வீணா சளைக்காமல் சத்யாவின் பார்வையை எதிர்கொள்ள ஒரு நொடி அவளின் நேர்கொண்ட பார்வையில் திகைத்தாலும் காரியம் பெரியது என்று எண்ணியவன் “எனக்கு உங்களைப் பிடிக்கலை. அதனால இந்த கல்யாணம் வேண்டாம்”, என்றான்.
அவனைக் கண்டதும் மயங்கி காதலில் எல்லாம் விழ வில்லை தான். இருந்தாலும் தன்னை ஒருவர் நிராகரித்தால் மனதுக்கு ஒரு மாதிரி இருக்கும் தானே?
அதனால் எழுந்த சிறு வலியை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டவள் “என்னைப் பிடிக்காததுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா? ஏன் கேக்குறேன்னா நாம இதுக்கு முன்னாடி பாத்தது கூட கிடையாது. அதான் கேக்குறேன்? ஏன் என்னை பிடிக்கலை?”, என்று முகத்துக்கு நேராகவே கேட்டாள். ஒரு வேளை அவன் மனதில் வேறு பெண் இருக்கலாம் என்ற எண்ணமும் அவளுக்கு இருந்தது.
“பிடிக்கலைனா பிடிக்கலை தான். தனி தனியா காரணம் எல்லாம் இல்லை. உன்னை மொத்தமா பிடிக்கலை. உன் முகம், உன் ஊர், நீ பாக்குற வேலை எனக்கு எதுவுமே பிடிக்கலை. போதுமா?”, என்று பட்டென்று முகத்தில் அடிப்பது போல பேச அவள் முகம் சுருங்கிப் போனது. லேசான கோபமும் அவளுக்கு வந்தது.
ஒருவருக்கு பார்த்த உடனே இன்னொருவரை பிடிக்க வேண்டும் என்று இல்லை தான். அதற்காக அதை சொல்வதற்கு என்று ஒரு முறை இருக்கிறதே?
“நீங்க சொல்றதும் சரி தான். அது என்ன காரணமா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். எனக்கும் இந்த கல்யாணம் வேண்டாம். நீங்களே கீழ வந்து அதை எல்லார் கிட்டயும் சொல்லிருங்க”, என்று சொன்னவள் இரண்டு எட்டு எடுத்து வைத்தாள்.
“ஏய், இரு எங்க போற?”
“என்ன எங்க போற? கீழே தான் போறேன்? உங்க முடிவை தான் சொல்லிட்டீங்களே? பெரியவங்க கிட்டயும் சொல்லிட்டு கிளம்புங்க”
“என்னால அவங்க கிட்ட சொல்ல முடியாது. நீ தான் சொல்லணும்”, என்று சொல்லும் போதே அவன் குரல் உள் வாங்கியது.
“ஹலோ பொண்ணு பாக்க வந்தது நீங்க. பிடிக்குதா இல்லையான்னு நீங்க தான் சொல்ல முடியும். உங்களுக்கு பிடிக்குதா இல்லையான்னு நான் சொல்ல முடியாது”
“இதுக்கு என்ன தான் வழி?”
“அந்த வழியை நீங்க தான் யோசிக்கணும். எனக்கு எதுனாலும் சம்மதம் தான்”
“ஏய், என்ன? நல்லவ மாதிரி பேசி அப்படியே என்னை வளைச்சு போட பாக்குறியா? அதுக்கு தான் இந்த நடிப்பா? நீ என்னைப் பிடிக்கலைன்னு சொன்னா எல்லாரும் கேப்பாங்க. ஒழுங்கா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லு”
“முடியாது”
“ஏய், இங்க பாரு நீயே மரியாதையா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா நல்லது. இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
“என்ன பண்ணுவீங்க? இல்லை என்ன பண்ணுவீங்கன்னு கேக்குறேன்? முதல் தடவை பாக்குற பொண்ணு கிட்ட மேனர்ஸ் இல்லாம பேசுற உன்னைக் கல்யாணம் பண்ணணும்னு நான் ஒண்ணும் தவம் இருக்கலை சரியா? நீ என்ன டா என்னை வேண்டாம்னு சொல்றது? நான் சொல்றேன் நீ தலை கீழா நின்னாலும் நான் உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டேன். மனுசங்களை மதிக்க தெரியாதவன் நீ”, என்று பட்டென்று சொல்லி விட்டாள். அவன் மரியாதையாக பேசினால் அவளும் பேசி இருப்பாள். அதை விட்டு அவன் பேச்சு ஒரு மாதிரி இருக்க அவளும் மரியாதை இல்லாமல் பேசி விட்டாள்.
“ஏய்”, என்று கோபமாக சத்தம் கொடுத்தான் சத்யா.
