“ரொம்ப சந்தோஷமான விஷயம் தானேங்க? இதுக்கு என்ன யோசிக்கிறீங்க?”
மனைவியையும் குழப்ப மனதில்லாமல் “சந்தோஷமான விஷயம் தான் மா. நாளைக்கு எப்ப போகணும். யாரை எல்லாம் கூட்டிட்டு போகன்னு தான் யோசிச்சேன்?”, என்றார்.
“அதானா? இப்போதைக்கு நாமளும் என் தங்கச்சி குடும்பமும் மட்டும் போவோம். நிச்சயத்துக்கு எல்லாரையும் கூப்பிடுவோம்”, என்று சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டவர் “சொந்தக்காரங்க எல்லாரையும் சாப்பிட வச்சு அனுப்பு வேணி”, என்று சொல்லி மனைவியை திசை திருப்பி அனுப்பி வைத்தார். ஆனாலும் அவருக்கு மகள் மனதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.
அவர்கள் போன பிறகு வீணாவிடம் “எதுவும் பிரச்சனையா? மாப்பிள்ளையை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டார் தான்.
“அவங்க வீட்ல சரின்னு சொல்லிட்டா எனக்கும் ஓகே தான் பா”, என்று மட்டும் சொல்லி இருந்தாள். ஆனாலும் அவருக்குள் ஏதோ ஒரு நெருடல்.
மகளின் அறையைத் திரும்பிப் பார்த்தார். தந்தை மனது புரியாமல் தனது அறைக்குள் “இவன் பெரிய துரை, இவனுக்கு என்னைக் பிடிக்கலையாம். ஆளையும் மண்டையும் பாரு”, என்று அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
சத்யா எதிரில் இருப்பதைப் போல நினைத்து “இங்க பாரு, ஒழுங்கா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லி தப்பிச்சிக்கோ. தப்பி தவறி என் கிட்ட சிக்கிட்ட உன்னை சும்மா விட மாட்டேன். கூடவே இருந்து உன் திமிரை அடக்குவேன். உனக்கு என் கூட தான் காலம் முழுக்க குப்பை கொட்டணும்னு விதி இருந்தா உன்னை யாரும் காப்பாத்த முடியாது”, என்றாள்.
ஆனாலும் “அவன் கூட கல்யாணம் வேணுமா?”, என்றும் எண்ணிக் கொண்டாள். மொத்ததில் இத்தனை நாள் அமைதியாக இருந்த அவளுடைய மனதை குழப்பி விட்டுச் சென்றிருந்தான் சத்யா. அதுவே அவளுக்கு எரிச்சலாக வந்தது.
தனக்குள்ளேயே யோசித்தால் தீர்வு கிடைக்காது என்று எண்ணிய வீணா அறையை விட்டு வெளியே வந்தாள். வீடே என்னவோ திருமணமே நிச்சயம் செய்தது போல அவ்வளவு கலகலப்பாக இருந்தது. அவளது சொந்தங்கள் அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
“அவன் தான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லலையே? அப்புறம் எப்படி எல்லாரும் சந்தோஷமா பேசிட்டு இருக்காங்க?”, என்று எண்ணி அவள் தங்கை மதியை அழைத்தாள். மதி அம்சவேணியின் தங்கை மீனாட்சியின் மகள்.
“சொல்லுக்கா ஏதாவது வேணுமா?”, என்று கேட்ட படி வந்தாள் மதி.
“எனக்கு அவர் வேணும். உன் வீட்ல எனக்கு ஒரு ஓரமா இடம் கொடு. நம்ம ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருப்போமாம். எப்படி என் ஐடியா?”
“அடி செருப்பால?”, என்று சொன்ன வீணா அவளை அடிக்க கையை ஓங்கி விட்டாள்.
“ஐயோ கொலைக்காரி”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள் மதி. அதற்கு பிறகு தான் தன்னுடைய கையில் இருந்த கதிர் அரிவாள் அவள் கண்ணில் பட்டது. “அச்சோ”, என்று என்று சொல்லி விட்டு அவசரமாக அதை கீழே போட்டாள். அந்த அரிவாள் எப்படி அவள் கையில் வந்தது என்று தெரிய வில்லை.
