றுப் போன உணர்வு. இரண்டு பிள்ளைகளும் அவரை ஏமாற்றியதாக ஒரு எண்ணம். தன்னுடைய பாதுகாப்பில் அழகான கூட்டுக்குள் பிள்ளைகளை அடைகாக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் வாழ்வது வேறு உலகத்தில் என்றும் அவரை விட்டு வெகு தூரம் அவர்கள் சென்று விட்டார்கள் என்றும் அவருக்கு இன்று புரிந்தது போன்று இருந்தது.

            அதீத யோசனை அவரை ஒரு மாதிரி நிலை குலைய வைக்க நெஞ்சின் ஓரம் வலி கொஞ்சம் கொஞ்சமாக கூடிக் கொண்டே போனது.

            நெஞ்சை பிடித்தவர் “பாமா பாமா”, என்று முணுமுணுப்பாக மனைவியை அழைத்தார். பாமாவுக்கு கேட்க வில்லை என்றதும் “ஆஆஆஆ அம்மா வலிக்குதே”, என்று அவர் கொஞ்சம் சத்தமாக அனத்த ஆரம்பிக்க அதற்கு பிறகு தான் பாமாவுக்கு விழிப்பு வந்தது.

அவர் வலியில் கதறிக் கொண்டிருக்க “ஐயோ என்னங்க என்ன ஆச்சு?”, என்று பதறி அவசரமாக வெளியே வந்து சத்யாவை அழைத்தாள்.

“என்ன மா?”, என்று கேட்டவன் அன்னையின் முகத்தில் இருந்த பதட்டத்தில் வேகமாக அவளை நெருங்கினான்.

“அப்பாவுக்கு என்னவோ ஆச்சு டா. நெஞ்சு வலிக்குதாம். வலில கதறுறார்”

            “அழாதீங்க மா, ஒண்ணும் ஆகாது. இருங்க நான் ஆம்புலன்சை கூப்புடுறேன்”, என்று சொன்னவன் அவசரமாக ஆம்புலன்சை அழைத்தான். பின் அது எப்போது வந்து அவரை அழைத்துச் செல்வது என்று எண்ணியவன் “அம்மா கால் போகல. வாங்க கார்ல போயிறலாம்”, என்றவன் அறைக்குள் செல்ல தீனா வலியில் துடிக்க அவசரமாக அவரை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.

            இந்த கலவரத்தில் ஸ்ரீயும் எழுந்து அவர்களுடன் சென்று விட்டாள். மருத்துவமனைக்கு சென்றதும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார் தீனதயாளன்.

            அனைவருக்கும் பதட்டம் சூழ்ந்திருந்தது. சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர் “அதிக மன உளைச்சல் காரணமா தான் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருக்கு மா. மைல்ட் அட்டாக் தான். இப்ப பெருசா ஆபத்து ஒண்ணும் இல்லை. ஏற்கனவே அவருக்கு ஒரு டைம் இப்படி வந்துருக்கும் போல. ஒரு நாள் அப்சர்வேசன்ல இருக்கட்டும். ஆனா ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுக்க கூடாது. அவர கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கட்டும். கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க. தனியா கேர் எடுக்கணும். அவர் செய்யுற வேலை சாப்பாடு எல்லாத்துலயும் மாற்றம் கொண்டு வரணும். புட் சார்ட் நாளைக்கு தரேன். சரியாகிரும். ரிலாக்சா இருங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றார் மருத்துவர்.