அவர்கள் குழப்பத்தில் இருக்க குல்கர்னி நேரடியாக விஷயத்தைச் சொல்லி விட்டார். மதுவின் தந்தை ஜாதகம் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால் அவர் கொஞ்சம் தயங்க “வீணாவுக்கு நாங்க எதுவும் பாக்கலை. அவ நல்லா தானே தம்பி இருக்கா? அறிவு நல்ல பையன். முடிச்சு வைப்போமே?”, என்றார் குல்கர்னி.

குல்கர்னி மீதிருந்த மரியாதையால் அவர்கள் சரி என்று சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்தது. மதுவிடம் மாப்பிள்ளை யார் என்று சொல்லியே சம்மதம் கேட்க உள்ளுக்குள் குத்தாட்டம் போட்ட மனதை அடக்கி “உங்க விருப்பம் மா”, என்று சொல்லி விட்டாள் மது.

அதற்கு பின் தீனாவே அறிவு வீட்டிலும் பேச அவர்கள் மறுக்கவா போகிறார்கள். அறிவு சந்தோஷத்தில் சத்யாவை இறுக அணைத்துக் கொண்டான். அடுத்த முகூர்த்தத்தில்  அறிவழகன் மற்றும் மது திருமணம் பெரியவர்கள் சம்மதப்படி நடந்து முடிந்தது.

தன்னுடைய நண்பனுக்காக காதல் திருமணம் என்பதை மறைத்து பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக நடத்தி முடித்திருந்தான் சத்யா.

அந்த திருமணத்தில் வைத்து அனைவரும் பார்வதியிடம் “அடுத்து நம்ம மிதுன் தான் இருக்கான், அவனுக்கு எப்ப கல்யாணம்? பொண்ணு பாத்து வச்சிருக்கியா? நான் தெரிஞ்ச இடத்துல சொல்லவா? அக்கா தங்கச்சி மூணு பேர்ல உனக்கு தான் ஆண் வாரிசு. உன் அக்காவும் தங்கச்சியும் பொண்ணுங்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துட்டாங்க. நீயும் நல்ல மருமகளா தேடிப் பிடி”, என்று சொல்ல பார்வதி கண்கள் தன்னால் ஸ்ரீ பக்கம் தான் சென்றது.

ஏனோ மருமகள், மிதுனின் மனைவி என்ற இடத்தில் ஸ்ரீயைத் தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்க பார்வதியால் முடிய வில்லை. சிறிது நாட்கள் கழித்து ஸ்ரீயை பெண் கேட்க வேண்டும் என்று மனதில் முடிவு எடுத்து விட்டாள்.

சில மாதங்கள் கழித்து, அன்று வீணாவுக்கு வளைகாப்பு ஏற்பாட்டை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தான் சத்யா.

வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. அப்போது வீணா குடும்பத்தில் இருந்து அனைவரும் வந்து இறங்கினார்கள்.

 அனைவரையும் வரவேற்றது போல பார்வதியையும் “வாங்க ஆண்ட்டி”, என்று வரவேற்றவள் வீணாவின் அன்னை அம்சவேணியிடம் சென்று அவர் கையை பற்றுக் கொண்டு “வாங்க அத்தை”, என்று வரவேற்றாள். அண்ணியின் அம்மா அல்லவா.

அடுத்து மதுவின் அன்னை மீனா உள்ளே வர உயிர்த் தோழியின் அன்னை என்ற முறையில் மீனாவையும் “வாங்க அத்தை”, என்று சந்தோஷமாக வரவேற்றாள்.

            “எப்படி டி இருக்க?”, என்று கேட்ட மீனா ஸ்ரீயை அணைத்து வேறு கொள்ள இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு அப்பட்டமாக பொறாமை தான்.

            அக்கா தங்கை மூவரில் பார்வதிக்கு அந்த குணம் அதிகமாவே உண்டு. ஸ்ரீ அதிக சிரிப்புடன் அம்சவேணி மற்றும் மீனாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்வதி அப்பட்டமாக முறைத்துக் கொண்டிருக்க அன்னை அருகில் வந்தான் மிதுன். அவன் தந்தை சேகரும் அங்கே வந்து விட்டார்.

