“அங்கிள் ஒரு நிமிஷம், நான் சொல்றதைக் கேளுங்க. எனக்கு அப்ப கல்யாணத்துல விருப்பம் இல்லாதது உண்மை தான். ஆனா”
“கல்யாணத்துல எதுக்கு விருப்பம் இல்லைன்னு நான் கேக்க மாட்டேன். அது உங்க தனிப் பட்ட விஷயம். அது எனக்கு தேவையில்லை, ஆனா கல்யாணத்துல விருப்பம் இல்லாதவருக்கு திடீர்னு எப்படி கல்யாணம் பண்ணிக்க தோணும் தம்பி? உங்களுக்கு விருப்பம் இல்லாதது எதுக்கோ இல்லை யாருக்காகவோ? அதை எல்லாம் பேசி நான் என் மரியாதையை கெடுத்துக்க விரும்பலை. எங்க பொண்ணுக்கு உங்களைப் பாத்தோம். ஆனா உங்களுக்கு என் மகளை பிடிக்கலை. அதனால இந்த கல்யாணம் வேண்டாம். வேற எதுவும் பேச வேண்டாம்”
“அங்கிள் நிச்சயம் ஆகிருச்சு. இப்ப போய்”
நிச்சயம் தானே முடிஞ்சிருக்கு? இதுவே கல்யாணம் ஆகிருந்தா தான் பிரச்சனை. எல்லாருக்கும் நான் பதில் சொல்லிக்கிறேன். நீங்க கவலைப் பட வேண்டாம்”
“அங்கிள் எல்லாரும் என்ன நினைப்பாங்க? அதும் இல்லாம வீணா.,,,”
“நம்ம ரெண்டு வீட்டு சொந்தங்க கிட்டயும் நான் பேசிக்கிறேன். அப்புறம் என் பொண்ணு மனசை நான் பாத்துக்குறேன். நீங்க கவலைப் பட வேண்டாம்”
“அங்கிள். நான்..”
“எதுவும் சொல்ல வேண்டாம். வாங்க”, என்றவர் அவனை பேசக் கூட விடாமல் அழைத்துச் சென்று விட்டார்.
அவன் வீணாவை பிடித்திருக்கிறது என்று இப்போது சொல்லியிருந்தால் கூட அவர் மனது தடுமாறி அவனிடம் தெளிவாக விசாரித்திருப்பாரோ என்னவோ? அவனுக்கே அந்த உண்மை தெரியாத போது அவன் எங்ஙனம் பேசுவான்? ஆனால் அவனுக்கு அப்படி ஒரு வலி எழுந்தது உள்ளுக்குள்.
அவர் பின்னால் பாவமாக செல்ல அங்கே அனைவரும் குல்கர்னியை கலவரத்துடன் பார்த்த படி நின்றார்கள்.
“என்ன ஆச்சு சம்பந்தி? என் மகன் ஏதாவது பண்ணிட்டானா?”, என்று கேட்டார் தீனா.
“இந்த கல்யாணம் நடக்காது சார்”, என்று தெளிவாக குல்கர்னி சொல்ல அங்கே அப்படி ஒரு அமைதி. அனைவருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி.
“என்னங்க? என்ன பேசுறீங்க?”, என்று கேட்டாள் அம்சவேணி.
“பிள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் வேணி. அவங்க நிம்மதியை கெடுக்குறதுக்கு இல்லை”, என்று சொல்ல அனைவரும் வாயடைத்துப் போனார்கள்.
வீணா அதிர்ச்சியாக சத்யாவைப் பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ இருவரின் கண்களிலும் ஒரே மாதிரியான வலி இருந்தது.
“என்னை வேண்டாம்னு அப்பா கிட்ட சொல்லிட்டாரா? இல்லையே? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தார்? நல்லா தானே பேசினார்? கல்யாணத்தை நிறுத்தணும்னு சொல்லிட்டு இருந்தாரே, இப்ப நிறுத்திட்டாரோ?”, என்று எண்ணியவளுக்கு கண்கள் கலங்கி விட்டது,
மகனை ஒரு பார்வை பார்த்த தீனா குல்கர்னியிடம் “என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?”, என்று கேட்டார்.
