கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று எண்ணிக் கொண்டவர் “சும்மா பேருக்கு தான் கேட்டேன். உண்மையிலே அவங்க வரும் போது நீ இங்க இருக்க கூடாதுன்னு தான் ஆசை. எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது நீ மட்டும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருப்ப. அதனால நீ வேலைக்கே போ”, என்றார் தீனா.

“ஐயோ படுத்துறாரே”, என்று எண்ணிக் கொண்டு தான் கிளம்பினான். அவர்கள் வந்து வரவேற்பு எல்லாம் முடிந்து நிச்சயம் மற்றும் திருமண தேதி குறித்து விட்டு மற்ற விஷயங்களையும் பேசினார்கள். அனைவருக்கும் திருப்தியே.

அவர்கள் கிளம்பிச் சென்று வெகு நேரம் கழித்து தான் வீட்டுக்கு வந்தான் சத்யா. அனைவரின் முகத்தில் இருந்த புன்னகையே நடந்ததை அவனுக்கு விவரிக்க அமைதியாக அறைக்குச் சென்று விட்டான்.

            அப்போது “அண்ணா, இதோ பொண்ணோட போன் நம்பர் அனுப்பிருக்காங்க. பேசணும்னா பேசுவியாம். லவ் கூட பண்ணிக்கோ. நான் அண்ணி கிட்ட பேசுனேன். சோ சுவீட்”, என்று சொல்ல அவளை முறைத்துப் பார்த்தான். பின் என்ன நினைத்தானோ கண்கள் மின்ன “அந்த நம்பர் கொடு”, என்றான்.

            “பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஆளா பறக்குற அவங்க நம்பர் வாங்குறதுக்கு?”, என்று நக்கல் அடித்தவளின் தலையில் ஒரு கொட்டு கொட்டியவன் அவள் மொபைல் எண்ணை தனக்கு அனுப்பிக் கொண்டான்.

            “உன் நம்பர் கிடைச்சிருச்சுல. இருக்கு டி உனக்கு”, என்று கருவிக் கொண்டவன் தன்னுடைய அறைக்கு சென்று வீணாவுக்கு அழைத்தான்.

            “ஹலோ யாரு?”, என்று கேட்டாள் வீணா.

            “நான் சத்யா பேசுறேன்”, என்ற அவனின் குரலிலே அது யார் என்று தெரிந்து போனது.

            ஆனாலும் விளையாட்டாக “அடடே எனக்கு அப்படி யாரையும் தெரியதாதுங்களே? எந்த நாட்டு பிரதமர் நீங்க? என்னோட அப்பாயின்மெண்ட் வேணுமா?”, என்று கேட்டு நக்கலடித்தாள்.

            அவனுக்கு வந்ததே கோபம். “இவ பெரிய எலிசபத் மகாராணி, இவ அப்பாயின்மெண்ட்டைக் கேட்டு வரிசைல நிக்குறாங்க. உன்னையும் ஒரு பொண்ணா நினைச்சு பாத்துட்டு போனேன்ல அந்த பாவப் பட்ட பிறவி சத்யா பேசுறேன் டி”, என்றான்.

“ஓஹோ அந்த சத்தியஸீலனா?”

            “ஆமா”

“என்ன விஷயம். பிடிக்கலைன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் கூட பேசாம இருக்க முடியலை போல? அதை விட கொடுமை இங்க என் கிட்ட சீன போட்டுட்டு வெளிய போய் உடனே கல்யாணத்துக்கு சம்மதம் வேற சொல்லியாச்சு, எதுக்கு இதய விளம்பரம்?”, என்று சீண்டினாள். அவள் சீண்டியது புரிந்து அவளுக்கு உல்லாசமாக இருந்தது.

            “ஏய் அறிவாளி, என்னை கார்னர் பண்ணி சம்மதிக்க  வச்சிட்டாங்க டி. வேற வழி இல்லாம ஒத்துகிட்டேன்”

            “எனக்கு அப்படி தோணலை, என்னை விட முடியாம அவசரமா சம்மதம் சொன்ன மாதிரி இருக்கு”, என்றாள் சிறு சிரிப்போடு. அவன் தான் அவளுக்கு என்று முடிவான பிறகு அவனிடம் உரிமையாக பேச பிடித்திருந்தது.

            “நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும். எதாட்டும் பண்ணு டி. இந்த கல்யாணம் வேண்டாம் எனக்கு. உன் கிட்ட எல்லாம் கெஞ்ச வேண்டியது இருக்கு பாரு”

            “நானா உங்களை கெஞ்ச சொன்னேன்? வேண்டாம்னா வேண்டாம்னு சொலுங்க”

            “நீ உன் வீட்ல சொல்லு”

            “என்னால சொல்ல முடியாது”

            “ஏய் பட்டிக்காடு பழி வாங்குறியா? என்னைக் கட்டிக்கிட்டா ரொம்ப கஷ்டப் படுவடி”

            “தெரியும் தான்., ஆனா என்ன பண்ண?”

