அம்சவேணி கொண்டு வந்திருந்த ஒன்பது வகையான உணவு வீணாவுக்கு ஊட்டி விடப் பட்ட பின்னர் பந்திக்கு எடுத்துச் செல்லப் பட்டது.
உணவு நேரம் முடிவதற்குள் சேகர் மனைவி மற்றும் மகன் விருப்பத்தை குல்கர்னியிடம் சொல்லியிருந்தார். குல்கர்னியும் தீனாவிடம் பேசுவதற்கு தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
மற்ற சொந்தங்கள் எல்லாம் கிளம்பி விட நெருங்கிய சொந்தம் மட்டும் இருந்தார்கள். அப்போது குல்கர்னி நேரடியாகவே மிதுனுக்கு ஸ்ரீயை பெண் கேட்டு விட்டார்.
அவர்களுக்கு திகைப்பு தான். மறுக்க தோன்றுமா என்ன? ஆனால் ஸ்ரீ சம்மதம் சொல்லாமல் என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாற ஸ்ரீயோ அதிர்ச்சியில் மிதுனை தான் பார்த்தாள்.
எப்போதும் அவளைக் கண்டு நட்புடன் புன்னகைப்பவன் இன்றோ அவள் பார்த்ததும் சட்டென்று கண்ணடித்து விட அதிர்ந்து போன ஸ்ரீ அவனைப் பார்த்த படியே இருந்தாள்.
“வெக்கப்பட்டு தலை குனியுறாளா பாரு?”, என்று எண்ணிய மிதுன் தான் பார்வையை திருப்ப வேண்டி இருந்தது.
“அந்த சுனாமி என் அண்ணனும் பெரியம்மாவும் தான் டி. இப்ப தான் சேகரப்பா சொன்னதுக்கு அர்த்தம் புரியுது. ரெண்டுமே ஒரு மாதிரி. அதிக அன்பு வச்சு நம்மளை டார்ச்சல் பண்ணுங்க. அந்த அன்பு மழையில நனைய தயாரா இரு”, என்று அவளை வாரினாள் மது.
“அம்மாடி ஸ்ரீ உன்னோட விருப்பம் என்ன மா?”, என்று நேரடியாகவே அவளிடம் கேட்டார் குல்கர்னி. உடனே அவள் பார்வை பார்வதி பக்கம் சென்றது. முன்பு போல இல்லாமல் இப்போது பார்வதி பார்வை ஒரு எதிர்பார்ப்புடன் அவள் மீது படிய “உங்க எல்லாருக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான். ஆனா இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு. அது முடியட்டுமே?”, என்றாள்.
“கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை படிக்க கூடாதுன்னு யாரு சொல்லப் போறா? இல்லை நான் தான் உன்னை படிக்க விடாம வீட்டு வேலை செய்ய சொல்லப் போறேனா?”, என்று பார்வதி சொல்ல அதற்கு மேல் ஸ்ரீ யால் மறுக்க முடியுமா என்ன? ஆனாலும் ஸ்ரீக்கு பார்வதியை எண்ணி பயமாக தான் இருந்தது.
வீணாவின் குழந்தை பிறப்பு இடையில் இருப்பதால் இவர்கள் திருமணம் மூன்று மாதங்களுக்கு பிறகு என்று முடிவு எடுக்கப் பட்டது.
அடுத்த இருபது நாளில் வீணாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சுகப் பிரசவம் தான். அம்மாவும் பிள்ளையும் நலம் என்று சொன்ன பிறகு தான் அனைவருக்கும் உயிரே வந்தது. சத்யா கண்களிலோ பயத்தில் அவ்வளவு கண்ணீர். இப்போது சந்தோஷத்திலும் கண்ணீர்.
அவர்கள் மகன் அப்படியே வீணாவை உரித்து வைத்தது போல பிறந்திருக்க அவளைப் பிடித்தவர்களுக்கு அவனை வெறுக்குமா என்ன?
ஆள் ஆளுக்கு அவனை தூக்கி வைத்து சீராட நர்ஸ் தான் அவர்களை கட்டுக்குள் வைக்க போராட வேண்டியிருந்தது.
குழந்தைக்கு விஷ்வா என்று பெயரிட்டார்கள். அன்றே மிதுன் மற்றும் ஸ்ரீ நிச்சயமும் நடந்து முடிந்தது. ஆனால் மணமக்கள் இருவரும் தான் பேசிக் கொள்ளவே இல்லை.