“இல்லை, நம்ம ரெண்டு குடும்பத்துக்குள்ள பிடிச்சிருக்குன்னு தான் மேற்கொண்டு ஏற்பாடு செஞ்சோம். இப்ப சரி வாராதுன்னு தோணுது. அது ஏன் எதுக்குன்னு பேசி மனசை கஷ்டப் படுத்திக்க வேண்டாமே?”, என்று குல்கர்னி சொல்ல “அது சரி தாங்க. ஆனாலும் காரணம் சொன்னா நல்லா இருக்கும். இப்ப தான் பிள்ளைகளுக்கு நிச்சயம் பண்ணி வச்சிருக்கோம். ரெண்டு பேர் கன்னத்துல இருக்குற சந்தன வாசனை கூட இன்னும் போகலை. அதுக்குள்ள இப்படின்னா மனசுக்கு வேதனையா இருக்குங்க. எங்க மகன் எதுவும் செஞ்சானா?”, என்று கேட்டார்.
“இல்லை அப்படி எல்லாம் இல்லை., அவரை ஜட்ஜ் பண்ணுறது என்னோட வேலை இல்லை. பெருசா எதுவும் பேசிக்க வேண்டாம். எனக்கு வீணா விவாதம் பண்ண வேண்டாம்னு தோணுது. அதையும் மீறி சொல்லணும்னா சொல்ற மாதிரி காரணம் ஒண்ணு இருக்கு. அதை வேணா சொல்றேன். பொண்ணு பாத்துட்டு போன அன்னைக்கு உங்க பையன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னாரா?”
“அது.. அப்ப.. ஆனா உடனே சரின்னு சொல்லிட்டான்”
“அது எப்படிங்க வேண்டாம்னு சொன்ன பொண்ணு மெல ஒரு மணி நேரத்துல விருப்பம் வரும்? இந்த ஒரு காரணம் போதாதா? உங்க மகனுக்கு எங்க பொண்ணை பிடிக்கலை. எங்க பொண்ணை விரும்பி நேசிச்சு உள்ளங்கைல வச்சு தாங்குர மாப்பிள்ளைக்கு தானே எங்க பொண்ணை கட்டிக் கொடுக்க நினைப்போம்? விருப்பமே இல்லாதவருக்கு எப்படி கட்டிக் கொடுக்க நினைப்போம் சொல்லுங்க?”
“இல்லை. அது.. வந்து..”
“எனக்குமே மனசு கஷ்டமா தான் இருக்கு. உங்க மேல நிறைய மரியாதை வச்சிருக்கேன். மேலும் மேலும் பேசி நல்ல நட்புறவை கெடுத்துக்க வேண்டாமே? பிளீஸ்”, என்று அவர் கைகூப்ப அதற்கு மேல் தீனா எதுவும் பேச வில்லை. பேசவும் முடியவில்லை.
அனைவரின் முகமும் கலங்கிப் போய் இருந்தது. “அம்மா”, என்ற படி வீணா அம்சவேணி தோள் சாய்ந்து அழ பாமாவும் அழுது கொண்டு கணவரைப் பார்த்தாள்.
“வாங்க போகலாம்”, என்று தீனா சொன்னதும் “அது எப்படி தீனா உடனே போக முடியும்? நம்மளை என்ன ஒண்ணும் இல்லாதவங்கன்னு இப்படி பண்ணுறாங்களா? நிச்சயம் முடிஞ்ச அப்புறம் எப்படி நிறுத்த முடியும்? இதுவே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி. அந்த பொண்ணு கூட நம்ம வீட்டுப் பொண்ணு தான். என்ன வேணும்னு அசிங்கப் படுத்துறாங்களா? இவங்களை சும்மா விடக் கூடாது”, என்று ஒரு பெரியவர் சண்டைக்கு வர “தப்பை நம்ம பக்கம் வச்சிட்டு அவங்களை குறை சொல்றது தப்பு பெரியப்பா. வாங்க போகலாம்”, என்றார் தீனா.
தீனா முன்னே நடக்க அனைவரும் பின்னே நடந்தார்கள். சத்யாவும் அன்னையின் மார்பில் சாய்ந்து அழுது கொண்டிருந்த வீணாவை ஒரு பார்வை பார்த்த படி வெளியே நடக்க “ஒரு நிமிஷம்”, என்றார் குல்கர்னி.