            “அம்மா உனக்கு என்ன தான் பிரச்சனை?”, என்று எரிச்சலுடன் கேட்டான்.

            “அதானே? ஏன் டி இன்னுமா நீ அந்த பிள்ளை மேல இருக்குற கோபத்தை விடலை? அப்படி முறைச்சு பாக்குற அவளை?”, என்று கேட்டார் சேகர்.

            “அவளை எங்க முறைச்சு பாத்தேன்? இந்த பிள்ளை நான் வந்தப்ப யாரையோ வரவேற்கிற மாதிரி வாங்க ஆண்ட்டின்னு என் கிட்ட சொல்லிட்டு போய்ட்டா. வேணி அக்கா கிட்டயும், மீனா கிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேசுறா. இதுல அவங்களை அத்தைன்னு வேற சொல்றா. கடுப்பு வருமா வராதா?”, என்று கேட்க அப்பா மகன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

            “இங்க பாரு பார்வதி மனுசங்க கண்ணாடி மாதிரி. ஸ்ரீ பொண்ணும் அப்படி தான். உன்னைப் பாத்து அவளுக்கு பயம். நீ உன் அக்கா தங்கச்சி மாதிரி அவ கிட்ட உரிமையா பேசினா உன் கிட்டயும் அவ பேசுவா”

            “அது என்ன பேசுவா? பேசி தான் ஆகணும் வேற வழி இல்லை. அவ தான் என் மருமக. நான்  தான் அவ மாமியார். அப்புறம் அவ யார் கிட்ட உரிமையா பேசுறான்னு பாத்துக்குறேன். இன்னைக்கே மித்துவுக்கும் ஸ்ரீக்கும் பெரிய மாமா கிட்ட சொல்லி கல்யாணம் பேசுற வழியைப் பாருங்க. சும்மா வெட்டிக் கதை பேசி நேரத்தைக் கடத்தாதீங்க”, என்று சொல்லி விட்டு பார்வதி சொல்ல நே என்று விழித்தார் சேகர்.

            மிதுனுக்கு சிரிப்பு வந்தது. “எல்லாம் என் நேரம் டா. சரி உனக்கு ஓகே வா மித்து? பேசிறவா?”, என்று ஒரு தந்தையாக மகனிடம் அனுமதி கேட்டார்.

            “அவளை லவ் எல்லாம் பண்ணலை பா. ஆனா அவளை மறுக்குறதுக்கு எதுவும் இல்லை. எனக்கு சம்மதம் தான்”, என்று சொல்லி சிரித்தான் மிதுன்.

            “நீ என்னை மாதிரின்னு நினைச்சேன். ஆனா நீ அப்படியே உன் அம்மா தான் டா. பிடிக்காத மாதிரியே விருப்பத்தை சொல்றது. உன் காட்டுல மழை தான் போ. மருமக கிட்ட பேசு”, என்றார்.

            அவர் பேச்சில் சிரித்தவன் “இப்ப அவ கிட்ட பேசினா ரிஸ்க். கல்யாணம் முடிஞ்சு பேச தானே போறேன்? என் கிட்ட அவ வந்து தானே ஆகணும்? அப்ப பாத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.

            “அடப்பாவிகளா, அவ என்னடான்னா கல்யாணம் முடியட்டும் பாத்துக்குறேன்னு சொல்றா. இவனும் அதே மாதிரி சொல்றான். அன்பு வைக்கிறேனு ரெண்டு பேரும் அந்த பிள்ளையை புண்ணாக்கிருவாங்க போலயே?”, என்று மனதுக்குள் எண்ணியவர் “கடவுளே”, என்று முணுமுணுக்க “கூப்பிட்டீங்களா மாமா? ஏதாவது வேணுமா?”, என்று சிறு புன்னகையுடன் கேட்ட படி வந்து நின்றாள் ஸ்ரீ.