“ஏய் ஓய்ன்னு சொன்ன பல்லை பேத்துருவேன் பாத்துக்கோ“
“கன்ட்ரி புருட்”
“அப்படின்னா நானும் இங்க்லிஷ்ல திட்டவா? உனக்கு என்னைப் பிடிக்கலைனா அதை நாகரிகமா வேண்டாம்னு சொல்லிட்டு போனா நீ மனுஷன். அதை விட்டுட்டு மட்டம் தட்டுற? நீ யாரு என்னை ஜட்ஜ் பண்ண?”
“நான் மட்டம் தட்டுற மாதிரி தானே நீயும் இருக்க? உன் பேச்சும் அப்படி தான் இருக்கு. கொஞ்சமும் மரியாதை இல்லாம பேசுற?”
“அது உன் பேச்சால வந்தது. நம்ம எல்லாம் கண்ணாடி மாதிரி. நீ என்ன கொடுக்குறியோ அது தான் உனக்கு திருப்பி கிடைக்கும்”, என்று சொல்ல “கொஞ்சம் அதிகமாக பேசி விட்டோமோ?”, என்று எண்ணினான் சத்யா.
ஆனாலும் அந்த கெத்தை விடாமல் “உனக்கும் என்னைப் பிடிக்கலைன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. எங்க என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிருவியோன்னு பயந்துட்டே வந்தேன்., நல்லதா போச்சு. உனக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்ட. எப்படியோ எனக்கு இந்த கல்யாணம் நின்னா சரி. உன்னை மாதிரி பஜாரி கூட எல்லாம் என்னால காலம் தள்ள முடியாது”, என்று சொல்ல அவள் தன்மானம் மீண்டும் சீண்டப் பட்டது.
ஏனோ அவனை அவன் இஷ்டத்துக்கு அப்படியே விட வேண்டுமா என்ற ஒரு எண்ணம் வந்தது, இந்த திருமணத்துக்கு சம்மதம் சொன்னால் அவன் முகம் எப்படிப் போகும் என்று எண்ணிப் பார்த்தவளுக்கு சிறு சிரிப்பும் வந்தது. ஆனாலும் அவள் மனதில் “இவன் நமக்கு சரிப்பட்டு வர மாட்டான்”, என்று உறுதியாக எண்ணிக் கொண்டாள்.
அவள் யோசிப்பதைப் பார்த்தவன் “அந்த இல்லாத மூளையை எதுக்கு இப்படி கசக்குற? சரி வா போகலாம். உங்க வீட்ல இப்ப உன் கிட்ட கேப்பாங்க. நீ இந்த மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு சொல்லிரு”, என்றான்.
“என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. நான் அழகா இல்லைன்னு சொல்லு. நீ எனக்கு பொருத்தம் இல்லைன்னாலும் நான் உனக்கு பொருத்தமா இல்லைன்னு சொல்லு”, என்று சொல்ல மீண்டும் அவனை முறைத்துப் பார்த்தாள்.
“அக்கா கீழ வருவீங்களாம்?”, என்று அவள் தங்கை குரல் கொடுக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பின் இருவரும் கீழே வர “என்ன டா பொண்ணு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டார் தீனதயாளன்.
சத்யா என்ன சொல்ல என்று தடுமாறி nirக “அங்கிள் நான் கொஞ்சம் பேசலாமா?”, என்று கேட்டாள் வீணா.
அனைவரும் அவளைத் திகைப்பாக பார்க்க “இப்பவே எந்த முடிவும் எடுக்க வேண்டாமே? வீட்டுக்கு போய்ட்டு நல்ல முடிவா எடுத்துட்டு சொல்லுங்க அங்கிள்”, என்றாள்.
அவ்வளவு ஆட்கள் இருக்கும் சபையில் வைத்து இவ்வளவு தைரியமாக அவள் பேசுவாள் என்று அவனே எதிர் பார்க்க வில்லை.
தங்களின் மகன் தான் அவளை எதுவோ குழப்பியிருக்கிறான் என்று புரிந்துக் கொண்டார்கள் சத்யாவின் வீட்டினர்.
பெண் வீட்டினர் வீணா எதற்கு அப்படிச் சொன்னாள் என்று குழப்பத்தில் இருக்க குல்கர்னி மகளைப் பார்த்தார். அவள் அவர் பார்வையில் தடுமாற எதுவோ இருக்கிறது என்று அவருக்கு புரிந்தது. அதே நேரம் அவர் மகளைத் தவறாக எல்லாம் நினைக்க வில்லை. அவள் செயலுக்கு பின் ஒரு காரணம் இருக்கும் என்று எப்போதும் போல இப்போதும் நம்பினார்.