“அவனை அவன் வேலையவே கட்டிட்டு அழச் சொல்லு. இன்னைக்கு பாத்து தான் போகனுமா அவன்?”, என்று சொன்னவள் முகம் கொஞ்சம் கோபமாக மாறியது.
மிதுன் வீணாவுக்கு தம்பி, மதிக்கு அண்ணன் முறை. தூரத்து உறவு தான். ஆனாலும் சிறு வயதில் இருந்தே பழக்கம். சொந்தமாக ஒரு பிரவுசிங் சென்டர் வைத்திருக்கிறான். அவனது தந்தை, மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்ற வாசனை பொருட்களை விளையும் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து மொத்த வியாபாரத்திற்கு அதை விற்கிறார்கள்.
மிதுனின் தந்தைக்கு லேசாக உடல் நிலை சரியில்லாததால் இந்த முறை அவன் சென்று விட்டான். “அக்கா விடு, அண்ணா பாவம்”, என்று மதி சொல்ல சரி என்றாலும் வீணா முகம் கோபமாக தான் இருந்தது.
“மாமா அக்கா டென்ஷனா இருக்கா. ஏதாவது சொல்லி சமாதான படுத்துங்க. இல்லைன்னா உங்களுக்கு ஏதோ ஏலியனை கட்டி வச்சிட்டாங்கன்னு சொல்லப் போறாங்க”, என்று சொல்லி விட்டு ஸ்ரீயை அழைத்துச் சென்றாள் மதி.
போகும் மதியை சிறு சிரிப்புடன் பார்த்தவன் “என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.
“எனக்கு ஒரு தம்பி இருக்கான். உங்களுக்கு அவனை காட்டலாம்னு நினைச்சேன். அவன் வரலையாம். வேலைல மாட்டிக்கிட்டான்”
“இப்ப என்ன அவன் வந்ததும் சொல்லு? வெளிய எங்கயாவது மீட் பண்ணலாம். இதுக்கு எல்லாம் மூட் அவுட் ஆகலாமா?”
“ம்ம், இது அதுக்கு மட்டும் இல்லை”
“அப்புறம்?”
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம்? சைட் அடிக்கிறாளாமாம்?”, என்று லேசான பொறாமையோடு சொல்ல “ஹா ஹா, இது எவ்வளவு நல்ல விஷயம்?”, என்றான் சத்யா.
அவள் மேலும் முறைத்துப் பார்க்க சீண்டுவதை விட்டுவிட்டு “அவங்க சைட் அடிக்கிறது எல்லாம் முக்கியம் இல்லை. உன் கண்ணுக்கு நான் அழகா தெரிஞ்சா மட்டும் போதும்ன்னு தோணுது. ஆனா உனக்கு அப்படி தெரியலை போல?”, என்று உதட்டைப் பிதுக்க வியப்பாக அவனைப் பார்த்தாள்.
“இவன் இப்படி எல்லாம் பேசுவானா?”, என்று இருந்தது அவளுக்கு. ஏனோ நேரம் செல்ல செல்ல அவனை பிடிக்கும் அளவு அதிகரித்துக் கொண்டே போனது.
மாப்பிள்ளையும் பெண்ணும் கிசுகிசுப்பாக பேசிக் கொண்டிருப்பதும் அவர்கள் முக பாவனையும் மற்றவர்களுக்கு அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது.
“எல்லாம் முடிஞ்சதும் பிள்ளைகளுக்கு சுத்திப் போடணும்”, என்று எண்ணிக் கொண்டாள் வீணாவின் அன்னை அம்சவேணி.
நிச்சயதார்த்த சடங்குகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. அந்த ஊர் பெரியவர் நிச்சய பத்திரிக்கை வாசித்து திருமண தேதியும் அறிவித்தார்.
இரண்டு குடும்பமும் தட்டு மாற்றிக் கொண்டது. பெரியவர்கள் மணமக்கள் இருவரையும் வாழ்த்தி நெற்றியில் விபூதி வைத்து விட்டனர்.
இருவரின் கரத்திலும் நிச்சயதார்த்த மோதிரம் கொடுக்கப் பட்டது. அவளின் வெண்டைப் பிஞ்சு விரல்களைப் பற்றி மோதிரத்தை அணிவிக்க அவன் கை பட்டதும் அவளுக்கு சிலிர்க்கவே செய்தது. அவளும் அவனுக்கு அணிவிக்க அமைதியாக வாங்கிக் கொண்டான். மற்றவர்களும் வந்து வாழ்த்தினார்கள். மதுவும் ஸ்ரீயும் அவர்களுக்கு உதவியாக நிற்க இருவருக்குள்ளும் நட்பும் மலர்ந்தது.
புகைப்படம் எடுப்பவர் அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கிக் கொண்டிருந்தார். எல்லாம் முடிந்ததும் “பொண்ணும் மாப்பிள்ளையும் சேந்து நில்லுங்க. சில போட்டோஸ் எடுக்கணும்”, என்று சொல்ல இருவரும் ஒன்றாக நின்றார்கள்.