            “உன்னை தான் நினைச்சிட்டு இருந்தேன் மா. உனக்கு ஒரு அட்வைஸ் சொல்லட்டா? ரெண்டு சுனாமி உன்னைத் தேடி கூடிய சீக்கிரம் வரப் போகுது. புத்திசாலித் தனமா ஆமா சாமி போட்டு தப்பிச்சிக்கோ என்ன? அப்ப தான் என்னை மாதிரி சந்தோஷமா இருக்க முடியும்”, என்றவர் அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

            அவர் பேச்சு புரியாமல் தலையை சொறிந்த படி நின்று விட்டாள் ஸ்ரீ. “என்ன டி வந்தவங்களை வரவேற்காம திகைச்சு போய் சிலை மாதிரி இருக்க?”, என்ற மது குரல் கேட்டு தான் நடப்புக்கு வந்தாள்.

            மதுவும் அறிவும் புன்னகையுடன் அங்கே நின்றிருக்க “வா மது, வாங்க  அண்ணா”, என்று வரவேற்றவள் அருள் நண்பனைத் தேடிச் சென்றதும் தோழியிடம் சேகர் சொன்னதைச் சொன்னாள். மதுவுக்கும் என்னவா இருக்கும் என்று குழப்பத்துடன் உள்ளே சென்றாள்.

            அனைத்து உறவினர்களும் வந்து விட்டாலும் விழாவின் நாயகியும் வரவில்லை, நாயகனும் இன்னும் வரவில்லை.

            திருமண பட்டுப் புடவையும், அளவான அலங்காரமும் நிறை மாத வயிறுமாக இருந்த மனைவியை கட்டி அணைத்துக் கொண்டு விடாமல் வம்பிழுத்துக் கொண்டிருந்தான் சத்யா.

            “இன்னைக்கு உன் வீட்டுக்கு போனா எப்ப வருவ? நான் உன்னை எப்ப பாக்க வரட்டும்?”, என்று ஆயிரம் முறையாவது இதே கேள்விகளைக் கேட்டிருப்பான்.

            “என்னங்க, எல்லாரும் வந்திருப்பாங்க. நேரம் ஆகுது. வாங்க கீழ போகலாம். எனக்கு ஏற்கனவே வெக்கமா இருக்கு. லேட்டா போனா எல்லாரும் என்னையே பாக்குற மாதிரி இருக்கும். என் வீட்டுக்கு போனாலும் உங்க கூட பேச தானே போறேன்? வேலைக்கும் லீவ் போட்டுட்டேன். உங்க கிட்ட பேசுறதை தவிர எனக்கு என்ன வேலை? நீங்களும் தினமும் அங்க வந்து என்னைப் பாக்க தான் போறீங்க? அப்புறம் என்ன?”, என்று சமாதானப் படுத்தியும் அவன் விட வில்லை.

            “உன்னை எனக்கு பிடிக்க வில்லை, இந்த திருமணத்தை நிறுத்து”, என்று சொன்னவனா இவன் என்று தான் வீணாவுக்கு தோன்றியது.

            தீனா அவனுக்கு போனில் அழைத்து கீழே வரும் படி சொன்ன பிறகு தான் அவளை அழைத்துக் கொண்டு வந்தான்.

            இருவரும் முழு அலங்காரத்தில் கீழே வர அவர்களை அப்படிப் பார்ப்பதற்கு அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

            இருவரையும் மேடை மாதிரி ஏற்பாடு செய்து அங்கு போட்டிருந்த சேரில் அமர வைத்து நலங்கு வைத்து வளையல்கள் போடப் பட்டது. பெரியவர்களின் ஆசீர்வாதம் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைக்கும் கிடைக்க இருவரும் பொதுவாக கீழே விழுந்து வணங்கினார்கள். அடுத்து புதிதாக திருமணம் ஆன மதுவையும் அமர வைத்து வளையல் போட்டு விட்டார்கள்.