அவள் பேச வந்த போதும் அவன் தப்பித்துக் கொண்டு தான் இருந்தான். ஸ்ரீக்கு தான் இந்த திருமணம் அவனுக்கு பிடித்திருக்கிறதா பிடிக்க வில்லையா என்று அவ்வளவு குழப்பம். இதை விட பெரிய பிரச்சனை அவளுக்கு உண்டு. அவள் அவனைப் பற்றி கூட அதிகம் யோசிக்க விடாமல் செய்தது பார்வதி தான்.
நிச்சயத்தில் அவளுடைய தலையில் பூ வைக்கும் போதே “இனி அத்தைன்னு தான் கூப்பிடனும், ஆண்ட்டி எல்லாம் சொல்லக் கூடாது”, என்று ஆர்டர் தான்.
நிச்சய தினத்தன்று பார்வதி அவளுக்கு வாங்கி வந்த பொருள்களின் எண்ணிக்கையைக் கண்டு ஸ்ரீயின் அன்னை பாமாவுக்கே மயக்கம் போடாத குறை தான். ஸ்ரீக்கு எதற்காக இவ்வளவு என்று கேட்க கூட முடிய வில்லை. அந்த அளவுக்கு ஓவர் டோஸ் ஆக இருந்தது பார்வதியின் அன்பு.
வேறு வழியில்லாமல் மிதுனிடம் “உங்க அம்மா எதுக்கு இவ்வளவு செலவு செய்யுறாங்க? இதெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்களேன்”, என்றாள்.
“நீ வேண்டாம்னு சொன்னா இது பிடிக்கலையோன்னு நினைச்சு வேற நிறைய வாங்கித் தருவாங்க”, என்றான். அவள் திகைத்து விழிக்கும் போதே “கல்யாணம் வரைக்கும் தான் அவங்க வாங்கித் தருவாங்க. அப்புறம் புல்லா உனக்கு நான் தான் எல்லாம் செய்வேன்”, என்று சொல்ல நே என்று விழித்தாள்.
நிச்சயம் முடிந்த இரவில் ஸ்ரீ வீணாவிடம் இதைச் சொல்லி புலம்பி விட்டு “உங்க சித்தியையும் தம்பியையும் பாக்க பயமா இருக்கு அண்ணி”, என்றாள்.
“அப்படி எல்லாம் பயப்படக் கூடாது ஸ்ரீ. ரெண்டு பேரையும் சமாளிக்க ஒரு ஐடியா சொல்றேன் கேட்டுக்கோ”
“ஒரு ஐடியா போதுமா? நிறைய தேவைப் படும் போலயே?”
“இல்லை ஒண்ணே ஒண்ணு போதும்”
“சரி சொல்லுங்க. சரியா வருமான்னு பாப்போம்”
“இப்ப எங்க சித்தி உனக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும்னு நினைச்சு என்னன்னவோ செஞ்சு கொடுக்கணும்னு நினைப்பாங்க. அதுக்கு முன்னாடி நீ முந்திக்கோ”
“எப்படி?”
“அத்தை, எனக்கு இன்னைக்கு சிக்கன் சாப்பிடணும் போல இருக்கு? செஞ்சு தரீங்களான்னு நீயே கேட்டுட்டன்னு வச்சிக்கோ. அவங்களும் பிளாட். உனக்கு பிடிச்சதும் கிடைக்கும். மித்துவும் சித்தியோட ஜெராக்ஸ் தான். இதையே பாலோ பண்ணிக்கோ. வேண்டாம் வேண்டாம்னு சொல்லி கஷ்ட படுத்துறத விட உனக்கு பிடிச்சத கேட்டு வாங்கி அவங்களையும் சந்தோஷப் படுத்தி நீயும் சந்தோஷமா இருந்துக்கோ. இந்த உலகத்துல அன்புக்கு மயங்காதவங்க உண்டா என்ன? நீயும் அவங்க அன்புக்கு பழகிருவ?”, என்று சொல்ல ஸ்ரீ மனதிலும் புதிதாக நம்பிக்கை. கூடவே இதழ்களில் புன்னகையும்.