சத்யா வீணாவை ஒட்டி உரசி நிற்க அவளுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது. இருவர் கைகளும் தோள்களும் அடிக்கடி உரசிக் கொள்ள அவன் என்னவோ சாதாரணமாக தான் இருந்தான். அவள் தான் அவனுடைய அருகாமையில் தன் வசம் இழந்து நின்றாள்.
அவள் எதற்கோ தடுமாறி பின்னால் சாயப் போக “ஏய் வீணா பாத்து”, என்ற படி கையை வேறு அவன் பற்றிக் கொள்ள அவள் மேனி சிலிர்த்தது. அவன் வாசனை அவளை மயக்கியது நிஜம்.
புன்னகை கலந்த நாணம் அவள் முகத்தில் உதயமாக “என்ன திடீர்னு அழகா இருக்க? பரவால்ல எனக்கு பொருத்தமா தான் இருக்க”, என்று வேறு வம்பிழுத்து சிரிக்க வைத்தான்.
கடைசியாக மதி ஒரு கேக்கை வாங்கி வந்து வெட்ட சொன்னாள்., “எதுக்கு டி இதெல்லாம்?”, என்றாள் வீணா.
“கல்யாணத்துக்கு எல்லாரும் பிஸி ஆகிருவோம். இப்படி ஃப்ரீ டைம் கிடைக்காது அதான். சரி சரி ஜோடியா கேக் கட் பண்ணுங்க பாப்போம்”, என்றாள்.
வீணாவின் கையைப் பற்றி கேக்கை வெட்டினான் சத்யா. அடுத்து என்ன பண்ண என்று அவன் தடுமாற “மாமா அக்காவுக்கு ஊட்டுங்க”, என்றாள் மதி.
அவனும் ஒரு பீசை எடுத்து ஊட்ட “அண்ணி, இப்ப நீங்க அண்ணனுக்கு ஊட்டுங்க”, என்றாள் ஸ்ரீ.
அவனுக்கு ஊட்டும் போது அவள் கைகள் லேசாக நடுங்கியது. வெட்கத்துடன் தயக்கமும் வந்தது. அடுத்து அனைவரும் உணவு அருந்த சென்றனர். அங்கேயும் புகைப்படக்காரர் இருவரையும் இனிப்பு ஊட்டச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அனைவரும் உணவு அருந்தி விட்டு பேசிக் கொண்டு அமர்ந்திருக்க குல்கர்னி மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதை எடுத்துப் பேசியவர் முகம் ஒரு மாதிரி இறுகிப் போனது. அவருக்கு கண்கள் கூட லேசாக கலங்கும் போல இருந்தது.
அவரை அழைத்தது ஒரு பெண். அவள் பெயர் மாலினி என்றும் அவளுக்கும் சத்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக சொன்னாள். அதை அவர் நம்பாமல் போனை வைக்க எண்ணினாலும் கொஞ்சம் என்ன என்று விசாரிக்கலாமே என்றும் தோன்றியது. என்ன இருந்தாலும் மகளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பற்றிய தகவல் அல்லவா?
அவர் போனை வைக்க வில்லை என்றதும் “நாங்க கல்யாணம் முடிக்கலைனாலும் ஒண்ணா வாழ்ந்துட்டு இருந்தோம். எப்ப உங்க பொண்ணு எங்க வாழ்க்கைல வந்தாளோ அப்பவே அவர் என்னை விட்டு விலக ஆரம்பிச்சிட்டார். நீங்க தாராளமா உங்க பொண்ணை அவருக்கு கல்யாணம் பண்ணி வைங்க. நிச்சயம் முடிஞ்ச பிறகு அதை நிறுத்தணும்னு எனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. ஆனா எனக்கு ஒரு குளோசர் அவரைக் கொடுக்க சொல்லுங்க. என்னை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா அதை என் கிட்ட சொல்லணும்ல? இப்ப என் கால் கூட எடுக்க மாட்டிக்கார். இப்ப உங்க கூட தானே இருக்கார்? இருங்க நான் கால் பன்றேன் எடுக்க மாட்டார் பாருங்க”, என்று சொல்லி விட்டு போனை வைத்தவள் சத்யாவுக்கு தான் அடித்தாள்.
வீணாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த சத்யா போன் அடிக்கவும் அதை எடுத்துப் பார்த்தான். அதில் மாலினி என்ற பெயர் மின்ன சிறு புருவச் சுளிப்போடு அந்த போனை கட் செய்து சைலென்ட்டில் போட்டு போனை வைத்தான்.