மதி விளையாட்டுக்கு தான் அப்படிச் சொன்னாள் என்று அவளுக்கு தெரியும் தான். இருந்தாலும் ஒரு விளையாட்டு பேச்சுக்கா தான் இந்த அளவுக்கு உணர்ச்சி வசப் பட்டோம் என்று அவளுக்கே வியப்பாக இருந்தது.
“அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்று நினைக்கிறேனா? எனக்கு பொறாமை என்ற உணர்வு இருக்கிறதா? அவனை அந்த அளவுக்கு பிடித்திருக்கிறதா? ஆனா அவன் பேச்சு?”, என்று எண்ணியவள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பித் தவித்தாள்.
பெற்றவர்கள் சொன்னதால் தான் அவள் இந்த திருமணத்துக்கே சரி என்று சொன்னாள். மாப்பிள்ளை யார் என்று பார்ப்பதற்கு முன்பே அவள் தந்தைக்காக திருமணத்திற்கு சம்மதம் என்று தான் சொல்லியிருப்பாள்.
ஆனால் அவன் அந்த அளவுக்கு அவளையும் அவளுடைய வேலையையும் அவமானப் படுத்துவான் என்று அவள் எதிர் பார்க்க வில்லை.
“உனக்கு தான் அவனைப் பிடிக்கலையே. அப்புறம் எதுக்கு அவனைக் கல்யாணம் பண்ண போற? அவனுக்கும் உன்னைப் பிடிக்கலை. அவனுக்கு பாடம் நடத்த நீ உன் வாழ்க்கையை வீணாக்கணுமா? கடைசி வரை அவனுக்கு உன்னைப் பிடிக்கலைனா உன் வாழ்க்கை என்ன ஆகுணம்? ஒழுங்கா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லு”, என்று எடுத்துக் கூறியது அவளுடைய மனசாட்சி.
அதற்கு பதில் தெரியாமல் அவள் அமைதியாக இருக்க “நீ தைரியசாலி, படிச்சவ, நாலு பேருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற இடத்துல இருக்க, ஒரு சாதாரண கோபத்துக்கு இவ்வளவு ரியாக்ட் பண்ணி உன் வாழ்க்கையை அடகு வச்சிறாத. அவன் வந்தான் உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டான். இப்ப அவங்க வீட்ல உள்ளவங்களுக்காக கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியிருக்கான். அவன் கூட நீ சந்தோஷமா இருக்க முடியாது. உனக்கு பிடிக்காத வாழ்க்கை வேண்டவே வேண்டாம். அப்பா கிட்ட வேண்டாம்னு சொல்லு”, என்றது மனது.
“அவனைப் பிடிக்கலைன்னு எப்படிச் சொல்ல முடியும்? போட்டோ காமிச்சதும் தான் ஒரு மாதிரி மைண்ட்ல பிக்ஸ் ஆகிருச்சே. முதன்முதலா என்னைப் பொண்ணு பாக்க வந்ததும் அவன் தான். அதனால தான் அவன் அப்படி பேசினதும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு”, என்று பதில் சொன்னாள்.
அதே நேரம் சத்யாவும் கடுப்பில் தான் இருந்தான். தெளிவாக ஸ்கெட்ச் போட்டது போல அவன் வாயாலே திருமணத்துக்கு சம்மதம் சொல்ல வைத்து விட்டார்கள். அவளாவது திருமணத்தை மறுப்பாள் என்று எதிர்பார்க்க அவள் மறுக்க வில்லை என்ற உண்மை தெரிந்தது. அதனால் ஒரு மாதிரி எரிச்சலில் சுற்றிக் கொண்டிருந்தான்.
அடுத்த நாள் அவளைத் தவிர மற்ற அனைவரும் அவனுடைய வீட்டுக்கு வந்தார்கள். அவள் வருவாள் என்று எதிர்பார்த்தோ என்னவோ காலையிலே அவன் வேலைக்கு கிளம்பிச் சென்று விட்டான்.
போகும் போது தீனா தடுத்தார் தான். “உங்க இஷ்டப் படி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன் தானே? அதுக்கு மேல என்னை தொல்லை பண்ணக் கூடாது”, என்று சொன்னான்.