ஸ்ரீ மற்றும் மிதுன் திருமணம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. மருமகளைப் பார்த்து பார்த்து பார்வதி அலங்கரித்திருந்தாள். ஆனால் அவள் அணிந்திருந்தது அனைத்துமே ஸ்ரீக்கு பிடித்தது தான். வீணா சொன்ன ஐடியா படி காரியம் சாதித்துக் கொண்டாள் ஸ்ரீ.
தவறான வழியில் செல்ல இருந்த மகளின் வாழ்க்கை நேரானது தீனா மற்றும் பாமாவுக்கு அவ்வளவு சந்தோஷம். இனி அவள் சந்தோஷமாக இருப்பாள் என்று எண்ணி அவர்களின் மனம் குளிர்ந்தது.
திருமணம் நல்ல படியாக நடந்து முடிய தீனா கீழே சேரில் அமர்ந்திருக்க அவர் அருகே வந்த வீணா “மாமா உங்க பேரனைக் கொஞ்ச நேரம் வச்சிருங்க. ஸ்ரீக்கு ஏதோ ஹெல்ப் வேணுமாம். நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
“டேய் குட்டி பையா”, என்ற படி அவர் பேரனைக் கொஞ்சிக் கொண்டே மணமேடையைப் பார்க்க ஸ்ரீ மற்றும் மிதுன் இரு புறமும் சத்யா மற்றும் வீணா நின்றார்கள். அவர்களுடன் மது மற்றும் அறிவு நின்றார்கள். மூன்று ஜோடிகளும் புன்னகை முகமாக இருக்க தீனாவுக்கு மனது நிறைந்து போனது.
“உன் பேரன் என்ன சொல்றான் அண்ணா?”, என்ற குரல் கேட்டு நடப்புக்கு வந்தார் தீனா. அங்கே சாரதா நின்றிருந்தாள். அவளுடைய கையிலும் அவள் மகளின் குழந்தை இருந்தது. அதுவும் ஆண் குழந்தை தான். அதற்கு அகில் என்று தான் பெயர் வைத்திருந்தார்கள்.
“வா மா சாரதா உக்காரு”, என்றார் தீனா.
“இல்லைங்க அண்ணா, பாப்பா கிளம்பனும்னு சொல்றா. அகிலுக்கு கூட்டம் சேரலை போல? சிணுங்கிட்டே இருக்கான். கிளம்புறோம். அண்ணி கிட்ட சொல்லிட்டேன். பிள்ளைக கிட்டயும் சொல்லிட்டேன். உன் கிட்ட சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தோம். வறோம்”, என்று சாரதா சொல்ல சாரதாவின் மகளும் “வறோம் மாமா”, என்று சொன்னாள்.
“சரி மா, பத்திரமா போய்ட்டு வாங்க”, என்று சொன்னவர் என்ன நினைத்தாரோ “மருமகளே ஒரு நிமிஷம் இவனைப் பிடி டா”, என்று சொல்லி தன்னுடைய பேரனை அவள் கையில் கொடுத்தவர் தன்னுடைய கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் செயினை சாரதா கையில் இருந்த அகிலுக்கு போட்டு விட்டார். “இந்த ஜென்மத்துல நீ நல்லவனா நூறு வருஷம் நல்லா வாழனும் டா அகில்”, என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார்.
“எதுக்கு மாமா இதெல்லாம்? அவனுக்கு பேர் வைக்கும் போதே நிறைய செஞ்சிட்டீங்களே?”, என்றாள் அவள்.
“அவனும் என் பேரன் தான் டா. பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க. நானும் அடிக்கடி வந்து பாத்துக்குறேன்”, என்று சொல்லி தன்னுடைய பேரனை வாங்கிக் கொண்டவர் அன்புடன் அவர்களை வழி அனுப்பி வைத்தார்.
மனதுக்குள் இறந்து போன அகில் வந்து போனான். நடந்த அனைத்தும் கண் முன் காட்சிகளாக விரிய ஒரு மாதிரி மனம் படபடக்க ஆரம்பித்தது. ஒரு மாதிரி குற்ற உணர்வில் அவர் தவிக்க அது தேவையிலே இல்லை என்பது போல அவர் முகத்தில் கையால் அடித்து அவரை நடப்புக்கு கொண்டு வந்தான் அவரின் பேரன்.
குழந்தையைப் பார்த்ததும் அவர் இயல்புக்கு வந்து புன்னகைத்த படியே பேரனிடம் பேச ஆரம்பித்தார்.