குல்கர்னி அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். மீண்டும் அவரை அழைத்தாள் மாலினி. “என்ன சார் பாத்தீங்களா? என் போனை எடுத்து பேசலாம்ல? நான் சொன்னது நிஜம் தாங்க. முதல்ல அவருக்குமே உங்க பொண்ணை கல்யாணம் பண்ண சம்மதமே இல்லை. அவங்க வீட்ல எவ்வளவோ பேசிப் பார்த்தார். அவங்க அப்பா தான் கட்டாயப் படுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். நான் உங்க பொண்ணு வாழ்க்கையை கெடுக்கலை. எனக்கு ஒரு முடிவு மட்டும் சொல்ல சொல்லுங்க. நானும் என் வாழ்க்கையை பாக்கணும்ல? உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா நாங்க ஒண்ணா இருக்குற போட்டோஸ் வேணும்னா அனுப்புறேன். ஆனா அதையும் ஏ ஐ ல பண்ணதுன்னு கூட சொல்லுவாங்க. நீங்களே ஒரு முடிவு பண்ணுங்க. சரி சார் வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள்.
அதைக் கேட்டு குல்கர்னி முகம் இருண்டு போய் இருந்தது. அவர் முகம் ஒரு மாதிரி இருக்க “என்ன ஆச்சு சம்பந்தி?”, என்று கேட்டார் தீனா.
அவர் அப்படிக் கேட்டதும் அனைவரும் குல்கர்னி பக்கம் பார்வையை திருப்பினாரகள்,.
வீணாவும் தந்தையைப் பார்க்க அவர் கண்களில் இருந்த வேதனையை சட்டென்று புரிந்து கொண்டவள் அவரை நெருங்கி “அப்பா உங்களுக்கு என்ன செய்யுது? நீங்க ஓகே வா? உங்களுக்கு வலிக்குதா? எதுக்கு இப்படி இருக்கீங்க?”, என்று கேட்டாள்.
“என்னங்க என்ன ஆச்சு”, என்று அம்சவேனியும் பதறினாள்.
“சம்பந்தி, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏதாவது பிரச்சனையா?”, என்று தீனாவும் கேட்க “நான் உங்க பையன் கிட்ட தனியா பேசணும்”, என்றார்.
சத்யா புருவம் உயர தீனதயாளன், மகன் தான் ஏதோ செய்து விட்டான். அதான் இப்படி சிரித்துக் கொண்டு இருந்திருக்கிறான் என்று எண்ணி அவரைக் கடுப்புடன் பார்த்தார்.
அவன் இன்றைய சிரிப்புக்கு பின்னால் இந்த திருமணத்தை நிறுத்த பிளான் செய்தது தான் காரணம் என்று எண்ணியவருக்கு மனதே விட்டுப் போனது.
ஏனோ குல்கர்னியின் முக பாவம் தீனாவுக்கு சரியானதாக பட வில்லை. “என்ன ஆச்சு அங்கிள்?”, என்று கேட்டான் சத்யா.
“சொல்றேன் வாங்க”, என்றவர் முன்னால் நடக்க சிறு குழப்பத்துடன் அவர் பின்னால் சென்றான்.
அறைக்குள் சென்றதும் கதவை அடைத்தவர் “எனக்கு நீங்க உண்மையை மட்டும் தான் சொல்லணும்”, என்றார்.
“என்ன ஆச்சு அங்கிள்?”
“என் மகளை பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு என்ன நடந்துச்சு?”
“அது..”
“இல்லை ஒப்பனாவே பேசலாம். இனி மறைக்க எதுவும் இல்லை. இங்க வச்சு எந்த சம்மதமும் சொல்லாத நீங்க வீட்டுக்கு போன அப்புறம் எப்படி சம்மதம் சொன்னீங்க? அன்னைக்கு என் பொண்ணு கிட்ட என்ன பேசுனீங்க? எங்க பொண்ணு எங்க விருப்ப படி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தான் சொன்னா. ஆனா நீங்க கிளம்பும் போது உங்க சம்மதம் முக்கியம்ன்னு சொன்னா. சொல்லுங்க அன்னைக்கு என்ன நடந்துச்சு?”, என்றார்.
அவர் இப்படிக் கேட்டதும் வேறு வழியில்லாமல் அவர்கள் பேசியது அனைத்தையுமே சொன்னான்.
“இருங்க நான் பேசிக்கிறேன். எனக்கு இருக்குறது ஒரே பொண்ணு தம்பி. ஜாதி, மதம், கலாச்சாரம் எதுவும் பாக்காம நாங்க உங்களை மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்தது எங்க பொண்ணு எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோஷமா இருக்கணும்னு தான். ஆனா அவளை பிடிக்காத ஒருத்தருக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வச்சு அவ வாழ்க்கையை கெடுக்க நான் தயாரா இல்லை. இந்த கல்யாணம் வேண்டாம். நிறுத்திறலாம்”, என்று சொல்ல அதிர்ந்து போனான் சத்யா. சட்டென்று அவனுக்கு வார்த்தைகள் கூட வெளிவர வில்லை.