அவன் அவரைப் பார்க்க மற்றவர்களும் நின்று அவரைப் பார்த்தார்கள். வீணாவின் கையைப் பற்றி அவன் அணிவித்த மோதிரத்தை கழட்டியவர் “நீங்க எங்க பொண்ணுக்கு போட்டது. இதுக்கு இனி அர்த்தமும் இல்லைன்னு நினைக்கிறேன். புடவைக்கான பணமும் நான் ஜிபே பண்ணிறேன்”, என்று சொல்லி உறவையே முடித்து வைத்த குல்கர்னி சத்யாவின் கை பற்றி அவன் உள்ளங்கையில் மோதிரத்தை வைத்தார்.
அதை வெறித்துப் பார்த்தான். வீணாவும் அவனைப் பார்க்க அவள் கண்களில் வழிந்த கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக அவன் நெஞ்சில் ரத்தமாக வடிவது போன்ற ஒரு வலியை அவனுக்கு கொடுத்தது. அந்த வலி தான் அவளை உள்ளுக்குள் நேசித்திருக்கிறோம் என்ற உண்மையை அவனுக்கு அந்த நொடி புரிய வைத்தது.
அனைவரும் கிளம்பிச் செல்ல அவனும் சென்று விட்டான். அவர்கள் போனதும் அங்கிருந்து அழுது கொண்டே அறைக்குள் ஓடிச் சென்றாள் வீணா. மதியும் அவள் பின்னேயே சென்றாள்.
குல்கர்னி அப்படியே இடிந்து போய் அமர யாருக்கும் அடுத்து என்ன செய்ய என்றும் என்ன பேச என்றும் தெரிய வில்லை. இவ்வளவு நேரம் சந்தோஷமாக இருந்த வீடு இப்போது துக்கம் நடந்த வீடு போல மாறிப் போனது. வந்திருந்த சொந்தங்கள் அக்கம் பக்கத்தினர் அனைவரும் கிளம்ப ஆரம்பித்தார்கள்.
தன்னுடைய அறையில் ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து அழுத படி நின்ற வீணா அவர்கள் காரை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் சொந்தங்கள் அனைவரும் காரிலும் வேனிலும் ஏற சத்யா நேராக காரின் டிரைவர் இருக்கை அருகே சென்ற படி நிமிர்ந்து பார்த்தான். அவள் ஜன்னல் அருகே நிற்பது தெரிந்தது.
இருவரின் முகமும் தெளிவாக தெரிய வில்லை என்றாலும் இருவரும் ஒரு நொடி பார்த்த படி நின்றார்கள். பின் காருக்குள் ஏறி அமர்ந்தவன் அடுத்த நொடி காரை விருட்டென்று கிளப்பி விட்டான்.
கார் கிளம்பிச் சென்றது தான் தாமதம் “ஆஆ”, என்று கத்திய படி சுவரில் சாய்ந்து அமர்ந்த வீணா ஏங்கி ஏங்கி அழுதாள்.
“அக்கா அழாத கா”, என்று மதி சொல்லிக் கொண்டிருந்தாலும் அவள் கண்களும் கலங்கியது.
தலையில் இருந்த பூவை இழுத்து தூர எறிந்தவள் கால்களில் முகம் புதைத்து அழுத படியே இருந்தாள். அவளுக்கு எந்த ஆறுதல் சொன்னாலும் அது சரியாக இருக்காது என்று உணர்ந்த மதி அவள் கையைப் பற்றிய படி அவள் அருகே அமர்ந்தாள். அடுத்த நொடி அவள் மடியில் படுத்துக் கொண்ட வீணா அழுத படியே இருந்தாள். மதியின் கை அவள் தலையை வருடிய படியே இருந்தது.
உள்ளே வந்து பார்த்த அம்சவேணி மகளின் நிலையைக் கண்டு கண்ணீர் விட்ட படி மதிக்கு பார்த்துக் கொள்ளச் சொல்லி கண்ணைக் காட்டி விட்டு அறைக் கதவை சாற்றி விட்டுச் சென்றாள்.