            “அஅஆ முடிவே பண்ணிட்டியா என்னைக் கல்யாணம் பண்ணுறன்னு? அப்ப என்னோட வாழ்க்கை”

“அரோகரா”, என்று சொல்லி விட்டு அவள் போனை வைத்து விட அவன் தான் பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்தான் .

            அன்று இரவு மீண்டும் அவளுக்கு தான் அழைத்தான். சிறு சிரிப்புடன் போனை எடுத்தாள். “ஏய் பட்டிக்காடு ஏதாவது வழி சொல்லு டி இந்த கல்யாணத்தை நிறுத்த?”

            “இதை கல்யாணத்துக்கு சரின்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். இப்ப ஒண்ணும் பண்ண முடியாது”

            “அப்பா கொஞ்சம் சென்ட்டிமென்டா என்னை ஆப் ஆக்கிட்டாங்க டி. என்னமோ உன் மேல விருப்ப பட்டு ஆசைப் பட்டு காதலிச்சு ஓகே சொன்ன மாதிரி சொல்ற?”

            இதை எல்லாம் செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வர அவள் உதடுகள் மலர்ந்தது. சத்தமாக சிரித்தே விட்டாள்.

            “ஏய் என்னோட பிரச்சனை உனக்கு சிரிப்பா இருக்கா? எதுக்கு டி சிரிக்கிற?”

            “இல்லை நீங்க காதலிச்சு என் பின்னாடி அலைஞ்சா எப்படி இருக்கும்னு நினைச்சு பாத்தேன்”

            “அந்த பொண்ணு கண்டிப்பா நீயில்லை டி”, என்று அவன் சொன்னதும் அவள் மனதில் ஒரு சிறு வலி எழுந்தது. நிராக்கரிப்பின் வலி அனைவருக்கும் இருக்குமே? “எதுக்கு டா என்னை உனக்கு பிடிக்கலை?”, என்று அவன் சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் போல இருந்தது.

            அவள் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்க அவள் மன உணர்வுகள் புரியாதவன் “ஏய் இருக்கியா இல்லையா டி?”, என்றான். அதில் நடப்புக்கு வந்தவள் “இருக்கேன் இருக்கேன்”, என்றாள்.

அவள் மனதோ “இவன் எப்ப என்னை டி போட்டு எல்லாம் கூப்பிட ஆரம்பிச்சான்? ஆனாலும் நல்லா தான் இருக்கு”, என்று எண்ணியது.

            “என்ன பண்ணலாம் சொல்லு டி”, என்று கேட்டான் சத்யா.

            “யோசிப்போம் ஏதாவது ஐடியா கிடைக்குதான்னு”

            “சரி. எனக்கு இந்த கல்யாணம் நின்னா போதும்”

            “ஒரு ஐடியா இருக்கு. பேசாம நீங்க எங்கயாவது ஓடிப் போயிருங்க. கல்யாணம் தன்னால நின்னுரும்”

            “ஏது? நான் ஓடிப் போகனுமா? அம்மா, அப்பா, தங்கச்சி, வீடு, காரு, வேலைன்னு எல்லாம் இங்க இருக்கு. நான் எதுக்கு போகணும்? அதெல்லாம் போக முடியாது. நான் என் வீட்ல தான் இருப்பேன்”, என்று சொல்ல ஏனோ அவளுக்கு அவனை பிடிவாதம் பிடிக்கும் குழந்தையாக தான் தெரிந்தது.

            “அப்ப என்ன தான் பண்ணுறது?”

            “உனக்கு லவ் எதுவும் இல்லையா?”, என்று கேட்டவன் “நீ எங்க லவ் பண்ணியிருக்க போற? நீயே ஒரு பட்டிக்காடு. உன் கிட்டயும் எவன் வந்து லவ் சொல்லப் போறான்?”, என்று கேள்வி கேட்டு அவனே பதிலும் சொல்லிக் கொள்ள சுள்ளென்று ஏறியது வீணாவுக்கு.

            “நான் பட்டிக்காடாவே இருந்துட்டு போறேன். நீங்களே யோசிச்சு கல்யாணத்தை நிறுத்திருங்க”, என்று கடுப்புடன் மொழிந்தவள் அவன் ஏதோ சொல்ல வருவதற்குள் போனை வைத்து விட்டாள்.

            “என்ன வச்சிட்டா? கொஞ்சம் ஓவரா பேசிட்டோம் போலயே?”, என்று எண்ணிக் கொண்டிருந்தான் சத்யா.

தொடரும்..